பொன்னியின் செல்வன்

0
கதையாசிரியர்: ,
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 2,970 
 
 

(2012ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

41 – 50 | 51 -60

51. ‘நந்தி மண்டபம்’

யானை கம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்தது. யானைமேல் அம்பாரி ஆடி அசைந்து கொண்டிருந்தது. முன்னும் பின்னும் காவற்படைகள் போய்க்கொண்டிருந்தன. பெய்த மழை சிறு தூறலாயிற்று, பிறகு தூறலும் நின்றது. வானத்தில் மேகக் கூட்டங்கள் சிதறிக் கலைந்தன. நட்சத்திரங்கள் எட்டிப் பார்த்தன. வானதி யானையின் அம்பாரிக் கூரை வழியாக மேலே வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களைப் பார்த்தாள். வானவெளியில் சஞ்சரிக்கும் நட்சத்திரங்களுக்கும், பூலோகத்தில் வாழும் மனிதர்களின் வாழ்க்கைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்க முடியுமா என்று அதிசயப்பட்டாள். வால் நட்சத்திரம் தோன்றுவது ஏதோ உற்பாதத்துக்கு அறிகுறி என்று ஜனங்கள் பேசிக் கொள்கிறார்களே, அது எவ்வளவு தூரம் நிஜமாயிருக்கும்?

அப்படி என்ன உற்பாதம் நடக்கும்? பொன்னியின் செல்வர் கடலில் முழுகியதுதான் அந்த உற்பாதமா? அக்கா கொண்டுள்ள நம்பிக்கையின்படி அவர் திரும்பி வருவாரா? அப்படியானால், வேறு என்ன உற்பாதம் நடக்கக் கூடும்!…

இம்மாதிரியெல்லாம் வெகு நேரம் சிந்தனை செய்து கொண்டிருந்த பிறகு வானதி இலேசாகக் கண்ணயர்ந்தாள். அவள் கண்விழித்துப் பார்த்தபோது, பொழுது புலர்ந்திருந்தது. புள்ளினங்கள் உதய கீதம் பாடின. இளைய பிராட்டியும் விழித்துக் கொண்டிருந்தாள். அம்பாரியின் பட்டுத் திரையை விலக்கிகொண்டு வெளியே பார்த்து, “இதோ ஆனைமங்கலம் வந்து விட்டோம். சோழ மாளிகையின் வாசலுக்கே வந்து விட்டோம்” என்றாள்.

இரு இளவரசிகளும் யானை மீதிருந்து இறங்கினார்கள். மாளிகைக்குள்ளே பிரவேசித்தார்கள்.

அங்கே ஆயத்தமாயிருந்த அரண்மனைத் தாதிமார்கள் இளவரசிகள் இருவரையும் மாளிகையின் எல்லாப் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று காட்டினார்கள். கடைசியில், மாளிகையின் கீழ்ப்புறத்துக்கு வந்து, அங்கிருந்த அலங்கார முன்றின் முகப்பில் நின்றபடி கடலுடன் கலந்த கால்வாயைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

“அக்கா! இளவரசரைத் தேடுவதற்கு ஏற்பாடு செய்யப் போவதாகச் சொன்னீர்களே? என்ன செய்திருக்கிறீர்கள்?” என்றாள் கொடும்பாளூர் இளவரசி.

“ஆமாடி வானதி! தேடுவதற்கு ஏற்பாடு ஆரம்பமாகி விட்டது. அதோபார், ஒரு படகு வருகிறது! அதில் வருகிறவர்கள் ஒருவேளை ஏதேனும் செய்தி கொண்டு வந்தாலும் கொண்டு வருவார்கள்!” என்றாள் குந்தவை.

வானதி திரும்பிப் பார்த்தாள். சற்றுத் தூரத்தில் மரக்கிளைகளின் இடைவெளியில் ஒரு சிறிய படகு வருவது தெரிந்தது.

படகு அப்போது சென்று கொண்டிருந்த இடத்தில் கால்வாயின் கரைகள் இருபுறமும் ஓங்கி உயர்ந்திருந்தன. கால்வாயின் ஓரமாகப் படித்துறை மண்டபம் ஒன்று காணப்பட்டது. படிகள் முடிந்து மண்டபம் தொடங்கும் இடத்தில் இரண்டு ஓரங்களிலும் இரண்டு நந்தி விக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தச் சிலைகளின் முக்கியம் பற்றியே அம்மண்டபத்துக்கு ‘நந்தி மண்டபம்’ என்ற பெயர் ஏற்பட்டிருந்தது.

படகு மண்டபத்தை நெருங்கி வந்தபோது, இளையபிராட்டி குந்தவை படிகளில் இறங்கிக் கீழ்ப்படிக்கு வந்தாள். படித்துறை அருகில் வந்து படகு நின்றது. இளவரசன் இறங்குவதற்குப் படகிலிருந்தபடி சேந்தன் அமுதனும், படியில் நின்றபடி இளைய பிராட்டியும் உதவி செய்தார்கள். சேந்தன் அமுதனும், பூங்குழலியும் படகைப் பின்னோக்கிச் செலுத்திக் கொண்டு போய்ச் சிறிது தூரத்தில் நிறுத்தினார்கள்.

“தம்பி! எப்படி மெலிந்து விட்டாய்!” என்று குந்தவை கூறியபோது, அவளுடைய கனிந்த குரலிலே கண்ணீர் கலந்து தொனித்தது.

பொன்னியின் செல்வன் உட்காரும் போது தமக்கையில் பாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டான். குந்தவை அவனுடைய தலையைக் கரத்தினால் தொட்டு, உச்சி முகர்ந்தாள். அவளுடைய கண்ணில் மேலும் கண்ணீர் ததும்பியது.

இருவரும் உட்கார்ந்த பிறகு குந்தவை, “தம்பி! உன்னை இன்றைக்கு நான் இங்கு வருவித்திருக்கவே கூடாது. சூடாமணி விஹாரத்தின் தலைவர் உனக்கு உடம்பு நன்றாகக் குணமாகி விட்டது என்று செய்தி அனுப்பினார். அது சரியல்ல; சுரம் உன்னை வாட்டி எடுத்திருக்கிறது. ஆனால் உன்னைப் பார்க்காமலிருக்கவும் என்னால் முடியவில்லை” என்றாள்.

“அக்கா! என்னை இங்கு வருவித்தது பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நீ மட்டும் படகு அனுப்பாமலிருந்தால் நான் இத்தனை நேரம் பழையாறைக்கே புறப்பட்டிருப்பேன். கடுமையான சுரத்திலேயுங்கூட உன்னுடைய ஓலைதான் என் மனதை வருத்திக் கொண்டிருந்தது.”

“தம்பி! தற்சமயம் இந்தச் சோழ நாட்டைப் பேரபாயம் சூழ்ந்திருக்கிறது. உட்பகைவர்களாலும் வெளிப்பகைவர்களாலும், சிநேகிதர்கள் போல் நடிக்கும் பகைவர்களாலும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. நீயும் நானும் யோசித்து முயற்சி செய்துதான் அத்தகைய அபாயம் இந்நாட்டுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும்!” என்றாள் இளைய பிராட்டி.

“அக்கா! ஐந்து வயதில் நான் காவேரி வெள்ளத்தில் மூழ்கியது நினைவிருக்கிறதா? காவேரித் தாய் என்னை எடுத்துக் காப்பாற்றிப் படகிலே விட்டு விட்டு மறைந்தது நினைவிருக்கிறதா?” என்று அருள்மொழிவர்மன் கேட்டான்.

“இது என்ன கேள்வி, தம்பி! எப்படி அதை நான் மறந்து விடமுடியும்? ‘பொன்னியின் செல்வன்’ என்று உன்னை அழைத்து வருவதே அந்தச் சம்பவத்தின் காரணமாகத் தானே?” என்றாள் குந்தவை.

“என்னைக் காப்பாற்றிய காவேரித் தாயை இலங்கையில் நான் கண்டேன், அக்கா!.. என்ன, பேசாதிருக்கிறாயே? உனக்கு ஆச்சரியமாயில்லை?”

“ஆச்சரியமில்லை, தம்பி. ஆனால் ஆர்வம் நிறைய இருக்கிறது. அவளைப் பற்றி எல்லா விவரங்களையும் சொல்!”

“காவேரி வெள்ளத்திலிருந்து என்னை அவள் காப்பாற்றியது மட்டுமல்ல; இலங்கையில் பல தடவை என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறாள். உயிரைக் காப்பாற்றியது பெரிதல்ல, அக்கா! அவள் என்னிடத்தில் வைத்துள்ள அன்பு இருக்கிறதே, அதற்கு நீ என்னிடம் வைத்துள்ள அன்பைக் கூட அடுத்தபடியாகத்தான் சொல்ல வேண்டும்!”

“அதைச் சொல்வதற்கு நீ தயங்க வேண்டாம். அந்த ஊமைச் செவிட்டு ஸ்திரீ, நம்முடைய தந்தையிடம் இருபது வருஷங்களுக்கு மேலாக அவள் உள்ளத்தில் பொங்கித் ததும்பிக்

கொண்டிருந்த அத்தனை அன்பையும் உன் பேரிலே சொரிந்திருக்கிறாள். அதற்குப் பதினாலு உலகமும் இணையில்லைதான்!”

“உனக்கு அது எப்படி தெரிந்தது, அக்கா?”

“தந்தை சொன்னதிலிருந்து ஊகித்துக் கொண்டேன், அந்த ஊமை ஸ்திரீ வீற்றிருக்க வேண்டிய சிங்காசனத்தில் நம் தாயார் வீற்றிருக்கிறாள். அது தெரிந்திருந்தும் அவள் உன்னிடம் அத்தனை அன்பு வைத்திருந்தால், அது மிக்க விசேஷமல்லவா?”

“அவளால் பேச முடியாது; மனதில் உள்ளதைச் சொல்ல முடியாது. ஏதோ சித்திரங்கள் எழுதிக் காட்டியதைக் கொண்டு எவ்வளவு தெரிந்து கொள்ளலாமோ, அவ்வளவு தெரிந்து கொண்டேன். என்னிடம் அவளுடைய அன்பு இருக்கட்டும்; நம் தந்தையிடம் அவள் எத்தகைய அன்பு வைத்திருக்க வேண்டும் என்பதை நினைத்தால் என் நெஞ்சு உடனே உருகிவிடுகிறது. அக்கா! என்னுடைய பிராயத்தில் அப்பா என்னைப் போல இருப்பாரா?”

“இல்லை, தம்பி, இல்லை! உன்னுடைய பிராயத்தில் நம் தந்தை மன்மதனைத் தோற்கடிக்கும் அழகுடன் விளங்கினார். நம்முடைய சோழ குலம் வீரத்துக்குப் பெயர் போனதே தவிர அழகுக்குப் பெயர் போனதல்ல. நம் பாட்டனார் அரிஞ்சய தேவர் அழகில் நிகரற்ற வைதும்பராயன் குலத்தில் பிறந்த கல்யாணியை மணந்தார். கல்யாணியை அரிஞ்சயர் மணந்த போது அவள் பத்தரை மாற்றுப் பசும் பொன்னொத்த மேனியும், பூரண சந்திரனை யொத்த முகமும் கொண்ட புவன மோஹினியாக விளங்கினாள். தற்சமயம் இத்தனை வயதான பிறகும் கல்யாணிப்பாட்டி எவ்வளவு அழகாயிருக்கிறாள் என்பதை நீயே பார்த்திருக்கிறாய். அதனால் நமது தந்தையும் அவ்வளவு அழகுடன் இருந்தார். ‘சுந்தரசோழர்’ என்ற பட்டப் பெயரும் பெற்றார். நாம் நம்முடைய தாயாரைக் கொண்டு பிறந்திருக்கிறோம். திருக்கோவலூர் மலையமான் வம்சத்தில் பிறந்தவர்கள் அழகை வெறுப்பவர்கள்; அழகு வீரத்துக்குச் சத்துரு என்று நினைப்பவர்கள்…”

“அக்கா! இவ்வுலகில் ஒருவரைப்போல் இன்னொருவர் தத்ரூபமாக இருப்பதென்பது சாத்தியமா, அக்கா?”

“ஏன் சாத்தியமில்லை? இரட்டைப் பிள்ளைகளாயிருந்தால் அது சாத்தியம், அல்லது தாயும் மகளும் ஒரு பிராயத்தில் ஒரே மாதிரி இருப்பது சாத்தியம்தான். அபூர்வமாகச் சில சமயம் ஒரே மாதிரி இருப்பதும் உண்டு.”

“பழுவூர் இளையராணியும், இலங்கையில் நான் பார்த்த நம் பெரியன்னையும் ஒரே மாதிரி இருப்பதாக வந்தியத்தேவர் சொல்வது உண்மையாயிருக்க முடியுமா?”

“நான் பழுவூர் ராணியைப் பார்த்திருக்கிறேனே தவிர, நம் பெரியம்மாவைப் பார்த்ததில்லை. ஆனால் வந்தியத்தேவர் கூறியது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். தந்தை கூறிய வரலாற்றிலிருந்து அதைத் தெரிந்து கொண்டேன், தம்பி!”

“தந்தையே கூறினாரா, உன்னிடம்? என்ன கூறினார்? எப்போது கூறினார்?”

“சில நாளுக்கு முன்பு நானும் வானதியும் தஞ்சைக்குப் போயிருந்தோம். அப்போது தம் இளம் பிராயத்தில் நடந்த சம்பவத்தைக் கூறினார். இலங்கைக்கு அருகில் உள்ள ஒரு தீவில் தாம் தனியாக ஒதுக்கப்பட்டதையும், அத்தீவில் ஒரு ஊமைப் பெண் தம்மிடம் காட்டிய அன்பைப் பற்றியும் கூறினார். பராந்தகர் அனுப்பிய ஆட்கள் தம்மை அத்தீவில் கண்டுபிடித்து அழைத்து வந்ததைப் பற்றிச் சொன்னார். தமக்கு இளவரசுப் பட்டம் சூட்டிய அன்று அரண்மனையின் வாசலில் நின்ற கூட்டத்தில் அவளைப் பார்த்தாராம். அடுத்த கணம் அவள் மறைந்து விட்டாளாம். அவளைத் தேடி அழைத்துவர முதன் மந்திரி அநிருத்தரையே அனுப்பினாராம். ஆனால் அந்தப் பெண் கலங்கரை விளக்கத்தின் உச்சியிலிருந்து கடலில் குதித்து இறந்து விட்டாள் என்று அநிருத்தர் வந்து கூறினாராம். இந்தச் சம்பவம் நம் தந்தையின் உள்ளத்தில் இருபத்து நாலு வருஷங்களாக இருந்து அல்லும் பகலும் வேதனை அளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தேன். அவள் இறந்துவிட்டதாகவே தந்தை நினைத்துக் கொண்டிருக்கிறார். தம்மால், தமது குற்றத்தால், அவள் மனம் புண்பட்டு உயிரை விட்டுவிட்டதாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார். தம்பி! நீயும், நானுமாக முயன்று நம் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது. நீ எப்படியாவது இலங்கையிலிருந்து அந்த மாதரசியைத் தஞ்சைக்கு அழைத்து வர வேண்டும். தந்தையிடம் அவள் இறந்துவிடவில்லை; உயிரோடிருக்கிறாள் என்பதை நேரில் நிரூபித்துக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால், நம் தந்தைக்கு இந்த ஜன்மத்திலும் மனச்சாந்தி இல்லை!”

“தம்பி! இருந்தாலும், நீ ரொம்பப் பொல்லாதவன், தம்பி! சோழர்குலத்தின் பண்பாட்டையே மறந்துவிட்டாய்! கொடும்பாளூர் இளவரசியிடம் ஒரு வார்த்தை பேசவும் இல்லை! சௌக்கியமாக இருக்கிறாயா என்று கேட்கக்கூட இல்லையே? மகாவீரரான சிறிய வேளாரின் புதல்விக்கு நீ செய்யும் மரியாதை இதுதானா? அழகாயிருக்கிறது! வானதி! இங்கே வா! உன்னை இளவரசன் நன்றாய்ப் பார்க்க வேண்டுமாம்!” என்றாள் குந்தவை. வானதி அருகில் வந்தாள்.

“தென்திசைச் சேனாதிபதி என்னைப் பார்க்கும் போதெல்லாம் இவளைப் பற்றி விசாரிப்பார். நீயோ இவளைப் பற்றி ஒன்றுமே சொல்லி அனுப்புவதில்லை. ஆகையால், நான் அவருக்குப் பதில் சொல்ல முடியாமல் திண்டாடுவேன்” என்றான் இளவரசன்.

“தம்பி! இரண்டு நாளில் தஞ்சைக்கு நான் புறப்படுகிறேன். ஆனால் இந்தச் சூடாமணி விஹாரத்தில்தான் நீ இன்னும் சில காலம் இருக்கவேண்டும்.”

“ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? தந்தையின் கட்டளையை மீறி என்னை இங்கே இன்னமும் ஒளிந்து, மறைந்து வாழச் சொல்கிறாயா?”

“ஆம்! நீ இப்போது தஞ்சைக்கு வந்தால் நாடெங்கும் ஒரே குழப்பமாகிவிடும். மக்கள் மதுராந்தகர் மீதும், பழுவேட்டரையர்கள் மீதும் ஒரே கோபமாயிருக்கிறார்கள். உன்னைச் சிறைப்படுத்திக் கொண்டுவரச் சொன்னதற்காகச் சக்கரவர்த்தி மீதுகூட ஜனங்கள் கோபமாயிருக்கிறார்கள். உன்னை இப்போது கண்டால் மக்களின் உணர்ச்சி வெள்ளம் பொங்கிப் பெருகும். அதன் விளைவுகள் என்ன ஆகுமோ தெரியாது. உடனே உனக்குப் பட்டம் கட்டவேண்டும் என்று ஜனங்கள் கூச்சல் போட்டாலும் போடுவார்கள். தஞ்சைக் கோட்டையையும், அரண்மனையையும் முற்றுகை போடுவார்கள். ஏற்கெனவே மனம் புண்பட்டிருக்கும் தந்தையின் உள்ளம் மேலும் புண்ணாகும்.

தம்பி! இராஜ்யத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது என்று உன்னை நான் வரச்சொல்லி ஓலை எழுதினேன். அதே காரணத்துக்காக இப்போது நீ திரும்பி இலங்கைக்குப் போய்விட்டால் நல்லது என்று நினைக்கிறேன்…”

“அக்கா! அது ஒருநாளும் இயலாத காரியம். நம் தந்தையைப் பார்க்காமல் நான் திரும்பிப் போகமாட்டேன். தஞ்சைக்கு நான் இரகசியமாக வருவது நல்லது என்று நினைத்தால் அப்படியே செய்கிறேன். ஆனால் சக்கரவர்த்தியை நான் பார்த்தேயாக வேண்டும்.”

“நீ வந்துதான் தீரவேண்டுமா? உன் இஷ்டத்துக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால் இன்னும் ஒரு வாரகாலம் சூடாமணி விஹாரத்தில் இரு. நான் முன்னதாகத் தஞ்சைக்குப் போகிறேன். நீ வந்திருப்பதாகத் தந்தையிடம் அறிவித்துவிட்டுச் செய்தி அனுப்புகிறேன்.”

நந்தி மண்டபத்தில் அமர்ந்து இளவரசனும், குந்தவை தேவியும் பேசிக்கொண்டிருந்தபோது கால்வாயில் படகில் காத்துக் கொண்டிருந்த பூங்குழலிக்கும், சேந்தன்அமுதனுக்கும் முக்கியமான சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது.

“அமுதா! ஒன்று உன்னை நான் கேட்கப் போகிறேன். உண்மையாகப் பதில் சொல்வாயா?” என்றாள் பூங்குழலி. “இளவரசருக்கு ஓலை எடுத்துக் கொண்டு இலங்கைக்குப் போனானே, அந்த வந்தியத்தேவன் உன்னைப் பற்றி அவன் ஒன்று சொன்னான். அது உண்மையா, பொய்யா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்…”

“என்னைப் பற்றி அவன் உண்மையில்லாததைச் சொல்வதற்குக் காரணம் எதுவும் இல்லை.

இருந்தாலும், அவன் சொன்னது என்னவென்று சொல்!”

“நீ என்னைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியதாகச் சொன்னான். “நீ என்னிடம் ஆசை

வைத்திருப்பதாகச் சொன்னான், என்னை நீ மணந்து கொள்ள விரும்புவதாகச் சொன்னான்….”

“அவ்விதம் உண்மையில் அவன் சொன்னானா?”

“ஆம், அமுதா!”

“அவனுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். நானே உன்னிடம் என் மனதைத் திறந்து தெரிவித்திருக்க மாட்டேன்; அவ்வளவு தைரியம் எனக்கு வந்திராது. எனக்காக உன்னிடம் தூது சொன்னான் அல்லவா? அதற்காக அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.”

“அப்படியானால் அவன் சொன்னது உண்மைதானா?”

“உண்மைதான் பூங்குழலி! அதில் சந்தேகமில்லை.”

“அமுதா! நீ உத்தமன், என் பெரிய அத்தையின் குணத்தைக் கொண்டு பிறந்திருக்கிறாய்…”

“அது என்ன விஷயம்? திடீரென்று புதிதாக ஏதோ சொல்கிறாயே?”

“என் பெரிய அத்தை இறந்துபோய் விட்டதாக நம் குடும்பத்தார் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா?”

“யாரைச் சொல்கிறாய்? என் தாய்க்கும், உன் தந்தைக்கும் உடன் பிறந்த மூத்த சகோதரியைத் தானே”.

“ஆம்! அவள் உண்மையில் இறந்து விடவில்லை. அவள் இலங்கைத் தீவில் இன்றைக்கும் பைத்தியக்காரியைப் போல அலைந்து கொண்டிருக்கிறாள். அவள் இன்று பைத்தியக்காரியைப் போல் அலைவதற்கு சோழகுலத்தைச் சேர்ந்த ஒருவனின் நம்பிக்கைத் துரோகம்தான் அதற்குக் காரணம். இளம்பிராயத்தில், என் அத்தை இலங்கைக்கு அருகில் ஒரு தீவில் வசித்து வந்தாள். அவளைச் சோழ ராஜகுமாரன் ஒருவன் காதலிப்பதாகப் பாசாங்கு செய்தான், அவள் நம்பிவிட்டாள். பிறகு அந்த இராஜகுமாரன் இளவரசுப் பட்டம் சூட்டிக் கொண்டதும் அவளை நிராகரித்து விட்டான்….”

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது, பூங்குழலி?”

“என் ஊமை அத்தையின் சமிக்ஞை பாஷை மூலமாகவே தெரிந்து கொண்டேன். அவள், தனக்குத் துரோகம் செய்தவனை மன்னித்ததுமில்லாமல், அவனுக்கு இன்னொரு மனைவி மூலம் பிறந்த பிள்ளையைப் பல தடவை காப்பாற்றினாள் என்று அறிந்தேன்.”


52. கெடிலக் கரையில்

திருமுனைப்பாடி நாட்டை வளப்படுத்திய இனிய நீர்ப் பெருக்குடைய நதிகளில் கெடிலம் நதியும் ஒன்று. ஐப்பசி மாதம் ஆரம்பத்தில் கெடில நதியில் வழக்கத்தை விட அதிகமாகவே வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. இந்த நதிக் கரையில் தொண்டை நாட்டிலிருந்து சோழ நாட்டுக்கு செல்லும் இராஜபாட்டை கெடில நதியைக் கடக்கும் துறை எப்போதும் கலகலவென்று இருக்கும். பிரயாணிகள் அங்கே வண்டிகளிலிருந்து மாட்டை அவிழ்த்து விட்டுக் கட்டுச் சாதம் உண்பார்கள். உச்சி வேளையில் ஒரு பெரும் ஆரவாரம் திடீரென்று சற்றுத் தூரத்தில் சாலையில் எழுந்தது கேட்டுப் பிரயாணிகள் வியப்புற்றார்கள். கட்டியக்காரர்கள், எக்காளம் ஊதுவோர், பரிச்சின்னம் ஏந்துவோர் பரிவாரங்களுக்குப் பின்னால் மூன்று குதிரைகள் ஒன்றின் பக்கம், ஒன்றாக வந்தன, மூன்று குதிரைகள் மீதும் மூன்று இளம் வீரர்கள் வீற்றிருந்தார்கள். மூன்று குதிரைகளும் வந்து தண்ணீர்க் கரையோரம் நின்றன. குதிரைகளுக்குப் பின்னால் வந்த ரதம் சற்று அப்பால், அரச மரத்தடியில் நின்றது. அந்த ரதத்தில் எண்பது பிராயமான வீரக் கிழவர் திருக்கோவலூர் மலையமான் இருந்தார். தண்ணீர்க் கரை ஓரத்தில் குதிரை மேலிருந்த வண்ணம் ஆதித்த கரிகாலன் திரும்பி அவரைப் பார்த்தான்.

பின்னால் ரதத்தில் வந்த கிழவர் சமிக்ஞை செய்யவே, ஆதித்த கரிகாலன் குதிரையைத் திருப்பிக் கொண்டு அவர் வீற்றிருந்த ரதத்தின் அருகில் சென்றான்.

“குழந்தாய்! கரிகாலா! நான் இவ்விடத்தில் உங்களிடம் விடை பெற்றுக் கொண்டு திருக்கோவலூர் போக எண்ணுகிறேன். போவதற்கு முன்னால் உன்னிடம் சில முக்கிய விஷயங்கள் சொல்ல வேண்டும். சற்றுக் குதிரையிலிருந்து இறங்கி அந்த அரச மரத்தடியிலுள்ள மேடைக்கு வா!” என்றார்.

“அப்படியே ஆகட்டும், தாத்தா!” என்று ஆதித்த கரிகாலன் குதிரையிலிருந்து கீழே குதித்தான். கிழவரும் ரதத்திலிருந்து இறங்கினார். இருவரும் அரசமரத்தடி மேடைக்குச் சென்றார்கள்.

அப்போது பார்த்திபேந்திரன், கந்தமாறனைப் பார்த்து, “நல்ல வேளையாய்ப் போயிற்று. இந்தக் கிழவர் ‘விடேன் தொடேன்’ என்று நம்முடன் நெடுகிலும் வந்து விடுவாரோ எனப் பயந்து கொண்டிருந்தேன்” என்றான்.

“அப்படித் தொடர்ந்து வந்தால் இவரை வெள்ளாற்றின் பிரவாகத்தில் தள்ளி முழுக அடித்து விடுவது என்று நான் எண்ணியிருந்தேன்!” என்றான் கந்தமாறன். இருவரும் தங்கள் பேச்சில் தாங்களே சிரித்து மகிழ்ந்தார்கள்.

ஆதித்த கரிகாலனைப் பார்த்து மலைநாடு உடையாராகிய திருக்கோவலூர் மலையமான் சொல்லலுற்றார்:-
“கேள், கரிகாலா! எதிரிகள் தொழுத கையிலும் அழுத கண்ணீரிலும் கொடிய ஆயுதம் இருக்கக்கூடும் என்று கூறிய திருவள்ளுவர், வெளிப்பகையைக் காட்டிலும் உட்பகை கொடியது என்றும் கூறியிருக்கிறார். வாளைப் போல் வெளிப்படையாக எதிர்த்து நிற்கும் பகைவர்களிடம் பயம் வேண்டியதில்லை. சிநேகிதர்களைப் போல் நடிக்கும் பகைவர்களிடமே பயப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். கேளிரைப் போல் நடிக்கும் பகைவர்களின் மத்தியில் இப்போது போகிறாய். நான் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் நீ போகிறாய். ஏதோ ராஜ்யம் சம்பந்தமாகத் தகராறு நேர்ந்து விட்டதாகவும் அதைத் தீர்த்து வைக்கப் போவதாகவும் உன்னை அழைத்திருக்கிறார்கள். சம்புவரையன் மகள் ஒருத்தியை உன் கழுத்தில் கட்டிவிட உத்தேசித்து உன்னை அழைத்திருப்பதாகவும் அறிகிறேன். ஆனால் அவர்களுடைய உண்மையான நோக்கம் இன்னதென்பது எனக்கும் தெரியாது; நீயும் அறிந்திருக்க முடியாது. உனக்குப் பெண் கொடுப்பதற்கு இந்தப் பாரத தேசத்தில் மன்னர்கள் பலர் காத்திருக்கிறார்கள். இந்தச் சம்புவரையன் மகள் தான் வேண்டுமென்பதில்லை. இராஜ்யத்தை உனக்குப் பாதி என்றும் மதுராந்தகனுக்குப் பாதி என்றும் பிரித்துக் கொடுத்துச் சமாதானம் செய்விக்கப் போகிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன். அதில் என்ன சூது இருக்குமோ, சூழ்ச்சி இருக்குமோ, எனக்குத் தெரியாது. எது எப்படியானாலும், நான் உடனே திருக்கோவலூருக்குச் சென்று என்னுடைய பாதுகாப்புப் படைகளையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்து வெள்ளாற்றங்கரையில் தங்கியிருப்பேன். சம்புவரையர் அரண்மனையில் இருக்கும்போது உனக்கு ஏதேனும் சந்தேகம் தோன்றினால் எனக்கு உடனே சொல்லி அனுப்பு!…”

இதைக் கேட்ட ஆதித்த கரிகாலன் ஒரு நெடிய பெருமூச்சு விட்டு, “தாத்தா! நான் போய் வரவா?” என்றான்.

“நானும் முதலில் உன்னைப் போக வேண்டாம் என்றேன்; அப்புறம் போகும்படி சொன்னேன். உன் தம்பியைப் பற்றிய செய்தி கேட்ட பிறகு நீ போவதே நல்லது என்று தீர்மானித்தேன். அருள்மொழிவர்மன் இறந்திருப்பான் என்று நான் நம்பவில்லை…”

“நானும் நம்பவில்லை. போகும் காரியத்தை முடித்துக் கொண்டு வெகு சீக்கிரமாகவே காஞ்சிக்குத் திரும்பி விடுவேன், தாத்தா! திரும்பி வந்ததும் என் தம்பியைக் கண்டு பிடித்துக் கொண்டு வருவதற்காகக் கப்பல் ஏறிப் புறப்படுவேன்” என்றான் ஆதித்த கரிகாலன்.

மணிமுத்தா நதி வெள்ளாற்றில் கலக்கும் வனப்பு வாய்ந்த இடத்தைத் தாண்டி ஆதித்த கரிகாலனும் அவனுடைய தோழர்களும் பரிவாரங்களும் வந்து கொண்டிருந்தார்கள்.

அச்சமயத்தில் அவர்களுக்கு எதிராக சாலையில் இரண்டு குதிரைகள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வெகு வேகமாக வருவதை அவர்கள் பார்த்தார்கள். கண்மூடித் திறக்கும் நேரத்தில் அக்குதிரைகள் அவர்களை நெருங்கி வந்து விட்டன. அவை வந்த வேகத்தைப் பார்த்தால் இளவரசர் கோஷ்டி எதிரில் வருவதைக் கூடக் கவனியாமல் தாண்டிப் போய்விடும் எனத் தோன்றியது. அவ்வளவு அகம்பாவம் பிடித்தவர்கள் யார் என்று பார்ப்பதற்காகக் கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் வேல்களை நீட்டிச் சாலையின் குறுக்கே வழி மறிக்க ஆயத்தமானார்கள். ஆனால் வந்த குதிரைகள் அவர்களுக்குச் சிறிது தூரத்தில் தடால் என்று பிடித்து இழுத்து நிறுத்தப்பட்டன.

வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் குதிரைகள் மீதிருந்து கீழே குதித்தார்கள். வந்தியத்தேவனைக் கண்டதும் இளவரசன் ஆதித்த கரிகாலனுக்குக் குதூகலம் தாங்கவில்லை. அவனும் குதிரை மீதிருந்து கீழே குதித்து முன்னேறிச் சென்று வந்தியத்தேவனைக் கட்டிக் தழுவிக் கொண்டான்.

கரிகாலன், “பார்த்திபா! நீயும் கந்தமாறனும் குதிரை மீது ஏறிச் சற்று முன்னால் மெதுவாகப் போய்க் கொண்டிருங்கள். இவனுடைய பிரயாண விவரங்களைக் கேட்டுக் கொண்டு நான் சற்றுப் பின்னால் வருகிறேன்” என்றான். பார்த்திபேந்திரனும், கந்தமாறனும் வேறு வழியின்றித் தத்தம் குதிரை மீது ஏறி முன்னால் சென்றார்கள்.


53. மணிமேகலை

சம்புவரையரின் செல்வப் புதல்வியான மணிமேகலை குதூகலம் நிறைந்த பெண், தந்தையும் தாயும் தமையன் கந்தமாறனும் அவளைக் குழந்தைப் பிராயம் முதல் அன்பும் ஆதரவுமாய்ப் பேணி வளர்த்து வந்தார்கள். சம்புவரையரின் அரண்மனையில் அவள் கொடுங்கோல் அரசியாக விளங்கி வந்தாள். அவள் இட்டதே மாளிகைக்குள் சட்டமாக நடந்து வந்தது. சில காலத்துக்கு முன்பு வரையில் மணிமேகலையின் வாழ்கை ஆட்டமும் பாட்டமும் களியாட்டமுமாகக் கழிந்து வந்தது. நாலைந்து மாதத்துக்கு முன்னால் அவளுடைய வாழ்க்கையில் முதன் முதலாக ஒரு தடங்கல் ஏற்பட்டது. அவளது விருப்பத்துக்கு விரோதமான காரியத்தை அவள் செய்ய வேண்டும் என்று வீட்டுப் பெரியவர்கள் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார்கள்.

கந்தமாறன் தஞ்சாவூர்ச் சிம்மாசனத்தில் அவளை ஏற்றி வைக்கத் தீர்மானித்திருப்பதாக ஆசை காட்டினான். ஏற்கனவே சின்னப் பழுவேட்டரையரின் மகளை மணந்தவனான மதுராந்தகனுக்கு இவளையும் மணம் புரிந்து கொடுக்கப் போவதாகவும் கூறினான். மதுராந்தகன் தான் அடுத்த சக்கரவர்த்தியாகப் போகிறான் என்று ஜாடைமாடையாகச் சொன்னான். மதுராந்தகனை மணந்தால் மூன்று உலகங்களுக்கும் மணிமேகலை சக்கரவர்த்தினியாக விளங்குவாள் என்றும், அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையும் ஒருவேளை சாம்ராஜ்யம் ஆளும் பேறு பெறுவான் என்றும் கூறினான். இதற்கெல்லாம் அவளுடைய பெற்றோர்களும் ஒத்துப் பாடினார்கள்.

ஆனால் மணிமேகலைக்கு இந்தப் பேச்சு ஒன்றும் பிடிக்கவில்லை, மதுராந்தகன் வீரமற்றவன் என்றும், போர்க்களத்தையே பார்த்து அறியாதவன் என்றும், நேற்று வரை உடம்பெல்லாம் விபூதி பூசி ருத்திராட்சம் அணிந்து சாமியார் ஆகப் போவதாகச் சொல்லி வந்தவன் என்றும் அறிந்திருந்தாள். போதாதற்கு ஏற்கெனவே அவனுக்கு ஒரு கலியாணம் ஆகியிருந்தது. தஞ்சாவூர் அரண்மனைப் பெண்களோ  மிகவும் கர்வக்காரிகள். தங்களுக்குத்தான் நாகரிகம் தெரியும் என்று எண்ணி மற்ற ஊர்க்காரர்களை அலட்சியம் செய்கிறவர்கள். இதையெல்லாம் எண்ணி மணிமேகலை மிக்க எரிச்சல் கொண்டாள். தஞ்சாவூர்ச் சிம்மாசனமே கிடைப்பதாயிருந்தாலும் சரி, மதுராந்தகனை மணந்து கொள்ள முடியாது என்று அடம்பிடித்தாள்.

அப்புறம் இன்னொரு செய்தி தெரிய வந்தபோது அவளுடைய மன உறுதி வலுவடைந்தது. பெரிய பழுவேட்டரையர் கடம்பூருக்கு வந்திருந்தபோது பின்னோடு இளையராணி நந்தினியும் வந்திருந்ததாகச் சொன்னார்கள். ஆனால் அவள் அந்தப்புரத்துக்குள்ளேயே வரவில்லை. கடம்பூர் அரண்மனைப் பெண்களைப் பார்க்கவும் இல்லை. இது முதலில் வியப்பை அளித்தது. அரண்மனைப் பெண்டிர் அதைப் பற்றி பரிகாசமாகவும் நிந்தனையாகவும் பேசிக் கொண்டார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உண்மை தெரிந்தது. மூடுபல்லக்கில் இளையராணி வரவில்லையென்றும் மதுராந்தகன் வந்திருந்தான் என்றும் அறிந்தபோது மணிமேகலையின் அருவருப்பு அதிகமாயிற்று. “சீச்சீ! இப்படிப் பயந்து கொண்டு மூடுபல்லக்கில் பெண் வேஷம் தரித்துக் கொண்டு வருகிறவனையா நான் மணவாளனாக வரிப்பேன்? ஒருநாளும் இல்லை!” என்று மணிமேகலை உறுதியடைந்தாள்.

ஆகையால் தமையன் கந்தமாறனுடன் மணிமேகலை முடிவில்லா விவாதம் தொடங்கினாள். கந்தமாறனுக்கு இது அளவில்லாத கோபத்தை உண்டாக்கிற்று.

மறுபடியும் சென்ற சில நாளாக மணிமேகலை சிறிது உற்சாகம் கொள்ளத் தொடங்கியிருந்தாள். மதுராந்தகனுக்கு அவளை மணம் செய்து கொடுக்கும் எண்ணத்தை அவள் பெற்றோர்களும் தமையன் கந்தமாறனும் கைவிட்டதை அறிந்ததில் சிறிது உற்சாகம் உண்டாயிற்று. சக்கரவர்த்தியின் மூத்த புதல்வரும் பட்டத்து இளவரசருமான ஆதித்த கரிகாலருக்கு மணிமேகலையைக் கொடுப்பது பற்றி அவர்கள் ஜாடைமாடையாகப் பேசியது அவள் காதில் விழுந்தது.

ஆதித்த கரிகாலரின் வீர, தீர பராக்கிரமங்களைப் பற்றி அறியாதவர்கள், ஆண்களிலோ, பெண்களிலோ தமிழகத்தில் யாரும் இல்லை. அவர் ஏதோ காரணத்தினால் மணம் புரிந்து கொள்ள மறுத்து வருகிறார் என்பதையும் அறிந்திருந்தார்கள். அப்படிப்பட்டவரை மணந்து கொள்வது என்றால், அது கனவிலும் கருத முடியாத பாக்கியம் அல்லவா? இந்தப் பரந்த பரத கண்டம் முழுவதிலும் எத்தனை ராஜகுலப் பெண்கள் அந்தப் பேறு பெறுவதற்காகத் தவம் கிடக்கிறார்கள்; இதையெல்லாம் எண்ணி மணிமேகலை ஒருவாறு உற்சாகம் கொண்டாள்.

காஞ்சியிலிருந்து ஆதித்த கரிகாலரும், தஞ்சாவூரிலிருந்து பெரிய பழுவேட்டரையரும் கடம்பூர் மாளிகைக்கு விருந்தாளிகளாக வரப்போகும் செய்தி அவளுக்கு மீண்டும் பழைய மாதிரி குதூகலத்தை அளித்தது. இந்தத் தடவை பழுவேட்டரையர் தம் இளையராணியையும் அழைத்து வருகிறார். அவளுடைய அழகையும் குணத்தையும் அறிவாற்றலையும் பற்றி மணிமேகலை கந்தமாறனிடமிருந்து ரொம்பவும் கேள்விப்பட்டிருந்தாள். இந்தப் புதிய கலியாணப் பேச்சுக்குக் காரணமானவளே பழுவூர் இளையராணி தான் என்றும் கந்தமாறன் சொல்லியிருந்தான். அவள் கடம்பூர் அரண்மனையில் இருக்கும்போது அவளைத் தக்கபடி உபசரிப்பதில் மணிமேகலை முன்னால் நிற்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தான். மணிமேகலையின் உள்ளமும் அதற்குத்தக்க பரிபக்குவம் அடைந்திருந்தது. பழுவூர் ராணியிடம் நல்லபடியாக சிநேகம் செய்து கொண்டு அவளுடைய பழக்கத்தினால் தஞ்சாவூர் அரண்மனைப் பெண்களை நாகரிகத்தில் தோற்கடிக்கக் கூடியவளாகத் தான் ஆகிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

ஆதலின் ஒருவார காலமாக மணிமேகலை ஒரே உற்சாகத்தில் மூழ்கியிருந்ததுடன், பரபரப்புடன் அரண்மனையில் அங்குமிங்கும் ஓடி விருந்தாளிகளுக்கு வேண்டிய வசதிகளை மேற்பார்வை செய்வதில் ஈடுபட்டிருந்தாள். முக்கியமாகப் பழுவூர் இளையராணிக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அரண்மனைப் பகுதியில் சகல வசதிகளும் ஏற்படுத்தி வைப்பதில் அவள் கவனம் செலுத்தினாள். பழுவூர் ராணி தங்கப் போகும் அறையில் ஒவ்வொரு பொருளையும் முப்பது தடவை பெயர்த்து எடுத்து வெவ்வேறு இடத்தில் வைக்கும்படிவற்புறுத்தினாள். இளவரசர் ஆதித்த கரிகாலர் தம்முடைய சிநேகிதர்களுடன் தங்கப் போகும் அறைகளையும் அடிக்கடிப் போய்ப் பார்த்து வந்தாள்.

கடம்பூர் சம்புவரையர் மாளிகையின் முன் வாசல் அன்று மாலை, கண்டறியாத அற்புதக் காட்சிகளைக் கண்டது. கண்ணுக்கெட்டிய தூரம் ஜனங்கள் திரள் திரளாக நெருக்கியடித்துக் கொண்டு ஆதித்த கரிகாலரின் வீரத் திருமுகத்தைப் பார்க்கும் ஆர்வத்தினால் நின்றார்கள். பன்னிரண்டாவது பிராயத்தில் போர்க்களம் புகுந்து கையில் கத்தி எடுத்துப் பகைவர் பலரை வெட்டி வீழ்த்தியவரும், சேவூர்ப் போர்க்களத்தில் பாண்டிய சைன்யத்தை முறியடித்து, வீரபாண்டியன் பாலைவனத்துக்கு ஓடிப் பாறைக் குகையில் ஒளிந்துகொள்ளும்படி செய்தவரும், பத்தொன்பதாவது பிராயத்தில் வீரபாண்டியனுடைய ஆபத்துதவிப் படையைச் சின்னாபின்னம் செய்து அவன் ஒளிந்திருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவன் தலையை வெட்டிக் கொண்டு வந்தவருமான இளவரசரைப் பார்ப்பதற்கு யார்தான் ஆர்வம் கொள்ளாமலிருக்க முடியும்?

கோட்டை வாசலை அடைந்த மூன்று குதிரைகள் மீதும் வீற்றிருந்தவர்கள் ஆதித்த கரிகாலரும், பார்த்திபேந்திரனும் வந்தியத்தேவனுந்தான். அவர்களைத் தொடர்ந்து வந்த யானை குதிரை பரிவாரங்கள் எல்லாம் வெகு தூரம் பின்னாலேயே அந்தப் பெரிய ஜன சமுத்திரதினால் தடை செய்யப்பட்டு நின்றுவிட்டன. குதிரைகள் வந்து மாளிகை வாசலில் நின்றது, ஒரு பெரிய முழக்கம் எழுந்தது. மேல் மாடியிலிருந்து மலர் மாரி பொழிந்தது.

கரிகாலனும் மற்ற இருவரும் முன் வாசல் மேன்மாடத்துக்குச் சென்றபோது அங்கிருந்த பெண்கள் திரும்பிப் படியில் இறங்கி வரும் சமயமாயிருந்தது.

கரிகாலன் கந்தமாறனைப் பார்த்து, “நண்பனே! தாய்மார்களையெல்லாம் நமக்காக இங்கு வந்து காத்திருக்கும்படி செய்யலாமா? அது பெருந்தவறு. நாம் அல்லவா இவர்கள் இருக்குமிடம் சென்று நமது வணக்கத்தைச் செலுத்த வேண்டும்?” என்று கூறிவிட்டுப் பெண்மணிகளுக்கு வணங்கி வழி விட்டு நின்றான். ஒவ்வொருவராக இறங்கிய போது கந்தமாறனிடம் யார் யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டான். நந்தினியைப் பார்த்ததும், “ஓ! பழுவூர் இளைய பாட்டி அல்லவா? உண்மையாகவே வந்திருக்கிறார்களா? மிகவும் சந்தோஷம்!” என்றான். நந்தினி ஒன்றும் சொல்லாமல் அவனைத் தன் கூரிய கண்களால் பார்த்துவிட்டுச் சென்றாள். பின்னால் வந்த மணிமேகலையைப் பார்த்து, “ஓகோ! இவள் உன் தங்கை மணிமேகலையாக இருக்க வேண்டும். சித்திரத்தில் எழுதிய கந்தர்வ கன்னிகையைப் போல் இருக்கிறாள். இவளுக்கு விரைவில் ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துக் கலியாணம் பண்ணி வைக்க வேண்டும்!” என்றான். மணிமேகலை வெட்கத்தினால் குழிந்த கன்னங்களுடன் கடைக் கண்ணால் பார்த்துவிட்டு மடமடவென்று கீழே இறங்கினாள்.

பெண்கள் எல்லாருமே சென்ற பிறகு, கரிகாலன் அந்த மேல் மாடத்தின் முகப்புக்குச் சென்று நின்றான். அந்த மேல் மாடத்தையொட்டித் தனியாக நீண்டு அமைந்திருந்த மேடையில் கட்டியங் கூறுவோன் நிற்பதைக் கரிகாலன் கவனித்தான். அவனைச் சமிக்ஞையினால் அருகே வரும்படி அழைத்தான். வந்தவுடன் ஜனங்களுக்குச் சில விஷயங்களை அறிவிக்கும்படி கூறினான். கட்டியங் கூறுவோன் திரும்பிச் சென்று பேரிகையைச் சில தடவை முழக்கினான். “சோழர் குலக் கோமகனார் இந்தக் கடம்பூர் மாளிகையில் ஒரு வாரம் பத்து நாட்கள் வரை தங்கியிருப்பார். சுற்றுப்புறமுள்ள ஊர்களுக்கெல்லாம் விஜயம் செய்வார். அப்போது அந்தந்த ஊர் மக்களை நேரில் கண்டு அவரவர்களுடைய குறைகளையெல்லாம் கேட்டு அறிந்து கொள்வார்!” என்று கூவினான். அவ்வளவுதான்! இதுவரையில் அந்த ஜனக் கூட்டத்தில் எழுந்த ஆரவாரமெல்லாம் நிசப்தம் என்று சொல்லும்படியாக அவ்வளவு பெரிய பேரிரைச்சல் கிளம்பியது.


54. அநிருத்தரின் குற்றம்

காலையில் அநிருத்த பிரம்மராயர் பூஜை, புனஸ்காரம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு மாளிகையில் முன் முகப்புக்கு வந்து சேர்ந்தார். தம்மைக் காண்பதற்கு யாரார் வந்து காத்திருக்கிறார்கள் என்று சேவகனைப் பார்த்துகொண்டு வரச் செய்தார். காத்திருந்தவர்களில் ஆழ்வார்க்கடியான் ஒருவன் என்று தெரிந்ததும், அவனை உடனே கூட்டி வரும்படி ஆக்ஞாபித்தார். ஆழ்வார்க்கடியான் தன் குருநாதரின் முன்னால் விரைந்து வந்து பயபக்தி வினயத்துடன் நின்றான்.

“குருதேவரே! நேற்று மாலை இங்கு அடித்த புயல் சோழ நாட்டுக் கடற்கரை ஓரமாக அதாஹதம் செய்து விட்டிருக்கிறதாம்! தங்கள் அரண்மனை வாசலில் நாலாபுறமிருந்தும் தூதர்கள் வந்து காத்திருக்கிறார்கள். நாகைப்பட்டினத்துக்குப் பெரிய ஆபத்து என்று கேள்விப்படுகிறேன். கடல் பொங்கி வந்து நகரையே மூழ்க அடித்து விட்டதாகச் சொல்கிறார்கள்! அதைப் பற்றித் தங்களிடம் விசாரிப்பதற்கு இளையபிராட்டியே இங்கே வந்தாலும் வரக்கூடும்” என்று முடித்தான் ஆழ்வார்க்கடியான்.

அவன் சொல்லி வாய் மூடுவதற்குள்ளே அரண்மனை வாசலில் ஜயகோஷத் தொனிகள் கேட்டன. “திருமலை, நீ எப்போது ஞான திருஷ்டி பெற்றாய்? இளையபிராட்டிதான் வருகிறார் போலிருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டு அநிருத்தர் எழுந்து வாசலை நோக்கி நடந்தார்.

அதற்குள் அதே வாசல் வழியாகக் குந்தவை தேவியும் வானதியும் உள்ளே பிரவேசித்தார்கள்.

“தேவி, என்னைப் பார்க்க வேணுமென்று சொல்லி அனுப்பினால் நானே வந்திருக்கமாட்டேனா? இவ்வளவு அவசரமாக வந்த காரணம் என்ன? சக்கரவர்த்தி சௌக்கியமாயிருக்கிறார் அல்லவா?” என்று கேட்டார்.

குந்தவை முதன்மந்திரியைப் பார்த்து, “சக்கரவர்த்தியின் தேக சுகம் எப்போதும் போலிருக்கிறது, ஐயா! ஆனால் மனதுதான் கொஞ்சமும் சரியாக இல்லை. நேற்று இரவு அடித்த கடும் புயல் தந்தையின் மனத்தை ரொம்பவும் பாதித்திருக்கிறது. இராத்திரியெல்லாம் அவர் தூங்கவில்லை. குடிசைகளில் வாழும் ஏழை எளிய மக்கள் என்ன கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணி அடிக்கடி புலம்பினார். பொழுது விடிந்தவுடன் தங்களைப் போய்ப் பார்க்கும்படி சொன்னார். புயலினால் கஷ்ட நஷ்டம் அடைந்தவர்களுக்கெல்லாம் உடனே உதவி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாம். அதைத் தங்களிடம் சொல்லுவதற்காகவே முக்கியமாக வந்தேன்! “ஐயா! வாசலில் வந்து காத்திருப்பவர்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி அனுப்பி விட்டு வாருங்கள். மிக முக்கியமான காரியங்களைப் பற்றித் தங்களிடம் ஆலோசனை கேட்க வேண்டியிருக்கிறது!” என்றாள் இளையபிராட்டி குந்தவை.

“இதோ வந்துவிடுகிறேன், தாயே! எனக்கும் தங்களிடம் பேச வேண்டியதிருக்கிறது!” என்று சொல்லி விட்டு அநிருத்தர் சென்றார்.

முதன்மந்திரி தம் அரண்மனை ஆசார வாசலில் காத்திருந்தவர்களைப் பார்த்துப் பேசி அனுப்பிவிட்டு விரைவிலேயே திரும்பி வந்தார்.

“ஐயா! அந்த ஊமைத் தாயை அழைத்துக் கொண்டு வந்துவிடுவார்களா?” என்றாள் குந்தவை.

“தாயே! அந்த மாதரசியைப் பற்றித் தங்களுக்கு என்ன தெரியும்? எப்படித் தெரிந்தது?” என்றார் அநிருத்தர்.

“ஐயா! சில தினங்களுக்கு முன்பு சக்கரவர்த்தியே என்னிடம் அந்த மாதரசியைப் பற்றிச் சொன்னார்.”

“என்ன? அவள் உயிரோடிருப்பதாகச் சொன்னாரா, என்ன?”

“இல்லை, ஐயா! இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளைச் சொன்னார். அவள் இறந்து போய்விட்டதாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார். அதனாலேதான் அவருடைய சித்தம் கலங்கிப் போயிருக்கிறது. அந்த ஊமைத்தாய் கடலில் விழுந்து இறந்து போய்விட்டதாகத் தாங்கள் தானே தெரிந்து கொண்டு வந்து என் தந்தையிடத்தில் சொன்னீர்களாம்? பின், அந்த மாதரசி உயிரோடிருக்கும் செய்தி தங்களுக்கு எப்படித் தெரிந்தது?”

“தேவி! இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அது எனக்குத் தெரிந்த விஷயந்தான்.”

“என்ன? என்ன? இருபத்தைந்து வருஷங்களாகத் தெரிந்துமா என் தந்தையிடம் தாங்கள் சொல்லவில்லை? ஐயா! அவள் இறந்துவிட்டாள் என்ற எண்ணத்தினால் என் தந்தை எத்தனை மனோவேதனைக்கு உள்ளானார் என்பதெல்லாம் தங்களுக்குத் தெரியாதா?”

“தெரியும் தாயே! தெரியும்.”

“தெரிந்துமா அவரிடம் உண்மையைச் சொல்லாதிருந்தீர்கள்?”

அநிருத்தர் ஒரு நெடிய பெருமூச்சு விட்டார். அவர் உள்ளத்தில் ஒரு போராட்டம் நிகழ்ந்தது என்பதை அவருடைய முகம் எடுத்துக்காட்டியது பின்னர் அவர் கூறினார்:

“தேவி! இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் நான் ஒரு குற்றம் செய்தேன். முதன்முதலாக அதை இப்போது தங்களிடந்தான் சொல்லுகிறேன். கரையர் மகளைத் தேடி வரும்படி தங்கள் தந்தை என்னை அனுப்பினார் அல்லவா? விரைவாகக் குதிரை மீது செல்லும் ஆட்களுடன் நானும் போனேன். கோடிக்கரை போய்ச் சேர்ந்தோம். அங்கே கொந்தளித்துக் கொண்டிருந்த கடலில் அவள் கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து விழுந்துவிட்டாள் என்பதை அறிந்தோம். அந்தப் பயங்கரக் காட்சியை நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள். தியாக விடங்கரே நடுங்கிய குரலில் நாக்குழறக் கூறினார். அதைத்தான் நானும் தஞ்சாவூருக்கு வந்து என் நண்பரிடம் தெரிவித்தேன்…”

“இதில் தங்கள் குற்றம் என்ன, ஐயா?” என்றாள் குந்தவை.

“குற்றம் இதுதான்; கரையர் மகள் கடலில் விழுந்தாளே தவிர, அதிலே முழுகிச் சாகவில்லை. அந்தக் கொந்தளித்த கடலில் படகு விட்டுக் கொண்டு வந்த வலைஞன் ஒருவன் அவளைக் கண்டெடுத்துப் படகில் ஏற்றிக் காப்பாற்றிவிட்டான். கோடிக்கரைக்கு வெகு தூரத்தில் அப்பால் அவன் வந்து கரையேறினான். திரும்பி வரும் வழியில் நான் அந்தக் கரையேறும் படகைப் பார்த்தேன். அதில் இருந்த பெண் யார் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்தப் படகுக்காரனிடம் நிறையப் பணம் கொடுத்து அவளைப் பத்திரமாக இலங்கைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்படியும் அங்கேயே இருக்கும்படியும் கூறினேன். அவனும் சம்மதித்துச் சென்றான். நான் திரும்பித் தஞ்சைக்கு வந்து கரையரின் மகள் கடலில் விழுந்து மாண்டு விட்டதாகக் கூறினேன். தங்கள் தந்தைக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டுதான் மனமறிந்து அத்தகைய குற்றத்தைச் செய்தேன். அந்தக் குற்றம் இத்தனை காலத்துக்குப் பிறகு இப்படி ஒரு விபரீதமான விளைவை உண்டாக்குமென்று எதிர்பார்க்கவில்லை…”

இளையபிராட்டி குந்தவை அப்போது குறுக்கிட்டு, “ஐயா! தாங்கள் செய்தது குற்றமாயிருந்தாலும் என் தந்தைக்கு நன்மை செய்யும் எண்ணத்துடனேயே செய்தீர்கள். பிறகு, அக்கரையர் மகளைப் பற்றித் தாங்கள் கேள்விப்பட்டு வந்தீர்களா?” என்று கேட்டாள்.

“ஏன்? அடிக்கடி கேள்விப்பட்டுத்தான் வந்தேன். இளவரசுப் பட்டம் சூட்டிக் கொண்டதும், சுந்தர சோழர் மதுரைப் போர் முனைக்குப் போனார். நான் காசி க்ஷேத்திரத்துக்குச் சென்றேன். சில ஆண்டுகள் அங்கேயே தங்கி வேதாகம சாத்திரங்கள் பயின்றுவிட்டுத் திரும்பி வந்தேன். அப்போது பழையாறையில் ஈசான பட்டரின் தந்தை அந்தக் கரையர் மகளோடு அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்தேன். அவர் ஒரு அதிசயமான செய்தியைச் சொன்னார். அந்தக் கரையர் மகள் பெரிய பிராட்டியின் அரண்மனைத் தோட்டத்தில் வந்து சில நாள் தங்கியிருந்ததாகவும், இரட்டைக் குழந்தைகள் பெற்று அங்கேயே போட்டுவிட்டு ஓடிப் போனதாகவும் கூறினார். எப்போதாவது நினைத்துக் கொண்டு குழந்தைகளைப் பார்ப்பதற்காக அவள் இரகசியமாக வருவதுண்டு என்றும் தெரிவித்தார். குழந்தைகள் என்ன ஆயின என்று கேட்டேன், அவர் சொல்ல மறுத்து விட்டார். அது செம்பியன் மாதேவிக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் என்று கூறினார். நானும் அதைப்பற்றி அதிகம் கிளறாமலிருப்பதுதான் நல்லது என்று சும்மா விட்டு விட்டேன் தேவி! அருள்மொழி குழந்தைப் பிராயத்தில் காவேரி நதியில் விழுந்து விட்டபோது, அவனைக் காவேரி அன்னை காப்பாற்றினாள் என்று எல்லாரும் சொல்லுவார்கள் அல்லவா? அப்படிக் காப்பாற்றியவள் உண்மையில் கரையர் மகள்தான் என்று என் மனத்தில் அச்சமயமே தோன்றியது….”

“தங்கள் உள்ளத்தில் தோன்றியது உண்மைதான், ஐயா! அருள்மொழி ஈழ நாட்டில் அந்த மாதரசியைப் பார்த்துவிட்டு வந்து அவ்வாறுதான் சொன்னான். ஐயா! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. ஆயினும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன். அந்தக் கரையர் மகள் இறந்துவிடவில்லை. உயிரோடிருக்கிறாள் என்பதைத் தந்தைக்குத் தெரிவித்துவிட்டால் அவருடைய துன்பம் தீர்ந்து மன அமைதி ஏற்பட்டு விடும்” என்றாள் இளையபிராட்டி.

“ஆம், அம்மா! நானும் அத்தகைய முடிவுக்குத்தான் வந்திருந்தேன். மந்தாகினிதேவி உயிரோடிருக்கும் விவரத்தைச் சக்கரவர்த்தியிடம் தெரிவித்துவிடத் தீர்மானித்து விட்டேன். ஆனால் வெறுமனே சொன்னால் அவர் நம்ப மாட்டார். முன்னே நான் கூறியது பொய், இப்போது சொல்வதுதான் உண்மை என்று எவ்விதம் அவரை நம்பச் செய்வது? அதற்காகவே அந்தத் தேவியை இங்கே அழைத்து வரச் செய்த பிறகு சொல்ல எண்ணினேன். நேரிலே பார்த்தால் நம்பியே தீரவேண்டும் அல்லவா?” என்றார் அநிருத்தர்.

“ஐயா! அந்த மாதிரி திடீரென்று கொண்டு போய் நிறுத்தினால் தந்தைக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டாலும் நேரிடலாம். முன்னால் தெரிவித்து விட்டுத்தான் அவர்களைப் பார்க்கச் செய்யவேணும்!” என்றாள் இளையபிராட்டி.

“ஆம், ஆம் அவ்வாறுதான் செய்ய உத்தேசித்திருக்கிறேன்!” என்றார் முதன்மந்திரி.

“சக்கரவர்த்தி விரும்பினால் ஒரு முறை அருள்மொழிவர்மர் இரகசியமாகத் தஞ்சைக்கு வந்துவிட்டுத் திரும்பிப் போகலாம்!”

“ஆம், ஆம்! மந்தாகினி தேவியும் அருள்மொழியும் உயிரோடிருக்கிறார்கள் என்பதை ஒருமுறை கண்ணால் பார்த்துத் தெரிந்து கொண்டால்தான் சக்கரவர்த்தியின் உள்ளம் அமைதி அடையும்.


55. குற்றச் சாட்டு

சுந்தர சோழ சக்கரவர்த்தியின் உள்ளமும் உடலும் சில நாளாகப் பெரிதும் நைந்து போயிருந்தன. அன்று பகற்பொழுது அவர் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டுதானிருந்தது. பிற்பகலில் சின்ன பழுவேட்டரையர் வந்து அவருடைய சஞ்சலத்தை அதிகப்படுத்தி விட்டார். முக்கியமாக, முதன்மந்திரி அநிருத்தர் மீது அவர் பல குற்றங்களைச் சுமத்தினார். அவர் தஞ்சைக்கு வந்தது முதல் கோட்டைக்குள் ஜனங்கள் வருவது பற்றிய கட்டு திட்டங்கள் எல்லாம் உடைந்து விட்டன என்று கூறினார். முதல்மந்திரியைப் பார்ப்பதற்கு வருகிறோம் என்று வியாஜத்தினால் கண்டவர்கள் எல்லாம் கோட்டைக்குள் நுழைகிறார்கள் என்றும், இதனால் சக்கரவர்த்தியின் பாதுகாப்புக்கே பங்கம் விளையலாம் என்றும் குறிப்பிட்டார். அந்த இரண்டு குற்றங்களையும் கேட்ட சக்கரவர்த்தி தமக்குத் தாமே புன்னகை செய்து கொண்டார். அவற்றை அவர் முக்கியமாகக் கருதவில்லை.

முதன்மந்திரி அநிருத்தர் ஒழுக்கத்தில் மிகச் சிறந்தவர் என்று நாடெல்லாம் பிரசித்தமாயிருக்க, அவருடைய நடவடிக்கை அதற்கு நேர்மாறாயிருக்கிறதென்றும், கோடிக்கரையிலிருந்து யாரோ ஒரு ஸ்திரீயைப் பலவந்தமாகக் கைப்பற்றி அவர் கொண்டு வந்திருக்கிறார் என்றும், பழுவூர் அரண்மனைப் பல்லக்கையும், ஆள்களையும் இந்தக் காரியத்துக்கு உபயோகப்படுத்தியதாகவும், எதற்காக என்பது தெரியாமல் தாம் ஆள்களையும் பல்லக்கையும் அனுப்பிவிட்டதாகவும், ஏதாவது அபகீர்த்தி ஏற்பட்டால் அது பழுவூர்க் குடும்பத்தின் தலையிலே விடியும் என்றும் கூறினார்.

“சக்கரவர்த்தி! இப்படியெல்லாம் இந்த அநிருத்தப்பிரம்மராயர் செய்து வந்தால், தஞ்சைக் கோட்டைப் பாதுகாப்புக்கு நான் எப்படிப் பொறுப்பு வகிக்க முடியும்? என் தமையனாரும் ஊரில் இல்லாதபடியால் இதையெல்லாம் தங்கள் காதில் போட வேண்டியதாயிற்று!”

இவ்வாறு சின்னப் பழுவேட்டரையர் முறையிட்டது சக்கரவர்த்தியின் மனக் குழப்பத்தை அதிகமாக்கிற்று. “ஆகட்டும், இன்று மாலை அநிருத்தர் இங்கே வருகிறார். இதைப்பற்றி எல்லாம் விசாரிக்கிறேன். முக்கியமாக, கோடிக்கரையிலிருந்து ஒரு பெண்ணைப் பலவந்தமாகப் பிடித்து வரச் சொன்ன விஷயம் என் மனத்தைப் புண்ணாக்கியிருக்கிறது. அது உண்மைதானே! தளபதி! சிறிதும் சந்தேகம் இல்லையே?” என்று கேட்டார்.

“சந்தேகமே இல்லை! பல்லக்குத் தூக்கிளும் அவர்களுடன் வந்த வீரர்களும் நேற்று நள்ளிரவில் என்னிடம் வந்து சொன்னார்கள்” என்று தெரிவித்துவிட்டு, காலாந்தக கண்டர் சக்கரவர்த்தியிடம் விடைபெற்றுச் சென்றார்.

அநிருத்தருடைய வரவை அன்று காலையிலிருந்தே சக்கரவர்த்தி எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில்தான் முதன்மந்திரி வந்தார். முதன்மந்திரி சக்கரவர்த்தி படுத்திருந்த இடத்துக்குச் சென்றார். சக்கரவர்த்திக்கும் அவர் அருகில் வீற்றிருந்த வானமாதேவிக்கும் வழக்கமான மாரியாதைகளைச் செலுத்திவிட்டு, புயலினால் சோழ நாடெங்கும் நேர்ந்துள்ள சேதங்களைப் பற்றி விசாரித்துத் தக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்ததினால் சீக்கிரமாக வரமுடியவில்லை என்று சக்கரவர்த்தியிடம் தெரியப்படுத்திக் கொண்டார். அந்த ஏற்பாடுகளைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டதில் சக்கரவர்த்திக்குச் சிறிது திருப்தி உண்டாயிற்று.

“இது என்ன நான் கேள்விப்படுவது? கோடிக்கரையிலிருந்து யாரோ ஒரு ஸ்திரீயைப் பலவந்தமாகப் பிடித்து வந்திருக்கிறீராமே? சற்று முன் கோட்டைத் தளபதி சொன்னார். பிரம்மராயரே! இம்மாதிரி நடவடிக்கையை உம்மிடம் நான் எதிர்பார்க்கவில்லையே! ஒரு வேளை அதற்கு மிக அவசியமான காரணம் ஏதேனும் இருந்திருக்கலாம். அப்படியானால் எனக்குத் தெரிவிக்கலாமல்லவா? அல்லது எல்லாருமே நான் நோயாளியாகி விட்டபடியால் என்னிடம் ஒன்றுமே சொல்ல வேண்டியதில்லை, என்னை எதுவும் கேட்க வேண்டியதுமில்லை என்று வைத்துக் கொண்டு விட்டீர்களா? அருள்மொழிவர்மன் கடலில் முழுகாமல் தப்பிக் கரை சேர்ந்து நாகப்பட்டினம் புத்த விஹாரத்தில் இருப்பதாகக் குந்தவை கூறுகிறாள். அதைப்பற்றிச் சந்தோஷப்படுவதா, வருத்தப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை. கரை ஏறியவன் ஏன் இவ்விடத்துக்கு வரவில்லை? அவன் தப்பிப் பிழைத்து பத்திரமாக இருக்கும் செய்தியை ஏன் இதுவரை எனக்கு ஒருவரும் தெரியப்படுத்தவில்லை? மந்திரி! என்னைச் சுற்றிலும் நான் அறியாமல் என்னவெல்லாமோ நடைபெறுகிறது. என்னுடைய ராஜ்யத்தில் எனக்குத் தெரியாமல் பல காரியங்கள் நிகழ்கின்றன. இப்படிப்பட்ட நிலைமையில் உயிரோடிருப்பதைக் காட்டிலும். .” என்று சக்கரவர்த்தி கூறி வந்தபோது அவர் தொண்டை அடைத்துக் கொண்டது; கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.

குறுக்கே பேசக்கூடாதென்ற மரியாதையினால் இத்தனை நேரம் சும்மாயிருந்த அநிருத்தர் இப்போது குறுக்கிட்டு, “பிரபு! நிறுத்துங்கள். தங்களுடன் எனக்கு நட்பு ஏற்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இவ்வளவு நாளும் தங்களுடைய நலனுக்கு எதிரான காரியம் எதுவும் செய்யவில்லை; இனியும் செய்யமாட்டேன். தங்களுக்கு வீண்தொல்லை கொடுக்க வேண்டாம் என்ற காரணத்துக்காக இரண்டொரு விஷயங்களைத் தங்களிடம் சொல்லாமல் விட்டிருக்கலாம். அது குற்றமாயிருந்தால் மன்னித்துவிடுங்கள். இப்போது தாங்கள் கேட்டவற்றுக்கெல்லாம் மறுமொழி சொல்கிறேன். கருணைகூர்ந்து அமைதியாயிருக்க வேண்டும்” என்று இரக்கமாகக் கேட்டுக் கொண்டார்.

“முதன்மந்திரி! இந்த ஜன்மத்தில் எனக்கு இனி மன அமைதி இல்லை. அடுத்த பிறவியிலாவது மன அமைதி கிட்டுமா என்று தெரியாது. என் அருமை மக்களும் என் ஆருயிர் நண்பராகிய முதன்மந்திரியும் எனக்கு எதிராகச் சதி செய்யும் போது…”

“பிரபு, தங்களுக்கு எதிராகச் சதி செய்பவர்கள் யார் என்பதைச் சீக்கிரத்தில் அறிந்து கொள்வீர்கள். அந்தப் பாதகத்துக்கு நான் உடந்தைப்பட்டவன் அல்ல. இந்த முதன்மந்திரி பதவியை இப்போது நான் பெயருக்காகவே வைத்துக் கொண்டிருக்கிறேன். பெரிய பழுவேட்டரையரிடமே இந்தப் பதவியைக் கொடுத்து விடுகிறேன் என்று முன்னமே பல தடவை சொல்லியிருக்கிறேன். இப்போதும் அதற்குச் சித்தமாயிருக்கிறேன். என் பேரில் சிறிதளவேனும் தங்களுக்கு அதிருப்தி இருந்தால்…”

“ஆம் முதன்மந்திரி, ஆம்! எந்த நேரத்திலும் என்னைக் கைவிட்டுப் போய்விட நீங்கள் எல்லோருமே சித்தமாயிருக்கிறீர்கள். என் மூச்சுப் போகும் வரையில் என்னுடன் இருந்து என்னுடன் சாகப் போகிறவள் இந்த மலையமான் மகள் ஒருத்திதான். நான் செய்திருக்கும் எத்தனையோ பாவங்களுக்கு மத்தியில் ஏதோ புண்ணியமும் செய்திருக்கிறேன். ஆகையினால் தான் இவளை என் வாழ்க்கைத் துணைவியாகப் பெற்றேன்!” என்றார் சக்கரவர்த்தி.

சக்கரவர்த்தி, “முதன்மந்திரி!… கோடிக்கரையிலிருந்து நீர் பலவந்தமாகப் பிடித்து வரச் சொன்ன பெண்….” என்றார்.

“பழுவேட்டரையர் பல்லக்கில் வந்த பெண் அடுத்த அறையில் காத்திருக்கிறாள். இதோ அழைக்கிறேன்” என்று அநிருத்தர் கூறிக் கையைத் தட்டியதும், பூங்குழலியும் ஆழ்வார்க்கடியானும் உள்ளே வந்தார்கள்.  அவர்களுடன் குந்தவை, “தந்தையே! பெரியம்மா சாகவே இல்லை! முதன்மந்திரியைக் கேளுங்கள்! எல்லாம் சொல்லுவார்!” என்று கூறிவிட்டு, மந்தாகினியின் தோள் வரையில் சேர்த்துத் தன் கையினால் தழுவிப் பிணைத்துக் கொண்டு சக்கரவர்த்தி படுத்திருந்த இடத்தை நோக்கி வந்தாள்.


56.”சோழர் குல தெய்வம்”

“மலையமான் மகளே! இவள் யார் என்பது உனக்குத் தெரியுமா?” என்று சுந்தர சோழர் கேட்டார்.

“தெரியும், சுவாமி! இவர் என் குலதெய்வம் சோழர் குலத்துக்கே தெய்வம். என் அருமை மகன் காவேரியில் மூழ்கிப் போய் விடாமல் காப்பாற்றிக் கொடுத்த தெய்வம் அல்லவா? அருள்மொழியைக் காப்பாற்றியது மட்டும் அல்ல, சோழ நாட்டுக்குத் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்த தெய்வமும் இவர்தானே! தாங்கள் பூதத் தீவில் காட்டுக் கரடிக்கு இரையாகாமல் காப்பாற்றிய தெய்வம் அல்லவா?”

“கடவுளே! அதுகூட உனக்குத் தெரியுமா? இவள் இத்தனை நாள் உயிரோடு இருந்து வருகிறாள் என்பதும் தெரியுமா?”

“சில காலமாகத் தெரியும். தெரிந்தது முதல் இத்தேவியை ஈழ நாட்டிலிருந்து அழைத்து வரும்படி முதன்மந்திரியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்…”

“அநிருத்தரே! இது என்ன மகாராணி சொல்லுவது? இவள் உண்மையிலேயே அந்தக் கரையர் மகள்தானா? இவள் உயிரோடு தானிருக்கிறாளா? இவள் இறந்துவிட்டாள் என்பது பொய்யா?” என்றார் சக்கரவர்த்தி சுந்தர சோழர்.

“பிரபு! இவர் கரையர் மகள் என்பது உண்மைதான். இவர் இறக்கவில்லை என்பதும் உண்மைதான். சக்கரவர்த்தி! நான் பெரிய குற்றவாளி. நான் செய்த குற்றத்துக்கு மன்னிப்பே இல்லை ஆனாலும் தங்கள் கருணையினால் அடியேனை மன்னிக்க வேண்டும்!”

“ஆகா! மன்னிக்க வேண்டுமாம்! சக்கரவர்த்தி என்றும், மன்னர் மன்னன் என்றும் கூறப்பட்ட ஒருவன் என்னைப் போல் ஏமாற்றப்பட்டது இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து நேர்ந்திராது. எனக்குத் தெரியாமல் ஏன் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்? ஏன் முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாது? முதன்மந்திரி! எனக்கு எல்லாம் விளங்குகிறது. நீங்கள் எல்லாருமாகச் சேர்ந்து எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிறீர்கள்!”

“நாங்கள் சூழ்ச்சி செய்தது என்னமோ உண்மைதான். ஆனால் தங்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யவில்லை. எப்படியாவது கரையர் மகளைத் தங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்க வேண்டுமென்று எண்ணினோம். அவள் கடலில் விழுந்து இறந்தது பற்றித் தங்கள் மனம் மிக்க வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மகாராணியின் மூலமாக அறிந்து நான் இந்த முடிவுக்கு வந்தேன். மகாராணியும் அவ்விதம் ஆக்ஞாபித்தார்கள். அவர் உயிரோடிருப்பதாகச் சொன்னால், தாங்கள் நம்புவது சிரமமாயிருக்கும். ஆகையால் எப்படியும் அவரை கொண்டு வந்து சேர்த்த பிற்பாடு தங்களிடம் சொல்ல எண்ணினேன். சக்கரவர்த்தி! அக்குற்றத்துக்காக மன்னிக்கப் பிரார்த்திக்கிறேன்.”

“மன்னிப்பதற்கு இது ஒரு குற்றந்தானா? எவ்வளவோ இருக்கிறது! சொல்லுங்கள்! உம்முடைய முகத்திலேயே எழுதியிருக்கிறது. அவள் கடலில் விழுந்து இறந்துவிட்டதாக வந்து சொன்னீரே? அதுவே பொய்! இருபத்தைந்து வருஷங்களாக அந்தப் பொய்யை நீர் சாதித்து வந்தீர். நானும் நம்பி வந்தேன் அநிருத்தரே! உண்மையிலேயே உமது குற்றம் மிகப் பயங்கரமானது!…”

“அதற்கு நான் மட்டும் பொறுப்பாளி அல்ல, சக்கரவர்த்தி! கரையர் குல மகளும் பொறுப்பாளிதான்! அவர் கடலில் விழுந்தது என்னமோ உண்மை. பிறகு புனர் ஜன்மம் அடைந்தார். தங்களிடம் அவர் உயிரோடிருப்பதைச் சொல்ல வேண்டாமென்று வாக்குறுதி வாங்கிக் கொண்டார்; வாக்குறுதியைக் கொடுக்காவிடில் மறுபடியும் உயிரை விட்டு விடுவேன் என்று சொன்னார். இவையெல்லாம் உண்மையா என்பதைத் தாங்களே அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.”

“கேட்க வேண்டியதே இல்லை! அவ்விதமே இருக்கும்” என்றார் சுந்தர சோழர்.

“நான் செய்த குற்றத்துக்கு மன்னிப்பு இல்லைதான்; மன்னிப்பு நான் கோரவும் இல்லை. ஆனாலும் பல வருஷ காலமாக என் மனத்திலிருந்த பாரம் இன்றைக்கு நீங்கிவிட்டது.”

“முதன்மந்திரி! நாகையிலிருந்து இளவரசனை அழைத்துவர உடனே ஏற்பாடு செய்யுங்கள்!”

“அப்படியே செய்கிறேன் ஐயா! யானைப் படைகளும் குதிரைப் படைகளும் அனுப்பிப் பகிரங்கமாக இளவரசரை அழைத்து வரச் செய்யலாமா? அல்லது…”

“மாறு வேடம் பூணச் செய்து இரகசியமாக அழைத்து வரலாமா, என்றுதானே கேட்கிறீர்? பகிரங்கமாக இளவரசன் வந்தால் சோழ நாட்டில் பெரும் குழப்பம் ஏற்படும் என்று எண்ணுகிறீர்கள் அல்லவா?”

“நான் எண்ணுவது மட்டும் அல்ல, பிரபு! நிச்சயமாக அறிந்திருக்கிறேன்.”

“சுவாமி! சோழர் குலத்துக்கு அபாயம் நெருங்கிக் கொண்டுதானிருக்கிறது. தங்களுடைய சம்மதம் பெறாத சில காரியங்களும் செய்கிறார்கள். சோழ ராஜ்யத்தை இரண்டாகப் பங்கு போட்டுக் காவேரிக்குத் தெற்கேயுள்ளதை மதுராந்தகத் தேவருக்கும் வடக்கே உள்ள பகுதியைக் கரிகாலருக்கும் கொடுத்து விடுவதென்று யோசனை செய்து வருகிறார்கள். சம்புவரையர் மாளிகையில் இன்றைய தினம் அந்தப் பேச்சு நடந்து வருகிறது. சக்கரவர்த்தி! நூறு வருஷ காலமாகத் தங்கள் முன்னோர்கள் பாடுபட்டு விஸ்தரித்த ராஜ்யத்தை விஜயாலய சோழரும் ஆதித்த சோழரும் மகாபராந்தக சக்கரவர்த்தியும் ஈழம் முதல் கோதாவரி வரையில் நிலைநாட்டிய சோழ மகாராஜ்யத்தை இரண்டாகப் பிளந்து பங்கு போடுவது தங்களுக்குச் சம்மதமா?”

“முதன்மந்திரி! ஒரு நாளும் அதற்கு நான் சம்மதம் கொடேன். இந்தச் சோழ சாம்ராஜ்யத்தில் ஓர் அங்குல விஸ்தீரணம் கூடக் குறையாமல் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டி வைப்பேன். அதை என் மக்கள் எதிர்த்தாலும் சரி, நான் கேட்கப் போவதில்லை.”

“சக்கரவர்த்தி! தங்கள் புதல்வர்கள் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் மதுராந்தகருக்குப் பட்டம் கட்டுவதற்குத் தடை இவையெல்லாம் அல்ல. அந்தத் தடை இன்னும் பெரிய இடத்திலிருந்து வருகிறது. தாங்களும் நானும் இந்தச் சோழ நாட்டு மக்கள் அனைவரும் போற்றி வணங்கும் தெய்வப் பெண்மணியிடமிருந்து அந்தத் தடை வருகிறது. சில நாளைக்கு முன்பு கூட அவரிடம் பேசிப் பார்த்தேன்…”

“செம்பியன் மாதேவியை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அந்த மாதரசியின் மனத்தையும் யாரோ கெடுத்திருக்கிறார்கள். நான் என் புதல்வர்களுக்குப் பட்டம் கட்ட ஆசைப்படுவதாக பெரிய பிராட்டி கருதி வருகிறார். முதன்மந்திரி! அவரை உடனே இங்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். நான் அவருடைய மனதை மாற்றி விடுகிறேன்..”

“சக்கரவர்த்தி! அது அவ்வளவு சுலபம் அல்ல. மகான் கண்டராதித்தர் தமது தர்மபத்தினிக்கு அவ்விதம் கட்டளை இட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய மரண தறுவாயில் நான் அவர் அருகில் இருந்தேன். ‘மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டக் கூடாது என்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது; அது என் துணைவிக்குத் தெரியும்’ என்று தங்கள் பெரிய பாட்டனார் சொன்னார்…”

“முதன்மந்திரி! அப்படிப்பட்ட தடை உண்மையில் இருக்கிறதா? அது இன்னதென்று உங்களுக்குத் தெரியுமா?”

“தெரிந்திருந்தால், தாங்கள் கேட்கும் வரையில் காத்துக் கொண்டிருப்பேனா? பெரிய பிராட்டியை அழைத்து வரச் செய்து தாங்கள்தான் அதைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்…”

“ஆமாம்; அந்த ஒரு விஷயந்தான் எனக்கும் தொல்லை கொடுத்து வருகிறது. பெரிய பிராட்டியை உடனே அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். எப்பேர்ப்பட்ட தடையாயிருந்தாலும் அதை நான் நிவர்த்தி செய்கிறேன்.”

சுந்தர சோழர் முதன்மந்திரியைப் பார்த்து, “அநிருத்தரே! செம்பியன் மாதேவி தங்களிடம் மிக்க நம்பிக்கையும் மரியாதையும் உள்ளவர். ஆகையால் தாங்களே நேரில் சென்று பெரிய பிராட்டியை எப்படியாவது கையோடு அழைத்து வாருங்கள்! போகும்போது புயலினால் கஷ்டத்திற்குள்ளான மக்களைப் பற்றியும் கவனியுங்கள்” என்றார் சக்கரவர்த்தி.

“இல்லை, பிரபு! அதை நான் மறக்கவே இல்லை. எல்லாக் காரியங்களும் சரிவர நடைபெறும்; தாங்கள் நிம்மதியாயிருக்கலாம்” என்று சொல்லிவிட்டு முதன்மந்திரி விடை பெற்றுச் சென்றார்.

அன்றிரவு சுந்தர சோழர் உண்மையிலேயே இத்தனை காலமும் அனுபவியாத நிம்மதியை அடைந்திருந்தார். கரையர் குலத்து மந்தாகினி இறக்கவில்லை என்னும் செய்தி மெய்யாகவே அவருடைய நெஞ்சில் வெகு காலமாகக் குடிகொண்டிருந்த ஒரு பெரும் பாரத்தை அகற்றிவிட்டது. அருள்மொழிவர்மன் நாகப்பட்டினத்தில் இருக்கிறான் என்ற செய்தியும் அவருக்கு ஆறுதல் அளித்திருந்தது. சூடாமணி விஹாரம் மிகப் பலமான கட்டிடமாதலால் அதில் உள்ளவர்க்கு அபாயம் ஒன்றும் நேருவதற்கில்லை என்ற தைரியமும் அவருக்கு இருந்தது.

அன்றிரவு சுந்தர சோழ சக்கரவர்த்தி நிம்மதியாக உறங்கினார். கனவுகள் கூட அதிகம் காணவில்லை. அவருக்குப் பக்கத்து அறையிலே படுத்துறங்கிய அரண்மனைப் பெண்டிர்களும் நிம்மதியாகவே தூங்கினார்கள். அவர்களிலே நிம்மதியில்லாமலும் நன்றாகத் தூங்காமலும் இருந்தவள் மந்தாகினி ஒருத்திதான். இன்று நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அவளுடைய மனதில் பெருங் கிளர்ச்சியை உண்டுபண்ணியிருந்தன. தூங்கா விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

நள்ளிரவு கழிந்தது; பின்னிரவு தொடங்கியது. மூன்றாவது ஜாமம் ஏறக்குறைய முடியும் நேரம் ஆகிவிட்டது. அப்போது மேல் மாடத்தின் சாளரம் ஒன்றில் ஒரு தோற்றம் அவளுக்குத் தென்பட்டது. அகோர பயங்கர முகம் ஒன்று அந்தச் சாளரத்தை ஒட்டினாற் போலிருந்த அந்த அறைக்குள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டாள். தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்து நின்றாள். மறுபடியும் அந்தச் சாளரத்தை உற்றுப் பார்த்தாள். அங்கே அந்த முகத்தைக் காணவில்லை. பக்கத்து அறை வாசற்படி வரையில் மெள்ள நடந்து சென்று எட்டிப் பார்த்தாள். அங்கே சக்கரவர்த்தி நிம்மதியாக உறங்குவதைக் கண்டாள். அந்த அறையில் மேல் மாடச் சாளரங்களையும் உற்றுப் பார்த்தாள் ஒன்றும் தெரியவில்லை.


57. கடம்பூரில் கலக்கம்

ஆதித்த கரிகாலன் கடம்பூர் மாளிகைக்கு வந்ததிலிருந்து அம்மாளிகையில் நிரந்தரமாக வசித்தவர்களும் விருந்தினராக வந்தவர்களும் முள்ளின் மேல் நிற்பவர்கள் போல காலங்கழிக்க வேண்டியிருந்தது. இளவரசரின் நாவிலிருந்து எந்த நிமிஷத்தில் எந்தவிதமான அஸ்திரம் புறப்படும் என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை. ஆகையால் எல்லாரும் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

சோழ சிம்மாசனத்தில் மதுராந்தகனை ஏற்றி வைப்பதற்குச் செய்யப்படும் சதியாலோசனை பற்றிக் கரிகாலன் அடிக்கடி ஜாடைமாடையாகக் குறிப்பிட்டு மற்றவர்களைத் துடிதுடிக்கச் செய்து வந்தான். பழுவேட்டரையரால் இதைப் பொறுக்க முடியவில்லை. சிற்றரசர்களின் அபிப்பிராயத்தைக் கரிகாலனிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டியதுதான் என்று சம்புவரையரிடம் வற்புறுத்தினார். சம்புவரையரோ, “கொஞ்சம் பொறுங்கள்; எப்படியும் நமது விருந்தாளியாக வந்திருக்கிறான்; வெறும் முரடனாகவும் இருக்கிறான். ஒன்று நினைக்க வேறொன்றாக முடிந்தால் என்ன செய்கிறது? நல்ல சமயம் பார்த்துச் சொல்வோம்” என்று தள்ளிப் போட்டு கொண்டேயிருந்தார்.

எப்படி அந்தப் பேச்சை ஆரம்பிப்பது என்ற தர்மசங்கடத்தை அவர்களுக்கு வைக்காமல் ஆதித்த கரிகாலனே ஒரு நாள் எல்லாரும் சேர்ந்திருந்த சமயத்தில் பட்டவர்த்தனமாக அதைப் பற்றிக் கேட்டு விட்டான்.

“பழுவூர்ப் பாட்டனிடமும் கடம்பூர் மாமனிடமும் ஒரு முக்கியமான விஷயத்தில் யோசனை கேட்பதற்காகவே நான் இங்கு வந்தேன். அதை இப்போது கேட்டுவிடுகிறேன். மூன்று வருஷங்களுக்கு முன் என் தகப்பனார் என்னைச் சோழ ராஜ்யத்தின் பட்டத்து இளவரசனாக்கிப் பகிரங்கமாக முடிசூட்டினார். அதற்கு நீங்கள் எல்லாரும் சம்மதம் கொடுத்தீர்கள். இப்போது சக்கரவர்த்தி தம் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மதுராந்தகனைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து முடிசூட்ட வேண்டும் என்று விரும்புகிறாராம். அதற்காகவே தஞ்சாவூருக்கு வரும்படியாக எனக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு அனுப்பிக் கொண்டிருக்கிறார். நானும் போகாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறேன். எதற்காகத் தஞ்சாவூர் போகவேண்டும்? போய் என் தந்தையின் வார்த்தையை நேருக்கு நேர் ஏன் புறக்கணிக்க வேண்டும்? அதைவிடப் போகாமலிருந்துவிடுவதே நல்லது அல்லவா? பழுவூர்ப் பாட்டா! கடம்பூர் மாமா! நீங்கள் பெரியவர்கள். எல்லா நியாயமும் தெரிந்தவர்கள் நீங்களே சொல்லுங்கள். இராஜ்யத்தை மதுராந்தனுக்கு விட்டுக் கொடுத்துவிடும்படி என் தந்தை இத்தனை காலத்துக்குப் பிறகு என்னைக் கேட்பது நியாயமாகுமா? அதை நான் மறுதளித்தல் குற்றமாகுமா?” என்று ஆதித்த கரிகாலன் திட்டவட்டமாகக் கேட்டதும், எல்லாருமே திகைத்துப் போனார்கள்.

பழுவேட்டரையர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “சக்கரவர்த்தியின் கட்டளை எதுவாயிருந்தாலும் அதை அனுசரித்து நடக்க நாம் எல்லாரும் கடமைப்பட்டவர்கள். ஆனால் நியாயம் இன்னது என்பதைச் சொல்லும் பாத்தியதை நமக்கு உண்டு. சக்கரவர்த்தி இந்த விஷயமாகச் சொல்வதில் நியாயமே இல்லையென்று சொல்ல முடியாது. இந்தச் சோழ ராஜ்யத்தின் மீது மதுராந்தகத் தேவருக்கு உரிமையே கிடையாது என்றும் சொல்வதற்கில்லை. இளவரசே! தாங்கள் கேட்கிறபடியினால் எங்கள் மனதை விட்டுச் சொல்கிறோம். முடிவு தங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. இந்த விவாதத்தை வளரும்படி விடுவது இராஜ்யத்துக்கு மிக்க அபாயகரமானது என்று நாங்கள் கருதுகிறோம். ஆகையால், ஏதேனும் ஒரு சமரச முடிவுக்கு வருவது நல்லது. சோழ ராஜ்யம் இப்போது முன்னைப்போல் இரண்டு வெள்ளாறுகளுக்கு மத்தியில் குறுகிக் கிடக்கவில்லை. குமரி முனையிலிருந்து கிருஷ்ணை நதி வரையில் பரவிப் படர்ந்திருக்கிறது. இதை இரண்டாகப் பிரித்தாலும் ஒவ்வொன்றும் பெரிய இராஜ்யமாக இருக்கும். அவ்விதம் கொள்ளிடம் நதிக்குத் தெற்கேயுள்ள ராஜ்யத்தை மதுராந்தகத் தேவருக்கும் வடக்கேயுள்ள பகுதியைத் தங்களுக்கும் உரியதென்று பிரித்துக் கொடுப்பது நியாயமாயிருக்கும் இது எங்கள் முடிவான கருத்து. தாங்கள் இதை ஒப்புக் கொண்டால் மேலே செய்ய வேண்டியதைச் செய்யலாம். சக்கரவர்த்தியை இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கச் செய்யும் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன்!” என்றார்.

ஆதித்த கரிகாலன் அப்போது கலகலவென்று சிரித்தது பழுவேட்டரையருடைய வயிற்றில் அனலை மூட்டியது. “பாட்டா! சோழ ராஜ்யத்தைப் பிரிப்பதற்கு எனக்குச் சம்மதமில்லை. என் குலத்து முன்னோர்களும், நீங்களும் உங்கள் முன்னோர்களும் ஐந்து தலைமுறையாகப் பாடுபட்டு எத்தனையோ வீராதி வீரர்களின் உயிர்களைப் பலி கொடுத்துச் சோழ ராஜ்யம் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறது. இதை இரண்டாகப் பிரித்துச் சிறிய பகுதிகளாக்குவது பாவமாகும். வீர சொர்க்கத்திலுள்ள இராஜாதித்தர் முதலிய நம் முன்னோர்கள் நம்மைச் சபிப்பதற்கு ஏதுவாகும். ஆகையால் அந்த யோசனையை விட்டுவிடுங்கள். இந்தப் பெரிய சோழ ராஜ்யம் முழுவதையும் மதுராந்தகனுக்கே விட்டுக் கொடுத்து விட நான் ஆயத்தமாயிருக்கிறேன்; அதற்கு நியாயமும் உண்டு. என் பெரிய பாட்டனாரின் மகன் மதுராந்தகன். ஆகையால் என் தந்தைக்குப் பதிலாகவே மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டியிருக்க வேண்டும். பராந்தகச் சக்கரவர்த்தியின் ஏற்பாட்டினால் என் தந்தை முடிசூட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்தத் தவறு அவரோடு போகட்டும். ‘தந்தைக்குப் பிறகு மகன்’ என்ற நியதிப்படி எனக்கு இந்த ராஜ்யத்தின் பேரில் பூரண உரிமை இருந்தாலும் அதை விட்டுக் கொடுத்து விடுகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. வடதிசையின் மீது படை எடுத்துச் செல்ல மூன்று லட்சம் போர் வீரர் கொண்ட சைன்யம் எனக்கு வேண்டும். சைன்யத்துக்கு வேண்டிய தளவாட சாமான்களும் சாமக்கிரியைகளும் ஒரு வருஷத்துக்கு உணவுப் பொருள்களும் திரட்டித்தர வேண்டும். மாகடலில் செல்லக் கூடிய முந்நூறு பெரிய மரக்கலங்களும் வேண்டும். பார்த்திபேந்திரனைக் கப்பல் படைத் தலைவனாக்கிக் கடலோரமாக வரச் செய்துவிட்டு நான் தரை மார்க்கமாக வட நாட்டின் மீது படை எடுத்துச் செல்வேன். கங்கை நதியின் முகத்துவாரத்தில் நானும் பார்த்திபேந்திரனும் சந்திப்போம் பிறகு மேலும் வடக்கே போவோம். என் குலத்து முன்னோன், என் பெயர் கொண்ட கரிகால் வளவன், இமயமலை மீது புலிக் கொடியை நாட்டினான் என்று கவிஞர்கள் பாடி வைத்திருக்கிறார்கள். என் முன்னோர் சாதித்ததை நானும் இப்போது மறுபடியும் சாதிப்பேன். என்னுடைய வாள் வலிகொண்டும், எனக்குத் துணை வரும் வீரர்களின் தோள் வலிக்கொண்டும், கிருஷ்ணை நதிக்கு வடக்கே நானாகக் கைப்பற்றும் நாடுகளுக்குச் சக்கரவர்த்தியாவேன். அன்றி, போரில் மடிந்தால், சோழ குலத்தின் வீரப் புகழை நிலை நாட்டினோம் என்ற மகிழ்ச்சியுடன் வீர சொர்க்கம் அடைவேன். பழுவூர்ப் பாட்டா! கடம்பூர் மாமா! என்ன சொல்கிறீர்கள்? இந்த நிபந்தனையை நிறைவேற்றித் தர நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா?”

இவ்விதம் கம்பீரமாக கேட்டுவிட்டுக் கரிகாலன் நிறுத்தினான். கிழவர்கள் இருவரும் திகைத்துப் போனார்கள். பழுவேட்டரையர், தடுமாற்றத்துடன், “இளவரசே! தங்களுடைய நிபந்தனையை ஒப்புக் கொள்ள நாங்கள் யார்? எங்களுக்கு என்ன உரிமை? சக்கரவர்த்தியை அல்லவா கேட்க வேண்டும்!” என்றார்.

கரிகாலன் கொதித்து எழுந்து, இடி முழக்கக் குரலில் கர்ஜனை செய்தான்: “பாட்டா!சக்கரவர்த்தியின் பெயரைச் சொல்லி யாரை ஏமாற்றலாம் என்று பார்க்கிறீர்கள்? என்னை ஏமாற்ற முடியாது! என் தந்தையை நீங்கள் அரண்மனையில் சிறைப்படுத்தி நீங்கள் ஆட்டி வைத்தபடி ஆடும் பொம்மையாக வைத்து கொண்டிருக்கிறீர்கள்! அது எனக்குத் தெரியாது என்றா எண்ணினீர்கள்? சின்னப் பழுவேட்டரையர் அனுமதியின்றி யாராவது என் தந்தையைப் பார்க்க முடியுமா? என் தம்பியை ஈழத்திலிருந்து சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்கு என் தந்தை கட்டளை போட்டது சக்கரவர்த்தியின் சொந்த விருப்பத்தினாலா? உங்கள் கட்டாயத்தினாலா? தேச மக்களின் கண்ணுக்குக் கண்ணான அருமை மகனை, வீராதி வீரனை, சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி எந்தத் தகப்பனாவது இஷ்டப்பட்டுக் கட்டளையிடுவானா? ஆனால் ‘சக்கரவர்த்தியைக் கேட்டுச் சொல்ல வேண்டும்’ என்று மட்டும் இனி என்னிடம் சொல்லாதீர்கள். அப்புறம் அந்த அன்பில் பிரம்மராயனைக் கேட்டுச் சொல்ல வேண்டும் என்று கூடச் சொல்வீர்கள். சக்கரவர்த்தியும் முதன்மந்திரியும் ஏதோ அந்தப் பட்டங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் விருப்பத்தை மீறி அவர்கள் எதுவும் செய்ய முடியாது. என் தந்தை – சக்கரவர்த்தியின் பேரில் தாங்கள் பாரத்தைச் சுமத்த வேண்டாம். தாங்கள் சம்மதித்தால் என் தந்தையும் சம்மதித்தாற் போலத்தான். பொக்கிஷம் தங்கள் கையில் இருக்கிறது. வடபுலத்துக்குப் படையெடுத்துப் போகிறேன் என்றால், சோழ நாட்டிலிருந்து மூன்று லட்சம் என்ன, முப்பது லட்சம் வீரர்கள் போட்டியிட்டுக் கொண்டு வருவார்கள். முந்நூறு கப்பல்களைச் சேகரித்துக் கொடுப்பதிலும் கஷ்டம் ஒன்றுமில்லை. தாங்கள் சம்மதிக்க வேண்டும்! மதுராந்தகத் தேவனும் சம்மதிக்க வேண்டும்! அவ்வளவுதான்! என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கரிகாலன் நிறுத்தினான். திணறித் திண்டாடித் திக்கு முக்காடிப் போன பழுவேட்டரையர் தொண்டையை மறுபடியும் கனைத்துக் கொண்டு கூறினார்: “கோமகனே! தங்கள் அதிசயமான விருப்பத்துக்கு நான் சம்மதித்தாலும், மதுராந்தகத் தேவரின் சம்மதம் எப்படியும் வேண்டும் அல்லவா? சக்கரவர்த்தியிடம் விடை பெற்றுக் கொள்ளாமல் தாங்கள் திக்விஜயத்துக்குப் புறப்பட முடியுமா? ஆகையால் எல்லோருமாகத் தஞ்சாவூருக்குப் போவோம்…”

“அது மட்டும் முடியாது; பாட்டா, தஞ்சாவூருக்குப் போன பிறகு என் தந்தை வேறு விதமாகக் கட்டளையிட்டால் என்னால் அதை மீற முடியாமற் போய்விடும். அப்புறம் அங்கே என் அன்னை, மலையமான் மகள், இருக்கிறாள். என் சகோதரி இளைய பிராட்டி இருக்கிறாள். அவர்களுக்கு நான் முடிதுறந்து தேசாந்தரம் செல்வது சம்மதமாயிராது. அவர்கள் பேச்சை மீறுவதும் கஷ்டமாயிருக்கும். பாட்டா! இந்த விஷயம் இந்தக் கடம்பூர் மாளிகையில்தான் முடிவாக வேண்டும். தாங்கள் தஞ்சைக்குப் போய் மதுராந்தகனை இங்கே அழைத்து வாருங்கள். நமக்குள் பேசி முடிவு செய்த பிறகு தந்தையிடம் தெரிவிக்கலாம். படையெடுப்புக்கு எல்லாம் ஆயத்தமான பிறகு நான் தஞ்சைக்கு வந்து என் பெற்றோர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்புகிறேன். அல்லது மதுராந்தகனுக்கு இப்போதே பட்டம் கட்டிவிட்டு என் பெற்றோர்கள் காஞ்சிக்கு வரட்டும். அங்கே நான் கட்டியிருக்கும் பொன் மாளிகையில் அவர்களை இருக்கச் செய்துவிட்டு நான் புறப்படுகிறேன்” என்றான்.

பழுவேட்டரையர் சம்புவரையரைப் பார்த்தார். சம்புவரையரோ கூரை மேட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடமிருந்து உதவி ஒன்றும் கிடைப்பதற்கில்லையென்று கண்டு, பழுவேட்டரையர் “கோமகனே! தங்களுடைய கட்டளைக்கு மாறாக நான் என்ன சொல்ல முடியும்?” என்றார்.

“கட்டளை என்று சொல்லாதீர்கள், பாட்டா! சோழ சாம்ராஜ்யத்தின் சேவையில் தலை நரைத்துப் போன தங்களுக்கு இந்தச் சிறுவனா கட்டளையிடுவது? என்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பதாகச் சொல்லுங்கள்!” என்றான் ஆதித்த கரிகாலன்.

“ஆகட்டும்” என்று சொல்லிப் பழுவேட்டரையர் கனைத்துக் கொண்டார்.

“மிக்க வந்தனம், பாட்டா! அப்படியானால் சீக்கிரமே புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்! மதுராந்தகனைப் பகிரங்கமாகவே யானை மீது ஏற்றி வைத்து இவ்விடத்துக்கு அழைத்து வாருங்கள். அல்லது பொன் ரதத்தில் ஏற்றி அழைத்து வாருங்கள். இளைய பாட்டியின் மூடு பல்லக்கு மட்டும் இந்தத் தடவை வேண்டாம்!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் கரிகாலன். பின்னர் கந்தமாறன் முதலியவர்களைப் பார்த்து, “கந்தமாறா! உன்பாடு யோகந்தான்! உன் வீட்டுக்கு மேலும் விருந்தாளிகள் வரப் போகிறார்கள். சுந்தர சோழருக்குப் பிறகு சோழ நாட்டுக்குச் சக்கரவர்த்தியாகப் போகிற மதுராந்தகர் வரப் போகிறார். அவருக்குப் பட்ட மகிஷியாகப் போகும் சின்னப் பழுவேட்டரையரின் மகளையும் உடன் அழைத்து வந்தாலும் வருவார். கடம்பூர் மாளிகை ஒரே கோலாகலமாகத் தானிருக்கும். பழுவூர்ப் பாட்டனார் தஞ்சைக்குப் புறப்படட்டும். நாம் வேட்டைக்குப் புறப்படலாம். வாருங்கள்! மணிமேகலையையும் வேட்டைக்கு அழைத்துப் போகலாமா? அவள் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாயிருக்கிறது!” என்றான் ஆதித்த கரிகாலன்.

“எனக்கு ஆட்சேபமில்லை; மணிமேகலையைக் கேட்டுப் பார்க்கலாம்” என்றார் சம்புவரையர்.

கரிகாலன் கடம்பூருக்கு வந்த நாளிலிருந்து பெரிய சம்புவரையரின் உள்ளம் சிறிது சிறிதாக மாறுதல் அடையலாயிற்று. அவருடைய செல்வப் புதல்வியாகிய மணிமேகலையே அவருடைய மனமாறுதலுக்குக் காரணமாயிருந்தாள். ஆதித்த கரிகாலனுடைய உள்ளத்தை மணிமேகலை கவர்ந்து விட்டாள் என்பதற்குப் பல அறிகுறிகள் தென்பட்டன. பெண்களைக் கண்ணெடுத்தும் பாராதவன் என்றும், பிரம்மச்சாரியாகவே காலத்தைக் கழிக்கப் போகிறான் என்றும் கரிகாலனைப் பற்றி பேசப்பட்டு வந்தது. அத்தகையவன் கடம்பூர் மாளிகைக்கு வந்ததிலிருந்து அடிக்கடி பெண்கள் இருக்கும் இடம் போவதும் அவர்களுடன் உல்லாசமாகப் பேசுவதுமாக இருந்தான். முக்கியமாக அவன் மணிமேகலையின் ‘சூடிகை’யைப் பற்றி அடிக்கடி பாராட்டிப் பேசினான். கரிகாலன் வந்ததிலிருந்து மணிமேகலையும் ஒரே உற்சாகமாக இருந்தாள். அதற்குக் காரணம் அவளும் கரிகாலனிடம் பற்றுக் கொண்டதுதான் என்று பெரிய சம்புவரையர் கருதினார். அவர்கள் இருவருடைய குதூகலத்தையும் பார்த்துப் பார்த்துச் சம்புவரையரும் உற்சாகம் கொண்டார். கரிகாலன் மணிமேகலையை மணந்து கொண்டால் தம் செல்வத் திருமகள் சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினியாக விளங்குவாள்! அவளுக்குப் பிறக்கும் குழந்தையும் தஞ்சை சிங்காதனத்துக்கு உரியவனாவான்! இன்று திருக்கோவலூர் மலையமான் அடைந்திருக்கும் பெருமிதத்தை அப்போது தாமும் அடையலாம். அதற்கெல்லாம் தாமே எதற்காகத் தடையாக இருக்கவேண்டும்? தமது அருமைக் குமாரியின் ஏற்றத்துக்குத் தாமே ஏன் இடையூறு செய்ய வேண்டும்?

மதுராந்தகனுக்குத் தம் மகளை மணம் செய்விக்கலாம் என்ற யோசனை முன்னம் சம்புவரையருக்கு இருந்தது உண்மைதான். ஆனால் மதுராந்தகனுக்கு ஏற்கெனவே இரு மனைவியர் இருந்தனர். சின்னப் பழுவேட்டரையரின் மகளை அவன் மணந்திருந்ததுடன், அவளுக்கு ஓர் ஆண் மகனும் பிறந்திருந்தது. ஆகையால் மதுராந்தகன் சிங்காதனம் ஏறினால் பழுவேட்டரையரின் வம்சத்தினர்தான் பட்டத்துக்கு உரிமை பெறுவார்கள். மணிமேகலை தஞ்சை அரண்மனையில் உள்ள பல சேடிப் பெண்களில் தானும் ஒருத்தியாக வாழ வேண்டியிருக்கும்.

ஆனால் ஆதித்த கரிகாலனை மணிமேகலை மணம் செய்து கொண்டால் அவள்தான் பட்ட மகிஷியாயிருப்பாள். அவளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கே சிங்காதன உரியதாகும். மதுராந்தகனுக்குப் பட்டம் சூட்டுவதென்பது பிரம்மப் பிரயத்தனமான காரியம். மக்கள் அதற்கு விரோதமாயிருப்பார்கள். மலையமானுடனும் கொடும்பாளூர் வேளானுடனும் போராட்டம் நடத்தித்தான் அதைச் சாதிக்க வேண்டியதாயிருக்கும். மதுராந்தகனுடைய அன்னையே அதற்குத் தடையாயிருக்கிறாள். இவ்வளவு தொல்லையான முயற்சியை எதற்காக மேற்கொள்ள வேண்டும்?

ஆதித்த கரிகாலனுக்கு முடிசூட்டுவதென்பது ஏற்கெனவே முடிவான காரியம். அதை நிறைவேற்றுவதில் எவ்வித சிரமும் ஏற்படாது.

பழுவேட்டரையர் பிரயாணப்பட்டுச் சென்ற பிறகு ஆதித்த கரிகாலனும், அவனுடைய தோழர்களும் வேட்டைக்குப் புறப்பட்டார்கள். அவர்களுடனே மணிமேகலையையும் மற்ற அந்தப்புரப் பெண்களையும் அனுப்பக் கூடச் சம்புவரையர் சித்தமாயிருந்தார்.


58. கடல் பொங்கியது!

“கோடிக்கரையிலிருந்து ஒரு படகோட்டியும், அவன் மனையாளும் விஹாரத்தின் வாசலில் வந்து இளவரசரைப் பற்றி விசாரித்தார்கள். இளவரசர் இங்கேதான் இருக்கவேண்டும் என்று சொன்னார்கள்” என்றார்  ஆச்சார்ய பிக்ஷு.

“ஆகா! அப்படிப்பட்ட படகோட்டி யார்? அவன் பெயர் என்னவென்று தெரியுமா?” என்றார் இளவரசர்.

“ஆம்; தன் பெயர் முருகய்யன் என்று சொன்னான். கோடிக்கரைத் தியாக விடங்கர் மகன் என்று கூறினான்…”

“படகோட்டி முருகய்யனை அழைத்து வந்து விடுங்கள். நான் இட்ட கோட்டை அவன் தாண்டவே மாட்டான். இருட்டிய பிறகு வந்து அவனே என்னைப் படகில் ஏற்றி, ஆனைமங்கலத்துச் சோழ மாளிகைக்கு அழைத்துப் போய்விடுவான்!” என்றார் இளவரசர்.

இளம் பிக்ஷு படகோட்டி முருகய்யனை அழைத்துக் கொண்டு பொன்னியின் செல்வர் இருந்த இடத்தை அணுகினார். முருகய்யன் இளவரசர் கூறுவதைப் பக்தியுடன் கேட்டுக் கொண்டான்.

“முருகா! இன்றிரவு நீ திரும்பி வந்து என்னைப் படகில் ஏற்றி ஆனைமங்கலத்துக்கு அழைத்துப்போக வேண்டும்” என்று இளவரசர் கூறினார்.

ஆச்சார்ய பிக்ஷு, “இளவரசே! இரவு வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. தாங்கள் இப்போதே புறப்பட்டுப் போகலாம்” என்று சொன்னார்.

உண்மை என்னவென்றால் பொங்கி வரும் கடல் அந்த சூடாமணி விஹாரத்தை சிறிது நேரத்துக்கெல்லாம் முழுக அடித்து விடும் என்று பிக்ஷுவின் உள்ளத்தில் ஒரு பீதி உண்டாகியிருந்தது. ஆகையால் இளவரசரை அவசரமாக வெளியேற்ற விரும்பினார். ஆனைமங்கலம் கடற்கரையிலிருந்து கிழக்கே சற்றுத் தூரத்தில் இருந்தது. ஆகையினால் பொங்கி வரும் கடல் அவ்வளவு தூரம் போய் எட்ட முடியாது. எட்டினாலும் அங்குள்ள மிகப் பெரிய சோழ மாளிகை மூழ்கிவிடாது.

இளவரசர் பிக்ஷுவின் கருத்தை ஏற்றுக் கொண்டார். உடனே படகு கொண்டு வருமாறு கட்டளை பிறந்தது. இதற்கிடையில் அங்கே கூடியிருந்த புத்த பிக்ஷுக்களைப் பார்த்து ஆச்சாரிய பிக்ஷு, “நாம் கருணையே வடிவமான புத்த பகவானைச் சேர்ந்தவர்கள். இப்போது நாகைப்பட்டினத்து மக்களுக்குப் பெரும் சோதனை நேரிட்டிருக்கிறது. கடல் பொங்கி நகரத்துக்குள் வேகமாக புகுவதைக் கண்டேன். புயலின் வேகத்தினால் வீடுகளின் கூரைகள் சிதறிப் பறக்கின்றன. மரங்கள் தடதடவென்று முறிந்து விழுகின்றன. நாகைப்பட்டினத்திலும், அக்கம் பக்கத்திலும் வசிக்கும் மக்களில் வயோதிகர்களும் குழந்தைகளும் எத்தனையோ பேர் தப்பிக்கும் வகை அறியாது தவித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் அனைவரும் நாலாபுறமும் சென்று உங்கள் கண் முன்னால் கஷ்டப்படுகிறவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். குழந்தைகளையும் வயோதிகர்களையும் முதலில் கவனியுங்கள்.” என்றார்.

இதைக் கேட்டதும் பிக்ஷுக்கள் அங்கிருந்து அகன்று சென்றார்கள். கால்வாயில் படகு வந்து சேர்ந்தது. இளவரசர் ஆச்சாரிய பிக்ஷுவுக்கு வணக்கம் செலுத்தி விடைபெற்று அதில் ஏறிக் கொண்டார். முருகய்யனும் ஏறிப் படகு தள்ளத் தொடங்கினான். படகு கண்ணுக்கு மறையும் வரையில் பிக்ஷு அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

“முருகையா! படகை ஆனைமங்கலம் அரண்மனைக்கு விடு!” என்று பொன்னியின் செல்வர் உரத்த குரலில் கூவினார். அச்சமயம் உச்சநிலையை அடைந்திருந்த புயற்காற்றும், புயலில் பொங்கி வந்த கடலும் போட்ட இரைச்சலினால் அவர் கூறியது முருகய்யன் காதில் விழவில்லை. ஆயினும் இளவரசரின் முகத்தோற்றத்திலிருந்து அவருடைய விருப்பத்தை அறிந்து கொண்ட முருகய்யன் படகைச் செலுத்தத் தொடங்கினான். சூடாமணி விஹாரத்தின் முழுகிக் கொண்டிருந்த மண்டபச் சிகரங்களின் மீதும் புத்தர் சிலைகளின் மீதும் மோதாமல் படகைச் செலுத்துவது மிகவும் கடினமாயிருந்தது. முருகையன் பெரும் புயலிலும் சுழிக் காற்றிலும் நடுக் கடலில் படகு செலுத்திப் பழக்கப்பட்டவனாதலால் வெகு லாவகமாகச் செலுத்திக் கொண்டு போனான். அதைப் பார்த்து இளவரசர் வியந்தார்.

பெரிய பெரிய மரங்கள் காற்றில் முறிந்து விழுந்தன. முறிந்த மரங்களில் சில மிதந்து மிதந்து சென்றன. ஆடு மாடுகள் வெள்ளத்தில் அலறிக்கொண்டு மிதந்து சென்றன. முருகய்யன் அப்பால் இப்பால் பார்க்காமல் படகை சர்வ ஜாக்கிரதையாகச் செலுத்திக்கொண்டு சென்றான். சூடாமணி விஹாரம் நாகைப்பட்டினத்தில் கடற்கரையோரமாக இருந்தது. அங்கிருந்து கால்வாய் சிறிது தூரம் வரையில் தெற்குத் திசையை நோக்கிச் சென்றது. பிறகு தென்மேற்காக அரைக்காதம் வரையில் சென்று, அங்கிருந்து மீண்டும் திரும்பித் தென் திசையில் நேராகச் சென்றது. இந்த இரண்டாவது திருப்பத்தின் முனையிலேதான் ஆனை மங்கலம் அரண்மனை இருந்தது.

இருட்டுகிற சமயத்தில் படகு ஆனைமங்கலத்திலிருந்த சோழ மாளிகையை அணுகியது. பொங்கி வந்த கடல் அந்த மாளிகையை எட்டவில்லை. அரண்மனைக்கருகில் அமைந்திருந்த அலங்காரப் படித்துறையில் கொண்டுபோய் முருகய்யன் படகை நிறுத்தினான். அவர்கள் அரண்மனைக்குள் பிரவேசித்ததும் புயல் காற்றோடு பெருமழையும் சேர்ந்து ‘சோ’ என்று கொட்டத் தொடங்கியதும் சரியாயிருந்தன.


59. மக்கள் குதூகலம்

மறுநாள் புயலின் உக்கிரம் தணிந்தது. பொங்கி வந்த கடலும் பின்வாங்கிச் சென்றது. ஆனால் அவற்றினால் ஏற்பட்ட நாசவேலைகள் வர்ணனைக்கு அப்பாற்பட்டிருந்தன. நாகைப்பட்டினம் நகரில் பாதி வீடுகளுக்கு மேல் கூரைகளை இழந்து குட்டிச்சுவர்களாக நின்றன. அந்த வீதிகளில் ஒன்றில் இளவரசர் அருள்மொழிவர்மர் வியாபாரியின் வேடத்தில் தோளில் ஒரு மூட்டையைச் சுமந்து நடந்துகொண்டிருந்தார். அவர் பின்னால் முருகய்யன் இன்னும் ஒரு பெரிய மூட்டையைச் சுமந்து நடந்துகொண்டிருந்தான். புயலினாலும் வெள்ளத்தினாலும் நேர்ந்திருந்த அல்லோலகல்லோலங்களைப் பார்த்துக்கொண்டு அவர்கள் போனார்கள்.

இடிந்த வீடு ஒன்றின் சுவரின் மறைவிலிருந்து ஒரு பெண் அவர்கள் வருவதைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவள் முருகய்யனின் மனையாள்தான். அவள் ஓடி வந்து இளவரசரின் முன்னால் வந்து காலில் விழுந்தாள். முருகய்யன் அவளுடைய கவனத்தைக் கவர முயன்றாள். உதட்டில் விரலை வைத்துச் சமிக்ஞை செய்தான். ‘உஷ், உஷ்’ என்று எச்சரித்தான். ஒன்றும் பயன்படவில்லை.

“சக்கரவர்த்தித் திருமகனே! வீராதி வீரனே! பொன்னியின் செல்வா! சோழ நாட்டின் தவப் புதல்வா! சூடாமணி விஹாரத்தில் முழுகிப் போய்விடாமல் தாங்கள் பிழைத்து வந்தீர்களா? என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன!” என்று கூச்சலிட்டாள்.

வீதியில் அச்சமயம் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தவர்கள் அத்தனை பேருடைய கவனமும் இப்பொழுது இளவரசரின்பால் திரும்பின.

ஓடக்கார முருகய்யன் தன் மனைவி போட்ட கூக்குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திகைத்தான். மறுபடியும் அவளைப் பார்த்துக் கையினால் சமிக்ஞைகள் செய்து கொண்டே “பெண்ணே! என்ன உளறுகிறாய்? உனக்குப் பைத்தியமா?” என்றான்.

இளவரசர் குறுக்கிட்டு, “பெண்ணே! நீ என்னை யார் என்றோ தவறாக நினைத்துக்கொண்டாய். நான் ஈழநாட்டிலிருந்து வந்த வியாபாரி. நான்தான் இவனை என்னுடன் வழி காட்டுவதற்காக அழைத்துக் கொண்டு புறப்பட்டேன்! வீண் கூச்சல் போடாதே!” என்றார்.

இந்தப் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே அவர்களைச் சுற்றிலும் ஜனங்கள் கூடிவிட்டார்கள். கூட்டம் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டிருந்தது. வந்தவர்கள் எல்லாரும் இளவரசரை உற்றுப் பார்க்கலானார்கள்.

அதுவரையில் அடங்காத வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மக்கள், “பொன்னியின் செல்வர் வாழ்க! ஈழம் கொண்ட வீராதி வீரர் வாழ்க!” என்று ஒரு பெரிய கோஷத்தைக் கிளப்பினார்கள். அதைக் கேட்டுவிட்டு மேலும் பல மக்கள் திரண்டு வந்து அங்கே கூடினார்கள். அப்படி வந்தவர்களிலே நாகைப்பட்டினம் நகரத்தின் எண்பேராயத் தலைவர் ஒருவரும் இருந்தார். அவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் வந்து “கோமகனே! தாங்கள் இந்த நகரின் சூடாமணி விஹாரத்தில் இருந்து வருவதாகக் கேள்விப்பட்டோம். அந்த வதந்தியை நாங்கள் நம்பவில்லை, இப்போது உண்மை அறிந்தோம். நேற்று அடித்த பெரும் புயல் இந்த நகரத்தில் எத்தனையோ நாசங்களை விளைவித்திருக்கிறது. ஆனாலும் தங்களைப் புத்த விஹாரத்திலிருந்து பத்திரமாய் வெளிக்கொணர்ந்ததே, அதை முன்னிட்டுப் புயலின் கொடுமைகளையெல்லாம் மறந்து விடுகிறோம். இந்த நகரில் தங்களுடைய பாதம் பட்டது இந்நகரின் பாக்கியம்!” என்று கூறினார்.

இளவரசர் இனிமேல் தன்னை மறைத்துக்கொள்ளப் பார்ப்பதில் பயனில்லை என்று கண்டு கொண்டார். “ஐயா! தங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி, இந்த நகர மாந்தரின் அன்பு என்னைப் பரவசப்படுத்துகிறது. ஆனால் வெகு முக்கியமான காரியமாக நான் தஞ்சாவூருக்கு அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. பிரயாணம் தடைப்படக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி வியாபாரியின் வேடம் பூண்டு புறப்பட்டேன். எனக்கு விடை கொடுங்கள்!” என்றார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல் கிளம்பியது. “கூடாது கூடாது! இளவரசர் இங்கே ஒரு நாளாவது தங்கி எங்களின் உபசாரத்தைப் பெற்றுக்கொண்டுதான் புறப்படவேண்டும்” என்று உரக்கச் சத்தமிட்டுக் கூறியது அக்குரல்.

அதைப் பின்பற்றி இன்னும் ஆயிரமாயிரம் குரல்கள் “கூடவே கூடாது! இளவரசர் ஒரு நாளாவது இங்கே தங்கி இளைப்பாறி விட்டுத்தான் போகவேண்டும்!” என்று கூச்சலிட்டன.

எண் பேராயத்தின் தலைவர் அப்போது “கோமகனே! என் நகர மக்களின் அன்பையும், உற்சாகத்தையும் பார்த்தீர்களா? எங்கள் உபசாரத்தைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு ஒருவேளையாவது எங்கள் விருந்தாளியாக இருந்துவிட்டுத்தான் போக வேண்டும்! இளவரசே! இங்கே தங்குவதினால் ஏற்படும் தாமதத்தைச் சரிப்படுத்திக் கொள்ளலாம். தாங்களோ கால் நடையாகப் புறப்பட்டிருக்கிறீர்கள். புயல் மழை காரணமாகச் சோழ நாட்டுச் சாலைகள் எல்லாம் தடைப்பட்டுக் கிடக்கின்றன. நதிகளிலெல்லாம் பூரண வெள்ளம் போகிறது. கால்நடையாகச் சென்று எப்போது போய்ச் சேர்வீர்கள்? தங்களை யானைமீது வைத்து ஊர்வலமாக அனுப்புகிறோம். தங்களுடன் நாங்கள் அனைவரும் வந்து தஞ்சாவூருக்கே கொண்டுவிட்டு வருகிறோம்” என்றார் எண்பேராயத்தின் தலைவர். அவர் பேசிக் கொண்டிருக்கையில் ஜனங்களின் கூட்டம் மேலும் அதிகமாகிக் கொண்டிருந்தது.

அரைப் பகல் நேரமாவது இங்கே தங்கிவிட்டுத்தான் புறப்பட வேண்டும் என்று இளவரசர் முடிவு செய்தார். எண்பேராயத்தின் தலைவரைப் பார்த்து, “ஐயா! இவ்வளவு மக்களின் அன்பையும் புறக்கணித்துவிட்டு நான் போக விரும்பவில்லை. பிற்பகல் வரையில் இங்கே இருந்துவிட்டு மாலையில் புறப்படுகிறேன். அதற்காவது அனுமதி கொடுப்பீர்கள் அல்லவா?” என்றார்.

இளவரசர் தங்கிச் செல்லச் சம்மதித்து விட்டார் என்ற செய்தி பரவியதும் ஜனக்கூட்டத்தின் உற்சாகம் எல்லை கடந்து விட்டது. இதற்கிடையில் நாகைப்பட்டினம் நகரின் ஐம்பெருங்குழுவின் அதிகாரிகளும், எண்பேராயத்தின் தலைவர்கள் அனைவரும் வந்து சேர்ந்து விட்டார்கள். இளவரசருக்கு விருந்து அளிக்கப் பெருந்தர ஏற்பாடுகள் நடந்தன. இளவரசரைப் பார்க்க வந்த ஜனத்திரளுக்கு உணவளிக்கும் ஏற்பாடுகளும் நடந்தன. விருந்துகள் முடிந்து, புறப்பட வேண்டிய சமயம் நெருங்கிற்று. இளவரசர் சோழ மாளிகையின் மேன்மாடத்து முகப்பில் வந்து கைகூப்பிக் கொண்டு நின்றார். வீதியில் ஒரு பெரிய கோலாகலமான ஊர்வலம் புறப்படுவதற்கு எல்லாம் ஆயத்தமாயிருந்தன. இளவரசர் ஏறிச் செல்வதற்கு அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று வந்து நின்றது. முன்னாலும் பின்னாலும் குதிரைகள், ரிஷபங்கள் முதலியவை நின்றன. திருச்சின்னங்களும், கொடிகளும் ஏந்தியவர்களும், பலவித வாத்தியக்காரர்களும் அணிவகுத்து நின்றார்கள். மக்களோ நேற்று மாலை பொங்கி எழுந்த கடலைப்போல் ஆரவாரித்துக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் நின்றார்கள்.

சிறிது நேரத்துக் கெல்லாம் இளவரசர் யானைமீது ஏறிக் கொண்டு பிரயாணப்பட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் அடங்கிய ஒரு மாபெரும் ஊர்வலம் தஞ்சையை நோக்கிப் புறப்பட்டது. போகப் போக இளவரசருடன் தொடர்ந்த ஊர்வலம் பெரிதாகிக் கொண்டிருந்தது.


60. படகில் பழுவேட்டரையர்

புயல் அடித்த அன்று காலையிலேதான் பெரிய பழுவேட்டரையர் கடம்பூரிலிருந்து தஞ்சைக்குப் புறப்பட்டார். கொள்ளிட நதி வரையில் அவர் வழக்கமான பாதையிலே சென்று, பின்னர் கொள்ளிடக் கரைச் சாலை வழியாக மேற்கு நோக்கித் திரும்பினார். மேற்கே சென்று திருவையாற்றுக்கு நேராக கொள்ளிடத்தைக் கடக்க விரும்பிச் சென்றார்.

வழக்கம் போல் நூற்றுக்கணக்கான பரிவாரங்களுடன் இச்சமயம் பெரிய பழுவேட்டரையர் புறப்படவில்லை. தாம் போவதும் வருவதும் கூடிய வரையில் எவருடைய கவனத்தையும் கவராமலிருக்க வேண்டுமென்று நினைத்தார். ஆகையால் பத்துப் பேரைத்தான் தம்முடன் அழைத்துப் போனார்.

திருவையாற்றுக்கு நேரே கொள்ளிடத்துக்கு வட கரையில் பழுவேட்டரையர் வந்தபோது அந்தப் பெரிய நதியில் வெள்ளம் இரு கரையும் தொட்டுக்கொண்டு பிரவாகமாகப் போய் கொண்டிருந்தது. அங்கிருந்த சிறிய படகில் குதிரைகளைக் கொண்டுபோவது இயலாத காரியம். பெருங்காற்றுக்கு அறிகுறிகள் காணப்பட்டுக் கொண்டிருந்தன. ஆகையால் திரும்பிப் போவதற்குச் சௌகரியமாக இருக்கட்டும் என்று குதிரைகளை வடகரையில் விட்டு விட்டுப் பழுவேட்டரையர் தம்முடன் வந்த பத்து வீரர்களுடன் படகில் ஏறினார். படகு நடு நதியில் சென்று கொண்டிருந்தபோது புயல் வலுத்துவிட்டது. படகோட்டிகள் இருவரும் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் படகைச் செலுத்தினார்கள். நதி வெள்ளத்தின் வேகம் படகைக் கிழக்கு நோக்கி இழுத்தது. புயல் அதை மேற்கு நோக்கித் தள்ளப் பார்த்தது. படகோட்டிகள் படகைத் தெற்கு நோக்கிச் செலுத்த முயன்றார்கள். இந்த மூன்றுவித சக்திகளுக்கு இடையில் அகப்பட்டுக் கொண்ட படகு திரும்பித் திரும்பிச் சக்கராகாரமாகச் சுழன்றது.

கடைசியாக வெகு நேரம் படகு தவித்துக் தத்தளித்த பிறகு, கரை ஏற வேண்டிய துறைக்கு அரைக் காத தூரம் கிழக்கே சென்று, கரையை அணுகியது. “இனிக் கவலை இல்லை” என்று எல்லாரும் பெரு மூச்சு விட்டார்கள். அச்சமயத்தில் நதிக்கரையில் புயற் காற்றினால் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த மரங்களில் ஒன்று தடார் என்று முறிந்து விழுந்தது. முறிந்த மரத்தைக் காற்று தூக்கிக் கொண்டு வந்து படகின் அருகில் தண்ணீரில் போட்டது. படகைத் திருப்பி அப்பால் செலுத்துவதற்கு ஓடக்காரர்கள் பெரு முயற்சி செய்தார்கள். பலிக்கவில்லை. மரம் அதி வேகமாக வந்து படகிலே மோதியது. படகு ‘தடால்’ என்று கவிழ்ந்தது. மறுகணம் படகில் இருந்தவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து மிதந்தார்கள். கரையை நெருங்கிப் படகு வந்து விட்டிருந்தபடியால் சிலர் நீந்திச் சென்று கரையை அடைந்தார்கள். சிலர் மரங்களின் மீது தொத்திக்கொண்டு நின்றார்கள். சிலர் கையில் அகப்பட்டதைப் பிடித்துக் கொண்டு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தார்கள்.

பழுவேட்டரையர் வேறு சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தபடியால், படகுக்கு நேர்ந்த விபத்தை எதிர்பார்க்கவே இல்லை. படகு கவிழ்ந்ததும் தண்ணீரில் முழுகி விட்டார். அவரைப் பிரவாகத்தின் வேகம் வெகு தூரம் அடித்துக் கொண்டு போய் விட்டது. சில முறை தண்ணீர் குடித்து, மூக்கிலும் காதிலும் தண்ணீர் ஏறி, திணறித் தடுமாறி கடைசியில் ஒருவாறு சமாளித்துக் கொண்டு அவர் பிரவாகத்துக்கு மேலே வந்தபோது படகையும் காணவில்லை; படகில் இருந்தவர்கள் யாரையும் காணவில்லை.

உடனே அந்தக் கிழவரின் நெஞ்சில் பழைய தீரத்துவம் துளிர்த்து எழுந்தது. எத்தனையோ போர்களில் மிக ஆபத்தான நிலைமையில் துணிவுடன் போராடி வெற்றி பெற்ற அந்த மாபெரும் வீரர் இந்தக் கொள்ளிடத்து வெள்ளத்துடனும் போராடி வெற்றி கொள்ளத் தீர்மானித்தார். சுற்று முற்றும் பார்த்தார். சமீபத்தில் மிதந்து வந்த ஒரு மரக்கட்டையை எட்டிப் பிடித்துக்கொண்டார். கரையைக் குறி வைத்து நீந்தத் தொடங்கினார். வெள்ளத்தின் வேகத்துடனும், புயலின் வேகத்துடனும், ஏக காலத்தில் போராடிக் கொண்டே நீந்தினார். கை சளைத்தபோது சிறிது நேரம் வெறுமனே மிதந்தார். பலமுறை நதிக்கரையை ஏற முயன்றபோது மழையினால் சேறாகியிருந்த கரை அவரை மறுபடியும் நதியில் தள்ளி விட்டது. உடனே விட்டுவிட்ட கட்டையைத் தாவிப் பிடித்துக் கொண்டார்.

இவ்விதம் இருட்டி ஒரு ஜாமத்துக்கு மேலாகும் வரையில் போராடிய பிறகு நதிப் படுக்கையில் நாணற் காடு மண்டி வளர்ந்திருந்த ஓரிடத்தில் அவருடைய கால்கள் தரையைத் தொட்டன. பின்னர், வளைந்து கொடுத்த நாணற் புதர்களின் உதவியைக் கொண்டு அக்கிழவர் தட்டுத் தடுமாறி நடந்து, கடைசியாகக் கரை ஏறினார்.

அவரைச் சுற்றிலும் கனாந்தகாரம் சூழ்ந்திருந்தது. பக்கத்தில் ஊர் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. திருமலையாற்றுக்கு எதிரில் கரை ஏற வேண்டிய ஓடத்துறைக்குச் சுமார் ஒன்றரைக் காத தூரம் கிழக்கே வந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ஆம், ஆம்! குடந்தை நகரத்துக்கு அருகிலேதான் தாம் கரை ஏறியிருக்க வேண்டும். இன்றிரவு எப்படியாவது குடந்தை நகருக்கு போய்விட முடியுமா?…

புயல் அப்போது தான் பூரண உக்கிரத்தை அந்தப் பிரதேசத்தில் அடைந்திருந்தது. மரங்கள் சடசடவென்று முறிந்து விழுந்தன வானத்தில் அண்ட கடாகங்கள் வெடித்து விடுவது போன்ற இடி முழக்கங்கள் அடிக்கடி கேட்டன. பெருமழை சோவென்று கொட்டியது.

‘எங்கேயாவது பாழடைந்த மண்டபம் அல்லது பழைய கோயில் இல்லாமலா போகும்? அதில் தங்கி இரவைக் கழிக்க வேண்டியதுதான். பொழுது விடிந்த பிறகுதான் மேலே நடையைத் தொடங்க வேண்டும்’ என்று முடிவு கட்டிக் கொண்டு, தள்ளாடி நடுங்கிய கால்களை ஊன்றி வைத்த வண்ணம் நதிக்கரையோடு நடந்து சென்றார்.

நதியில் கரையின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. மழை பெய்தபடியால் கரை மேலேயும் ஓரளவு தண்ணீராயிருந்தது. இருட்டைப் பற்றியோ சொல்ல வேண்டியதாயில்லை. ஆகவே, அந்த வீரக் கிழவர் நடந்து சென்ற போது, தம் எதிரிலே நதிக் கரையின் குறுக்கே கொஞ்சம் தண்ணீர் அதிகமாக ஓடியதைப் பற்றி அதிக கவனம் செலுத்தவில்லை. திடீரென்று முழங்கால் அளவு ஜலம் வந்து விட்டதும், சற்றுத் தயங்கி யோசித்தார். தொடையளவு ஜலம் வந்ததும் திடுக்கிட்டார். அதற்கு மேலே யோசிப்பதற்கு அவகாசமே இருக்கவில்லை. மறுகணம் அவர் தலை குப்புறத் தண்ணீரில் விழுந்தார். கொள்ளிடத்தின் கரை உடைத்துக் கொண்டு அந்த இடத்தில் தெற்கு நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் அவரை உருட்டிப் புரட்டி அடித்துக் கொண்டு போயிற்று. கரைக்கு அப்பால் பள்ளமான பிரதேசமானபடியால் அவரை ஆழமாக, இன்னும் ஆழமாக அதல பாதாளத்துக்கே அடித்துக் கொண்டு போவது போலிருந்தது. படகு கவிழ்ந்து நதியில் போய்க் கொண்டிருந்த வெள்ளத்தில் மூழ்கியபோது அவர் சற்று எளிதாகவே சமாளித்துக் கொண்டார். இப்போது அவ்விதம் முடியவில்லை. உருண்டு, புரண்டு, உருண்டு புரண்டு, கீழே கீழே போய்க் கொண்டிருந்தார். கண் தெரியவில்லை; காது கேட்கவில்லை. நிமிர்ந்து நின்று மேலே வரவும் முடியவில்லை, மூச்சுத் திணறியது.  சில நிமிட நேரத்திற்குள் அடியோடு அவர் நினைவை இழந்தார்!…

தடார் என்று தலையில் ஏதோ முட்டியதும், மீண்டும் சிறிது நினைவு வந்தது. கைகள் எதையோ, கருங்கல்லையோ, கெட்டியான தரையையோ – பிடித்துக்கொண்டிருந்தன. ஏதோ ஒரு சக்தி அவரை மேலே கொண்டுவந்து உந்தித் தள்ளியது. அவரும் மிச்சமிருந்த சிறிது சக்தியைப் பிரயோகித்து, கரங்களை ஊன்றி மேலே எழும்பிப் பாய்ந்தார். மறுநிமிடம், கெட்டியான கருங்கல் தரையில் அவர் கிடந்தார். கஷ்டப்பட்டுக் கண்களைத் திறக்கப் பிரயத்தனப்பட்டார். இறுக அமுங்கிக் கிடந்த கண்ணிமைகள் சிறிது திறந்ததும், எதிரே தோன்றிய ஜோதி அவருடைய கண்களைச் கூசச் செய்தது. அந்த ஜோதியில் துர்க்கா பரமேசுவரியின் திருமுக மண்டலம் தரிசனம் தந்தது! எதிரே தரிசனம் அளிப்பது அம்மனுடைய விக்கிரகம். தாம் விழுந்து கிடப்பது கர்ப்பக் கிருஹத்தை அடுத்துள்ள அர்த்த மண்டபம். அம்மனுக்கு அருகில் முணுக் முணுக்கென்று சிறிய தீபம் எரிந்து கொண்டிருக்கிறது. அதன் வெளிச்சந்தான் சற்று முன் தம் கண்களை அவ்வளவு கூசச் செய்தது! வெளியிலே இன்னும் ‘சோ’ என்று மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. புயலும் அடித்துக்கொண்டிருக்கிறது. அவ்வளவு புயலும் மழையும் தேவி கோவிலின் கர்ப்பக் கிருஹத்தில் ஒளிர்ந்த தீபத்தை அசைக்க முடியவில்லை!

கிழவர் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க முயன்றார். அவர் உடம்பு நடுங்கியது. அம்மன் சந்நிதியில் திரை விடுவதற்காகத் தொங்கிய துணியை எடுத்து உடம்பை நன்றாகத் துடைத்துக்கொண்டார். தமது ஈரத் துணியைக் களைந்து எறிந்துவிட்டு திரைத் துணியை அரையில் உடுத்திக் கொண்டார்.

அம்மன் சந்நிதியில் உடைந்த தேங்காய் மூடிகள், பழங்கள், நிவேதனத்துக்கான பொங்கல் பிரசாதங்கள் – எல்லாம் வைத்திருப்பதைக் கண்டார். இன்றிரவை இந்தக் கோயிலிலேயே கழிக்கவேண்டியது தான். இதைக் காட்டிலும் வேறு தக்க இடம் கிடைக்கப் போவதில்லை. பயபக்தியுடன் பழுவேட்டரையர் தேவியின் சந்நிதானத்தை நெருங்கினார். அங்கிருந்த பிரசாதங்களை எடுத்து வேண்டிய அளவு அருந்தினார். மிச்சத்தைப் பத்திரமாக வைத்து மூடினார். தேவியின் முன்னிலையில் நமஸ்காரம் செய்யும் பாவனையில் படுத்தார். கண்களைச் சுற்றிக்கொண்டு வந்தது. சிறிது நேரத்துக்குள் பழுவேட்டரையர் பெருந்துயிலில் ஆழ்ந்து விட்டார்.

– தொடரும்…

நன்றி: http://poniyinselvan.blogspot.com/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *