மானங் காத்த மனைவியின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 1,914 
 

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன மானங் காத்த மனைவியின் கதை

விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன ஐந்தாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! ‘மதுரை, மதுரை என்று ஒரு மாஜி குடிகாரன் எங்கள் ஊரிலே உண்டு. ‘மதுவிலக்கை ரத்துச் செய்ய வேண்டும்’ என்று யாராவது சொல்லிவிட்டால் போதும்; அவனுக்கு உடனே மூக்குக்கு மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும். ‘மதுவிலக்கையாவது, ரத்துச் செய்வதாவது! மகான் காந்தியின் திட்டமல்லவா அந்தத் திட்டம்? அதைக் கைவிடுவது அவரையே கைவிடுவது போல் ஆகாதா? அதனால் மக்கள் இப்போது எவ்வளவு மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்! அந்த மகிழ்ச்சியில் மண்ணையா அள்ளிப் போடுவது?’ என்றெல்லாம் கேட்டுச் சண்டை பிடிக்க ஆரம்பித்துவிடுவான். ‘பெரிய மனிதர்களில் சிலர் அப்படிச்சொல்வது சரி; அதில் நியாயம் இருக்கலாம். இந்த மாஜி குடிகாரன் ஏன் இப்படிச் சொல்கிறான்? இதில் என்ன நியாயம் இருக்க முடியும்?’ என்று அவன் மேல் மன்னார் சாமி என்பவன் சந்தேகம் கொண்டு, ஒரு நாள் அவனுக்குத் தெரியாமல் அவனைத் தொடர்ந்து செல்ல, அவனும் அவன் மனைவி மகிழம்பூவும் ஒரு மலையடிவாரத்தில் சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே கள்ளச் சாராயம் காய்ச்சுவதைக் கண்டு திடுக்கிட்டு, ‘அயோக்கியப் பயலே, இதற்குத்தான் மதுவிலக்கை ரத்துச் செய்யக் கூடாது என்று நீ சொல்கிறாயா?’ என்று உறுமிக் கொண்டே அவனை நெருங்கி, ‘சாயம் வெளுத்துப் போச்சுப்பா, உன் சாயம் வெளுத்துப்போச்சு!’ என்று சிரிக்க, ‘ஸ், சத்தம் போடாதே! இப்போது இதில் வரும் வரும்படி வேறு எதிலும் வருவதில்லை. மது விலக்கை ரத்துச் செய்து விட்டால் இந்த வரும்படியெல்லாம் அநியாயமாக அரசாங்கத்துக்கல்லவா போகும்? அப்புறம் நீயும் நானும் கஷ்டப்படாமல் நாலு காசைக் கண்ணாலே பார்ப்பது எப்படி? வேண்டுமானால் நீயும் எங்களோடு கூட்டுச் சேர்ந்து கொள். எங்களுக்குக் கிடைக்கும் வரும் படியில் உனக்கும் பங்கு தருகிறோம். என் மனைவி இங்கே வந்து நமக்கு வேண்டிய சாராயத்தைக் காய்ச்சிக் கொடுக்கட்டும்; நாம் இருவரும் அதை வெளியே கொண்டு போய் விற்றுவிட்டு வரலாம்’ என்று சொல்ல, ‘சரி’ என்று அவனும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொள்வானாயினன்.

இப்படியாகத்தானே இவர்கள் மூவரும் கூட்டு வியாபாரம் செய்துகொண்டு வருங் காலையில, ஒரு நாள் இரவு மதுரையாகப்பட்டவன் தன்னுடைய கூட்டாளியான மன்னார்சாமியை அழைத்துக்கொண்டு சாராயப் பையும் கையுமாகப் பதுங்கி பதுங்கி வெளியே செல்ல, சந்தேகம் கொண்ட போலீசார் அவர்களை மடக்கி என்ன வென்று பார்க்க, குட்டு வெளிப்பட்டு அவர்கள் இருவரும் ஆறு மாதச் சிறைத் தண்டனைக்கு உள்ளாகி கம்பி எண்ணுவாராயினர்.

தனியாக விடப்பட்ட மகிழம்பூ அதற்கு மேல் கள்ளச் சாராயம் காய்ச்சப் பயந்து, வெள்ளரிப் பிஞ்சு, வேர்க்கடலை முதலியவற்றை விற்கும் அங்காடிக் கூடைக்காரியாக மாறி வயிறு வளர்ப்பாளாயினள்.

இவள் இப்படி இருக்குங் காலையில், கள்ளத் தோணியில் இலங்கைக்குச் சென்றிருந்த இவளுடைய அண்ணனான அய்யாமுத்து என்பவன், அங்கே கால் ஊன்ற முடியாமல் இங்கே திரும்பி வர, அவனும் அவன் தங்கை மகிழம்பூவும் சேர்ந்து மறுபடியும் கள்ளச் சாராய வியாபாரத்தில் ஈடுபடுவாராயினர்.

இவர்கள் இருவரும் இப்படியிருக்க, விடுதலையடைந்து வீட்டுக்குத் திரும்பி வந்த மதுரை, இவர்களைச் சற்றுத் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு, ‘போச்சு, என் மானமே போச்சு! மாற்றான் ஒருவன் என் மனைவியுடன் இருப்பதா? அதைப் பார்த்த பின் நான் அந்த வீட்டுக்குள் நுழைவதா?’ என்று மனம் கொதித்துத் திரும்ப, ஒன்றும் புரியாத மன்னார்சாமி, ‘என்னப்பா, என்ன விஷயம்?’ என்று கேட்க, ‘அதோ பார்!’ என்று அவன் அவர்களைச் சுட்டிக்காட்ட, ‘சரிதான், ஆறு மாதம்கூட அவளாலே தாங்க முடியவில்லைபோல் இருக்கிறது!’ என்று இவனும் அவனுக்கு ஏற்றாற்போல் தாளம் போடுவானாயினன்.

இதனால் மனம் உடைந்த மதுரை ஊருக்கு அப்பால் இருந்த ஏரிக்கரைக்கு விடுவிடுவென்று சென்று, அங்கிருந்த ஆலமரக் கிளையொன்றில் தன்னைத் தூக்கிட்டுக் கொண்டு தொங்க, அதைக் கேள்விப்பட்ட அய்யாமுத்து, ‘என்னாலல்லவா என் தங்கைக்கு இந்தக் கதி?’ என்ற தன்னையும் அதே மரத்தில் தூக்கிட்டுக் கொண்டு தொங்க, மகிழம்பூ, ‘என்னாலல்லவா அவர்கள் இருவருக்கும் இந்தக் கதி?’ என்று தன்னையும் அங்கேயே தூக்கிட்டுக்கொண்டு தொங்க முயல்வாளாயினள்.

அப்போது அவள் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக அங்கே ஓர் அதிசயம் நிகழலாயிற்று. அந்த அதிசயம் என்ன வென்றால், அங்கே ஏற்கெனவே தூக்கிட்டுக் கொண்டிருந்த மதுரையும் அய்யாமுத்தும் தங்கள் தூக்குக்கயிற்றைத் தாங்களே கழற்றி மரத்தோடு விட்டு விட்டுக் கீழே குதிக்க, மகிழம்பூ வியப்பே உருவாய் அவர்களைப் பார்க்க, ‘மெச்சினேன் பெண்ணே, மெச்சினேன்; நீயே என் மானத்தைக் காத்த மனைவி என்று அறிந்து உன்னை நான் மெச்சினேன்!” என்று மதுரை சொல்ல, ‘எல்லாம் மச்சானும் நானும் ஏற்கெனவே கலந்து செய்த ஏற்பாடு, தங்கச்சி! நாங்கள் மாட்டிக் கொண்டிருந்த தூக்குக் கயிறு உண்மையில் சுருக்குப் போட்ட கயிறு அல்ல; கெட்டி முடி போட்ட கயிறு. இதோ பார்த்தாயா?’ என்று அய்யாமுத்து அந்த முடிகளை அவளுக்கு இழுத்து இழுத்துக் காட்டிச் சிரிக்க, ‘எல்லாம் மாரியாயியின் மகிமை!’ என்று மகிழம்பூ மகிழ்ந்து, மாரியாயியை நினைத்துத் துதிக்கலாயினள் என்றவாறு…. என்றவாறு…. என்றவாறு……’

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘இவர்களில் யார் புத்திசாலி?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘சந்தேகமென்ன, மதுரைதான்! ராவணனிடமிருந்த சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொல்லி ஏற்றுக் கொண்ட ராமனைப்போல, தன்னை விட்டு ஆறு மாதம் ஒதுங்கியிருந்த தன் மனைவியைத் தூக்குக் கயிற்றில் கழுத்தைக் கொடுக்கச் சொல்லி ஏற்றுக்கொண்டு விட்டானல்லவா?’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின் மேல் ஏறிக்கொண்டுவிட்டது காண்க…. காண்க… காண்க….

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *