நீயே நிழலென்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 3,548 
 

தொலைபேசி ஒலிப்பிய மணிச்சத்தம் கேட்டதும் மீன் வெட்டிக் கொண்டிருந்த கையை அவசரமாகக் கழுவி விட்டு, அது தீபாவாகத் தானிருக்கும் என்று ஆர்வத்துடன் ஓடிச் செல்கிறேன் நான். ஆனால் அது வழமையாக வரும் மாதாந்த கிறிஸ்தவ ஆராதனை பற்றிய பிரச்சாரத்துக்கான மின்கணிணி அழைப்பு என தொலைபேசி இலக்கத்தைப் பார்த்ததும் புரிகிறது. எனக்குத் தேவையற்ற அந்தச் செய்தி தொலைபேசியில் பதியப்படாமல் இருப்பதற்காக றிசீவரைத் தூக்கி மீண்டும் வைத்து, வந்த லைனைக் கட் பண்ணி விட்டு மீண்டும் குசினிக்குள் போகிறேன். இருந்தாலும் அவள் சொன்ன மாதிரி எப்படியும் இன்று போன் பன்ணுவாள் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இருக்கவில்லை.

அந்த நினைவைத் தொடர்ந்து தீபா பல்கலைக்கழகம் போக முன் சினேகிதர்களுடன் காம்பிங்க்குப் போன போது. எதிர்பாராமல் வந்து மனதில் நிறைவை ஏற்படுத்திய அவளின் கோல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

‘மம், கௌ டிட் யுவர் அப்பொயின்ற்மேன்ற் கோ?’

‘ஏ, பிள்ளைக்கு எப்பிடி ஞாபகம் வந்தது? எங்கையிருந்து போன் எடுக்கிறாய்?’

‘இங்கையிருக்கிற ஒரு கடையிலிலை இருந்து போன் பண்ணுறன். என்ன நடந்தது எண்டு கேக்கிறதுக்காண்டியும், உங்களோடை கதைக்கிறதுக்காண்டியும் ஒரு மூண்டு மைல் தூரம் ஓடி வந்தனான.;’

‘ஓ மை பேபி, ற் வாஸ் ஒகே. அவ்வளவு தூரம் தனிய ஓடி வந்தனியே?’

‘யேஸ், ஐ லவ் யு, என்ன நடந்தது எண்டு எனக்கு தெரியோணும் போலிருந்தது.’

‘அம்மாவுக்கு டே சேஜறி நடந்த போது ஆறு வயசுக் குட்டியாய் இருந்த போதே கெற் வெல் காட் செய்து கொண்டு வந்தவள் எல்லே என்ரை பிள்ளை,’ மனசு சிலிர்த்துக் கொள்கிறது. உண்மையிலேயே அவளுக்கு என்னில் அத்தனை பாசம் தான்.

ஏதாவது சாப்பிடக் கொடுத்தால், ‘நல்லா இருக்குது, தாங்ஸ். நீங்கள் சாப்பிட்டியனியளே?’ என பாராட்டும் கரிசனையுமாக கேட்பாள். வீட்டில் நிற்கும் பொழுதுகளில் ‘அம்மா நான் சாப்பாடு செய்யப் போறன், உங்களுக்கு நூடில்ஸ் சாப்பிட வேணும் போலிருக்கா அல்லது ஏதாவது சான்ட்விச் செய்யட்டா?’ என்பாள். ‘கடைக்கு நீங்கள் மட்டும் போக வேண்டாம். நானும் வருகிறேன் போட்டு வந்து கோம் வேக் செய்யலாம். ஐ டோன்ற் வான்ற் யு பி எலோன்,’ பிடிவாதாமாய்ச் சொல்வாள்.

அப்படி அவள் என்னுடன் ஒட்டிக்கொண்டு இருந்ததால் தான் இப்ப இப்படி இருக்கும் தனிமையைத் தாங்க முடியவில்லை என்ற நிதர்சனத்தில் மனது மிக வலிக்கிறது.

கலியாணம் செய்து ஐந்து வருடங்களாகியும் கர்ப்பம் தங்கவில்லை. அதற்காகப் பல வேண்டுதல்கள், ஆயிரம் பரிசோதனைகள், அதை விட மற்றவர்களின் கேள்விகள், குடையல்கள் என்று இருந்த போது எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாய்ப் போல் எதிர்பாராத ஆச்சரியமாய் தீபா என் வயிற்றில் வந்த போது எனக்கு வந்த ஆனந்தம் அளவிட முடியாதது.

அன்றிலிருந்து வேலையைக் கலியாணம் கட்டியினியளோ, என்னைக் கட்டினியளோ என அவரிடம் போட்ட சண்டைகளுக்கும் கூட முற்றுப்புள்ளி வந்தது. அவளை என் கைகளில் வாங்கிய கணத்திலிருந்து அவரைக் காணவில்லை என தவித்து, ஏங்கிப் பின்னர் அந்தக் காத்திருப்பு எரிச்சலைத் தர அவருடன் பிரச்சனைப்பட்ட பொழுதுகள் போய் அவர் வீட்டுக்கு பிந்தி வந்தால் நல்லம் என மனம் எண்ணும் அளவுக்கு தீபாவுடன் என் வாழ்க்கை ஐக்கியமாய்ப் போய் விட்டது.

காலையில் பாடசாலைக்குப் போய் மாலை 2 மணிக்கு வீட்டுக்கு வந்த பின் இரவு படுக்கும் வரை அவளுடன் விளையாடுவதில் எனக்கு நேரம் எப்படி போவது என்றே தெரிவதில்லை.

பின்னர் அவளுக்கு மூன்று வயதான போது விஸ்வருபம் எடுத்த நாட்டுப் பிரச்சனை எம்மை நாட்டை விட்டுத் துரத்தி கனடாவில் தஞ்சம் கேட்க வைத்தது. அங்கு செய்த தொழிலை இங்கு தேட வேண்டுமானல் மேலும் படிக்க வேண்டும் என்று ஆன போது விடியவெள்ளன நித்திரையில் பிள்ளையை இழுத்துக் கொண்டு போய் பிள்ளைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு அதற்காகப் படிக்க போவதையோ அல்லது வேறு வேலைக்கு ஓடுவதையோ என்னால் கற்பனை பண்ணிப் பார்க்கவும் முடியவில்லை.

‘ஒரு பிள்ளை தானே நான் வீட்டில் இருக்கிறேன் நீங்கள் உழைத்தால் போதும்’ என கணவனிடம் சம்மதம் வாங்கிக் கொண்டேன்.

ஒருநாள் நாங்கள் இருந்த தொடர் மாடிக்கட்டிடத்தின் முன் இருந்த நூலகத்துக்குப் போய் ‘மூன்று வயதுப் பிள்ளையை உள்ளே கூட்டி கொண்டு வரலாமோ’ என நான் அசட்டுத்தனமாய்க் கேட்கிறேன். அந்த நூலகர் பிள்ளையின் பெயரில் ‘லைபிரரிக் காட்’ கூட எடுக்கலாம் என கனடாவில் பிள்ளைகளுக்கும் இலக்கியத்துக்கும் கொடுக்கப்ப்டும் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார். பிறகென்ன எங்கள் பொழுதுகள் அங்கு ஆனந்தமாய்க் கழிகின்றன.

தீபா பாலர் வகுப்பை ஆரம்பித்த போது பெரிய கதைப் புத்தகங்கள் வாசிக்குமளவுக்கு அவளின் வாசிப்புத்திறன் விஸ்தரித்திருந்தது. அப்போது அந்தப் பாடசாலையில் ஆரம்பித்த ஒரு பரீட்சார்த்த வாசிப்புப் பயிற்சியின் வெற்றியைப் பற்றி மற்றவர்களுக்கும் அறிவிப்பதற்கு அவர்கள் செய்த விளம்பரத்தில் an immigrant child in JK can read chapter books without any hesitance என வருகிறது. இதனால் அவளின் கெட்டித்தனம் செய்தியாக, பல பெற்றோர் என்னை ஒரு வெற்றியாளராகப் பார்க்கின்றனர். எப்படி நான் அவளைப் படிப்பிக்கிறேன், தங்கள் பிள்ளைகளுக்கு தாம் எப்படி உதவலாம் என என்னைப் பல விசாரணைகள் செய்கின்றனர். நானும் புளகாங்கித்துப் போகிறேன். அவளின் வெற்றி மட்டும் என் வாழ்வுக்குப் போதுமானது என மனம் நிரம்பி விடுகிறது.

முதலாம் வகுப்பில் அவளுக்கும் மட்டும் அவளின் ஆசிரியர் பிரத்தியேகமாய் கொடுத்த project ல் Red Panda பற்றி எழுத அவள் முடிவெடுக்கிறாள். நூலகரிடம் போய் Red Panda பற்றிய புத்தகங்கள் அங்கு இருக்குமா என அவரின் மின்கணிணியில் உள்ள பதிவுகளில் தேடிப் பார்த்துச் சொல்ல முடியுமா எனக் கேட்கிறோம்.

அவர் ஒரு குறித்த இலக்கத்தைத் தந்து அந்த இலக்கத்தின் கீழ் தான் Red Panda சம்பந்தமான எல்லாப் புத்தகங்களும் இருக்கும் என்கிறார். அதற்குத் தீபா Red Panda ஒரு Panda இல்லை,’ எனச் சொன்ன போது அவருக்கே அது செய்தியாக இருக்கிறது. அவளின் அறிவில் அவர் வியந்து போகிறார்.

‘தீபா, உனக்கு எப்படித் தெரியும்? ரீச்சர் சொன்னவவா?’ என ஆவலுடனும் பெருமையுடனும் கேட்கிறேன்.

‘இல்லை ரீவியிலை பார்த்தனான்,’ என்கிறாள். இப்படி அவளின் அறிவை, ஞாபகசக்தியை, புத்திக் கூர்மையைப் பார்த்து வியந்த சந்தர்ப்பங்கள் ஏராளம். அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் பதில் தேடி நான் ஆராய்ந்த பொழுதுகள் கணக்கில் அடங்காதவை. அவளின் பாசமும் கெட்டித்தனமும், அமைதியான சுபாபமும் இவளைப் பிள்ளையாகப் பெற நான் என்ன புண்ணியம் செய்தேன் என எப்போதும் என்னைக் கண் மல்க வைக்கும். அவளின் சான்றிதள்களையும் தேர்ச்சித்தாள்களையும் வங்கியில் பாதுகாப்பான இடத்தில் வைத்து அதுவே எமது சொத்தாக மனம் மகிழ்கிறோம்.

ஒவ்வொரு முறையும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு முடிந்து வந்த பின் ஆசிரியர் அவளைப்; பற்றிச் சொல்லிப் பாராட்டியவை யாவும் பல தடவைகள் மீள மனதில் ஓடி ஒரு இனம் புரியா மகிழ்வைக் கொண்டு வரும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் Science centre, museum என்று அவளுடன் போவதும் நாள் முழுக்க அங்கு கழிப்பதும் எமது வாடிக்கையாகின. கோடை விடுமுறை வந்து விட்டால் Wonderland, Ontario Place, strawberry picking, camping என்று போய் நானும் அவளுடன் என்னை மறந்து மகிழ்வது தான் எமது வாழ்க்கையாகிறது. போதாதற்கு piano வகுப்புக்கள் swimming பயிற்சிகள் என்று எப்போதுமே ஓட்டம் தான்.

பின்னர் அவள் வளர்ந்த பின் ‘கை உளையுது, கால் உளையுது, சோம்பலாயிருக்குது’ என நான் சொன்ன பொழுதுகளில் என் உடல் வலுவைப் பேண, என்னை இழுத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிச் சுற்றி அவள் ஓடிய ஓட்டங்கள்… இப்படிப் பல நினைவுகள் மாறி மாறி வந்து கண்ணீரை கொட்ட வைத்துக் கொண்டிருந்தன.

மருத்துவக்கல்லூரியில் அவள் விசேட சித்தியடைந்து மேற்படிப்புக்காக புலமைப்பரிசில் கிடைத்து அமெரிக்காவுக்குப் போய் பத்து மாதங்கள் ஆகிவிட்டன. எனக்கு இன்னமும் அதை ஏற்கும் மனப்பக்குவம் வரவில்லை. அது மட்டுமன்றி மன அழுத்தம் என்று குளிசை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குப் வந்து விட்டேன்.

சென்ற முறை இது பற்றிக் கவுன்சிலருடன் கதைத்தவை நினைவுக்கு வருகின்றன. ‘சரி! உங்களுக்கே உங்கடை பிரச்சனை விளங்குது. பிள்ளைக்காக வாழ்ந்து போட்டு இப்ப இப்படி இருக்கிறது எந்த வித நோக்கமும் இல்லாத வாழ்வு எண்டு நீங்கள் நினைக்கிறியள். அது உங்களுக்கு சலிப்பை, ஏமாற்றத்தைத் தருது.’

‘ஓம்! நீங்கள் சொன்ன மாதிரி தொண்டர் வேலைக்கு போறனான். ஆனாலும் அது பெரிசாய் உதவேல்லை,’ மீண்டும் கண்ணீர் தடைசெய்ய முடியாமல் ஓடுகிறது.

‘இந்த விரக்தியிலிருந்து வெறுமையிலிருந்து மீள என்ன செய்யலாம் எண்டு நீங்கள் நினைக்கிறீர்கள்?’

மௌனமாய் இருக்கிறேன்.

கவுன்சிலரே தொடர்கிறார், ‘ம், உங்கடை மனம் நிறைஞ்சு போற மாதிரி ஏதாவது ஒண்டோடை ஒட்டிப் போகவேணும். மகளோடை போய் இருந்தால் நல்லம் எண்டு நினைக்கிறியளோ, அதுக்கு வழி இருக்குதோ அல்லது இங்கை உங்களுக்கு எண்டு ஒரு வாழ்வை உருவாக்கப் பாருங்கோ. எதையும் யோசியாமல் மனம் லயித்து செய்யக்கூடியதாய் ஏதாவது படிக்கலாம் அல்லது வேலை செய்யலாம். ஏன் ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து கூட வளர்க்கலாம். இந்த மன நெருக்கீட்டிலிருந்து இருந்து வெளியேற வேணும் இல்லையா? யோசித்துப் பாருங்கோ. அடுத்த முறை வரும் போது ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாய்க் கதைப்பம்,’

அப்படி கவுன்சிலர் சொன்னது பற்றி யோசித்துப் பாக்கிறேன்.

பல்கலைக்கழகத்திற்கு போன பின் தானே தன் வேலை எல்லாம் செய்யப் பழகி, என்னில் தங்காமல் வாழ தீபா பழகிக்கொண்டாள். நான் விடிய எழும்பி சாப்பிட்டிட்டியா, சாப்பாடு எடுத்தியா எண்டு கேட்டால், சில வேளைகளில் அவளுக்கு எரிச்சல் கூட வந்திருக்கிறது. அப்பவெல்லாம் அவளின் மற்றவர்களில் தங்கியிராத தன்மையைப் பற்றி மகிழாமல், ‘என் தேவையை நாடுகிறாள் இல்லையே என்று கவலைப்பட்டிருக்கிறேன’;. இப்ப என்னில் ஒரு பகுதியை இழந்தது போல் என்ன செய்வதெனறு தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறேன், அவளின் அசைவை எப்போ என் கருப்பையில் நான் உணர்ந்தேனோ அன்றிலிருந்து நான் அம்மாவாக மட்டுமே இருந்திருக்கிறேன்.

என்னைப் பற்றி எந்த நினைவும் இல்லாமல், எனக்கென ஒரு அடையாளமும் இ;ல்லாமல,; வெறும் தீபாவின் அம்மாவாக மட்டுமா வாழ்ந்ததால் தான் எனக்கென ஒரு இலக்கு இல்லாது என் வாழ்க்கைப் படகு ஆட்டம் காண்கிறது என்பது புரிகிறது. வாழ்க்கை பல பக்கங்களைக் கொண்டது எல்லாவற்றிலும் ஒரு சமநிலையான அணுகுமுறை இருந்திருக்க வேண்டும் என்பதும் விளங்குகிறது.

மீண்டும் தொலைபேசி மணி ஒலிக்கிறது.

அது தீபா தான்.

‘அம்மா எப்படியிருக்கிறீங்கள்?’ அவளின் குரல் என் காதுகளில் தேனாய் ஒலிக்கிறது. ‘நல்லாய் இருக்கிறன். நீ எப்படி இருக்கிறாய்?’ குரலில் மனம் நிறைந்த மகிழ்வுடன் கேட்கிறேன்.

‘ஒவ்வொரு முறையும் நான் கதைக்கேக்கை நீங்கள் அழுகிறது, பிறகு அதை நினைச்சு நான் கவலைப்படுகிறது பற்றியெல்லாம் யோசித்துப் பாத்தன். அப்பாவும் தன்ரை வேலையை விட்டுவிட்டு இங்கே வரமாட்டன் என்கிறார். நீங்களும் அவரை விட்டுவிட்டு எப்படி வாறது என்று யோசிக்கிறியள். என்ரை படிப்பு முடிய இன்னும் 2 வருஷம் இருக்குது. அது தான் அப்பாவோடை கதைச்சுப் பாத்தன். இங்கை ஆறு மாசம், உங்கை ஆறு மாசம் நீங்கள் இருக்கலாம் எண்டு அவர் ஒத்துக்கொண்டிட்டார;’

மிகச் சந்தோஷமாகச் சொல்கிறாள் அவள்.

‘தீபாக்குஞ்சு, நான் உன்னை எவ்வளவு மனக்கஷ்டப்படுத்திப் போட்டனெண்டு விளங்குது. அப்பாவுக்கு சமைச்சுச் சாப்பிட்டுப் பழக்கமில்லை. சாப்பாட்டுக்கு என்னிலை தங்கியிருந்து அவருக்குப் பழகிப் போச்சுது. அங்கை நான் வந்தால் பிறகு அதைப் பற்றி வேறை கவலைப்பட வேணும், அதோடை நீயும் நான் தனிய இருக்கிறன் எண்டு நேரத்துக்கு வீட்டை வர வேணுமே எண்டு பரிதவிப்பாய். அதை விட அப்படி இரண்டு வருஷத்திலை படிப்பு முடிஞ்சதும் நீ அவசரப்பட்டு இங்கை ஓடி வர வேணும் எண்டுமில்லை.’

‘அம்மா, அப்ப என்ன தான் செய்யலாம் என்றியள்.’

‘நானும் யோசித்துப் பார்த்தனான். இவ்வளவு நாளும் நான் என்னை வளர்க்கேல்லை இப்ப இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவிச்சு அதைச் செய்வம் எண்டு நினைக்கிறன். அதாலை இனி என்னைப் பற்றிக் கவலைப்படாதை.’

‘அம்மா உண்மையாகவா சொல்லுறியள்? எனக்காண்டிச் சொல்லேல்லைத் தானே? நீங்கள் உங்களுக்காண்டி வாழ வேணும் எண்டு நான் எவ்வளவு ஆசைப்பட்டனான்,’ அவளின் குரலில் மகிழ்ச்சி கொப்பளிக்கிறது.

‘ஓம், நான் இனி எனக்கெண்டு ஒரு வாழ்வை வாழுவம் எண்டு யோசிக்கிறன். அடுத்த முறை கதைக்கேக்கை ஒரு சப்பிரைஸ் உனக்குக் கிடைக்கும். இப்ப சொல்லு உன்ரை லைவ்வைப் பற்றி. மோகன் என்னவாம், படிச்சு முடிச்ச பிறகு தான் கலியாணம் எண்டதுக்கு சம்மதமாமோ? இல்லாட்டில் கட்டிப்போட்டும் படிக்கலாம் தானே! யோசித்துப்பார். அம்மாவுக்கு எல்லாம் சம்மதம் தான். இது உன்ரை வாழ்வு. உனக்குப் பிடிச்ச மாதிரி நீ முடிவு செய். மற்றவையைப் பற்றி அதிகம் போசிக்காதை,’

மனதார அவளுக்கு அதைச் சொல்லும் போது அதை எனக்கு நானே சொல்வது மாதிரியும் என் காதினுள் அது ஒலிக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *