கார் விபத்தா என்ன நம்பர்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 25, 2023
பார்வையிட்டோர்: 10,149 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எந்த வழியானாலும் அது இஷ்டத்துக்கு வருவது தானாம் அதிர்ஷ்டம்! நல்லவேளை, நம் இஷ்டத்துக்கு வராமற் போனதால்தான் அது உலகில் இன்னமும் தப்பிப் பிழைத்திருக்கிறது……

முதலிலேயே சொல்லிவிடுகிறேன்-‘நாலு நம்பர் லாட்டரி’ என்று பேச்சு வழக்கில் உள்ளபடி இங்குக் குறிப்பிடப் போவதை வாசகர்கள் பொறுத்தருள வேண்டும்!

நாம் விரும்புகிற நான்கு இலக்கங்களை வரிசைப் படுத்தி ‘லாட்டரி ஏஜண்டி’டம் காசு கொடுத்துப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதே இலக்கங்கள் குதிரைப் பந்தய பரிசு எண்களுடன் ஒத்திருந்தால்… அடித்தது அதிர்ஷ்டம் என்பது தெரிந்த சங்கதிதான்!

அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று நல்ல வழியிலும் தேடுவார்கள்; கள்ள வழிகளிலும் தேடுவார்கள்!

கள்ள வழிகளில் ஒன்றுதான் இந்த நாலு நம்பர் லாட்டரி!

எந்த வழியானாலும் அது இஷ்டத்துக்கு வருவது தானாம் அதிர்ஷ்டம்! நல்லவேளை, நம் இஷ்டத்துக்கு வராமற்போனதால் அது உலகில் இன்னமும் தப்பிப் பிழைத்திருக்கிறது!

அதிர்ஷ்டம் என்னும் வார்த்தை மட்டும் இல்லா விட்டால் உலகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரமாயிரம் பேர் நெஞ்சு வெடித்தே செத்துப் போவார்கள்— ஏமாற்றம் தாளாமல்!

‘முதற் பரிசு கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் ஒரேவொரு நம்பர் தவறிப் போச்சு. ஊம்… நமக்கு இப்ப அதிர்ஷ்டமில்லை…’ என்று ஏங்கி உருகுகிறவர் அதிர்ஷ்டம் என்பதை நம்பாதவராயிருந்தால் என்ன கதிக்கு ஆளாவார்?

அதிர்ஷ்டம் திடீரென்று குதித்துச் சிலரை மயக்கம் போட்டு விழச் செய்யுமாம். அப்படி விழுந்தவர்களில் சில பேர் மறுபடி விழித்தெழுவது மில்லையாம். ‘அதிர்ஷ் டத்தின் தாக்குதல்’ என்பார்கள் இதை!

நாலு நம்பர் லாட்டரி விவகாரமொன்றின் தாக்கு தலுக்கு நானும்தான் ஆளானேன். ஆனால், அது எந்த வகையைச் சேர்ந்த அதிர்ஷ்டம் தெரியுமா?


கடத்தல்

இரவு மணி பதினொன்று. வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தேன்.

அப்போது என் பக்கத்தில் வந்து நின்றது ஒரு கறுப்பு நிறப் பெரிய கார். அதனுள்ளிருந்து ஒரு தலை வெளியே தோன்றி, என் பெயரைக் குறிப்பிட்டு, ‘நீதானே அது?’ என்று கேட்டது.

‘ஆமாம்’ என்றேன் வியப்புடன்.

‘இந்தக் காரில் ஏறிக்கொள். உன் வீட்டில் கொண்டுபோய் விடுறேன்’ என்றது அந்தத் தலை.

‘வேண்டாம். அருகில் தான் என் வீடு. நடந்தே போய்விடுகிறேன், நன்றி’ என்று சொல்லிவிட்டு நடக்க முற்பட்ட என் முதுகில் ‘கும்’மென்று ஒரு குத்து விழுந்தது. ஆங்கிலப் படங்களின் பாணியில் அசல் குத்து!

முதுகெலும்புகள் பூராவும் ‘பொல பொல’வென்று உதிர்ந்து பிறகு ஒன்று கூடினாற் போலிருந்தது!

‘ஐயோ அம்மா’ என்று அலறக்கூடச் ‘சான்ஸ்’ தராமல் அந்தக் காருக்குள் என்னைப் பிடித்துத் தள்ளி னான் ஒரு முரடன். ‘தொப்’பென்று போய் விழுந் தேன். உடனே என் கண்கள் துணியால் கட்டப் பட்டன. ‘யார் நீங்கள்? என்னை ஏன் கடத்திப் போகி றீர்கள்?’ என்று கூச்சல் போடலாமென்று வாய் திறப் பதற்குள் வாயையும் கட்டிவிட்டார்கள்.

‘விர்’ரென்று கிளம்பியது கார்.

என்னை எங்கே கொண்டு போகிறீர்கள்? எதற் காகக் கொண்டு போகிறீர்கள்? யார் இவர்கள்? என்ன சூழ்ச்சி இது? ஒருவேளை, ஆள் மாறாட்டம் காரணமாக நான் அகப்பட்டுக் கொண்டேனோ? எனக்கு ஒன்றுமே புரியவில்லை!


மர்மம்

வெகு நேரத்துக்குப் பிறகு எங்கோ ஓர் இடத்தில் வந்து நின்றது கார். ‘கசமுசா’ என்று ஏதோ பேசிக் கொண்ட சில பேர் என்னைக் காரிலிருந்து இறக்கினார் கள். கொஞ்ச தூரம் நடந்து சென்றதும் படிக்கட்டு களில் ஏறுவதை உணர்ந்தேன். பிறகு ‘வழுவழு வென்ற ‘சிமிண்ட்’ தரைமீது சென்று, இரண்டு வாசல் படிகளையும் கடந்து, மீண்டும் ஒரு படிக்கட்டில் கீழ் நோக்கி, மறுபடி ஒரு வாசற்படிக்கு வந்து நின்றேன். அங்கிருந்த அறையின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அந்த அறைக்குள் என்னைப் பிடித்துத் தள்ளிவிட்டுக் கதவைச் சாத்தி வெளியில் பூட்டிக் கொண்டார்கள்.

பிறகு, ‘இங்கே சத்தம் கித்தம் போட்டாயோ… தொலைந்தாய், ஆமாம்’ என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றார்கள்.

பெரியதொரு வீட்டின் சிறியதோர் அறைக்குள் தன்னந்தனியாக நின்றிருந்தேன். கைகள் கட்டப் படாததால் என் வாய்க்கும் கண்களுக்கும் போடப் பட்டிருந்த கட்டுக்களை அவிழ்த்துக்கொள்வது எளிதாயிற்று.

கும்மிருட்டு சிமிட்டிச் சிமிட்டி விழித்தும் ஒன்று கூடத் தென்படவில்லை. கைகளால் தடவிப் பார்த்த போது ஒருபுறம் கதவும் மறுபுறம் ஒரு ஜன்னலும் வலுவான சுவர்களும் சூழ்ந்திருப்பது தெரிந்தது.

வயிற்றுக்குள் பசிப்புரட்சி, வாய்க்குள் தாக வறட்சி, வேலை செய்த களைப்பு, விழிகளில் தூக்கக் கிறுகிறுப்பு.

படுக்கலாமென்றால் பாயுமில்லை; தலையணையு மில்லை. படுபாவிகள். ஓர் ஐம்பது காசுக்கு ஒரு தட்டு ‘மீ’கூட வாங்கித் தராமல் அடைத்து வைத்துவிட்டார்களே!

இது எந்த இடமாயிருக்கும்? யாருடைய வீடு? என்ன இது மர்மம்.


குழப்பம்

காலையில் அறைக் கதவைத் திறந்துகொண்டு மூன்று பேர் உள்ளே வந்தார்கள் மூவரும் முகம் தெரி யா தபடி முகமூடி அணிந்திருந்தார்கள்.

‘உன்னை ஏன் இங்கே கொண்டு, வந்திருக்கிறோம் தெரியுமா?’ என்று அவர்களிலொருவன் கேட்டான். என்ன அசட்டுக் கேள்வி!

எனக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அது தெரி யாமல்தானே நான் தவித்துக்கொண்டிருக்கிறேன். ‘நான் யாரென்பது நன்றாகத் தெரிந்துதான் கடத்தி வந்தீர்களா?’ என்று பதிலுக்கு ஒரு கேள்வியை வீசினேன்.

‘ஆம். உன்னை நன்றாகத் தெரியும். உன்னிட மிருந்து முழுசாகப் பத்து வெள்ளிகூடப் பறிக்க முடியாது என்பதும் தெரியும்.’

‘தெரிந்தும் ஏன் கடத்தி வந்தீர்கள்?’

‘ஒரு திருத்தம். உன்னைக் கடத்தி வரவில்லை. கூட்டி வந்தோம். ஆனால், கூப்பிட்டதும் நீ காரில் ஏறியிருந்தால் அந்தக் குத்து விழுந்திருக்காது. அது உன் தவறு…’

‘தொலையட்டும். இங்கே என்னை ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள்? எப்போது வெளியே போக விடு வீர்கள்?’ என்றேன் முதுகைத் தடவிக்கொண்டே.

‘வெளியே போவதா? நீயா? அஹ்ஹஹஹா…!’ என்று அவர்கள் பேய்ச் சிரிப்புச் சிரித்தார்கள். பிறகு இன்னும் கொஞ்ச நேரத்தில் நாலு நம்பர் லாட்டரித் தவக் க்கை இங்கு வருவார். அவரிடம் கெஞ்சிக் கேட்டுப் பார்’ என்று சொல்விவிட்டு அவர்கள் போய்த் தொலைந்தார்கள்.

நாலு நம்பர் லாட்டரித் தவக்கையாமே……யார் அது? எனக்கும் அவருக்கும் என்ன விவகாரம்? இது என்ன புதுக் குழப்பம்?


புதிர்

சற்று நேரத்தில் நாலு நம்பர் லாட்டரித் தவக்கை அங்கு வந்தார். அவரும் முகமூடி தரித்தவர்தான்.

‘பார்த்தால் பாவமா யிருக்கு’ என்றார்.

‘யாரைப் பார்த்தால்’ என்றேன்.

‘உன்னைத்தான். நல்ல பிள்ளை போலவும் தெரிகிறது. ம்…’ என்று இழுத்தார்.

‘நல்ல பிள்ளைபோல’ என்கிறீர்களே அது தப்பு. நான் அசல் நல்ல பிள்ளையேதான்!’

இருக்கும் இருக்கும். ஆனால்…இங்கே உன்னை கொஞ்சகாலம் மறைத்து வைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அதைப்பற்றித்தான் வருத்தமாகயிருக்கிறது.

‘ஐயையோ’ என்று அலறினேன். அந்தச் சின்னஞ் சிறு அறைக்குள் இன்னும் எத்தனை நாட்கள் அடை பட்டிருக்க வேண்டுமோ என்பதை நினைச்கும்போதே குளிர் காய்ச்சல் வந்தது!

நீ வெளியிலிருந்தால் நான் தூக்கு மரத்துக்குப் போவது நிச்சயம். ஆகவே, உன்னை அடைத்து வைப் பதைத் தவிர வேறு வழியேயில்லை’ என்று சொல்லி விட்டுத் தவக்கை வெளியேறினார்.

எனக்குத் தலை சுற்றியது. இவர் தூக்கு மரத் துக்குப் போவதற்கும் நான் வெளியில் இருப்பதற்கும் என்ன தொடர்பு? என்ன புதிர் இது?


பயங்கரம்

ஒரு மணி நேரம் சென்றதும் மற்றொரு முகமூடி அங்கு தோன்றியது. அதன் கையில் இரண்டு துண்டுச் சீட்டுகள் இருந்தன.

அவற்றை என்னிடம் காட்டிக்கொண்டே முகமூடி கேட்டது; ‘இந்தச் சீட்டுகளைப் பற்றியோ, சீட்டுக்களில் உள்ள நம்பர்களைப் பற்றியோ நீ யாரிடத்திலாவது ஏதாவது கூறியதுண்டா?

கண்களைக் கசக்கிக்கொண்டு அந்தச் சீட்டுகளை உற்றுக் கவனித்தேன். என்ன ஆச்சரியம்! அவை என் சட்டைப் பையில் இருந்த சீட்டுக்கள் அல்லவா! நேற்று நடைபெற்ற குதிரைப் பந்தயத்துக்காக முந்தாநாள் பதிவு செய்த நாலு நம்பர் லாட்டரிச் சீட்டுகள் அல்லவா!

‘இந்தச் சீட்டுகளுக்குப் பரிசு கிடைத்திருக் கிறதா?’ என்றேன் ஆவலோடு.

‘அதிருக்கட்டும். முதலில் நான் கேட்பதற்குப் பதில் சொல்’ என்று அதட்டியது முகமூடி.

எனக்கு அதட்டிப் பேசத் தெரியாதா என்ன? ‘திருட்டுப்பயல்களே, நான் பதிந்த நம்பருக்குப் பரிசு விழுந்திருக்கிறது. அந்தப் பணத்தை அபகரித்துக் கொள்வதற்காக என்னைப் பிடித்துக்கொண்டு வந்து அடைத்துப் போட்டிருக்கிறீர்கள். இல்லையா?’

‘இல்லவேயில்லை’ பெரிய பணக்காரர் எங்க தவக்கை. பணம் பாசி பிடித்து கிடக்கிறது அவர் வீட்டிலே. நீ நினைப்பது தப்பு. உன்னிடமிருந்து ஒரு காசுகூட அவருக்குத் தேவையில்லை. ஆனால் உன்னை வெளியில் விடும்போது உனக்கு ஒரு கணிசமான தொகையைக் கையில் தரப்போகிறார்!’

‘என்னை எப்போது வெளியில் விடுவீர்கள்?’

‘இதோ இந்த விவகாரம் தீர்ந்ததும் நீ வெளியே போய்விடலாம்’ என்று அன்றையத் தினசரிப் பத்திரி கையில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டியது முகமூடி.

அங்கிருந்த செய்தி இது; ‘முந்தாநாள் சாயங் காலம் ‘மாநீஸ் ரோடு’ சந்திப்பில் நிகழ்ந்த ‘பயங்கரக் கார் விபத்தைக் கண்டவர்கள் போலீஸ் தலைமை நிலையத்துடன் தொடர்பு கொள்ளவும் புலன் விசா ரணைக்கு அவர்கள் உதவி நாடப்படுகிறது…’

கார் விபத்து…போலீஸ்.. புலன் விசாரணை…இவற்றுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்ன பயங்கரம் இது.


விடுதலை

அன்று பிற்பகல் திமுதிமுவென்று பல போலீஸ் காரர்கள் அந்த வீட்டுக்குள் வந்தார்கள். பூட்டை உடைத்துக் கதவைத் திறந்தார்கள்.

‘தப்பினேன் பிழைத்தேன்’ என்று மூச்சு விடுவ தற் குள் போலீஸ் வாகனத்தில் ஏறச் சொன்னார்கள்.

போலீசாரால் முன்பே கைது செய்யப்பட்ட நாலு நம்பர் லாட்டரித் தவக்கையும் அவரைச் சேர்ந்த முக மூடிகளும் போலீஸ் நிலையத்தில் அடைபட்டிருந்தார் கள்! அங்கு என்னை வெகுநேரம் விசாரித்துத் தகவல்கள் பெற்றுக்கொண்ட பிறகு ஒரு வழியாக ஆளை விட்டார்கள் வெளியே!


விளக்கம்

இதோடு வீட்டுக்கு ஓடுவதற்கு முன், உங்களுக்குச் சுருக்கமாகக் கதையைச் சொல்லிவிடுகிறேன்: அதாவது முந்தாநாள் மாநீஸ் ரோடு சந்திப்பில் ஒரு கார், பின்னால் வந்த மற்றொரு காரால் மோதித் தள்ளத் பட்டுக் கிடுகிடு பாதாளத்தில் தலைகுப்புற விழுந்து அதிலிருந்த அத்தனை பேரும் செத்துப் போய்விட்டார் களாம். இந்தப் பயங்கர விபத்துக்குக் காரணமான கார்-அதாவது, பின்னால் வந்து மோதித் தள்ளிய கார் தப்பிச் சென்றுவிட்டது. அதைத் தேடும் வேலையில் போலீசார் மும்முரமாக முனைந்தார்கள்.

போலீசாரிடம் நான் தகவல் தெரிவித்துக் காரை அடையாளங் காட்டிவிடுவேன் என்று பயந்து போய் என்னைப் பிடித்துக்கொண்டு வந்து அடைத்து வைத் தார் நாலு நம்பர் லாட்டரித் தவக்கை. ஏனென்றால், போலீசாரால் தேடப்படுவது இவருடைய கார்தானாம்!

நான் பதிவு செய்த இரண்டு நம்பர்களில் ஒன்று, தவக்கையின் கார் நம்பராகவும், மற்றொன்று விழுந்து நொறுங்கிய காரின் நம்பராகவும் இருக்கவே, நான் அந்த விபத்தை நேரில் கண்டவன் என்று தவக்கை நிச்சயித்து விட்டாராம்!

விபத்துக்குள்ளாகும் கார்களின் நம்பர்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கும் என்று நம்புவது ஊரறிந்த ரகசியமாயிற்றே! தவக்கை என்ன செய்வார், பாவம்?

நானோ விபத்து நடந்த இடமான மாநீஸ் ரோடு சந்திப்புக்குப் போனவனுமில்லை, விபத்தைப் பார்த்த வனுமில்லை. ஏதோ இரண்டு நம்பர்களைப் பதித்ததால் ல் …அது ‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த’ கதை யில் முடிந்திருக்கிறது!

அந்த நம்பர்களுக்குப் பரிசு விழுந்திருக்கிறதா என்று இன்றுவரை நான் பார்க்கவேயில்லை.

வேண்டாமய்யா, இந்தக் கள்ளவழி லாட்டரி!

– மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *