அணையா விளக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 2, 2024
பார்வையிட்டோர்: 1,536 
 

தஞ்சையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் ஒரு வெள்ளைப் புரவி மெதுவாக ஒடிக் கொண்டிருந்தது. அதில் அமர்ந்திருந்த வீரன் அதன் வயிற்றைக் காலால் மெதுவாகத் தட்டவே அது குளம்பொலி சப்தமிட விரைந்து ஓடியது. அந்த வீரனுக்கு அகவை அறுபதுக்கு மேல் இருக்கும். ஒல்லியான, கம்பீரமான உருவம். முறுக்கி விட்ட மீசை. திண்மையான புஜங்கள். அரையில் பூண்ட உடைவாளுடன் படைத்தலைவன் போன்ற தோற்றத்துடன் காணப்பட்டான்.

குதிரை வீரன் பொன்னி நதியைக் கண்டதும் குதிரையை நிறுத்தினான். நதியில் இறங்கி முகம் கழுவிச் சிறிது நீர்ப் பருகி விட்டு குதிரையைத் தண்ணீர் அருகே அழைத்துச் சென்று நீர் குடிக்கச் செய்தான்.

குதிரையை அருகிலிருந்த வன்னி மரத்தில் கட்டிப் போட்டான். எங்கிருந்தோ வந்த சலங்கை சப்தம் செவியில் விழ, ஒலி வந்த திக்கை நோக்கி அவன் கால்கள் போயின. சிறிது தூரம் போயிருப்பான். அங்கே ஒரு கலையம்சம் பொருந்திய அழகான வீட்டைக் கண்டான். அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு பொற்பாவை நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தாள். அவளை நிகர்த்த அழகி இந்த உலகிலே யாருமில்லை என்பதைப் போல் எழிலான உருவம். ஆடல் அணங்கின் பேரழகைப் பார்த்து வீரன் மலைத்து நின்றான். அவள் கண்களில் காட்டிய நவரசம், கைகளில் காட்டிய அபிநயம் அவன் மனதைக் கொள்ளைக் கொண்டது..

முன்பின் பார்த்திராத ஒருவன் தன்னை வைத்த விழி வாங்காமல் பார்ப்பதைக் கண்டு திகைத்த அம்மங்கை நடனத்தை நிறுத்தினாள். அவசர அவசரமாகக் கீழே இருந்த பட்டு வண்ணத் துணியை எடுத்து மாராப்பாக போட்டுக் கொண்டாள்.

”யார் நீங்கள் ? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று தேன் மதுரக் குரலில் வினவினாள்.

”நான் ஓர் படைவீரன். தஞ்சாவூர்ப் போய்க் கொண்டிருக்கிறேன். போகும் வழியில் உங்கள் இசையால் ஈர்க்கப்பட்டு இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தேன்.”

அவள் அதை நம்பவில்லை. அவனைப் பார்த்தால் படைத் தளபதியை போலல்லவா இருக்கிறது. தன்னுடைய சந்தேகத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் மொழிந்தாள்.

”என் பெயர் பரவை நங்கை. என்னைப் பரவை என்று அழைப்பார்கள், நீங்கள் ரொம்பத் தூரம் பயணம் செய்து களைத்திருக்கிறீர்கள். அமருங்கள். மோர் அருந்தி விட்டுப் போங்கள்”. என்று கூறி விட்டு உள் பக்கம் திரும்பி ”அம்மா ஒரு குவளையில் மோர் எடுத்து வா” என்று குரல் கொடுத்தாள் அந்தச் சித்திரப் பாவை.

பரவை என்று அழைக்கப்பட்ட நங்கைக்குத் தந்தத்தில் கடைந்தெடுக்கப்பட்டதோவென ஐயுறும் சரீரம். காண்பவரைக் கவரும் அழகிய நயனங்கள். கலசங்கள் இரண்டும் கம்பீரமாக நின்றன. நீண்ட கூந்தல். இயற்கை அழகும் வசீகரமான முகமும் கொண்ட நடுத்தர வயதினள். நடனம் ஆடி ஆடி பக்குவ படுத்தப்பட்ட கட்டுக்கோப்பான உடல். ஏழு நாட்களில் திருவாரூர் திருக்கோவிலில் நடக்கவிருக்கும் நடன நிகழ்ச்சிக்காக இப்போது ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

”பரவை, இதோ வரேன்” என்று கூறிக்கொண்டே மோரை எடுத்துக் கொண்டு வந்த அவள் தாயார் மோகானாம்பாள் குவளையை அந்த வீரனிடம் கொடுத்தாள்.

மோரை அருந்தி விட்டு, ”நன்று, தாகம் தீர்ந்தது.. நீங்கள் வசிக்கும் இடம் இதுதானோ?” என்று அவன் வினவினான்.

”நானும் என் பெண்ணும் தஞ்சாவூரில் தேவரடியாள் இருப்பிடத்தில் வசித்து வருகிறோம். ஆடி திருவாதிரை திருநாள் அன்று நம் மன்னர் ராஜேந்திரனுக்குப் பிறந்த நாள் . அன்று திருவாரூர் தியாகேசர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் நடக்கவிருக்கும் நாட்டிய நிகழ்ச்சிக்கு நடனமாட என் பெண் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.” என்றாள் மோகானாம்பாள்.

”நல்லது. அன்று நான் அவசியம் வருகிறேன்.

”நீங்கள் யார்? உங்களைப் பார்த்தால் சோழர்ப் படையைச் சேர்ந்த வீரன் போல் தெரிகிறதே.”

”மிகச் சரியாகச் சொன்னீர்கள்” என்று படைவீரன் கூறியதும் மோகனாம்பாள் குறுநகை புரிந்தாள்.. மாமன்னர் இராஜேந்திர சோழர் மாறு வேடத்தில் வந்திருக்கிறார் என்பதை அப்பேதை அறியவில்லை.

பரவையை உற்றுப் பார்த்து விட்டு ” வருகிறேன். சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் சந்திக்கலாம்” என்று சொல்லி விட்டுக் குதிரையைக் கட்டி வைத்த இடத்துக்கு மன்னர் திரும்பி வந்தார்.. அவர் ஏறி அமர்ந்தவுடன் குதிரை பறந்தது.

அன்று ஆடி திருவாதிரை. மன்னரின் பிறந்த நாள். கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயிலில் பெருவுடையார் சந்நிதி. பரந்து விரிந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசன் பரகேசரி ராஜேந்திரர் இருகரம்கூப்பிச் சிவனைத் தொழுதுக் கொண்டிருந்தார்.. பக்கத்தில் அவன் மனைவி ராணி வீரமாதேவி நின்றிருந்தாள்.

அறிந்தவன்மாதேவி, வீரமாதேவி வானவன்மாதேவி, பஞ்சவன்மாதேவி, முக்கோக்கிழானடிகள், என்போர் இராஜேந்திரரின் மனைவியர். ஆவர். அதில் வீரமாதேவி மன்னரிடம் உயிரையே வைத்திருக்கிறாள். இராஜேந்திரர் இறந்து விட்டால் தானும் அவருடன் உடன்கட்டை ஏற சித்தமாக இருக்கிறாள். மன்னரும் அவள் மேல் அளவற்ற அன்பு வைத்திருக்கிறார்.

மன்னவன் இராஜராச சோழனின் மைந்தன் இராஜேந்திர சோழன் அரசனாகப் பதவி ஏற்ற போது தஞ்சாவூர் சோழ நாட்டின் தலைநகராக இருந்தது. தனது கங்கைப் படையெழுச்சியின் நினைவாக இராஜேந்திரர் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்து தோற்றுவித்த தலைநகர் கங்காபுரி எனப்பெறும் கங்கை கொண்ட சோழபுரம்.

மன்னர் போர்க்களமே தன் வாழ்வாகக் கொண்டவர். கங்கை கொண்ட சோழேச்சரம் என்னும் திருக்கோவிலைத் தலைநகரில் கட்டினார். தஞ்சாவூரை போலவே சிவனுக்குப் பிரகதீஸ்வர் என்றும் அம்மனுக்குப் பெரிய நாயகி என்றும் பெயர்.

தலைமை குருக்கள் சிறப்பு பூசையை முடித்து இறைவனுக்குத் தீபாதரனையைக் காட்டினார். மெய்ச் சிலிர்க்கச் சிவதரிசனத்தில் லயித்திருந்த கங்கை கொண்ட சோழருக்குப் பேரானந்தம் ஏற்பட்டது. ’நமசிவாய வாழ்க’ ’நமசிவாய வாழ்க’ என மகா ராணியின் உதடுகள் முணுமுணுத்ததன..

குருக்கள் பவ்வியமாகக் கற்பூரத் தட்டைக் காண்பிக்க மாமன்னனும் மகாராணியும் ஆரத்தியைக் கண்களில் ஒற்றிக் கொண்டனர். பிரமாண்ட வடிவிலிருந்த நந்தியையும் கலைவாணியையும் தரிசனம் செய்தப் பிறகு அரண்மனை வந்தடைந்தனர்.

திருவாரூரில் பரவை நங்கை பரபரப்புடன் காணப்பட்டாள். மோகனாம்பாள் தன் மகளிடம், ” கொஞ்ச நேரத்தில் சக்கரவர்த்தி வந்து விடுவார் , கவலைப் படாதே” என்று கூறினாள்.

அப்போது ஸ்வர இசை மற்றும் மேள சப்தம் கேட்டது. மன்னர் வந்து விட்டார் என்றவை பறை சாற்றின.

”கோப்பரகேசரி வர்மர் ஸ்ரீராஜேந்திரச் சோழ பெரிய உடையார் வாழ்க ” என்று கட்டியங்காரன் கூவினான். ஆம், மன்னர் வந்து விட்டார்.

நாட்டிய உடை அணிந்திருந்த பரவை மன்னரைத் தொலைவிலிருந்து நோக்கினாள்.

மன்னர் புஜங்களில் வாகுவலயங்களும் மார்பில் முத்து மாலையும் அணிந்து அரையில் பட்டு பீதாம்பரம் தரித்திருந்தார். மன்னரை கண்டதும் பரவை திடுக்கிட்டாள். . அன்று வந்தவர் தான் இன்று …….. என்பதைப் புரிந்து அவளுக்கு வியப்பும் திகைப்பும் ஏற்பட்டது. தியாகராசர் கோவிலில் உள்ள

ஆயிரங்கால் மண்டபத்தில் முதல் வரிசையில் மன்னர் அவருக்கான இருக்கையில் அமர்ந்தார். உடனே. நாட்டியம் ஆரம்பமாயிற்று.

”கண்டேன் அவர் திருப்பாதம், கண்டு அறியாதன கண்டேன்”

என்னும் ஈற்றடி கொண்ட அப்பர் சுவாமியின் திருமுறை பாடலுக்குப் பரவை நங்கை நடனமாடிக்கொண்டே இராஜேந்திரரை கடைக்கண்ணால் நோக்கினாள்.

மன்னர் மெய் மறந்து நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தார்..

நடனம் முடிந்ததும் நாலா பக்கத்திலிருந்தும் உரத்த கரகோஷம் எழுந்தது. அவள் நாட்டியத்தால் வசீகரிக்கப்பட்ட மன்னரும் கரகோஷம் எழுப்பினார்.

பரவைக்கு மன்னரைச் சந்தித்துப் பேச வேண்டுமென்று மனசுக்குள் ஆசைப்பட்டாள். நல்ல காலம், மன்னரே அவளைக் கூப்பிட்டு அனுப்பினார்.

அவள் அச்சத்துடன் மன்னன் இருக்குமிடம் வந்தாள். அவளைப் பார்த்து நகைத்துக்கொண்டே மன்னன் வினவினான்.

”நடன ராணியே என்னைத் தெரிகிறதா?” சிரித்துக் கொண்டே கேட்டான் மன்னன்.

”தெரிகிறது. அன்று என் இல்லத்துக்கு வந்தது தாங்கள்தானே உங்களைப் பார்த்ததுமே தெரிந்து கொண்டேன். உங்களின் வீரப் பரமாக்கிரத்தைக் கேட்டு பிரமித்துப் போயிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் அடியாளும் ஒருத்தி. இன்று உங்களைக் கண்டு நேரில் பார்ப்பது எனக்கு மட்டிலா ஆனந்தத்தை அளிக்கிறது.” நாணத்துடன் பதிலளித்தாள் நாணத்துடன் பதிலளித்தாள் நங்கை..

”நாட்டியம் அருமை” குரலில் மகிழ்ச்சி ஒலிக்கக் கூறினான் மன்னன். அவளுடன் சிறிது நேரம் மகிழ்ச்சியுடன் அளவளாவி விட்டுக் கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் புறப்பட்டு விட்டான்.

தஞ்சாவூர் வரும்போதெல்லாம் மன்னன் பரவை நங்கையைச் சந்திப்பான்.. அவள் அவனுக்காக பிரத்யோகமாக ஆடும் நடனத்தைக் கண்டுக் களிப்பான். அவளுடன் இணைந்து இன்பத்தைத் துய்ப்பார். நங்கையின் பேரழகும் சைவ தொண்டுகளும் கங்கை கொண்ட சோழரை மிகவும் கவர்ந்தன. மெல்ல மெல்ல அவர் மனம் அவளைக் காதலிக்கத் தொடங்கியது. அவளுடைய மனதிலும் மன்னன் புகுந்து விட்டான்.

ஒருமுறை நங்கை மன்னரிடம் ஒரு விண்ணப்பம் வைத்தாள்.

மன்னா, திருவாரூர்க் கோயிலைச் செங்கல் கட்டிடத்திலிருந்து கற்றளி ஆக்குங்கள்..

அவள் கோரியபடியே செய்தார்.

கோயில் கற்றளி அதாவது கற்கோவில் ஆக்கப்பட்டதால் நங்கைக்கு ஒரே பூரிப்பு. அவள் மன்னருக்கு அணுக்கி அதாவது காதல் தோழி ஆகிவிட்டாள். மன்னன் அவளை மிகவும் நேசித்தான்.

அதோடு நிற்கவில்லை. மீண்டும் அவள் வேண்டுதலுக்கு ஏற்ப மன்னர் திருவாரூர்க் கோயில் விமானத்துக்கு உள்ளும் புறமும் தங்கத் தகடுகள் வேய்ந்தார்.

நங்கையை அந்தப்புரத்துக்கு அழைத்து வர மன்னர் ஆசைப்பட்டார். தன் எண்ணத்தை மன்னர் அவளிடம் சொல்லத் தீர்மானித்தார். நங்கையைச் சந்திக்க புரவைகள் பூட்டிய ரதத்தில் ஏறி தஞ்சாவூர் சென்றார். அவள் அவருக்காகத் தன் இல்லத்தில் நடனமாடினாள்.

நங்கையின் மனதில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. மன்னரைப் பார்த்து, ”எனக்கோர் ஆசை. அதை நீங்கள் நிறைவேற்றுவீர்களா?” என்று கொஞ்சலோடு கேட்டாள்.

”என்ன வேண்டும்?. பணம் வேண்டுமா? இல்லை பொருள் வேண்டுமா?”

”அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நான் உங்கள் அணுக்கி அல்லவா? ரதத்தில் உங்கள் பக்கத்தில் அமர்ந்து ஒரே ஒருமுறை திருவாரூர் ஈசன் கோவில் சென்று வர வேண்டும்.”

மன்னன் பரவையைத் தோளோடு சேர்த்து அணைத்தார்.

”எனக்குப் பூரணச் சம்மதம். ரதத்தில் ஏறு. திருவாரூரை ஒரு முறை வலம் வந்து விடலாம்”.

“பேரரசனை மணக்க அவளுக்கு ஆட்சேபம் இருக்காது. ரதத்தில் போய் வந்த பிறகு தன் மனதில் உள்ள விருப்பத்தைச் சொல்லலாம்” என்று தான் சொல்ல நினைத்ததை தள்ளிப் போட்டார் மன்னர்.

நங்கை ரதத்தில் ஏறி மன்னரின் அருகில் ஒய்யாரமாக அமர்ந்தாள். மனதுக்குப் பிடித்தவள் அருகில் இருக்கத் தேன் குடித்த வண்டு போல் களிப்படைந்த மன்னர் விரைந்து திருவாரூரை அடைந்தார். சிவன் கோவிலின் நான்கு மாட வீதியிலும் ரதத்தில் குதுகலத்துடன் பவனி வந்தார்.. ஆண்டவன் ஆலயத்துக்கு முன் இருவரும் ரதத்திலிருந்து இறங்கினர்.

சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி திருவாரூரில் எழுந்தருளிய தியாகராசன் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து தெண்டனிட்டார்.

”தென்னாடுடைய சிவனே போற்றி!, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி ! ” – உள்ளம் குழைந்துருக ஈசனை துதித்தாள் நங்கை.

இருவரும் நின்று ஈசனை வணங்கிய இடத்தில் நினைவாகக் குத்து விளக்கு ஒன்றை வைக்குமாறு மன்னர் ராஜேந்திரன் உத்தரவிடுகிறார்..

மெய்க்காப்பாளன் ஒருவன் ஓர் ஆள் அளவு உயரமான பிரமாண்டமான பித்தளை குத்து விளக்கை மன்னர் சொன்ன இடத்தில் வைத்தான். எண்ணெய்யை அதில் ஊற்றித் திரி போடப் நங்கை குத்து விளக்கை ஏற்றிவிட்டு அன்புப் பொங்க மன்னனை நோக்கினாள்.

”இப்போது நாம் அரண்மனைக்குப் போகிறோம் என் அந்தப்புரத்தில் இருக்கும் ராணிகளுடன் வசிக்க உனக்குச் சம்மதம்தானே” என்றார் மன்னர் காதலுடன்.

நங்கை துணுக்குற்றாள்.

”மன்னா, நான் சொல்வதை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.. நான் அந்தப்புரத்துக்கு வருவதால் அரசிகள் இடையே அதிருப்தியும், சச்சரவும் உண்டாக நான் காரணமாக இருக்க எனக்கு விருப்பமில்லை. மாதேவடிகள் செம்பியன் மாதேவி போல் சிவலாய திருப்பணிகளில் என் வாழ்நாளைக் கழிக்க விரும்புகிறேன். வாழ்நாள் முழுவதும் ஈசனுக்கு என்னை அர்ப்பணித்துக் கொண்டு சிவப்பேறு அடைவதையே என் மனம் விழைகிறது. நான் எப்போதும் உங்கள் அணுக்கியாகவே இருப்பேன். என் உள்ளத்தில் உங்களைத் தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை. அதனால் உங்களுடன் தற்போது அரண்மனைக்கு வர முடியாதென்பதைப் பணிவுடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.” அச்சமின்றி செப்பினாள் அக்காரிகை.

“அப்படியென்றால் நீ என்னுடன் அரண்மனைக்கு வரமாட்டாயா?” ஏமாற்றத்துடனும் கேட்டார் மன்னர்.

”என் கடன் இறைவனுக்குப் பணி செய்து கிடப்பதே. தங்களுடன் அரண்மனைக்கு வர மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். இந்த குத்து விளக்கு எப்போதும் அணையாமல் இருக்க நான் அருகில் இருந்து எண்ணெய் ஊற்றிக் கொண்டிருப்பேன். என் பாட்டி வீடு இங்குதான் இருக்கிறது. என் உயிர் உள்ளவரை நான் இவ்விடத்திலேயே வசிப்பேன்” என்றாள் உறுதியுடன்.

அவளின் உறுதி மன்னரைத் திகைக்க வைத்தது. ”மனித மனம் ஒரு புதிர். அதுவும் ஒரு பெண்ணின் மனதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.” என்று எண்ணி நகைத்த ராஜேந்திரர், ”பரவை, உன்னை வற்புறுத்த மாட்டேன். உன் விருப்பம் போல் செய். நீ என்னுடைய வராவிட்டாலும் பரவாயில்லை. எப்போதும் என்னுடைய அணுக்கியாய் இரு, அது போதும்” என்றார். சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த தீபத்தின் அருகில் நின்றிருந்த அனுக்கி பரவை நங்கையைப் பார்த்துக் கொண்டே மன்னர் ரதத்தில் ஏறி அவ்விடத்தை விட்டு அகன்றார்..

தீபம் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. நங்கை திருப்தியுடன் தீபத்தை நோக்கினாள். அவளுக்கு அத்தருணத்தில் நடனம் ஆட வேண்டுமென்று தோன்றியது. உடனே பரவை சுழன்று சுழன்று நடனம் ஆடினாள், ஆடினாள், வெகு நேரம் ஆடினாள். அவள் அற்புத நடனத்தைக் கோவிலுக்கு வருகை தந்திருந்த மக்கள் கண்டு களித்துக் கொண்டிருந்தனர். ஆடிக் கொண்டிருந்தவள் திடீரென்று அவள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தாள்.

கூட்டத்திலிருந்த எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி.. அப்போது அங்கிருந்த ஒரு நாட்டு வைத்தியர் விரைந்து நங்கையின் அருகில் வந்து அவள் நாடியைப் பிடித்துப் பார்த்தார். நாடி தளர்ந்து விட்டது. இறுதிக் கட்டத்தில் இருப்பது தெரிந்தது. அவர் கோவில் குருக்களை நோக்க அவரும் பரவையின் அருகே வந்தார்.

நங்கை மெதுவாக விழிகளைத் திறந்தாள். அவள் பார்வையில் பட்ட குருக்களிடம்,

”இந்த தீபத்தை அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது என் கடைசி விருப்பம் என்று மன்னனுக்குச் சொல்லுங்கள்” என்றாள் மெல்லிய குரலில்.

”அப்படியே செய்கிறேன்” என்றார் அர்ச்சகர்.

”என் தாயாருக்கு…….” ..என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவள் மூச்சு அடங்கியது. நங்கையின் தாயாருக்குச் செய்தி அனுப்பப்பட்டு அவள் உடனே விரைந்து வந்தவுடன் நங்கையின் ஈமக் கிரியைகள் செய்யப்பட்டன.

நங்கை மரணம் அடைந்த செய்தி மன்னனை எட்டியது. அவன் சிறகொடிந்த பறவை போலானான். மன்னனும் மனிதன் தானே. அவள் நினைப்பால் துன்பக் கடலில் தத்தளித்தான்.

”நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும். எல்லாம் இறைவனின் திருவிளையாடல்” என்று தன் குரு கூறக் கேட்டுத் தெளிந்தான். காதலி பரவை நங்கை ஏற்றிய அன்பு தீபம் அணையாமல் ஒளிர ஏற்பாடு செய்தான்.

அவள் ஏற்றிய விளக்கு அணையாமல் ஒளி வீசிக் கொண்டிருந்தது. அத்தீபம் காதலின் அன்புச் சின்னமாக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்க வேண்டுமென்று ஆசையில் மாமன்னன் ராஜேந்திர சோழன் திருவாரூர் கோவிலில் கல்வெட்டு பொறிக்கச் செய்தான்.

கல்வெட்டு இப்படி ஆரம்பிக்கின்றது.

‘உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவரும் அனுக்கியார் பறவை நங்கையாரும் நிற்குமிடன் தெரியும் குத்துவிளக்கொன்றும்…’

பரவை நங்கை ஏற்றிய விளக்கு பல வருடங்கள் அணையாமல் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *