கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 8, 2023
பார்வையிட்டோர்: 1,562 
 

(1950ல் வெளியான நாவல் , ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1. முதல் அத்தியாயம் | 2. இரண்டாம் அத்தியாயம் | 3. மூன்றாம் அத்தியாயம்

அந்த ஸ்திரீ புருஷர்கள் சதிபதிகளாய்த்தான் இருக்க வேண்டும்; அல்லது கலியாணமாகாத காதலர்களாகவும் இருக்கலாம். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டபோது, அவர்களுடைய கண்களில் கரை காணா காதல் வெள்ளம் பொங்கியது.

அந்த யுவன் பேசிய மொழியிலிருந்து, அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் ஊகிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் இங்கே எப்போது வந்தார்கள்? நான் வந்த கப்பலில் அவர்கள் வரவில்லையென்பது நிச்சயம். பின்னர், எப்படி வந்திருப்பார்கள்? இம்மாதிரி நாட்டியமாடும் தம்பதிகளைப்போல் அவர்கள் விசித்திரமான ஆடை ஆபரணங்களைத் தரித்திருப்பதன் காரணம் என்ன? ஏதாவது ஒரு நடனகோஷ்டியில் இவர்கள் சேர்ந்தவர்களாயிருந்து, ஒருவரோடொருவர் தகுதியில்லாத காதல் கொண்டு, உலக அபவாதத்துக்கு அஞ்சி இவ்விடம் ஓடி வந்திருப்பார்களோ? இன்னொரு யோசனையும் என் மனத்தில் உதயமாயிற்று. ஒரு வேளை சினிமாப் படம் பிடிக்கும் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் யாராவது இந்தப் பழைய பாழடைந்த சிற்பக்காட்சிகளுக்கு மத்தியில் படம் பிடிப்பதற்காக வந்திருப்பார்களா? அப்படியானால் கப்பலோ, படகோ, இத்தீவையொட்டி நிற்க வேண்டுமே? அப்படி யொன்றும் நாம் பார்க்கவில்லையே? இவ்விதம் மனத்திற்குள் பற்பல எண்ணங்கள் மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்தன.

நான் மௌனம் சாதித்தது அந்த இளைஞனுக்குக் கொஞ்சம் வியப்பளித்திருக்க வேண்டும். இன்னொரு தடவை என்னை உற்றுப் பார்த்து விட்டு, “தங்களுடைய முகத்தைப் பார்த்தால் தமிழர் என்று தோன்றுகிறது. என் ஊகம் உண்மைதானா?” என்றான்.

அதற்கு மேல் நான் பேசாமலிருப்பதற்கு நியாயம் ஒன்றுமில்லை. பேசும் சக்தியையும் இதற்குள்ளே என் நா பெற்றுவிட்டது.

“ஆம் ஐயா! நான் தமிழன் தான். நீங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று காணப்படுகிறது! அப்படித்தானே!” என்றேன்.

“ஆம்; நாங்களும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களே. ஆனால், நாங்கள் தமிழ் நாட்டைப் பற்றிய செய்தி கேட்டு வெகுகாலம் ஆயிற்று. ஆகையால் தங்களைப் பார்த்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.”

“நீங்கள் எப்போது இந்தத் தீவுக்கு வந்தீர்களோ?”

“நாங்கள் வந்து எத்தனையோ காலம் ஆயிற்று. ஒரு யுகம் மாதிரி தோன்றுகிறது. ஒரு நிமிஷம் என்றும் தோன்றுகிறது. தாங்கள் இன்றைக்கு தான் வந்தீர்கள் போலிருக்கிறது. அதோ தெரிகிறதே அந்தக் கப்பலில் வந்தீர்களோ? அடே அப்பா எத்தனை பெரிய கப்பல்?”

“ஆம்! அந்தக் கப்பலிலேதான் வந்தேன். ஆனால், இந்தக் கப்பலை அவ்வளவு பெரிய கப்பல் என்று நான் சொல்லமாட்டேன்…”

“அழகாய்த்தானிருக்கிறது. இது பெரிய கப்பல் இல்லையென்று சொன்னால் எப்படி நம்புவது? எனக்குத் தெரியும்; தமிழர்கள் எப்போதும் தாங்கள் செய்யும் காரியத்தைக் குறைத்துச் சொல்வது வழக்கம்…”

அந்தக் கப்பல் அப்படியொன்றும் தமிழர்கள் சாதித்த காரியம் அல்லவென்றும், யாரோ வெள்ளைக்காரர்கள் செய்து அனுப்பியது என்றும் சொல்ல விரும்பினேன். ஆனால், அந்த யுவன் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

“இந்தக் கப்பல் எங்கேயிருந்து புறப்பட்டது? எங்கே போகிறது? இதில் யார் யார் இருக்கிறார்கள்? இங்கே எத்தனை காலம் தங்கியிருக்க உத்தேசம்?” என்று மளமளவென்று கேள்விகளைப் பொழிந்தான்.

“பர்மாவிலிருந்து தமிழ் நாட்டுக்குப் போகிற கப்பல் இது. சுமார் ஆயிரம் பேர் இதில் இருக்கிறார்கள். யுத்தம் பர்மாவை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது அல்லவா? அதனால் பர்மாவிலிருந்த தமிழர்கள் எல்லாரும் திரும்பித் தமிழ்நாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்…”

“என்ன? பர்மாவை நெருங்கி யுத்தம் வந்தால், அதற்காகத் தமிழர்கள் பர்மாவிலிருந்து கிளம்புவானேன்? தமிழ் நாட்டின் நிலை அப்படி ஆகிவிட்டதா, என்ன? யுத்தத்தைக் கண்டு தமிழர்கள் பயப்படும் காலம் வந்து விட்டதா?”

அந்த யௌவன புருஷனின் கேள்வி என்னைக் கொஞ்சம் திகைக்க வைத்து விட்டது. என்ன பதில் சொல்வது என்று யோசிப்பதற்குள், இத்தனை நேரமும் மௌனமாயிருந்த அந்த நங்கை குறுக்கிட்டு, வீணாகானத்தையும் விட இனிமையான குரலில், “அப்படியானால் தமிழ் நாட்டவர் புத்திசாலிகளாகி விட்டார்கள் என்று சொல்ல வேண்டும். யுத்தம் என்ற பெயரால் ஒருவரையொருவர் கொன்று மடிவதில் என்ன பெருமை இருக்கிறது? அல்லது அதில் சந்தோஷந்தான் என்ன இருக்க முடியும்?” என்றாள்.

அந்த யுவன், புன்னகை பொங்கிய முகத்தோடும், அன்பு ததும்பிய கண்களோடும் தன் காதலியைப் பார்த்து, “ஓகோ! உன்னுடைய விதண்டாவாதத்தை அதற்குள்ளே தொடங்கி விட்டாயா?” என்றான்.

“சரி, நான் பேசுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் வாயை மூடிக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னாள் அந்தப் பெண்.

“என் கண்மணி! உன் பேச்சு எனக்குப் பிடிக்காமற் போகுமா? உன் பவழ வாயிலிருந்து வரும் அமுத மொழிகளைப் பருகியேயல்லவா நான் இத்தனை காலமும் காலட்சேபம் நடத்தி வருகிறேன்?” என்று அந்த யுவன் கூறிய சொற்கள், உண்மை உள்ளத்திலிருந்து வந்தவை என்பது நன்கு தெரிந்தது. ஆனால், ‘இவர்கள் என்ன இப்படி நாடகப் பாத்திரங்கள் பேசுவதைப் போலப் பேசுகிறார்கள்? இவர்கள் யாராயிருக்கும்?’ – அதை அறிந்து கொள்ளுவதற்கு என்னுடைய ஆர்வம் வளர்ந்தது.

“நீங்கள் யார், இங்கே எப்போது வந்தீர்கள் என்று, இன்னும் நீங்கள் சொல்லவில்லையே?” என்றேன்.

“அது பெரிய கதை!” என்றான் அந்த இளைஞன்.

“பெரிய கதையாயிருந்தால் இருக்கட்டுமே! எனக்கு வேண்டிய அவகாசம் இருக்கிறது. இனிமேல் நாளைக் காலையிலே தான் கப்பலுக்குப் போக வேண்டும். இராத்திரியில் எனக்குச் சீக்கிரம் தூக்கம் வராது. உங்களுடைய கதையை விவரமாகச் சொல்லுங்கள், கேட்கிறேன். அதைக் காட்டிலும் எனக்குச் சந்தோஷமளிப்பது வேறொன்றுமில்லை.”

அந்த நங்கை குறுக்கிட்டு, “அவர் தான் கேட்கிறார். சொல்லுங்களேன்! நமக்கும் ஓர் இரவு பொழுது போனதாகும். இந்த மோகன வெண்ணிலாவை ஏன் வீணாக்க வேண்டும்? எல்லாரும் இந்தப் பாறையில் உட்கார்ந்து கொள்ளலாம். உட்கார்ந்தபடி கதை சொல்லுவதும், கதை கேட்பதும் சௌகரியமல்லவா?” என்றாள்.

“எல்லாம் சௌகரியந்தான். ஆனால், நீ என்னைக் கதை சொல்லும்படி விட்டால் தானே? இடையிடையே நீ குறுக்கிட்டுச் சொல்ல ஆரம்பித்து விடுவாய்…” “ஒன்றும் குறுக்கிடமாட்டேன். நீங்கள் ஏதாவது ஞாபக் மறதியாக விட்டுவிட்டால் மறந்ததை எடுத்துக் கொடுப்பேன். அது கூட ஒரு பிசகா?” என்றாள் அந்தப் பெண்.

“பிசகா? ஒரு நாளும் இல்லை. உன்னுடைய காரியத்தைப் பிசகு என்று சொல்வதற்கு நான் என்ன பிரம்மதேவரிடம் வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேனா? நீ எது செய்தாலும் அது தான் சரி. இருந்தாலும், அடிக்கடி குறுக்கிட்டுப் பேசாமல் என் போக்கில் கதை சொல்ல விட்டாயானால் நன்றாயிருக்கும்.”

இப்படிச் சொல்லிக் கொண்டே, அந்த யுவன் பாறையில் உட்கார, யுவதியும் அவன் அருகில் உட்கார்ந்து அவனுடைய ஒரு தோளின் மேல் தன்னுடைய கை ஒன்றைப் போட்டுக் கொண்டாள். அந்தச் சிறு செயலில், அவர்களுடைய அன்யோன்ய தாம்பத்ய வாழ்க்கையின் பெருமை முழுதும் நன்கு வெளியாயிற்று.

அவர்களுக்கு அருகிலே நானும் உட்கார்ந்தேன். ஏதோ ஓர் அதிசயமான அபூர்வமான வரலாற்றைக் கேட்கப் போகிறோம் என்ற எண்ணத்தினால் என் உள்ளம் பரபரப்பை அடைந்திருந்தது. கடல் ஓடையில் காத்திருந்த கப்பலையும், அதற்கு வந்த அபாயத்தையும், பர்மா யுத்தத்தையும், அதிலிருந்து தப்பி வந்ததையும் அடியோடு மறந்துவிட்டேன். அழகே உருக்கொண்டே அந்தக் காதலர்களின் கதையைக் கேட்க, அளவிலாத ஆவல் கொண்டேன்.

காற்று முன்னைக் காட்டிலும் கொஞ்சம் வேகத்தை அடைந்து, ‘விர்’ என்று வீசிற்று. தீவிலிருந்த மரங்களெல்லாம் அசைந்தபடி ‘மரமர’ சப்தத்தை உண்டாக்கின. இப்போது கடலிலும் கொஞ்சம் ஆரவாரம் அதிகமாயிருந்தது. கடல் அலைகளின் குமுறல் தூரத்தில் எங்கேயோ சிம்மம் கர்ஜனை செய்வது போன்ற ஓசையை எழுப்பியது.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *