கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 3, 2023
பார்வையிட்டோர்: 1,876 
 

அவள் விரைந்து நடந்து கொண்டிருந்தாள்.

அடிக்கு அடி, நடையில் வேகம் கூடிற்று.

அப்புறம், நடையும் ஓட்டமுமாக நடந்தாள்.

இன்னேரமே என்ன ஆயிருக்குமோ?

“குழந்தே! குழந்தே!!”

திடுக்கிட்டுக் குரல் திக்கில் நோக்கினாள்.

“உன்னைத்தான். கொஞ்சம் இங்கே வாயேன்!”

சாலையோரமாய் சற்று உள்தள்ளி ஒரு பூவரச அடி மரத்தின் மேல் சாய்ந்தபடி, கால்களை நீட்டி ஒரு கிழவர் உட்கார்ந்திருந்தார்.

அருகே வந்தாள்.

“ஐயா, என்ன வேணும்?”

“உட்காரு.”

“ஐயா, என் நயினாவுக்கு உடம்பு நல்லாயில்லேன்னு சேதி வந்து, அவசரமாப் போயிட்டிருக்கேன்.”

“எங்கேயிருக்கார்?”

“பக்கத்து ஊரு. இன்னும் ரெண்டு கல் நடக்கணும்.”

அவருடைய கீழுதடு புன்னகையில் லேசாய்ப் பிதுங்கிற்று. கசந்த புன்னகை.

“பரவாயில்லை, உட்காரு. உன்னை ரொம்ப நேரம் நிறுத்தி வெக்க மாட்டேன். உக்காரு.”

மனமில்லாமல் அருகே உட்கார்ந்தாள். பெரியவர் சொல்றாரு. சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒரு ஆள் கூட நடமாட்டமில்லை. இந்த ரோட்டே சத்தே அடக்கம்தான்.

குறுக்கு ரோடு. ஆனால் இந்தப் பக்கம் வந்து நாளாச்சு.

கிழவர் பக்கம் திரும்பினாள். அந்த மாதிரி நிறம் பார்த்ததேயில்லை. சுண்ணாம்பாட்டம் வெள்ளை வெளேர்னு . அதிலும் வெள்ளை முடி. கோராப்பட்டு நூலாட்டம் பளபளன்னு , அடர்த்தியா, தூக்கி அளுந்த பின்னுக்கு வாரி கழுத்தா மட்டையிலே குஞ்சம் குஞ்சமாத் தொங்குது. முகத்துலே எலும்புச் சதை என்ன இம்மா பிகித்தம் – தொட்டால் ரத்தம் பிச்சுக்குமாம் போல்!

“ஐயா, என்ன வேணும்?”

“நான் செத்துப் போகப் போறேன்.”

தூக்கிவாரிப் போட்டது.

“என்ன ஐயா சொல்றீங்க?”

“ஆமாம், உன்னை ரொம்ப நேரம் காக்க வைக்க மாட்டேன்.”

“ஐயா, விசம்கிசம் குடிச்சிட்டீங்களா?”

“சே!” கையை அலக்ஷியமாக வீசினார். “இந்த வயசிலா? வயசாயிட்டுது. வேளை வந்துட்டுது, போறேன்.”

“எனக்குப் பயமாயிருக்கய்யா!” கையைப் பிசைந்தாள்.

“பயப்படாதே. பயப்படும்படியாவா இருக்கேன்? உயிர் போனப்பறம்கூட, பயப்படும்படி இருக்க மாட்டேன். அந்த மட்டும் நான் கிடக்காமல், நாறாமல் போறேன். ஆனால் கொஞ்சம் பயமாய்த்தானிருக்கு, போற இடம் எப்படியிருக்கும்னு தெரியாதில்லே! அதனால் தான் உன்னைத் துணையிருக்கச் சொல்றேன்”.

“ஐயா, எப்பிடி அவ்வளவு தீர்மானமாச் சொல்றீங்க? பார்த்தால் அப்படித் தெரியல்லீங்களே! சோஸ்யக்காரன் சொன்னானா?”

“சோஸ்யம் ஏதுமில்லை. எனக்குக் கொஞ்சம் நாடி பார்க்கத் தெரியும். ஆனால் நான் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கல்லே. காலையிலே எழுந்திரிச்சபோதே, கால் கொஞ்சம் விறுவிறுன்னது. நடந்தால் சரியாப் போயிடும்னு உலாத்த இந்தப் பக்கமா வந்தேன். திடீர்னு இடுப்புக்குக் கீழே விளுந்துட்டுது. எப்பிடியோ நகர்ந்து நகர்ந்து இந்த மரத்தடிக்கு வந்து சேர்ந்துட்டேன். உடனே கையைப் பிடிச்சுப் பார்த்தேன். நேரமில்லேன்னு தெரிஞ்சு போச்சு. இதுவரை ஒத்தரும் வல்லே. நீதான் வந்தே.”

“வீடு எங்கே சொல்லுங்க ஐயா. ஓடிப் போய் யாரை யேனும் இட்டாறேன்.”

“உஷ். அதுக்கெல்லாம் நேரமில்லே. நீ வரதுக்குள்ளே போயிடுவேன். இப்பவே கால் செத்துப் போச்சு . சில்லிப்பு மேலே ஏறுது. உன்னை ரொம்பக் கேக்கல்லே. கொஞ்ச நேரம்தான். பக்கத்தில் இரு, போதும். ஆனால் இதுவே அதிகம்தான். என்னைப் பார்த்தால் அனாதைப் பிண மாட்டமா இருக்கு? எனக்கு எல்லாம் இருக்கு.”

“அப்பிடி நான் ஒண்ணும் சொல்லல்லியே ஐயா!” அவள் குரலில் அழுகை நடுங்கிற்று.

“மூணு பசங்க இருக்காங்க. நல்லப் பசங்க. மூத்தவன் வெளியூரிலே வேலை பாக்கறான். அடுத்தவன் ஒரு வேலைக்கு இன்னிக்குப் பேட்டிக்குப் போயிருக்கான். பேட்டின்னா தெரியுமா? தெரியாட்டி பரவாயில்லே. இப்ப உனக்குத் தெரிஞ்சுதான் என்ன ஆவணும்?”

சிரித்தாள்.

“நிறையப் படிச்சுட்டு வேலை கிடைக்காமே ஒரு வருசமா உள்ளேயே குமுங்கிட்டிருக்கான். அவன் கஷ்டம் அவனை நேரிடையா நான் கேட்டுக்க முடியாது. ஆண்டவனே, நான் இப்போ போற ராசி, அவனுக்கு விடியணும்.”

“கடைசி பையனுக்கு இன்னிக்கு முடிவுப் பரீக்ஷை. என்னாலே நின்னுட்டான்னா, ஒரு வருஷம் வீணாப் போயிடும். செத்தும் கெடுத்தான்னு பேரிருக்கக் கூடாதம்மா. இதெல்லாம் உன்கிட்டே ஏன் சொல்லிக்கறேன்னு எனக்கே தெரியல்லே. போறப்போ எங்கானும் சுமையிறக்கிட்டுப் போவணுங்கறாங்களே, அதுதானோ என்னவோ?”

“இந்த சமயத்துலே உங்களுக்குச் சிரிக்கத் தோணுதே, எப்பிடி ஐயா? இப்போ வீட்டிலே அம்மா இருப்பாங்களே, அவங்க மனசு என்ன பாடுபடும்?”

“அவளும் இப்போ இங்கே இல்லை. வேடிக்கையா யில்லே? அவளுக்கு இன்னும் பிறந்த வீட்டு மவுசு இருக்கு. உடன் பிறந்தாமாருங்க தாங்கறாங்க. இருக்க வேண்டியது தானே! நேற்று ராத்திரிதான் பெங்களூருக்கு ரயிலேறிப் போனா. இருக்க வேண்டியதுதானே! எப்பவுமா போறா, என்னிக்கோ ஒரு நாள் அவள் வீட்டிலிருந்து ஸ்டேஷனுக்கு வந்திருப்பாங்க. கார் வெச்சிருக்காங்க. ஹும் அந்த சைடுலேயும் ஒண்ணும் குறைச்சலில்லே” பெமூச்செறிந்தார்.

அதுவரை லேசாய் மப்பாயிருந்த வேளையில், வெய் யிலும் வெளிச்சமும் வந்து புகுந்து லேசாய் சூடும் கண்டது. இலைகளின் சந்து வழி சூரியனின் கதிர் லேசாய்க் கண் கூசிற்று.

உயரக் கிளையில், இரு சிட்டுக் குருவிகள் கொஞ்சிக் ‘கிறீச் ‘சிட்டு உடனே பறந்து ஒன்றையொன்று துரத்திக் கொண்டு சென்றன.

“ஐயா, மார் நோவுதுங்களா?” அவர் நெற்றி நடுவில் பச்சை நரம்பு மின்னல் புடைக்கக் கண்டாள்.

“தெரியல்லே. நாக்கை வரட்டுது.”

“சுத்து முத்து வீடு காணோமே!” சுற்றுமுற்றும் பார்த் தாள். “தோப்புத்தான் தெரியுது”

“எனக்கு இந்த இடம் தெரியும். இந்தத் தோப்புத் தாண்டி வாய்க்கால் ஓடுது.”

“நல்ல தண்ணியா இருக்குமா?”

“இருக்கிற வரைக்கும்தான்.”

“என் கையில் ஏனம் ஏதுமில்லையே!” தெரிந்தும் அந்தக் கவலையில் தன் கைப்பையைக் குடைந்தாள்.

“பரவாயில்லே. இரண்டு கையிலும் ஏந்திண்டு வா.”

“வரவரைக்கும் என்ன நிக்கும்?”

“நின்னவரைக்கும்தான். உதட்டில் ஈரம் பட்டால் சரி.”

அவள் எழுந்து ஓடோடிப் போய்க் கொண்டு வந்து அவர் வாயில் ஊற்றுகையில், பரவாயில்லே, ஒரு முழுங்கே கிடைத்தது. அவர் வாயுள் அவள் கைத்தண்ணீரை ஊட்டுகையில், அவள் வாயும் மொக்கு திறந்து கொண்டது.

“அம்மாடி! நீ நல்லாயிருக்கணும். நல்லாயிருப்பே. கடைசி மூச்சுப் பேச்சு எப்பவும் பலிக்கும். உன் பேர் – இல்லை வேண்டாம். இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். உனக்கு ஊதாக் கலர் பொருத்தமாயிருக்கு.”

தன்னை இறங்கப் பார்த்துக் கொண்டாள். தலைப்பை நெருடிக் கொண்டே, “இது பளசுங்க. வாங்கி ரெண்டு வருசமாவுது.”

“என் பேத்திகூட ஊதா உடுத்துவாள். நீ நடந்து போவதைப் பார்த்தப்போ அசப்பில் அவள் மாதிரியிருந்தது. அதனால்தான் கூப்பிட்டேன்.”

“அவங்க எங்கேயிருக்காங்க?”

“தெரியாது.” கையை விரித்தார். “பார்த்துப் பத்து வருசமாச்சு.”

அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரிய வில்லை. அவர் தொடர்ந்தார். “தாய் தகப்பனில்லை. ஒரு வயசில் என்கிட்ட வந்து சேர்ந்துட்டா. நான் பெத்தாக்கூட அத்தனை அருமையாயிருக்காது. அருமையா வளர்த்து நல்ல இடத்தில் தான் கட்டிக் கொடுத்தேன்.”

“தண்ணி தாண்டியிருக்குதா? புருசன் புளைக்க வெளி நாடு போயிட்டாரா?”

அவர் தன் உள்ளங்கையைப் பார்த்துக்கொண்டு, “அதெல்லாம் ஒண்ணுமில்லை. சண்டை”

ஒரு அணில் அவரை உராய்ந்து கொண்டு இன்னொரு மரம் ஏறிற்று.

“பிள்ளை வீட்டாருடன் மனஸ்தாபத்துக்குக் காரணமும் வேணுமா? அவங்ககிட்ட நியாயம் இல்லாட்டியும், புள்ளை வீட்டாருடன் சண்டை போட முடியுமா? நம்ம பெண் வாழ வேண்டாமா? ஆனால் என் பேத்தி சமத்து. எங்கே எப்படி நடந்துக்கணும்னு சொல்லாமலே அவளுக்குத் தெரியும். தாய் தகப்பன் இல்லாத புள்ளையில்லே! அவங்களுக்கு ஆரம்பத்திலேயே அந்த புத்தி சொல்லாமலே வந்துடுது. அதனாலே நான் போவல்லே. பார்க்கல்லே. அவங்களும் இத்தனை நாளுலே எங்கோ போயிட்டாங்க.”

“நீங்க ரொம்ப பாவமுங்க”

“பாவமா? அதெல்லாம் ஒண்ணுமில்லே.” ரோசம் தொனித்தது. “யார் யாருக்கு என்னென்ன செய்யணுமோ, என்னால் முடிஞ்ச வரைக்கும் செஞ்சாச்சு. அதுக்கென்ன, வாங்கிக்கிறவங்களுக்கும், கொடுக்கறவங்களுக்கு திருப்தின்னு காணப்போமா? எல்லாம் முடிஞ்சவரைக்கும்தான். அவங்களையெல்லாம் விட்டுட்டுப் போறோமேன்னு பெரிய வருத்தமுமில்லே. பாவம், அப்பாவுக்கு உடம்பு சரியில்லேன்னு போயிட்டிருப்பவளை என் சுயநலத்துலே நிறுத்தி வெச்சேன். ஆச்சு, இன்னும் கொஞ்ச நேரம்தான்.”

“பரவாயில்லேங்க. எனக்கு அப்பிடியொண்ணும் அங்கே பிடிப்பில்லேங்க. ஆள் வந்து சொல்லிச்சேன்னு போறேன். நயினா அப்பிடி ஒண்ணும் ஒழுங்கா நடந்துக்கலே. அம்மா செத்து கருமம் முடியல்லே. ஒரு சித்தாத் தாளைக் கட்டி வீட்டுக்குக் கூட்டியாந்துட்டாரு. அப்பிடியென்ன அவசரமோ நடுமுத்தத் தாலிக்கு!”

“அப்படின்னா?”

“ஒரு தாலி கட்டி இழந்தவ, இல்லே தள்ளி வெச்சவ, மறுதாலி கட்டினால், நடுமுத்தத் தாலின்னு சொல்லுவாங்க. எங்க சாதிப் பழக்கம், நடுமுற்றத்துலே வெச்சுத் தாலி கட்டு வாங்க. நடுமுத்தத் தாலிக்காரி சபையிலே வந்து குத்து விளக்கு ஏத்த முடியாது. குங்குமம் வெச்சிப்பா. ஆனால் மத்தவங்க கொடுக்க மாட்டாங்க. அதெல்லாம் சாதிக் கட்டுப்பாடு. ஆனால் அப்படியும் அவளுக்கு ஒரு வாழ்வு வேணுமேன்னு நடுமுத்தத் தாலி ஒரு அனுமதி.”

“கஷ்டப் பேச்சு இப்போ ஏன்? உன்னைப் பத்திச் சொல்லு.”

“உங்க புண்ணியத்துலே நல்லாயிருக்கேணுங்க. அவங்க எல்லாருமே நல்லவங்க. மாமியாரு தங்கமானவங்க. அவங்க தான் என்னை அனுப்பிவச்சவங்க. “என்ன இருந்தாலும் பெத்தவரு. உன்னைப் பாக்கணும்னு இருக்காதா? நீ போய் வா”ன்னாங்க. மூணு வயசுலே ஒரு பையன் இருக்கான். வீட்டுலேயே விட்டுட்டு வந்திருக்கேன். இந்தக் களேபரத்தில் அவன் ஏன்?- என்ன செய்யது மூச்சு முரண்டுதா? இதோ பாருங்க, என் தோளுலே சாஞ்சுக்கங்க. வெக்கப்படாதீங்க – அப்பிடித்தான்… இப்ப தேவலியா?”

“பெண்ணே உன் பேரென்ன?-இல்லை வேண்டாம் இப்படியே இருந்துட்டுப் போகட்டும். இப்போ இந்த நிமிஷத்துலே ஒரு உண்மை தெரிஞ்சது. உலகத்தில் எல்லாருமே நல்லவங்கதான். இந்த சமயத்துக்கு நீதான் பெண்- இல்லை, பேத்தி. யாராவானாலும் சரி. சமயம் தான் கணக்கு. ஆள், பேர் இல்லை. கமலி – திடீர்னு என்ன இப்படி இருட்டிப் போச்சு – கமலி எங்கேடி இருக்கே?” திணறினார்.

“பயப்படாதீங்க. இதோ என் கையைக் கெட்டியாய்ப் பிடிச்சுக்கங்க-முருகா! முருகா!!” அவளுக்கு முகம் எரிந்தது. ரவிக்கை திடீரென்று நனைவதை உணர்ந்தாள். பயங்கர மான தாய்மையில் பரிதவித்தாள்.

அவர் கண்கள் முழுக்க விழிக்க மிகவும் முயன்றன. பார்வை, அரைக் கண்ணில் அவள் மேல் தோய்ந்து அலர்ந்தது. அவள் கையுள் அவர் பிடி தளர்ந்து துவண்டது.

திடீரெனக் காற்று கிளம்பி, இலைகள் சலசலத்துத் தரையிலிருந்து குப்பைகள் எழுந்து சுழன்று பறந்தன. அழுந்த வாரிய அவர் கேசத்தில் தடியாக இரண்டு பிரிகள் பிரிந்து நெற்றி மேடில் விளையாடின. புன்னகையில் உதட்டோரக் குழிகள் இளகின.

உடனே காற்றும் ஓய்ந்தது. சூரியன் மேகங்களைக் கிழித்துக் கொண்டு புறப்பட்டான்.

சொல்லி வைத்தாற்போல் குரல்கள், கும்மாளம், கூக்குரல், சிரிப்பில், திருப்பத்தில் கிளம்பி, சீக்கிரமே நெருங்க, திடுக்கிட்டுச் சட்டென்று நின்றன.

“அடடே என்ன இது? என்ன ஆச்சு? யாரு, உங்க அப்பாரா?”

அவளுக்கு வாயடைத்துவிட்டது. அவர் முகத்தை முந்தானையால் ஒற்றிக் கொண்டு, “ஆம்” என்று தலையை ஆட்டினாள். எரிச்சொட்டுக்கள் இரண்டு விழியோரங்களில் புறப்பட்டு, கன்னங்களில் அவைகளின் பாதையை தீய்த்துக் கொண்டு மோவாயினின்று பூமியில் உதிர்ந்தன.

– அலைகள் ஓய்வதில்லை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, வானதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *