அன்னக்கிளி ஏன் எஸ்தர் ஆனாள்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 5,412 
 

ஒரு வாரம் கழித்து ஆபீசுக்குள் நுழைந்தவுடன் என் கவனத்தைக் கவர்ந்தது அங்கும் இங்குமாக இரைந்து கிடந்த காகிதக் குப்பைகளும் நிரம்பி வழிந்த குப்பைக் கூடைகளும்தான்.

“அன்னக்கிளி வரலியா?” என்று ப்யூன் ராமசாமியிடம் கேட்டதற்கு “ ரெண்டு நாளா வரல சார். இன்னிக்கி வரும்னு நெனைக்கறேன்” என்று பதில் சொன்னான்.

நான்? அது இந்தக் கதைக்கு தேவையென்று தோன்றவில்லை. இந்தக் கதைக்குத் தேவையானவர்கள் அன்னக்கிளி, நாகராசு மற்றும் ஞானசேகரன். இவர்கள் எல்லாம் யார் என்று உங்களுக்கு சொல்லுவதற்கு முன் இந்த ஆபிசைப் பற்றிக் கொஞ்சம்.

இது நாடெங்கிலும் பத்து கிளைகள் கொண்ட ஒரு தனியார் விளம்பர நிறுவனம். சென்னைக் கிளையில் நிறைய பேர் வேலை செய்கிறார்கள் என்றாலும் மேலே சொன்ன மூவருடன், நான், ராமசாமி (அதான் சார் ப்யூன்!) மற்றும் ஒரு ரிசப்ஷனிஸ்ட் மட்டும் தான் எப்போதும் ஆபீசில் இருப்பவர்கள்.

இதில் நான் அக்கௌண்ட்ஸ் மற்றும் வங்கிப் பணிகள் பார்ப்பேன். நாகராசு ஒரு ஆல் இன் ஆல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர். ஞானசேகரன் பிரான்ச் மானேஜர்.

அன்னக்கிளி ஒரு தாற்காலிகப் பணியாளி. ஆபிசைப் கூட்டிப் பெருக்கும் வேலை அவளது. சுமார் இருவத்தி ஐந்து வயதிலேயே இளமையைத் தொலைத்திருந்தாள். குடித்துக் குடித்து படுத்தப் படுக்கையான கணவன். இரண்டு வயதே ஆன ஒரு குழந்தை. (சில நாள் ஆபீஸ் கூப்பிட்டுக் கொண்டு வருவாள். அப்படி வரும் சமயத்தில் அந்தக் குழந்தைக்கு பால், பிஸ்கட் தவறாமல் வாங்கித் தருவேன்).

இப்போது திடீரென்று இரண்டு நாளாக வரவில்லை. பாவம் என்ன கஷ்டமோ? கணவன் அல்லது அந்தக் குழந்தைக்கு ஏதும் உடம்பு சரியில்லையோ? இந்த மாதிரி வேலையாட்களைப் பற்றி யார் கவலைப் படுகிறார்கள்? இப்படி எண்ணங்களில் மூழ்கியிருந்த போதுதான் சுமார் பத்தரை மணிக்கு அன்னக்கிளி ஆபீசுக்குள் நுழைந்தாள்.

அவளைப் பார்த்த என் கண்கள் அகலமாயின. எப்பொழுதும் ஒரு சாயம் போன புடவை அணியும் அன்னக்கிளி, அன்று வெள்ளை வெளேர் என்று ஒரு புடவையும், முழங்கை வரை கை வைத்த வெள்ளை ரவிக்கையும் அணிந்து, தலையை அழுந்த வாரியிருந்தாள். நெற்றியில் பொட்டு இல்லை. இதெல்லாம் விட அதிசயம் அவள் கழுத்தில் அணிந்திருந்த சிலுவை டாலர் செயின்.

அந்தச் சிலுவை அங்கும் இங்கும் ஆட அவள் என்னை நோக்கி வந்தாள்.

“குட் மார்னிங் சார். நான் இன்னிலேர்ந்து வேலைக்கு வரல. இத்தினி நாளு செஞ்ச வேலைக்குத் காசு வாங்கிப் போலாமின்னு வந்தேன்” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.

“என்னாச்சு அன்னம்? என்ன திடுதிப்புன்னு… அப்புறம் இது என்ன கோலம்?”

“சார், நா இனிமேட்டு அன்னம் இல்லை. எஸ்தர். நா சிலுவ சாதிக்கு மாறிட்டேன். என் கணக்கப் பாத்துக் குடுத்தீங்கன்னா புண்ணியமாப் போவும் சார்…” என்று இழுத்தாள்.

“அது சரிம்மா… ஆனா என்ன ஆச்சுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“அத்தச் சொல்லி இன்னா ஆவப் போவுது சார்? நீங்க கேக்குறீங்க சரி சொல்றேன்.

ஒங்களுக்குத் தெரியும் என் புருசன் நெலமை. அங்க இங்க நவுர முடியாதிக்கி படுக்கையாக் கெடக்குறான் மனுசன். போறாத நெலமக்கு கொளந்த வேற. இங்க டெம்புரரி வேல. வந்தன்னிக்கித்தான் காசு.

என் நெலம ஆருக்கும் வரக் கூடாது சார். சரி ஏதோ பஞ்சச் பனாத பொளச்சுப் போவரான்னு விடுதா ஒலகம்? அதான் இல்லியே! புருசன் சரியில்லாத பொம்பளேன்னா கூப்டா வந்துர்னமா இன்னா? இன்னா நாயம் சார்?”

“என்ன ஆச்சு அன்னம், யாரு என்ன செஞ்சாங்க” என்று கேட்ட என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“நாகராசும் மேனேஜரும் தா சார். ஒங்களுக்கும் அரச புரசலா தெரிஞ்சிருக்கும். நீங்க லீவுல போன மொத நாளே நாகராசு ஆரம்பிச்சுட்டான். ஒரு நா பாண்டிச்சேரி போலாம் வர்றியான்னு கேட்டான். எனக்கு பக்குன்னு ஆயிரிச்சு. இன்னா ஆம்பள இவன்? எம்மேலப் பரிதாபப் படவேணாம். ஆனா இப்படி நோவற மாரி பேசலாமா? நீயே சொல்லு சார்!” என்றாள் அன்னம். (உணர்ச்சி வசத்தில் என்னை ஒருமையில் அழைத்ததைப் பற்றி நானும் கவலைப்படவில்லை; அவளும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை)

“ம்ம்ம்…” என்றேன் முனகலாக. (வேற என்னத்தச் சொல்றது?)

“எனிக்கி மனசு ஒடஞ்சி போச்சு. சரி நம்ம மேனேஜர் கிட்ட சொல்லலாமின்னு போனேன். அவரும் அப்டிதான்னு எனக்குத் தெரியும். ஆனா பெரிய பதவி ஆளு கொஞ்சம் கௌரதையா நடந்துப்பாரின்னு நெனச்சேன். ஆனா என் நெனப்புல மண்ணு தா விளுந்திச்சி.

கதையைக் கேட்ட மனுசன், என் கையப் புடிச்சிக்கிட்டு ‘அன்னம்! அவன் கெடக்கறான் ராஸ்கல். நா சொல்றதக் கேளு. எனக்கு அடுத்த மாசம் டெல்லி வேலை மாத்தலாவப் போவுது. என் பொஞ்சாதி புள்ளைங்கள கூட்டிக்கிட்டு போவல. அவங்க ஆறு மாசம் களிச்சி தான் வருவாங்க. நீ என்ன பண்ணறே, என் கூட டெல்லி வந்துரு. எனிக்கி சமைச்சுப் போட்டா மாரியும் ஆவும். தொணையும் ஆச்சி. அவங்க வந்த பிற்பாடு ஒனக்கு அங்கியே வேலை ஏற்பாடு பண்றேன். நல்ல பணம் தர்றேன்’னு சொன்னான் சார். ஒரு பொம்பள மானத்தோட வாளணும்னு நெனச்சா முடியாது போல” என்றாள்.

“சரி அன்னம், அதுக்கு எதுக்கு நீ கிறிஸ்டியனா மாறிட்ட?” என்றேன்.

“அன்னிக்கு ஆபீச விட்டு வீட்டுக்கு ஓடிட்டேன். என் வீட்டாண்ட ஒரு சர்ச் இருக்கு சார். அதும் படில ஒக்காந்து அளுதுகிட்டு இருந்தேன். அப்ப அந்த சர்ச் சார் என்னப் பாத்துட்டு வெளில வந்தாரு. அவருக்கு என்னத் தெரியும். ‘என்ன அன்னம் இங்க ஒக்காந்து அளுதுகிட்டு இருக்க’ன்னு கேட்டாரு. நா எல்லா விசயத்தையும் அவராண்ட சொல்ட்டேன்.

அதக் கேட்டு ரொம்ப வருத்தப் பட்டாரு. அப்புறம் ‘சரி, நீ என்ன பண்ணப் போற’ன்னு கேட்டாரு. நா வேலைய விட்ருலாம்னு இருக்கேன்னு சொன்னதும், ‘இந்த சர்ச்சில வேல பண்ணுறியா?’ன்னு கேட்டாரு. நல்ல சம்பளம் கெடைக்கும். யோசிச்சு சொல்லுன்னாரு.

நான் அவர ஒண்ணுதா சார் கேட்டேன். ‘ஐயா, என் ஆபீசுல ஒருத்தன் ஒரு நா படுக்க வர்றியான்னு கேட்டான். இன்னொருத்தன் ஆறு மாசம் கூட இருக்கியான்னு கேட்டான். இப்ப நீங்க இன்னா கேக்கப் போறீங்க?ன்னு கேட்டேன்.

கேட்ட பிற்பாடு மனசுல பயம் வந்திச்சி. ஏதும் சொல்லிடுவாரோன்னு. ஆனா அவரு கோவப் படல. சிரிச்சாரு. ‘ ரொம்ப வெள்ளந்தியா பேசுற அன்னம். ரொம்ப நல்லது. மனசுல பட்டத பட்டுன்னு கேட்டுரணும். எனக்கு என்ன வேணும், நான் என்ன கேப்பேன்னு கேட்டியில்ல? சொல்றேன் கேட்டுக்கோ. உன் வேலைக்கு பதிலா உனக்கு சம்மதிம்மின்னா நீ இயேசு நாதர உன் அப்பாவா ஏத்துக்கோ. அவரு பருநிதியா (பிரதிநிதி!) என்னையும் உன் அப்பாவா ஏத்துக்கோ. நீ மதமெல்லாம் மாற வேணாம். கிறித்துவம் மதம் இல்ல. யேசுவ வளிகாட்டியா ஏத்துக்கிட்டு அவர் சொல்ற மாரி நடக்கறது தான் அது. நீ இந்துவாவே இருந்துக்க. அன்னமாவே இருந்துக்க. செய்வியா?’ன்னு கேட்டார்.

நான் சரின்னு சொல்லிட்டேன். அப்றம் நான் அன்னம் இல்ல எஸ்தருன்னும் சொல்லிட்டேன். பேரு மாத்திக்கிட்டேன்”

“அன்னம், ரெண்டு பேர் கெட்டவங்கன்னா எல்லாரும் அப்டின்னு முடிவு செய்யலாமான்னு?” என்று கேட்டேன்.

“சார்! நா ஒன்னிய கெட்டவருன்னு சொல்லல. ஆனா இவங்க இது மாரி ஆளுங்கன்னு ஒனக்கு மின்னமே தெரியும். அதுக்கு இன்னா செஞ்சீங்க? அவங்களத் திட்டினீங்களா? இல்லியே!

நா சின்ன வயசுல டிவில மகாபாரதம் பாத்திருக்கேன் சார். அத்தினி பேரு மின்னாடி துரோபதி பொடவய உருவுவானுங்க, அந்தக் குருட்டு ராசாவோட பசங்க. அங்க இருந்த தாடி வச்ச பெரீவங்க எல்லாம் மூஞ்சத் திருப்பிகினு வாயி பேசாம இருப்பாங்க. நீ அது மாரி தா சார். தப்பா நெனைக்காதே. நீ நல்லவரு தான். ஆனா எனக்கு அது ஒதவாது. துரோபதிக்கு கிஸ்னர் பொடவ குடுத்த மாரி, அந்த சர்ச் சாரு எனிக்கி ஹெல்ப் பண்ணியிருக்காரு. இப்ப சொல்லு நான் செஞ்சது தப்பா சரியா?”

“ ஒன் முடிவு சரியான முடிவுதான் எஸ்தர்” என்று சொன்னேன். என் கைகள் இல்லாத தாடியைத் தடவிப் பார்த்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *