கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 3, 2024
பார்வையிட்டோர்: 2,360 
 
 

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

பிறந்து வளர்ந்த சொந்த மண்ணிலேயே அகதியாக்கப் படுவோம் என்று அப்பா ஒருபோதும் நினைத்ததில்லை. ‘முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிந்நாடே’ என்ற பாரதியின் பாடல்களுக்காகவே பாரதிமீது காதல் கொண்ட அப்பாவிற்கு இப்படி ஒரு நிலை வந்த போது துடித்துப் போய்விட்டார்.

தங்கையின் வற்புறுத்தலால் சொந்த வீட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிந்தாலும் தாய்மண்ணை விட்டுப் பிரிய அவரது மனம் இடம் தரவில்லை. சொந்த வீட்டிற்கு மீண்டும் திரும்பிச் செல்வேன் என்ற நம்பிக்கையோடுதான் அவர் தற்காலிகமாக இடம் பெயர்ந்திருந்தார். மண்மீது கொண்ட பாசத்தால் சொந்த மண்ணை, தாய்மண்ணை விட்டுப் பிரியமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த பலரில் அப்பாவும் ஒருவராக இருந்தார்.

கிளிநொச்சி பாடசாலையில் கிபீர் விமானங்கள் குண்டு வீசியபோது அதைக் கேள்விப்பட்ட அப்பா ரொம்பவும் பாதிக்கப்பட்டிருந்தார். தலைமை ஆசிரியர் என்ற வகையில் குழந்தைகளோடு பழகி அவர்களின் உளவியலை நன்றாக அறிந்து வைத்திருந்தவர் அப்பா. குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான் என்ற நம்பிக்கையில், பள்ளியை ஒரு கோயிலாகத்தான் அவர் நினைத்து வாழ்ந்திருந்தார். எதையுமே பதட்டப்படாமல் நிதானமாக எடுத்துக் கொள்ளும் அப்பாவின் மனதை அந்த நிகழ்வு நிறையவே பாதித்திருந்தது. அப்பாவை மட்டுமல்ல, மனிதாபிமானம் மிக்க ஒவ்வொருவரையும் அது பாதித்திருந்தது. இயலாமையால் ஒவ்வொருவரையும் துடிக்கவைத்தது. அதன் தாக்கமோ என்னவோ, எப்படியோ யாரையோ பிடிச்சு அவசரமாக தங்கையைக் கொண்டு எழுதி எனக்கு ஒரு கடிதம் போட்டிருந்தார்.

‘கிளிநொச்சி வான்பரப்பில் இருந்து குண்டு போட்டாங்களாம். கேள்விப்பட்டியோ தெரியாது. குழந்தை குட்டின்னு நிறைப்பேர் இறந்திட்டாங்களாம். எல்லாமே பள்ளிக்கூடப் பிள்ளைங்க, கேள்விப்பட்டதில் இருந்து மாலதி தவித்துப் போயிருக்கிறாள்.  இங்க நான் ஒரு குமரை வச்சுக் கொண்டு தவிக்கிற தவிப்பு யாருக்குத் தெரியும். எப்படியாவது இவளைக் கரை சேர்த்திட்டா நான் நிம்மதியாய்ப் போயிடுவேன். நிம்மதி இழந்ததால தூக்கம் போச்சு. இப்ப இவளையும் இழந்திடுவேனோ என்று எனக்குப் பயமாயிருக்கு.

குண்டு வீச்சில் பிள்ளைகள் செத்துப் போனதைக் கேள்விப்பட்டதும், எங்க பக்கத்து வீட்டுப் பார்வதிப் பாட்டி தாங்க முடியாமல் தெரு மண் அள்ளித் திட்டீட்டா. மனசெரிஞ்சு யாராவது திட்டினா அது பலிச்சிடும்ணு பெரியவங்க சொல்லுவாங்க. எய்தவன் இருக்க நாம அம்பை நோகலாமா? அவசரப்பட்டிட்டாவோ என்று நினைக்கிறேன். எனக்கு மனசு கேக்கல, எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குதோ தெரியாது. ஆண்டவன்தான் தப்புப் பண்ணுறவங்களை மன்னிக்கவேணும்’ – அப்பா

அப்பாவின் அந்தக் கடிதத்திலேயே மிகுதியாய் இருந்த வெற்றிடத்தில் மாலதி குணுக்கி எழுதியிருந்தாள்.

‘ஆண்டவன்தான் தப்புப் பண்ணுறவங்களைத் தண்டிக்கணும்’ என்று அப்பா எழுதுவார் என்று நினைச்சா அவங்களை மன்னிக்கணும் என்றல்லவா எழுதியிருக்கிறார். இப்படி மன்னிச்சு மன்னிச்சே அப்பாவின் காலம் போயிடுமோ தெரியாது. அகிம்சையும் காந்தியமும் அவரோடு கூடப்பிறந்திருக்கலாம். அல்லது அப்படியே வளர்ந்திருக்கலாம். ஒருவேளை எங்க வீட்டுச் சுவரிலே மாட்டியிருந்த இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் அகிம்சை முறையிலான போராட்டம்  இவருக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அவர்களின் வழியைப் பின்பற்றியே சுதந்திரம் பெற்றுவிடலாம் என்று அப்பா கனவு கண்டு கொண்டிருக்கிறாரோ தெரியாது? அகிம்சா மூர்த்தி மகாத்மா காந்தியின் மரணத்தோடு அகிம்சையும் மரணமாகிவிட்டது என்பது அப்பாவிற்குத் தெரியாதா? இத்தனை நாட்களில் இந்த மண்ணில் ஏற்பட்ட அனுபவங்கள் அவருக்குப் போதாதா? அதன் பின் நடந்த அகிம்சை முறையிலான எந்தப் போராட்டமாவது வெற்றி பெற்றதாகச் சரித்திரம் இருக்கிறதா? ஈவு இரக்கமின்றி எத்தனை குழந்தைகளைக் கிபீர் விமானத்திலிருந்து குண்டு போட்டுக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஏன் இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்தக் குழந்தைகளின் அவலக்குரல் இவர்களுக்குக் கேட்கவில்லையா? அவர்களுடைய குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என்பதால் மௌனம் காக்கிறார்களா? ஒரு இனத்தின் மீது வெறுப்பிருக்கலாம் அதற்காகப் பெண்கள், குழந்தைகள் என்று கூடப்பார்க்காமல் கொலை வெறியோடு பாடசாலை மீது குண்டு வீசியவனை எப்படி எங்களால் மன்னிக்க முடியும்? அண்ணா நீ எப்பவுமே அப்பாவின் பக்கம்தான் என்று எனக்குத் தெரியும். அப்பாவின் போதனைகள் உனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அகிம்சை, சாத்வீகம் என்று சொல்லிக் கொண்டே, உங்களைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டு நீங்கள் காலத்தைக் கடத்தி விடுவீர்கள். என்னால் முடியாதப்பா, எம்மினம் அழிவதைப் பார்த்துக் கொண்டு, சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு  இனிமேலும் மௌனமாக இருக்கமாட்டேன். தீமை பிறர்கள்; செய்ய ஆவி பெரிதென்றெண்ணி அஞ்சிக் கிடக்க மாட்டேன். – அன்புத் தங்கை மாலதி.

அப்பா சொல்லிக் கொடுத்த பாரதி பாடல்களின் தாக்கம் அவளது கடிதத்தில் தெரிந்தது.  மன்னிக்க முடியும் என்று அப்பா மன்னித்தார். அன்புதான் உலக மகாசக்தி என்று அப்பா நம்பினார். எந்தப் பட்டறையில் இதை எல்லாம் அப்பா கற்றுக் கொண்டாரோ தெரியவில்லை. அவருடைய உலகம் முற்றிலும் வேறாக இருந்தது. இந்தக் காலத்திலும் இப்படி ஒருவரா என்று இளைஞர் கூட்டம் அவரை ஏளனத்தோடு பார்த்தது.

மாலதியை இழந்திடுவேனோ என்று அப்பா பயந்தது போலவே ஒரு நாள் அந்த நிகழ்வு நடந்து விட்டது. ஆமாம், உண்மையாகவே மாலதி தொலைந்து போயிருந்தாள். பாடசாலையால் நெடு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லையே என்று அப்பா பதட்டப்பட்டுத் தேடியபோதுதான் அவள் எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம் அப்பாவின் கண்களில் பட்டிருக்கிறது. மாலதி இயக்கத்தில் இணையப்போவதாகச் சொல்லிவிட்டு வீட்டைவிட்டுப் போய்விட்டாள். அப்பா எவ்வளவோ முயற்சி செய்தும் அவள் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை. தாய்மண்ணுக்காக, இனத்திற்காக, மொழிக்காக விடுதலை வேண்டிப் போய்விட்டாள் என்று ஊர் பேசிக்கொண்டது.

வீட்டைவிட்டு மாலதி இயக்கத்திற்குப் போனபோது அந்தப் பிரிவுத்துயரை அப்பாவால் தாங்க முடியாததாக இருந்தது. இவ்வளவு கட்டுப்பாட்டோடு அடக்க ஒடுக்கமாய், ஒழுக்கத்தோடு வளர்ந்து வந்த பெண் எப்படிக் கட்டுப்பாட்டை மீறினாள் என்ற அதிர்ச்சிதான்; அப்பாவிடம் மிஞ்சி இருந்தது.

தங்கையின் பிரிவும் எங்கள் துயரின் ஒரு தொடர் அங்கம் போலாகிவிட்டது. எங்கே தவறு நடந்தது என்பதை அப்பாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் தாயில்லாப் பிள்ளைகள் என்று எந்தக் குறையும் வைக்காமல் வளர்ந்த தனது பிள்ளைகள் தவறே செய்ய மாட்டார்கள் என்ற அதீத நம்பிக்கையும் அவரது ஏமாற்றத்திற்குக் காரணமாயிருக்கலாம். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பியே ஏமாந்தவர் அப்பா.

தன் வளர்ப்பில் எங்கோ தவறு செய்து விட்ட குற்ற உணர்வில் அப்பா தவித்துப் போய்விட்டார். அவளாகவே விரும்பித்தான் சென்றாள் என்பதால் அவள் இனித் திரும்பி வரமாட்டாள் என்பது அப்பாவிற்குப் புரிந்து போய்விட்டது. அவள் வீட்டைவிட்டுப் போனது சரியா பிழையா என்பதை நான் ஆராயவில்லை. பட்டிமன்றம் போட்டு விவாதிக்கவும் தயாராக இல்லை. எனது கவலை எல்லாம் அப்பா தனித்துப் போய்விட்டாரே என்பதில்தான் இருந்தது. நான் புலம் பெயர்ந்த மண்ணிலும், மாலதி இயக்க முகாமிலுமாய் அப்பாவை விட்டுப் பிரிந்திருந்தோம். கடைசிக் காலத்தில் தசரதமன்னன் போல அப்பாவும் புத்திர சோகத்தால் வாடவேண்டும் என்ற நியதியோ புரியவில்லை.

‘என்ன பாட்டி, இங்கேயிருந்து ஒரு பிடி மண் எடுத்து தூற்றினால் அங்கே மேலே பறக்கிற விமானத்தை அடிச்சிடுமா’ என்று பார்வதிப்பாட்டி இயலாமையால் அன்று மண் எடுத்துத் திட்டியபோது தங்கை மாலதி பாட்டியைக் கேலி செய்ததாக அன்று கடிதத்தில் எழுதியிருந்தது இன்று என் நினைவிற்கு வந்தது. அன்று பாடசாலைப் பிள்ளைகள் அநியாயமாகக் கொல்லப்பட்டது பலரின் மனதையும் பாதித்திருந்தது. அந்த சோகநிகழ்வு நினைவை விட்டு அழியாமல் ஒவ்வொருவர் மனதிலும் எங்கேயோ உறுத்திக் கொண்டே இருந்தது.

‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ என்பதைப் பிறிதொருநாளில் அதே கிபீர் விமானம் விபத்துக்குள்ளாகி அந்த விமான ஓட்டியின் உடல் சிதறிச் செத்தபோது ‘தெய்வம் நின்று கொல்லும்’ என்பது எவ்வளவு உண்மை, அநியாயம் செய்தவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்பது நிரூபணமாயிடிச்சு என்று பலரும் பேசிக் கொண்டார்கள். இயலாமையின் தவிப்பிற்குத் தீனி கிடைத்தது போல, அன்று குழந்தைகள் மேல் குண்டுவீசிக் கொன்ற அந்த ஒரு தனி மனிதனின் மரணத்தில், பாதிக்கப்பட்ட ஆயிரமாயிரம் பேர் மகிழ்ச்சியடைந்ததாகக் காட்டிக்கொண்டதில் அவர்களுக்குள் ஒருவித ஆத்மதிருப்தி. இதைப்போலத்தான், அரசு தண்டிக்காவிட்டாலும் ஒவ்வொருவரையும் தெய்வம் தண்டிக்கும் என்று அவலப்பட்டவர்கள் சமாதானம் அடைந்தார்கள். ஆனாலும் அந்தச் செய்தியைக் கேட்க அன்று அந்த விமான ஓட்டியைத் திட்டித் தீர்த்த பார்வதிப் பாட்டியோ, மனிதாபிமானத்தோடு மன்னித்து மறந்துவிட்ட அப்பாவோ இன்று உயிரோடு இல்லை. போர் ஓய்ந்தாலும், இராணுவத்திடம் சரணடைந்த மாலதி உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்பதைக்கூட அரசு மறைத்து விட்டது. நேற்றிருந்தார் இன்றில்லை என்பது இயற்கையின் நியதிதானே!

(முற்றும்)

– தமிழகத்திலிருந்து வெளிவரும் மூத்த இதழான கலைமகள் ராமரத்தினம் குறுநாவல் போட்டி – 2011ல் பரிசு பெற்ற கதை. நன்றி: கலைமகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *