எல்லாம் எனக்கு தெரியும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 17, 2022
பார்வையிட்டோர்: 18,649 
 

குழந்தைகளே, சௌக்கியம் தானே! அம்மா-அப்பா பேச்சைக் கேட்டு நடக்கிறீங்க தானே! நல்லது. அப்படித்தான் இருக்கணும். பெரியவங்க கிட்ட இருந்து நல்ல விஷயங்களைக் கத்துக்கணும். அவற்றை நம்ம வாழ்க்கையில கடைப்பிடிச்சு வாழணும். அதுதான் முக்கியம். ‘எல்லாம் எனக்குத் தெரியும்’னு அலட்சியமா இருந்தா என்ன ஆகும்? இந்தக் கதையைக் கேளுங்க புரியும்.

அது ஒரு சின்ன கிராமம். அதற்கு ஒரு தலைவர் இருந்தார். அவரோ சரியான சோம்பேறி; முட்டாளும் கூட. எப்போது பார்த்தாலும், சாப்பிடறதும், தூங்குறதுமா காலத்தைக் கழிச்சு வந்தார். எல்லாத்துலயும் ரொம்ப அலட்சியமா நடந்துகிட்டு வந்தார். அந்தக் கிராமத்து மக்களோ ரொம்ப அப்பாவிங்க. உலகமே தெரியாதவங்க. அந்தத் தலைவர் என்ன சொல்றாரோ அதன்படிதான் அவங்க எல்லாத்தையும் செய்வாங்க.

ஒருநாள் வயல்ல ஒரு குதிரை மேய்ஞ்சுகிட்டிருந்தது. கிராமத்து ஆள் ஒருத்தன் அதுகிட்ட போனதும் அது பயந்து ஓடிப் போயிடுச்சு. அப்போ அந்த ஆள் காலிலே ஒரு பெரிய பூசணிக்காய் தட்டுப்பட்டது. அவன் அதுக்கு முன்னாடி அவ்ளோ பெரிய பூசணிக்காயைப் பார்த்ததே இல்லை. அவங்கதான் உலகமே தெரியாதவங்களாச்சே! அதனால அந்தப் பூசணிக்காயைப் பார்த்ததும், அவனுக்கு ரொம்ப பயமாப் போயிடுச்சு. உடனே அதை எடுத்துக்கிட்டு தலைவர்கிட்ட வந்தான். நடந்த விஷயத்தை அவர் கிட்ட சொன்னான். அப்புறம், ‘தலைவரே இது என்னன்னு பாருங்க, ரொம்ப பயமாயிருக்குது!’ அப்படின்னு சொல்லி, பூசணிக்காயை அவர் முன்னாடி வச்சான். தலைவரும் பார்த்தாரு. சட்டுனு அவருக்கு காலைல சாப்பிட்ட முட்டைதான் ஞாபகத்துக்கு வந்தது. உடனே அவனைப் பார்த்து சொன்னாரு ‘இது குதிரை முட்டையப்பா. எல்லோரும் பேசாம தூக்கிக் கிணத்துல போட்டிருங்க. எல்லாம் சரியாய்டும்!’ என்றார்.

இப்படியே சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் ராஜாவின் பட்டத்து யானை எப்படியோ தப்பி ஓடி அந்த ஊருக்கு வந்துவிட்டது. கரும்புக் காட்டுக்குள் நுழைந்து துவம்சம் செய்தது. அந்த கிராமத்து மக்கள் தான் அப்பாவிகள் ஆயிற்றே! யானையை அவர்கள் பார்த்ததே இல்லை. எனவே அதைக் காண்பிக்க தங்கள் தலைவரை அழைத்துக் கொண்டு ஓடினர். தலைவரும் வந்து பார்த்தார். அப்போதுதான் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். இருள் விலகிக் கொண்டிருந்தது. ‘எலேய் இது ஒண்ணுமில்லடே. அதா போகுது பாத்தியா இருட்டு, அதோட மிச்சம்ல!’ என்றார். அதைக் கேட்ட மக்களுக்குத் தமது தலைவரின் அறிவாற்றலைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. யானயைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர்.

மன்னனின் படை வீரர்கள் பட்டத்து யானை கிராமத்தில் சிறைப்பட்டு இருப்பதையும், மக்கள், தலைவர் என அனைவருமே அங்கு முட்டாள்களாக இருப்பதையும் கண்டு, அரசனிடம் கூறினர். அரசருக்கு மிகுந்த சீற்றம் உண்டாயிற்று. அந்த முட்டாள் தலைவரை உடனே பதவியில் இருந்து விலக்கிவிட்டு, புதிய தலைவரை நியமித்தார். தானும் ஏதும் கற்றுக் கொள்ளாமல், தன் கிராமத்து மக்களையும் முட்டாளாகவே வைத்திருந்த அந்தத் தலைவரைச் சிறையில் அடைத்து விட்டார்.

குழந்தைகளே! எல்லாம் தெரிந்தது போல் அலட்சியமாகவும், முட்டாள்தனமாகவும் நடந்து கொண்டால் என்ன ஆகும் என்று தெரிந்ததா! புதிது புதிதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும், தெரியாததை ஒப்புக்கொள்ளும் அடக்கமும் வேண்டும். அப்படித்தானே! சரி, அடுத்த மாதம் வேறொரு கதையோடு வருகிறேன். அதுவரை சமர்த்தாக இருங்கள்.

சுப்புத்தாத்தா
ஜூலை 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *