புதிய வனம் உருவானது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 28, 2019
பார்வையிட்டோர்: 29,530 
 

முன்னொரு காலத்தில் அடர்ந்த கானகத்தை ஒட்டி ஒரு குடியானவன் குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடியானவனுக்கு குருவாயூரப்பன்,என்ற பையன் மற்றும் மனைவியும் இருந்தனர். தினமும் அந்த குடியானவன் அடர்ந்த கானகத்துக்குள் சென்று காய்ந்த மரங்களை வெட்டி விறகுகளாக்கி கொண்டு வந்து ஊருக்குள் விற்று வாழ்க்கையை நடத்தி வந்தான்.

திடீரென்று குடியானவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் வீட்டிலேயே படுத்து விட்டான். நாலைந்து நாட்கள் எங்கும் செல்லாததால் வீட்டில் வறுமை வந்து விட்டது. அவன் மனைவி என்ன செய்வது என்று கண் கலங்கினாள்.

குருவாயூரப்பன் நான் காட்டுக்கு போகிறேன் என்று அம்மாவிடம் கேட்டான்.

அம்மாவுக்கு மனசு கேட்கவில்லை. குருவாயூரப்பனுக்கு வயது பத்துதான் ஆகிறது.

சிறுவனை எப்படி காட்டுக்கு அனுப்புவது. காட்டில் வசிக்கும் விலங்குகள் ஏதாவது செய்து விடுமே என்று பயந்தாள்.

அம்மா கவலைப்படாதே, அங்கு காய்ந்து கிடக்கும் விறகுகளை மட்டுமாவது பொறுக்கி எடுத்து வருகிறேன். அதை ஊருக்குள் சென்று விற்று வரலாம்.இப்படி அம்மாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அந்த காட்டுக்குள் புகுந்தான்.

அடர்ந்த காடாயிருந்தது. குருவாயூரப்பன் அம்மாவிடம் சொல்லிவிட்டானே தவிர காட்டுக்குள் தனியாக நுழைவது அச்சத்தை கொடுத்தது. இதுவரை அப்பாவுடன் வந்திருக்கிறான், அப்பொழுதெல்லாம் அப்பா கூட இருந்ததால் பயமில்லாமல் இருந்தது. இப்பொழுது தனியாக இருந்ததால் பயம் வந்தது.

பயந்து பயந்து நடுக்காட்டுக்குள் வந்து விட்டான். நல்ல காய்ந்த விறகுகளை பொறுக்க ஆரம்பித்தான். அவனால் எவ்வளவு தூக்க முடியும்.? சேர்த்து வைத்த விறகுகளை அங்கிருக்கும் ஒரு கொடியை பறித்து கட்டினான்.அதை தூக்குவதற்கு முயற்சி செய்த பொழுது அவனால் அசைக்கவே முடியவில்லை. அழுகை அழுகையாய் வந்தது. அந்த விறகு கட்டின் மேலேயே உட்கார்ந்து கொண்டான்.

அப்பொழுது வான் வழியாக ஒரு தேவதை பறந்து சென்று கொண்டிருந்தவள்

நடுக்காட்டில் ஒரு சிறுவன் விறகு கட்டின் மேல் அழுது கொண்டு உட்கார்ந்து இருப்பதை பார்த்தவுடன் மெல்ல இறங்கினாள்.

தம்பி ஏன் அழுகிறாய்? என்று கேட்டாள். திடீரென்று ஒரு அழகான பெண் தன்னிடம் வந்து பேசியதை கேட்டவுடன் குருவாயூரப்பனுக்கு அச்சம் வந்து விட்டது.

உடனே தேவதை பயப்படாதே, நான் ஒரு வன தேவதை. இந்த காட்டு வழியாக பறந்து சென்று கொண்டிருந்தேன். நீ அழுது கொண்டு உட்கார்ந்திருப்பதை பார்த்து இறங்கி வந்திருக்கிறேன். நீ எதற்காக அழுது கொண்டிருக்கிறாய்?

கொஞ்சம் பயம் தெளிந்த குருவாயூரப்பன், தேவதையிடம் தன் தகப்பன் உடல் நலம் இல்லாமல் வீட்டில் இருப்பதையும், அதனால் தான் விறகு பொறுக்க வந்ததையும் சொன்னான். ஆனால் விறகு கட்டை தூக்க முடியாமல் சிரமமாய் இருப்பதாக கூறினான்.

அவன் மேல் பரிதாபப்பட்ட தேவதை கவலைப்படாதே நீ வீட்டுக்கு போ, இந்த விறகு கட்டை உன் வீட்டிற்கு நான் கொண்டு வந்து தருகிறேன் என்றது. குருவாயூரப்பன் சிறுவனாய் இருந்தாலும் நல்ல உள்ளம் படைத்தவன், வேண்டாம் நீங்கள் ஏன் எங்களுக்காக சிரமப்பட்டு தூக்கி வரவேண்டும். என்றான்.

தேவதை சிரித்தாள். நான் தூக்க மாட்டேன், என் மந்திர சக்திதான் அந்த கட்டை தூக்கி வந்து உன் வீட்டில் போட்டு விடும். உன்னுடைய நல்ல உள்ளத்துக்காக நான் ஒன்று செய்கிறேன். தினமும் நல்ல விறகு கட்டை உன் வீட்டில் கொண்டு வந்து போட்டு விடுகிறேன். நீங்கள் அதை விற்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்றது.

குருவாயூரப்பன் தேவதையிடம் அதெப்படி உழைக்காமல் நீ கொண்டு வரும் விறகை நாங்கள் விற்று அனுபவிப்பது. இந்த கேள்வியை கேட்டவுடன் தேவதைக்கு அவன் மேல் பாசம் ஏற்பட்டு விட்டது. உன்னுடைய எண்ணம் நல்லது. வேண்டுமென்றால் நான் செய்த உதவிக்கு பதிலாக நீ ஒன்று செய்ய வேண்டும். இது போல் இன்னும் புதிய வனங்களை உருவாக்க வேண்டும். அதற்காக வாரம் ஒரு விதை நட வேண்டும்.எங்கெங்கு காலி இடம் இருந்தாலும் அங்கெல்லாம் விதை நட்டு தண்ணீர் ஊற்றி பாதுகாக்க வேண்டும்.

குருவாயூரப்பன் வீட்டிற்கு வந்தான். எதுவும் கொண்டு வராமல் சும்மா வருவதை பார்த்த அவன் அம்மாவும், அப்பாவும் பையனுக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்று பயந்தனர். குருவாயூரப்பன் அம்மாவிடம் எல்லா விசயங்களை சொல்லி முடிக்கவும் அங்கு விறகுக்கட்டு வந்து சேரவும் சரியாக இருந்தது. அது மட்டுமல்ல அந்த கட்டுக்குள் புதிதாய் நிறைய விறகுகள் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது.

அவன் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் மிகுந்த மகிழ்ச்சி. அவர்கள் கட்டை பிரித்து தூக்க முடிந்த அளவு அம்மாவும், மகனும் தூக்கிக்கொண்டு ஊருக்குள் கொண்டு சென்றனர். விறகு சீக்கிரம் விற்று தீர்ந்து விட்டது. மகிழ்ச்சியுடன் அங்கேயே வீட்டுக்கு தேவையான சாமான்கள் வாங்கி வந்தனர்.

தேவைதையிடம் சொல்லி இருந்தபடி குருவாயூரப்பனோ, இல்லை அவன் குடும்பத்தாரோ வாரம் ஒரு விதை நட்டு பராமரித்து வந்தனர். தேவதையும் தினம் அவர்கள் வீட்டில் ஒரு கட்டு விறகு கொண்டு வந்து போட்டது இதனால் அவர்கள்

ஊரிலேயே ஒரு விறகுக்கடையும் வைத்து அதன் மூலம் வாழ்க்கையை வளப்படுத்திக்கொண்டனர்.

வசதிகள் வந்தபோதும் மறக்காமல் இவர்கள் வாரம் ஒரு விதை நட்டு அதை பராமரித்து வந்ததால், புதிய வனங்கள் ஊரை சுற்றி உருவாகின.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *