கண்ணெதிரே தோன்றினாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 6,491 
 

மேடையின் வலது மூலையில் அமர்ந்திருந்த அமலா, மேடைக்கு இடது மூலையில் நண்பன் ஒருவனோடு உட்கார்ந்து இருந்த ரகுவை அவ்வப்போது ஒரு கண் பார்ப்பதும் அவன் பார்வை தன்னிலேயே நிலைத்திருப்பதைக் கண்டதும் உடனே வேறு பக்கம் திரும்பி யாரையோ பார்த்து பொதுவாக ஒரு மென்சிரிப்பை உதிர்ப்பதுமாக இருந்தாள்.

உள்ளுக்குள் படபடவென்று துடித்துக் கொண்டிருந்தது இதயம்.

இரண்டொரு முறை எழுந்து உள்பக்கம் போய் சிறிது நேரம் கடத்தி பின் வந்து பார்த்தாள். இன்னமும் அவன் அங்கேயே அதே பார்வையுடன் அமர்ந்திருந்தான்.
அவனைப் பார்த்து இப்போது சிரிக்க வேண்டுமா என்று கூட தீர்மானிக்க முடியாத அளவு அவளுக்குள் படபடப்பு இன்னும் இருந்தது. திடீரென்று எழுந்து வந்து எல்லோருக்கும் எதிரில் ஏதாவது கத்த ஆரம்பிப்பானோ என்ற பயத்தில் படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது.

அப்படி ஏதாவது செய்தால் கூட நன்றாக இருக்கும். கடந்த அரைமணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்திருப்பவனின் அமைதியே அச்சத்தை தருவதாக இருந்தது.

இப்படி எல்லாம் அமைதியாக இருப்பவனல்ல அவன்.

ஒரு பீர் உள்ளே போனதும் மெலிதாக ஆரம்பிக்கும் அவன் ஆட்டம், நேரம் கூடக்கூட அந்த இரவு முழுவதுமே சுற்றியுள்ள எல்லோர் கவனமும், மேடையில் இருப்பவர்களை விட்டு விட்டு, இவன் மேலேயே இருக்கும்படி இருக்கும்.

முழு அரங்கையுமே தன் ஆட்டத்தால் அவன் வசம் இழுத்துக்கொண்டு விடுவான். மெல்ல மெல்ல நகர்ந்து மேடையை ஒட்டி முன்புறம் மேடைக்கு கீழே ஆடிக் கொண்டிருப்பான்.

களை கட்ட ஆரம்பிக்கும் கச்சேரி.

மேடையில் ஆடும் பெண்களை விட இவனது ஆட்டத்தினால் கவரப்பட்டு இவனுக்கு மாலைகள் விழ ஆரம்பித்த பொழுதுதான் இவர்களின் மேனேஜரால் கவனிக்கப்பட்டு, அவனை தினமும் அங்கு வரச்செய்வதற்கு தீட்டப்பட்ட வலையில் விழுந்தவள்தான் அமலா.

அதுவரை அவனாகவே நடனப் பெண்கள் யாரிடமும் பேசவோ, அவர்களின் மொபைல் எண்களைப் பெறவோ முயற்சித்ததில்லை. மேனேஜர் உத்தரவின் பேரில் ஒவ்வொருவராய் ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் டிஸ்யூ பேப்பரில் தன் மொபைல் நம்பரையும் பெயரையும் எழுதி அவனுக்கு அனுப்பத் தொடங்கினார்கள்.

அவர்களில் அதிர்ஷ்டம் அடித்தது அமலாவுக்குத்தான். அவளிடம் மட்டும் பேச ஆரம்பித்தான் அவன். அதோடு இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை வருபவன், தினமும் வரத் தொடங்கினான். அமலாவுக்கு அதனால் மௌசு கூடத் தொடங்கியது.

தினமும் குறைந்த பட்சம் வாங்கவேண்டிய மாலைகள் குறைந்தாலும் கண்டு கொள்ளாமல் விடப்பட்டாள். ஆனால் தினமும் அவன் வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவள் பொறுப்பு.

அமலாவும் அவனிடம் அதிகமாக குழைய ஆரம்பித்தாள். தினமும் நிகழ்ச்சி முடிந்து ஒரு மணிநேரம் போலக் கூட அவனோடு பேசிக்கொண்டிருப்பது மற்ற பெண்கள் மத்தியில் லேசான பொறாமையை எழுப்பலாயிற்று. ஆனால், அமலா அவள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். ஆனாலும், அவன் வராத நாட்களில், கேட்கப்படும் கேள்விகளை எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்க்க, அவள் தன் குழைவை நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டியிருந்தது.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக போய்க் கொண்டிருந்த விஷயம், சடாரென்று ஒரு நாள் அவன் தன்னை காதலிப்பதாக சொன்ன பொழுதில் இருந்து சற்று குழம்ப ஆரம்பித்தது.

அமலாவுக்கு இது புதிதல்ல. இதற்கு முன் ஆடிக் கொண்டிருந்த இடங்களில் எல்லாம் அவள் எதிர்கொண்டதுதான். இரண்டு மூன்று மணி நேரங்கள் குடித்த போதையில் அப்படி சொல்லிவிட்டு அடுத்த நாளே அதைப்பற்றிய எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் தங்கள் வழக்கமான ஆட்டத்தோடு குடித்துவிட்டுப் போன பலரை அவள் பார்த்திருக்கிறாள்.

இதுவும் அது போல ஒன்று என்று நினைத்தவளுக்கு அடுத்த நாள் வந்த அவனிடம் இருந்த மாற்றம் மேலும் குழப்பியது. வழக்கமான ஆட்டம் இல்லை. ஒரு ஆழ்ந்த அமைதியோடு அமர்ந்து கொண்டிருந்தவன், என்றைக்கும் இல்லாத அதிசயமாய் அன்று சீக்கிரமே அரங்கை விட்டு வெளியேறிப்போனான்.

அன்றைய நிகழ்ச்சி முடிந்ததும் தன் அறைக்குப் போனவள், மேக்கப்பைக் கூட கலைக்காமல் அவன் மொபைலுக்கு போன் போட்டாள். அந்தப் பக்கம் அடித்துக் கொண்டே இருந்தது மொபைல். திருப்பித்திருப்பி கூப்பிட்டுக்கொண்டே இருந்தாள்.

அழைப்பு எடுக்கப்படாமலே இருந்தது. அமலாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பதட்டம் கூட ஆரம்பித்தது. அறையில் இருந்த மற்ற தோழிகள் இவளது பதற்றத்தைப் பார்த்து தங்களுக்குள் சிரித்துக்கொள்வது வேறு எரிச்சலை தந்தது.

இவனது தொடர்ந்த வருகை, அதனால் மேனஜரிடம் இவளுக்கு இருந்துவரும் செல்வாக்கு இதையெல்லாம் முன் வைத்து நாம் கொஞ்சம் அதிகமாக அலட்டிக் கொண்டு விட்டோமோ?

இனிமேல் இவன் வருகை நின்று போனால், நமக்கும் எல்லோரையும் போல அட்வைஸ் மழை பொழிய ஆரம்பிக்குமோ? என்று எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தபோது அவளது மொபைல் ஒளிபெற்று ஒலிக்க ஆரம்பித்தது. ரகுதான்.

பட்டென்று போனை எடுத்து “ஹலோ” என்றாள்.

அந்தப் பக்கம் வெறும் மூச்சு விடும் சத்தம்.

“ஹலோ, என்னாச்சு உங்களுக்கு, ஏன் பாதியிலேயே எழுந்து போயீட்டீங்க”

….

“ஒடம்பு எதாச்சும் சரியில்லையா? என்னாச்சு சொல்லுங்க.”

….

“ஏன் ஒண்ணுமே பதில் பேசமாட்றீங்க…”

….

என் கூடப் பேசப் புடிக்கலியா? சரி போனை கட் பண்ணிடவா?”

“அப்படியில்ல அமலா. இனிமேல அந்தப் பக்கம் வரமாலே இருந்திறலாம்னு பார்க்கிறேன்.

“ஏன்?”

“சொன்னா உனக்குப் புரியுமான்னு தெரியல?”

“என்னன்னு சொல்லுங்க, சொன்னாத்தானே தெரியும்.”

“நேத்திக்கே உன்கிட்ட சொன்னதுதான்.”

“எது அந்த காதல் விசயமா?”

“ஆமாம்.”

“இதப் பாருங்க ரகு, நாங்க வந்திருக்கிறது ஒரு மூணு மாசம், எங்க வேலை மேடையில ஆடறது, எங்களுக்கு கிடைக்கிற சம்பளத்தை எதிர்பார்த்து எல்லாருக்கும் ஒரு குடும்பமே ஊர்லே காத்திருக்குது, வர்ற கஸ்டமரைப் பார்த்து சிரிச்சோ அழுதோ தினமும் அவங்களை இங்க வரவைக்கிறது எங்க வேலை. அதுல இந்த மாதிரி காதல் சொல்ற நிறைய பேரை என் அனுபவத்திலேயே நான் பார்த்திருக்கேன். ஆனா எல்லாமே ஒரு போதையில சொல்லிட்டு மறுநாளே சகஜமாய் வந்து குடிச்சிட்டுப் போய்டுவாங்க. “

“என்னையும் அந்த மாதிரி…”

“இருங்க இருங்க, நான் சொல்லி முடிச்சிர்றேன். நான் அந்த மாதிரி இல்லை, சீரியஸா லவ் பண்றேன் அப்படின்னு சொல்ல வர்றீங்க, ஓகே, சீரியஸ்னா என்ன மீண் பண்றீங்க? சரி, நாம காதலிக்கிறோம்னே வச்சிப்போம். எவ்வளவோ நாளைக்கி, அதுவும் எப்படி? இப்படி போன்லேயே வா? இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு நான் ஊருக்குப் போயுடுவேன், அப்புறம்?”

“உன் வீடு அட்ரஸ் குடு, நான் வந்து உங்க வீட்ல பேசறேன்.”

“என்னன்னு?”

“உன்னைக் கல்யாணம் பண்றதைப் பத்தி.”

அமலாவுக்கு நடப்பது எல்லாம் ஏதோ கனவு போல இருந்தது. சற்றே தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டாள். நிஜம்தான். அன்றைக்கு போனில் பேசியது, அதன் நீட்சியாய் தொடர்ந்த உரையாடல்கள், எல்லாம் தாண்டி இதோ, வீடு வரை வந்து, ஹாலில், உட்கார்ந்து கொண்டிருக்கும் ரகுவை பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இவளுக்கு மட்டுமல்ல. ஹாலின் பழைய சோபாவில் ரகுவிற்கு எதிரில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் அம்மாவிற்கும்தான்.

படுத்த படுக்கையாயிருந்த அம்மாவுக்கு புதுத்தெம்பு வந்தாற்போல் இருந்தது. ரொம்ப நாட்களுக்கு பிறகு எழுந்து உட்கார்ந்திருக்கிறாள் அம்மா. அமலாவின் கவலையெல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் கடையை அடைத்துவிட்டு வரப்போகும் தன் மாமன் (அம்மாவின் தம்பி) பாண்டியைக் குறித்தே இருந்தது. பாண்டி மாமாதான் அப்பா போன பிறகு அம்மாவையும் இவளையும் கவனித்து வருகிறான்.

ஆனால் அவள் எதிர்பார்த்தபடி எந்தப் பெரிய பிரச்சினையுமின்றி சில பல நிபந்தனைகளோடு (அதை பாண்டி மாமா ரகுவோடு தனியே பேசிக்கொண்டார்) ரகுவோடு அவள் கல்யாணம் கோவில் ஒன்றில் வைத்து நடந்தேறியது.

திருமணம் முடிந்து ஒரு மாதம் அவர்களோடு தங்கியிருந்தான் ரகு. பின் மாதாமாதம் செலவுகளுக்கு தான் பணம் அனுப்புவதாகவும், கூடிய விரைவில் விசா எடுத்து அவளை அழைத்துக் கொண்டு போவதாகவும் சொல்லி விட்டு துபாய் கிளம்பிப் போனான்.

ஆனால் அடுத்த ஒரே மாதத்தில் அபுதாபியில் ஒரு இரவு விடுதியில், நண்பர்களோடு வாரக்கடைசியைக் கழிக்க உள்ளே நுழைந்தவன், மேடையில் இங்கு இப்படி அமலாவைக் காண்போம் என்று சத்தியமாய் நினைக்கவில்லை ரகு.

– ஆகஸ்ட் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *