பொன்னியின் செல்வன்

0
கதையாசிரியர்: ,
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 2,995 
 
 

(2012ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

71 -80 | 81-84

81. மணிமேகலையைக் காப்பாற்று

வந்தியத்தேவன் மிக்க மனச் சோர்வு அடைந்திருந்தான். வீர தீரச் செயல்கள் புரிந்து உலகத்தையே பிரமிக்க வைக்க வேண்டும் என்னும் ஆர்வம் கொண்டிருந்தவனுக்குப் பலரும் தன்னைப் பார்த்துப் பரிதாபம் கொள்ளும்படியான நிலையில் இருந்தது சிறிதும் பிடிக்கவில்லை. பாதாளச் சிறையைக் காட்டிலும் அரண்மனை அந்தபுரத்துச் சிறை கொடியதாக அவனுக்குத் தோன்றியது. பொன்னியின் செல்வரின் தயவினால் அவன் பேரில் கரிகாலரைக் கொன்ற குற்றத்தைச் சுமத்தாமலும், அதற்காகத் தண்டனை அளிக்காமலும் ஒருவேளை விட்டு விடுவார்கள். ஆனால் அரண்மனையில் உள்ளவர்களுக்கெல்லாம் அவனைப் பற்றி ஒரு சந்தேகம் இருந்து கொண்டுதானிருக்கும். அவனைக் களங்கம் உள்ளவனாகவே கருதுவார்கள். இளைய பிராட்டி அவனிடம் காட்டும் இரக்கமும் அனுதாபமும் அவ்வளவுடன் நின்றுவிடும். சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளப் போகும் பொன்னியின் செல்வரின் திருத்தமக்கையாரைக் கைப்பிடித்து மணந்து கொள்வது கனவிலும் நடவாத காரியம். அரண்மனைப் பெண்கள் அவனை ஏதோ குற்றம் செய்து மன்னிப்புப் பெற்ற சேவகனாகவே மதித்து நடத்துவார்கள். அமைச்சர்களும் தளபதிகளும் அவனை அருவருப்புடன் நோக்குவார்கள். அரச குலத்தினரின் சித்தம் அடிக்கடி மாறக் கூடியது. இளவரசர் அருள்மொழிவர்மர் தான் அவன் மீது எத்தனை நாள் அபிமானம் காட்டி வருவார் என்பது யாருக்குத் தெரியும்? இங்கே இந்த அரண்மனை அந்தப்புர அறையில் ஒளிந்து உயிர் வாழ்வதில் என்ன பயன்?

இவ்வாறெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டு வந்தியத்தேவன் அந்த அறையில் அங்குமிங்கும் வட்டமிட்டு உலாவிக் கொண்டிருந்தான். அடிக்கடி அந்த அறையின் ஒரு பக்கத்துச் சுவரில் இருந்த பலகணியின் ஓரமாக வந்து நின்று ஆவலுடன் வெளியே பார்த்தான். அரண்மனையின் ஒரு கோடியில் இருந்த மேல் மாடத்து அறையில் அவன் இருந்து வந்தான். அதையொட்டி வடவாறு சென்று கொண்டிருந்தது. அங்கே அரண்மனையின் வெளிச் சுவரே தஞ்சைபுரிக் கோட்டையின் வெளிச் சுவராகவும் அமைந்திருந்தது. அந்தப் பலகணி வழியாக கீழே குதித்தால் வடவாறு வெள்ளத்தில் குதித்து விடலாம். அல்லது செங்குத்தான சுவரின் வழியே சிறிது பிரயத்தனத்துடன் இறங்கியும் வடவாற்று வெள்ளத்தை அடையலாம். அந்த மேன்மாடத்துக்குக் கீழே அரண்மனைப் பெண்டிர் நதியில் இறங்கிக் குளிப்பதற்காக வாசலும் படித்துறையும் இருந்ததாகத் தோன்றியது. மேன்மாடத்திலிருந்து கீழே சென்று அந்த வாசலை அடைவதற்கு வழி எப்படி என்று தெரியவில்லை. அந்தப்புரத் தாதிமார்களுக்கும் அரசிளங் குமரிகளுக்கும் அது தெரிந்திருக்கும். அவன் தப்பிச் செல்வதாயிருந்தால் அவர்கள் அறியாமல் அல்லவா செல்ல வேண்டும்…? பலகணி ஓரத்தில் நின்று அவன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, சற்றுத் தூரத்தில் தோன்றிய ஒரு காட்சி அவனைத் திடுக்கிடச் செய்தது.

அவன் இருந்த அரண்மனைக்கு அடுத்த அரண்மனைத் தோட்டத்தில் ஒரு பெண் தலைவிரிகோலமாகப் பித்துப் பிடித்தவள்போல ஓடிக்கொண்டிருந்தாள். ஆகா! அது பெரிய பழுவேட்டரையரின் அரண்மனைத் தோட்டம் போல் அல்லவா இருக்கிறது! ஆம், ஆம்! அந்தத் தோட்டந்தான்! அதில் பித்துப் பிடித்தவள் போல் ஓடுகிற பெண் யார்? மணிமேகலை போல் அல்லவா இருக்கிறது? அவளுக்கு என்ன நேர்ந்து விட்டது? எதற்காக அப்படி ஓடுகிறாள்?  அவளுக்குப் பின்னால், அவளைத் தொடர்ந்து பிடிப்பதற்காக ஓடுகிறவர்களைப் போல் இன்னும் இரு முதிய ஸ்திரீகள் ஓடினார்கள். ஆனால் அவர்கள் வரவரப் பின் தங்கி வந்தார்கள். மணிமேகலையை அவர்கள் பிடிப்பது இயலாத காரியம்! அதோ அவள் வெளி மதில் சுவரண்டை வந்து விட்டாள். சுவர் ஓரமாக வளர்ந்திருந்த ஒரு மரத்தைப் பிடித்துக் கொண்டு மதில் சுவரில் ஏறிவிட்டாள்! ஐயோ! என்ன காரியம் செய்கிறாள்? கடவுளே! மதிள் சுவரிலிருந்து தலை குப்புற நதியின் வெள்ளத்தில் விழுந்து விட்டாளே! அதற்கு மேலே அவனால் சும்மா நிற்க முடியவில்லை. அரண்மனை மேல் மாடத்திலிருந்து பலகணியின் வழியாக வெளி வந்து ஆற்று வெள்ளத்தில் குதித்தான்.

சில கண நேரம் மூச்சுத் திணறிப் பின்னர் சமாளித்துக் கொண்டு நாலாபுறமும் பார்த்தான். ஆம்; அவன் குதித்த இடத்துக்கு அருகில் படித்துறை மண்டபமும் அதற்கு உள்ளிருந்து வரும் வாசலும் காணப்பட்டன. அதற்கு எதிர்த் திசையிலேதான் சற்றுத் தூரத்தில் மணிமேகலை மதில் மேலிருந்து கீழே குதித்தாள். நல்லவேளையாக, ஆற்று வெள்ளம் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. மணிமேகலையும் வெள்ளத்தில் மிதந்து வந்தால், அவனை நோக்கித்தான் வரவேண்டும்.

தட்டுத்தடுமாறி நதியின் கரையோரத்தை வந்தியத்தேவன் அடைந்தான். ஆற்று வெள்ளத்தை எதிரிட்டுக் கொண்டு விரைவாக நடந்து சென்றான். ஆகா! அதோ மணிமேகலை மிதந்து வருகிறாள்? அவள் உடம்பில் உயிர் இருக்கிறதா? வெள்ளத்திலே பாய்ந்து சென்று மணிமேகலையை இரு கரங்களினாலும் தூக்கி எடுத்துக் கொண்டான். மணிமேகலையைப் படித்துறையில் கொண்டுவந்து சேர்த்தான். நீரில் மூழ்கியதனால் கனத்திருந்த மணிமேகலையைத் தூக்கிக் கொண்டு நதியில் நடந்த போது அவனுக்கு மூச்சு வாங்கியது. அவளை மேலும் தூக்கிக் கொண்டு நடப்பது இயலாத காரியமாகத் தோன்றியது. எனவே, படித்துறையின் மேல்படி அகலமாக இருந்ததைப் பார்த்து அதன் பேரில் மணிமேகலையைப் படுக்க வைத்தான். பின்னர் என்ன செய்வது என்று ஒரு கணம் யோசித்தான்.  அவளை மூர்ச்சை தெளிவித்து உயிர்ப்பிக்கும் காரியம் தன்னால் ஆகக் கூடியதில்லை. உடனே யாராவது ஒரு பெண்ணின் உதவி தேவை. அரண்மனைக்குள் சென்று அங்கிருந்து யாரையாவது அழைத்து வரவேண்டும்.

படித்துறைக்கு அரண்மனைக்குள்ளேயிருந்து வருவதற்காக அமைந்த வாசல் அவன் கண்முன் காணப்பட்டது. அதன் அருகில் சென்று சாத்தியிருந்த கதவின் பேரில் தன் உடம்பில் மிச்சமிருந்த பலம் முழுவதையும் பிரயோகித்து மோதினான். அதிர்ஷ்டவசமாகக் கதவின் உட்புறத் தாழ்ப்பாள் தகர்ந்து கதவு திறந்து கொண்டது. திறந்த கதவின் வழியாகப் புகுந்து ஓடினான். சிறிது தூரம் அது குறுகிய பாதையாகவே இருந்தது. பின்னர் தாழ்வாரங்களும் முற்றங்களும் வந்தன. அங்கேயெல்லாம் யாரையும் காணவில்லை. “இங்கே யாரும் இல்லையா? ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லையா?” என்று அலறிக் கொண்டே அங்குமிங்கும் ஓடினான். கடைசியாக ஒரு பெரிய மண்டபத்தின் வாசலில் சேவகர்கள் இருவர் அவனை வழி மடக்கி நிறுத்த முயன்றார்கள். அவர்களை மீறி தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்தான். அங்கே சக்கரவர்த்தி உன்னதமான சிங்காதனத்தில் அமர்ந்திருப்பதையும் ஆடவர்கள், பெண்டிர்கள் பலர் சூழ்ந்து நிற்பதையும் கண்டு திகைத்துப் போனான். முதலில் அவன் கண்களில் எதிர்பட்ட பெண்மணி பூங்குழலி என்று தெரிந்து கொண்டதும், அவனுக்குச் சிறிது தைரியம் உண்டாயிற்று. “சமுத்திரகுமாரி! சமுத்திரகுமாரி! மணிமேகலை ஆற்றில் விழுந்து விட்டாள். உடனே வந்து காப்பாற்று!” என்று அலறினான்.


82. நெடுமரம் சாய்ந்தது!

ஆஸ்தான மண்டபத்துக்குள் அந்தப்புரப் பெண்கள் வருவதற்கென்று ஏற்பட்ட வாசல் வழியாக வந்தியத்தேவன் புகுந்தான். அதனால் அவன் முதலில் அங்கிருந்த பெண்களைப் பார்க்கும்படி நேர்ந்தது. அவர்களில் எல்லாருக்கும் பின்னால் ஒதுங்கி நின்ற பூங்குழலி ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது, வந்தியத்தேவன் ஈரத்துணிகளுடன் அலங்கோலமாக உட்புகுந்ததைக் கண்டு திடுக்கிட்டாள். அவளைப் பார்த்தவுடனேதான் வந்தியத்தேவனும் மணிமேகலைக்கு நேர்ந்த விபத்தைப் பற்றிக் கூறினான். அது அவளுடைய காதில் விழுந்தது. அவள் அருகில் இருந்த இளைய பிராட்டி குந்தவை வானதி இவர்கள் காதிலும் விழுந்தது. அவர்கள் மூவரும் வந்தியத்தேவன் புகுந்த வாசல் வழியாக விரைந்து சென்றார்கள். தண்ணீர் சொட்டியிருந்த அடையாளத்தைக் கொண்டு அவன் வந்த வழியைக் கண்டு பிடித்துக்கொண்டு சென்றார்கள். வந்தியத்தேவனைத் தொடர்ந்து வந்த சேவகர்கள் பரபரப்புடன் உள்ளே புகுந்து “சக்கரவர்த்தி! மன்னிக்கவேண்டும். இந்தப் பைத்தியக்காரன் அரண்மனைப் படித்துறைக் கதவு வழியாகப் புகுந்து ஓடி வந்தான். நாங்கள் தடுத்தும் கேட்கவில்லை!” என்று அச்சேவகர்கள் சொல்லிவிட்டு, வந்தியத்தேவனைத் தங்களுடன் இழுத்துச் செல்ல முயன்றார்கள்.

பார்த்திபேந்திரன் சக்கரவர்த்தியின் சந்நிதானம் என்பதையும் மறந்து பாய்ந்து சென்று வந்தியத்தேவனுடைய தோள்களில் ஒன்றைப் பலமாகப் பற்றிக் கொண்டான்.

“இவன் பைத்தியக்காரன் அல்ல. கொலைகாரன்! ஆதித்த கரிகாலரைக் கொன்ற வஞ்சகத் துரோகி!” என்று கூறிக் கொண்டே, அவனைப் பிடித்து இழுக்க முயன்ற சேவகர்களை ஜாடையினால் அப்புறப்படுத்தினான்.

பார்த்திபேந்திரனைப் பின்தொடர்ந்து கந்தமாறனும் ஓடிச் சென்று வந்தியத்தேவனுடைய இன்னொரு தோளையும் இறுகப் பிடித்துக்கொண்டான். இருவருமாக அவனை இழுத்துக் கொண்டு வந்து சுந்தர சோழ சக்கரவர்த்தி அமர்ந்திருந்த தர்ம பீடத்துக்கு எதிரில் நிறுத்தினார்கள்.

சக்கரவர்த்தி வந்தியத்தேவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, “பால் வடியும் முகமுள்ள இந்தப் பிள்ளையா என் மகனைக் கொன்றதாகச் சொல்கிறீர்கள்? என்னால் நம்ப முடியவில்லையே? இவன் தானே ஆதித்த கரிகாலனிடமிருந்து எனக்கு ஓலை கொண்டு வந்தான்?” என்றார். “ஆம்; ஐயா! இவன்தான் ஓலை கொண்டு வந்தான்! இவன் தான் தஞ்சைக் கோட்டைக்கு வெளியே மூடுபல்லக்கில் வந்த நந்தினி தேவியைச் சந்தித்து இரகசியம் பேசினான். இவனேதான் இக்கோட்டையிலிருந்து முன்னொரு தடவை தப்பி ஓடினான். இப்போதும் பாதாளச் சிறையிலிருந்து தப்பித்து ஓடினான்!” என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

பொன்னியின் செல்வர் இத்தனை நேரமும் செயலற்று நின்றார். பிறகு கம்பீரமாக நடந்து முன்னால் வந்து வந்தியத்தேவன் அருகில் நின்றார்.

“தந்தையே! இந்த வல்லத்து இளவரசர் என் உயிருக்குயிரான நண்பர். இலங்கையிலும் நடுக்கடலிலும் எனக்கு நேர்ந்த அபாயங்களில் என்னைக் காப்பாற்றியவர். இவர் மீது குற்றம் சுமத்துவது என் மீது குற்றம் சுமத்துவது போலாகும்!” என்றார்.

அவருடைய குரலில் தொனித்த அதிகார தோரணை எல்லாரையும் சிறிது நேரம் மெளனமாக இருக்கச் செய்தது.

பின்னர் முதன்மந்திரி அநிருத்தர், “பொன்னியின் செல்வ! சிறிது யோசித்துப் பாருங்கள்! அவர் மீது குற்றம் என்னமோ ஏற்கனவே சாட்டி விட்டார்கள். ஆகையால் விசாரித்து உண்மையைத் தெளிவாக்கி விடுவது நல்லதல்லவா?” என்றார்.

பார்த்திபேந்திரன், “ஆம், ஐயா! தாங்கள் நாளைச் சோழ சிங்காதனத்தில் ஏறப் போகிறவர்கள். எப்பேர்ப்பட்ட குற்றவாளியானாலும் தண்டிக்கவோ மன்னிக்கவோ தங்களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் விசாரணையே வேண்டாம் என்று சொல்லுவது உசிதமா? வீண் சந்தேகங்களுக்கு இடம் தருமல்லவா?” என்றான்.

“அத்துடன் நம் இளங்கோ இன்னொரு விஷயத்தையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இளவரசர் தாம் சிங்காதனம் ஏறுவதற்காக இந்த வந்தியத்தேவனை அனுப்பித் தம் தமையனைக் கொல்லச் சதி செய்ததாக ஒரு வதந்தி பரவி வருகிறது. அதற்கு இடந்தரக் கூடாது அல்லவா?” என்றான் கந்தமாறன்.

இதைக் கேட்டு அங்கிருந்தோர் அனைவரும் பயங்கரமடைந்து நின்றார்கள். சம்புவரையர் மட்டும் முன் வந்து கந்தமாறனைக் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்து, “அடே மூடா! உன்னால் நமது பழமையான வம்சமே நிர்மூலம் ஆகிவிடும் போலிருக்கிறதே! சமய சந்தர்ப்பம் தெரியாமல் உளறுவதில் உனக்கு நிகர் வேறு யாரும் இல்லை?” என்று கோபமாகச் சொன்னார்.

கந்தமாறன் அவனுடைய தந்தையை வெறித்து நோக்கினான். அவனுடைய உதடுகள் துடித்தன. அடுத்த நிமிஷம் அவன் என்ன செய்திருப்பானோ, என்ன சொல்லியிருப்பானோ, தெரியாது! நல்லவேளையாக அச்சமயத்தில் பெரிய பழுவேட்டரையர் ஓர் அடி முன் வந்து சம்புவரையரைப் பிடித்துக் கொண்டார். தொண்டையை முன்போல் கனைத்துக் கொண்டு, “சம்புவரையரே! கொஞ்சம் பொறுங்கள்! அவன் மீது சீற்றங்கொள்ள வேண்டாம்!” என்று சொல்லிக்கொண்டே சம்புவரையரைப் பிடித்து இழுத்துச் சிறிது அப்பால் கொண்டுபோய் நிறுத்தினார்.

இந்த வார்த்தைகளினால் ஏற்பட்ட வியப்பும் திகைப்பும் தீர்வதற்குள் அந்த முதுபெரும் கிழவர் மேலும் கூறினார்: “சக்கரவர்த்தி! அடியேனுடைய கடைசி வார்த்தைகளைச் சிறிது செவி கொடுத்துக் கேளுங்கள்! தூமகேது தன்னுடைய தீய காரியத்தைச் செய்துவிட்டு மறைந்துவிட்டது. தங்கள் தீரப் புதல்வர் ஆதித்த கரிகாலரும் மறைந்துவிட்டார். ஆனாலும் தங்கள் குலத்து முன்னோர்களும் என் குலத்து முன்னோர்களும் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்து ஸ்தாபித்த சோழ சாம்ராஜ்யத்துக்கு நல்ல காலம் இருக்கிறது. இன்னும் நெடு நாள் இந்தச் சாம்ராஜ்யம் நிலைத்திருக்கப்போகிறது. விரிந்து பரவி மகோந்நத நிலையை அடையப்போகிறது. ஆகையினாலேயே, கதைகளிலே கூட கேட்டறியாத பெரிய விபத்திலிருந்து இந்தச் சோழ குலமும் சாம்ராஜ்யமும் தப்பியது. அவ்விதம் தப்புவதற்கு முக்கிய காரணமாயிருந்தவன், இந்த வாணர் குல வீரன் வந்தியத்தேவன்தான்!”

“இடும்பன்காரி சம்புவரையர் அரண்மனையில் சேவகனாகயிருந்தான். மதுரை ஆபத்துதவிகளுக்கும் அவன் ஒற்றனாக உதவி வந்தான். அவனைப் பயமுறுத்தி, அச்சமயம் கடம்பூர் அரண்மனையின் வேட்டை அறையில் மதுரை ஆபத்துதவிகள் இருப்பதை அறிந்தேன். ஆதித்த கரிகாலர் நந்தினியின் அறைக்குச் சென்றிருப்பதையும், மணிமேகலையும், வந்தியத்தேவனும் அங்கேயே ஒளிந்து கொண்டிருப்பதையும் அறிந்தேன். நந்தினிக்கும், கரிகாலருக்கும் நடக்கும் சம்பாஷணையை ஒட்டுக்கேட்டு அவர்களுடைய இரகசியத்தை அறியும் ஆசை என் உறுதியைக் குலைத்துவிட்டது. நந்தினியின் அறைக்குப் போக யாழ்க் களஞ்சியத்தின் மூலம் ஓர் இரகசிய வழி இருக்கிறதென்பதை அறிந்து அங்கே போய்ச் சேர்ந்தேன். நல்ல சமயத்திலேதான் போய்ச் சேர்ந்தேன். நந்தினியைப் பற்றிய உண்மையை அவள் வாயாலேயே சொல்லக்கேட்டு அறிந்தேன். நந்தினியும் அவளைச் சேர்ந்தவர்களும் வீரபாண்டியனுடைய சாவைப் பழி வாங்குவதற்கு எவ்வளவு பயங்கரமான திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன். அந்தச் சதி வெற்றி பெறாமல் தடுக்க முயன்றேன். ஆனால் விதியை என்னால் வெல்ல முடியவில்லை. கரிகாலர் என் கண் முன்னாலேயே உயிரற்றுக் கீழே விழுந்ததைப் பார்க்கும் துர்ப்பாக்கியம் பெற்றேன்….”

இவ்விதம் கூறிவிட்டுப் பெரிய பழுவேட்டரையர் தம் முகத்தைக் கையால் மூடிக்கொண்டு விம்மினார். அந்த விம்மலின் ஒலி, புயல் அடிக்கும்போது அலை கடலில் எழும் பேரோசையை ஒத்திருந்தது. யாரும் அச்சமயம் வாய் திறந்து பேசத் துணியவில்லை. அனைவருடைய உள்ளமும் அந்த வீரப்பெரும் கிழவரின் மாபெரும் துயரத்தைக் கண்டு இளகிப் போயிருந்தன.

பெரிய பழுவேட்டரையர் மேலும் மேலும் பொங்கி வந்த விம்மலைத் தமது வைரம் பாய்ந்த இரும்பு நெஞ்சின் உதவியால் அடக்கிக் கொண்டார். முகத்திலிருந்து கையை எடுத்து விட்டு சுற்றுமுற்றும் பார்த்தார். “விதி வசத்தினால் ஆதித்த கரிகாலர் இறந்துவிட்டார். ஆனால் துர்க்கா பரமேசுவரியின் கருணையினால், அதே சமயத்தில் பேராபத்துக்குள்ளான பொன்னியின் செல்வர் விதியையும் மதியினால் வென்று உயிர் தப்பினார். பிரபு! சக்கரவர்த்தி! பிரம்மராயரே! என் அருமைத் தோழர்களான சிற்றரசர்களே! சோழ சிங்காதனத்தில் அருள்மொழிவர்மரை ஏற்றி வைத்து முடிசூட்டுங்கள்! அவர் மூலமாக இந்தச் சாம்ராஜ்யம் மகோந்நதத்தை அடையப் போகிறது!” என்றார்.

முதன்மந்திரி அநிருத்தர், “ஐயா! தங்கள் விருப்பம் நிறைவேறத்தான் போகிறது. ஆனால் கரிகாலர் எப்படி இறந்தார் என்று தாங்கள் கூறவில்லையே?” என்றார்.

“அதைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்? கொன்ற கை யார் கையாயிருந்தால் என்ன? உண்மையில் அவருடைய மரணம் விதியினால் நேர்ந்தது!” என்றார் அந்த வீரக் கிழவர் நடுங்கிய குரலில். “அது தெரியாவிட்டால், இதோ குற்றம் சுமத்தப்பட்டு நிற்கும் வாலிபன் மீது ஏற்பட்டிருக்கும் சந்தேகம் நீங்காது. கரிகாலன் மரணத்துக்காக இவனைத் தண்டிக்கும்படி நேரிடும்?” என்றார் முதன்மந்திரி அநிருத்தர்.

“கத்தியை எறிந்து கரிகாலரைக் கொன்றவன் எவன் என்பது எனக்கு நன்றாய்த் தெரியும்!” “யார்? யார்?”

“ஆம், ஆம்! அதைச் சொல்லிவிட வேண்டியதுதான். சொல்லாவிட்டால் உங்கள் சந்தேகம் தீராது. எல்லாரும் கேளுங்கள், இந்த வாலிபன் யாழ்க் களஞ்சியத்தில் ஒளிந்து கொண்டிருந்தான். நான் அதன் வழியாக இறங்கி வந்தேன். இவன் என்னைப் பார்த்துச் சத்தமிடக்கூடாது என்பதற்காகப் பின்னாலிருந்து இவன் கழுத்தைப் பிடித்து நெருக்கினேன். இவன் விழி பிதுங்கி, உணர்விழந்து கீழே விழுந்து விட்டான். ஆதித்த கரிகாலரைக் கொன்றது யார் என்பது இவனுக்கு அச்சமயம் தெரிந்து கூட இருக்க முடியாது.”

“யார்? யார்? கொன்றது யார்?”

“கத்தியை வீசி எறிந்தவன் நானேதான்! இந்த என்னுடைய வலது கரந்தான்! சோழ சக்கரவர்த்திகளுக்கு முடிசூட்டிய பரம்பரையில் வந்த இந்தக் கரந்தான் கத்தியை எறிந்தது. ஆனால் இளவரசர் கரிகாலர் மீது எறியவில்லை. நந்தினியின் பேரில் எறிந்தேன். என்னை மோகவலையில் ஆழ்த்தித் துரோகப் படுகுழியில் வீழ்த்திய அந்த மாயப் பிசாசைக் கொன்றுவிட எண்ணி எறிந்தேன். குறி தவறிக் கரிகாலர் மீது விழுந்தது!…”

“ஐயையோ!” “ஆஹாஹா!” என்ற குரல்கள் பல அச்சபையில் எழுந்தன.

“நூறு ஆண்டு காலமாகப் பழுவூர்க் குலம் சோழ குலத்துக்குச் செய்திருக்கும் தொண்டுகளுக்கெல்லாம் களங்கம் உண்டு பண்ணி விட்டேன். அந்தக் களங்கத்தை எப்படி நீக்கப் போகிறேனோ, தெரியவில்லை!”

“அண்ணா! இதோ அந்தக் களங்கத்தை நான் போக்குகிறேன்!” என்று சின்னப் பழுவேட்டரையர் கர்ஜித்துவிட்டுத் தமது கத்தியை உருவிக்கொண்டு அண்ணன் அருகில் விரைந்து வந்தான்.

“சோழ குலத்துக்குத் துரோகம் செய்கிறவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைப் பழி வாங்குவதாக நீயும் நானும் சபதம் ஏற்றிருக்கிறோம். அந்தச் சபதத்தை இப்போது நானே நிறைவேற்றுவேன். உன்னை இந்தக் கணமே கொன்று நம் குலத்துக்கு நேர்ந்த பழியைத் துடைப்பேன்!” என்று சின்னப் பழுவேட்டரையர் கத்தியை ஓங்கினார்.

இளவரசர் அருள்மொழிவர்மரும், முதன்மந்திரி அநிருத்தரும் பாய்ந்து சென்று சின்னப் பழுவேட்டரையரின் கைகளைப் பிடித்துக் கொண்டார்கள்.

அச்சமயத்தில் பெரிய பழுவேட்டரையர் கூறினார்: “தம்பி! நம் குலத்துக்கு என்னால் சேர்ந்த பழியைத் துடைக்கும் வேலையை உனக்கு வைக்க மாட்டேன். அத்துடன் ‘தமையனைக் கொன்ற தம்பி’ என்ற பழியை உனக்கும் ஏற்படுத்த மாட்டேன். இதோ துர்க்கா பரமேஸ்வரிக்கு என் சபதத்தை நிறைவேற்றுவேன்!” என்று கூறிக்கொண்டே தம் கையிலிருந்து சிறிய திருகுக் கத்தியைத் தமது மார்பை நோக்கி ஓங்கினார்.

“ஐயா! வேண்டாம்!” என்று அருள்மொழிவர்மர் கூவிக்கொண்டு அவர் அருகில் பாய்ந்து வருவதற்குள் பெரியப் பழுவேட்டரையர் தம் உத்தேசத்தை நிறைவேற்றி விட்டார்.

நெடுங்காலம் வேர் விட்டு நெடிது வளர்ந்திருந்த தேவதாரு மரம் வேருடன் பெயர்ந்து கப்பும் கிளையுமாகக் கீழே விழுவது போலத் தரையில் சாய்ந்தார்.

“ஹா ஹா!” “அடடா!” என்பவை போன்ற குரல்கள் அச்சபையில் ஒலிக்கத் தொடங்கின.

விழுந்த பெரிய பழுவேட்டரையரை நோக்கிச் சிலர் ஓடி வந்தார்கள்.

அதே சமயத்தில் கண்களை மூடிக் கொண்டு சிங்காசனத்தில் சாய்ந்த சுந்தர சோழர் சக்கரவர்த்தியை நோக்கி இன்னும் சிலர் ஓடினார்கள். மந்திராலோசனை சபை கலைந்தது.

அன்றிரவு பெரிய பழுவேட்டரையர் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தபோது பலர் வந்து அவரைப் பார்த்து விட்டுச் சென்றார்கள். சக்கரவர்த்தியும், அருள்மொழிவர்மரும், அநிருத்தரும், இளைய பிராட்டி குந்தவையும்கூட வந்திருந்தார்கள். சோழ குலத்துக்கும் சாம்ராஜ்யத்துக்கும் பெரிய பழுவேட்டரையர் செய்திருக்கும் சேவைகளைப் பற்றிச் சக்கரவர்த்தியும் மற்றவர்களும் பாராட்டிப் பேசினார்கள். அவர் இளம் பிராயத்தில் எத்தனையோ போர்க்களங்களில் செய்த தீரச் செயல்களைப் பற்றிக் கூறினார்கள். தக்கோலத்தில் தோல்வியடைந்து சிதறி ஓடிய சோழ சைன்யத்தை அவர் திரட்டி அமைத்துத் தோல்வியை வெற்றியாக மாற்றிய செயலை வியந்து பாராட்டினார்கள். சோழ நாட்டின் தனாதிகாரியாக இருந்து திறமையாக நிர்வாகம் நடத்தியதைப் புகழ்ந்தார்கள்.

சென்ற மூன்று வருஷத்துச் சம்பவங்களைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் விடைபெற்றுப் புறப்பட்டார்கள்.

பின்னர் அவர்கள் நால்வரும், பெரிய பழுவேட்டரையர் படுத்திருந்த அறைக்குள்ளேயே அவர் பார்க்க முடியாத இடங்களில் மறைந்து நின்று கொண்டார்கள்.

அச்சமயம், சின்னப் பழுவேட்டரையர் ஆழ்வார்க்கடியானை அழைத்துக்கொண்டு வந்தார். பெரிய பழுவேட்டரையருக்கு எதிரில் கொண்டு வந்து அவனை உட்கார வைத்து விட்டுத் தாமும் அருகில் அமர்ந்தார்.

பார்வை விரைவாக மங்கி வந்த கண்களினால் பெரிய பழுவேட்டரையர் ஆழ்வார்க்கடியானைப் பாத்துவிட்டு, “ஆகா! இந்த வைஷ்ணவன் இங்கு எதற்காக வந்தான்?” என்றார்.

“ஐயா! நான் என் சகோதரியிடமிருந்து செய்தி கொண்டு வந்தேன்.”

“அது யார் உன் சகோதரி?”

“என்னுடன் பல நாள் வளர்ந்த சகோதரி, நந்தினியைச் சொல்லுகிறேன். ஐயா! நந்தினி தங்களுக்கு அவளுடைய நன்றியைத் தெரியப்படுத்தும்படி என்னை அனுப்பினாள். கரிகாலரைக் கொன்ற பழி அவள் பேரில் விழாதிருக்கும் பொருட்டுத் தாங்கள் அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவிக்க சொன்னாள். எத்தனை ஜன்மம் எடுத்தாலும் தங்கள் அன்பை மறக்க முடியாது என்று தெரிவிக்கும்படி சொன்னாள்!” என்றான் ஆழ்வார்க்கடியான்.

“ஆகா! அவள் இன்னும் அப்படி நினைக்கிறாளா! நினைத்துக் கொண்டு சந்தோஷப்படட்டும். எவ்வளவுதான் அவள் வஞ்சகம் செய்து எனக்குத் தீங்கு புரிந்தாலும், அவளை என்னால் மறக்க முடியவில்லை. தன் உயிரைக் கொடுத்துச் சக்கரவர்த்தியைக் காப்பாற்றிய உத்தமியின் புதல்வி அல்லவா அவள்?” என்றார் பழுவேட்டரையர்.

ஏற்கனவே மரணத்தின் சாயை படர்ந்திருந்த அவருடைய முகத்தில் இப்போது இலேசான புன்னகை தோன்றியது.

“வைஷ்ணவனே! யாராவது ஒருவரிடம் என் உண்மையைச் சொல்ல வேண்டும் உன்னிடம் சொல்லுகிறேன். நான் எறிந்த கத்தி இளவரசர் பேரில் விழவில்லை. அதற்கு முன்பே அவர் விழுந்து விட்டார். நானே இளவரசரைக் கொன்றதாக ஒப்புக் கொண்டதற்குக் காரணம் நந்தினியின் பேரில் பழி விழாமல் தடுப்பதற்கு மட்டுமல்ல; அதைவிட நூறு மடங்கு முக்கியமான காரணம் உண்டு. அருகில் வா! சொல்லுகிறேன்! உன் சிநேகிதன் வந்தியத்தேவன் இருக்கிறானே, அவன் அருமையான பிள்ளை! அவனுக்குச் சோழ குலம் ரொம்பக் கடமைப்பட்டிருக்கிறது. இளைய பிராட்டியின் உள்ளத்தை அவன் கவர்ந்து விட்டான். குற்றத்தை நான் ஒப்புக்கொண்டு என்னை பலி கொடுத்திராவிட்டால், வந்தியத்தேவன் பேரில் யாராவது களங்கம் கற்பித்துக் கொண்டே இருப்பார்கள். இனி ஒருவரும் அவ்வாறு பேசத் துணியமாட்டார்கள்.”

வரவர மெலித்து கொண்டு வந்த பெரிய பழுவேட்டரையரின் குரல் அடியோடு மங்கி நின்றது. அந்தத் தீரப் பெருங் கிழவரின் உயிர்ச் சுடரும் அணைந்தது.


83. பட்டாபிஷேகம்

பொன்னியின் செல்வரின் முடிசூட்டு விழா விரைவிலேயே நடைபெறப் போகிறது என்று நாடு நகரமெல்லாம் தெரிந்து போயிருந்தது. மக்கள் ஒரே ஆர்வத்துடன் அந்த வைபவத்தை எதிர் நோக்கியிருந்தார்கள்.

ஆதித்த கரிகாலரின் அகால மரணம், மந்தாகினியின் உயிர்த் தியாகம், பெரிய பழுவேட்டரையரின் சபத நிறைவேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் சக்கரவர்த்தியின் உள்ளத்தைப் பெரிதும் துன்புறச் செய்திருந்தன. ஆயினும் இராஜ்ய உரிமை சம்பந்தமான சச்சரவுகள் ஒரு மாதிரி தீர்ந்து போய் அருள்மொழிவர்மருக்கு முடிசூட்டுவதைச் சிற்றரசர் பொதுமக்கள் அனைவரும் ஒருமுகமாக ஆதரித்தது அவருடைய நொந்து போன உள்ளத்துக்கு ஓரளவு ஆறுதல் அளித்து வந்தது.

தை மாதம் பிறந்தவுடனே நல்ல நாள் குறிப்பிட்டுப் பொன்னியின் செல்வரின் தலையில் சாம்ராஜ்ய பாரத்தைச் சுமத்தி விட்டுக் காஞ்சிக்குப் புறப்பட்டுச் செல்லச் சக்கரவர்த்தி முடிவு செய்திருந்தார். அங்கே தமது வீரப் புதல்வன் கரிகாலன் தமக்கென்று நிர்மாணித்த பொன் மாளிகையிலே மிச்சமுள்ள தம் வாழ்நாளைக் கழித்து விடவும் தீர்மானித்திருந்தார்.

அருள்மொழிவர்மருக்குத் திருமுடி சூட்டு விழா நெருங்க நெருங்க, சோழ நாடு முழுவதும் ஒரே கோலாகலமாகி வந்தது. பொன்னியின் செல்வருக்குப் பொன் முடி சூடுவது குறித்து மக்களிடையில் மாறுபட்ட அபிப்பிராயமே காணப்படவில்லை.

மதுராந்தகத்தேவர் விஷயத்தில் ஆள் மாறாட்டம் நடந்திருக்கிறது என்னும் விவரம் பொதுமக்களில் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அரச குடும்பத்தினரையும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களையும் தவிர வேறு யாருக்கும் அந்தச் செய்தி தெரியாது. பழைய மதுராந்தகர் பெரும்பாலும் அரண்மனைக்குள்ளேயே பொழுதைக் கழித்தார். மிக அபூர்வமாகவே வெளிப்புறப்பட்டார். அந்தச் சந்தர்ப்பங்களிலும் அவர் பொதுமக்களுடன் கலந்து பழகுவதில்லை. அவருக்கு முடிசூட்டும் பேச்சு நடந்து கொண்டிருந்தபோது மூடுபல்லக்கில் வைத்து அவரை அழைத்துக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது. அவருடைய அங்க அடையாளங்களைக் கூர்ந்து கவனிக்கப் பொது ஜனங்களுக்குச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. ஆகையால் பழைய மதுராந்தகர் போய்ப் புதிய மதுராந்தகர் வந்துள்ள விவரமே மிகப் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாமலிருந்தது.

முடிசூட்டு விழாவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னாலிருந்து சோழ நாட்டின் நானா திசைகளிலிருந்தும் ஜனங்கள் தஞ்சையை நோக்கி வரத் தொடங்கிவிட்டார்கள். தஞ்சைக் கோட்டைக்கு வெளியே ஒரே ஜனசமுத்திரமாகக் காட்சி அளித்தது. கோட்டையின் வாசற் கதவுகள் திறந்து விடப்பட்டன. கோட்டைக்குள் போவதற்கும் வெளியே வருவதற்கும் முன்னம் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. முடிசூட்டு நாளைத் தள்ளி வைத்துக்கொண்டால் சமாளிக்க முடியாத கூட்டம் சேர்ந்து விடும் என்றுதான் தை பிறந்தவுடனே நாள் குறிப்பிட்டிருந்தார்கள்.

மகுடாபிஷேகத்துக்குரிய வேளை வருவதற்கு வெகு நேரம் முன்னதாகவே, பட்டாபிஷேக மண்டபத்தின் வாசலில் ஜனத்திரள் சேர ஆரம்பித்து விட்டது. மகுடாபிஷேக மண்டபத்துக்குள் அரண்மனையைச் சேர்ந்தவர்கள் வருவதற்குத் தனியான பின்புறப் பாதை இருந்தது. அதன் வழியாகச் சுந்தர சோழரும், வானமாதேவியும் அவர்களைத் தொடர்ந்து செம்பியன்மாதேவி, மதுராந்தகர், பூங்குழலி, குந்தவைப் பிராட்டி, வானதி ஆகியவர்களும் வந்து சேர்ந்தார்கள். முதன்மந்திரி அநிருத்தர், சின்னப் பழுவேட்டரையர், சம்புவரையர், சேனாதிபதி பூதிவிக்கிரம கேசரி, மலையமான் மிலாடுடையார், மற்றும் சிற்றரசர்கள், சாமந்தகர்கள், வர்த்தக கணத்தலைவர்கள், கோட்டத் தலைவர்கள், பெருந்தர அதிகாரிகள், சிவாச்சாரியார்கள், விண்ணகர பட்டர்கள், தமிழ்ப் பெரும் புலவர்கள் ஆகியோர் வாசலில் கூடியிருந்த பெரும் ஜனக்கூட்டத்தில் புகுந்து முண்டியடித்துக்கொண்டு உள்ளே வந்து சேர்ந்தார்கள். கடைசியில் பொன்னியின் செல்வரும், வல்லவரையன் வந்தியத்தேவனும் தாமரை மலர் போல் அமைந்த திறந்த தங்கரதத்தில் அமர்ந்து மகுடாபிஷேக மண்டபத்தின் வாசலை அடைந்தபோது, பூரண சந்திரனைக் கண்ட அலைகடலைப் போல் அந்த ஜனசமுத்திரம் கரகோஷம் முழக்கி ஆரவாரம் செய்தது.

மகுடாபிஷேகத்துக்குரிய வைதிகச் சடங்குகள் எல்லாம் நடந்தேறின. சோழ குலத்து மன்னர்கள் வழி வழியாகப் பட்டாபிஷேக தினத்தன்று சிரசில் சூட்டிக்கொள்ளும் மணி மகுடம், மார்பில் அணியும் நவரத்தின மாலை, இடையில் தரிக்கும் உடைவாள், கையில் ஏந்தும் செங்கோல் ஆகியவற்றை ஒரு பெரிய சித்திரத் தாம்பாளத்தில் வைத்துச் சபையில் பெரியவர்கள் முன்னாலெல்லாம் கொண்டு போனார்கள். அவர்கள் அத்தாம்பாளத்தைத் தொட்டு ஆசி கூறினார்கள். பின்னர், ஆஸ்தானப் புலவராகிய நல்லன் சாத்தனார் எழுந்து நின்றார். அவருக்குப் பின்னால் கையில் யாழ் பிடித்த மங்கை ஒருத்தி நின்று, யாழின் நரம்புகளை மீட்டி இனிய சுருதியை எழுப்பினாள். புலவர் நல்லன் சாத்தனார் சோழ குலத்தின் தொல் பெருமையையும், அக்குலத்தில் பரம்பரையாக வந்து புகழ் பெற்ற வீர மன்னர்களின் வரலாற்றையும் இசையுடன் கலந்த சந்தப் பாடலாகப் பாடலுற்றார்.

“சூரிய வம்சத்திலே தோன்றிய மனுமாந்தாதவின் குலத்தில் சிபி என்னும் மன்னர் மன்னன் இருந்தான். அவன் ஒரு புறாவுக்குத் தான் அளித்த வாக்கை நிறைவேற்றி அதன் உயிரைக் காப்பதற்காகத் தன் உடலின் சதையை அறுத்துக் கொடுத்தான். அத்தகைய சிபியின் வம்சத்தில், அவனுக்குப் பின் தோன்றியவர்கள் ‘செம்பியன்’ என்று குலப்பெயர் சூட்டிக்கொண்டு பெருமையடைந்தார்கள். செம்பியர் குலத்தில் இராஜ கேசரி என்று ஒரு பேரரசன் தோன்றினான். அவன் மகன் பரகேசரி என்று புகழ் பெற்றான். இவர்களுக்குப்பின் தோன்றிய மன்னர்கள் கோஇராஜ கேசரி என்றும், கோப்பரகேசரி என்றும் மாற்றி மாற்றிப் பட்டம் சூட்டிக் கொண்டு வந்தார்கள். பசுவுக்கு நீதி வழங்குவதற்குத் தன் அருமைப் புதல்வனைப் பலி கொடுத்த சோழ மன்னர் மனுநீதிச் சோழன் என்று பெயர் பெற்றான். இவனுக்குப் பிற்காலத்தில் பூம்புகார் நகரில் கரிகால் பெருவளத்தான் என்னும் மன்னன் மூவுலகங்களிலும் தன் புகழைப் பரப்பி விளங்கினான். அவன் சோழ நாட்டுப் பெரும்படையுடன் வடக்கே இமயமலை வரையில் படையெடுத்துச் சென்று, அம்மலையின் பனி மூடிய சிகரத்தில் சோழ குலத்துப் புலி இலச்சினையைப் பொறித்தான். இவன் வழியில் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, குளமுற்றத்துத் துஞ்சியக்கிள்ளி வளவன், சிவபெருமானுடைய பரம பக்தனாகிய கோப்பெருஞ்சோழன் ஆகியவர்கள் இப்புராதன குலத்துக்குப் பெயரும் புகழும் அளித்துச் சிவபதம் அடைந்தார்கள்.”

“உலகத்துக்கெல்லாம் ஒளி அளிக்கும் சூரிய பகவானைக் கூட மாரிக்காலத்து மேகங்கள் மறைத்து விடுவது போல், சூரியனுடைய பரம்பரையில் வந்த சோழர் குலத்தைச் சில காலம் பல்லவ பாண்டியப் பகை மேகங்கள் மறைந்திருந்தன. அந்த மேகங்களைச் சிதற அடிக்கும் வஜ்ராயுதம் ஏந்திய தேவேந்திரனுக்கு இணையாக விஜயாலயச் சோழர் தோன்றினார். அந்தச் சோழர் குலப் புலியைக் கண்டதும் பெரும் பிடுகுமுத்தரையன் என்னும் எலி பீதி கொண்டு மாண்டு மறைந்தது. பல்லவர்களும் பாண்டியர்களும் மற்றும் பல அரசர்களும் விஜயாலயச் சோழரின் நட்பைக் கோரி அனுப்பிய தூதுவர்கள் சதா காலமும் அந்த மன்னரின் அரண்மனை முற்றத்தில் காத்திருந்தார்கள். அவ்விதம் உதவி கோரி வந்த அரசர்களுக்கு அபயம் அளித்து உதவி செய்யும் பொருட்டு விஜயாலயச் சோழர் பற்பல போர்க்களங்களுக்குச் சென்று போர் புரிந்து தமது திருமேனியில் தொண்ணூற்றாறு விழுப்புண்களைப் பெற்றவரானார்.”

“விஜயாலயச் சோழரின் திருக்குமாரர் ஆதித்த சோழர் திருப்புறம்பயம் போர்க்களத்தில் பல்லவன் அபராஜிதன் பாண்டியனால் முறியடிக்கப்படும் தறுவாயில் இருந்தபோது, ஆதித்த சோழர் முயற்கூட்டதில் புலி புகுவதைப் போல் புகுந்து பாண்டிய சைன்யத்தைச் சின்னாபின்னம் செய்தார். பின்னர், தாம் செய்த உதவியை மதிக்காமல் சிநேகத் துரோகம் செய்த பல்லவனுக்குப் புத்தி புகட்டும் பொருட்டு தொண்டை நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று அபராஜிதனை அவன் இருந்த யானை மேல் பாய்ந்து வீர சொர்க்கத்துக்கு அனுப்பினார். தமது முன்னோனாகிய கோச்செங்கணானைப் பின்பற்றி, காவேரி நதி உற்பத்தியாகும் சையபர்வதத்திலிருந்து பூம்புகார் நகரம் வரையில் எண்பத்திரண்டு சிவாலயங்களை எடுப்பித்தார். ஆதித்த சோழரின் புதல்வராகிய பராந்தக சோழர் வெள்ளூரில் பாண்டியனைப் புறங்கண்ட அம்மன்னர், மதுரையும் ஈழமும் கொண்டதுடன், சேர நாட்டு வேழப்படைக்கு ஒரு சிங்கமாக விளங்கினார். வடக்கே துங்கபத்திரை நதிக்கு அப்பால் இருந்த சளுக்கர்களும் வேங்கி மண்டலத்தாரும் பராந்தக சோழருடைய பெயரைக் கேட்டு சிம்ம சொப்பனம் கண்டவர்கள் போல் நடுநடுங்கினார்கள். அவருடைய புகழைக் கேட்டுப் பொறுக்காமல் பொறாமை கொண்ட இரட்டை மண்டலத்துக் கன்னர தேவன் மாபெரும் படையைத் திரட்டிக்கொண்டு பராந்தக சக்கரவர்த்தியைப் போரில் புறங்காண வந்தான். பராந்தகரின் மூத்த புதல்வராகிய இராஜாதித்த தேவர் தக்கோலப் போர்க்களத்தில் கன்னர தேவனையும் அவனுடைய மாபெரும் கடல் போன்ற சேனையையும் முறியடித்துச் சின்னாபின்னம் செய்த பிறகு யானை மேல் துஞ்சி வீர சொர்க்கம் எய்தினார்.”

“பராந்தக சோழர் தில்லைச் சிதம்பரத்து நடராஜப் பெருமான் ஆலயத்தில் பொன் மண்டபம் கட்டிய பின்னர் அப்பெருமானுடைய இணையடிகளை அடைந்தார்! அவருடைய புதல்வர் சிவஞான கண்டராதித்த தேவர் சிவாலயப் பணிகள் செய்வதில் ஈடுபட்டிருந்து சிவ பதத்தை அடைந்தார். அவருடைய காலத்தில் தொண்டை மண்டலத்தைப் பகைவர்களுடைய ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்து சீட்புலி நாடு வரையில் புலிக் கொடியை நிலைநாட்டியவரான அரிஞ்சயத் தேவரும் தமது தமையனைப் பிரிந்து அதிக காலம் இருக்க மனமின்றி விண்ணுலகம் எய்தினார். அவருடைய திருப் புதல்வர் சுந்தர சோழ சக்கரவர்த்தி பின்னர் சோழ சிங்காதனம் ஏறினார். தான் ஒளிந்திருந்த பொந்திலிருந்து வெளியில் தலை காட்டிய பாண்டிய நரியின் மீது பாய்ந்து அதை மீண்டும் பொந்துக்குள் ஒளிந்துகொள்ளும்படி செய்தார்! சுந்தர சோழ சக்கரவர்த்தியின் வெண்கொற்றக் குடை நிழலில் மூன்று உலகமும் சிறிதும் கவலையின்றி நிர்ப்பயமாக வாழ்ந்து வருகின்றன.”

“இவ்வாறு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரப் புகழ் பெற்று விளங்கும் குலத்தில் வந்த பொன்னியின் செல்வரை எம்மொழிகளால் யாம் போற்ற முடியும்? அவருடைய புகழைச் சொல்வதற்குக் கலைமகளே பிறந்து வந்தால் ஒருவேளை சாத்தியமாகக் கூடும். எம்மைப்போன்ற மிகச் சாதாரண புலவர்களால் இயம்பத் தரமன்று…”

இவ்விதம் நல்லன் சாத்தனார் சோழ குலப் பெருமையைப் பாடி முடித்தார். அவருக்குப் பிறகு வடமொழிப் புலவர்களும், புத்தபிக்ஷுக்களும், சிவாச்சாரியார்களும், வைஷ்ணவ ஆச்சாரியர்களும் வாழ்த்துக் கூறுவதற்குக் காத்திருந்தார்கள். இவர்களை எப்படிச் சுருக்கமாக முடிக்கச் செய்வது என்பது பட்டாபிஷேக முகூர்த்தம் வைத்திருப்பவர்களுக்குப் பெரும் கவலையாகப் போய்விட்டது.

இதைக் கவனித்தார் பொன்னியின் செல்வர், நல்லன் சாத்தனார் சோழர் குலப் பெருமைக் கூறி வந்தபோதெல்லாம் கைகூப்பி நின்று வணக்கத்துடன் கேட்டுக்கொண்டு வந்தவர், இப்போது அந்தப் புலவரை நோக்கி, “ஐயா! புலவரே! இத்தனை நேரமும் தாங்கள் கூறி வந்த புகழெல்லாம் என் முன்னோரைப் பற்றியவை அல்லவோ? இந்தப் புராதனப் பெருமை வாய்ந்த சிங்காதனத்தில் அமர்ந்து மணி மகுடம் சூட்டி கொள்வதற்குத் தகுதியுள்ளவனாக நான் என்ன காரியம் செய்திருக்கிறேன்? அதைப் பற்றிக் கூறுவதற்குக் கலைமகள் இங்கே இப்போது பிரசன்னமாவது சாத்தியமில்லையாதலால் தங்களால் இயன்ற வரையில் சற்று எடுத்து இயம்பலாமே?” என்றார்.

புலவர் திகைத்து நின்றதைப் பார்த்த பொன்னியின் செல்வர், “ஐயா! தாங்கள் திகைத்து நிற்பது இயல்பே, தங்கள் பேரில் குற்றம் இல்லை. அவ்வாறு என்னுடைய புகழைப் பாட்டில் அமைத்துப் பாடும்படியாக நான் இன்னமும் ஒரு காரியமும் செய்யவில்லை. இன்றுதான் தொடங்கப் போகிறேன்!” என்றார்.


84. தியாக சிகரம்

அருள்மொழிவர்மர் தொடர்ந்து புலவரைப் பார்த்துக் கூறினார்: “ஐயா! தங்களை இன்னும் ஒன்று கேட்கிறேன். சிபிச் சக்கரவர்த்தி முதல் சிவஞான கண்டராதித்தர் வரையில் எங்கள் சோழ குலத்து மன்னர்களின் புகழைத் தாங்கள் விரித்துரைத்தீர்கள். அவையெல்லாம் இந்தப் புராதன குலத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்ற எனக்கு எவ்வளவு பொருத்தமோ, அவ்வளவு என் சிறிய தந்தையும் மகான் கண்டராதித்த சோழரின் உத்தமத் திருப்புதல்வருமான மதுராந்தகத் தேவருக்கும் பொருத்தமாகுமல்லவா?”

புலவர் “ஆம்” என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். சபையிலிருந்தவர்கள் அத்தனை பேரின் கண்களும் சுந்தர சோழரின் மறு பக்கத்தில் அடக்க ஒடுக்கத்துடன் அமர்ந்திருந்த மதுராந்தகத்தேவரின் மீது திரும்பின. இப்போதுதான் புதிதாகப் பார்ப்பதுபோல் மதுராந்தகரைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்கள். முன்னமே மிக்க கூச்சத்துடன் அமர்ந்திருந்த மதுராந்தகர் இப்போது மேலும் சங்கோசம் அடைந்தவராகி குனிந்த தலை நிமிராமலிருந்தார்.

அருள்மொழிவர்மர் தொடர்ந்து சக்கரவர்த்தியின் பக்கம் திரும்பி நின்று அவர் கம்பீரமான குரலில் கூறலுற்றார்:
“தந்தையே! தங்களிடத்தும் இங்கே விஜயம் செய்திருக்கும் பெரியோர்களுக்கும் மறக் குலத்தவர்களுக்கும் விண்ணப்பம் ஒன்று செய்து கொள்ள விரும்புகிறேன். நம் குலத்து முன்னோர்கள் அனைவரும் போர்க்களத்தில் புறமுதுகிடாத வீரர்கள் என்று புகழ் பெற்றது போலவே, நீதி நெறியிலிருந்து அணுவளவும் தவறாதவர்கள் என்ற புகழையும் அடைந்து வந்திருக்கிறார்கள். அவர்களுடைய வழியில் வந்தவனாகிய நான் நீதி நெறிக்கு மாறாக நடக்கலாகுமா? இன்னொருவருக்கு நியாயமாக உரிய பொருளையோ, பதவியையோ அபகரிக்கலாமா? நம் ஆஸ்தானப் புலவர் நம் குல முன்னோர்களைப் பற்றி அழகான சந்தக்கவியில் பாடி வந்தபோது அவர்கள் அனைவரும் என் மனக் கண்முன்னால் வந்து தரிசனம் அளித்தார்கள். இராஜ கேசரிகளும், பரகேசரிகளும் என்னைக் கருணை ததும்பும் கண்களால் நோக்கி ‘எங்கள் குலத்தில் உதித்த மகனே! இந்தச் சிங்காதனம் உனக்கு உரியதா என்று சிந்தித்துப் பார்!’ என்றார்கள். ‘குமாரா! நீ இந்தச் சிங்காதனத்தில் ஏறுவதற்கு உரியவனாக என்ன வீரச் செயல் புரிந்தாய்? சொல்?’ என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு மறுமொழி சொல்லத் தயங்கினேன். பின்னர் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அவர்களைக் கைகூப்பி வணங்கி விண்ணப்பித்துக் கொண்டேன். ‘சோழ குலத்து முதல்வர்களே! நீங்கள் செய்த அரும்பெரும் செயல்களில் ஆயிரத்தில் ஒன்றுகூட நான் செய்யவில்லை. ஆனால் உங்கள் ஆசியுடன் இனிமேல்தான் அத்தகைய காரியங்களைச் செய்யப் போகிறேன். நீங்கள் நிலைநாட்டிய சோழ குலத்துப் புகழ் மேலும் வளர்ந்தோங்கி நீடூழி நிலைத்திருக்கும்படியான காரியங்களைச் செய்யப் போகிறேன். செயற்கரிய செயல்களைச் செய்யப் போகிறேன். உலகம் வியக்கும் செயல்கள் புரியப் போகிறேன். வீராதி வீரர்களாகிய நீங்களே பார்த்து மெச்சும்படியான தீரச் செயல்களைப் புரிந்து உங்கள் எல்லாருடைய வாழ்த்துக்களையும் பெறப்போகிறேன்!’ என்று இவ்விதம் என்னுடைய குலத்து முன்னோர்களிடம் நான் தெரிவித்தேன். அவர்களும் முகமலர்ந்து எனக்கு அன்புடன் ஆசி கூறினார்கள்….”

ஆவேச உணர்ச்சி ததும்புமாறு பொன்னியின் செல்வர் கூறி வந்த சொற்களைக் கேட்டுக்கொண்டு இருந்த அச்சபையில் உள்ளோர் எல்லாரும் ரோமாஞ்சனம் அடைந்தார்கள். அவர்களில் ஒருவர் “வீரவேல்! வெற்றி வேல்!” என்று முழங்கிய ஒலி பட்டாபிஷேக மண்டபத்துக்கு வெளியிலும் கேட்டது. அங்கே கூடியிருந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டாக்கிற்று.

பொன்னியின் செல்வர் எல்லாருடனும் சேர்ந்து தாமும் “வெற்றி வேல்! வீர வேல்!” என்று முழங்கினார். முழக்கம் அடங்கியதும் கூறினார்: “தந்தையே! தங்கள் ஆசி நிறைவேறி நான் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால், முதலில் என் உள்ளத்தில் நிம்மதி ஏற்பட வேண்டும். ‘நேர்மையற்ற காரியம் எதையும் நான் செய்யவில்லை, என் குலத்து முன்னோர்கள் அங்கீகரிக்க முடியாத செயல் எதுவும் நான் புரியவில்லை, பிறருக்கு உரியதை நான் ஆசையினால் அபகரித்துக்கொண்டு விடவில்லை’ என்ற உறுதியை நான் அடையவேண்டும். குல தர்மத்துக்கு ஒவ்வாத காரியத்தை இங்கே நான் செய்துவிட்டுப் புறப்பட்டேனானால், என் உள்ளம் என்னை வருத்திக் கொண்டேயிருக்கும். பகைவர்களிடம் போரிட்டு எப்படி வெற்றி கொள்வேன்? தர்மத்தை நிலைநாட்டப் போராடுகிறோம் என்ற நம்பிக்கை என் மனத்தில் எப்படி ஏற்படும்? நான் இப்போது இன்னொருவருக்கு உரிமையாக வேண்டிய சிங்காதனத்தை அபகரித்துக்கொண்டேனென்றால், அதனால் இந்தச் சோழ குலத்துக்கு எத்தனை அபகீர்த்தி உண்டாகும்? என் வாழ்நாளெல்லாம் அதைப்பற்றி வேதனைப்பட்டுக் கொண்டிருப்பேன். வேறு எந்தப் பெரிய காரியத்திலும் மனத்தைச் செலுத்த முடியாது, உற்சாகமாகச் செய்யவும் முடியாது…”

வெகு நேரம் குனிந்த தலை நிமிராமலிருந்த மதுராந்தகத்தேவர் இப்போது பொன்னியின் செல்வரை அண்ணாந்து பார்த்து ஏதோ சொல்வதற்குப் பிரயத்தனப்பட்டார். பொன்னியின் செல்வர் வந்தியத்தேவனைப் பார்த்துச் சமிக்ஞை செய்யவே அவ்வீரன் மதுராந்தகத்தேவர் பக்கத்தில் போய் நின்று கொண்டான். மதுராந்தகர் பொன்னியின் செல்வரைப் பார்த்த போது அவர் சோழ குலத்தின் புராதன மணி மகுடத்தை தமது கரங்களில் தாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

“தந்தையே! விஜயாலய சோழர் முதல் நம் முன்னோர்கள் அணிந்து வந்த இந்த மணிமகுடத்தை தாங்கள் எனக்கு அளிக்க உவந்தீர்கள். சாமந்தர்கள், தளபதிகள், கோட்டத் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் அதை அங்கீகரித்தார்கள். ஆகையால், இந்தக் கிரீடம் இப்போது என் உடைமை அகிவிட்டது. என் உடைமையை நான் என் இஷ்டம் போல் உபயோகிக்கும் உரிமையும் உண்டு அல்லவா! என்னை விட இந்தக் கிரீடத்தை அணியத் தகுந்தவர் இங்கே இருக்கிறார். என்னை விட பிராயத்தில் மூத்தவர். இந்தச் சோழ இராஜ்யத்துக்கு என்னை விட அதிக உரிமை அவருக்கு நிச்சயமாக இருந்த போதிலும், அவர் அதைக் கோரவில்லை. நான் முடிசூட்டிக் கொண்டு சிங்காதனத்தில் அமர்வதைப் பார்த்து மகிழச் சித்தமாக இங்கு வந்திருக்கிறார். இந்த மணி மகுடத்தை மகான் கண்டராதித்தரின் குமாரரும், என் சிறிய தந்தையுமான மதுராந்தகத் தேவரின் தலையில் சூட்டுகிறேன்!”

இவ்விதம் பொன்னியின் செல்வர் சொல்லிக் கொண்டே சக்கரவர்த்தியின் மறுபக்கத்தில் வீற்றிருந்த மதுராந்தகரின் அருகிலே சென்று அவர் சிரசில் கிரீடத்தை வைத்தார். மகுடத்தை வைக்குங்கால் மதுராந்தகர் அதைத் தடுக்காமலிருக்கும் பொருட்டு வந்தியத்தேவன் முன் ஜாக்கிரதையாக அவர் பின்னால் நின்று அவருடைய தோள்கள் இரண்டையும் நட்புரிமையுடன் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். ஆனால் மதுராந்தகரோ அப்படி ஒன்றும் செய்ய முயலவில்லை. அவர் மெய்மறந்து தன் வசமிழந்து உண்மையிலேயே பித்துப்பிடித்தவர் போல் நாலுபுறமும் வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மணி மகுடத்தைச் சூட்டியதும் பொன்னியின் செல்வர் “கோப்பரகேசரி மதுராந்தக உத்தமச் சோழ தேவர் வாழ்க!” என்று முழங்கினார்.

“சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தி உத்தமச் சோழர் வாழ்க!” என்று வந்தியத்தேவன் பெருங்குரலில் கூவினான்.

இத்தனை நேரமும் பிரமித்துப் போய் நின்ற முதன்மந்திரி அநிருத்தர் முதலியவர்கள் அனைவரும் இப்போது “கோப்பரகேசரி மதுராந்தக சோழர் வாழ்க!” என்று முழங்கினார்கள்.

சுந்தர சோழர் சக்கரவர்த்தி உணர்ச்சி மிகுதியால் பேசும் சக்தியை அடியோடு இழந்திருந்தபடியால் தம் கையிலிருந்த பல நிற மலர்களை மதுராந்தக உத்தமச் சோழர் மீது தூவினார்.

அரண்மனைப் பெண்மணிகளும் சக்கரவர்த்தியைப் பின்பற்றி மதுராந்தகர் மீது மலர் மாரி பொழிந்தார்கள். மதுராந்தகர் சிறிது திகைப்பு நீங்கியதும் எழுந்து நேரே செம்பியன் மாதேவியிடம் சென்று கும்பிட்டு நின்றார். அந்த மூதாட்டியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவி போலப் பொங்கிப் பொழிந்து கொண்டிருந்தது.

“மகனே! இறைவனுடைய திருவுள்ளம் இவ்வாறு இருக்கிறது! நீயும் நானும் அதற்கு எதிராக நடப்பது எப்படிச் சாத்தியம்?” என்றார்.

பொன்னியின் செல்வர், சபையில் கூடியிருந்த மற்றப் புலவர் பெருமக்கள், பட்டர்கள், பிக்ஷுக்கள் ஆகியவர்களைப் பார்த்து, “நீங்கள் இனி உங்கள் வாழ்த்துக் கவிதைகளை உசிதப்படி மாற்றிக் கொண்டு சொல்லுங்கள்!” என்றார்.

அவர்களும் அவசர அவசரமாக வாழ்த்துக் கவிதைகளை மாற்றி அமைத்துக்கொண்டு பாடத் தொடங்கினார்கள்.

மதுராந்தக உத்தமச் சோழருக்கு மணி மகுடம் சூட்டப்பட்ட சிறிது நேரத்துக்குள்ளே அந்தச் செய்தி தஞ்சை வீதிகளில் கூடியிருந்த மக்களிடையில் பரவி விட்டது. அது விரைவாகப் பரவுவதற்கு வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் பெரிதும் காரணமாக இருந்தார்கள். பொன்னியின் செல்வர் கட்டளைபடி அவர்கள் வீதிகளில் ஆங்காங்கே ஆட்களை நிறுத்தியிருந்தார்கள். அவர்களிடமெல்லாம் அவசரமாகச் சென்று சொல்லி, “கோப்பரகேசரி உத்தமச் சோழர் தேவர் வாழ்க!” என்று முழங்கச் செய்தார்கள். இளவரசர் அருள்மொழிவர்மர் தமக்கு அளிக்கப்பட்ட இராஜ்யத்தைத் தம் சிறிய தந்தை மதுராந்தகருக்கு அளித்து விட்டார் என்று செய்தி மக்களிடையே விரைந்து பரவிக் கொண்டிருந்தது. பொன்னியின் செல்வரின் பெருங்குணத்தைக்கு இது உகந்ததே என்று அவர்கள் கருதினார்கள். ஏககாலத்தில் பலவாறு பேசிய பதினாயிரக்கணக்கான குரல்களும், “வாழ்க! வாழ்க!” என்னும் முழக்கங்களும் சேர்ந்து புயற்காற்று அடிக்கும்போது அலைகடலில் கிளம்பும் பேரொலியைப் போல் ஒலித்தன.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையின் மீது அமைத்த பொன்மயமான அம்பாரியில் அமர்ந்து மதுராந்தக உத்தமச் சோழர் பவனி கிளம்பியதும் எல்லாச் சந்தேகங்களும் மக்களுக்குத் தீர்ந்துவிட்டன. யானையின் கழுத்தில் யானைப்பாகனுடைய பீடத்தில் அமர்ந்திருப்பவர் பொன்னியின் செல்வர் என்பதைக் கண்டதும் மக்களுடைய உற்சாகம் எல்லை கடந்ததாயிற்று. “கோப்பரகேசரி மதுராந்தக உத்தமச் சோழர் வாழ்க!” என்று மக்களின் குரல்கள் முழங்கின. ஆனால் அவர்களுடைய உள்ளங்களில் பொன்னியின் செல்வரின் செயற்கருஞ் செயலே குடிகொண்டிருந்தது. அதை எண்ணியதனால் அவர்களுடைய அகங்களைப்போல் முகங்களும் மலர்ந்திருந்தன. பொன்னியின் செல்வர் மணி மகுடம் சூட்டிக்கொண்டு, பவனி வந்தால் மக்கள் எவ்வளவு குதூகலத்தை அடைந்திருப்பார்களோ, அதைவிடப் பன்மடங்கு அதிகமான குதூகலத்தை இப்போது வெளியிட்டார்கள்.

இமயமலைச் சிகரத்தில் புலி இலச்சினையைப் பொறித்த கரிகால் பெருவளத்தானைப் பொன்னியின் செல்வர் மிஞ்சிவிட்டார் என்றும், தியாக சிகரத்தில் இவர் தமது இலச்சினையை என்றும் அழியாத வண்ணம் பொறித்து விட்டார் என்றும் அறிஞர்கள் மகிழ்ந்தார்கள். சாதாரண மக்களோ, அப்படியெல்லாம் அணி அலங்காரங்களையும், உபமான உபமேயங்களையும் தேடிக் கொண்டிருக்கவில்லை. மதுராந்தகர் தலையில் மணி மகுடத்தைச் சூட்டி விட்டுப் பொன்னியின் செல்வர் பட்டத்து யானையை ஓட்டிக்கொண்டு செல்லும் காட்சி அவர்கள் உள்ளத்தைப் பரவசப்படுத்தி விட்டது. ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், வாழ்த்திக் கொண்டும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டும், மலர்களைத் தூவிக் கொண்டும், மஞ்சள் நிற அட்சதையை வாரி இறைத்துக் கொண்டும் மக்கள் ஒரே கோலாகலத்தில் தங்களை மறந்து ஆழ்ந்திருந்தார்கள்.

முடிவுரை

நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றரை ஆண்டு காலம் “பொன்னியின் செல்வன்” கதையைத் தொடர்ந்து படித்து வந்ததில் நேயர்கள் காட்டிய பொறுமையையும் ஆர்வத்தையும், அன்பையும் போற்றி வணங்குகிறேன்.

கதை ஆரம்பித்துச் சில மாதங்கள் வரையில் நேயர்களிடையே இது இவ்வளவு ஆர்வத்தை உண்டாக்குமென்று தோன்றவில்லை. பழந்தமிழ்நாட்டுச் சரித்திரப்பெயர்கள் சிலருக்கு பெரிதும் தலைவேதனையை உண்டாக்கி வந்ததாகத் தெரிந்தது. போகப் போக, அந்தத் தலைவேதனையை நேயர்கள் எப்படியோ போக்கிக் கொண்டார்கள். இதற்கு முன்னால் எந்தத் தொடர் கதையையும் நேயர்கள் இவ்வளவு ஆர்வத்துடன் படித்ததில்லை என்று சொல்லும் நிலைமை வெகு விரைவில் ஏற்பட்டது. அதே ஆர்வம் தொடர்ந்து நிலைபெற்று இருந்து வந்தது.

கதை ஆரம்பித்த மறுவருடம் ஆடிப் பதினெட்டாம் பெருக்குத் தினத்தில் பரமக்குடியிலிருந்த பல நண்பர்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார்கள். “பொன்னியின் செல்வன்” முதல் அத்தியாயம் பதினெட்டாம் பெருக்குத் திருவிழாவன்று வீர நாராயண ஏரிக் கரையில் தொடங்குகிறது அல்லவா?

பின்னர் அடிக்கடி பல நேயர்கள் கடிதம் எழுதித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தப் பாராட்டுதல்களையெல்லாம் கதையின் ஆசிரியருக்குரியவையாக நான் கருதவில்லை. பழந்தமிழ் நாட்டின் சரித்திரத்துக்குரிய பெருமையாகவே கருதினேன். உண்மையிலேயே, தமிழ்நாட்டின் பழைய வரலாறு, தமிழர்கள் மிகவும் பெருமிதம் கொள்ளக்கூடிய வரலாறுதான். சென்ற சில ஆண்டுகளாகத்தான் தமிழகத்தின் பழைய சரித்திர ஆராய்ச்சி முறையாக நடைபெற்று வருகிறது. கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயங்களும் படிக்கப்பட்டு வருகின்றன. வரலாற்று ஆராய்ச்சியாளர் அந்த ஆதாரங்களை வைத்துத் தமிழகத்தின் சரித்திரத்தை அங்கங்கே பகுதி பகுதியாக நிர்மாணித்து வருகின்றார்கள்.

சரித்திரத்தின் எந்த ஒரு காலப் பகுதியைப்பற்றியும் பரிபூரணமாகவும், ஐயந்திரிபுக்கு இடமின்றியும் வரலாறு எழுதப்பட்டு விட்டதாகச் சொல்லுவதற்கில்லை.

ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னால் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு நீடித்து அரசு புரிந்த பல்லவ சக்கரவர்த்திகளின் வரலாறு ஓரளவு ஆராயப்பட்டிருக்கிறது. இந்த இருநூறு ஆண்டுகளைப் பற்றிய சரித்திர வரலாறு விவரங்கள் நன்கு தெரிய வந்திருக்கின்றன.

பின்னர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கி முந்நூறு ஆண்டு புகழுடன் விளங்கிய விஜயாலய சோழ பரம்பரையின் காலத்து நிகழ்ச்சிகளும் ஓரளவு ஆராயப்பட்டிருக்கின்றன. இக்காலத்து நிகழ்ச்சிகளைப்பற்றித் திட்டமாக நிர்ணயிக்க முடியாதபடி பல ஐயப்பாடுகள் தோன்ற இடமிருக்கிறது. ஆயினும், சில சரித்திரச் சம்பவங்கள் மறுக்க முடியாத தகுந்த ஆதாரங்களுடன் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றுள் எல்லாம் மிக முக்கியமானது, தமிழகத்துக்கு இணையற்ற பெருமையை அளிக்கக்கூடியது, சரித்திரத்திலேயே ஒப்பற்ற சம்பவம் என்று கொண்டாடுவதற்குத் தகுதியானது ஒன்று உண்டு. சுந்தர சோழ மன்னரின் இரண்டாவது திருக்குமாரனாகிய அருள்மொழிவர்மன், (பிற்காலட்டில் இராஜ ராஜ சோழன் என்று புகழ் பெற்ற பேரரசன்), இளம் பிராயத்தில் எளிதில் பெற்றிருக்கக் கூடிய சோழ சாம்ராஜ்யத்தை வேண்டாம் என்று மறுத்து, உத்தம சோழனுக்குப் பட்டம் கட்டி வைத்ததுதான்.

“சுந்தரசோழனுக்குப் பின்னர் அவனுடைய மகன் அருள்மொழிவர்மனே சோழ சிங்காதனம் ஏறி அரசாள வேண்டும் என்று சோழ நாட்டு மக்கள் பெரிதும் விரும்பினார்கள். ஆயினும் அருள்மொழிவர்மன் தன் பெரிய பாட்டனாகிய கண்டராதித்தனுடைய புதல்வனும், தனக்குச் சிறிய தகப்பன் முறையிலிருந்தவனுமான உத்தமசோழனுடைய உரிமையை மதித்து அவனுக்கு முடிசூட்டி வைத்தான்.” என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன.

இந்த நிகழ்ச்சியை மற்றும் பல செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் அந்தக் காலத்தில் அறிஞர்கள் பலரால் எழுடப்பட்ட நூல்களும் உறுதிப்படுத்துகின்றன.

அருள்மொழிவர்மன் திருமுடி சூட்டிக் கொள்ளவேண்டும் என்று இராஜ்யத்தின் மக்கள் விரும்பினார்கள். உற்றார் உறவினர் விரும்பினார்கள். அக்காலத்தில் மிக்க வலிமை பெற்றிருந்த சோழப் பெரும் படையின் வீரர்கள் அனைவரும் விரும்பினார்கள். அவ்வாறு எல்லாவித ஆதரவும் அனுகூலங்களும் அருள்மொழிவர்மனுக்கு இருந்தும் அவன் சாம்ராஜ்யத்தை உத்தம சோழனுக்கு அளித்துப் பட்டம் கட்டுவித்தான்.

உலக சரித்திரத்திலும், காவிய இதிகாசங்களிலும் இதற்கு ஒப்பான இன்னொரு அரும் பெரும் செயலைக் காணுதல் அரிது. அசோக சக்கரவர்த்தி கலிங்கநாட்டுப் போரில் மகத்தான வெற்றி அடைந்த பிறகு, “இனி யுத்தமே வேண்டாம்” என்று முடிவு செய்ததைத்தான் அருள்மொழிவர்மனின் தியாகத்துக்கு இணையாகக் கூறலாம்.

“பொன்னியின் செல்வன்” கதையில் சிகரமான சம்பவம் அருள்மொழிவர்மனின் ஒப்பற்ற தியாகமே ஆகும். கதையில் வரும் சகல நிகழ்ச்சிகளும் இந்த மகத்தான சம்பவத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. அதனாலேயே இக்கதையின் ஐந்தாவது பகுதிக்கு “தியாக சிகரம்” என்று பெயர் தரப்பட்டது.

இக்கதையின் சிகரமான நிகழ்ச்சி “பொன்னியின் செல்வன்” செய்த சாம்ராஜ்ய தியாகந்தான் என்பதைக் கதையைப் படித்து வந்த நேயர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். யாராவது அதை அறியவில்லையென்றால், அதற்குக் காரணம் ஆசிரியருடைய ஆற்றல் குறைவு என்றே சொல்ல வேண்டும். அந்தக் குறையைக் கதை ஆசிரியர் தாழ்மையுடன் ஒப்புக் கொண்டு, நேயர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டியதுதான்.

“பொன்னியின் செல்வன்” கதை வெளியாகி வந்தபோதெல்லாம் நேயர்கள் ஒப்பற்ற ஆர்வம் காட்டி வந்தார்கள். பலர் பாராட்டிக் கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தியும் வந்தார்கள். நேயர்களிடம் அப்போதெல்லாம் கருத்து வேற்றுமையே காணப்படவில்லை. கதை முடிவடைந்த பிறகும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்திருக்கின்றன. இக்கடிதங்களில் பெரிதும் கருத்து வேற்றுமை காணப்படுகிறது. பாதிப்பேர் கதையைப் பாராட்டிக் கதையின் முடிவையும் பாராட்டியிருக்கிறார்கள். இன்னும் பாதிப்பேர் கதை முடிந்த விதத்தைக் குறை கூறியிருக்கிறார்கள். சட்டென்று முடித்துவிட்டதற்காகவும் பல கதாபாத்திரங்கள் பின்னால் என்ன ஆனார்கள் என்று சொல்லாமலே கதையை முடித்து விட்டதற்காகவும் வருந்தியிருக்கிறார்கள். காரசாரமாகக் கண்டனங்கள் எழுதியிருப்பவர்களும் உண்டு.

கண்டனமாகவும் குறை சொல்லியும் எழுதியிருப்பவர்கள் அனைவரும் கதையை இன்னும் வளர்த்தி எழுதியிருக்கலாம் என்றே அபிப்பிராயம் தெரிவித்திருப்பதை எண்ணி தொடர்ந்து திருப்தி அடைகிறேன். மூன்றரை ஆண்டு தொடர்ந்து வெளியாகி வந்த கதையைக் குறித்து அலுப்பு அடைந்து “எப்போது முடிக்கப் போகிறீர்?” என்று கேளாமல், “ஏன் இப்படித் திடுதிப்பென்று முடித்துவிட்டீர்? ஏன் மேலும் வளர்த்தி எழுதியிருக்கக்கூடாது?” என்று நேயர்கள் கேட்பது ஒருவாறு மகிழ்ச்சி அடைவதற்குரிய நிலைமைதான். ஆயினும் நேயர்களில் ஒரு பெரும் பகுதியினரைத் திருப்தி செய்ய முடியாமற் போனது பற்றி வருந்துகிறேன்.

“பொன்னியின் செல்வன்” கதையை இப்போது முடித்திருப்பது போல் முடித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு:

முன்னமே குறிப்பிட்டதுபோல், கதையில் சிகரமான நிகழ்ச்சி பொன்னியின் செல்வன் தன் கையில் கிடைத்த மகாசாம்ராஜ்யத்தைத் தியாகம் செய்து இன்னொருவருக்கு முடிசூட்டியதேயாகும். ஆகையால், அந்தப் பெரு நிகழ்ச்சிக்குப் பிறகு கதையை வளர்த்திக் கொண்டு போவது ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல, ‘கிளைமாக்ஸு’க்குப் பிறகு, ‘ஆண்டி கிளைமாக்ஸு’க்குப் போவதாக முடியும். நேயர்கள் பலர் இப்போது சீக்கிரம் முடித்துவிட்டதற்காகக் குறை சொன்னாலும், இந்தக் கதையை மேலும் வளர்த்தால் விரைவில் அதே நேயர்கள் வேறுவிதமாகக் குறைப்பட நேரிடும். “எப்போது முடிக்கப் போகிறீர்?” என்று ஆசிரியரை நேயர்கள் கேட்கும் நிலைமை விரைவில் வந்துவிடும்.

பொதுவாக ‘நாவல்கள்’ எழுதுவதற்கும், முக்கியமாகச் ‘சரித்திர நவீனங்கள்’ எழுதுவதற்கும் சட்ட திட்டங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. (அப்படி ஏற்பட்டிருந்தால் அவற்றை நான் படித்ததில்லை) ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய முறையை வகுத்துக் கொண்டு எழுதுகிறார்கள். ஆயினும் முழுவதும் கற்பனையாக எழுதப்படும் சமூக வாழ்க்கை நவீனங்களுக்கும், சரித்திர சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதும் நவீனங்களுக்கும் ஒரு வேற்றுமை அவசியம் இருந்து தீருகிறது.

முற்றிலும் கற்பனை செய்யப்பட்ட கதைகளில் வரும் பாத்திரங்களில் எல்லாருக்கும் கதை ஆசிரியர் சுலபமாக முடிவு சொல்லிவிடலாம். கதாநாயகனும் கதாநாயகியும் கலியாணம் செய்து கொண்ட பிறகோ, அல்லது கதாநாயகன் தூக்குமேடை ஏறியும் கதாநாயகி கடலில் விழுந்தும் இறந்த பின்னரோ, கதைகளில் வரும் மற்றப் பாத்திரங்களை ஒரு பாராவில் சரிப்படுத்திவிடலாம்.

கலியாணம் செய்து கொண்ட தம்பதிகள் பிள்ளை குட்டி பேரர்களைப் பெற்று நெடுங்காலம் சுகமாக வாழ்ந்தார்கள் என்றும், மற்ற கதாபாத்திரங்களில் நல்லவர்கள் எல்லாரும் சுகமடைந்தார்கள் என்றும், கெட்டவர்கள் எல்லாரும் பல கஷ்டங்கள் பட்டுச் செத்தொழிந்தார்கள் அல்லது தக்க தண்டனை அடைந்தார்கள் என்றும் கூறிக் கதையைத் திருப்திகரமக முடிக்கலாம். சரித்திரக் கதைகளை இந்த விதத்தில் முடிப்பது அவ்வளவு எளிய காரியமும் அன்று; உசிதமும் ஆகாது.

சரித்திரக் கதைகளில் வரும் பாத்திரங்களில் இறந்து போனவர்களைத் தவிர எல்லாரும் பிற்காலத்திலும் பற்பல காரியங்களில் ஈடுபடுவார்கள். வெற்றியோ தோல்வியோ சுகமோ துக்கமோ அடைவார்கள். அவற்றைக் குறித்து முன்னதாகவே சொல்லி விடுவது முறையாகுமா? அல்லது ஆதாரங்களுடன் கூடிய விவரங்கள் இல்லாமல் முடிவான நிகழ்ச்சிகளைப் பற்றிமட்டும் சொல்லுவதுதான் உசிதமாகுமா? கதையை எந்தக் காலத்தில் முடிக்கிறோமோ, அந்தக் காலத்தில் பாத்திரங்கள் இருந்த நிலைமையிலேயே விட்டு விடுவதுதான் முறையென்று கருதினேன். ஆனால் இது பல நேயர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லையென்பதைக் காண்கிறேன். ஓரளவேனும் அவர்களைத் திருப்தி செய்விக்க வேண்டியது அவசியம் என்று உணருகிறேன்.

பல நேயர்கள் அறிந்துகொள்ள விரும்பும் விவரங்களைக் கேள்விகளின் ரூபத்தில் இதோ கோவைப் படுத்தித் தந்திருக்கிறேன்.

    1. வந்தியத்தேவர் இளவரசி குந்தவைப் பிராட்டியை மணந்தாரா?

    2. கோட்டைத் தளபதி சின்னப்பழுவேட்டரையர் என்ன ஆனார்?

    3. வீர வைஷ்ணவனான ஆழ்வார்க்கடியான் என்ன செய்தான்?

    4. பொன்னியின் செல்வரின் பிரயாணம் என்ன ஆயிற்று?

    5. பழைய மதுராந்தகரும், சின்னப் பழுவேட்டரையரின் மகளும் என்ன ஆனார்கள்?

    6. நந்தினியினால் முடி சூட்டப்பட்ட இளம் பாண்டியனைப் பற்றிய விவரம் என்ன?

    7. நந்தினியின் கதி என்ன?

    8. வானதியின் விஷயமாகக் குடந்தைச் சோதிடர் கூறியவை பலித்தனவா?

    9. ஆபத்துதவிகள் என்ன செய்தார்கள்?

மேற்கூறிய கேள்விகள் பலவற்றுக்குப் பதில்களை, தமிழ்நாட்டுச் சரித்திரம் படித்தவர்கள் தாங்களே அறிந்து கொள்வார்கள். ஆயினும் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் பொருட்டு மேற்கண்ட கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் தந்து விடுகிறேன்.

1. மேலும் பல இடையூறுகளைத் தாண்டிய பிறகு குந்தவையும் வந்தியத்தேவனும் மணம் செய்து கொள்கிறார்கள். இருவரும் சோழசாம்ராஜ்யத்தில் மிக மதிக்கப்படுகிறார்கள். தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள கல்வேட்டு ஒன்றில், “இராஜ ராஜ தேவரின் திருத்தமக்கையார், வல்லவரையர் வந்தியத்தேவரின் மகாதேவியார், ஆழ்வார் பராந்தகர் குந்தவையார்” என்று பொறிக்கப்பட்டு விளங்குகிறது.

2. இரும்பு மனிதராகிய சின்னப்பழுவேட்டரையர் உயிர் பிழைத்துப் பல கஷ்டங்களை அனுபவித்த பிறகு ஊருக்குத் திரும்பி வருகிறார். சோழ சாம்ராஜ்யத்துக்குப் பல அரிய சேவைகள் புரிகிறார்.

3. வீர வைஷ்ணவன் ஆழ்வார்க்கடியான் தனது ஒற்றறியும் வேலையை மேலும் நடத்திக் கொண்டிருக்கிறான். நந்தினியும், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளும் செய்யும் சதித் திட்டங்களை அறிந்து வந்து சொல்கிறான்.

4. பொன்னியின் செல்வர் வந்தியத் தேவருடன் பெரிய கடற்படை தயாரித்துக் கொண்டு கடற்கொள்ளைக்காரர்களை அடக்கிச் சோழ சாம்ராஜ்யத்தைக் கடல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளில் நிலைநாட்டுகிறார். உத்தம சோழருக்குப் பட்டம் கட்டிப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்ததும், பொன்னியின் செல்வர் சிங்காதனம் ஏறுகிறார். ‘இராஜ ராஜ சோழன்’ என்ற பட்டத்துடன் நீண்டகாலம் சோழ சாம்ராஜ்யத்தை ஆளுகிறார்.

5. பழைய மதுராந்தகன் ஆபத்துதவிகளின் தூண்டுதலாலும் ஈழ மன்னன், சேரமன்னன் உதவிகொண்டும் பாண்டிய நாட்டைக் கவர்ந்து முடிசூட்டிக் கொள்ள முயல்கிறான். அவனுடைய முயற்சி பெரிதும் பலம் பெறுகிறது. இராஜராஜ சோழர் பட்டத்துக்கு வந்தபிறகு அமரபுஜங்கன் நெடுஞ்செழியனைப் போரில் வெல்கிறார். அவன் வீர சொர்க்கம் எய்துகிறான்.

6. திருப்புறம்பயம் காட்டில் முடிசூட்டப்பட்ட இளம் பாண்டியனும் பாண்டிய ராஜ்யத்துக்கு உரிமை கொண்டாடுகிறான். அவன் போர்க்களத்திலிருந்து தப்பிச் சென்று மறுபடியும் நாட்டைப் பெறச் சதிசெய்கிறான். இவன் பிற்காலத்தில் இராஜேந்திர சோழனால் போரில் முறியடிக்கப் படுகிறான்.

7. நந்தினி அமரபுஜங்கன் இறந்த பிறகு தானும் உயிர் துறக்கிறாள். அதற்கு முன்னால் அவளை இராஜ ராஜ சோழர் சந்திக்கிறார். அவரிடம் தன் பிறப்பைக் குறித்த உண்மையையும், கரிகாலனின் மரணத்தைப் பற்றிய உண்மையையும் கூறிவிட்டு இறக்கிறாள்.

8. குடந்தைச் சோதிடரின் கூற்றுக்கள் வானதியின் விஷயத்தில் பலிக்கின்றன. (சோதிடர் சாஸ்திரம் பார்த்துச் சொன்னாரா ஊகத்தினால் சொன்னாரா, நாம் அறியோம்) வானதிக்குப் பிறக்கும் குழந்தையான இராஜேந்திரன் ‘கங்கையும் கடாரமும் கொண்ட சோழன்’ என்று பிற்காலத்தில் சரித்திரத்தில் புகழ் பெறுகிறான். ஆனால் வானதி தன் சபதத்தை நிறைவேற்றிவிட்டு உயிர் துறக்கிறாள். இராஜ இராஜனுடன் சோழ சிங்காதனம் ஏறுகிறவள் ‘உலகமகாதேவி’ என்னும் திருநாமம் கொண்ட இன்னொரு ராணியாவாள்.

9. ஆபத்துதவிகள் பாண்டிய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் மேலும் ஈடுபட்டு வருகிறார்கள். நந்தினி உயிரோடு இருந்த வரையில் ஆதித்த கரிகாலனுடைய அகால மரண இரகசியம் பற்றி விசாரிக்கப்படவில்லை. அதில் நந்தினியின் பெயரும் வரும் என்ற காரணத்தினால்தான். நந்தினியின் மரணத்துக்குப் பிறகு, இராஜராஜ சோழன், ரவிதாஸன் முதலிய ஆபத்துதவிகளைக் கைப்பற்றித் தண்டனை விதித்து அவர்களுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் கட்டளை பிறப்பிக்கிறான்.

நேயர்கள் அவ்வளவாகக் கவலைப்படாத இன்னும் சில கதாபாத்திரங்களைப் பற்றிய விவரங்களையும் கூறிவிடுகிறேன்.

சுந்தர சோழர் காஞ்சி பொன்மாளிகையில் மூன்று ஆண்டு காலம் வசித்துவிட்டு அங்கேயே உயிர் துறந்து ‘பொன்மாளிகைத்துஞ்சிய தேவர்’ என்று பெயர் பெறுகிறார். அவருடைய அருமை மனைவி வானமாதேவி, மலையமானுடைய மகள் அவருடன் உடன்கட்டை ஏறிச் சொர்க்கம் அடைகிறாள்.

பார்த்திபேந்திரன் குந்தவை தன்னை நிராகரித்துவிட்ட கோபத்தினால் காஞ்சியில் சுதந்திர பல்லவ ராஜ்யத்தை நிலைநிறுத்தப் பார்க்கிறான். அதில் தோல்வியடைந்து சந்ததியில்லாமல் மாண்டு போகிறான்.

கந்தமாறன் பாலாற்றின் வடமேற்கில் புதிய மாளிகை கட்டிக் கொண்டு சோழ சாம்ராஜ்யத்துக்குத் தொண்டு செய்து வாழ்கிறான். அவனுக்குப் பின்னால் சம்புவரையர் குலம் மிகப் பிரசித்தி அடைகிறது.

நேயர்களைத் திருப்திபடுத்துவதற்காகவே மேலே கண்டவற்றை எழுதினேன். உண்மையில் இவையெல்லாம் இன்னும் ஒரு பெரிய சரித்திரக் கதைக்கு ஆதாரமாகக் கூடிய முக்கிய நிகழ்ச்சிகளாகும்.

உத்தமசோழருக்குப் பின்னால் சிங்காதனம் ஏறிய இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன், வீர இராஜேந்திரன், குலோத்துங்க சோழன் முதலிய சோழப் பேரரசர்களின் காலத்திய மகோந்நத நிகழ்ச்சிகள் ‘பொன்னியின் செல்வன்’ கதையைப்போல் பல சரித்திரக் கதைகள் புனைவதற்கு ஆதாரமாகக் கூடியவை.

இந்தக் கதையின் ஆசிரியரைக் காட்டிலும் அறிவிலும் ஆற்றலிலும் ஆராய்ச்சியிலும் மிக்கவர்கள் வருங்காலத்தில் சோழ சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட பல மகோந்நதமான நவீனங்களை எழுதித் தமிழகத்துக்கு மேலும் மேலும் தொண்டு செய்வார்கள் என நம்புகிறேன்.

நன்றி: http://poniyinselvan.blogspot.com/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *