கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 3,136 
 
 

‘சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் இந்தளவா கீழ்த்தரமாக இறங்கிவிட்டான்?’ கேள்வியை கண்களில் தேக்கியபடி புலவர் தண்டியை பல்லவ இளவரசனான ராஜசிம்மன் நோக்கியது ஒரே ஒரு கணம்தான்.

அதற்குள் ‘ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய…’ என சபையில் இருந்த அனைவரின் உதடுகளும் ஏக காலத்தில் உச்சரிக்கத் தொடங்கின. இளவரசனை அணைத்தபடி புலவர் தண்டியும் சிவநாமாவளியை உச்சரிக்கத் தொடங்கினார். ராஜசிம்மனின் உள்ளத்தில் பக்தியோ, சிவ ஸ்வரூபமோ இப்போது இல்லை. கோபம் எரிமலையாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது. புலவர் தன் கைகளில் பிரசாதமாக அளித்த நாகலிங்க புஷ்பத்தை மெல்லத் திறந்தான்.

உள்ளே பொன், வெள்ளி, செம்பினால் செய்யப்பட்ட பல்லவ நாணயம் மின்னியது. முன்புறம் ரிஷப உருவம். பின்புறம் சுவஸ்திக் சின்னம். ‘விக்கிரமாதித்தா…’ சிரமப்பட்டு சினத்தை அடக்கினான். சாளுக்கியர்களால் அச்சடிக்கப்பட்ட பல்லவ நாணயங்கள் நம் தேசத்தில் புழங்கப் போகிறதா? ஈஸ்வரா… இதனால் பல்லவ நாட்டின் நிதிநிலை மோசமாகிவிடுமே… நாளை நாம் வரைந்த ஓவியங்களைக் காண புலவர் வரவேண்டும் என்று அழைப்பதற்காக அல்லவா வந்தேன்… இதென்ன இப்படியொரு ஈட்டியை மார்பில் பாய்ச்சுகிறார்…

‘‘பிரதோஷ பூஜையைக் கூடக் காணாமல் பலமான யோசனையில் பல்லவ இளவல் இருப்பது போல் தெரிகிறதே… மன்னர் தீபாராதனை காண்பிக்கப் போகிறார்… சிவ நாமாவளியை ஜபியுங்கள்…’’ தன்னை அணைத்தபடி புலவர் கூறியதைக் கேட்ட ராஜசிம்மன் தனக்குள் புன்னகைத்தான். இவர் காட்டிய நாணயத்தால் அல்லவா என் கவனம் சிதறுகிறது..?

மணியோசையைத் தொடர்ந்து பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மர் ஸ்படிக லிங்கத்துக்கு தீபாராதனை காண்பிக்கத் தொடங்கினார். உயரத்துக்கு ஏற்ற பருமன். ப்ராணாயாமத்தால் விரிந்த மார்பு. முகத்தில் தேஜஸ். கண்களில் ஒளி. அருள். கால் பெருவிரலால் கயிலாயத்தையும் தசானனையும் பாதாளம் வரை அழுத்திய சிவனை நெஞ்சில் சுமக்கும் பரம பக்தன் இந்நாட்டுக்கு மன்னராகக் கிடைத்தது பல்லவ குடிகளின் புண்ணியம் என ராஜசிம்மன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.

‘‘வாருங்கள் இளவரசே… நாம் கிளம்புவோம்…’’ தன் செவியில் முணுமுணுத்த புலவரைத் தொடர்ந்தான். ‘‘இந்த நாணயம் எங்கு கிடைத்தது? உண்மையிலேயே சாளுக்கியர்களுக்கு புத்தி பேதலித்து விட்டதா? எத்தனை நாட்களாக இது நடந்து வருகிறது?’’ புலவரின் இல்லத்தில் காலடி வைத்ததுமே ராஜசிம்மன் படபடத்தான்.

‘‘சற்று பொறுங்கள்…’’ தனது அந்தரங்க அறைக்குள் இளவரசனுடன் நுழைந்ததும் கதவைத் தாழிட்டார். சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவர் நிதானமாக அழைத்தார்… ‘‘பார்த்திபா, வெளியே வா…’’ உடனே அறையிலிருந்த நிலைக் கண்ணாடி சுழலத் தொடங்கியது. அது சுழன்ற வேகத்துக்கும் கண்ணாடி சுருங்கி விரிந்ததற்கும் ஒன்று, பெரும் சப்தம் எழுந்திருக்க வேண்டும். அல்லது கண்ணாடி சுக்கு நூறாக உடைந்திருக்க வேண்டும். ஆனால், இரண்டுமே நடக்கவில்லை. ராஜசிம்மனின் புருவம் உயர்ந்தது.

‘‘இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை இளவரசே. நாடு இருக்கும் இன்றைய நிலையில் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது. கோட்டைக்கு வெளியிலிருந்து எனது இல்லத்துக்கு வரும் சுரங்கப் பாதையைத்தான் இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள். உண்மையில் இது கண்ணாடியல்ல. ஒருவகை சீனத்துணி…’’ தலையசைத்தபடியே சுரங்கத்தின் வாயிலை நோக்கினான்.

புலவரின் நம்பிக்கைக்குரிய ஒற்றனான பார்த்திபன் வெளிப்பட்டான். ‘‘என்னிடம் அதிகாலையில் கூறியதை அப்படியே ஒன்றுவிடாமல் இளவரசரிடம் சொல்…’’ புலவர் கட்டளையிட்டார். புழுதி படிந்த உடையுடனும் கலைந்த தலையுடனும் காணப்பட்ட பார்த்திபன், இளவரசருக்கு தலைவணங்கிவிட்டு தன் மனதில் இருந்ததைக் கொட்டினான். ‘‘கள்ள நாணயங்கள் நம் நாட்டில் புழங்குகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டதுமே புலவர் என்னை அழைத்து எச்சரித்தார்.

ஆராயும்படி கட்டளையிட்டார். உடனே ஒற்றர் படையை முடுக்கிவிட்டு சல்லடையிட்டு சலித்தோம். கோரையாற்றுக்கு அருகில் உள்ள காட்டில் கள்ள நாணயங்கள் அச்சடிக்கப்பட்டு வருவதை கண்டுபிடித்தோம்…’’ ‘‘உடனே என்னிடம் தெரியப்படுத்தியிருந்தால் படையுடன் சென்று அந்த சாளுக்கியர்களை கையும் களவுமாகப் பிடித்திருக்கலாமே… அவர்களுடன் போர் புரிய இந்த ஒரு காரணம் போதுமே…’’ ராஜசிம்மன் இடைமறித்தான்.

‘‘நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று தெரிந்துதான் உங்களிடம் சொல்லவில்லை. நம் மன்னர் அநாவசியமாக அண்டை நாட்டுடன் யுத்தம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். இந்த உண்மை நான் சொல்லித்தானா இளவரசருக்குத் தெரிய வேண்டும்?’’ புலவரின் வதனத்தில் புன்முறுவல் பூத்தது. ராஜசிம்மனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. புலவரின் கண்ணசைவை ஏற்று, விட்ட இடத்திலிருந்து பார்த்திபன் தொடர்ந்தான்.

‘‘புலவர் ஆணையை ஏற்றோம். அவர்கள் நாணயங்களை அச்சடிப்பதை பல்லவர் ஒற்றர் படை அறிந்து கொண்டதாக பகிரங்கமாக வெளிப்படுத்தினோம். சுதாரித்து அவர்களும் தப்பிவிட்டார்கள். புலவரின் கட்டளை… அவர்கள் வெளியேறுவதை கைகளைக் கட்டியபடி நாங்கள் வேடிக்கை பார்த்தோம்…’’ ‘‘இளவரசே! பார்த்திபா… நீங்கள் இருவரும் என்னைக் கோபித்து பயனில்லை.

சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் வீரன். இதுபோன்ற ஈனச் செயல்களில் அவன் ஈடுபட மாட்டான். ஈடுபடவும் இல்லை…’’‘‘அப்படியானால்..?’’ இருவரின் குரல்களும் ஏக காலத்தில் ஒலித்தன. ‘‘சாளுக்கிய இளவரசன் விநயாதித்தனின் ஆர்வக் கோளாறு இது. இளம் கன்று பயமறியாது அல்லவா? தவிர இந்த விஷயம் பற்றித் தெரிந்ததும் சாளுக்கிய மன்னனே தன் மைந்தனைக் கடிந்துகொண்டதாகக் கேள்வி.

பார்த்திபன் ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப் போயிருந்தால் கூட அவர்களாகவே கள்ள நாணயம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு வாதாபி சென்றிருப்பார்கள்…’’ ‘‘ச் சூ… கைகள் அங்கேயே நிற்கட்டும். இதுதான் இளவரசர் ஓவியம் வரையும் அழகா..?’’ கன்னங்கள் சிவக்க கார்குழலி கேட்டாள். ‘‘ஏன் கார்குழலி… நான் வரையும் ஓவியம் அழகாக இல்லையா…?’’ ராஜசிம்மன் அவள் கழுத்தில் முகம் புதைத்தபடி முணுமுணுத்தான். அவன் கைகள் அவள் மார்பைச் சுற்றிப் படர்ந்தபடி எதையோ தேடத் தொடங்கியது. வரைந்தது.

கார்குழலியின் நிலை தர்மசங்கடத்தையும் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. வெட்கம் பிடுங்கித் தின்றது. பதில் சொல்லாமல் ஆகாயத்தைப் பார்த்தாள். நட்சத்திரங்கள் சிரித்தன. அவளது ஆடைகள் நெகிழ்ந்த கோலத்தைக் கண்டு அவை வெட்கி மேகத்திற்குள் மறைந்தன. ‘‘ம்…’’ ‘‘என்ன கார்குழலி, பூச்சியோ கற்களோ உடலை பதம் பார்த்துவிட்டதா?’’ கேட்ட ராஜசிம்மன், அவளை தன் மடியில் குப்புறக் கிடத்தி பரிசோதிக்கத் தொடங்கினான்.

கச்சையின் முடிச்சை நெகிழ்த்தி முதுகை ஆராய்ந்தவன், அப்படியே கீழிருந்த எழுச்சியிலும்… கார்குழலி துள்ளி எழுந்தாள். ‘‘இளவரசே! நாளைதானே உங்கள் குருநாதரான புலவர் தண்டியிடம் உங்களது ஓவியங்களை காண்பிப்பதாக ஏற்பாடு? வாருங்கள் அதற்கான வேலைகளில் இறங்குவோம்…’’ ‘‘இப்போது மட்டுமென்ன, ஓவியத்தைத்தானே நான் வரைந்து கொண்டிருக்கிறேன்… உன் புருவத்தை, கண்களை, கன்னங்களின் செழுமையை, ஈட்டியாய் மோதும் ஸ்தனங்களை, இடையின் குறுகலை, அதைத் தொடர்ந்த பின்னெழிலின் எழுச்சியை…’’ பேசிக் கொண்டே மண்டியிட்ட இராஜசிம்மன், அவள் வயிற்றில் முகம் புதைத்தான்.

‘‘தமிழனாகப் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன் கார்குழலி. காதலியை, மனைவியை, தெய்வமாக, தோழியாக, அம்மனின் சொரூபமாக வணங்கி ஆராதிக்கும் பூமி இது. என்னை… என் ஓவியத்தை, என் வீரத்தைப் போற்றியபடி மேலும் மேலும் நான் உயர வேண்டும் என்று நினைக்கிறாய் பார்… உண்மையிலேயே நான் கொடுத்து வைத்தவன்…’’ சந்தியாவந்தனம் முடித்த கையோடு புலவர் அரண்மனைக்குள் நுழைந்தார். மன்னர் ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் முடித்துவிட்டு தீபாராதனை காண்பித்தபடி இருந்தார்.

ஆராதனை முடிந்ததும் புலவரை ஏறிட்டார் மன்னர். ‘‘இளவரசர் தனது ஓவியங்களைப் பார்வையிடுமாறு இந்த எளியவனை வரச்சொல்லியிருந்தார். பிரதோஷ காலம் தவிர்த்து பிற நேரங்களில் மன்னரின் பூஜையை யாரும் பார்ப்பதில்லை. இருந்தாலும்…’’ ‘‘சிவ… சிவா… அந்த ஈஸ்வரனின் முன்பு அனைவருமே சமம்தான். பூஜையைப் பார்க்கக் கூடாது என்று தடுக்க நான் யார்? என்றேனும் அப்படி யாரையாவது தடுத்திருக்கிறேனா?’’ மன்னர் பேசிக் கொண்டிருக்கையில் ராஜசிம்மன் ஸ்நானம் முடித்துவிட்டு விபூதிக் கீற்றுடன் பூஜையறைக்குள் நுழைந்தான்.

சிவனை நமஸ்கரித்த கையோடு புலவரையும், மன்னரையும் வணங்கினான். மூவரும் ராஜசிம்மனின் ஓவிய அறைக்குள் நுழைந்தார்கள். மன்னருக்கு பரவசம். பாட்டனார் நரசிம்ம வர்ம பல்லவனின் குருதியல்லவா பேரனுக்குள் ஓடுகிறது… அதனால்தான் அவனுக்குள் ஓவியத் திறமை இப்படி நிரம்பி வழிகிறது… புலவரை ஏறிட்டார் மன்னர். தண்டியின் முகத்தைக் கொண்டு எதையும் ஊகிக்க முடியவில்லை. நுணுக்கமான கோயில், கோபுரம் உள்ளிட்ட அனைத்து ஓவியங்களையும் புலவர் நிதானமாகப் பார்வையிட்டார்.

மவுனமாக ராஜசிம்மனை நோக்கித் திரும்பினார். ‘‘இளவரசர் வரைவதை விட்டுவிடுவது ஓவியத்துக்கு நல்லது…’’ ராஜசிம்மன் புலவரின் கண்களை ஊடுருவினான். நமஸ்கரித்தான். வெளியேறினான். மன்னர் கலங்கிய கண்களுடன் புலவரை நோக்கி கை கூப்பினார். தண்டி பதறிவிட்டார். ‘‘மன்னா, என்ன இது… எனக்கு எதற்கு மரியாதை?’’ ‘‘நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பொய் சொன்னதற்காக…’’ புலவர் தலைகுனிந்தார்.

‘‘கள்ள நாணயம் அடிக்கும் அளவுக்கு சாளுக்கியர்கள் சென்றுவிட்டார்கள். போர் முரசு எந்நேரத்திலும் ஒலிக்கலாம். வீணாக போர் புரியவேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். அதற்காக அவர்களாக யுத்தம் புரிய வரும்போது நாம் சும்மா இருக்கலாமா? எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அதற்கு என் மகன் வாளை கையில் எடுக்க வேண்டும்… தூரிகையை அல்ல. ஓவியம் வரைய எத்தனையோ கரங்கள் இருக்கின்றன.

ஆனால், வாளின் பிடியை இறுக்கமாகப் பிடிக்க இந்த நாட்டுக்கு ஓர் இளவரசன்தான் இருக்கிறான்…’’ ‘‘மன்னா! பல்லவ குடிகளின் பூர்வ ஜென்மத்துப் புண்ணியம் மன்னராக நீங்கள் கிடைத்திருப்பது. ஆனால், உண்மையிலேயே ராஜசிம்மன் மிகச் சிறந்த ஓவியன். அவன் மனதிலுள்ள கோயிலின் உருவம் என்ன அழகாக ஓவியத்தில் உயிர்பெற்று எழுந்திருக்கிறது…’’ ‘‘ஓம் நமசிவாய…’’ வானத்தை நோக்கி கை உயர்த்தினார் மன்னர்.

அதேநேரம் கார்குழலியின் மடியில் தன் முகத்தை புதைத்தபடி ராஜசிம்மன் முணுமுணுத்தான். ‘‘இந்நாடு செய்த தவம், பரமேஸ்வரவர்மன் மன்னராகவும் அவருக்கு பக்கபலமாக புலவர் தண்டியும் கிடைத்திருப்பது. மக்களின் நன்மைக்காக மன்னர் சொல்லச் சொன்ன பொய்யை புலவர் வழிமொழிந்திருக்கிறார். அன்று வாதாபியை தீக்கிரையாக்கினார் நரசிம்மர்.

அதற்கு பழிவாங்க சாளுக்கியர்கள் துடிக்கிறார்கள். பல்லவ இளவரசனான நான் யுத்தத்துக்கு தயாராக வேண்டும் என்று மன்னரும் புலவரும் விரும்புகிறார்கள். சிற்பங்களையும், ஓவியங்களையும் எப்போது வேண்டுமானாலும் நேசிக்கலாம், ஆதரிக்கலாம். போர் முடிந்ததும் நிச்சயம் ஒருநாள் என் ஓவியத்தை காஞ்சியில் சிற்பமாக்குவேன் கார்குழலி… ஆனால், அலையும் ஓயாது… போருக்கும் முடிவே கிடையாது…’’ புரண்டவனின் முகம் நோக்கி கார்குழலி குனிந்தாள். இயற்கையின் யுத்தம் ஆரம்பமானது. போருக்கு முடிவுதான் ஏது?

– மார்ச் 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *