மனோரஞ்சிதம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 8,033 
 

நான் மனோரஞ்சிதத்தை மீண்டுமொரு முறை சந்திப்பேனென்று எண்ணியிருக்கவேயில்லை. அதுவும் இவ்விதம் எதிர்பாராமல். இருபது வருடங்களாவதிருக்கும் அவளைக் கடையாகச் சந்தித்து..முன்பை விட இன்னும் தளதளவென்று பூசி மெழுகி மின்னிக் கொண்டிருந்தாள். அழகென்றால் அப்படியொரு அழகு. சங்ககாலக் கவிஞர்கள் வர்ணிப்பதைப் போல் பணை, வன, தட, பருத்த, அகன்ற போன்ற வார்த்தைகளைத் தாராளமாகவே பாவிக்கலாம் அவளை வர்ணிப்பதற்கு. அவ்விதமானதொரு உருவ அமைப்பு. அப்பொழுது நான் மிகவும் கட்டுப்பெட்டி என்று சொல்வார்களே அவ்விதமானதொரு குண அமைப்பு எனக்கு. என் வாழ்வில் எப்பொழுதுமேயே நிதானமானதொரு வளர்ச்சி தான் ஏற்பட்டு வந்திருக்கின்றது. நிதானமென்றால் அப்படியொரு நிதானம். ஒவ்வொரு மட்டத்திலும் ஆற அமர நின்று நிதானித்து உணர்ந்து அறிந்து வந்திருக்கின்றேன் என் வாசிப்புப் பழக்கத்தைப் போல். ஆரம்பத்தில் அம்புலிமாமாவில் மண்டுகோட்டை மந்திரவாதியில் நிதானமாக ஆரம்பித்துப் பின் அறுபது சதத் துப்பறியும் நாவல்களில் மேதாவி, சிரஞ்சீவி, பிடிசாமி, சந்திரமோகனென்று உழன்று, மணியன், அகிலன், ஜெகசிற்பியன், கார்க்கி, டால்ஸ்டாய், தி.ஜா, சு.ரா,காவ்கா..வென்று நிதானமாகவே வளர்ந்து வந்திருக்கின்றது. வளர்ச்சியென்பது பரிணாமவளர்ச்சியாகவே அமைந்து வந்திருக்கின்றது. திடீர்ப்பாய்ச்சல் என்பதெல்லாம் என் வாழ்வில் கிடையவே கிடையாது. என் அரசியல் பற்றிய கருதுகோள்களும் இவ்விதமாகத் தான்…ஆண்ட இனம் மீண்டும் ஆள நினப்பதில் தவறென்ன என்ற தமிழரசுக் கட்சியினரின் ஆவேசத்துடன் ஆரம்பித்துப் பின் படிப்படியாக மார்க்ஸ்,லெனின்,….என வளர்ந்து வந்திருக்கின்றது. என் வாழ்வில் மனோரஞ்சிதம் எதிர்ப்பட்ட காலகட்டத்தில் நான் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பில் பயின்று கொண்டிருந்தேன். என்னுடன் ‘டியூசன்’ வகுப்பில் சக மாணவியாக அறிமுகமானவள் தாள் மனோரஞ்சிதம். அப்பொழுதெல்லாம் நான் நான் பண்பாடு, கலாச்சாரம் ,கற்பு, …..என்று சிந்தனையோட்டங்களில் வளைய வந்து கொண்டிருந்த காலம். மனோரஞ்சிதமோ சிட்டுக் குருவியாகச் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தாள். அவளது சிந்தனையோட்டங்கள் எனக்கு மலைப்பை மட்டுமல்ல ஒருவித ஆத்திரத்தையும் ஏற்படுத்தின. பெண் என்றால் இவ்விதம் தான் இருக்க வேண்டுமென்று சில வரையறைகளை நான் வைத்துக் கொண்டிருந்தேன் ‘இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பிளை. இங்கிலீசு படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே..’ என்று வாத்தியார் பாடுவாரே அது போல. சக மாணவர்களுடன் சகஜமாகச் சிரித்துச் சிரித்துப் பழகும் அவளது போக்கு எனக்கு ஒரு வித எரிச்சலைத் தந்து கொண்டிருந்தது. இதனால் உள்ளூர அவளது அழகு என்னைப் படாத பாடு படுத்திக் கொண்டிருந்த போதும் எட்டியே இருந்து வந்தேன் என் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி. எத்தனை முறை நானும் இவளும் சண்டை பிடித்திருப்போம். ‘ஆணுக்கொரு நியாயம். பெண்ணுக்கொரு நியாயமா? தாலி பெண்ணுக்குச் சுதந்திரத்தை அடக்கி வைக்கப் பாவிக்கின்றதொரு வேலி’ என்று அடிக்கடி வாதிக்கும் மனோரஞ்சிதத்தை என்னால் ஏற்கவே முடிந்ததில்லை. ‘கற்பு பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு’ என்று அவள் குற்றஞ் சாட்டுவதை என்றுமே நான் ஏற்றதில்லை. பதிலுக்கு ‘பாரதியின் புதுமைப்பெண்ணென்று உனக்கு நினைப்போ?’ என்று அவளைச் சீண்டுவேன். ‘கற்பு என்பது இருவருக்கும் பொது. ஆண் தவறு செய்தால் பெண்ணும் தவறு செய்ய வேண்டுமா?’ என்று பதிலுக்கு வாதிப்பேன். ஆனால் மனோரஞ்சிதமோ அவற்றையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டாள். ‘நீ ஒரு சரியான Male Chauvanist’ என்று வைவாள்.

மனோரஞ்சிதம் பாடும் போது மிகவும் இனிமையாகவிருக்கும். அவளது உடல் வளம் மட்டுமல்ல குரல் வளமும் அனைவரையும் வசியம் செய்து மயக்கி விடும். குறிப்பாக அவள் ‘அமுதைப் பொழியும் நிலவே’ , ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ போன்ற அன்றைய பி.சுசீலாவின் பாடல்களைப் பாடும் பொழுது எவ்வளவு நேரமானாலும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அப்படியே உருகிக் குழைந்து மனமொன்றிப்பாடுவாள். அவளது அழகும் குரல் வளமும் ‘கோழி கூவத்தொடங்கியிருந்த’ பருவத்திலிருந்த என்னைப் படாத பாடு படுத்தின. ஆனால் நான் கோட்பாடுகளை மையமாகவைத்து வாழ்வினை நடத்துபவன். நானாக உணரும் வரையில், உணர்ந்து அறிந்து தெளிவு பெறும் வரையில் பிடித்துக் கொண்டிருக்கின்ற கோட்பாட்டினை விட்டு விட்டு ஓடுவதென்பது என்னால் முடியாத செயல்.

அவளை எவ்வளவுக்கெவ்வளவு நான் உணர்வுகளின் அடிப்படையில் விரும்பினேனோ அவ்வளவுக்கவ்வளவு என் சிந்தனையோட்டங்கள், கருதுகோள்கள் அடிப்படையில் வெறுத்தேனென்று தான் கூற வேண்டும்.

அவளுக்குக் கவிதையென்றால் உயிர். நானோ அந்தக் காலத்தில் கவிதைகளென்று என் அன்றைய மனநிலையோட்டங்களைக் கிறுக்கிக் கொண்டிருந்தேன். என் கவிதைகளின் கருப்பொருளாகப் பெண், பண்பாடு, கற்பு, காதல் போன்ற பழமைத்துவமான கருத்துகளே நிறைந்திருக்கும். யாரோ சிலர் அவளிடம் நான் இவ்விதம் கவிதைகள் எழுதுவதைக் கூறி விட அவள் என்னிடம் ‘காதல்’ பற்றி உடனடியாகக் கவிதையொன்றைப் பாடுமாறு சவால் விடவே நானும் வரகவியொருவனைப் போல் ஏற்கனவே என் மனதில் உருவாகியிருந்த காதல் பற்றிய கவிதையொன்றை அள்ளி விட்டேன். ‘ஓர்நாள் அவள் முகம் காணாவிடில் மனமொடிந்து ஓரத்தே முடங்குவதும், உன் கூர்விழிகள் முன்னால் மன்னவன் கூர் வேலென்ன வேலென்ன என மயங்குவதும், கார் குழல் நங்கையர் மேல் கண்ட காதலினாலன்றி வேறெதனால்?’ என்று அந்தக் கவிதை அமைந்திருந்தது. இருபதாம் நூற்றாண்டிலிருந்து கொண்டு ‘மன்னவன் கூர்வேல்’ பற்றிப் பாடியிருந்தேன். அந்த அப்பாவிப் பெண்ணோ அதனைக் கேட்டு உருகியே விட்டாள். சிறிது காலம் அதன் விளைவாக என் பின்னால் சுற்றிக் கொண்டேயிருந்தாள். அவள் உண்மையில் அவ்விதம் சுற்றிக் கொண்டிருந்தாளா அல்லது நான் தான் அவ்விதம் கற்பனை செய்து கோண்டிருந்தேனோ என்பதில் இன்று வரையில் எம்னக்கொரு சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் அவள் செயல்கள், பேச்சு முதலியவற்றை வைத்து நான் அவ்விதம் எண்ணிக் கொள்வதற்கு எனக்கு நியாயமான காரணங்கள் இருக்கத்தான் செய்தன. ஆனால் அடிக்கடி அவள் ஆண் நண்பர்களை மாற்றிக் கொண்டிருந்தாள். அவளுடன் ஒருமுறையாவது பழகினால் அதுவே ஜென்ம சாபல்யம் என்பது போல் நாண்பர்களும் அவள் பின்னால் அடிக்கடி சுற்றிக் கொண்டேயிருந்தார்கள். அவளால் கைவிடப்பட்டவர்களும் சரி, மற்றவர்களும் சரி ஒருமுறையாவது அவள் பொருட்டுச் சண்டைகள் போட்டதென்பது கிடையாது என்பதுதான் அதிசயமான விடயம்.

இத்தனை வருடங்கள் கழித்து, புலம் பெயர்ந்த சூழலில், டொராண்டோ மாநகரில் ஆலயமொன்றில் அவளைத் தற்செயலாகச் சந்தித்த பொழுது எனக்கு ஆச்சர்யத்துடன் பழைய சம்பவங்களும் ஞாபகத்தில் வந்தன. இந்த இடைப்பட்ட காலத்தில் நான் மிகவும் அதிகமாகவே பரினாமம் அடைந்திருந்தேன். பெண்ணியம் பற்றிய தீவிரமான கருதுகோள்கள் என்னை ஆட்கொண்டிருந்தன. ‘கற்பு’ என்பது பெண்ணடிமைத்தனமென்பதில் எந்தவிதச் சந்தேகமுமற்றதொரு நிலைக்கு மாறியிருந்தேன். இத்தனைக்கும் என் மனைவி மிகவும் எதிர்மாறான கருத்துகளைக் கொண்டிருந்தாள். ஆலயம் அது இதென்று அலைந்து கொண்டிருப்பவள். ஆனால் அதற்காக அவள் மேல் என் கருத்துகளைத் திணிப்பவனல்ல. அவள் சுயத்தினை, கருத்துகளை மதிப்பவன். அதனால் தான் ஆலயமே செல்லாத நான் அவளை ஆலயத்தில் இறக்கி விட்டு, வெளியில் வாகனத் தரிப்பிடத்தில் அவளுக்காகக் காத்திருந்தேன். அவ்விதம் காத்திருந்த சந்தர்ப்பமொன்றில் தான் நான் மனோரஞ்சிதத்தை மறுபடியும் என் வாழ்வில் சந்தித்திருந்தேன். ஜீன்சும், டீசேர்ட்டுமாக மிகவும் நாகரிகமாகத் திரிந்து கொண்டிருந்த மனோரஞ்சிதம் காஞ்சிபுரப்பட்டில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். பல ‘பவுண்’களில் மின்னிய தாலியைத் தெரியும்படியாகத் தொங்க விட்டிருந்தாள்.. மூக்குத்தி மூக்கில். கையில் அர்ச்சனைத் தட்டு. பின்னால் சிறிது தள்ளி அவளது கணவர் குழந்தையுடன் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராமல் கண்டதும் சிறிது திகைப்புடன் ஆச்சரியமும் கலக்கவே வார்த்தைகள் தாமதமாகவே வெளிவந்தன.

‘மனோரஞ்சிதமா..நம்பவே முடியவில்லை.’ என்றேன். ஒரு கணம் அவளது முகத்திலும் பழைய நினைவுகள் படர்ந்து என்னை இனங்கண்டுகொண்ட உணர்வுகளோடின. ‘யார். கருணாகரனா!’ என்று சிறிது வியந்தாள். ‘நல்லாப் பழுதாகிப் போனீர்கள். என்ன குடும்பப் பாரமா?’ என்று இலேசாகச் சிரித்தாள். இன்னும் அதே மாதிரித்தான் பேசுகின்றாள். இந்தக் குறும்புத்தனமான பேச்சு அவளது முக்கியமான சுபாவம். ‘நீர் முன்பை விட இன்னும் அழகாகவிருக்கின்றீர்’ என்று பதிலுக்குச் சிரித்தேன். ‘தாங்ஸ்’ என்று சிறிது நாணினாள். ‘நம்பவே முடியவில்லை. மனோரஞ்சிதம் கோயிலிலா ‘என்றேன். பதிலுக்கு மனோரஞ்சிதம் சிரித்தாள். ‘குழந்தைகளுக்கு எங்களது பண்பாட்டையெல்லாம் பழக்க வேண்டாமா’ என்றாள். அத்துடன் பின்னால் வந்து கொண்டிருந்த தனது கணவரிடம் ‘இவர் கருணாகரன். என் பாடசாலை நண்பர்’ என்று அறிமுகப்படுத்தினாள். ஒரு காலத்தில் ‘தாலி பெண்ணின் சுதந்திரத்தை மறுக்கும் வேலி”யென்று முழங்கியவளைத் தாலியும் காஞ்சிபுரப்பட்டுமாக மேற்கு நாடொன்றில் இந்துக் கோயிலொன்றில் சந்திப்பேனென்று நான் நினைத்திருக்கவேயில்லை. காலத்தின் கோலத்தை எண்ண வியப்பாகவும் சிரிப்பாகவுமிருந்தது. ‘பண்பாடு. பண்பாடு’ என்று முழங்கிய நானும் அதற்கு எதிராக முழங்கிய அவளும் முற்றிலும் மாறானதொரு எதிர் எதிரானதொரு சூழலில் மீண்டும் சந்தித்திருக்கின்றோம். ஒவ்வொரு முறை மனோரஞ்சிதம் என் வாழ்வில் எதிர்ப்படும் சமயங்களிலெல்லாம் ஒருவருக்கொருவர் முரண்பட்டு நிற்க வேண்டுமென்பதிலிருந்த முரண்நகையினை எண்ணிச் சிரிப்பு வந்தது. ஆலயத்திலிருந்து குழந்தையுடன் வந்து கொண்டிருந்த என் மனைவி கேட்டாள். ‘யாரவள்? உங்களுடைய பழைய காதலியா?’ இன்னும் சிறிது காலத்துக்கு என்னுடன் மோதுவதற்கு என் மனைவிக்கு புதியதொரு கருப்பொருள் கிடைத்து விட்டது.

நன்றி: மானசரோவர்.காம் (மே, 2003)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *