டாக்டர்கள் பலவிதம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 17, 2022
பார்வையிட்டோர்: 12,850 
 

பிரம்மா, விஷ்ணு, சிவன் போல, நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான புரொபஷனல் மும்மூர்த்திகள் – டாக்டர், இன்ஜினீயர், வக்கீல். இவர்களில் இன்ஜினீயரையும் (விக்கெட்கீப்பர் அல்ல, வீடு கட்டுபவர்) வக்கீலையும், விரும்பினால் சாகும் வரையில் சந்திக்காமலேயே இருந்துவிடலாம்.

உதாரணமாக, கடைசி காலம் வரையில் வீட்டைக் கட்டிப் பார்க்காமல், அல்லது கட்டப் பவிஷஇல்லாமல் திருவல்லிக்கேணியிலோ, சிந்தாதிரிப் பேட்டையிலோ, மேற்கு மாம்பலத்திலோ ஒண்டுக் குடித்தனத்தில் ஐம்பது ரூபாய் வாடகை தந்து கொண்டு (கோயில் வீடாக இருந்தால் அதுவும் தரவேண்டாம்) காண்ட்ராக்டர், மேஸ்திரி, வீட்டின் வரைபடம் தயாரிக்கும் சிவில் இன்ஜினீயர் (பாதிக்கு மேல் கிரிமினல் இன்ஜினீயர்) போன்றவர்களின் சங்காத்தமே இல்லாமல் தப்பித்துவிடலாம்.

அதேபோல, கனகாரியமாக உயில் என்று ஒன்று எழுதுவதற்கு. பிதுரார்ஜித சொத்து எதுவும் கிடையாததாலும், எதற்காகவாவது நஷ்டஈடு கேட்கக்கூடத் தேவையான மானம் நம்மிடையே இல்லாததாலும், திருமணம் நடந்த மறுநாளே தோன்றும் விவாகரத்து எண்ணத்தைச் செயல்படுத்தாமல் பல்லைக் கடித்துக்கொண்டு முப்பது வருடத் தாம்பத்தியம் நிகழ்த்த முடிவெடுக்கும் பாரதப் பண்பினாலும், நீதிமன்றத்தின் படியேற வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தவிர்த்து வக்கீல் சார் சிநேகிதத்தையும் ஒதுக்கிவிடலாம்.

ஆனால், தும்மல், தேமல், தலைவலி, வாயு உபத்திரவம் வயிற்றுப்போக்கு, சேத்துப்புண் போன்ற சைத்தான்களை ஓரம்கட்ட முடியுமா…?

அப்படியே யோகம், உடற்பயிற்சி, சத்துணவு, சூரிய நமஸ்காரம் என்று தேகத்தைக் கன்னி கழியாமல் நாம் பாதுகாத்தாலும், ஆண்டுக்கு ஒரு முறை நமது இரு விழிகளைத் தாக்கி சிவப்புக் குளமாக்கும் மதறாஸ்-ஐ யாவது வந்துவிடுவதால் மரியாதையாக வைத்தியரை நாடவேண்டி இருக்கிறது!

விருந்துக்கு அழைக்க விரும்பும் பத்து விருந்தாளிகள் யார் என்று கேட்பது போல, உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத பத்து நபர்களை யார் என்று யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். அவர்கள் கூறும் பத்து பேரில் ஒருவராவது அலோபதி டாக்டராகவோ, ஹோமியோபதி வைத்தியராகவோ, அல்லது குறைந்தபட்சம் பச்சிலை சித்தராகவோ இருப்பார்.

காண்ட்ராக்டரையோ , மேஸ்திரியையோ நாம் குடும்ப காண்ட்ராக்டர், குடும்ப – மேஸ்திரி, குடும்ப – கொத்தனார், குடும்ப சித்தாள் என்று கூறுவதில்லை. டாக்டர் ஒருவருக்குத்தான் குடும்ப வைத்தியர் என்ற செல்லமான அந்தஸ்து அளிக்கப்படுகிறது!

இரண்டு கடிகாரங்கள் ஒத்துப் போகாததைப் போல, இரண்டு வைத்தியர்கள் ஒத்துப் போனதாகச் சரித்திரமே கிடையாது.

தீப்புண், வெட்டுக்காயத்துக்கு ஒரு டாக்டர் பர்னால் தடவச் சொன்னால், அதே புண், காயத்துக்கு அடுத்த டாக்டர் மாவு வைத்துக் கட்டச் சொல்வார். அறிவு கெட்ட தீப்புண் வெட்டுக்காயமும் இரண்டு சிகிச்சைகளுக்கும் ஏமாந்து போய் பலனளித்துக் குணமாகும். சில டாக்டர்கள் பாதத்தில் மறைந்த முள்ளை எடுக்கும் போது கூட பேஷண்ட்டுக்குப் பெருவாரியாக மயக்க மருந்து கொடுத்து போதையில் ஆழ்த்துவார்கள். வேறு சிலர் நோயாளியின் பாதம் எது, பாதத்தில் வந்துள்ள கொப்பளம் எது என்று பாகுபடுத்த முடியாத அளவுக்கு பலூனாக வீங்கியுள்ள பாதத்தை நோயாளியின் கண் எதிரிலேயே பலாத்காரம் செய்வார்கள்.

சுருங்கச் சொன்னால் மருந்துக்குக்கூட ஒரு டாக்டரைப் போல இன்னொரு டாக்டர் இருப்பதில்லை!

மாட வீதியிலிருந்து ஒரு டாக்டர் ஒரு காலத்தில் எங்கள் குடும்பத்துக்கு ஆஸ்தான வைத்தியராக இருந்தார். இவர் ஒரு ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்ட். தொண்டை , நாசி, செவிப்பறை இந்த மூன்று அவயங்கள் தாம் உலகிலுள்ள அனைத்து வியாதிகளுக்கும் மூல காரணம் என்பது இவரது தியரி. கான்சரிலிருந்து கக்குவான் இருமல் வரை எந்த வியாதி கூறினாலும் இவர் உடனே ஒரு குச்சியில் பஞ்சைச் சுருட்டி அதை ஒரு சொல்யூஷனில் தோய்த்து உள் தொண்டையைக் கிச்சுகிச்சு மூட்டி விட்டு, கடைசியாக காதில் அழுக்கு எடுக்கிறேன் பேர்வழி என்று சிரிஞ்ஜால் காதில் ஓங்கார பிரணவம் ஒரு வாரம் கேட்கும்படி சுடுவார்.

இந்த அழகில் இவருடைய க்ளினிக் ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் இருக்கிறது. க்ளினிக்கை அடைய முழங்கால் முடிச்சாகக் குறுகலான மரப்படிகள். ப்ளட்பிரஷர் அதிகம் உள்ளவர்கள் படிகளில் ஏறி இவரைப் பார்ப்பதற்குள் யமதர்மனைப் பார்த்து விடுவார்கள் !

காலை நேரங்களில் கூட்டம் அதிகமாகி முதல் மாடி வரை படிகளில் விக்கிரமாதித்தன் பொம்மைகளாக நோயாளிகள் அமர்ந்திருப்பார்கள்.

பள்ளிக்கூடம் லீவு போட அஜீர்ணம் என்று பொய் சொல்லி பெற்றோரோடு வந்த பிள்ளைகள் நேரம் ஆக ஆக நோயை மறந்து மரப்படிகளின் கைப்பிடியில் சறுக்கு மரம் விளையாட ஆரம்பித்துவிடுவார்கள்.

பச்சை, நீலம், சிவப்பு, ஊதா என்று வானவில்லின் ஏழு வர்ணங்களிலும் இவரே மருந்து தயாரித்து வைத்திருப்பார்.

வைத்தியம் பார்த்துவிட்டு நோயாளியை கம்பவுண்டரிடம் அனுப்பி, “ரங்கசாமிக்கு (நோயாளி) ரெண்டு குப்பி பச்சை, வெளியில் தடவிக்க வெளிர் நீலம் ஒரு ட்யூப்” என்று கத்துவார். நமக்கு நாலு இட்லி, ஒரு பொங்கல்’ என்று கத்தும் ராயர் ஓட்டல் சர்வர் ஞாபகத்துக்கு வரும்.

பிரிஸ்கிரிப்ஷனில் மருந்துக்குப் பதிலாக “ரொட்டி, தெளிவான ரசம் சாதம், தேவைப்பட்டால் வெதுவெதுப்பான மோரில் கரைத்த சாதம்” என்று பத்தியம் எழுதித் தருவார்.

மருந்துக்கும் வைத்தியத்துக்கும் பணம் கொடுத்துவிட்டு அருகில் வைத்திருக்கும் அங்காள பரமேஸ்வரி ஆலய உண்டியலில் (டாக்டர்தான் டிரஸ்டி) நோயாளிகள் தங்களால் இயன்ற பொருளுதவியை அளிக்கவேண்டும்.

என் நண்பனின் தந்தை, தண்டையார் பேட்டையில் வைத்தியம் பார்க்கிறார். மகா முன்கோபி. நோயைச் சரியாக விவரிக்கத் தெரியாததால் சில நோயாளிகளை இவர் காதைப் பிடித்துக் கிள்ளியதாகக்கூட கேள்வி. தன்னிடம் வருபவர்களிடம் இவர் கேட்கும் முதல் கேள்வி நேற்று என்ன சாப்பிட்டாய்?” என்பதுதான். மசால் தோசை என்றாலும் சரி , வெறும் மோர் சாதம்தான் என்றாலும் சரி; இவர் கன்னாபின்னாவென்று கெட்ட வார்த்தையில் நோயாளியை அர்ச்சனை செய்வார்.

வயிற்று வலி என்று வந்த நோயாளியை இவர் பெஞ்சியில் படுக்கவைத்து கிங்காங், தாராசிங் பாணியில் கத்திரிப் பிடி, உடும்புப் பிடி என்று விதவிதமான பாணியில் வயிற்றை அமுக்கிப் பார்ப்பார். நோயாளிக்கு பேசாமல் வயிற்று வலியைப் பொறுத்துக் கொண்டிருக்கலாமே, ஏன் இங்கு வந்து சித்ரவதைப்படுகிறோம்’ என்று எண்ணத் தோன்றும். டாக்டருக்கு இந்த முரட்டுத் தனத்தோடு, வந்தவர்களோடு வெகுநேரம் பேசும் வியாதியும் உண்டு .

சில சமயங்களில் ஜெனரல் செக்கப்புக்காக வந்தவரை அரை நிர்வாணமாக பெஞ்சியில் கிடத்தி அம்போ என்று விட்டுவிட்டு அடுத்த நோயாளியைக் கூப்பிட்டு மணிக்கணக்கில் பேச ஆரம்பித்துவிடுவார். பெஞ்சியில் படுத்திருப்பவர் வியாதியாலும், மூன்றாவது மனிதன் தன்னை அலங்கோலமாகப் பார்த்துவிட்டானே என்ற நாணத்தாலும் நரக வேதனைப்படுவார். குலம், கோத்திரத்தை வந்தவருக்குக் கூறி இன்னின்ன பாகங்களில் இவருக்கு இப்பேர்ப்பட்ட உபாதைகள் என்று விளக்க உரை வேறு கூற ஆரம்பித்துவிடுவார்.

மேலே கூறிய டாக்டர் முரட்டுத்தனமான அவசரக்காரர் என்றால் நத்தையைவிட மெதுவாக வைத்தியம் பார்க்கும் டாக்டர் ஒருவர் எனக்கு உறவிலேயே இருக்கிறார். இவர் பரிசோதித்து வியாதியைக் கண்டுபிடிப்பதற்குள் ஒன்று வியாதியே போய்விடும்; அல்லது நோயாளி போய்விடுவார்.

ஜலதோஷம் என்று வந்தவரை ஒரு மணி நேரம் சோதித்துவிட்டு, கடைசியில் ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஈ.ஸி.ஜி. எடுத்துக் கொண்டுவந்து மறுநாள் காட்டச் சொல்வார்.

வெளியே காத்திருக்கும் நோயாளிகள் க்யூப், சீட்டுக்கட்டு போன்ற விளையாட்டுக்கள் விளையாடிப் பொழுதைக் கழிப்பதைப் பார்த்திருக்கிறேன். இவர் இருதயத் துடிப்பின் லப்டப் பைத் தெரிந்துகொள்ள ஸ்டெதாஸ்கோப்பை மார்பிலும் அதன் சுற்றுப்பிரதேசங்களிலும் வைத்துவைத்து எடுக்க ஆரம்பித்தால் ‘செஞ்சுரி’ போடாமல் விடமாட்டார்.

இப்படி பல லட்சக்கணக்கான பேஷண்ட்டுகளின் நோய்களோடு சர்வ அலட்சியமாக விளையாடும் டாக்டர்களுக்கு துரியோதனன் தொடை’ மாதிரி (ஆங்கில மோகம் உள்ளவர்களுக்கு ‘AchillesHeel’) ஒரு வீக் பாயிண்ட் உண்டு. அதுதான் அவர்களுடைய ஃபாமிலி. தங்கள் ஃபாமிலி மெம்பர்களில் யாருக்காவது லேசாக உடம்புக்கு வந்தால் கூட டாக்டர்களுக்குப் பயமும், பயம் காரணமாகக் கடுங்கோபமும் வந்துவிடுகிறதே, ஏன்?

தன்னுடைய ஃபாமிலி என்று வந்தால் ‘வேறு நல்ல டாக்டர் யாரிடமாவது காட்டலாமே!’ என்று கூடச் சில டாக்டர்கள் முடிவு கட்டுவது எனக்குத் தெரியும். ஆகவே, மற்ற டாக்டர்களை ‘அவாய்ட்’ பண்ண நமது ஃபாமிலியிலேயே ஒரு டாக்டரை உருவாக்கினால் கூட ஒரு உபயோகமும் கிடையாது.

நாம் என்னதான் செய்வது?

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *