பொன்னியின் செல்வன்

0
கதையாசிரியர்: ,
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 22, 2023
பார்வையிட்டோர்: 3,038 
 
 

(2012ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

51-60 | 61-70 | 71-80

61. கண் திறந்தது!

முதலில் நதி வெள்ளத்திலும், பின்னர் உடைப்பு வெள்ளத்திலும் அகப்பட்டுத் திண்டாடியபடியால் பெரிதும் களைப்படைத்திருந்த பழுவேட்டரையர் வெகு நேரம் நினைவற்று, உணர்ச்சியற்று, கட்டையைப் போல் கிடந்து தூங்கினார். வேண்டிய அளவு தூங்கிய பிறகு, இலேசாக நினைவுகளும், கனவுகளும் தோன்றின. பழுவேட்டரையர் திடுக்கிட்டு எழுந்தார். பொழுது நன்றாக விடிந்திருந்தது. புயலின் உக்கிரம் தணிந்திருந்தது. மழை நின்று போயிருந்தது. ‘சோ’ வென்ற சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. கோவில் வெளி மண்டபத்தின் விளிம்பில் அருகில் வந்து நின்று சுற்று முற்றும் பார்த்தார். அவர் கண்ட காட்சி உற்சாகமளிப்பதாக இல்லை.

கிழக்குத் திசையிலும், தெற்குத் திசையிலும் ஒரே வெள்ளக் காடாக இருந்தது. மேற்கே மட்டும் கோவிலை அடுத்துச் சிறிது தூரம் வரையில் வெள்ளம் சுழி போட்டுக் கொண்டு, துள்ளிக் குதித்துக் கொண்டு போயிற்று. அப்பால் குட்டை மரங்களும் புதர்களும் அடர்ந்திருந்த காட்டுப் பிரதேசம் வெகு தூரத்துக்குக் காணப்பட்டது. அது திருப்புறம்பியம் கிராமத்தை அடுத்த காடாயிருக்க வேண்டுமென்றும், அந்தக் காட்டின் நடுவில் எங்கேயோதான் கங்க மன்னன் பிருதிவீபதிக்கு வீரக் கல் நாட்டிய பழைய பள்ளிப்படைக் கோயில் இருக்க வேண்டும் என்றும் ஊகம் செய்தார்.

திருப்புறம்பியம் கிராமத்தை அடைந்தால் அங்கே ஏதேனும் உதவி பெறலாம். கவிழ்ந்த படகிலிருந்து தம்மைப்போல் வேறு யாரேனும் தப்பிப் பிழைத்திருந்தால், அவர்களும் அங்கே வந்திருக்கக்கூடும். இந்தக் கோவிலைச் சுற்றி உடைப்பு வெள்ளம் இப்படிச் சுழி போட்டுக்கொண்டு ஓடுகிறதே! இதை எப்படித் தாண்டிச் செல்வது? உடைப்பு வெள்ளம் வடிந்த பிறகு போவது என்றால், எத்தனை நாள் ஆகுமோ தெரியாது. அதுவரையில் இக்கோயிலிலேயே இருக்க வேண்டியதுதான். வெள்ளம் வடியும் வரையில் அங்கேயே பொறுமையுடன் காத்திருக்க வேண்டியதுதான். அதைத் தவிர வேறு என்ன செய்வது? அன்று பகல் சென்றது. இன்னும் ஓர் இரவும், பகலும் கழிந்தன. புயல், தான் சென்றவிடமெல்லாம் அதாஹதம் செய்து கொண்டே மேற்குத் திசையை நோக்கிச் சென்றுவிட்டது. தூவானமும் விட்டுவிட்டது. கொள்ளிடத்து வெள்ளம் குறைந்தது போலக் காணப்பட்டது.

கடைசியாக, அன்று சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் கோயிலுக்கு எதிரேயிருந்த பெரும் வேப்பமரம் விழுந்தது. விழுந்த மரம் நல்ல வேளையாக உடைப்பு வெள்ளத்தின் மேற்குக் கரையைத் தொட்டுக் கொண்டு கிடந்தது. அதன் வழியாக அப்பால் செல்வதற்குப் பழுவேட்டரையர் ஆயத்தமானார். வேகமாக மரப் பாலத்தின் பேரில் அவரால் செல்ல முடியவில்லை. மெள்ள மெள்ளத் தட்டுத் தடுமாறிக் கிளைகளை ஆங்காங்கு பிடித்துக் கொண்டுதான் போக வேண்டியிருந்தது. அக்கரையை அடைந்ததும், காட்டுப் பிரதேசத்துக்குள்ளே ஒற்றையடிப் பாதை ஒன்று போவது தெரிந்தது. அந்த வழியிலே விரைவாக நடந்தார்.

அது முன்னிலாக் காலமானாலும், வானத்தில் இன்னும் மேகங்கள் சூழ்ந்திருந்தபடியால் நல்ல இருட்டாகவே இருந்தது. காட்டுப் பிரதேசத்தில் என்னவெல்லாமோ சத்தங்கள் கேட்டன.

ஒற்றையடிப் பாதை சிறிது தூரம் போய் நின்று விட்டது. ஆனால் பழுவேட்டரையர் அத்துடன் நின்றுவிட விரும்பவில்லை. காட்டுப் புதர்களில் வழிகண்ட இடத்தில் நுழைந்து சென்றார். ஒரு ஜாம நேரம் காட்டுக்குள் அலைந்த பிறகு சற்றுத் தூரத்தில் வெளிச்சம் ஒன்று தெரிவதைப் பார்த்தார். அந்த வெளிச்சம் நின்ற இடத்தில் நில்லாமல் போய்க் கொண்டிருந்தபடியால் அது வழி கண்டுபிடிப்பதற்காக யாரோ கையில் எடுத்துச் செல்லும் சுளுந்தின் வெளிச்சமாகவே இருக்க வேண்டும் என்பது தெரிந்தது.

அந்த வெளிச்சத்தைக் குறி வைத்துக் கொண்டு வெகு விரைவாக நடந்தார். கடைசியாக, அந்தச் சுளுந்து வெளிச்சம் காட்டின் நடுவே ஒரு பாழடைந்த மண்டபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுபோல் காட்டிவிட்டு உடனே மறைந்தது. அந்த மண்டபம் திருப்புறம்பியத்திலுள்ள பிருதிவீபதியின் பள்ளிப்படைக் கோவில்தான் என்பதைப் பழுவேட்டரையர் பார்த்த உடனே தெரிந்துகொண்டார். பள்ளிப்படையை நெருங்கி ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக நின்று காது கொடுத்துக் கேட்டார்.

ஆமாம்; அவர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. இரண்டு பேர் பேசிகொண்டிருந்தது கேட்டது. உரத்த குரலில் பேசிய படியால் பேசியது தெளிவாகக் கேட்டது.

“மந்திரவாதி! உன்னை எத்தனை நேரமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன், தெரியுமா? நீ ஒருவேளை வர முடியாமற் போய் விட்டதோ, அல்லது உன்னை யமன் தான் கொண்டு போய் விட்டானோ என்று பயந்து போனேன்!” என்றான் தேவராளன்.

மந்திரவாதி ரவிதாஸன் கடகட வென்று சிரித்தான். “யமன் என்னிடம் ஏன் வருகிறான்? சுந்தர சோழனையும், அவனுடைய இரண்டு பிள்ளைகளையும்தான் யமன் நெருங்கிக் கொண்டிருக்கிறான். நாளைய தினம் அவர்களுடைய வாழ்நாள் முடிந்துவிடும்!” என்றான் மந்திரவாதி.

அச்சமயம் வானத்தையும் பூமியையும் பிரகாசப்படுத்திக் கொண்டு மின்னல் ஒன்று மின்னியது.


62. மண்டபம் விழுந்தது

மின்னல் வெளிச்சத்தில், அங்கே நின்று பேசியவர்கள் இருவருடைய தோற்றங்களையும் பழுவேட்டரையர் ஒரு கணம் பார்த்துத் தெரிந்து கொண்டார். அவர்களில் ஒருவனாகிய ரவிதாஸனை இரண்டொரு தடவை அவர் தமது அரண்மனையிலேயே பார்த்ததுண்டு. அவன் மந்திர வித்தைகளில் தேர்ந்தவன் என்று நந்தினி கூறியதுண்டு. அவருடைய சகோதரன் காலாந்தக கண்டன் இந்த மந்திரவாதியைப் பற்றியே சந்தேகப்பட்டு அவரை எச்சரித்திருக்கிறான். இன்னொருவன், அவனைத் தாம் பார்த்தது அதுதானா முதல் தடவை? நெடுங்காலத்துக்கு முன்பு அவரால் அரசாங்க உத்தியோகத்திலிருந்து விலக்கப்பட்ட பரமேச்சுவரனா அவன்?… இருக்கட்டும்; இவர்கள் மேலும் என்ன பேசுகிறார்கள் கேட்கலாம்.

“ரவிதாஸா! நீ இப்படித்தான் வெகு காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய். ‘நாள் நெருங்கிவிட்டது’ ‘யமன் நெருங்கிவிட்டான்’ என்றெல்லாம் பிதற்றுகிறாய்? யமன் வந்து யார் யாரையோ கொண்டு போகிறான்! ஆனால் மூன்று வருஷங்களாகப் படுத்த படுக்கையாய்க் கிடக்கும் சுந்தர சோழனைக் கொண்டு போவதாக இல்லை. அவனுடைய குமாரர்களையோ, யமன் நெருங்குவதற்கே அஞ்சுகிறான். ஈழநாட்டில் நாம் இரண்டு பேரும் எத்தனையோ முயன்று பார்த்தோமே?…”

“அதனால் குற்றமில்லை, அப்பனே! யமதர்மராஜன் உன்னையும் என்னையும் விடப் புத்திசாலி! மூன்று பேரையும் ஒரே தினத்தில் கொண்டு போவதற்காக இத்தனை காலமும் காத்துக் கொண்டிருந்தான். அந்தத் தினம் நாளைக்கு வரப் போகிறது.”

“ரவிதாஸா! மூன்று பேருக்கும் நாளைக்கே முடிவு வரும் என்பது என்ன நிச்சயம்? உனக்கு ஒரு செய்தி தெரியுமா? நாகைப்பட்டினத்தில் அருள்மொழிவர்மன் உயிரோடிருக்கிறானாம்! மக்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு அவனே சோழ நாட்டின் சக்கரவர்த்தி ஆக வேண்டும் என்று ஆர்ப்பரிக்கிறார்களாம்! அவனை இனி எப்போதும் லட்சக்கணக்கான ஜனங்கள் அல்லவா சூழ்ந்து கொண்டிருப்பார்கள்? லட்சம் பேருக்கு மத்தியில் உள்ள இளவரசனிடம் யமன் எப்படி நெருங்குவான்? அதை நீ சொல்லவில்லையே?”

“நெருங்குவான், அப்பனே நெருங்குவான்! யானைப் பாகனுடைய அங்குசத்தின் நுனியில் யமன் உட்கார்ந்திருப்பான்! சரியான சமயத்தில் இளவரசனுடைய உயிரை வாங்குவான்! பரமேச்சுவரா! சோழ நாட்டு மக்கள் இளவரசனை யானை மீது ஏற்றிவைத்து ஊர்வலம் விட்டுக் கொண்டு தஞ்சையை நோக்கி வருவார்கள். அந்த யானையை ஓட்டும் பாகனுக்கு வழியில் ஏதாவது ஆபத்து வந்துவிடும். அவனுடைய இடத்தில் நம் ரேவதாஸக் கிரமவித்தன் யானைப் பாகனாக அமருவான்? அப்புறம் என்ன நடக்கும் என்பதை நீயே ஒருவாறு ஊகித்துக்கொள்!”

“ரவிதாஸா! உன் புத்திக் கூர்மைக்கு இணை இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். கிரமவித்தன் எடுத்த காரியத்தை முடிப்பான் என்று நாம் நம்பியிருக்கலாம். சுந்தரசோழன் விஷயம் என்ன? அவனுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்?” என்றான் தேவராளன்.

“பழுவேட்டரையனுடைய கருவூல நிலவரையில் சோமன் சாம்பவனை கையில் வேலாயுதத்துடன் விட்டு வந்திருக்கிறேன். அங்கேயிருந்து சுந்தர சோழன் அரண்மனைக்குச் சுரங்கப் பாதை போகிறது. சுந்தர சோழன் படுத்திருக்கும் இடத்தையே சோமன் சாம்பவனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். நான் குறிப்பிட்ட இடத்தில் நின்று வேலை எறிந்து சுந்தர சோழனைக் கொன்று விடலாம். சோமன் சாம்பவனை ‘அவசரப்படாதே; நாளை வரையில் பொறுத்துக் கொண்டிரு!’ என்று எச்சரித்து விட்டு வந்திருக்கிறேன்…”

“அது எதற்காக? சமயம் நேரும்போது காரியத்தை முடிப்பதல்லவா நல்லது?”

“முட்டாள்! சுந்தரசோழன் முன்னதாகக் கொலையுண்டால், அந்தச் செய்தி கேட்டதும் அவன் குமாரர்கள் ஜாக்கிரதையாகி விடமாட்டார்களா? அந்த நோயாளிக் கிழவன் இறந்துதான் என்ன உபயோகம்? அது இருக்கட்டும்; நீ என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய்? கடம்பூர் மாளிகையில் எல்லோரும் எப்படியிருக்கிறார்கள்? அங்கே நாளை இரவு நடக்கப் போகிற காரியம் அல்லவா எல்லாவற்றையும் விட முக்கியமானது?”

“கடம்பூரில் எல்லாம் கோலாகலமாகத்தான் இருந்து வருகிறது. நீ என்னமோ அந்தப் பழுவூர் ராணியை நம்பியிருப்பது எனக்குப் பிடிக்கவே இல்லை…”

“பழுவூர் ராணியா அவள்? பாண்டிமாதேவி என்று சொல்! வீர பாண்டியர் மரணத்துக்குப் பழிக்குப்பழி வாங்க அவள் சபதம் செய்திருப்பதை மறந்துவிட்டாயா? ஒரு வாரத்துக்கு முன்னால் இதே இடத்தில் அவள் பாண்டிய குமாரன் கையிலிருந்து பாண்டிய குலத்து வீரவாளைப் பெற்றுக் கொள்ளவில்லையா…?”

“ஆமாம், ஆமாம்! ஆனால் நேற்று மாலை உன் பாண்டிமாதேவி வீர நாராயண ஏரியில் உல்லாசப் படகு யாத்திரை செய்து விட்டுத் திரும்பி வந்ததை நீ பார்த்திருக்க வேண்டும்…”

“உல்லாசமாயிராமல் பின் எப்படியிருக்க வேண்டும் என்கிறாய்? மனத்தில் உள்ளதை மறைத்து வைக்கும் வித்தையை நந்தினியைப் போல் கற்றிருப்பவர் யாரும் கிடையாது. இல்லாவிட்டால், பழுவேட்டரையரின் அரண்மனையில் மூன்று வருஷம் காலந் தள்ள முடியுமா? அங்கே இருந்தபடி நம்முடைய காரியங்களுக்கு இவ்வளவு உதவிதான் செய்திருக்க முடியுமா?ஆமாம், பழுவேட்டரையன் எப்போது கடம்பூரிலிருந்து புறப்பட்டான்? ஏன்?…”

“ஏன் என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. மதுராந்தகத் தேவனைக் கடம்பூருக்கு அழைத்து வரப் புறப்பட்டதாகச் சொன்னார்கள். நேற்றுக் காலை பழுவேட்டரையன் கிளம்பிச் சென்றான். அவன் சென்ற பிறகு இளவரசர்கள் வேட்டையாடச் சென்றார்கள். இளவரசிமார்கள் வீர நாராயண ஏரிக்கு ஜலக்கிரீடை செய்யச் சென்றார்கள்.”

“அதைப் பற்றி நீ கொஞ்சமும் கவலைப்படவேண்டாம். பழுவேட்டரையனைத் தஞ்சைக்கு அனுப்பி வைத்ததிலிருந்தே பாண்டிமாதேவியின் மனதை அறிந்து கொள்ளலாமே?”

“பெண்களின் மனதை யாரால் அறிய முடியும்? அந்தக் கிழவனை ஊருக்கு அனுப்பியது பழிவாங்கும் நோக்கத்துக்காகவும் இருக்கலாம், காதல் நாடகம்நடத்துவதற்காகவும் இருக்கலாம். வந்தியத்தேவனை நந்தினி தப்பிச் செல்லும்படி விட்டதை நீ மறந்துவிட்டாயா?”

மந்திரவாதி கலகலவென்று சிரித்துவிட்டு, “ஆமாம்; வந்தியத்தேவன் எதற்காகப் பிழைத்திருக்கிறான் என்பது சீக்கிரத்திலேயே தெரியும். அது தெரியும்போது நீ மட்டுந்தான் ஆச்சரியப்படுவாய் என்று எண்ணாதே! இன்னும் ரொம்பப் பேர் ஆச்சரியப்படுவார்கள்!

முக்கியமாக, சுந்தர சோழரின் செல்வக்குமாரி குந்தவை ஆச்சரியப்படுவாள். அவள் எந்தச் சுகுமார வாலிபனுக்குத் தன் உள்ளத்தைப் பறிகொடுத்திருக்கிறாளோ, அவனே அவளுடைய தமையன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவன் என்று அறிந்தால் ஆச்சரியப்படமாட்டாளா!” என்றான்.

“என்ன சொல்கிறாய், ரவிதாஸா! உண்மையாகவே வந்தியத்தேவனா கரிகாலனைக் கொல்லப் போகிறான்?”

“கரிகாலனைக் கொல்லும் கை யாருடைய கையாக இருந்தால் என்ன? பாண்டிய குலத்து மீன் சின்னம் பொறித்த வீரவாள் அவனைக் கொல்லப் போகிறது. அவனைக் கொன்ற பழி வந்தியத்தேவன் தலைமீது விழப்போகிறது! நம்முடைய ராணியின் சாமர்த்தியத்தைப் பற்றி இப்போது என்ன சொல்லுகிறாய்?கரிகாலனுடைய ஆவி நாளை இரவுக்குள் பிரிவது நிச்சயம். நந்தினி ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றியே தீருவாள். நம்முடைய பொறுப்பையும் நாம் நிறைவேற்ற வேண்டும்…”

“நம்முடைய பொறுப்பு என்ன?”

“நாளை இரவு கடம்பூர் மாளிகையிலிருந்து வெளியேறும் சுரங்கப் பாதையில் ஆயத்தமாக காத்திருக்க வேண்டும். காரியம் முடிந்ததும் நந்தினி அதன் வழியாக வருவாள். அவளை அழைத்துக் கொண்டு இரவுக்கிரவே கொல்லி மலையை அடைந்து விட வேண்டும். அங்கே இருந்து கொண்டு, சோழ நாட்டில் நடைபெறும் அல்லோலகல்லோலத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம். ஒருவேளை சௌகரியப்பட்டால்…”

“சௌகரியப்பட்டால், என்ன?”

“பழுவேட்டரையனின் கருவூல நிலவறையில் சேர்த்து வைத்திருக்கும் பொருள்களையெல்லாம் சுரங்கப் பாதை வழியாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். சோழ நாட்டுப் பொக்கிஷத்திலிருந்து கொண்டுபோன பொருள்களைக் கொண்டே சோழ நாட்டின்மீது போர் தொடுக்கப் படை திரட்டுவது எவ்வளவு பொருத்தமாயிருக்கும்?”

இவ்விதம் கூறிவிட்டு மறுபடியும் ரவிதாஸன் சிரித்தான்.

பரமேச்சுவரன், “சரி, சரி! ஆகாசக் கோட்டையை ரொம்பப் பெரிதாகக் கட்டிவிடாதே! முதலில் கொள்ளிடத்தைத் தாண்டி அக்கரையை அடைந்து, கடம்பூர் போய்ச் சேரலாம். கடம்பூரில் நீ சொன்னபடி எல்லாம் நடக்கட்டும்! பிறகு, பழுவேட்டரையனுடைய பொக்கிஷத்தைக் கொள்ளையடிப்பது பற்றி யோசிக்கலாம். என்ன சொல்லுகிறாய்? இப்போதே கிளம்பலாமா? இரவே கொள்ளிடத்தைத் தாண்டி விடுவோமா?” என்றான்.

“வேண்டாம், வேண்டாம்! பொழுது விடிந்ததும் படகில் ஏறினால் போதும். அதற்குள் காற்றும் நன்றாக அடங்கிவிடும். ஆற்று வெள்ளமும் கொஞ்சம் குறைந்துவிடும்.”

“அப்படியானால், இன்றிரவு இந்தப் பள்ளிப்படை மண்டபத்திலேயே படுத்திருக்கலாமா?”

“இந்தச் சுடுகாட்டில் இராத் தங்கவேண்டாம். வேறு எங்கேயாவது கிராமத்துக்குப் பக்கமாயுள்ள கோவில் அல்லது சத்திரத்தில் தங்குவோம்.”

மேற்கூறிய சம்பாக்ஷணையை ஏறக்குறைய ஒன்றும் விடாமல் பெரிய பழுவேட்டரையர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவருடைய செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருந்தது. அவருடை நெஞ்சு ஒரு பெரிய எரிமலையின் கர்ப்பத்தைப் போல் தீக்குழம்பாகிக் கொதித்தது. தாம் காதலித்துக் கலியாணம் செய்து கொண்ட பெண், வீரபாண்டியன் மரணத்துக்காகச் சோழ குலத்தின்மீது பழி வாங்க வந்தவள் என்பதும், மூன்று வருஷங்களாக அவள் தம்மை ஏமாற்றி வருகிறாள் என்பதும் சொல்ல முடியாத வேதனையும் அவமானத்தையும் அவருக்கு உண்டாக்கின.

ஆறு தலைமுறையாகச் சோழர் குலத்துக்கும், பழுவூர் வம்சத்துக்கும் நிலைபெற்று வளர்ந்து வரும் உறவுகளை அச்சமயம் பழுவேட்டரையர் நினைத்துக் கொண்டார். பார்க்கப் போனால், சுந்தர சோழனும் அவனுடைய மக்களும் யார்? சுந்தர சோழனுடைய பாட்டி பழுவூர் வம்சத்தைச் சேர்ந்தவள் அல்லவா? சோழர் குலத்தின் தீராப் பகைவர்களான பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள் நம்முடைய அரண்மனையிலிருந்துகொண்டு, நம்முடைய நிலைவறைப் பொக்கிஷத்திலிருந்து திருடிப்போன பொருளைக் கொண்டு சோழ குலத்துக்கு விரோதமாகச் சதிகாரச் செயல்களைச் செய்ய அல்லவா இடம் கொடுத்துவிட்டோம்! ஆகா! இந்தச் சண்டாளர்கள் சொன்னபடி நாளை இரவுக்குள் மூன்று இடங்களில் மூன்று பயங்கரமான கொலைகள் நடக்கப் போகின்றனவா? நம்முடைய உடலில் மூச்சு இருக்கும் வரையில் முயன்று அவற்றைத் தடுத்தேயாகவேண்டும்.

இன்னும் அறுபது நாழிகை நேரம் இருக்கிறது. அதற்குள் எவ்வளவோ காரியங்கள் செய்து விடலாம். இரவுக்கிரவே குடந்தை சென்று தஞ்சைக்கும், நாகைப்பட்டினத்துக்கும் செய்தி அனுப்பிவிட்டுக் கடம்பூருக்குக் கிளம்ப வேண்டும். இந்தப் பாதகர்கள் அங்கே போய்ச் சேர்வதற்குள் நாம் போய்விடவேண்டும்!”…

இவர்களைக் கடம்பூருக்கு வரும்படி விடுவதா? இந்த இடத்திலேயே இவர்களைக் கொன்று போட்டு விட்டுப் போய்விடுவது நல்லதல்லவா? நம்மிடம் ஆயுதம் ஒன்றுமில்லை, இல்லாவிட்டால் என்ன? வஜ்ராயுதத்தை நிகர்த்த நம் கைகள் இருக்கும்போது வேறு ஆயுதம் எதற்கு. ஆனால் இவர்கள் ஒரு வேளை சிறிய கத்திகள் இடையில் சொருகி வைத்திருக்கக்கூடும். அவற்றை எடுப்பதற்கே இடங்கொடுக்காமல் இரண்டு பேருடைய கழுத்தையும் இறுக்கிப் பிடித்து நெறித்துக் கொன்றுவிட வேண்டும்…

ஆனால் அவ்வாறு இவர்களுடன் இந்த இடத்தில் சண்டை பிடிப்பது உசிதமா? ‘இவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைத் தெரிந்து கொண்டாகி விட்டது. நாம் வழிபடும் குலதெய்வமாகிய துர்க்கா பரமேசுவரியே படகு கவிழச் செய்து, இந்தப் பயங்கர இரகசியங்களைத் தெரிந்து கொள்ளும்படியாயும் செய்திருக்கிறாள். சக்கரவர்த்திக்கும், அவருடைய குமாரர்களுக்கும் விபத்து நேரிடாமல் பாதுகாப்பதல்லவா நம்முடைய முக்கியமான கடமை? அதிலும்; கடம்பூரில் கரிகாலனுக்கு எதுவும் நேராமல் தடுப்பது மிக மிக முக்கியமானது. அப்படி எதாவது நேர்ந்து விட்டால் நமக்கும் நமது குலத்துக்கும் அழியாத பழிச் சொல் ஏற்பட்டு விடும். ஆறு தலைமுறையாகச் சோழ குலத்துக்குப் பழுவூர் வம்சத்தினர் செய்திருக்கும் உதவிகள் எல்லாம் மறைந்து மண்ணாகிவிடும். பெண் என்று எண்ணி, நமது அரண்மனையில் கொண்டு வந்து வைத்திருந்த அரக்கியினால் கரிகாலன் கொல்லப்பட்டால், அதைக் காட்டிலும் நமக்கு நேரக்கூடிய அவக்கேடு வேறு ஒன்றுமில்லை.’

இவ்வாறு எண்ணி அந்த வீரக் கிழவர் தம்மையறியாமல் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். சிம்ம கர்ஜனை போன்ற அந்தச் சத்தம் சதிக்காரர்கள் இருவரையும் திடுக்கிடச் செய்தது.

“யார் அங்கே?” என்றான் பரமேச்சுவரன்.

அதற்குமேல் தாம் மறைந்திருப்பது சாத்தியம் இல்லை, உசிதமும் ஆகாது என்று கருதிப் பெரிய பழுவேட்டரையர் வெளிப்பட்டு வந்தார்.

மழைக்கால இருட்டில் திடீரென்று தோன்றிய அந்த நெடிய பெரிய உருவத்தைக் கண்டு சதிகாரர்கள் இருவரும் திகைத்து நின்றபோது, “நான் தான் யமனுக்கு அண்ணன்!” என்று கூறிவிட்டுப் பழுவேட்டரையர் சிரித்தார்.

அந்தக் கம்பீரமான சிரிப்பின் ஒலி அவ்வனப் பிரதேசம் முழுவதையும் நடுநடுங்கச் செய்தது. வந்தவர் பழுவேட்டரையர் என்று அறிந்ததும் இருவரும் தப்பி ஓடப் பார்த்தார்கள்! ஆனால் பழுவேட்டரையர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தம் நீண்ட கரங்கள் இரண்டையும் நீட்டி இருவரையும் பிடித்து நிறுத்தினார். அவருடைய வலது கை ரவிதாஸனுடைய ஒரு புஜத்தைப் பற்றியது. வஜ்ராயுதத்தைக் காட்டிலும் வலிமை பொருந்திய அந்தக் கரங்களின் பிடிகள் அவ்விருவரையும் திக்கு முக்காடச் செய்தன.

எவ்வளவுதான் கையில் வலி இருந்தாலும் இருவரையும் ஏக காலத்தில் சமாளிக்க முடியாது என்று எண்ணிப் பழுவேட்டரையர் பரமேச்சுவரனைத் தலைக்குப்புற விழும்படி கீழே தள்ளினார். கீழே விழுந்தவன் முதுகில் ஒரு காலை ஊன்றி வைத்துக்கொண்டு ரவிதாஸனுடைய கழுத்தை இரண்டு கைகளாலும் நெறிக்கத் தொடங்கினார். ஆனால் பரமேச்சுவரன் சும்மா இருக்கவில்லை. அவனுடைய இடுப்பில் செருகியிருந்த கத்தியைச் சிரமப்பட்டு எடுத்துத் தன்னை மிதித்துக் கொண்டிருந்த காலில் குத்தப் பார்த்தான். பழுவேட்டரையர் அதை அறிந்து கொண்டார். இன்னொரு காலினால் அவனுடைய கை மணிக்கட்டை நோக்கி ஒரு பலமான உதை கொடுத்தார். கத்தி வெகு தூரத்தில் போய் விழுந்தது. ஆனால் அதே சமயத்தில் அவனை மிதித்திருந்த கால் சிறிது நழுவியது. பரமேச்சுவரன் சட்டென்று நெளிந்து கொடுத்து வெளியே வந்து குதித்து எழுந்தான். உதைபடாத கையில் முஷ்டியினால் பழுவேட்டரையரை நோக்கிக் குத்தத் தொடங்கினான். அந்தக் குத்துக்கள் கருங்கல் பாறைச் சுவர்மீது விழுவன போலாயின.

இதற்கிடையில் ரவிதாஸன் தன் கழுத்திலிருந்து பழுவேட்டரையருடைய கரங்களை விலக்கப் பெருமுயற்சி செய்தான்; ஒன்றும் பலிக்கவில்லை. கிழவருடைய இரும்புப்பிடி சிறிதும் தளரவில்லை. ரவிதாஸனுடைய விழிகள் பிதுங்கத் தொடங்கின. உளறிக் குளறிக் கொண்டே “சீக்கிரம்! சீக்கிரம்! கோயில் மேலே ஏறு! மண்டபத்தைக் கீழே தள்ளு!” என்றான்.

பரமேச்சுவரன் உடனே பாய்ந்து சென்று பள்ளிப்படைக் கோயிலின் மேல்மண்டபத்தின் மீது ஏறினான். அங்கே மண்டபத்தின் ஒரு பகுதியில் பிளவு ஏற்பட்டு இனிச் சிறிது நகர்ந்தாலும் கீழே விழக்கூடிய நிலையில் இருந்தது. அதை முன்னமே அவர்கள் கவனித்திருந்தார்கள். ரவிதாஸன் அதைத்தான் குறிப்பிடுகிறான் என்று தெரிந்து கொண்டான். மண்டபத்தின் இடிந்த பகுதியைத் தன் மிச்சமிருந்த வலிவையெல்லாம் பிரயோகித்து நகர்த்தித் தள்ளினான். அது விழும்போது அதனுடனிருந்த மரம் ஒன்றையும் சேர்த்துத் தள்ளிக் கொண்டு விழுந்தது.

பழுவேட்டரையர், மேலேயிருந்த மண்டபம் நகர்ந்து விழப்போவதைத் தெரிந்துகொண்டார். ஒரு கையை ரவிதாஸனுடைய கழுத்திலிருந்து எடுத்து மேலேயிருந்து விழும் மண்டபத்தைத் தாங்கிக் கொள்ள முயன்றார். ரவிதாஸன் அப்போது பெருமுயற்சி செய்து அவருடைய பிடியிலிருந்து தப்பி அப்பால் நகர்ந்தான். மரமும், மண்டபமும் பழுவேட்டரையர் தலையில் விழுந்து அவர் நினைவு இழந்தார்.


63. தூமகேது மறைந்தது!

நெடு நேரத்துக்கு அப்பால் பழுவேட்டரையருக்குச் சிறிது நினைவு வந்தபோது, அவர் நினைவு இழந்து கொண்டிருந்த சமயத்தில் இலேசாகக் காதில் விழுந்த சம்பாஷணை ஞாபகத்துக்கு வந்தது.

“கிழவன் செத்துப் போய் விட்டான்!” என்றது ஒரு குரல்.

“நன்றாகப் பார்! பழுவேட்டரையனுடைய உயிர் ரொம்பக் கெட்டி யமன் கூட அவன் அருகில் வரப் பயப்படுவான்!” என்றது மற்றொரு குரல்.

“நல்ல சமயத்தில் நீ பிளந்த மண்டபத்தைத் தள்ளினாய். இல்லாவிடில் நான் அந்தக் கதியை அடைந்திருப்பேன். கிழவன் என்னைக் கொன்றிருப்பான்!”

“எங்கே? மண்டபத்தை நகர்த்த முடியுமா, பார்க்கலாம்!”

சற்றுப் பொறுத்து, “துளிகூட அசையவில்லை! ஒரு பகைவனுடைய பள்ளிப்படையைக் கொண்டு இன்னொருவனுக்கும் வீரக்கல் நாட்டி விட்டோம்” என்று கூறிவிட்டு மந்திரவாதி கலகலவென்று சிரித்தான்.

இந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொண்டு பழுவேட்டரையர் தம்முடைய நிலை இன்னதென்பதை ஆராய்ந்தார். ஆம்; அவர்மீது பள்ளிப்படை மண்டபத்தின் ஒரு பாதி விழுந்து கிடந்தது. அதன் பெரிய பாரம் அவரை அமுக்கிக் கொண்டிருந்தது. ஆனால் மூச்சுவிட முடிகிறதே, எப்படி?

நல்லவேளையாக, மண்டபத்தோடு விழுந்த மரம் அவர் தோளின் மீது படிந்து அதன் பேரில் மண்டபம் விழுந்திருந்தது. மண்டபத்தையொட்டியிருந்த மரந்தான் அவர் உயிரைக் காப்பாற்றியது. மண்டபம் நேரே அவர் மேல் விழுந்திருந்தால் மார்பும் தலையும் நொறுங்கிப் போயிருக்கும். கிழவனார் தம்முடைய உடம்பின் வலிமையை எண்ணித் தாமே ஆச்சரியப்பட்டார். அந்தப் பெரிய பாரத்தை இத்தனை நேரம் சுமந்தும் தம்முடைய உயிர் போகவில்லையென்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் இவ்வளவு கெட்டியான உயிரை இன்னமும் காப்பாற்றிக் கொள்ள முடியுமா?

ஆம்; எப்படியாவது காப்பாற்றிக் கொண்டேயாக வேண்டும். காப்பாற்றிக் கொண்டு சோழ குலத்துக்கு நேரவிருந்த அபாயத்தைத் தடுக்க வேண்டும். அப்படித் தடுக்காவிட்டால் அவருடைய குலத்துக்கு என்றும் அழியாத பழி இவ்வுலகில் ஏற்படுவது நிச்சயம். ஆகையால், எந்தப் பாடுபட்டாலும் இந்த மரத்தையும் மண்டபத்தையும் அப்புறப்படுத்தி எழுந்திருக்க வேண்டும். ஐயோ! எத்தனை நேரம் இங்கே இப்படி நினைவு இழந்து கிடந்தோமோ என்னமோ தெரியவில்லையே? இதற்குள் ஒரு வேளை நாம் தடுக்க விரும்பும் விபரீதங்கள் நேரிட்டிருக்குமோ?

பழுவேட்டரையர் தம் உடம்பில் மிச்சமிருந்த பலம் முழுவதையும் பிரயோகித்து அவர்மீது விழுந்து கிடந்த மரத்தைத் தூக்க முயன்றார். மரம் சிறிது சிறிதாக உயர உயர, அதன் மேல் நின்ற மண்டபப் பாறை நகர்ந்து சரியத் தொடங்கியது. ஒரு யுகம் எனத் தோன்றிய ஒரு நாழிகை முயன்ற பிறகு அவரை அமுக்கிக் கொண்டிருந்த மரமும் மண்டபப் பாறையும் சிறிது அப்பால் நகர்ந்து அவரை விடுதலை செய்தன. அந்த முயற்சியினால் அவருக்கு ஏற்பட்ட சிரமம் காரணமாகச் சிறிது நேரம் அப்படியே கிடந்தார். பெரிய நெடுமூச்சுகள் விட்டார். ஆகாசத்தை அண்ணாந்து பார்த்தார். மண்டபத்துக்குச் சமீபமாதலாலும், புயலில் மரங்கள் பல விழுந்து விட்டிருந்த படியாலும் வானவெளி நன்றாகத் தெரிந்தது. வைரப் பொரிகள் போன்ற எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரிந்தன.

சட்டென்று வானத்தில் வடதிசையில் தோன்றிய ஒரு விசித்திரமான நட்சத்திரம் அவருடைய கவனத்தைக் கவர்ந்தது. அடடா! சில நாளைக்கு முன்பு அவ்வளவு நீளமான வாலைப் பெற்றிருந்த தூமகேதுவா இப்போது இவ்வளவு குறுகிப் போயிருக்கிறது?

திடீரென்று வானமும் பூமியும் அந்த வனப்பிரதேசம் முழுவதும் ஒளி மயமாயின. பழுவேட்டரையரின் கண்கள் கூசின. அது மின்னல் அல்ல, வேறு என்னவாயிருக்கக் கூடும்? வானத்தைக் நோக்கினார். ஜாஜ்வல்யமாகப் பிரகாசித்த ஒரு தீப்பந்தம் வான வட்டத்திலே ஒரு கோணத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கக் கண்டார். அதன் பிரகாசம் அவருடைய கண்களைக் கூசச் செய்தது. கண்ணை ஒரு கணம் மூடிவிட்டுத் திறந்து பார்த்தார். அந்தத் தீப்பந்தம் சிறிதாகிப் போயிருந்தது; வர வர ஒளி குறைந்து வந்தது; திடீரென்று அது மறைந்தேவிட்டது. பழையபடி இருள் சூழ்ந்தது.

இந்த அதிசயம் என்னவாயிருக்கும் என்று பழுவேட்டரையர் சிந்தித்துக் கொண்டே மீண்டும் வானத்தை நோக்கினார். குறுகிய தூமகேது சற்றுமுன் இருந்த இடத்தைப் பார்த்தார். அங்கே அதைக் காணவில்லை. ஆகா! தூமகேதுதான் விழுந்து விட்டது! இதன் கருத்து என்ன? ராஜகுடும்பத்தினர் யாருக்காவது விபத்து நேரிடுவதற்கு அடையாளம். வால் நட்சத்திரம் மறையும்போது அரச குலத்தைச் சேர்ந்த யாரேனும் மரணம் அடைவார்கள். இது வெகுகாலமாக மக்களிடையே பரவியிருக்கும் நம்பிக்கை.

அதோ கீழ் வானம் வெளுத்துவிட்டது! பொழுது புலரப் போகிறது! இன்று இரவுக்குள் மூன்று இடங்களில் மூன்று விபரீத பயங்கர நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடும். அவை நடக்கப்போகும் விவரம் நமக்கு மட்டும் தெரியும். அவற்றைத் தடுக்கும் சக்தியும் நமக்குத்தான் உண்டு. சோழர் குலத்தைச் சேர்ந்த மூவரையும் காப்பாற்றியேயாக வேண்டும்.

தமது முதல் கடமை – மிக முக்கியமான கடமை ஆதித்த கரிகாலனைக் காப்பாற்றுவதுதான்! அவனுக்கு விபத்து வந்தால் அதன் பழி தன் தலையில் நேராக விழும். ஆகையால் கொள்ளிடத்தைத் தாண்டிக் கடம்பூருக்கு உடனே போய்ச் சேரவேண்டும். அதற்கு முன்னால், குடந்தைக்குச் சென்று, தஞ்சைக்கும், நாகைக்கும் எச்சரிக்கை அனுப்பிவிட்டுப் போவது நல்லது. பின்னர், விதிவசம் போல் நடந்துவிட்டுப் போகிறது. தாம் செய்யக்கூடியது அவ்வளவு தான்!

பழுவேட்டரையர் எழுந்திருக்க முயன்றார். உடம்பெல்லாம் ரணமாக வலித்தது. மரம் விழுந்திருந்த இடம் மார்பில் பொறுக்க முடியாத வேதனையை உண்டாக்கிற்று. ஒரு கால் முறிந்து விட்டது போல் தோன்றியது. தேகம் முழுவதும் பல்வேறு காயங்கள் பட்டிருந்தன.

அவற்றையெல்லாம் அந்த வீரக் கிழவர் பொருட்படுத்தவில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு பெரும் முயற்சி செய்து எழுந்து நின்றார்; குடந்தை நகரம் அங்கிருந்து எந்தத் திசையில் இருக்கலாம் என்பதை ஒருவாறு நிர்ணயித்துக் கொண்டு புறப்பட்டார். திடமாகக் கால்களை ஊன்றி வைத்து நடக்கத் தொடங்கினார். யாரையாவது பிடித்து தஞ்சைக்கும் நாகைக்கும் ஓலை அனுப்ப வேண்டும். பிறகு ஒரு வாகனம் சம்பாதித்துக் கொண்டு கடம்பூருக்குக் கிளம்ப வேண்டும், துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள ஜோதிடர் ஞாபகம் அவருக்கு வந்தது. ஜோதிடர் தகுந்த மனிதர்; இனிய இயல்பு படைத்த மனிதர். இராஜ குடும்பத்துக்கும் முதன் மந்திரிக்கும் வேண்டியவர். இராஜ குடும்பத்துக்கு வேண்டியவராகயிருப்பதால் இன்னும் ஆர்வத்துடன் செய்வார்.

பழுவேட்டரையர் ஜோதிடர் வீட்டு வாசலில் பிரவேசித்த போது, ஜோதிடரின் சீடன் அவரைத் தடுத்து நிறுத்தினான். பழுவேட்டரையர் அப்போதிருந்த கோலத்தில் அவரை அவனால் அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. ஆகையினாலேயே “நில்!” என்று அதட்டும் குரலில் கூறிவிட்டுத் தடுத்தான். பழுவேட்டரையர் ஒருமுறை ஹுங்காரம் செய்துவிட்டு அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். சீடன் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டு போய் வீதியில் விழுந்தான். பழுவேட்டரையர் மதயானையைப் போல் பூமி அதிர நடந்து ஜோதிடரின் வீட்டுக்குள் புகுந்தார்.

பழுவேட்டரையர் உள்ளே பிரவேசித்தார். பரபரப்புடன் எழுந்து நின்று கும்பிட்ட ஜோதிடரை உற்றுப் பார்த்துவிட்டுச் சுற்று முற்றும் நோக்கினார். “ஜோதிடரே! நான் யார் தெரிகிறதா? தனாதிகாரி பெரிய பழுவேட்டரையனே தான்! ஏன் இவ்வாறு பேந்த விழிக்கிறீர்? அவ்வளவு உருமாறிப் போயிருக்கிறேனா? உம்மால் எனக்கு ஒரு முக்கியமான காரியம் ஆக வேண்டியிருக்கிறது! ஒரு பெரிய உதவி நீ எனக்குச் செய்ய வேண்டும்” என்றார்.

“ஐயா! இந்த ஏழை எளியவனால் தங்களுக்கு என்ன பெரிய உதவி தேவையாயிருக்க முடியும்? தங்களைப் பார்த்தவுடனே திடுக்கிட்டுப் போனேன். அதனால் தங்களைத் தக்கபடி வரவேற்று உபசரிப்பதற்குத் தவறிவிட்டேன். பெரிய மனது செய்து அந்தப் பலகையிலே உட்கார வேண்டும்” என்று பலகைகளைச் சுட்டிக் காட்டினார்.

“ஜோதிடரே! இல்லை; எனக்கு உட்கார நேரமில்லை.சில காலமாக வானத்தில் தோன்றிக் கொண்டிருந்த தூமகேது இன்று காலையில் வானத்திலிருந்து பூமியில் விழுந்து மறைந்ததே, அது உமக்குத் தெரியுமா? தெரிந்தால், அதன் பொருள் என்ன என்று சொல்லக் கூடுமா? அது ஏதேனும் பெரிய உற்பாதத்தைக் குறிப்பிடுகிறதா? சக்கரவர்த்திக்கோ, அவருடைய மக்களுக்கோ நேரப் போகிற விபத்தைக் குறிப்பிடுகிறதா?”

“தனாதிபதி! இராஜாங்க சம்பந்தமான காரியங்களில் ஜோதிடம் பார்க்கக் கூடாது என்பது எங்கள் தொழிலின் பரம்பரை மரபு. தூமகேது தோன்றுவதும் விழுவதும் அரசகுலத்தினர்க்கு அதிர்ஷ்டத்தைக் குறிப்பிடுவதாகச் சொல்லுவார்கள். ஆனால் அது ஜோதிட சாஸ்திரத்தைச் சேர்ந்ததல்ல. ஜனங்களின் தொன்று தொட்ட நம்பிக்கை. அதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது.”

“ஜோதிடரே, நீர் ஜோதிடம் சொல்லாவிட்டாலும் நான் சொல்லுகிறேன். சக்கரவர்த்திக்கும், அவருடைய குமாரர்கள் இருவருக்கும் இன்றைக்குப் பெரிய கண்டம் காத்திருக்கிறது. யமதர்மன் அவர்களை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். சக்கரவர்த்தியின் யமன் பழுவூர் மாளிகையைச் சேர்ந்த பொக்கிஷ நிலவறையில் மறைந்திருக்கிறான். அருள்மொழியின் யமன் யானைப் பாகனுடைய அங்குசத்திலே ஒளிந்திருக்கிறான். அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்திச்சக்கரவர்த்தியையும் பொன்னியின் செல்வனையும் காப்பாற்றுவது உம்முடைய பொறுப்பு. என் முத்திரை மோதிரத்தை எடுத்துக்கொண்டு உம் சீடன் தஞ்சைக்குப் போகட்டும். நீர் திருவாரூர் சென்று இளவரசருக்கு எச்சரிக்க வேண்டும், செய்வீரா? உடனே புறப்படுவீரா?”

“துர்க்கா பரமேசுவரியின் அருளினால் தங்களுடைய கட்டளையை என்னால் இயன்றவரை நிறைவேற்றி வைப்பேன்.”

“ஆகா! இனி, நான் கடம்பூருக்குத் திரும்பலாம், இதோ புறப்படுகிறேன்….”


64. “யானைக்கு மதம் பிடித்தது”

நாகைப்பட்டின நகர மாந்தரின் விருந்தெல்லாம் முடிந்த பிறகு அலங்கரித்த யானைமீது ஏறி அன்றிரவு இளவரசரும் அவருடன் வந்த ஜனங்களும் திரு ஆரூர் வந்து சேர்ந்தார்கள். திரு ஆரூர் மக்கள் இளவரசர் வருகையை முன்னதாக அறிந்திருந்தபடியால், அவருக்கு இராஜரீக வரவேற்பு அளித்து இராஜோபசாரங்கள் செய்தார்கள்.

ஏறக்குறைய நடுநிசியில் இளவரசர் சோழ மாளிகைக்கு வந்து சேர்ந்தார். அங்கே சில விபரீதமான செய்திகள் காத்திருந்தன. தஞ்சைக்கு மேற்கே பலமான மழை பெய்தபடியால் காவேரியிலும் கொள்ளிடத்திலும் அவற்றின் கிளை நதிகளிலும் பெரு வெள்ளம் வந்து பல இடங்களில் கரை உடைத்துக் கொண்டதாகவும், ஒரே வெள்ளக் காடாக இருப்பதால் மேற்கொண்டு பிரயாணத்தைத் தொடர்ந்து நடத்துவது கஷ்டமாயிருக்குமென்றும் சொன்னார்கள். இரண்டு நாள் திரு ஆரூரில், தங்கி, வெள்ளம் வடிந்த பிறகு புறப்படுவது உசிதம் என்று தெரிவித்தார்கள். இதற்கு இளவரசர் இஷ்டப்படவில்லை. தஞ்சையை உடனே அடைய வேண்டுமென்ற பரபரப்பு அவர் உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. நதி உடைப்புக்களும், வெள்ளமும் அவருடைய அந்த ஆர்வத்தைத் தடை செய்துவிடக்கூடுமா, என்ன? ஆம்; இத்தனை ஜனங்களும் பரிவாரங்களும் புடை சூழப் போவதாயிருந்தால் பிரயாணம் தடைப்படத்தான் செய்யும். தாம் மட்டும் தனியே யானை மீது ஏறிச் சென்றால் பிரயாணம் தடைப்படவேண்டிய அவசியமில்லை. யானைக்கு அண்டாத ஆழம் உடைய நதி எதுவும் தஞ்சைக்குப் போகும் வழியில் இல்லை.

இந்தப் பெருந் திரளான மக்களிடமிருந்து எப்படித் தப்பித்துச் செல்வது என்பதுதான் கேள்வி. எல்லாவற்றுக்கும் யானைப் பாகனிடம் எந்த நேரத்திலும் புறப்பட ஆயத்தமாயிருக்கும்படி சொல்லி வைப்பது நல்லது எப்படியிருந்தாலும், காலையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதுபற்றி ஒரு முடிவுக்கு வந்தார்.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து பிரயாணத்துக்கு ஆயத்தமானார். மாளிகை வாசலுக்கு வந்தார். அங்கே கட்டியிருந்த யானை இளவரசரைப் பார்த்ததும் ஆதரவோடு துதிக்கையை நீட்டி அவரைத் தடவிக் கொடுத்துக் கொஞ்சியது. “யானைப்பாகன் எங்கே?” என்று இளவரசர் உரத்த குரலில் கேட்டார். உடனே பல குரல்கள் “யானைப்பாகன் எங்கே?” என்று எதிரொலி செய்தன.

இளவரசரைப் போலவே அதிகாலையில் பிரயாணத்துக்கு ஆயத்தமாக ஜனங்கள் திரண்டு வந்திருந்தார்கள். அவர்களிடையே அகப்பட்டுக்கொண்டு முன்னால் வரமுடியாமல் திணறிக்கொண்டிருந்த முருகய்யனைப் பார்த்தார். அவனை நோக்கிச் சமிக்ஞை செய்யவே ஜனங்கள் அவனுக்கு வழிவிட்டார்கள்.

“முருகய்யா! யானையின் காலைக் கட்டியுள்ள சங்கிலியை அவிழ்த்து விடு!” என்றார் இளவரசர்.

முருகய்யன் அவ்வாறு அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கும் போதே, “இதோ யானைப்பாகன் வந்துவிட்டான்!” என்று பல குரல்கள் ஒலித்தன.

கையில் அங்குசத்துடன் யானைப்பாகன் ஓடிவந்து கொண்டிருந்தான். கூட்டத்திலிருந்தவர்கள் அவசர அவசரமாக விலகிக் கொண்டு அவனுக்கு வழிவிட்டார்கள்.

பொன்னியின் செல்வரும் “நல்ல வேளை!” என்று பெருமூச்சு விட்டு, யானைப்பாகன் ஓடி வந்துகொண்டிருந்த திசையை நோக்கினார். ஒரு கையில் அங்குசம் வைத்துக்கொண்டிருந்த யானைப் பாகன், யானையின் அருகில் வந்து அதன் துதிக்கையை இன்னொரு கையால் தொட்டான்.

யானை உடனே அவனைத் துதிக்கையால் சுழற்றிப் பிடித்துத் தலைக்கு மேலே தூக்கியது. கேட்டவர்கள் பீதி கொள்ளும்படியாகப் பிளறிவிட்டு, யானைப்பாகனை வீசி எறிந்தது! யானைப்பாகன் வெகு தூரத்திலே போய் விழுந்தான். அவன் கையில் வைத்திருந்த அங்குசம், இன்னும் அப்பாலே போய் விழுந்தது.

“யானைக்கு மதம் பிடித்துவிட்டது!” என்ற பயங்கரம் நிறைந்த குரல் அந்த ஜனக் கூட்டத்திலே எழுந்தது. ஜனங்கள் நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள்!

இளவரசர் யானையை நெருங்கி வந்தவன் உண்மையான யானைப்பாகன் அல்ல, ஏதோ தீயநோக்கத்துடன் வந்தவன், அதனாலேதான் யானை அவனைத் தூக்கி எறிந்திருக்கிறது என்பதையும் ஒரு நொடியில் ஊகித்துக்கொண்டார். வந்தவன் யார், எதற்காக வந்தான் என்பதையெல்லாம் அச்சமயம் கண்டுபிடிக்க முயன்றால், கிடைத்த சந்தர்ப்பம் தவறிபோய்விடும். “யானைக்கு மதம் பிடித்துவிட்டது!” என்ற கூச்சலினால் மக்களிடையே உண்டான குழப்பத்தைப் பின்னர் பயன்படுத்திக்கொள்ள முடியாது. அந்த ஜனக்கூட்டத்தினிடையிலிருந்து தப்பிச் சென்று கூடிய விரைவில் தஞ்சையை அடைவது அச்சமயம் அவருடைய பிரதான நோக்கமாயிருந்தது. அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இதைக் காட்டிலும் சரியான சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை.

ஆதலின், முருகய்யனைத் தம் அருகில் அழைத்து, அவன் காதோடு ஏதோ சொல்லிவிட்டு, அவன் தோள்மீது ஏறி யானையின் மீது தாவினார். அப்படித் தாவும்போதே யானை மேலிருந்த அம்பாரியைத் தட்டிவிட்டார். அம்பாரி கீழே விழுந்து உருண்டது. பின்னர், யானையிடத்திலும் அதன் பாஷையில் ஏதோ சொன்னார். உடனே யானை பிய்த்துக் கொண்டு கிளம்பியது. முன்போல, பயங்கரமான குரலில் பிளிறிக் கொண்டே விரைவாக நடந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் ஓடவே தொடங்கிவிட்டது.

அதே சமயத்தில் முருகய்யன், “ஐயோ! யானைக்கு மதம் பிடித்து விட்டது. ஓடுங்கள்! உடனே ஓடுங்கள்” என்று பெருங்கூச்சலிட்டான்.

ஜனங்கள் முன்னைக் காட்டிலும் அதிக பீதியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அக்கம் பக்கத்திலிருந்து குறுக்கு வீதிகளிலும் சந்துகளிலும் புகுந்து ஓடினார்கள். திறந்திருந்த வீடுகளுக்குள் நுழைந்து ஒளிந்துகொண்டார்கள்.

திரு ஆரூர் நகரத்தைத் தாண்டியதும் இளவரசர் யானையை நேரே தஞ்சாவூர்ச் சாலையில் செலுத்துவதற்குப் பதிலாக, வடமேற்குத் திசையை நோக்கித் திருப்பினார். தஞ்சைச் சாலையில் சென்றால் மக்கள் தம்மை விடாமல் தொடர்ந்து வரக்கூடும். வழியில்லாத வழியில் யானை போய்விட்டால், ஜனங்கள் தொடர்ந்து வரமுடியாது! இவ்விதம் அதி விரைவில் சிந்தித்து முடிவுசெய்து, யானையை வடமேற்குத் திசையில் குறுக்கு வழியில் செலுத்தினார். வயல்கள், வரப்புகள், வாய்க்கால்கள், நதிகள், அவற்றின் உடைப்புகள் – இவை ஒன்றையும் பொருட்படுத்தாமல் யானை ஜாம் ஜாம் என்று மனம் போன போக்கில் சென்றது. இளவரசரின் உள்ளமும் இனந்தெரியாத உற்சாகத்தை அடைந்து, கூண்டிலிருந்து விடுதலை அடைந்த பறவையைப் போல் ஆகாச வெளியில் வட்டமிட்டுத் திரிந்தது. தம்முடைய வாழ்நாளில் ஒரு முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்றும் உள்ளுணர்ச்சியிலிருந்து உற்சாகமும் பரபரப்பும் பொங்கிக் கொண்டிருந்தன.


65. தெய்வம் ஆயினாள்!

யானை அரண்மனை வாசலில் வந்து நின்றது.

வாசற் காவலனை அழைத்துச் சின்னப் பழுவேட்டரையர் ஏதோ கூறினார். அவன் அரண்மனையின் முன் வாசலைத் திறந்து விட்டான். அரண்மனை வாசலில் ஒரு பக்கத்தில் எப்போதும் ஆயத்தமாயிருந்த தம் ஆட்களைச் சமிக்ஞையால் அழைத்தார். அவர்களிடம் கோட்டையின் உட்பக்கம் முழுவதும் நன்றாய்த் தேடிச் சந்தேகாஸ்பதமாக யார் தென்பட்டாலும் பிடித்துக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.

பிறகு, வேளக்காரப் படையாரிடம் அன்றிரவு முழுவதும் தூங்காமலே அரண்மனையையும் சுற்றுப்புறங்களையும் காவல் புரியவேண்டுமென்று சொல்ல எண்ணி, அவர்களுடைய தலைவனை அனுப்பும்படி ஆக்ஞாபித்த வண்ணம் திரும்பிப் பார்த்தார். அப்போது அரண்மனை முன்புறத்து நிலா முற்றத்தைத் தாண்டி முதல் வாசற்படிக்கு அருகிலே இவன் யார்? தலைப்பாகையைப் பார்த்தால், யானைப்பாகன் மாதிரி தோன்றியது! ஆகா! அரண்மனைக்குள் அவனுக்கு என்ன வேலை? சக்கரவர்த்தியிடந்தான் அவனுக்கு என்ன காரியம்?

மிகப் பயங்கரமான ஓர் எண்ணம் அவர் மனத்தில் மின்னலைப் போல் தோன்றிச் சொல்ல முடியாத வேதனையை உண்டாக்கியது. கோபக்கனலை எழுப்பியது. இவன் சதிகாரனோ? யானைப்பாகனைப் போல் வந்திருக்கிறானோ? தம் கண் முன்னால் சக்கரவர்த்தியைக் கொல்ல வந்தவன் அரண்மனைக்குள்ளே போகிறதாவது? காலாந்தக கண்டனுக்கு அவ்வளவு பெரிய அசட்டுப் பட்டமா?

நாலே எட்டில் நிலா முற்றத்தைக் காலாந்தக கண்டர் கடந்து சென்று யானைப்பாகன் சமீபம் அடைந்தார். “அடே! நில் இங்கே!” என்று ஒரு கர்ஜனை செய்தார்.

“நீ ஏன் உள்ளே போகிறாய்? யானைப்பாகனுக்கு அரண்மனைக்குள் என்ன வேலை?” என்று கூறிக்கொண்டே, அவனுடைய ஒரு கரத்தைத் தமது வஜ்ராயுதம் போன்ற கை முஷ்டியினால் பிடித்துக் கொண்டார். பிடித்த பிடியை இன்னும் சிறிது கெட்டியாக்கிக் கொண்டு சின்னப் பழுவேட்டரையர் “அடா!” உண்மையைச் சொல்! நீ யார்? யானைப்பாகன்தானா? அல்லது சதிகாரனா? ” என்று சொல்லிக் கொண்டே, பிடித்த பிடியை விடாமல் ‘யானைப்பாகன்’ முகத்தைத் தம்மை நோக்கித் திருப்பினார்.

அரண்மனையின் முன் மண்டபத்தில் எரிந்த தீபங்களின் வெளிச்சம் லேசாக அந்த ‘யானைப்பாகனின்’ கம்பீரமான முகத்தில் விழுந்தது.

“தளபதி! நான் யானைப்பாகன் கூடத்தான்” என்றான் யானைப்பாகன்.

காலாந்தக கண்டர் அந்த முகத்தைப் பார்த்தார். அந்தக் குரலைக் கேட்டார். திகைத்துச் சித்திரப் பதுமைபோல் நின்று விட்டார். கைப்பிடி அதுவாகத் தளர்ந்து இளவரசர் அருள்மொழிவர்மரை விடுதலை செய்தது.

அஞ்சா நெஞ்சமும், அளவிலா மனோதிடமும் வாய்ந்தவரான காலாந்தக கண்டரின் கை கால்கள் அந்தக் கணத்தில் வெடவெடத்து விட்டன. இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்தியவாறு, “பொன்னியின் செல்வா! இது என்ன கோலம்? இது என்ன காரியம்? சற்றுமுன் நான் செய்த பிழையைப் பொறுத்துக் கருணை புரிய வேண்டும்” என்று நாத் தழுதழுக்கக் குரல் நடுங்கக் கூறினார்.

மேலும் இதே முறையில் பேசப் போனவரை இளவரசர் தடுத்து, “தளபதி! இது என்ன? தாங்களாவது, குற்றம் செய்யவாவது?” தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகத் தங்கள் கடமையைச் செய்தீர்கள். தவறு என்னுடையது. முதலில் என் தந்தையைப் பார்த்து விட்டு, பிறகு…”

“தெரிகிறது, அரசே! தாங்கள் தயவு செய்து விரைந்து உள்ளே செல்லுங்கள்!” என்றார் காலாந்தக கண்டர்.

அரண்மனையில் அப்போது இளவரசரின் வரவு காரணமாக ஒரே கோலாகலமாயிருந்தது. குறுக்கும் நெடுக்குமாகப் பெண்கள் போவதும் வருவதுமாயிருந்தார்கள். கூட்டம் கூட்டமாக வந்து சக்கரவர்த்தி படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்து விட்டுப்போன வண்ணமிருந்தார்கள்.

சக்கரவர்த்தி சாய்ந்து படுத்த வண்ணம் தமது அருமைக் குமாரன் அருள்மொழியின் கைகளைத் தமது கைகளால் பிடித்துக் கொண்டிருந்தார். அவர்கள் இருவருக்கும் முன்னால் மந்தாகினி, ஒரு பக்கத்தில் வானதியும், அவளை மருமகளாகப் பெறுவதற்கிருந்த மலையமான் மகளும் நின்று கொண்டிருந்தார்கள்.

ஆனால், மேல் மண்டபத்தின் முகப்பிலிருந்து பாய்ந்து வந்த கூரிய வேலை அவர்களில் யாரும் கவனிக்கவில்லை. பூங்குழலி தன் அத்தையை நோக்கி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்றாள்.

பூங்குழலி எவ்வளவு விரைவாக ஓடக் கூடியவளானாலும், மேலிருந்து எறியப்பட்ட வேலுடன் போட்டியிட முடியாதல்லவா? அவள் மந்தாகினி அத்தையின் அருகில் பாய்ந்து செல்வதற்குள் வேல் அத்தையின் விலாவில் பாய்ந்துவிட்டது. ‘வீல்’ என்று பயங்கரமாக ஓலமிட்டு விட்டு மந்தாகினி கீழே விழுந்தாள்.

பூங்குழலியைப் போலவே மற்றவர்களும் தரையில் விழுந்த மாதரசியை நோக்கி ஓடிவர ஆயத்தமானார்கள். அச்சமயம் மேல் மாடத்திலிருந்து தடதடவென்று சத்தம் கேட்டது. சில மண் பாண்டங்கள் கீழ் நோக்கிப் பல திசைகளிலும் எறியப்பட்டன.

அவற்றில் ஒன்று சக்கரவர்த்தியின் அருகில் சுடர்விட்டுப் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த தீபத்தின் பேரில் விழுந்தது; தீபம் அணைந்தது. அறையில் உடனே இருள் சூழ்ந்தது. பிறகு சிறிது நேரம் அந்த அந்தப்புர அறையிலும் அதைச் சுற்றியுள்ள நீண்ட தாழ்வாரங்களிலும் ஒரே குழப்பமாயிருந்தது. திடுதிடுவென்று மனிதர்கள் அங்குமிங்கும் வேகமாக ஓடும் காலடிச் சத்தங்கள் கேட்டன.

“விளக்கு! விளக்கு!” என்று சின்னப் பழுவேட்டரையர் கர்ஜனைக் குரல் அலறியது.

“ஆகா! ஐயோ!” என்று ஒரு பெண் குரல் அலறும் சத்தம் கேட்டது. அது மகாராணியின் குரல் போலிருக்கவே எல்லாருடைய நெஞ்சங்களும் திடுக்கிட்டு, உடல்கள் பதறின. இத்தனை குழப்பத்துக்கிடையே பூங்குழலி அவளுடைய அத்தை மந்தாகினி விழுந்த இடத்தைக் குறி வைத்து ஓடி அடைந்தாள். அத்தையை அவளுக்கு முன் யாரோ தூக்கி மடியின் மேல் போட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

இதயத்தைப் பிளக்கும்படியான சோகத் தொனியில் விம்மும் குரலும், அழுகைக் குரலும் சேர்ந்து அவள் காதில் விழுந்தன.

வாசற்படிக்கருகில் “யாரடா அவன்? ஓடாதே! நில்!” என்று சின்னப் பழுவேட்டரையர் கூச்சலிட்டார். அச்சமயம் இரண்டு தாதிப் பெண்கள் தீபங்களுடன் வந்து அந்த அறையில் பிரவேசித்தார்கள்.

தீப வெளிச்சத்தில் தோன்றிய காட்சி யாருமே எதிர்பார்க்க முடியாத அதிசயக் காட்சியாயிருந்தது. மூன்று வருஷங்களாகக் காலை ஊன்றி நடந்தறியாமலிருந்த சக்கரவர்த்தி, கால்களின் சக்தியை அடியோடு இழந்து விட்டிருந்த சுந்தரசோழ மன்னன், தாம் படுத்திருந்த கட்டிலிலிருந்து இறங்கி நடந்து வந்து, மந்தாகினியின் அருகில் உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் இளவரசரும் இருந்தார். மந்தாகினியின் விலாவில் ஒரு பக்கத்தில் பாய்ந்து இன்னொரு பக்கம் வெளி வந்திருந்த வேலின் முனையிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. சக்கரவர்த்தி படுத்திருந்த கட்டிலின் அருகில் மலையமான் மகள் வானமாதேவி காணப்பட்டாள். அவளுக்கு அருகில் சக்கரவர்த்தி தலை வைத்துச் சாய்ந்திருந்த தலையணையில் ஒரு கூரிய கத்தி செருகப்பட்டிருந்தது.

விளக்கு வந்ததும் மகாராணி கட்டிலை வெறிக்கப் பார்த்துவிட்டு, கரை காணாத அதிசயம் ததும்பிய கண்களினால் சக்கரவர்த்தி கீழே உட்கார்ந்திருந்ததைப் பார்த்தாள். அப்போது பொன்னியின் செல்வர் மந்தாகினியின் தலையை மெள்ளத் தூக்கிச் சக்கரவர்த்தியின் மடியில் வைத்தார். இளவரசர் அருள்மொழிவர்மரின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. சக்கரவர்த்தியோ விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார்.

இவ்வளவையும் பூங்குழலி ஒரு கணநேரப் பார்வையில் பார்த்தாள். மறுகணத்திலேயே அங்கு நடந்த சம்பவங்களையெல்லாம் ஒருவாறு ஊகித்துத் தெரிந்து கொண்டாள். மேலேயிருந்து வேலை எறிந்தவன், அதை ஊமை ராணி தடைசெய்து விட்டதைக் கவனித்திருக்கிறான். உடனே மேலேயிருந்த தட்டு முட்டுச் சாமான்களை எடுத்தெறிந்து விளக்கை அணைத்து விட்டிருக்கிறான்.

அப்போது ஏற்பட்ட இருட்டில் கீழே குதித்து இறங்கிக் கட்டிலில் சக்கரவர்த்தி படுத்திருப்பதாக எண்ணிக் கத்தியினால் குத்திவிட்டு ஓடியிருக்கிறான். சக்கரவர்த்திக்கு ஆபத்து என்று அறிந்து கட்டிலின் அருகில் ஓடிய மகாராணியைத் தள்ளி விட்டுப் போயிருக்கிறான். அப்போதுதான் மகாராணி “ஐயோ” என்று கதறியிருக்கிறாள். பின்னர் அச்சதிகாரன் வாசற்படியின் பக்கம் ஓடி அங்கே அச்சமயம் பிரவேசித்துக் கொண்டிருந்த சின்னப் பழுவேட்டரையரையும் தள்ளி விட்டு ஓடிப்போயிருக்க வேண்டும். இவ்வளவையும் பூங்குழலி ஊகித்துத் தெரிந்து கொண்டாள். இந்தப் பாதகச் செயலைச் செய்து தப்பி ஓடியவனைத் தொடர்ந்து போய்ப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனத்தில் ஒரு பக்கத்தில் உதயமாயிற்று. அதைக் காட்டிலும் தன் அத்தையின் இறுதி நெருங்கி விட்டது என்ற நினைவு அவள் உள்ளத்தில் பெருங் கொந்தளிப்பை உண்டாக்கியது. ஆகையால் மந்தாகினி சக்கரவர்த்தியின் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பதையும் பொருட்படுத்தாமல் அவள் அருகில் சென்று மண்டியிட்டு உட்கார்ந்து “அத்தை! அத்தை!” என்று கதறினாள்.ஆனால் மந்தாகினியோ அவள் இருந்த பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவளுடைய கண்கள் சக்கரவர்த்தியின் திருமுகத்தை ஆவலுடன் அண்ணாந்து பார்த்த வண்ணமிருந்தன.

“சமுத்திர குமாரி! உன் அத்தை இன்று எவ்வளவு மகத்தான புண்ணியத்தைக் கட்டிக் கொண்டாள் என்பதை எண்ணிப் பார்! சதிகாரனுடைய கொலை வேல் என் தந்தையின் மேல் படாமல் காப்பாற்றினாள்! அந்த வேலைத் தன் உடம்பில் பாயும்படியும் செய்து கொண்டாள்! தன் உயிரைக் கொடுத்துச் சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பாற்றினாள்! ஒருமுறையல்ல. இருமுறை அவரைக் காப்பாற்றினாள்! உன் அத்தையின் மீது வேல் பாய்ந்ததைக் கண்டதும் மூன்று வருஷமாகச் சக்தி இழந்திருந்த என் தந்தையின் கால்களில் மீண்டும் சக்தி வந்தது. அவர் கட்டிலிருந்து எழுந்து வந்தார். அதனால் மறுபடியும் அவர் உயிர் தப்பியது. சதிகாரன் அவனுடைய குறி தப்பிவிட்டதாக எண்ணி விளக்கை அணைத்து விட்டுக் கீழே குதித்து வந்து மீண்டும் அவனுடைய பாதகத் தொழிலைச் செய்யப் பார்த்தான். ஆனால் சக்கரவர்த்தி எழுந்து வந்துவிட்டதால் அவனுடைய நோக்கம் நிறைவேறவில்லை. சமுத்திரகுமாரி! உன் அத்தை இந்தச் சோழ குலத்துக்கும், சோழ நாட்டுக்கும் எவ்வளவு பெரிய சேவை செய்திருக்கிறாள். சோழ நாட்டுக்கே பெரும் விபத்து நேராமல் காப்பாற்றினாள். சோழ வம்சத்துக்கே குல தெய்வம் ஆனாள். பூங்குழலி! உன் அத்தைக்காக இனி நான் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடப்போவதில்லை. அவளுக்காக நீயும் அழ வேண்டியதில்லை. வேறு யாரும் துக்கப்படவேண்டியதில்லை! இத்தகைய தெய்வ மரணம் யாருக்குக் கிடைக்கும்? முப்பது வருஷங்களாகப் பிரிந்திருந்த பதிக்காக உயிரைக் கொடுக்கும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்? அவருடைய மடியிலே தலையை வைத்துக்கொண்டு நிம்மதியாக உயிரைவிடும் பேறு யாருக்குக் கிடைக்கும்?” என்று இளவரசர் கூறினார்.


66. “வேளை வந்து விட்டது!”

கடம்பூர் அரண்மனையில் நந்தினி அவளுடைய அந்தப்புர அறையில் தனியாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த பரபரப்பை அவளுடைய முகத்தோற்றம் காட்டியது. அந்த அறைக்குள்ளே வருவதற்கு அமைந்திருந்த பல வழிகளையும் அவள் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த வழிகளில் ஏதாவது காலடிச் சத்தம் கேட்கிறதா என்று அவளுடைய செவிகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன. “வேளை நெருங்கி விட்டது!” என்று அவளுடைய உதடுகள் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

நந்தினி படுப்பதற்காக அமைந்திருந்த பஞ்சணை மெத்தை விரித்த கட்டிலில் நாலு பக்கமும் திரைச்சீலைகள் தொங்கின.  நந்தினி ஒரு பக்கத்துத் திரைச் சீலையை மெதுவாகத் தூக்கினாள். படுக்கையில் நீளவாட்டில் வைத்திருந்த கொலை வாளைப் பார்த்தாள். நந்தினி அந்த வாளைக் கையில் தூக்கிப் பிடித்தாள். தீபத்தின் ஒளியில் அதை இன்னும் நன்றாக மின்னிடும்படி செய்து பார்த்து உவந்தாள். பிறகு, அதைத் தன் மார்புடன் அணைத்துக் கொண்டாள் கன்னத்தோடு சேர்த்து வைத்துக் கொண்டு முத்தமிட்டாள். பக்கத்திலிருந்த வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவை யாரோ தட்டுவது போன்ற சத்தம் கேட்டது.

நந்தினி இரகசியக் கதவின் அருகில் சென்று, அதன் உட்கதவைத் திறந்தாள்.

இருட்டில் ஒரு கோரமான முகம் இலேசாகத் தெரிந்தது.

“மந்திரவாதி! வந்துவிட்டாயா?” என்றாள் நந்தினி.

“வந்துவிட்டேன், ராணி! வேளையும் வந்துவிட்டது” என்றான் ரவிதாஸன்.

“இன்று இல்லாவிட்டால் என்றைக்கும் இல்லை. தேவி! என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?”

“இந்தச் சமயத்தில் நீங்கள் ஒருவரும் இங்கு வராதிருந்தாலே எனக்குப் பெரிய உதவியாயிருக்கும்…”

“சபதம் முடிந்த பிறகு தங்களைப் பத்திரமாக அழைத்துக் கொண்டு போவதற்காக வந்திருக்கிறோம். எதிர்பாராத தடங்கல் ஏதாவது ஏற்பட்டால்  அதற்கும் தயாராயிருப்போம். எந்த நிமிஷமும் தாங்கள் எங்களை உதவிக்கு அழைக்கலாம்.”

“என்னை எப்படி அழைத்துக் கொண்டு போவீர்கள்?”

“இந்தச் சுரங்கப் பாதையின் முடிவில் ஐயனார் கோவில் இருக்கிறது. அதன் அருகில் உள்ள காட்டில் பல்லக்கைத் தயாராக வைத்திருக்கிறோம். வீர பாண்டியனின் தலையைக் கொய்தவனைப் பழிவாங்கிய தேவியை நாங்களே பல்லக்கில் வைத்துத் தூக்கிச் செல்வோம். பொழுது விடிவதற்குள் கொல்லிமலைக்குப் போய் விடுவோம்.”


67. “போய் விடுங்கள்!”

அல்லிக் குளத்தின் கரையிலிருந்த பளிங்குக்கல் மேடையில் மணிமேகலை உட்கார்ந்திருந்தாள். மேகங்கள் சூழ்ந்திருந்த வானத்தில் ஆங்காங்கு சில நட்சத்திரங்கள் சுடர் விட்டு ஒளிர்ந்தது போல் அல்லிக் குளத்திலும் அடர்த்தியாகப் படர்ந்திருந்த இலைகளுக்கு மத்தியில் மலர்கள் தலை தூக்கி நின்றன. இதைப் பார்த்துக் கொண்டிருந்த மணிமேகலை தனக்குப் பின்னால் காலடிச் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். மிகச் சமீபத்தில் வந்திருந்த உருவத்தைக் கண்டு அவசரமாக எழுந்தபோது கால் தடுமாறிப் பின்னாலிருந்த குளத்தில் விழப் போனாள்.

“ராஜகுமாரி! நான்தான்!” என்று கூறிக் கொண்டே வந்தியத்தேவன் மணிமேகலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

“ஐயா! தயவுசெய்து தாங்கள் என்னுடன் வாருங்கள். பழுவூர் ராணி தங்களை ஏதோ ஓர் அவசர காரியமாகப் பார்க்க வேண்டுமாம்.”

“அந்த அவசரமான காரியம் என்னவென்பது தங்களுக்குத் தெரியும் அல்லவா?”

“தெரியும்; பழுவேட்டரையர் கொள்ளிடத்தைத் தாண்டும் போது படகு கவிழ்ந்து போய்விட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது…”

“நானும் கேள்விப்பட்டேன்!”

“தாங்கள் உடனே போய் அதைப்பற்றிய உண்மையைத் தெரிந்துகொண்டு வரவேண்டுமாம். அவ்விதம் தங்களிடம் பழுவூர் ராணி நேரில் கேட்டுக் கொள்ளப் போகிறார்.”

வந்தியத்தேவன் சிறிது யோசித்துவிட்டு, “இதையெல்லாம் என்னிடம் முன்னால் கூற வேண்டாம் என்று பழுவூர் ராணி எச்சரிக்கவில்லையா?” என்றான்.

“ஆமாம்!”

“பின் ஏன் இதைப்பற்றி என்னிடம் சொன்னீர்கள்?”

சற்று முன்னால் நந்தினி தேவி தங்களை அழைத்து வரும்படி என்னை அனுப்பினார். உடனே, ஏதோ அவரிடம் கேட்பதற்காகத் திரும்பிப் போனேன். கதவைத் தாளிட்டுக் கொண்டிருந்தார். உள்ளே, வேட்டை மண்டபத்திலிருந்து பேச்சுக் குரல்கள் இலேசாகக் கேட்டன. ஐயா! என் சந்தேகத்தைத் தங்களுக்கு இப்போது சொல்லி விடுகிறேன். வேட்டை மண்டபத்தில் யாரோ ஆள்கள் வந்து ஒளிந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்களுக்கும் பழுவூர் ராணிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கவேண்டும் என்றும் சந்தேகிக்கிறேன்.”

வந்தியத்தேவன் இப்போதுதான் நிலைமையின் முக்கியத்தை நன்கு உணர்ந்தான். இன்று ஏதோ விபரீத சம்பவம் நிகழப்போகிறது என்பதாக அவன் உள்ளுணர்ச்சி அவனுக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தது. மணிமேகலை கூறிய செய்திகள் அவன் உள்ளுணர்ச்சியை உறுதிப்படுத்தின.

“இளவரசி! எனக்குத் தாங்கள் ஓர் உதவி அவசியம் செய்யவேண்டும்!”

“என்னவென்று சொல்லுங்கள்!”

“இளவரசி! வேட்டை மண்டபத்துக்கு வெளியிலிருந்து சுரங்கப் பாதை மூலமாக வரும் வழி ஒன்றிருக்கிறது. இப்போது நந்தினி தேவி இருக்கும் அறை வழியாகப் போவதற்கும் ஒரு வாசல் இருக்கிறது. இவற்றைத் தவிர மூன்றாவது வழி ஒன்று இருக்கிறதல்லவா? அந்த வழியாக என்னை இப்போதே வேட்டை மண்டபத்துக்கு அழைத்துப் போங்கள்!”

நந்தவனத்தைக் கடந்து வந்தியத்தேவனை மணிமேகலை அழைத்துச் சென்றாள். பிறகு, மாளிகையின் ஓரமாகச் சுவர்களின் கரிய நிழல் அடர்ந்திருந்த இடங்களின் வழியாக அழைத்துச் சென்றாள். பிறகு மாளிகையில் புகுந்து ஜன சஞ்சாரம் இல்லாத தாழ்வாரங்கள், நடைபாதைகள் வழியாக அழைத்துச் சென்றாள். பின்னர், கதவு சாத்தப்பட்டிருந்த ஒரு வாசற்படியின் அருகில் வந்தாள். அங்கேயே வந்தியத்தேவனை நிற்கச் செய்துவிட்டு விரைந்து சென்று ஒரு கை விளக்கை எடுத்து வந்தாள். கதவைத் திறந்து உள்ளே விளக்கைத் தூக்கிக் காட்டியபோது வரிசையாகப் படிக்கட்டுக்கள் அமைந்த குறுகிய நடைபாதை காணப்பட்டது. இருவரும் அப்படிகளில் இறங்கிச் சென்றார்கள். சிறிது நேரம் சென்ற பிறகு முன்னால், சென்ற மணிமேகலை சட்டென்று நின்று, மெல்லிய குரலில், “நில்லுங்கள்! ஏதோ காலடிச் சத்தம் போலிருக்கிறது, தங்களுக்குக் கேட்கிறதா?” என்றாள்.

அச்சமயம் நந்தினி தேவியின் படுக்கை அறைக்கதவு நன்றாகத் திறந்தது. வேட்டை மண்டபத்துக்குள் வெளிச்சம் புகுந்து பிரகாசப்படுத்தியது.

மறுகணம் நந்தினி தேவியும் வேட்டை மண்டபத்துக்குள்ளே பிரவேசித்தாள்.

வேட்டை மண்டபத்துக்குள் வந்தியத்தேவனையும் மணிமேகலையையும் பார்த்துவிட்டு நந்தினியும் சிறிது திகைத்துப் போனாள்.

“ஓஹோ! நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?” என்று கேட்டாள்.

“தேவி! தங்கள் கட்டளை என்று தங்கள் தோழி கூறியபடியால் வந்தேன்” என்றான் வந்தியத்தேவன்.

நந்தினி தனக்கு முதலில் உண்டான திகைப்பைச் சமாளித்துக் கொண்டு புன்னகை புரிந்தாள்.

“மணிமேகலை? இந்த வழியில் எதற்காக இவரை அழைத்துக் கொண்டு வந்தாய்?”

“அக்கா! சற்று முன் என் தமையன் கந்தமாறன் தங்களைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் கண்ணில் படவேண்டாம் என்பதற்காக இந்த வழியில் அழைத்து வந்தேன்.”

பிறகு, நந்தினியும் மணிமேகலையும் வந்தியத்தேவனும் நந்தினியின் அறைக்குள்ளே பிரவேசித்தார்கள். கதவும் உடனே அடைத்துக் கொண்டது.

“தங்காய்! நீ மிக்க புத்திசாலி! இவரை வேட்டை மண்டப வழியாக அழைத்து வந்தது நல்லதாய்ப் போயிற்று உன் தமையன் இப்போதுதான் இங்கிருந்து போகிறான். ஆதித்த கரிகாலரை அழைத்து வருவதாகச் சொல்லிப் போயிருக்கிறான். அதற்குள் உங்களை நான் அனுப்பிவிட வேண்டும்” என்றாள் நந்தினி.

“அக்கா! தங்கள் கணவரைப் பற்றி உண்மையை அறிந்து வர இவரை அனுப்பப் போவதாக சொன்னீர்கள்?” என்றாள் மணிமேகலை.

“ராணி! நான் போகச் சித்தமாயிருக்கிறேன். தங்களிடம் உள்ள ஒரு பொருளை யாசிக்கிறேன். மீன் அடையாளம் பொறித்த வாள் ஒன்று தங்களிடம் இருக்கிறது. அதைக் கொடுத்தால் போய்விடுகிறேன்” என்றான் வந்தியத்தேவன்.

“ஐயா! வேட்டை மண்டபத்தில் எத்தனையோ வாள்களும், வேல்களும் இருக்கின்றன. வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு தாங்கள் இந்தக் கணமே புறப்படலாமே? நான் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வைத்திருக்கும் அந்த ஒரே ஆயுதத்தை ஏன் கேட்க வேண்டும்?”

“தேவி தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுந்தானா அந்த வாளை வைத்துப் பூஜை செய்து வருகிறீர்கள்? உண்மையைச் சொல்லுங்கள்! வீர பாண்டியருடைய மரணத்துக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காகவும் இருக்கலாம் அல்லவா?”

“மணிமேகலை இருக்கும்போது நீர் அந்தப் பேச்சை எடுக்கமாட்டீர் என்று நினைத்தேன். நானும் இனி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்காய்! நீயும் தெரிந்துகொள். நான் இந்தக் கடம்பூர் அரண்மனைக்கு வந்ததின் நோக்கம் என்னவென்று தெரிந்துகொள்!”

இவ்வாறு சொல்லிய வண்ணம் நந்தினி தேவி பக்கத்தில் கட்டிலின் மீது வைத்திருந்த மீன் அடையாளமிட்ட வாளைக் கையில் எடுத்துக் கொண்டாள்.

“சோழ சாம்ராஜ்யத்தின் உட் கலகத்தைத் தீர்த்து வைப்பதற்காக நான் இங்கு வரவில்லை. மதுராந்தகத் தேவருக்கும், ஆதித்த கரிகாலருக்கும் இராஜ்யப் பிரிவினை செய்து வைப்பதற்காகவும் நான் இங்கே வரவில்லை. கடம்பூர் அரண்மனையில் விருந்துண்டு களிப்பதற்காகவும் வரவில்லை! தங்காய்! உனக்குத் திருமணம் முடித்து வைப்பதற்காகவும் வரவில்லை. வீரபாண்டியரின் தலையைக் கொய்த பாதகனைப் பழிக்குப்பழி வாங்கவே வந்தேன். இது பாண்டிய குலத்து வாள்! இதன் மேல் ஆணையிட்டு நான் சபதம் செய்திருக்கிறேன். அந்தச் சபதத்தை முடிக்கவே வந்தேன். இன்றிரவு ஒன்று என் சபதத்தை முடிப்பேன்; அல்லது என் உயிரை முடிப்பேன்!” என்று நந்தினி ஆவேசம் வந்தவள் போல் பேசி நிறுத்தினாள்.

“அதற்கு நான் தடையாக இருப்பேன் என்றுதானே என்னைப் போகச் சொல்லுகிறீர்கள்?” என்றான் வந்தியத்தேவன்.

“ஆகா! என் பழியை முடிப்பதற்கு நீர் தடை செய்யப்போகிறீரா? நல்ல காரியம்! யார் வேண்டாம் என்றார்கள்? உம்முடைய நண்பரிடம் சென்று இதையெல்லாம் சொல்லி இங்கே அவரை வராமல் தடுத்து விடுவதுதானே?”

“தேவி அவரிடம் சொல்லித் தடை செய்ய முடியாது என்றுதான் தங்களிடம் வந்தேன். தங்களுடைய காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டாவது தங்களை இந்தப் பாவ காரியம் செய்யாமல் தடுப்பதற்கு வந்தேன்…”

அப்போது மணிமேகலை, “ஐயோ அவர் வருகிறார் போலிருக்கிறதே!” என்று திடுக்கிட்டுக் கூறினாள்.

மற்ற இருவரும் உற்றுக் கேட்டார்கள். ஆம்; அப்போது அரண்மனை முன்கட்டிலிருந்து அந்த அறைக்குள் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டது.

“ஐயா! சீக்கிரம் வேட்டை மண்டபத்துக்குள் போய் விடுங்கள்!” என்றாள் நந்தினி.

“மறைந்துகொள்ள எனக்கு வேறு ஒரு நல்ல இடம் இருக்கிறது. தேவி! அந்த வாளை இப்படிக் கொடுங்கள்!” என்றான் வந்தியத்தேவன்.

நந்தினி அவனிடம் வாளைக் கொடுப்பதற்காக அதை முன்னால் நீட்டினாள். அப்போது அவளுடைய கைதவறி, வாள் தரையில் விழுந்து ஜணஜண கண கணவென்னும் ஒலியை எழுப்பியது.

வாள் தவறித் தரையில் விழுந்தபோது எழுந்த ஒலியுடன் நந்தினியின் சோகம் ததும்பிய மெல்லிய சிரிப்பின் ஒலியும் கலந்தது.

அவள் பரபரப்புடன், “ஐயா! தெய்வத்தின் சித்தம் வேறு விதமாயிருக்கிறது. வாள் இங்கேயே கிடக்கட்டும். தாங்கள் உடனே போய் மறைந்து கொள்ளுங்கள்!” என்றாள்.

அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வந்தியத்தேவன் குனிந்து வாளை எடுக்கப் போனான். அதன் கூரிய நுனிப் பகுதியைப் பிடித்துத் தூக்க முயன்றான். அதே சமயத்தில் அந்த வாளின் பிடியை ஒரு காலினால் மிதித்துக் கொண்டாள் நந்தினி.

“வேண்டாம்! இளவரசர் காதில் வாள் விழுந்த சத்தம் கேட்டிருக்கும். இங்கே வாள் இல்லாவிட்டால் அவர் மனத்தில் சந்தேகம் உண்டாகும். போய் விடுங்கள்! மறைந்து போய் விடுங்கள்!” என்றாள்.

வந்தியத்தேவன் வேண்டா வெறுப்பாக யாழ்க்கருவிகளின் களஞ்சியத்தை நோக்கி விரைந்து சென்றான். களஞ்சியத்தின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று மறைந்தான். காலடிச் சத்தம் வெகு சமீபத்தில், வாசற்படிக்கருகில் கேட்டது.

மணிமேகலையைப் பார்த்து, “தங்காய்! நீயும் மறைந்து கொள்! கட்டிலின் திரைகளுக்குப் பின்னால் மறைந்து கொள்! நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்குத் தெரியாமல் இங்கிருந்து போய்விடு!” என்றாள் நந்தினி.


68. காரிருள் சூழ்ந்தது!

மணிமேகலை கட்டிலின் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்த மறுகணத்தில் கரிகாலன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே நந்தினியை நெருங்கினான். நந்தினிக்கு அருகில் வந்ததும் தரையிலே கிடந்து ஒளிவிட்டுக் கொண்டிருந்த வாளைப் பார்த்தான். பின்னர், நந்தினியின் முகத்தை உற்றுப் பார்த்தான். நந்தினியின் நெஞ்சை ஊடுருவிய அந்தப் பார்வையின் தீட்சண்யத்தைப் பொறுக்க மாட்டாமல் வாளை எடுக்கும் பாவனையாக அவள் குனிந்தாள். நந்தினியின் நோக்கத்தை அறிந்து அவளை முந்திக்கொண்டு கரிகாலன் வாளைக் கையில் எடுத்துக் கொண்டான்.

பின்னர் நந்தினியை நோக்கி, “தேவி! வரும்போது கேட்ட சத்தம் இந்த வாளின் சத்தந்தான் போலிருக்கிறது. தங்கள் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்திருக்கிறது! என்னை வரவேற்பதற்குக் கையில் வாளேந்தி ஆயத்தமானது போலத் தோன்றுகிறது” என்றான்.

“வீரம் மிக்க இளம் புலிகளையும் தீரத்திற் சிறந்த வாலிப சிங்கங்களையும் வரவேற்பதற்குரிய முறை அதுவேயல்லவா?” என்றாள் நந்தினி.

“உண்மையைச் சொல்! என் உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும் தீயை மேலும் வளர்க்க வேண்டாம்! என்னை எதற்காக இந்தக் கடம்பூர் அரண்மனைக்கு வரச் சொன்னாய்? சோழ சாம்ராஜ்யத்தைப் பங்கிட்டுக் கொடுத்துச் சமரசம் செய்து வைப்பதற்காகவோ, எனக்கும் மணிமேகலைக்கும் திருமணம் செய்வித்துக் கண்டு களிப்பதற்காகவோ இத்தனை முயற்சியும் செய்ததாகச் சொல்லாதே! அந்தக் கதைகளையெல்லாம் நான் நம்பமாட்டேன். நம்பியிருந்தால், இங்கு வந்திருக்கவும் மாட்டேன்…”

“பின் எதற்காக இங்கு வந்தீர்கள், கோமகனே! என்ன நம்பிக்கையுடன் இந்த இடத்துக்கு வந்தீர்கள்?”

“நம்பிக்கையா? எனக்கு ஒருவித நம்பிக்கையும் கிடையாது. என் உள்ளத்தில் நிரம்பியிருப்பதெல்லாம் நிராசையும் அவநம்பிக்கையுந்தான். ஒரு சமயம் என்னிடம் நீ ஒரு வரம் கோரினாய். காலில் விழுந்து மன்றாடிக் கேட்டுக் கொண்டாய். என் ஆத்திரத்தினாலும் மூர்க்கத்தனத்தினாலும் நீ கோரியதை நான் கொடுக்கவில்லை. பிறகு ஒவ்வொரு கணமும் அதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டானால் அதைச் செய்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். நந்தினி! சொல்! எந்த விதத்திலாவது அதற்கு நான் பரிகாரம் செய்யமுடியும் என்றால், சொல்!”

இவ்வாறு இரக்கம் ததும்பும் குரலில் கூறிய கரிகாலனைப் பார்த்து நந்தினி, “கோமகனே! அதற்குப் பரிகாரம் ஒன்றும் கிடையாது. இறந்தவர்கள் இறந்தவர்கள்தான்! இறந்தவர்களைப் பிழைக்கச் செய்யும் சக்தி இந்த உலகில் யாருக்கும் கிடையாது” என்றாள்.

“இறந்தவர்களைப் பிழைக்கச் செய்ய முடியாது. அது உண்மைதான்! ஆனால் உயிருக்கு உயிர் கொடுத்துப் பரிகாரம் தேடலாம் அல்லவா?… இதோபார்! என்னிடம் இனியும் மறைக்க வேண்டாம். இங்கு நீ எதற்காக வந்தாய், என்னை எதற்காக வரச் சொன்னாய் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது என்று எண்ணாதே! வீர பாண்டியனுடைய வாளினால் என்னைக் கொன்று பழி முடிக்கும் நோக்கத்துடனேயே நீ இவ்விடத்துக்கு வந்திருக்கிறாய். அந்த உன்னுடைய நோக்கத்தை தடையின்றி நிறைவேற்றிக்கொள்! இதோ! இந்த வாளைப் பெற்றுக் கொள்!” என்று கூறிக் கரிகாலன் வாளை நீட்டினான்.

நந்தினி வாளை வாங்கிக் கொண்டாள். வாளைப் பிடித்த அவளுடைய கைகள் நடுங்கின. பின்னர் அவள் உடம்பெல்லாம் நடுங்கியது. கண்களில் கண்ணீர் ததும்பியது. இதயத்தைப் பிளக்கும் சோகக் குரலில் விம்மலும் தேம்பலும் கலந்து வந்தன.

நந்தினி பொங்கிவந்த விம்மலை அடக்கிக்கொண்டு, “கோமகனே! தங்களிடம் நான் எதையும் மறைக்கவும் இல்லை. மறைக்க விரும்பவும் இல்லை. நான் இங்கு வந்ததின் நோக்கம் பற்றித் தாங்கள் கூறியதெல்லாம் உண்மைதான். தங்களை இங்கு வரச் சொன்னதின் நோக்கமும் அதுதான். ஆனால் சந்தர்ப்பம் நேர்ந்திருக்கும் சமயத்தில் என் கைகளில் வலிவு இல்லை; என் நெஞ்சிலும் தைரியம் இல்லை. தாங்கள் என்னைத் தேடிவரும் காலடிச் சத்தம் கேட்டவுடனேயே என் கையிலிருந்த வாள் நழுவிக் கீழே விழுந்துவிட்டது. இதோ பாருங்கள்! வாளைப் பிடித்திருக்கும் என் கரங்கள் நடுங்குவதை!” என்றாள்.

“கோமகனே! வீரபாண்டியனுடைய மரணத்துக்குப் பழி வாங்குவதாக நான் சபதம் செய்தது உண்மைதான். மீன் சின்னம் பொறித்த இந்தப் பாண்டிய குலத்து வாளினால் ஒன்று தங்களை கொல்லுவேன், அல்லது என்னை நானே கொன்று கொண்டு மாய்வேன் என்று சபதம் எடுத்துக் கொண்டேன்.

என்னைப் பற்றிய உண்மையைச் சொல்லி விடுகிறேன். அதைக்கேட்ட பிறகு என்னைத் தங்கள் கையினாலேயே கொன்றுவிடுங்கள்! என் வாழ்க்கையின் முடிவு, என் துன்பங்களுக்கு விமோசனம், – மரணம் ஒன்றுதான் என்பதையும் தெரியப்படுத்தும். ஐயா! என் தந்தை யார் என்பதைத் தங்களுக்குச் சொல்லப் போகிறேன்.”

இவ்விதம் பலமான பூர்வ பீடிகை போட்டுக்கொண்டு நந்தினி ஆதித்த கரிகாலரை மிக நெருங்கி அவர் காதண்டை மிக மெல்லிய நடுங்கிய குரலில் “என்னைப் பெற்ற தந்தை… தான்!” என்று கூறினாள். கூறிவிட்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.

ஆதித்த கரிகாலன் ஆயிரம் தேள் கொட்டியவனைப் போல் ஒரு கணம் துடிதுடித்துத் துள்ளினான்.

“இல்லை, இல்லை, இல்லை! ஒரு நாளும் இல்லை! நீ சொல்லுவது பொய், பொய் பெரும் பொய்!” என்று உரக்கக் கத்தினான்.

மறுகணமே அவனுடைய ஆவேசம் அடங்கியது. வேதனை மிகுந்த குரலில், “ஆம் நந்தினி, ஆம். நீ கூறியது உண்மையாகவே இருக்க வேண்டும். இப்போது எல்லாம் எனக்குத் தெரிகிறது. உன் மனத்திலே நிகழ்ந்திருக்கக் கூடிய போராட்டத்தைப் பற்றிய உண்மையும் தெரிகிறது. நீ எவ்வளவு துன்பப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. உன் குழப்பத்துக்கும், தயக்கத்துக்கும் உன் பயங்கரமான வேண்டுகோளுக்கும் காரணம் தெரிகிறது. அன்றைக்கு நீ என்னுடைய காலில் விழுந்து மன்றாடியபோது, நான் உன் வேண்டுகோளை மறுத்தது எவ்வளவு பெரிய கொடுமை என்று தெரிகிறது! ஐயோ! இந்தப் பெரும் பாரத்தை இத்தனை நாள் எப்படி உன் மனத்தில் வைத்துத் தாங்கிக் கொண்டிருந்தாய்? எப்படி இந்தப் பாதகன் இப்பூமியில் உயிர் வாழ்வதைச் சகித்துக் கொண்டிருந்தாய்? நல்லது! இதோ, நந்தினி! என் பிராயச்சித்தம்!”

யாழ்க் களஞ்சியத்திலேயிருந்து வந்தியத்தேவன் மேற்கூறிய சம்பாஷணைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான். இடையிடையே கரிகாலரின் வெறி மூர்த்தண்யமாகிக் கொண்டிருந்த போது அவன் அவர்களுக்கிடையே போக எண்ணினான். பிறகு அதனால் என்ன விபரீதம் நேரிடுமோ என்று தயங்கினான். கடைசியாக ஆதித்த கரிகாலர் அடங்கிய மெல்லிய தழதழத்த குரலில், நந்தினி கூறியதை ஒப்புக் கொள்ளும் முறையில் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தபோது, அவனுடைய ஆர்வமும் கட்டுக் காவலைக் கடந்தது. அவர் உரக்கச் சத்தமிட்டுக் கொண்டிருந்த வரையில் அவன் அவ்வளவாகப் பயப்படவில்லை. இப்போதுதான் அதிகமாக அஞ்சினான். என்ன செய்யப் போகிறாரோ என்ற பெருங் கவலையினால், யாழ்க் களஞ்சியத்திலிருந்து சிறிது தலையை நீட்டிப் பார்த்தான். பார்வைக்கு இலக்கான இடத்தில் நந்தினியும் கரிகாலரும் இல்லை. ஆனால் வேறொரு காட்சியைக் கண்டான். சுவரில் பதிந்திருந்த நிலைக் கண்ணாடியில் அந்தக் காட்சி தெரிந்தது. வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவு துவாரத்தின் வழியாக ஒரு கோரமான முகம் தெரிந்தது. மந்திரவாதி ரவிதாஸனுடைய முகந்தான்! அடுத்த கணத்தில் வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவு மெதுவாகத் திறப்பதை வந்தியத்தேவன் கண்டான். உடனே, யாழ்க் களஞ்சியத்தின் மறைவிலிருந்து தாவி வெளியில் பாய்ந்து செல்ல முயன்றான்.

அச்சமயம் பின்னாலிருந்து அவனுடைய கழுத்தில் வஜ்ராயுதத்தை யொத்த ஒரு கை சுற்றி வளைத்துக்கொண்டது. அண்ணாந்து நோக்கினான்; ஓர் ஆஜானுபாகுவான உருவம் கண் முன்னே தெரிந்தது. ஆகா! இவன் யார்? இங்கு எப்படி வந்தான்! இது என்ன இரும்புப் பிடி? கழுத்து நெரிகிறதே! மூச்சுத்திணறுகிறதே; விழி பிதுங்குகிறதே! இன்னும் சில கண நேரம் போனால், உயிரே போய்விடுமே…! வந்தியத்தேவன் ஒரு பெரு முயற்சி செய்து அந்த இரும்புக் கையின் பிடியைத் திமிறித் தளர்த்திக்கொண்டு வெளியில் பாய்ந்தான். பாய்ந்த வேகத்தில் தரையில் விழுந்தான். தலையிலே ஒரு பெரிய பாறாங்கல்லைப் போட்டதுபோல் இருந்தது. ஒருகணம் அவன் கண்களின் முன் கோடி சூரியர்கள் கோடானுகோடி கிரணங்களைப் பரப்பிக் கொண்டு பிரகாசித்தார்கள். அடுத்த கணத்தில் அவ்வளவு சூரியர்களும் மறைந்தார்கள். நாலாபுறமும் இருண்டு வந்தது. வந்தியத்தேவன் அக்கணமே நினைவை இழந்தான்.

யாழ்க் களஞ்சியத்திலிருந்து, அதன் வாசலில் கிடந்த வந்தியத்தேவனுடைய உடலை மிதித்துத் தாண்டிக்கொண்டு, ஒரு பயங்கரமான உருவம் வெளிப்பட்டது. யாழ்க் களஞ்சியத்தின் அருகில் தடால் என்ற சத்தத்தைக் கேட்டு நந்தினி திரும்பிப் பார்த்தாள். அந்த உருவம் கையில் கத்தியை உருவிக் கொண்டு தன்னை நோக்கி வருவதைக் கண்டாள். விழிகள் பிதுங்கும்படியாக வியப்புடன் அந்த உருவத்தை நோக்கினாள். அவள் வயிற்றிலிருந்த குடல்கள் மேலே ஏறி மார்பையும், தொண்டையையும் அடைத்துக்கொண்டதாகத் தோன்றியது. கண்களைத் துடைத்துக் கொண்டு, எதிரே பார்த்தாள். கரிகாலன் கீழே விழுந்து கிடக்கக் கண்டாள். அவன் உடலில் வீர பாண்டியனுடைய வாள் பாய்ந்திருந்ததையும் கண்டாள்.

“அடி பாதகி! சண்டாளி! உன் பழியை நிறைவேற்றி விட்டயா?” என்று கூறிக்கொண்டே உருவம் அவளை மேலும் நெருங்கி வந்தது.

அதே சமயத்தில் வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவின் வழியாக ரவிதாஸனும் பிரவேசித்தான். அந்த அறைக்கு இலேசாக வெளிச்சம் தந்து கொண்டிருந்த விளக்கு அறுந்து விழுந்தது. அது அணைவதற்கு முன்னால் ஒரு கண நேரம் மணிமேகலையின் பயப்பிராந்தி கொண்ட முகத்தைக் காட்டியது. ‘கிறீச்’ சென்று கூவிக் கொண்டே மணிமேகலை அங்கிருந்து ஓடினாள்.அறையில் காரிருள் சூழ்ந்தது. அந்தக் காரிருளில் சோகந் ததும்பிய விம்மல் குரலும், வெறி கொண்ட சிரிப்பின் ஒலியும், மரணத் தறுவாயில் கேட்கும் முனகல் ஓசையும் மனிதர்கள் விரைந்து அங்குமிங்கும் ஓடும் காலடிச் சத்தமும் கலந்து கேட்டன.


69. “நான் கொல்லவில்லை!”

ஆதித்த கரிகாலன் மரணமுற்றுக் கிடந்த கடம்பூர் அரண்மனையின் அறையில் காரிருள் சூழ்ந்திருந்தது. கழுத்து நெறிபட்டுத் தரையில் தடாலென்று தள்ளப்பட்ட வல்லவரையனுடைய உள்ளத்திலும் அவ்வாறே சிறிது நேரம் இருள் குடிகொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வரத் தொடங்கியபோது, அவன் கண்களும் விழித்தன. ஆனால் அவனைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த இருளின் காரணத்தினால் அவன் எங்கே இருக்கிறான், என்ன நிலைமையில் இருக்கிறான் என்பதும் அவன் உள்ளத்தில் புலப்படவில்லை.

இரண்டு கைகளையும் நீட்டித் துழாவிப் பார்த்தான். ஒரு பொருள் கைக்குத் தட்டுப்பட்டது. அது என்ன? கத்திபோல் அல்லவா இருக்கிறது? ஆம்; கத்திதான்! திருகுமடல் உள்ள கத்தி! சாதாரணக் கத்திகளைவிட, மிகச் சக்தி வாய்ந்தது! எவன் பேரிலாவது பாய்ந்தால், அவன் செத்தான்!

சரி; இனி உட்கார்ந்திருப்பதிலோ காத்திருப்பதிலோ பயனில்லை. எழுந்து நடந்து எங்கே இருக்கிறோம் என்று சோதித்துப் பார்க்க வேண்டியதுதான். எழுந்து நின்றான்; கால்கள் தள்ளாடின. ஆயினும் சமாளித்துக் கொண்டு நடந்தான். இருட்டில் தடுமாறிக்கொண்டு நடந்தான். ஏதோ காலில் தடுக்கவே மறுபடியும் தடால் என்று விழுந்தான். தடுமாறி விழுந்தபோது கையிலிருந்த கத்தி நழுவி விட்டது. அதைக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்வதற்காகக் கையை நீட்டித் துழாவினான். கையில் மிருதுவாக ஏதோ தட்டுப்பட்டது. வந்தியத்தேவனுடைய உடம்பெல்லாம் நடுங்கியது. நெஞ்சில் பீதி குடி கொண்டது.

‘அப்படியும் இருக்க முடியுமா?’ என்று எண்ணிக் கொண்டே மறுபடியும் தடவிப் பார்த்தான். ஆம்; அது ஒரு மனித உடல்தான்! அவன் கையில் தட்டுப்பட்டது அந்த மனிதனின் உள்ளங்கை! உற்றுப் பார்த்தான், ஐயோ! இளவரசர் ஆதித்த கரிகாலர் அல்லவா கிடக்கிறார்? அவர் அல்ல! அவருடைய உயிர் அற்ற உடல்தான் கிடக்கிறது! வந்தியத்தேவனுடைய நெஞ்சு விம்மித் தொண்டையை அடைத்துக் கொண்டது. கண்களில் அவனை அறியாமல் கண்ணீர் ததும்பியது! நடு நடுங்கிய கைகளினால் கரிகாலருடைய உடம்பின் பல பகுதிகளையும் தொட்டுப் பார்த்தான். சிறிதும் சந்தேகத்துக்கு இடம் இல்லை. உயிர் சென்றுவிட்ட வெறுங்கூடுதான்!

அந்த உயிரற்ற உடம்பின் விலாப் பக்கத்திலிருந்து பெருகிப் பக்கத்தில் வழிந்திருந்த இரத்தம் அவனுடைய கைகளை நனைத்தது. அச்சமயம் அவனுக்குக் குந்தவைப் பிராட்டியின் நினைவு உண்டாயிற்று. அந்த மாதரசி அவனை எதற்காக அனுப்பி வைத்தாளோ, அந்தக் காரியத்தில் அவன் வெற்றி அடையவில்லை, முழுத் தோல்வி அடைந்தான்! அவனால் எவ்வளவு பிரயத்தனம் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்தாகிவிட்டது. ஆனாலும் பயன்படவில்லை, விதி வென்றுவிட்டது! இளவரசரின் உயிரற்ற உடலை எடுத்து தன்னுடைய மடியிலே போட்டுக் கொண்டான். மேலே என்ன செய்வது என்று, தெரியவில்லை. சிந்திக்கும் சக்தியையே இழந்துவிட்டான். சத்தம்போட்டு அலறுவதற்குத் தொண்டையிலும் சக்தி இல்லாமற் போய்விட்டது.

“இளவரசர் இறந்துவிட்டார்; ஒப்புக்கொண்ட காரியத்தில் நாம் வெற்றி பெறவில்லை; குந்தவையின் முகத்தில் இனி விழிக்க முடியாது!” என்னும் இந்த எண்ணங்களே திரும்பத் திரும்ப அவன் மனத்தில் வந்து கொண்டிருந்தன. இவ்வாறு எண்ணிக் கொண்டு அவன் எத்தனை நேரம் அங்கே உட்கார்ந்திருந்தான் என்பது அவனுக்கே தெரியாது. தீவர்த்தி வெளிச்சத்துடன் மனிதர்கள் சிலர் அந்த அறையை நெருங்கி வருகிறார்கள் என்பதைக் கண்ட பிறகுதான் அவனுக்கு ஓரளவு சுய நினைவு வந்தது.

கரிகாலருடைய உடலைத் தன்னுடைய மடியிலிருந்து எடுத்துக் கீழே வைத்துவிட்டு எழுந்து நின்றான். பத்துப் பன்னிரண்டு ஆள்கள் முன்வாசற் பக்கமிருந்து வந்தார்கள். அவர்களில் இருவர் தீவர்த்தி பிடித்துக் கொண்டிருந்தார்கள். மற்றும் சிலர் வேல் ஏந்திக்கொண்டு வந்தார்கள். எல்லாருக்கும் முன்னால் கந்தமாறனும், அவனுக்கு அடுத்தாற் போல் பெரிய சம்புவரையரும் வந்தார்கள். வந்தவர்கள் எல்லாருடைய முகங்களும் பயப்பிராந்தியைக் காட்டின. தீவர்த்தி வெளிச்சத்தில் பேயடித்தவர்களைப் போல் காணப்பட்டார்கள்.

சம்புவரையர் கீழே கிடந்த ஆதித்த கரிகாலனுடைய உடலை அணுகினார். அதன் தலைமாட்டில் உட்கார்ந்து, சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, “ஐயோ! விதியே! இது என் வீட்டிலா நேர வேண்டும்? விருந்துக்கு என்று அழைத்து வேந்தனைக் கொன்ற பழி என் தலையிலா விடிய வேண்டும்?” என்று புலம்பிக் கொண்டே தமது தலையில் படார், படார் என்று அடித்துக்கொண்டு புலம்பினார்.

கந்தமாறன் “தந்தையே! நம் குலத்துக்கு அந்தப் பழி ஒரு நாளும் வராது! இதோ கொலைக்காரனைக் கையும் மெய்யுமாகப் பிடித்திருக்கிறோம்! இவன் இளவரசரைக் கொல்வதற்கு உபயோகித்த கத்தி அதோ கிடப்பதைப் பாருங்கள்! அதில் இரத்தம் தோய்ந்திருப்பதைப் பாருங்கள்! இப்பேர்ப்பட்ட மகா பாதகனுக்கு என்ன தண்டனை கொடுப்பது? எது கொடுத்தாலும் போதாதே?” என்று கந்தமாறன் பேசிக் கொண்டே போனான்.

வந்தியத்தேவன் தொண்டை நெறித்து பேச முடியாதவனாயிருந்தான்.  கந்தமாறனுடைய வார்த்தைகள் அவனைத் திக்பிரமை கொள்ளச் செய்தன. தன்னைப் பிறர் கொலைகாரனாகக் கருதக் கூடிய நிலையில்தான் இருப்பது அப்போதுதான் அவனுக்குத் தெரிய வந்தது. இளவரசனைக் குத்திக் கொன்ற குற்றத்தையல்லவா இந்தக் கந்தமாறன் தன்மீது சுமத்துகிறான்?

இவ்வாறு எண்ணமிட்ட வந்தியத்தேவன் சிந்தனை சட்டென்று இன்னொரு பக்கம் திரும்பியது! ஆதித்த கரிகாலரைத் தான் கொல்லவில்லையென்பது நிச்சயம். ஆனால் வேறு யார் கொன்றிருப்பார்கள்? நந்தினியா? அல்லது ரவிதாஸனா? அல்லது பயங்கரத் தோற்றங் கொண்ட நெடிதுயர்ந்த உருவமா? அல்லது இடும்பன்காரியாக இருக்குமோ?

கந்தமாறன், தன் பக்கத்தில் நின்ற ஆட்களைப் பார்த்து, “தடியர்களே! ஏன் சும்மா நிற்கிறீர்கள்? இந்தக் கொலைகாரனைப் பிடித்துக் கட்டுங்கள்!” என்று கத்தியதுந்தான் வந்தியத்தேவனுக்குத் தனது இக்கட்டான நிலைமை மறுபடியும் ஞாபகத்துக்கு வந்தது.

கந்தமாறனை அவன் இரக்கமும், துயரமும் ததும்பிய கண்களினால் பார்த்தான். ஒரு பெரு முயற்சி செய்து தொண்டையில் ஜீவனைத் தருவித்துக்கொண்டு, “கந்தமாறா! சத்தியமாகச் சொல்லுகிறேன். நான் இளவரசரைக் கொல்லவில்லை. அவர் உயிரைக் காப்பாற்றும் பொறுப்பைப் பழையாறை இளைய பிராட்டியிடம் நான் ஏற்றுக்கொண்டு வந்தேன்…”

“இவ்விதம் சொல்லித்தான் இளவரசரை ஏமாற்றினாய்! பிறகு வஞ்சகம் செய்து குத்திக் கொன்றாய்! இல்லாவிட்டால், இந்த அறைக்குள் எப்படி வந்து சேர்ந்தாய்? எதற்காக வந்தாய்?”

“கந்தமாறா! இளவரசருக்கு ஆபத்து வரப்போவதையறிந்து அவரைப் பாதுகாக்க வந்தேன். அந்த முயற்சியில் தோற்றுப் போனேன்.”

“அடே! நீ சொல்லுவது உண்மையானால், கரிகாலர் கொலை செய்யப்படும்போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாயா?” என்றார் சம்புவரையர்.

“ஐயா? பழுவூர் ராணியும் கரிகாலரும் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று, கொலைகாரர்கள் பிரவேசித்தார்கள். அவர்களைத் தடுக்க நான் யத்தனித்தபோது பயங்கரமான தோற்றமுடைய ஒருவன் என் கழுத்தைப் பிடித்து நெறித்தான், நான் நினைவிழந்துவிட்டேன். மறுபடியும் நினைவு வந்தபோது ஆதித்த கரிகாலர் உயிரற்று விழுந்து கிடப்பதைக் கண்டேன்!” என்றான் வந்தியத்தேவன்.

ஆதித்த கரிகாலன் இறுதி ஊர்வலம் காவிரி நதிக் கரையோரமாகத் தஞ்சையை நோக்கிச் சென்றபோது, அந்த ஊர்வலத்தில் சோழ நாட்டு மக்கள் லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்டார்கள். ஊர்வலம் தஞ்சையை அணுகியபோது, ஜனக்கூட்டம் ஜன சமுத்திரமாகவே ஆகிவிட்டது. தஞ்சை நகர மக்களும் கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து விட்டார்கள். அவர்களையெல்லாம் கோட்டைக்குள் அனுமதித்தால் பல விபரீதங்கள் நேரிடலாம் என்று முதன்மந்திரி அநிருத்தர் எச்சரித்ததின் பேரில், துயரக் கடலில் மூழ்கியிருந்த சக்கரவர்த்தியும் அவருடைய குடும்பத்தாரும் கோட்டைக்கு வெளியிலேயே வந்துவிட்டார்கள்.

ஆதித்த கரிகாலன் மதுராந்தகனின் மண்ணாசையினாலும் சிற்றரசர்களின் அதிகார வெறியினாலும் சூழ்ச்சிக்கு ஆளாகிக் கொல்லப்பட்டான். மக்களின் மனத்தில் குடிகொண்டிருந்த இந்த எண்ணத்தை உறுதிப்படுத்தும் காரியங்களும் வெளியில் நடந்தன. ஆதித்த கரிகாலனுடைய சடலம் தஞ்சைக் கோட்டைக்கு வெளியே எல்லோரும் வந்து பார்க்கும்படியாக வைக்கப்பட்டிருந்தது. அனைவரும் வந்து பார்த்துக் கண்ணீர் விட்டு விட்டுப் போனார்கள். ஆனால் மதுராந்தகர் மட்டும் வரவில்லை; பழுவேட்டரையர்களும் வரவில்லை.


70. “நீ என் மகன் அல்ல!”

அநிருத்தர் எழுந்து உபசரித்துச் சுட்டிக் காட்டிய ஆசனத்தில் செம்பியன் மாதேவி உட்கார்ந்தார். சிறிது நேரம் தரையைக் குனிந்து பார்த்த வண்ணமாக இருந்தார். அந்த மேல்மாடத்திலும் மாளிகைக்கு வெளியிலும் வீதியிலும் நிசப்தம் குடிகொண்டிருந்தது. பின்னர் செம்பியன் மாதேவி, மதுராந்தகனையும், அநிருத்தரையும் ஒரு முறை பார்த்துவிட்டு “ஐயா! என் கணவர் என் தலை மீது இந்தப் பாரத்தைச் சுமத்திவிட்டு மேற்றிசைக்கு எழுந்தருளி விட்டார். தவறு செய்தது என்னவோ நான்தான். ஆனால் அவர் இச்சமயம் இருந்திருந்தால் நான் இவ்வளவு துன்பப்பட நேர்ந்திராது” என்றாள்.

அப்போது மதுராந்தகன் கண்களில் கோபக்கனல் பறக்க, “நீ ஏன் இப்படி வேதனைப்படுகிறாய்? ஏன் அடிக்கடி என் தந்தையின் பெயரை எடுக்கிறாய்? தஞ்சாவூர்ச் சிம்மாதனத்தில் நான் ஏறப்போவதென்னமோ நிச்சயம். அதற்குத் தடையாக இருந்தவர்களில் ஒருவன் இறந்து போனான். அருள்மொழிவர்மனோ என்னை விட வயதில் சிறியவன். நான் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு ஒருநாளும் பட்டம் கட்ட மாட்டார்கள். நீ மட்டும் குறுக்கே நில்லாமல் கருணை செய்ய வேண்டும். அம்மா! பெற்ற பிள்ளைக்குத் துரோகம் செய்யும் அன்னையைப் பற்றி யாராவது கேள்விப்பட்டதுண்டா? சிவபக்த மணியாகிய நீ ஏன் எனக்குத் துரோகம் செய்யப் பார்க்கிறாய்?” என்றான்.

“என் குழந்தாய்! பெற்ற பிள்ளைக்குத் தாய் விரோதமாக இருப்பது பயங்கரமான துரோகம்தான். ஆனால் என் கணவர் எனக்கு அவ்விதம் கட்டளையிட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய கட்டளையை நிறைவேற்றுவது என் கடமை.”

இதைக் கேட்டதும் மதுராந்தகன் குதித்தெழுந்தான். “நீ என்னுடைய தாயாராக இருக்க முடியுமா? இல்லவே இல்லை” என்று மதுராந்தகன் உள்ளம் நொந்து கொதித்துக் கூறினான்.

அப்போது செம்பியன் மாதேவி, “அப்பா! உனக்கு நான் இதை என்றைக்கும் சொல்லவேண்டாம் என்றிருந்தேன். உன்னுடைய பிடிவாதத்தினால் சொல்லும்படி செய்து விட்டாய். உண்மையிலேயே நான் உன்னைப் பெற்ற தாயார் அல்ல. நீ என் மகனும் அல்ல” என்றாள்.

மதுராந்தகன் கம்மிய குரலில், “ஆகா நான் சந்தேகித்தது உண்மையாகப் போய்விட்டது. நீ என் தாயாரில்லாவிட்டால் என் தாயார் யார்? நான் உன் மகன் இல்லையென்றால் பின் யாருடைய மகன்?” என்றான்.

தேவி முதன்மந்திரி அநிருத்தரைப் பார்த்து, “ஐயா! தாங்கள் சொல்லுங்கள். என்னுடைய அவமானத்தை நானே சொல்லும்படி தயவு செய்து வைக்க வேண்டாம்” என்றாள்.

முதன்மந்திரி அநிருத்தர், மதுராந்தகனைப் பார்த்துச் சொன்னார்: “இளவரசே! தங்களைச் சின்னஞ்சிறு குழவிப் பருவத்திலிருந்து எடுத்து வளர்த்த அன்னையை மனம் நோகும்படி செய்து விட்டீர்கள். எப்படியும் ஒருநாள் தாங்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டியதுதான். இப்போதே அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.”

செம்பியன் மாதேவிக்குக் கல்யாணமான புதிதில் தன் வயிற்றில் ஒரு குழந்தை பிறக்க வேண்டுமென்றும் அக்குழந்தை சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக வேண்டுமென்றும் ஆசை இருந்தது. அவள் கர்ப்பந்தரித்து குழந்தைப் பேற்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், அவருடைய கணவர் வெளியூருக்குச் சென்றிருந்தார். அதே சமயத்தில் அதே காலத்தில் அக்காளும் தங்கையுமான இரண்டு ஊமை ஸ்திரீகள் அரண்மனைத் தோட்டத்தில் குடியிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி கர்ப்பந்தரித்து குழந்தைப் பேற்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். செம்பியன் மாதேவி க்ஷேத்திராடனம் சென்றிருந்த போது அனாதையாகக் காணப்பட்ட அந்த கர்ப்ப ஸ்திரீயை அழைத்து வந்திருந்தாள். அவளுடைய சகோதரி தஞ்சாவூருக்கருகில் இருக்கிறாளென்று கேள்விப்பட்டுக் கர்ப்ப ஸ்திரீக்கு உதவி செய்வதற்காக அவளை வரவழைத்துக் கொண்டிருந்தாள். செம்பியன் மாதேவிக்குக் குழந்தை பிறந்தது. முதன்மந்திரி அநிருத்தர் ராஜ்யத்துக்குப் பிள்ளை பிறந்திருப்பதன் பொருட்டு வாழ்த்துக்கூற வந்தபோது செம்பியன் மாதேவி கண்ணீர் விட்டுக் ‘கோ’வென்று அழுதாள். பிறந்த குழந்தை உயிரில்லாமல் அசைவற்றுக் கட்டையைப் போல் கிடந்தபடியால் அவ்வாறு அவள் துக்கப்பட்டாள்.

“ஐயா! என் கணவன் வந்து கேட்கும்போது நான் என்ன பதில் சொல்வேன்?” என்று விம்மியழுதாள். அவளுடைய துயரத்தைக் கண்டு பொறுக்கமுடியாமல் அநிருத்தர் ஒரு யோசனை கூறினார். தோட்டத்தில் குடியிருந்த ஊமைப் பெண்ணுக்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதை அவர் அறிந்திருந்தார். அந்த ஊமைப் பெண்ணிடம் சென்று குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டால், அவர்கள் அரண்மனையில் வளர்வார்களென்று ஜாடையினால் தெரிவித்தார். அந்த ஊமைப் பெண் வெறிபிடித்த பைத்தியக்காரி போல் இருந்தாள். முதலில் அவள் குழந்தைகளைக் கொடுக்க மறுத்தாள். சற்று நேரம் கழித்துக் குழந்தைகளை விட்டுவிட்டு ஓடியே விட்டாள். உடனே அநிருத்தர் அவளுடைய தங்கையைக் கொண்டு ஆண் குழந்தையைச் செம்பியன் மாதேவியிடம் கொண்டுவிடச் செய்தார். உயிரின்றிக் கட்டை போல் இருந்த குழந்தையை ஒருவருக்கும் தெரியாமல் கொண்டு போய்ப் புதைத்துவிடும்படி ஊமைத் தங்கையிடம் கொடுத்தனுப்பி விட்டார். மற்றொரு பெண் குழந்தையைத் தன்னுடைய வீட்டுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்த தன்னுடைய சீடன் ஆழ்வார்க்கடியானிடம் கொடுத்துப் பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்.

இவ்விதம் குழந்தை மாற்றம் செய்தது செம்பியன் மாதேவியின் உள்ளத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. ஒரு நாள் கண்டராதித்த தேவரிடம் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டாள். அந்த மகான், “அதனால் பாதகமில்லை! பெண்ணே! யார் வயிற்றில் பிறந்த குழந்தையாக இருந்தால் என்ன? சிவபெருமான் அளித்த குழந்தைதான். உன் வயிற்றில் பிறந்த குழந்தையைப் போலவே வளர்த்து வா. ஆனால் வேறு குலத்தில் பிறந்த பிள்ளை சோழ சிங்காதனத்தில் ஏறக்கூடாது. அப்படிச் செய்வது குலத் துரோகமாகும். ஆகையால் சிறு பிராயத்திலிருந்தே இவனைச் சிவ பக்தனாகும்படி வளர்த்து வருவோம். ‘சோழ சாம்ராஜ்யம் வேண்டாம். சிவபக்தி சாம்ராஜ்யமே போதும்!’ என்று இவனே சொல்லும்படி வளர்ப்போம். ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இவனைத் தஞ்சாவூர் சிங்காதனத்தில் ஏற்றி வைப்பதற்கு மட்டும் நாம் உடந்தையாக இருக்கக்கூடாது. அந்தச் சந்தர்ப்பம் வரும்போது நான் உயிரோடு இல்லாவிட்டாலும், நீ உறுதியுடனிருந்து சோழர் குலத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

“மதுராந்தகா! நீ கண்டராதித்த தேவருடைய புதல்வனுமல்ல. செம்பியன் மாதேவி வயிற்றில் பிறந்த பிள்ளையுமல்ல. ஊர் சுற்றித் திரிந்த அனாதை ஊமைப் பெண்ணின் மகன். உன்னை இந்தத் தேவி தம் சொந்தக் குழந்தையைவிட நூறு மடங்கு அதிகமாகச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார். இப்போது அவருடைய கருத்துக்கு மாறாக நடக்காதே! தேவி சொல்வதைக் கேள், அதனால் உனக்கு நன்மையே விளையும்” என்றார் அநிருத்தர்.

மதுராந்தகன் சிறிது நேரம் பிரமை பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்த பிறகு திடீரென்று எழுந்து நின்று, அநிருத்தரைப் பார்த்து, “முதன்மந்திரி! இதெல்லாம் உமது சூழ்ச்சி! எனக்கு அப்போதே தெரியும்! சுந்தர சோழரின் மக்கள், அதிலும் முக்கியமாக அருள்மொழிவர்மன் பேரில் உமக்குப் பிரியம். அவனுக்குப் பட்டங்கட்ட வேண்டும் என்பது உம்முடைய விருப்பம். அதற்காக, இப்படியெல்லாம் என் தாயாரிடம் பொய்யும் புனை சுருட்டும் கூறி அவருடைய உத்தமமான மனத்தைக் கெடுத்திருக்கிறீர்! அன்பில் பிரம்மராயரே! உமக்கு என்ன தீங்கு நான் செய்தேன்? எதற்காக எனக்கு இந்தத் துரோகம் செய்யப் பார்க்கிறீர்? உம்முடைய நோக்கத்துக்காக நான் என் தாயாருக்கு பிள்ளையில்லாமல் போக வேண்டுமா? இந்த மாதிரி ஒரு பயங்கரமான பாதகச் சூழ்ச்சி இந்த உலகில் இதுவரை யாரும் செய்திருக்க மாட்டார்களே?” என்று கத்தினான்.

“குழந்தாய்! மதுராந்தகா! அநிருத்தர் சொல்வது சரிதான். அவருக்கு இருபது வருஷத்துக்கு முன்னாலிருந்து என் இரகசியம் தெரியும். அன்றைக்கு அவர், ‘மகாராணி! இது தங்களுடைய இரகசியம். தாங்கள் யாரிடமாவது சொன்னாலன்றி வேறு எவருக்கும் தெரிய முடியாது. என் வாய் மூலமாக ஒரு நாளும் வெளிப்படாது இது சத்தியம்!’ என்று சொன்னார். அதை இன்று வரையில் நிறைவேற்றி வருகிறார். சோழ குலத்துக்கு உண்மையாக நடப்பதாக இவர் சத்தியம் செய்து கொடுத்தவர். ஆயினும் சுந்தர சோழ சக்கரவர்த்தியிடம் கூடச் சொன்னதில்லை. நீ சோழ சிம்மாசனத்தில் ஏற நான் சம்மதித்தால் இவரும் பேசாமலிருந்திருப்பார்…”

“தாயே! அப்படியானால் நான் சிங்காதனம் ஏறத் தடையாயிருப்பது தாங்கள் ஒருவர்தானா? நான் தங்கள் வயிற்றில் பிறந்த மகனில்லையென்றே வைத்துக் கொள்கிறேன். இருபது வருஷத்துக்கு மேலாகத் தங்கள் வயிற்றில் பிறந்த மகனுக்கு மேல் அருமையாக வளர்த்தீர்கள். இப்போது எதற்காக எனக்கு இந்தத் துரோகம் செய்கிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன தீங்கு செய்தேன்?”

“குழந்தாய்! நீ எனக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. நான்தான் உனக்கு பெருந்தீங்கு செய்துவிட்டேன். இத்தனை நாளும் உன்னை என் வயற்றில் பெற்ற மகனைப் போலவே வளர்த்து வந்துவிட்டு இப்போது ‘நீ என் மகன் இல்லை!’ என்று சொல்கிறேன். இதனால் உன் மனம் எத்தனை புண்ணாகும் என்பது எனக்குத் தெரியாதா? என் ஆயுள் உள்ள வரையில் இதை நான் வெளியிட்டுச் சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் என் கணவருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். நான் புகுந்த சோழ குலத்துக்கு துரோகம் செய்யக் கூடாது. சோழ குலத்தில் பிறக்காதவனைச் சோழ குல சிங்காதனத்தில் நான் ஏற்றி வைக்கக் கூடாது. ஏற்றுவதற்கு நான் உடந்தையாகவும் இருக்கக் கூடாது. என் மனம் இதைப் பற்றி வேதனை அடையவில்லையென்றா நினைக்கிறாய்? ‘நீ என் மகன் அல்ல’ என்று சற்று முன்னால் சொன்னபோது என் நெஞ்சே உடைந்து போய்விட்டது. குமாரா! நீ என் சொந்த மகன் அல்ல என்று சொல்வதில் எனக்குச் சந்தோஷம் இருக்க முடியுமா?”

அச்சமயம் மதுராந்தகன் திடீரென்று எழுந்து செம்பியன் மாதேவியின் காலில் விழுந்து, “அன்னையே! எனக்கு இராஜ்யம் வேண்டாம், சிங்காதனமும் வேண்டாம். இங்கே இருக்கச் சொன்னால் இருக்கிறேன். தேசாந்திரம் போகச் சொன்னால் போய்விடுகிறேன். ஆனால் நான் தங்கள் மகன் அல்ல; தங்கள் திருவயிற்றில் பிறந்தவன் அல்ல என்று மட்டும் சொல்ல வேண்டாம்! யாரிடமும் சொல்ல வேண்டாம்! சொன்னீர்களானால் அந்த அவமானத்தினாலேயே என் நெஞ்சு வெடித்து இறந்து விடுவேன்!” என்று கதறினான்.

செம்பியன் மாதேவி கண்களில் நீர் ததும்ப மிகுந்த ஆவலுடன் மதுராந்தகனை வாரி எடுத்துத் தம் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

“குழந்தாய்! என் மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் இதைச் சொல்கிறேன். ஒன்று நீயாக இராஜ்யத்தை துறந்து விடுவதாய் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது நீ என் வயிற்றில் பிறந்த மகன் அல்ல என்பதை நாடு நகரமெல்லாம் அறிய நான் ஒப்புக்கொள்ள வேண்டும். எப்படியும் நீ சிங்காதனம் ஏற முடியாது” என்றாள் பெரிய பிராட்டியென்று உலகமெல்லாம் போற்றி வணங்கிய உத்தமி.

– தொடரும்…

நன்றி: http://poniyinselvan.blogspot.com/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *