மீண்டும் அனிதா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2023
பார்வையிட்டோர்: 2,259 
 

சத்யம் தியேட்டர் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தியவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தான், தாடியும் மீசையுமான ஒரு நடுத்தர வயதுக்காரன்.

“ப்ரோ! இன்னக்கி கண்டிப்பா வண்டி வேணும். இனிமே மீண்டும் இந்தப் பொயப்புத்தான்! அத்தக் கெடுக்காதே!” அவனுடைய வண்டியை மீட்க அம்மாசியிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தான்  நம்ம ராஜ்.

உங்களுக்குத்தான் ராஜைத் தெரியுமே!

இவந்தான் கவர்ச்சிக்கன்னி அனிதாவுக்கு வாழ்வளிக்கத் தன் பொன்னான  நேரத்தை அர்ப்பணிக்கும் அளவுக்கு தீயாகச் செயல்பட்டான்- சென்றான் – போன கோவிட் ஜனவரியில்!

அனிதாவை அனைவரும் கை விட்ட பின்னர் இவனாகப் போய் அனிதா வீட்டில் நெடு நாள் தங்கி அவளை மீண்டும் உயிர்ப்பித்தான்.

அம்மாசியிடம் தன்னுடைய டேக்ஸியைக் கொடுத்து, கலெக்சனில் ‘கட்’ மட்டும் வாங்கிக்கொண்டான். ஆனால் எப்போதும் அவனுக்கு ஒரு நினைப்பு வந்து கொண்டிருந்தது- “இதற்காகவா ஆசைப்பட்டாய் ராஜ்?” என்று. இருந்தாலும், மனதில் நிறைந்திருந்த காதல் உணர்வால் “அனிதாவுக்கு எப்போதும், இனிமே நான் தான்”  என்ற முடிவைக் கொண்டிருந்தான்.

அவள் வீட்டில், சமையல் அம்மாவும்,  தோட்ட வேலை ஆறுமுகமும் தான் சுவடு பதித்திருந்தனர். அத்தனை சொந்தங்களும், விட்டில் பூச்சிகளைப் போல, அதிரடியாகப் பறந்து சென்று விட்டிருந்தன.

விளக்கில்லாத இடத்தில் விட்டில் பூச்சிக்கென்ன வேலை?

அழகொழிந்து அநாதையாகக் கிடந்த அனிதாவை மீண்டும் ஒரு வலுவான கவர்ச்சிக் கன்னியாக வலம் வரச் செய்ய ராஜ் தீர்மானித்தான்.

வைத்தியத்தின் மூலம் குணமாகாத அனிதாவின் உடல்  நலம், ராஜ் கொடுத்த தன்னம்பிக்கையினால் வெகு வேகமாக முன்னேறியது! அவளைக் கருணையுடன் ஆத்மார்த்தமாகப் பார்த்துக் கொண்டான். 

அதில் காமம் இல்லை! ஆனால் காதல் இருந்தது!

அதில் கரிசனம் இருந்தது! ஆனால் காசு…..பணம்….துட்டு…. மணி…..மணி…. இருக்கவில்லை!

நீங்கள் கேட்கலாம்- ‘அப்புறம் என்ன?’ அனிதாவும் ராஜும் தங்கள் இனிய இல்லற வாழ்க்கையைத் தொடங்க வேண்டியது தானே?’ என்று.

அப்போதுதான் அங்கே நுழைந்தான் பரசு!

பரசு, முன்னணியில் இருந்த ஒரு நடிகன். அனிதாவும் அவனும் சேர்ந்து நடித்த படங்கள் பல! அனிதாவை விட்டுப் பிரியக் கூட மனமில்லாமல் இருந்த அவன்(ர்), அவளுடைய வியாதியைக் கேள்விப்பட்டவுடன், டியூ டேட்டில் ரீ-சார்ஜ் செய்யாமல் போன டிஷ் டீவி மாதிரி  காணாமல் போனான்.

ஆனால் இன்றோ-

“அய்யோ! அனிதா! நான் மட்டும் பாரீஸுக்குப் போகாமல் இருந்திருந்தால் உன்னை உடனே நான் காப்பாற்றி இருப்பேன்!. ஒரு போன் கூட போட முடியவில்லை உன்னால்!” என்று அன்பாகக் கடிந்து கொண்டான்.

அவன் சென்னை பாரீஸ் கார்னரில் ஒரு ஓட்டலில் இத்தனை காலம் உல்லாசமாக இருந்து வந்தது அனிதாவுக்கு எப்படித் தெரியும்?

இன்று அனிதாவிடம் மீண்டும் அழகு பரிமளிக்கத் தொடங்கியது. பல தேனீக்கள், தேன் நிறைந்த அடையை, ஆட்டயை போட அவளை  இடம், வலம் என்று சுற்றி வர ஆரம்பித்தன.

நம்ம ராஜ்?—

‘தேன் எடுத்தவன் புறங்கை நக்க மாட்டானா?’ என்பது பழமொழி.  இவன் தேனையும் எடுக்கவில்லை; புறங்கையையும் நக்கவில்லை; கையைச் சுட்டுக் கொண்டான் என்பான் அம்மாசி.

இப்போது பரசுதான் முடிவுகள் எடுக்கத் தொடங்கினான்.

அனிதாவின் புது கால் ஷீட்டுகள் கையெழுத்தாயின. பரசுவின் சிபாரிசால் அனிதாவின் பழைய மானேஜர் மீண்டும் வேலைக்கு வந்தான். வேலை ஆட்கள் குவிந்தனர். இரசிகப் பெருமக்கள் பரபரத்தனர்!. இவ்வளவு நாட்கள் எங்கே அவர்கள்?  கேட்கப் படாதுடா!

எலக்ட்ரிக்  காரு வாங்கி வந்தாக!

டிரைவரு வந்தாக!

பரசு வந்தாக!

ரூபவதி தேவி- நாட்டாமை நடிகை வந்தாக!

அப்புறம் என்ன?

 நம்ம ராஜுக்கு ஆப்புத்தான் வச்சாக!

நாளடைவில், ராஜுடன், அனிதாவின் பரிமாற்றங்களில் கூட வேறுபாடு தெரிந்தது. அவனைப் பார்த்துக் கண்ணீருடன் கை கூப்பின அதே அனிதா இன்று அவனைக் கை தட்டிக் கூப்பிட்டாள்.  ராஜ் அவள் உயிரைக் காப்பாற்றிய கதை சினிமாக் கதையானது.  காமெடி ஆனதும் உண்மை!

‘என்னத்த பெரிசா செஞ்சுட்டான் அவன்?’ அனிதாவே பலமுறை ‘ட்வீட்’ செய்ய ஆரம்பித்தாள்.

அவன் ஏற்றிய காதல் தீபம் அவனையே எரிக்கத் தொடங்கியது! ராஜ் அவளைத் திருமணம் செய்து கொள்வது அவ்வளவு சுலபமானதாத் தோன்றவில்லை!. இது அரைகுறைக் காதல்!  ராஜைக் குறித்து பரிதாபப் பட்டவர்கள் இருவர் மட்டும்தான்- சமையல் அம்மாவும், ஆறுமுகம் சாரும். 

இரண்டொரு மாதங்களில், அனிதா கனவின் சிகரத்தில் பறக்கத் தொடங்கினாள்.  வெளி நாடு படப்பிடிப்புகள் தொடங்கின!

‘ராஜ்! இனிமே நீ இங்கே என்னுடன் இருப்பது சரியில்லை!’  அவளா சொன்னாள்?  இருக்காது!…நம்ப முடியவில்லை……. சிவாஜி பாணியில் ராஜ் லாஜிக் பேசிப்  பார்த்தான்.

பெண்களும் சந்தர்ப்பவாதிகள் ஆகிறார்கள்! அவளைப் பொறுத்தமட்டில், ராஜ் ஒரு வாடகை டாக்ஸி; சொந்தக் கார் ஆகப் பவனி வர முடியாது!

அப்போது தான் அவனுக்கு வந்தது ஞானோதயம்! கிளம்பி விடு! இவள் மனதில் நன்றியறிதல் ஏற்படுத்த நான் உயிரைக் காப்பாற்றவில்லை! என் காதலுக்காக நான் செய்த ஒரு தவம்! இறைவன் கொடுத்த ஒரு வாய்ப்பு! இன்னும் அவளைக் காதலிக்கிறேன். உயிருக்குயிராக!

மீண்டும் அவள் தரையிறங்கினால் நான் அவளுக்காகக் காத்திருப்பேன். அவள் சூழ் நிலை அப்படி!  உன் தொழிலைத் தொடரு!

இதெல்லாம் நடந்து முடிந்து ஒரு வருடம் ஆகியிருக்கும்.  ஒரு பரபரப்பான நாள்.

மே தின  தொழிலாளர்  அணிவகுப்பு முன்னேறிக் கொண்டிருந்தது. டாக்ஸியை ஓரம் கட்டிவிட்டு, ராஜ் பாண்டி பஜார்  டீக்கடையினுள் நுழைந்தான்.

போன் கிணுகிணுத்தது: 

“ராஜ்! நான் உங்களை அவசரமாகப் பார்க்க வேண்டும்!” மறு முனையில் ஒலித்த குரல் அவனுடைய கனவுக் கன்னிக்குச் சொந்தமானது என்பது புரிந்தது. குரலில் ஒரு மிரட்சி இருந்ததும் புரிந்தது.

“எஸ் மேடம்! உடனே வருகிறேன்!”   ராஜ் கிளம்பினான். அம்மாசி ஆச்சரியத்துடன் பார்த்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *