இவன் எதிரி இல்லையே!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 1,208 
 
 

ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் இருந்தார்.

அவர் ஒரு நாள் தன் நண்பரின் வீட்டுக்குப் போயிருந்தார். வீட்டு வாசலில் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.

மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை; இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை. அவர்கள் இருவரும் அந்த நண்பரின் பிள்ளைகள்.

இந்தப் பெரியவர் அங்கே போய்ச் சேர்ந்த சமயத்தில் மூன்று வயதுச் சிறுமி இரண்டு வயதுச் சிறுவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்… “உன் மண்டையிலே இருக்கிறது மூளை இல்லை… களிமண்ணு! அதனாலதான் நீ சரியா படிக்க மாட்டேங்கறே. உன்னைப் போல ஒரு முட்டாள் இந்த உலகத்துல யாருமே கிடையாது!”

பெரியவர் இதைக் கவனித்தார்.

உடனே அந்தச் சிறுமியை அருகில் அழைத்தார். “குழந்தே… இங்கே வா!”

அவள் வந்தாள். இவர் கேட்டார்: “ஏன் இப்படி சண்டை போடுகிறாய்?”

“அவன் ஒரு திருடன்!”

“அப்படியா?”

“ஆமாம்!”

“அப்படி என்னத்தைத் திருடினான்?”

“நான் விளையாடுவதற்காக வைத்திருந்த என்னுடைய கரடி பொம்மையைத் திருடி விட்டான்!”

“அப்படின்னா… அவன் செஞ்சது தப்புதான்.”

“அதனாலதான் திட்டினேன்.”

“இதுவும் தப்புதான்!”

“என்ன சொல்றீங்க?”

“நான் சொல்லலே… பெரிய மகான்கள் எல்லாம் சொல்லியிருக்காங்க.”

“என்ன சொல்லி இருக்காங்க?”

“மனிதன் செய்கிற செயல்களிலேயே மிகவும் சிறந்த செயல் _ அடுத்தவர்களை மன்னிக்கறதுதான் என்று சொல்லியிருக்கிறார்கள்!”

“அப்புறம் என்ன சொல்லியிருக்காங்க?”

“நாம் யார் கூடவும் சண்டை போடக் கூடாது. நமக்கு எதிரியாக இருந்தாலும் நாம் அவர்களை மன்னிக்க வேண்டும்!”

“நீங்க சொல்றது சரி… இவன் என் எதிரியாக இருந்தால் மன்னிக்கலாம். இவன் என் எதிரி இல்லையே!”

“பின்னே…”

“என் சகோதரன்!”

இது ஒரு வேடிக்கைக் கதை. என்றாலும் நடைமுறை வாழ்க்கையில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது, ஆன்மிக உலகில் அறிவுரை சொல்கிறவனைவிட, அதை ஏற்றுச் செயல் படுத்துகிறவன் சில சமயம் உயர்ந்து விடுகிறான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *