Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

காதல் நேரத்து மயக்கம்!

 

மயக்கம். முழுக்க முழுக்க ஆளைத் தின்னும் மயக்கம். 37 வயதில் இந்த மயக்கம் வரலாமா என்ற கேள்வியைத் தாண்டிக் குதித்து வந்து வெகுநாளாகிவிட்டது. இது வெறும் மயக்கம் என்று மட்டும் அடையாளப்படுத்துவது நியாயமா? இல்லை, காதல் என்ற அடையாளம் சரியாகுமா?

ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்கும் காலத்தில், இனம் புரியாத இந்த உணர்வு ஆட்டிப்படைத்தால், அதை இனக்கவர்ச்சி, எதிர்பாலின ஈர்ப்பு என்ற படிநிலைகளைத் தாண்டி ‘காதல்’ என்று கௌரவமாக முத்திரை குத்தலாம். ஆனால், கல்யாணமாகி அழகான இரண்டு பெண் குழந்தைகளின் தாயாகி, கொஞ்சம் இடை பெருத்து… மார்பு தளர்ந்து, நாலைந்து நரை முடிகள் எட்டிப்பார்த்த பிறகும் காதல் வருவது சாத்தியமாகுமா? அதுவும் இன்னொருத்தியின் கணவன் மீது; ஒரு குழந்தையின் பொறுப்பான அப்பா மீது; கௌரவமான பதவியில் உட்கார்ந்திருக்கும் ஒரு புரொஃபஷனல் மீது?! ஆனால், வந்திருக்கிறதே! உடலின் ஒவ்வொரு செல்லும் மனதின் ஒவ்வோர் அசைவும், ‘ஆமாம், நீ காதலில் விழுந்துவிட்டாய்’ என நொடிக்கு நொடி கூப்பாடு போடுகிறதே!

சக ஊழியர் என்றாலும், என்னைவிட உயர்ந்த பதவியில் இருப்பவர். என் கேபினுக்கு எதிரில் அவர் கேபினும் என்ற ஓர் அற்பக் காரணம் மட்டுமே காதல் வருவதற்குச் சாத்தியமான விஷயம் இல்லை. என்ன விஷயம் அவர்பால் என்னை ஈர்த்தது என்று இன்னமும் எனக்கு விளங்கவில்லை. அவருடைய சாஃப்ட் அப்ரோச், கனிவான பேச்சு, இப்போதுதான் குளித்து வந்த மாதிரியான பளிச் தோற்றம், டிரெஸ்ஸிங் சென்ஸ்… எது என்னை ஈர்த்தது? கேள்விகளை அடுக்கிக்கொண்டுதான் போக முடிகிறதே தவிர, பதில் கிடைக்கவில்லை.

அவர் ஜென்டில்மேன். என்னை, தன்னுடன் பணிபுரியும் ஒரு சக ஊழியை என்கிறரீதியில்தான் பார்த்து வந்தார். நான்தான் ஆரம்பித்தேன். பாப்-அப்பில் ‘ஹாய், குட் மார்னிங்’ – மெசேஜ் அனுப்பினேன். பல நூறு முறை அனுப்பியும் பதில் இல்லை. அசரவில்லை. முயற்சியைத் தொடர்ந்தேன். ஒருநாள் பதில் கிடைத்தது, ‘வெரி குட் மார்னிங்’.

தொடர்ந்தது பாப்-அப் மெயில், ‘இன்னிக்கு உங்க ஷர்ட் சூப்பர்’, ‘ஓ, தேங்க்யூ’ பதில். மனத்துக்குள் லிட்டர் லிட்டராகத் தேனைக் கொட்டிய உணர்வைத் தந்தது. ‘இன்னிக்கு என்ன சாப்பாடு?, ஏன் டல்லா இருக்கீங்க?, ஆர் யு நாட் ஃபீலிங் வெல்?, மாத்திரை தரட்டுமா?’ பாப்-அப்பில் மெசேஜ் அனுப்புவதே தினசரி வேலைகளில் ஒன்றாகிப்போனது.

ஒருநாள் பார்க்காவிட்டாலும் உயிர் போகும் அளவுக்கு வலித்தது. அன்று முழுதும் என்னை எதிலும் இயங்கவிடாமல் செய்யும் அந்த வலி. இந்த பாப்-அப் மெசேஜைத் தாண்டி, அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. அலுவலகத்தில் மற்ற யாருக்கும் தெரியாமல் அடிக்கடி ஒருவரையருவர் கண்களாலேயே பார்த்துக்கொள்வோம், எப்போதாவது ஒரு முறை, புன்னகைப்பதே தெரியாமல் ஒரு புன்னகை. அதைத் தாண்டி என்ன செய்வது? இது எதில் போய் முடியும்?

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் மிக அருகில் நிற்க நேர்ந்தபோது, பதின்ம வயதில் நமக்குப் பிடித்த ஒருவர், நம் அருகில் நிற்கும்போதோ, பார்க்கும்போதோ… அடிவயிற்றில் இருந்து ஒரு மின்சாரம் கிளம்பி, உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் பரவி, நரம்புக்குள் விரவி, ‘ஜிவ்’வென்ற உணர்வைத் தருமே, அப்படி இருந்தது அவர் என் அருகில் நின்றபோது. அந்த உணர்வு இன்னும் சில நிமிடங்கள் நீடிக்க வேண்டும் என்று மிக அருகில் நின்றேன். இது, எதில் போய் முடியும்?

இப்படி அடுத்தவர் கணவர் மீது என் காதல் பொழிந்து கொட்டினால்… என் கணவருக்கும் எனக்கும் பிரச்னை, சரியான புரிதல் இல்லை என்று நினைத்துக்கொண்டால், அது முட்டாள்தனம்!

என் கணவர் சராசரியானவரும் இல்லை; மகா புனிதரும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்டவர். எங்களுடையது 100% அரேன்ஜ்டு மேரேஜ். கல்யாணமாகி சரியாக இரண்டாவது மாதம் நான் கர்ப்பமானேன். மார்னிங் கிடினெஸால் எழுந்திருக்க முடியாமல் காலை எட்டரை வரை தூங்கி, மயக்கம் தெளிந்து எழுந்து வரும்போது கிச்சனில் தனக்குத் தெரிந்ததை ரொம்ப நீட்டாகச் சமைத்துவைத்திருக்கும் அளவுக்கு ஆசையான கணவர்.

ஒவ்வொரு முறையும், ‘கூடல்’ முடிந்த பிறகு ‘ஆர் யூ சேட்டிஸ்ஃபைட் டியர்’ என ‘அங்கும்’ சமத்துவம் பார்க்கிறவர். எத்தனையோ முறை, ‘பாப்லோ நெரூடா இப்போ உயிரோடு இருந்தா, அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணியிருப்பேன். அவருக்குப் பல மனைவிகள் இருந்தாலும், ‘ப்ளீஸ்! என்னையும் கல்யாணம் பண்ணிக்கோங்க’ன்னு நெரூடாவின் காலில் விழுந்து, கதறியழுது கல்யாணம் செய்திருப்பேன். அவரின் ஒவ்வொரு கவிதைக்கும், ஆயிரமாயிரம் முறை அவரை அளவில்லாமல் காதலிக்கலாம்’ என்று நான் சொல்லும்போது எல்லாம் என்னைப் பைத்தியம்போல் பார்த்ததே இல்லை. நெரூடாவை இன்டர்நெட்டில் படித்தார். ஓர் அழகான மாலைப் பொழுதில், கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பு செய்த ‘நெரூடாவின் கவிதைகள்’ புத்தகத்தை என் மடியில் சஸ்பென்ஸாகவைத்து, காதல் வழிய நெற்றியில் முத்தமிட்ட அதிதீவிரக் காதலன் என் கணவர்.

‘ஏன், எப்பப் பார்த்தாலும் சாம்பார்ல இப்படி உப்பை அள்ளிக் கொட்டுற, புல்ஷிட்!’ என்று திட்டுகிற சராசரிக் கணவரும்கூட. சில சமயங்களில் ‘உனக்கு சிலி பார்க்கணுமா, உன் காதலன் பாப்லோ நெரூடா பிறந்த நாடு… பார்க்கணுமா’ எனச் சாத்தியப்படாத விஷயத்தைச் சாத்தியமாக்கும் தொனியில் கேட்கும் மாமனிதரும்தான் என் கணவர்.

இப்படி ஒரே அலைவரிசையில் சிந்திக்கும் நட்பான கணவன் வரமாகக் கிடைத்தும், இன்னொருவர் மீது ஈர்ப்பு வருகிறது என்றால்… அது உடல் திமிரா, ஹார்மோன்களின் அராஜகமா? மனதின் மிருக வெறியா?

இப்படி ஒரு காதல்… கண்றாவி என்னை ஆட்டிப்படைக்கிறது என்று என் கணவரிடம் சொன்னால் என்ன சொல்வார்..? கோபப்படுவாரா… என்னை டைவர்ஸ் செய்துவிடுவாரா? ‘இல்லை, உன் மனம் என்ன செய்தால் அமைதியாகுமோ, அதைச்செய்து விட்டு வா’ என்பாரா? தெரியவில்லை!

ஆனால், கட்டத்துக்குள்ளும் வட்டத்துக்குள்ளும் அடங்காத, வரையறை இல்லாத இந்தக் காதல், ஒரு வகையில் வன்முறைதான்… வேறென்ன சொல்ல முடியும்? இது, எதில் போய் முடியும்? ஒரு முத்தம்… ஓர் இரவு… முடிந்து போய்விடுமா? முற்றுப்புள்ளி கிடைத்துவிடுமா?…

மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிந்தது. அனஸ்தீஸியாவின் பிடியில் இருந்து, மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிந்துகொண்டு இருந்தது. பாதி மயக்கம் தெளிந்தபோது, கை அனிச்சையாக வலது பக்க மார்பகத்தைத் தொட்டுப்பார்த்தது. அந்த இடம் தட்டையாக இருந்தது. ‘உனக்கு கொஞ்சம் அப்நார்மல் சைஸ்தான்டி’- கணவர் எப்போதோ காதில் கிசுகிசுத்தது இப்போது ஞாபகத்துக்கு வந்தது. மீண்டும் ஒருமுறை, அந்த இடத்தைத் தேடி கை போனது. மயக்கம் முற்றிலும் தெளியாததால் கையை நகர்த்துவதுகூட பாரமாக, ரொம்பக் கனமாக இருப்பதுபோல் இருந்தது. அதை மீறியும், கையைத் தூக்கி, நகர்த்தி மீண்டும் வலது மார்பில் வைத்தேன்… அந்த இடம் தட்டையாகத்தான் இருந்தது.

”ஆமாம், இது ப்ரெஸ்ட் கேன்சர்தான். ஆனா, நீங்க பயப்பட வேண்டாம், இட்ஸ் கம்ப்ளீட்லி க்யூரபிள். உங்களைவிட யங்க்ஸ்டர்ஸ் எல்லாம் ட்ரீட்மென்ட் எடுத்துட்டுப் போறாங்க. இருபது வருஷம் தாண்டியும் இன்னும் நார்மலா இருக்காங்க. நோய், உடம்புக்குத்தான். மனசால அதை ஜெயிக்கலாம். யூ கேன்… மேம், யூ கேன். யுவர் வில்பவர் கேன் க்யூர் எனிதிங் அண்டு எவ்ரிதிங். யூ கேன்!” – தலைமுடி மொத்தமும் நரைத்த ஒரு பஞ்சுமிட்டாய்த் தலை ஆன்காலஜி டாக்டரின் வார்த்தைகள் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருந்தன.

வலது கையை மெதுவாக நகர்த்தி நகர்த்தி இடது மார்பைத் தொட்டேன். அது இருந்தது, தளர்ந்து இருந்தாலும் கம்பீரமாக!

மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிந்துகொண்டு இருந்தது. தெளிந்த மனநிலைக்கு, இன்னும் கொஞ்ச தூரம்தான். கடக்க வேண்டிய தூரம், இன்னும் கொஞ்ச தூரம்தான்.

”ஆர் யூ சேட்டிஸ்ஃபைட் டியர்?”

”அறிவு இருக்கா, உப்பை அள்ளிக் கொட்டாம உனக்குச் சமைக்கவே வராதா?”

”நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன், ஒரு பியர் அடிச்சுக்கிட்டுமா? இன்னிக்கு மட்டும் கொஞ்சம் ஹாட், ப்ளீஸ் ராட்சஷி, ப்ளீஸ்!”

”உன் திமிருக்கு அளவே இல்லையா..? ரொம்ப ஆடாதடி இடியட். இன்னொரு தடவை ஆர்க்யூ பண்ணினா, பல்லு கழண்டுரும்.”

”ஐயோ, இந்த சாரியில உன்ன அப்படியே அள்ளிச் சாப்பிடலாம்போல இருக்குடி குண்டம்மா.”

மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிந்துகொண்டு இருந்தது. வலது மார்பு இருந்த இடத்தில் லேசாக ஒரு வலி, ஒரு நொடிதான். அப்புறம் காணோம்.

”யூ கேன் க்யூர் அண்ட் ஓவர்கம் எவ்ரிதிங் பை ஹார்ட், பை மைண்ட். மனம்தான் மனிதனின் எஜமான்! எதையும் உன் மனதால் வெல்லுவதற்குக் கற்றுக்கொள்!” – நரைத்த பஞ்சுமிட்டாய்த் தலை ஆன்காலஜி டாக்டர் மீண்டும், மீண்டும்…

மயக்கம் தெளிந்துவிட்டது. முற்றிலுமாகக் கண்களைத் திறந்தேன். எதிரில், எந்த உணர்வு ரேகைகளும் அற்ற முகத்துடன் என் கணவர்.

”சிலிக்குப் போகலாமா..? பாப்லோ நெரூடா இஸ் வெயிட்டிங் ஃபார் யூ!”

”யூ கேன் க்யூர் அண்ட் ஓவர்கம் எவ்ரிதிங் பை ஹார்ட், பை மைண்ட்!” – அங்கு இன்னொரு பேஷன்ட்டிடம்… டாக்டர்!

- ஜூன் 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த ஆல்பத்தைப் புரட்டியதும் சந்தோஷம் என்னை தொட்டிலில் இட்டு ஆட்டியது போல் தோன்றியது. சில நினைவுகள் தரும் சந்தோஷத்தை எந்தப் பணத்தாலும் விலைக்கு வாங்கவே முடிவதில்லை. ஆல்பத்தை மூடியதும் ஏனோ எனக்கு இன்றைக்கு இந்திராகாந்தி ஞாபகமாகவே இருந்தது. நான் வால்பாறையில் ஏழாம் வகுப்புப் ...
மேலும் கதையை படிக்க...
காலை பரபரப்பு வீட்டின் சுவற்றுக்குக் கூட தொற்றிக் கொண்டது போல் இருந்தது. பஷீமீளிக்குச் செல்லும் குழந்தைகளும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீட்டில் உஷீமீள பாத்திரங்கஷீமீ கூட பாவம் செளிணிதவையாக இருக்கும். பாத்திரங்களே சமைத்து விடுவது மாதிரியான ‘ரோபோ பாத்திரங்கஷீமீ’ ...
மேலும் கதையை படிக்க...
கண்களை மெல்ல மெல்ல திறந்தபோது கொஞ்சம் கொஞ்சமாய் உணரத் தொடங்கினேன்…. நான் இன்னமும் உயிரோடு இருக்கிறேன் என்பதை. இந்த முறையும் சாகவில்லை என்பது உறுதியாகிவிட்டது. குளுகோஸ் ஏறிக் கொண்டிருந்தது. நேற்று பாலில் தூக்க மாத்திரைக் கலந்து சாப்பிடும் போது.. கத்தரி பூ ...
மேலும் கதையை படிக்க...
புரியாது பூசணிக்கா!
அப்பாவின் காதலி
பதில் இல்லாத கேள்விகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)