மன்னித்துவிடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 24, 2022
பார்வையிட்டோர்: 1,471 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காஞ்சனா. கொழும்பின் விளிம்பில் இருக்கும் நீர்க்கொழும்பு சொந்த ஊர். விதவை. கணவன் விட்டுச் சென்ற ஒரு படகு, கூலிவேலை. இவைகள் மட்டுமே வாழ்க்கையின் ஆதாரம். பல் வைத்தியம் படிக்கும் மகன் அன்புச் செல்வம்- வயோதிக அப்பா. சிரிப்பதையே மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட வாழ்க்கை.

அன்றுதான் காஞ்சனாவின் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடிந்தது. சில்லென்று பூத்த சிறு நெருஞ்சியாய்ச் சிரித்தார். சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்குச் செய்த பல முயற்சிகளுக்கான விடை அன்றுதான் கிடைத்தது. சிங்கப்பூரில் விமலாம்மாள் என்கிற முதலாளியம்மாவுக்கு காஞ்சனாவை எடுக்க சம்மதமாம். விசா டிக்கெட்டும் உடன் அனுப்பிவிட்டார்கள். நாளை இரவு ஒன்பதரைக்கு விமானம். மாலை நான்கரை மணிக்கு 15 கிலோ உடமைகளுடன் விமானம். கொழும்பு முகவர் அலுவலகத்துக்கு அப்பாவின் கண்ணில் தேங்கி நின்ற நீரில் தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டார் காஞ்சனா. மகன் அன்புச்செல்வனை நெற்றியிலும் கன்னத்திலும் மாறிமாறி முத்தமிட்டு பயணத்துக்குத் தயாரானார்.

சிங்கப்பூர். விமான நிலையத்துக்கு விமலாம்மாவே வந்திருந்தார். உடன் அழைத்துக் கொண்டு வீட்டில் சேர்த்துவிட்டு அலுவலகம் சென்றுவிட்டார். இரண்டு மாடி பங்களா வீடு. விமலாம்மாள், கணவர் ராம்கோபால், உயர்நிலை 3ல் மூத்த மகன், உயர்நிலை 1ல் இரண்டாமவன், தொடக்கநிலை 3ல் மூன்றாவது பெண், இரண்டு வயதில் இப்போதைக்கு கடைசி பெண் குழந்தை. இதுதான் விமலாம்மாளின் குடும்பம். விமலா, ராம்கோபால் இருவருமே வேலைக்குக் கிளம்புவது காலை 8 மணி. வந்து சேர்வதும் 8 இரவு. திட்டமிட்டபடி எல்லாம் நடக்கவேண்டும் விமலாவுக்கு. நடக்கிறது. காஞ்சனாவுக்கு என்ன வேலை?

மூன்று பிள்ளைகளுக்கும் அன்றாடம் பள்ளிச் சீருடைகளைத் துவைத்து பெட்டிபோட வேண்டும். இரண்டு நாளைக்கு ஒரு தடவை காலணிகள் கழுவ வேண்டும். மூன்று பேருக்கும் நீச்சல் பயிற்சி. தேவையான எல்லாவற்றையும் சேர்த்து சரிபார்த்து அனுப்பவேண்டும். அவ்வப்போது சிறப்பு துணைப் பாட வகுப்புகளுக்குச் செல்ல வாடகைக் கார் வரும். தாமதமின்றி அவர்களை அனுப்பி வைக்க வேண்டும். தினமும் இரண்டு தடவை துணி துவைக்க வேண்டும். உலர்த்தியபின் எல்லாத் துணிகளையும் பெட்டிபோட்டு அவரவர்களின் அலமாரியில் கொண்டு சேர்க்க வேண்டும். மூன்று கழிவறைகள். தினமும் தேய்த்து மருந்து தெளிக்க வேண்டும். விசாலமான தோட்டம். தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். வாரம் ஒரு முறை இரண்டு கார்களையும் கழுவ வேண்டும். அலமாரிகளில் இருக்கும் அலங்காரப் பொருட்களை இறக்கி சுத்தம் செய்து மீண்டும் அடுக்க வேண்டும். வீட்டை வெற்றிடக் கருவியால் ஊதி சுத்தம் செய்து கழுவி விடவேண்டும். விமலாம்மாள் புறப்படும்போது அன்றைக்குத் தேவையான சாமான்கள் விபரம் எழுதிக் கொடுக்கப்பட வேண்டும். இத்தனையும் புற வேலைகள்தான். சமைப்பது அகவேலை. வேலைகளை எழுதவே மூச்சு வாங்குகிறது. அத்தனையும் செய்ய என்ன பாடுபடுவார் காஞ்சனா? பட்டார். மாத இறுதியில் வாங்கும் அந்தச் சம்பளம் மொத்த வியர்வையையும் துடைத்துவிடும். ஊரின் வீட்டு வாடகையும் மகனின் கல்லூரிக் கட்டணமும் கழுத்தை நெறிக்கவில்லை. அது போதாதா காஞ்சனாவுக்கு?

அன்று ஞாயிற்றுக்கிழமை. எல்லாரும் வீட்டில். வியர்வையைத் துடைக்கக்கூட சில வினாடிகள் கிடைக்கவில்லை காஞ்சனாவுக்கு. விமலா கேட்டார்.

‘ஊரிலிருந்து வந்த அடைமாவை எங்கே வைத்தாய்?’ ‘இங்கேதானம்மா இருக்கிறது.’

‘என் தோழி சுசி வாங்கி தந்த ஒட்டுகுணம் இல்லா அந்தத் தோசைக்கல்லைப் பிரி. அடை சுட்டுவை. எல்லாரும் சாப்பிட்டுவிட்டு பத்து மணிக்கு நாங்கள் வெளியே கிளம்ப வேண்டும்.’

‘சரிங்கம்மா.’

அந்தத் தோசைக் கல்லைப் பிரித்தார் காஞ்சனா. அடைமாவைக் குலைத்தார். உப்பு சரிபார்த்தார். வில்லையாக மாவை ஊற்றி தன் போக்குக்கு விரியவிட்டார். விமலா கணவருடன் ஈரச்சந்தைக்குச் சென்றுவிட்டார்.

‘அய்யோ அக்கா…’ சங்கூதினான் மூன்றாமவன் ராஜீ

‘என்ன தம்பி..’

அப்படியே போட்டுவிட்டு மாடிக்கு ஓடினார் காஞ்சனா. பாவம். அந்தப் பிள்ளை கழிவறையில் விழுந்துவிட்டான். தாவாயில் இலேசான ரத்தக் காயம். ஆனாலும் அந்தப் பிள்ளைகளுக்கு சின்ன உபாதையானாலும் ஊரையே கூட்டும் சுபாவம். பயந்துபோய்விட்டார் காஞ்சனா. காலைதான் மருந்து தெளித்திருந்தார். பிள்ளைகள் புழங்கும்போது மருந்து தெளிக்கக்கூடாதென்பது விமலாம்மாவின் உத்தரவு.

அட! அடையை மறந்து விட்டோமே. கருமையான ஒரு புகை அடுக்களையிலிருந்து கிளம்பியது. அடை கருகிக் கொண்டிருந்தது. ஒட்டிகொள்ளா ரசாயனப் பொருள் முழுதும் உரிந்துவிட்டது. மண்சட்டியைவிடவும் கேவலமாகப் போய்விட்டது அந்தப் புதிய தோசைக்கல்.

கார் சத்தம் கேட்கிறது. விமலாம்மாள் வந்துவிட்டார்.

‘என்ன இது, கருகல் நாத்தம்’

என்று கேட்டுக்கொண்டே அடுக்களைக்கு வந்தவர் தோசைக்கல்லைப் பார்த்துப் பதறிப் போய்விட்டார்.

‘என்ன காரியம் செய்தாய்? என் இருபதாண்டுத் தோழி எனக்கு வாங்கித் தந்த தோசைக்கல் இது. பிரிக்கவே மனசில்லாமல் வைத்திருந்தேன். என் வேதனையை நீ அறியமாட்டாய். உன்னிடம் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை. இந்த மாதம் உன் சம்பளத்தில் 100 வெள்ளி வெட்ட போகிறேன். அடுத்த இரண்டு மாதத்தில் சேர்த்து வாங்கிக் கொள். இரண்டு மாதம் முழுவதும் நீ செய்த இந்தக் காரியத்தை நீ மறக்கவே கூடாது. அப்போதுதான் மீண்டும் ஒரு முறை இப்படி நீ செய்யமாட்டாய்.’

விமலாம்மாவுக்கு பிறக்கும்போதே பிறந்த குணம். நல்லதைப் பாராட்டவும் தெரியாது. கெட்டதை மன்னிக்கவும் தெரியாது.

‘சரி விடு விமலா. எல்லாருக்கும் தவறுகள் இயற்கைதான். அவர் என்ன வேண்டுமென்றேயா செய்தார்? மன்னித்துவிடு.’ என்றார் ராம்கோபால்.

‘நீங்கள் இதில் மூக்கை நீட்டாதீர்கள். என் தோழியாக நான் நேசித்தேன் இந்தத் தோசைக்கல்லை. என் தோழியைவிட இந்தக் காஞ்சனா உங்களுக்கு உயர்வாகத் தெரிகிறாளா?’

ராம்கோபால் வாய் திறக்க மீண்டும் ஓராண்டாவது ஆகலாம். ஒதுங்கிக் கொண்டார்.

‘மன்னியுங்களம்மா. ராஜீ கழிவறையில் விழுந்துவிட்டது. அவரைச் சமாதானப்படுத்துவதற்குள் இது சாம்பலாகி விட்டதம்மா. நூறு வெள்ளி எனக்கு ஆறாயிரம் ரூபாய். என் மகனின் கல்லூரிக் கட்டணம். எனக்குப் புரட்ட முடியாது. மன்னியுங்களம்மா.’

காஞ்சனாவுக்கு வார்த்தைகளைவிட இருதயம் வேகமாகத் துடித்தது.

‘முடியாது. நீ பட்டே ஆகவேண்டும்.’

‘அடைமாவிலோ, தோசைக்கல்லிலோ ஏதோ கோளாறம்மா. என் மீது தவறில்லை. மறந்தே போனாலும் இந்த அளவுக்கு தீயாது.’

‘என் தோழி வாங்கித் தந்த தோசைக்கல் மட்டமா? நான் வாங்கி வந்த அடைமாவு கலப்படமா?’ மேலும் வெறியானார் விமலாம்மாள்.

அன்று மாலை எல்லாரும் ஆர்க்கிட் கன்ட்ரி கிளப் செல்லவேண்டும். நேற்று இரவே முஸ்தபாவிலிருந்து ஒரு பை நிறைய உடுப்புகள் வாங்கியாகிவிட்டது. எல்லாருக்கும் கோட்டு பேண்டு சட்டை. விமலா தம்பிக்கு திருமண வரவேற்பு. அந்த வேலையாக அத்துனை பேரும் ஆடிக்கொண்டிருந்தனர். காஞ்சனா மட்டும் அந்த 6000 ரூபாயை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் நொறுங்கிக் கொண்டிருந்தார். புதிய உடுப்புகளுக்கெல்லாம் மீண்டும் பெட்டிபோட்டு அவரவர்களுக்குத் தந்து கொண்டிருந்தார். ஒரு காஞ்சிப் பட்டோடு விமலா வந்தார்.

‘இந்த ஜரிகை உப்பிக் கொண்டிருக்கிறது. இதை நன்றாக அழுத்தித் தேய்த்துக் கொடு’

‘சரிங்கம்மா.’ வாங்கிக் கொண்டார் காஞ்சனா.

தேய்க்கத் தேய்க்க அந்த ஜரிகை கொஞ்சம்கூட அமுங்கவில்லை. சேலையை முடிந்தவரை தேய்த்துவிட்டு விமலாவிடம் சேலையை நீட்டினார் காஞ்சனா.

‘என்ன இது கொடுத்தது மாதிரியே தருகிறாய். தேய்த்தாயா இல்லையா…?’

‘தேய்த்தேனம்மா. அந்த ஜரிகை அமுங்கமாட்டேனென்கிறது. என்ன செய்ய?’

‘சரி. உன் வேலையைப் பார். நானே தேய்த்துக் கொள்கிறேன்.’

ஸ்டார்ச் ஸ்ப்ரே அடித்து விமலா தேய்த்துக் கொண்டிருந்த போது அவரின் கைத்தொலைபேசி கூப்பிட்டது.

அட! மேலதிகாரி அழைக்கிறார்.

‘ஹலோ.. என்ன சார் ஞாயிற்றுக்கிழமை அழைக்கிறீர்கள்.’

‘ஆம். என்ன வேலை செய்தீர்கள் விமலா! ரஃபி என்டர்பிரைஸ் தந்த 50,000 வெள்ளி காசோலை வங்கி இருப்பில் இருக்கிறது. கணக்குக்கு வரவில்லை. கணக்கில் எழுத மறந்துவிட்டீர்கள். நாளை கணக்கு தணிக்கை செய்யும் நாள். மூளை சில்லு சில்லாக உடைகிறது. இப்போதுதான் கண்டுபிடித்தேன். அதைச் சரிசெய்து நாளைக் காலை வரும்போது எடுத்துவாருங்கள். எதற்கும் கொஞ்சம் முங்கூட்டியே வாருங்கள்.’

மேலதிகாரி பேசிக்கொண்டிருக்கிறார். பெட்டிக்குக் கீழே அந்தக் காஞ்சிப்பட்டு பொசுங்கிக் கொண்டிருந்தது. தொலைபேசியை வீசிவிட்டு பெட்டியைத் தூக்கினார். சேலை ஒட்டிக்கொண்டு வந்தது. ஒரு தோசை அளவுக்கு ஓட்டை. பொசுங்க நாற்றம் வீட்டையே சுற்றியது. ராம்கோபால் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டார். அப்படியே ஒரு பிளாஸ்டிக் பையில் திணித்து தோம்பில் போட்டுவிட்டு எதுவுமே நடக்காததுபோல் வேறு சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டார் விமலாம்மாள். ஆனாலும் அந்தச் சேலை கண்முன்னே வந்து படமெடுத்தது. கடவுள் நேரடியாகவே தன்னை தண்டிப்பதாக உணர்ந்தார் விமலா. ‘காஞ்சனாவுக்கு நாம் அநீதி செய்தோமா? அதற்காகத்தான் இதா? பாவம் அந்தப் பெண்ணை அப்படி ஏசியிருக்கக் கூடாது. கடவுளுக்கே பொறுக்கவில்லை. 100 வெள்ளி தண்டனை நான் கொடுத்தேன். 1000 வெள்ளி தண்டனை கடவுள் எனக்குத் தந்துவிட்டார்.’

தானாகப் பேசிக்கொண்டார் விமலா.

‘காஞ்சனா…’

அன்பு கலந்து அழைத்தார் விமலாம்மாள்.

‘காஞ்சனா.. உன்னை நான் அப்படித் திட்டியிருக்கக் கூடாது. என்னை மன்னித்துவிடு.’

அந்த வார்த்தையைக் கேட்டதும் ராம்கோபால் கிட்டத்தட்ட மூர்ச்சையானார். இந்த வார்த்தையை விமலா இந்த நாள்வரை உச்சரித்ததேயில்லை.

‘என்னம்மா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்கிறீர்கள். பரவாயில்லையம்மா. நான் ஊருக்குப் பேசிவிட்டேன். அடுத்த மாதம்தான் சேர்த்துக் கொடுத்துவிடுவீர்களே, நான் சமாளித்துக் கொள்கிறேன்.’

‘தேவையில்லை காஞ்சனா. நாளைதான் உனக்குச் சம்பள நாள். இன்று மாலையே உன் சம்பளத்தை முழுசாகப் போட்டுவிடுகிறேன். அதோடு 250 வெள்ளி கூடுதலாகப் போடுகிறேன். அது என்னுடைய சன்மானம். நடந்ததை மறந்துவிடு. நீயும் வா. எல்லாரும் என் தம்பியின் திருமண வரவேற்பில் கலந்து கொள்வோம்.’

இரண்டு கார்களில் எல்லாரும் புறப்பட்டார்கள். காஞ்சனா சில்லென்று பூத்த சிறு நெருஞ்சியாய்ச் சிரித்தார். சிரித்துக்கொண்டேயிருந்தார். காஞ்சனாவைப் பார்த்து கடவுளும் சிரித்தார். அது காஞ்சனாவுக்கு மட்டுமே தெரிந்தது.

மரணத்தை வெல்லும் சொல் ‘மன்னித்துவிடு’

– கட்டை விரல் ஆகட்டும் கல்வி, முதற் பதிப்பு: 2012, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *