வான்வெளியில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2023
பார்வையிட்டோர்: 953 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(தமிழ்நிலா, தேன்மொழி, இளவழகன், அன்பரசன் ஆகியோர் ஒரு புல்வெளியில் அமர்ந்து வானத்தைப் பார்த்துப் பேசி மகிழ்ந்து சிரிக்கையில் அறிவண்ணன் வருகிறார்.)

தமிழ்நிலா: அண்ணா இன்று இரவு நேரத்தில் வருகிறார்.

தேன்மொழி : அதுவும் அமாவாசை இரவு. பேய் உலாவும் என்ற பயமில்லையா அண்ணா?

அறிவண்ணன்: உண்மையான பேய் குறித்து எனக்குச் சற்றும் பயமில்லை. ஏனென்றால் அப்படி ஒன்றும் இல்லை. ஆனால் மனிதப் பேய்களுக்குப் பயம். அவை உலாவுகின்றன.

இளவழகன்: உண்மையாகவே பேய் என்று ஒன்று மில்லையா அண்ணா?

அறிவண்ணன் : “வஞ்சனைப் பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார். அந்தக் குளத்தில் என்பார். என்று பாரத ஜனங்களின் அறியாமையை நினைத்துப் பாரதி சிரித்து இத்தனை வருடங்கள் ஆகிய பின்பும் எமது நாட்டிற் சில எழுத்தா ளர்கள் கூட இந்த பேய் பற்றி மிகவும் பயப்படுகிறார்கள், நீயும் பயப்படுகிறாயா?

இளவழகன்: இல்லை. பேய் என்ற ஒன்று இல்லை என்று நிச்சயமாகவே நீங்கள் சொல்லி விட்டால் நான் இனிமேல் பயப்பட மாட்டேன் அண்ணா.

அறிவண்ணன் : (இளவழகன் முதுகில் தட்டி) பேய் போன்ற குணம் கொண்ட மனிதர்களுக்குப் பயப்படு; பேய்க்குப் பயப்படாதே.

அன்பரசன்: நீங்கள் என்ன சொன்னாலும் அவன் புளிய மரத்தைக் கண்டவுடன் உதறல் எடுப்பான்.

(எல்லோரும் சிரிக்கிறார்கள்)

அறிவண்ணன் : சரி நீங்கள் வானத்திலே என்ன பார்த்துக் கொண்டிருந்தீர்கள்?

தமிழ்நிலா : நட்சத்திரங்கள் பார்த்தோம் கோள்கள் பார்த்தோம்.

அறிவண்ணன் : (தானும் நிமிர்ந்து பார்த்துவிட்டு) விருச்சிகக் கூட்டத்தை அடையாயம் கண்டு கொண்டீர்களா?

தேன்மொழி : (கிழக்கு வானைச் சுட்டி) ஓ! அது தானே?

அறிவண்ணன் : இப்போது அது அந்தி நேரத்திலே கிழக்கு வானில் தெரிகிறது. வானத்தின் காற்பகுதி இடத்தைப் பிடித்தது போல் அழகான கொடுக்கன்.

இளவழகன்: அதனுடைய தலைக்குப் பக்கத்தில் கீழே அதுதான் நல்ல பிரகாசமான நட்சத்திரம் என்ன அண்ணா?

அறிவண்ணன் : அதுதான் அன்ராறஸ் (Antares) சிவப்பு நிறமாகத் தெரியுது.

அன்பரசன்: இந்த அன்ராறஸ் சூரியனை விடப்பெரிது என்று அவன் சொல்கிறான். உண்மையோ அண்ணா

அறிவண்ணன் : அவன் சொல்வது சரிதான். அன்ராறஸ் எமது சூரியனை விட முந்நூறு மடங்கு விட்டமுடையது. மூவாயிரம் மடங்கு பிரகாசமுடையது.

தமிழ்நிலா: இராசித் தொகுதியில் வடிவானது இதுதான்.

அறிவண்ணன் : ஆம். ஆனால் உடுக் கூட்டங்கள் எல்லாவற்றிலும் மிகக் கம்பீரமானது என்று ஓறயனைச் (Orion) சொல்லலாம்.

தேன்மொழி : ஓறயன் இப்போது தெரிகிறதா?

அறிவண்ணன் : இல்லை. இப்போது ஆவணி மாதம் அல்லவா? ஆகவே ஐந்தாவது இராசியாகிய சிங்கம் சூரியனோடு பயணம் செய்து மாலை ஆறு மணிக்கு மறையும். அதற்கு அடுத்து வரும் கன்னி, துலாம், விருச்சிகம்,தனுசு, மகரம் ஆகியவைதான் அந்தியில் மேற்கில் இருந்து கிழக்காகத் தெரியும்.

இளவழகன்: ஒறயனை விடியற்காலையில் பார்க்கலாம். இல்லையா?

அறிவண்ணன் : ஆம் விடியற்காலை நாலு ஐந்து மணிக்கு எழுந்தாற் பார்க்கலாம்.

அன்பரசன் : விடியற்காலை எழும்ப நித்திரை விடாது. ஒறயனை எப்போது அந்தியிற் பார்க்கலாம்.

அறிவண்ணன் : மார்கழிக்குப் பிறகு… மார்கழியில் இருந்து பங்குனி வரை!

இளவழகன்: அப்ப குளிர், மழை.. வானமெல்லாம் முகில் மூடியிருக்கும்.

அறிவண்ணன்: உண்மைதான். கோடை காலத்து அமாவாசைதான் வானத்தைப் படிக்க நல்ல நாள். இன்று அருமையாக இருக்கிறது. பால் வழி கூடத் தெரிகிறது.

தமிழ்நிலா: எங்கே? எங்கே? நான் ஒரு போதும் பார்க்கவில்லை.

அறிவண்ணன் : அதோ வடக்குத் வடக்குத் தெற்காக ஒரு; மெல்லிய படலம் போல் சில இடங்க ளிலே தடிப்பாகச் சில இடங்களிலே மெலிதாக..

தேன்மொழி: பால் வழி என்பது என்ன அண்ணா?

இளவழகன்: உனக்கு இவ்வளவு நாளும் தெரியாதா? ஆண்டு எட்டிற் படிக்கவில்லையா?

அன்பரசன்: சயன்ஸ் ரீச்சர் வந்தவுடனே இவள் நித்திரையாகிப் போய்விடுவாள். (எல்லோரும் சிரிக்கிறார்கள்.)

அறிவண்ணன் : அவள் கேட்கட்டும். கேள்வி கேட்பவன் மடையனாய் இருப்பது ஒருநாள் மட்டுமே. கேள்வி கேட்காதவனோ வாழ்நாள் முழுவதும் மடையனாக இருப்பான். பால்வழி என்பது எமது உடுத் தொகுதியில் மிகவும் தொலை தூரத்தில் உள்ள பலகோடி நட்சத்திரங்களின் கூட்டம்.

தேன் மொழி: நட்சத்திரங்களோ? ஏன் அவை முகில் போலத் தெரிகின்றன?

அறிவண்ணன் : தொலைவு காரணமாக அவற்றைத் தனித்தனியாக காண முடிவதில்லை. அவற்றின் ஒளி ஒன்று சேர்ந்து ஒரு மங்கலான படலம் போலத் தெரிகிறது.

தமிழ்நிலா : இந்த வானத்தைப் பற்றி இன்னும் கன விஷயம் நாங்கள் உங்களைக் கேட்க வேண்டும். ஆனால் இன்று நேரம் போய்விட்டது.

அறிவண்ணன் : (நேரத்தைப் பார்த்து) ஓ! ஒன்பது மணியாகிவிட்டது. பி.பி.சி செய்தியும் கேட்க வேண்டும். இன்னொரு நாள் சந்திப்போம்.

– விஞ்ஞானக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 2000, கலை இலக்கியக் களம் தெல்லிப்பழை, ஸ்ரீலங்கா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *