கரோலினா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 4,409 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விரலைக் கண்டபின்னரும் மீட்டப்பட அனுமதிக்காமல், வீணை என் தலையை வருடிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. நான் காய்ந்த மாடு இல்லை என்பதாலும், கரையை நெருங்கும் நேரத்தில் பொறுமைக் காத்தால், தாழி வெண்ணெய் முழுமையாகக் கிடைக்கும் என்பதாலும் கரோலினாவின் பேச்சை உண்மையிலேயே ரசித்துக் கொண்டிருந்தேன்.

என்னைப் பொருத்தவரை இரண்டு வகையான பெண்கள். அழகிகள், பேரழகிகள் .., என்னை மதித்து பேசுபவர்கள் பேரழகிகள். ஒருநாள் ஏதோ ஒரு டேட்டிங் இணையதளத்தில் காற்று வாங்கிக் கொண்டிருந்தபொழுது கவிதையாக வந்த பேரழகிதான் கரோலினா. பத்து நாட்கள் மின்னரட்டையில் பேசினோம், ஒரிரவு அவளைச் சந்திக்க முடிவு செய்தேன். அதோ அந்த இரவைத் தான் இப்பொழுது கடத்திக்கொண்டிருக்கின்றேன் !!!

வார இறுதியில் மாதிரி விமானம் ஒன்றில் விமானம் ஓட்டப்பழக திட்டமிட்டிருந்ததை ஒத்திவைத்துவிட்டு 14 மணிநேரம் ரயில் பயணத்திற்குப்பின்னர் இவளைச் சந்திக்க வந்திருப்பதன் மூலம் எனது தேவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இசை, இந்தியா, பாலிவுட், வண்ணங்கள் என்று பேசிக்கொண்டிருந்தவளை காமத்தை நோக்கி மாற்ற,

“உன்னுடைய மறக்க முடியாத முத்தம் எது?”

அமைதியாக இருந்தாள்.

“முத்தங்கள் கொடுத்து இருக்கிறாயா?”

பொய்யாக முறைத்தாள்.

“பதினான்கு வயதில், முதன் முதலாக என் சம வயது இத்தாலிய நண்பனுக்கு கொடுத்து இருக்கின்றேன்”

“இடம், பொருள், ஏவல்”

“என் குடும்பத்தினருடன் குரோசியா கடற்கரை நகரம் ஒன்றிற்கு சுற்றுலாப்போய் இருந்தோம், இரண்டு வாரங்கள், கடலோரத்தில் தனி வீடு, சில மீட்டர் தூரத்தில் இருந்த வீட்டில் ஓர் இத்தாலியக் குடும்பம், அவர்களின் மூத்த மகன் ஸ்டெபனோ, நீ இருக்கும் ரோம் நகரத்தைச் சேர்ந்தவன் தான்…”

“ம்ம்ம்”

“எனக்கு இத்தாலியனும் தெரியாது, அவனுக்கு ஜெர்மனும் தெரியாது. எங்களுக்குப் பொதுவாகத் தெரிந்தது பத்து பதினைந்து ஆங்கில வார்த்தைகள் தான், கள்ளங்கபடமற்ற முதல் காதலுக்கு மொழித் தேவையில்லை என்பதை அன்றுதான் உணர்ந்து கொண்டேன்”

“ம்ம்ம்”

“அவன் அப்பா இத்தாலியைச் சேர்ந்தவர், அம்மா ஸ்விடீஷ்,.., இத்தாலிய பதின்ம மிடுக்கும், அவன் அம்மாவின் பூனைக் கண்களும், விளையாட்டில் விட்டுக்கொடுத்தலும் அவன் மேல் காதல் வயப்பட வைத்துவிட்டது. கடைசி நாளன்று அவனை முத்தமிட்டதுதான் என் வாழ்நாளில் மறக்க முடியாதது, அதன் பின்னர் நூற்றுக்கணக்கான முத்தங்கள் என்னுடைய ஆண் தோழர்களிடம் இருந்து பெற்று இருந்தாலும், அந்த முதல் முத்தத்திற்கு ஏதும் ஈடு இணையாகாது”

தமிழ்நாட்டில் இருந்த பொழுது, என்னுடைய முதல் முத்தம் அம்முவின் உதட்டைக் கடித்து வைத்ததில் வன்முறையாக முடிந்துப்போனது.

“அவனை அந்த விடுமுறைக்குப் பின்னர் தொடர்பு கொண்டாயா”

“இரண்டு வருடங்கள் கடிதங்கள் பரிமாறிக்கொண்டோம், பின்னர் எனது பெற்றோர் விவாகரத்துப் பெற்றவுடன் எல்லாமே மாறிப்போய்விட்டது, அம்மாவும் நானும் வியன்னா வந்துவிட்டொம், தொடர்பு போய்விட்டது”

“ஆர்குட், பேஸ்புக் என எத்தனையோ இருக்கின்றதே, அவனின் முழுப்பெயர் நினைவு இருக்கிறதா,”

“அவனுடையப் பெயர் வித்தியாசமனது, இத்தாலிய ஸ்விடீஷ் கலப்புப் பெயர், ஸ்டெபனோ ஆண்டர்சன், அவன் அப்பா ஒரு விமானி, அவனுக்கும் விமானியாக வேண்டும் என்பதுதான் ஆசை,”

உலகத்தில் ஒரு நபரை மற்றொரு நபருடன் தொடர்புப்படுத்த, அதிக பட்சம் ஏழு பேர்கள்தான் தேவை என்று எங்கோப் படித்தது நினைவுக்கு வந்தது. நான் விமான ஓட்டப்பழகப்போகும் பயிற்சியாளரின் பெயரும் ஸ்டெபனோ ஆண்டர்சன் தான். அவனுக்கும் ஏறத்தாழ கரோலினாவின் வயதுதான். ஒரு வேளை அவனாக இருக்குமோ!!!

“ஸ்டெபனோவை இணையத்தில் கண்டுபிடிக்க விருப்பமில்லை, ஏதோ ஒரு நாள் அவனை நேரில், உலகத்தில் எந்த மூலையிலாவது ஏதேச்சையாக சந்திப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. பேசிப்பழகிய பத்து நாட்களில் உன்னைச் சந்திக்க விருப்பம் காட்டியது கூட, நீ ரோமில் வசிப்பதுதான், யார் கண்டது உன் நட்புக்கூட அவனை சந்திக்க வழிவகை செய்யலாம்”

மறுநாள் காலை ஸ்டெபனோ ஆண்டர்சனைப் பற்றி கரோலினாவிடம் சொல்லலாம் என்று நினைத்தபடி, அவளுடன் கொஞ்சம் மது அருந்தினேன். கடந்த பத்து வருடங்களில் கற்றறிந்த வன்முறையற்ற முத்தங்கள் கொடுத்தேன்.

இதற்கு மேல், பழையத் தமிழ் சினிமாக்களில் காட்டுவதுபோல பூவுடன் பூ உரசிக்கொள்வதை, பறவைகள் கொஞ்சிக்கொள்வதை, பாம்புகள் பின்னிப்பிணைந்து கொள்வதை எல்லாம் கற்பனை செய்து கொள்ளுங்கள். வீரேந்திர சேவக் போல அதிரடியாக டிரிபிள் செஞ்சிரி எல்லாம் அடிக்கவில்லை என்றாலும், திராவிடைப்போல நிதானமாக இரட்டை சதம் அடித்து இருந்தேன். விடியலுக்கு முன்னர், நெஞ்சில் தலைவத்து படுத்திருந்தவளை தோளைச் சுற்றி அணைத்து இருந்தேன்.

“கார்த்தி, என்னுடைய பழைய ஆண் தோழர்கள் கொடுக்காத பாதுகாப்பு உணர்வை, உன் அணைப்பில் உணர்கின்றேன்”

அவளின் நெற்றியில் முத்தமிட்டேன்..

“நான் கொடுத்த கடைசி முத்தங்கள் ஸ்டெபனோவின் நினைவின்றி உனக்குக் கொடுக்கப்பட்டவை”

மௌனமாக இருந்தேன்.

“நன்றி” என்றாள், அவளின் நன்றி உடல் மனம் எண்ணம் மூன்றும் பூரணமடைந்திருந்ததை அவளின் கண்களின் வழியேக் காட்டியது. படுக்கையில் என்னிடம் நன்றி சொன்ன முதல் பெண் கரோலினாதான்.

மறுநாள் கரோலினாவிடம், எனதுப் பயிற்சியாளர் ஸ்டெபனோவைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. விமானம் ஓட்டும் பயிற்சியில் இருந்து விலகிக்கொள்கிறேன் ஸ்டெபனோவுக்கு மின்னஞ்சல் செய்துவிட்டேன்.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *