கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 10, 2024
பார்வையிட்டோர்: 146 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலை நேரத்தின் அவசரக் கோலத்தோடு… வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற அவசரத் துடிப்போடு, கடந்த அரை மணி நேரமாக மைலாப்பூர்ப் பேருந்தை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பொழுது பிதுங்கி நின்ற கூட்டத்தோடு வந்து நின்ற பேருந்தில் ஏறப் போனவள் கால் சுளுக்கியது போல் அயர்ந்து நின்று விட்டாள். அந்தப் பேருந்து கிளம்பிச் சில விநாடிகளில் நினைத்துப் பார்த்தாள். அந்தப் பேருந்தில் அவனைப் பார்த்த பிறகு உடம்பே பற்றிக் கொண்டு எரிந்தது.

வீட்டிற்கு போக வேண்டும் என்ற துடிப்பை விடப்… போக வேண்டுமே என்ற சலிப்பும், அலுப்பும் அவளுக்குத் தோன்றின. ஆனால், குழந்தை இராதாவின் ஞாபகம் வந்தவுடன் கூடவே வேண்டாத பல சம்பவங்கள் மழை நீரில் அடித்துக் கொண்டு வருகின்ற குப்பைகளைப் போல மனத்திற்குள் வளைய மிட்டன.

அவள் கணவன்… சற்று முன்னால் பேருந்தின் ஓரத்தில் கறுப்புச் சட்டம் போட்ட கண்ணாடி அணிந்து உட்கார்ந்து கொண்டிருந்த அனந்தராமன், தினமும் அர்ச்சனை செய்கின்ற திட்டுகள் நினைவில் எழுந்தன. கூடவே, மனத்திற்குள் சின்னச் சிரிப்பு வட்டமிட்டது.

வாழ்க்கை முழுதும் அவனது பாதையிலேயே பயணம் செய்ய வேண்டியவளான அவள், அந்தப் பேருந்தில் அவனுடன் அரை மணி நேரம் பிரயாணம் செய்வதைக் கூட விரும்பாமல் அதைத் தவற விட்டதை எண்ணித் தான் அந்தச் சிரிப்பு…

அடுத்த பேருந்து வந்தது. அதிலே ஏறிக் கொண்டாள். ‘சே.. என்ன வாழ்க்கை… பெண்களின் பெண்களின் விடுதலை எல்லாம் உயர் மட்டப் பெண்களுடையது. எனக்குக் கணவன் தான் எல்லாம்… ஏன் மனத்தளவில் கூடப் பெண்மை பலவீனமானதாலா?

பேருந்து நின்றவுடன் இறங்கி வீட்டை நோக்கிப் பரபரவென்று நடந்தாள்.

“ஏம்மா! இவ்வளவு தாமதம்?-அப்பா வாஞ்சையுடன் கேட்டுவிட்டு “அடையும்… காப்பியும் வச்சிருக்கேன்… குழந்தை தூங்கறா… நான் கோவில் வரைக்கும் போயிட்டு வர்றேன்” என்று பட பட வென்று சொல்லி விட்டுப் போனார்.

அடையைச் சாப்பிட்டுக் காப்பியைக் குடித்து அவள் மேடையைப் பார்த்தாள்…வழக்கம் போல் அப்பா பாத்திரத்தில் சாதம் வைத்திருந்தார்.

இந்த வயதான காலத்தில் அவள் அப்பாவை உட்கார வைத்துச் செய்ய வேண்டும். ஆனால், நிலைமை நேர் மாறாக இருக்கிறதே. இந்த வாழ்க்கையிலிருந்து எப்படி மீள முடியும்? பண்பாடு… கலாசாரம் என்று கட்டிப் போட்டுவிட்டதே… கணவன் என்ற போர்வையில் அரக்கனாய் இருக்கின்ற ஒருவனிடம் தினம் தினம் அடி பட்டுச் வேண்டியிருக்கிறது. இதற்கு முடிவே இல்லையா?

அவன் இன்னும் வீடு திரும்பவில்லை… மணி பதினொன்று… தீடீரென்று குழந்தை அழத் தொடங்கவும், அவன் உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.

“ஏய்! சனியனே… உள்ளே நுழைகின்ற பொழுதே இது என்ன ஒப்பாரி. சனி… பீடை.. தரித்திரம். கழுத்தை முறி…”

பதிலே பேசாமல் குழந்தையைச் சமாதானபடுத்தினாள் அவள்.

“ஏய்… என்னடி… காதிலே விழலே… எருமை மாடு…” ஆத்திரத்துடன் சொன்னவன் குழந்தையை அவள் கையிலிருந்து பிடுங்கி அறைக்கு வெளியே விட்டுவிட்டுப் படாரென்று அறைந்து கதவைச் சாத்தினான்…

இவன் கணவனா… வெறியனா ? பெண்டாட்டி என்றால் கறிவேப்பிலைக் கொத்தா… வாசனைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு… பின்னால் தூக்கி எறிந்து விடுவதைப் போல்…

எதுவும் செய்ய முடியாமல் உயிர் அற்ற பொருள் போல உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளது பார்வை அவன் மேல் விழ… நிம்மதியாய்க் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்.

உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கவும் பிடிக்காமல்… வெளியே போனால்… பெற்ற அப்பாவானாலும் அந்த இருட்டிலும் அவர் பார்வையைச் சந்திக்க வெட்கப்பட்டு… உடம்பெங்கும் காயம் பட்டது போல் எரிச்சலுடன் உட்கார்ந்திருந்தாள்.

அவருக்கு அவள் அப்பாவையும், அவருக்குத் தன் மகளையும் விட்டால் வேறு ஆதரவு கிடையாது. படித்து முடித்தவுடன் நல்ல நிறுவனம் ஒன்றில் அவளுக்கு வேலையும் கிடைத்தது. மூன்றாண்டுகள் தெளிந்த நீரோடையாய் இருந்த அவளது வாழ்விலே சேற்றை அள்ளிப் பூசியதைப் போல் அனந்தராமன் வந்து சேர்ந்தான். அவர்களுக்குள்ளே பழக்கம் ஏற்பட்டது, எல்லாம் ஓர் ஆறுமாத காலம் தான், அவன் மேல் இருந்த காதலை விட அவன் யாருமே இல்லாத அநாதை என்ற செய்தி தான் அவளை அவன் மேல் ஈடுபாடு கொள்ள வைத்தது.

தான் கல்யாணம் செய்து கொண்டால் அப்பாவின் பிழைப்பு எப்படியோ? என்று கலங்கிக் கொண்டிருந்தவளுக்கு… அவனைத் திருமணம் செய்து கொண்டால் அப்பாவைப் பிரிய வேண்டாம் என்ற ஒரு காரணம் தான் முதன்மையாக நின்று அவனிடம் இருந்த மற்ற குறைகளை மறைத்து அவளை அவனுடன் சேர்த்து வைத்தது… பிறகுதான், தான் செய்த முடிவு எவ்வளவு தவறானது என்பதைப் புரிந்து கொண்டாள். எதுவுமே செய்ய முடியாமல் தவித்தாள்.

அவன், அவளது உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள மாட்டான். அவனுக்கு வருகின்ற சம்பளத்தில் வசதியாக இருக்க முடியும் என்றாலும்… அவன் செய்த உல்லாசச் செலவுகளுக்கே அவனது பணம் போதாமல் இருந்ததைக் கண்கூடாகப் பார்த்த பிறகும் அவள் தனது வேலையை விடவில்லை.

தன் வாழ்க்கைத் துணைவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதால் அவளால் யாரையும் குறை சொல்ல முடியவில்லை. அவளையே வாயில் வந்தபடித் திட்டுகின்ற அவளது கணவன், அவளது அப்பாவையும் விட்டு வைக்கவில்லை. அருக்குப் போக வேறு போக்கிடம் இல்லை. எனவே, எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு தன் பெண்ணிற்காகப் பொறுமையுடன் இருந்தார்.

முன்பெல்லாம் அவளும் அவனது கூச்சலுக்கு எதிர்க்கூச்சல் போட்டிருக்கிறாள். அதன் எதிரொலி… மற்றவர்களுக்கு இனிமை நிறைந்த பொழுது போக்காய் இருந்ததைப் பார்த்த பிறகு தன் வாயை இறுக்கி மூடிக் கொண்டு விட்டாள்.

எழுந்து வெளியே வந்தாள்… குழந்தை அப்பாவின் அணைப்பில் நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருக்க அவளும் அப்படியே தரையில் படுத்துக் கொண்டாள்… தூக்கம் கண்களை அழுத்தியது.

காலை நேரம்

இன்று சம்பள நாள்… மனத்தில் மகிழ்ச்சியே இல்லை… கிண்டிக்குள் காவிரியை அடைத்த அகத்தியரைப் போல்… பிரம்மாண்டமான செலவுகளை அந்தச் சம்பளத்திற்குள் அடைக்க முடியுமா?

நீண்ட பெரு மூச்சுடன் வேலைகளைச் செய்யத் தொடங்கினாள்.

வழக்கம்போல் குளித்தல்… சமைத்தல்… உடை மாற்றுதல்… எல்லாவற்றிலும் விரைவு. எல்லா வேலைகளையும் முடித்து விட்டு அலுவலகத்திற்குப் போனபோது.

“எம்மாந் நேரமாகக் காத்துக் கிட்ருக்கேன்? உன் வூட்டுக்காரன் என்கிட்டே கடன் வாங்கி ஆறு மாசத்துக்கு மேலே ஆறது. பணம் கேட்கப் போறேனே என்று பயந்து என் கண்ணிலேயே படலை… நேத்துத் தான் பார்த்தேன். உன்கிட்டே வாங்கிக்கச் சொன்னாரு…”

“யாருய்யா நீ… என்ன உளர்றே?” – எரிச்சலுடன் கேட்டாள்.

அவளை ஏற இறங்கப் பார்த்து விட்டு “அனந்தராமனின் மனைவி நீ தானே?” என்று அழுத்தமாய்க் கேட்டான்.

“அதுக்கு என்ன ?” ஆங்காரமாய்க் கேட்டாள்.

“அப்ப இதைப்படி…” அவளிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தான். அதை வாங்கிப் படிக்க உடம்பு முழுதும் திகுதிகுவென எரிய… தலை முழுதும் கோடரி கொண்டு வெட்டியது போல் வலிக்க, ஆத்திரத்துடன் சொன்னாள்:

“அவர் வாங்கிய கடனுக்கு நான் பொறுப்பில்லை…”

“அவருடைய மனைவியா நீங்க இருக்கிற வரைக்கும் இந்தக் கடனை நீங்க தான் அடைக்கணும்…”

அந்தப் பேச்சைக்கேட்டுக் கொதித்துப் போனாள். இத்தனை நாள் அமுங்கி இருந்த ஆத்திரம் வெடித்துச் சிதறியது.

“ஏய், வெளியே போ… கடன் வாங்கியவரிடமே போய்க் கேளு… நான் சல்லிக் காசு கூடத் தரமாட்டேன்..” அந்தக் காகிதத்தைச் சுக்கு நூறாய்க் கிழித்து அவன் மேல் வீசி எறிந்து விட்டு உள்ளே போனாள்.

உள்ளே இருக்கையில் அமர்ந்த பின்பும் படபடப்புக் குறையவில்லை. சொல்லத் தெரியாத ஈனமும், அவமானமும், ஆத்திரமும், எரிச்சலும் மேலே எழும்பின…

சில நிமிடங்களில் அவளது தோழி அனுசூயா அவள் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

“இதோ பார்… அந்தக் கடன் காரனை நம்ம கடை நிலை ஊழியன்

துரத்தி அனுப்பிச் சுட்டான்… எப்ப அலுவலகத்திற்கே கடன் காரன் வர ஆரம்பிச்சுட்டானோ, இனி மேலே இது தொடர் கதையாகி விடும்… இதுக்கு ஒரே தீர்வு “உன் கணவர் வாங்கிய கடனுக்கு நீ பொறுப்பில்லே” என்று செய்தித் தாளிலே விளம்பரம் கொடு.” – நிறுத்தி நிதானமாய்ச் சொன்னாள். தோழி.

“ஆமாம்… அப்படித் தான் செஞ்சுடணும். இவராலே எப்ப என் சம்பளத்திற்குக் கேடு வந்ததோ இனிமேல் நான் சும்மா இருக்கக் கூடாது… முதல்லே அதைச் செய்யறேன்…”

“ஏய்! எருமை மாடு! எவ்வளவு திமிர் இருந்தால் இப்படியொரு விளம்பரத்தைக் கொடுப்பாய்?”

“வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்ற உங்களைப் பொறுத்துண்டேன்… ஆனால், எப்போ என் சம்பளத்திலேயே கை வைக்க ஆரம்பிச்சிங்களோ அதற்கு மேல் என்னால் பொறுத்துக் கொள்ள முடியலே… அதான்…”-நிதானமாய்ச் சொன்னாள்.

“நல்லது…! எப்ப நீ வாங்குகிற சம்பளமே எனக்குச் சொந்தமில்லையோ, அப்ப எதுக்கு நீ மட்டும் இங்கே இருக்கணும்… உடனே வெளியே, போடீ..’ “இந்த வீட்டுக்கு நான்தான் வாடகை தறேன். நீங்க தான் வெளியே போகணும்…”

“நீயே எனக்குச் சொந்தமில்லை என்று ஆன பிறகு நான் கட்டிய தாலி மட்டும் எதுக்கடி?”-பெருங்குரலில் கத்திவிட்டு அவளருகில் சென்று அவள் கழுத்திலே அவன் கை வைத்த பொழுது..

“மாப்பிள்ளை… வேண்டாம்.. பாவம் செய்யாதீர்கள்… இது மிகவும் தப்பு… தாலியைத் தொடாதீங்க..” மேலே பேச முடியாமல் குரல் நடுங்கத் துடிக்கின்ற மனத்தோடு… கைகள் பதை பதைக்க அவர் அவனைத் தடுத்த பொழுது…

“சரிதான் போய்யா… உம்ம பொண்ணு இருக்கிற அழகுக்குத் தாலி ஒரு கேடா!” ஆங்காரமாய்ச் சொல்லிவிட்டு அவரைப் பிடித்துத் தள்ளி விட்டு அவன் தாலியைப் பிடித்து இழுக்க முயன்றான்.

“ச்சீ… அதைத் தொடாதீங்க… அதை எடுக்க உங்களுக்கு உரிமையில்லை… அது என்னுடையது” அவன் கையை உதறி விட்டு விலகி நின்று மூச்சிறைக்கச் சொன்னாள்.

“நன்றாகப் பத்தினி போல நடிக்கிறே!” என்று கேலியாகச் சொல்லி விட்டுச் சடாரென்று அவளது கையைப் பிடித்து இழுத்துச் சுவரோரமாய்

அவளை நகர்த்தி விட்டு மீண்டும் தாலியில் கை நீட்டினான் அவன்.

“இந்தத் தாலியைக் கழற்றி விட்டால் நான் உங்கள் மனைவி இல்லை என்றாகிவிடாது. அதற்குச் சட்டம் இருக்கிறது. நீதி மன்றம் இருக்கிறது. வேறு தாலியைக் கட்டிக் கொள்ள அதிக நேரம் ஆகாது. இந்தத் தாலியை எப்பொழுது எடுப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அந்த அளவிற்குத் துணிச்சல் இருந்தால் நம்பிக்கையில்லை என்றால்… பாவ காரியத்தைப் பண்ண உங்கள் நெஞ்சுக்கும், கைக்கும் துணிவிருந்தால்… உங்களை நீங்களே இல்லை என்று நினைத்தால்… ம்…. எடுத்துக் கொள்ளுங்கள்…” தம் கண்களை மூடிக்கொண்டாள், அவள்.

“சரி தான் போடி…” என்று ஆத்திரமாய்ச் சொல்லியபடியே அவளது தாலியை எடுத்துக் கொண்டு வெளி யேறினான் அவன்.

”ஐய்யோ… சுமங்கலிப் பொண்ணு கழுத்திலே தாலி இல்லாமல் இருக்கக் கூடாது… இரு வர்றேன்… என்று கூறிவிட்டுச் சில விநாடிகளில் மஞ்சள் கயித்தில் மஞ்சளை முடி போட்ட படித் தந்தை அவளிடம் தந்தபொழுது…

”அம்மா! உங்க வூட்டுக்காரர் தெருவிலே இருக்கிற பள்ளத்திலே விழுந்துட்டாரு…”

“ஐயோ!” என்று கத்தியவள் கழுத்திலே மஞ்சள் சரட்டைக் கட்டிக் கொண்டு வேகமாக வெளியே ஓடினாள்.

– உமா சந்திரசேகரன், சென்னை

– மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *