கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 24, 2013
பார்வையிட்டோர்: 9,601 
 

Après : பிறகு
மூலம் : கய் தே மாப்பசான்
தமிழில் : மா. புகழேந்தி

“கண்ணுகளா இனி நீங்க தூங்கப் போகலாம்.”, பாட்டியம்மா சொன்னார்கள்.

மூன்று குழந்தைகளும், இரு சிறுமிகள் ஒரு சிறுவன், எழுந்து தங்களது பாட்டியை முத்தமிட்டனர். பிறகு அவர்கள் பாதிரியாருக்கு இரவு வணக்கம் செய்தனர் , அவர் ஒவ்வொரு வியாழக் கிழமையும் போல அன்றும் இரவு உணவினை அங்கு தான் முடித்திருந்தார்.

அவர் இரு குழந்தைகளை தனது முழங்காலில் மேலே தூக்கினார், தனது நீண்ட கைகளை அவர்களின் கழுத்தைச் சுற்றிப் போட்டார், அவர்களது தலையைத் தன்பக்கம் இழுத்து ஒரு தந்தையின் வாஞ்சையைப் போல் முன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டார்.

பிறகு அவர்களை மெல்லத் தரையில் விட்டார். குட்டிக் குழந்தைகள் சென்றன, சிறுவன் முன்னாலும் அவனைத் தொடர்ந்து மற்ற குழந்தைகளும் சென்றனர்.

“உங்களுக்குக் குழந்தைகள்னா பிடிக்குமோ?” , பாட்டியம்மா கேட்டார்.
“ரொம்பப் பிடிக்கும், அம்மா.”

கிழவி தன் ஒளிரும் கண்களை உயர்த்தி பாதிரியாரைப் பார்த்தாள்.

“அப்படீன்னா உங்க தனிமை உங்களை வாட்டிக்கொண்டிருக்குமே.”

“அமாம், சில நேரங்களில்.”

அவர் அமைதியானார், பின் மெதுவாகச் சொன்னார், “நான் சாதாரண வாழ்க்கைக்குப் படைக்கப் படவில்லை.”

“அதெப்படி உங்களுக்குத் தெரியும்?”

“எனக்கு நன்றாகத் தெரியும். நான் பாதிரியாராக ஆவதற்குத் தான் படைக்கப்பட்டேன். நான் எனது வேலையைப் பின் பற்றுகிறேன்.”

கிழவி அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்;
“சொல்லுங்க, நண்பரே , என்கிட்டே சொல்லுங்க, எப்படி நீங்க இந்த உலகத்துல இருக்கிற எல்லாவற்றையும் துறக்க முடிஞ்சது? எங்களால விட முடியாத இன்ப துன்பங்களை எல்லாம். உங்களை எது மாற்றியது? உங்களை எது திருமணம் குடும்பம் போன்ற இயற்கையின் பெரும் இணைப்புகளில் இருந்து பிரிச்சது? நீங்கள் உற்சாகமாகவும் இல்லை ஆர்வமாகவும் இல்லை அதே நேரம் எதையும் பறிகொடுத்த மாதிரியும் இல்லை சோகமாகவும் இல்லை . அதென்ன ஏதாவது நடந்ததா, ஏதாவது துயரப்படும் படியான நிகழ்ச்சி நடந்ததா, எது உங்களை இப்படி ஒரு உறுதியான முடிவை வாழ்க்கையில எடுக்க வச்சது?”

அவர் எழுந்தார், கணப்புக்காக இடப்பட்டிருந்த நெருப்பின் அருகில் சென்றார், தனது காலணிகளைத் தூக்கி நெருப்பின் அருகில் காட்டினார், அவரது காலணிகள் எல்லா கிராமத்து பாதிரிமார் அணிவது போல பெரிய காலணியாக இருந்தது.
அவர் இன்னும் என்ன பதில் அளிப்பது என்று தத்தளித்துக் கொண்டிருந்தார். அவர் உயரமாகவும் முடி நரைத்தும் காணப்பட்டார். கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக ரோசெரில் உள்ள தூய அன்தொயன் ஆலயத்தில் ஊழியம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பகுதி எளியவர்கள் எல்லாம் , “ஒரு நல்ல மனிதன் இருக்கிறார்” , என்று அவரைப் பற்றிச் சொல்வார்கள். அவர் உண்மையிலேயே நல்ல மனிதர் தான், நல்லதே செய்வார், அனைவரிடமும் நன்கு பழகுவார், மென்மையானவர், அதையெல்லாம் விட மகுடம் வைத்தது போல் பெருந்தன்மையானரும் கூட. தூய மார்டினைப் போன்றவர். பெண்களைப் போல எளிதில் உணர்ச்சி வசப் படக்கூடியவர், உடனே சிரிப்பார், அழுவதும் உண்டு. ஏறக்குறைய அப்பகுதி மக்களால் அவர் அப்படித்தான் கருதப்பட்டார்.

ரோசெரில் உள்ள பெரிய வீட்டில் பாட்டியம்மா தனது ஓய்வுக் காலத்தை பேரக் குழந்தைகளை வளர்ப்பதில் செலவிட்டு வந்தாள்,

அடுத்தடுத்துத் தன் மகனையும் மருமகளையும் இழந்த பின் பேச்சுத் துணைக்கு வரும் இவரைப் பார்த்து வியந்து போய்ச் சொல்வாள், “கனிவான மனம் கொண்டவர்.” என்று.

ஒவ்வொரு வியாழனும் அவர் பாட்டியம்மாவைப் பார்க்க வருவார், அவர்களது நட்பு, எல்லா வயதானவர்களுக்கிடையில் இருப்பதைப் போல வெளிப்படையாகவும் மரியாதைக்குரியதாகவும் இருந்தது.
கிழவி வலியுறுத்தினாள்:

“இங்க பாருங்க, நண்பரே , நீங்கள் இப்போது என்னிடம் ஓர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.”

அவர் திருப்பிச் சொன்னார், “நான் சாதாரண வாழ்க்கைக்குப் படைக்கப் படவில்லை. இதை நான் பல முறை என் வாழ்வில் உணர்ந்திருக்கிறேன், எனவே என் முடிவில் எந்தக் குறையும் இல்லை.

“என் பெற்றோர் வெர்தியேர்சில் வணிகர்களாக இருந்தனர், வசதியானவர்கள், என் மேல் பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். நான் மிகச் சிறு வயதாக இருந்த போதே என்னை விடுதி கொண்ட பள்ளியொன்றில் சேர்த்து விட்டனர். ஒரு சிறுவன் குடும்பத்தையும் உற்றார் உறவினர்களையும் பிரிந்தால் என்ன பாடு படுவான் என்று யாருக்கும் தோன்றவில்லை. இதைப் போன்ற உற்சாகமில்லாத அன்பில்லாத வாழ்க்கை ஒருசிலருக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம் மற்றவர்களுக்கு அப்படி இருக்காது அது பெரும் வெறுப்புடையதாக இருக்கும்.

ஒருவர் நினைப்பதை விட இளம் வயதினர் அதிக உணர்ச்சிவயப் படக் கூடியவர்களாக இருக்கின்றனர். அவர்கள் விருப்பமானவர்களிடமிருந்து பிரிக்கப்படும் போது மிக அதிகமாக உணர்ச்சி வயப்படுகின்றனர். அது வளர்ந்து கட்டுக் கடங்காமல் போய்ச் சரிப்படுத்தவே முடியாத பேராபத்தில் கொண்டு விடுகிறது.

”நான் சரியாக விளையாடியதே இல்லை. எனக்கு தோழர்களே கிடையாது, வீட்டு நினைவிலேயே பல மணி நேரங்களைக் கழிப்பேன், இரவில் படுக்கையில் அழுது கொண்டிருப்பேன், நான் என் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகளை, சின்னச் சின்ன நிகழ்ச்சிகளை எல்லாம் நினைவு படுத்திக் கொள்ள முயல்வேன், நான் இடைவெளியில்லாமல் தனிமைப் படுத்தப் பட்டதை எண்ணிக் கொண்டே இருப்பேன். சின்னச் சின்னப் ஏமாற்றங்களைக் கூட பெரும் துயரமாக எண்ணும் இளைஞனாக நான் மாறிவிட்டேன்.

இப்படியே நான் தன்னிரக்கம் கொண்டவனாக, வெளிப்படையில்லாதவனாக, சுய நம்பிக்கையற்றவனாக மாறினேன். இந்த மனப் போராட்டம் ரகசியமாகவும் கடுமையாகவும் எனக்குள்ளே நடந்தது. குழந்தைகளின் மனது எளிதில் பாதிக்கப்பட்டுவிடும், அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன போது தான் தெரியும் அவர்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தார்களா என்பது. ஆனால் யாரிடம் அது வெளிப்படுகிறது? ஒரு சிறுவனின் மேல் நியாய மற்றுத் திணிக்கப்படும் வாழ்க்கைமுறை, பிற்காலத்தில் அவனுக்கு உயிருக்குயிரான நண்பனின் சாவைக் கண்டது போன்ற பெரும் துயரத்தைக் கொடுத்துவிடும்.

“யாரால் விளக்க முடியும், ஏன் சிலருக்கு சின்னச் சின்னத் தோல்விகள் கூட பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது என்று, இறுதியில் சரிப்படுத்தவே முடியாத நோயாக அது வளர்ந்துவிடுகிறது என்று?

“என்னுடைய நிலை இது தான். இந்த மன நிலை எனக்குள்ளே மாபெரும் மரமாக வளர்ந்து வாழ்வதே ஒரு தியாகம் என்று எண்ணும்படி மாறிவிட்டது.

”இதைப்பற்றி நான் பேசியதில்லை, இதைப் பற்றி யாரிடமும் சொன்னதில்லை, மெல்ல எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடியவனாக மாறினேன், என் மனம் ஒரு திறந்த காயத்தைப் போல மாறிவிட்டது. என்னை பாதித்த ஒவ்வொன்றும் மனதைக் கடுமையாகக் காயப் படுத்தியது, அச்சப் படும்படி அதிர்ச்சியளித்தது, இறுதியில் அவை என் உடல் நலத்தைக் கெடுத்தது. ஒரு சிலருக்கு இதைப் போன்ற நிகழ்வுகளைத் தாங்கும் அளவுக்கு இயற்கையே போதுமான வலிமையைக் கொடுத்து இருக்கிறது, இன்பம் துன்பம் இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் மகிழ்ச்சியானவர்கள்.

எனது பதினாறாம் வயதை அடைந்தேன். இந்த வழக்கத்துக்கும் மாறான உணர்ச்சிவயப் படும் தன்மை தன்னம்பிக்கையற்ற மோசமான நிலைக்கு என்னைத் தள்ளியது. விதியின் தாக்குதலில் நான் பதுகாப்பில்லாதவன் போல உணர்ந்தேன், யாரையும் காண அஞ்சினேன், பேச அஞ்சினேன், சந்திக்க அஞ்சினேன். தீவினை நடந்து விடுமோ என்று எப்போதும் அஞ்சியே வாழ்ந்தேன். வெளியில் செல்லவோ பேசவோ நடுங்கினேன்.

“நான் நம்பினேன், வாழ்க்கை என்பது பெரும் குழப்பம் கொண்டது , வாழ்வா சாவாப் போராட்டம், ஒருவன் கடுமையாகக் காயம் அடையலாம், ஆறாத புண்ணைப் பெறலாம், மரண அடியைக் கூடப் பெறலாம், என்று. பிற ஆண்கள் மகிழ்ச்சியாய் இருக்கும் இடங்களில் கூட நான் குழப்பமுற்று அச்சத்தின் பிடியில் தான் இருப்பேன் , பிரச்சனைகளில் இருந்து ஒளிந்து கொள்ளச்சொல்லி என் மனம் தூண்டும், ஏதோ நான் காணாமல் போவேனோ அல்லது கொல்லப்பட்டு விடுவேனோ என்று.

“என் படிப்பு முடிந்ததும் ஏதேனும் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி ஆறு மாதம் அவகாசம் கொடுத்தனர். பாதிப்புக்குள்ளாகியிருந்த என் உள்ளுணர்வு வரப்போகும் ஆபத்தை புரிய வைத்தது பிரச்சனையிலிருந்து தப்பி விடுமாறு திடீரென எச்சரித்தது.

”வெர்தியர்ஸ் ஒரு சிறு நகரம், சமவெளிகளாலும் காடுகளாலும் சூழப்பட்டு இருந்தது. நகருக்கு நடுவே என் பெற்றோரது வீடு இருந்தது. நான் பல நாட்களை இவ் வீட்டை விட்டு வெளியே கழித்திருந்தேன், அதற்காக நான் மிகவும் வருந்தினேன், இதற்குத் தான் மிகவும் ஏங்கினேன். கனவுகள் என்னுள்ளே மீண்டும் விழித்துக் கொண்டது. அவைகளைத் தவிர்ப்பதற்காக நான் தனிமையில் வயல் பகுதிகளில் நடந்தேன். வணிகத்தில் கவனம் கொண்ட என் தந்தையும் தாயும் என்னைப் பற்றிக் கவலை கொண்டிருந்தனர், வணிகத்தின் லாபத்தைப் பற்றியும் எனது வருங்காலத் திட்டத்தைப் பற்றியுமே என்னிடம் பேசினார். அவர்களுக்கு என்னை மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் என் மேல் காட்டிய அன்புக்குப் பாசத்தை விட வேறு காரணங்களும் இருந்தது. நானோ என் சிந்தனைகளுக்குள் சிறைப்பட்டு இருந்தேன், அதீத உணர்ச்சியால் அதிர்ந்து கொண்டிருந்தேன்.

ஒரு நாள் மாலையில் நீண்ட நடைக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன், தாமதமாகிவிடக்கூடாது என்பதற்காக வேகமாக எட்டு வைத்துக் கொண்டு நடந்தேன், அப்போது ஒரு நாய் என்னை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அது சிவப்பு ஸ்பானியல் வகை நாய், மிகவும் மெலிந்திருந்தது, நீண்டு சுருண்ட காதுகளைக் கொண்டிருந்தது. எனக்குப் பத்து எட்டுக்கள் முன் நின்று கொண்டது. நானும் அதையே செய்தேன். தனது வாலை ஆட்ட ஆரம்பித்தது. குறுகிய எட்டுக்களுடனும் உடல் முழுக்க நடுக்கத்துடனும் என்னை நோக்கி முன்னேறியது.மென்மையாகத் தலையை ஆட்டியபடி முன்கால்களில் மண்டியிட்டது. அதனிடம் பேசினேன். அது மெல்ல ஊர்ந்து சோகத்துடன் பரிதாபமாக முறையிடுவது போல் என்னைப் பார்த்தது. என் கண்களில் நீர் வழிந்ததை உணர்ந்தேன். அதை அணுகினேன், அது ஓடியது, மீண்டும் அருகில் வந்தது, ஒரு காலில் மண்டியிட்டு மென்மையான வார்த்தைகளில் அதனை என்னருகே வரும்படி அழைத்தேன், இறுதியாக என் கைக்கெட்டும் தூரத்தில் வந்தது. நான் எச்சரிக்கையாகவும் அன்பாகவும் மெதுவாக அதனைத் தட்டிக் கொடுத்தேன்.

“அதற்கு தைரியம் வந்தது. மெதுவாக எழுந்து தன் கால்களை என் தோளில் போட்டது. என் முகத்தை நக்கியது. வீடு வரை பின் தொடர்ந்தது.

“இதுதான் உண்மையாக என்னால் நேசிக்கப் பட்ட முதல் உயிரினம், ஏனெனில் இது தான் என் அன்பைத் திருப்பிச் செலுத்தியது. இதன் மேல் நான் கொண்ட பாசம் மிகைப்படுத்தப் பட்டதாகத் தெரியலாம் , முட்டாள்தனமாகக் கூட இருக்கலாம். என் குழப்பமடைந்திருந்த மனதுக்கு அந்த நாய் எனது சகோதரனைப் போலத்தோன்றியது, நாங்கள் இந்த உலகத்தில் தொலைந்து போனவர்களாகப் பட்டது, எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் தனிமைப் பட்டதாக உணர்ந்தேன். அவன் என்னை விட்டு அதன் பிறகு பிரிந்ததே இல்லை. என் காலருகே தூங்கினான், என் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி என்னுடனேயே சாப்பிட்டான். தனிமையில் நான் நடக்கும் போது என்னுடனேயே வருவான்.

“நான் வழக்கமாக ஒரு குழியின் அருகில் உள்ள புல் தரையில் அமர்வேன், அவன் என்னருகில் ஓடி வந்து காலடியில் அமர்வான், தனது தலையால் என் கைகளைத் தூக்குவான், நான் அதனை நீவி விடுவேன்.

”ஒரு நாள் ஜூன் மாத இறுதியில், செயின்ட் பியர்ரீ தே சாவ்ரோல் -இல் இருந்து வரும் சாலையில் நடந்து கொண்டிருந்தோம், பவேரியுவிலிருந்து வந்துகொண்டிருந்த பெரிய குதிரை வண்டியினை நான் கவனித்தேன். பூட்டப்பட்டிருந்த நான்கு குதிரைகளும் நான்கு கால் பாய்ச்சலில் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தன, அதன் மஞ்சள் நிறமும் தோலால் செய்யப்பட்ட பகட்டான சேணங்களும் எடுப்பாக இருந்தன. வண்டி ஓட்டி சாட்டையைச் சுழற்றினான், வண்டியின் சக்கரங்களினால் தரையிலிருந்து மேகக் கூட்டம் போல வண்டியின் பின்னால் புழுதி கிளம்பி மிதந்தது.

“திடீரென இந்தச் சத்தங்களால் அச்சமுற்ற என் நாய், சாம், என்னருகே வர வேண்டி குறுக்கே ஓடி வந்தது. ஒரு குதிரையின் குழாம்பு அதனைத் தாக்கியது. நான் பார்த்தேன், குதிரையின் காலுக்குக் கீழே நாய் விழுந்தது, புரண்டது, திரும்பி விழுந்தது, வண்டி இரண்டு முறை குலுங்கியது, அதன் பின்னே சாலையில் கவனித்தேன் ஏதோ ஒன்று புழுதியில் துடித்துக் கொண்டு இருந்ததை. அவன் ஏறக்குறைய இரு துண்டுகளாகக் கிடந்தான். அவனது குடல்கள் வெளித்தள்ளப் பட்டு இருந்தது காயங்களில் இருந்து ரத்தம் வெள்ளமாகப் பரவிக் கொண்டிருந்தது. அவன் எழ முற்பட்டான், நடக்க முயற்சித்தான், அவனால் முன்னங்கால்களை மட்டுமே அசைக்க முடிந்தது. அவைகளால் நிலத்தைப் பிராண்டினான், ஏதோ குழியைத் தோண்டுபவன் போல. அவனது இரு பின் கால்களும் ஏற்கனவே இறந்துவிட்டன. வலியால் துடித்து ஓலமிட்டான் .

“சில நிமிடங்களில் அவன் இறந்து போனான். நான் எவ்வளவு துயருற்றேன் என்று சொல்ல முடியாது. என் அறையிலேயே ஒரு மாதம் முடங்கிக் கிடந்தேன்.

“இந்தச் சின்ன விசயத்துக்குப் போய் இவ்வளவு தூரம் வருந்துகிறானே என்று ஆத்திரப்பட்ட என் தந்தை ஒரு நாள் இரவில் வியந்து போய்க் கூறினார்,

“உனக்கு உண்மையாலுமே துயரம் வந்தால் என்ன பாடு படுவாய் – அதாவது உன் குழந்தையோ உன் மனைவியோ இறந்து போனால்?

“அவர் வார்த்தைகள் என்னைப் பாதித்தது, என் நிலை எனக்குத் தெளிவாக விளங்கியது.

“எனக்கு விளங்கியது, ஏன் சிறு துன்பங்கள் கூட எனக்குச் சொல்லொனாத் துயராகப் புலப்படுகிறது என்று. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நான் கடுமையாகப் பாதிக்கப் படுவதாக நான் கண்டேன்.

“வலியூட்டும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நோயுற்ற என் மனதில் பல்கிப் பெருகியது, விவரிக்கவே முடியாத அச்சம் என்னை ஆட்கொண்டது. எதன் மீதும் பற்றோ, லட்சியமோ, இல்லாமல் இருந்தேன், எனவே இன்பங்களை எல்லாம் துன்பங்களை எண்ணித் துறந்தேன். வாழப்போவது கொஞ்ச காலமே, பிறருக்கு சேவை செய்வதில் அந்தக் காலத்தைச் செலவிட நினைத்தேன். அதன் மூலம் அவர்களது துயரங்களைத் துடைத்து மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்டேன். எனவே நேரடியாக எதிலிருந்தும் பாதிக்கப் படாமல் அனைத்திலும் குறைவாக உணர்வுகளை அனுபவித்தேன்.

“இதற்கெல்லாம் பிறகு உங்கள் ஒருவருக்குத் தான் தெரியும் நான் எவ்வளவு தூரம் பாதிக்கப் பட்டு இருக்கிறேன் என்று.

“ஆனால், இதற்கு முன் பொறுத்துக் கொள்ளவே முடியாத மாபெரும் துயர், ஆறுதல் படுத்தப் படக்கூடிய கவலையாகக் குறைந்துள்ளது. இந்தத் துன்பங்கள் எனது வழியில் அடிக்கடி குறுக்கிட்டன, அவை நேரடியாக என்னைத் தாக்கியிருந்தால் என்னால் தாக்குப் பிடித்திருக்கவே முடியாது. நான் சாகாமல் என் குழந்தை ஒன்று சாவதைக் கண்டு கொண்டிருக்க முடியாது. இதெல்லாம் இருந்தாலும், விரித்துரைக்கவே முடியாத அச்சம் ஒன்று என்னை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது, தபால்காரர் என் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் , இனம் தெரியாத பயம் என்னைக் கவ்வும், என் நாடி நரம்பெல்லாம் நடுங்க ஆரம்பிக்கும்.. ஆனால் , இப்போது எனக்கு எந்த அச்சமும் இல்லை.”

அவர் பேசுவதை நிறுத்தினார். எரிந்து கொண்டிருந்த நெருப்பை வெறித்துப் பார்த்தார், ஏதோ விசித்திரமானவற்றைப் பார்ப்பது போல, கண்ணுக்குப் புலப்படாமல் இருந்த அனைத்தையும் அவர் தாண்டி வந்திருக்க வேண்டும், அனுபவித்திருந்தால் இன்னும் அச்சமற்று இருந்திருப்பார்.

மெதுவான குரலில் இப்போது சொன்னார்:
“ஆமாம் நான் செய்தது சரி தான். நான் இந்த உலகத்துக்குகாகப் படைக்கப் படவில்லை.”

பாட்டி உடனடியாக எதையும் சொல்லவில்லை, நீண்டஅமைதிக்குப் பிறகு சொன்னார் :

“என்னைப் பொறுத்தவரை, என் பேரக் குழத்தைகள் இல்லை என்று சொன்னால், வாழ்வதற்கு எனக்கு தைரியம் இருந்திருக்காது.”

அவர் அடுத்த வார்த்தை எதுவும் சொல்லாமல் எழுந்தார்.

வேலைக்காரர்கள் எல்லாம் சமையல் அறையில் உறங்கிக் கொண்டிருந்ததால், பாட்டியம்மாவே அவரைக் கதவு வரை கொண்டு வந்து விட்டார், தோட்டத்தில் விளக்குகளால் தோன்றிய அவரது உயரமான நிழல் இருளில் மெல்ல மறைவதையும் கண்டார்.

பிறகு பாட்டியம்மா திரும்பி வந்து கனன்று கொண்டிருந்த நெருப்பின் முன் அமர்ந்து, நாம் இளமையாக இருந்த காலத்திலெல்லாம் சிந்தித்திராத பலவற்றையெல்லாம் சீர்தூக்கிப்பார்த்து அக்கறையுடன் சிந்திக்கத் தொடங்கினார்.

******
(M. le curé மற்றும் Abbé Mauduit போன்ற வார்த்தைகளைத் தமிழில் வேண்டுமென்றே தவிர்த்து விட்டேன், அதற்காக மன்னிக்கவும்.)

– ஜனவரி 28, 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *