மறைமுக பிச்சைக்காரர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 10,662 
 

ஞாயிற்றுக்கிழமை.

காலை 11.00 மணி.

விடுமுறைதினம் என்பதால் சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கி தந்துவிட்டு ஹாயாக சோபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்தேன். சிறிதுநேரம் சேனலை மாற்றி மாற்றி பார்த்தும் மனம் டிவியில் ஒன்றவில்லை. எங்காவது வெளியில் சென்று என்று பைக்கை ஸ்டார்ட் செய்தேன். எங்கே செல்வது என்று முடிவு செய்யாமல் பைக்கை நகர்த்திய எனக்கு கடற்கரைக்கு செல்லலாம் எனத்தோன்றியது. மெதுவாக பீச்சை நோக்கி பைக்கை உருட்டலானேன்.

மதியம் நெருங்கும் வேளையில் வெயில் சுளீர் என்று அடித்தாலும் கடற்கரையில் கூட்டத்திற்கு பஞ்சமில்லை. வெளியூர் சுற்றுலா பயணிகள், காதல் ஜோடிகள், புதிதாய் திருமணமானவர்கள், பெற்றோர்கள் கைப்பிடித்து நடந்து செல்லும் குழந்தைகள் என பீச் களைகட்டியிருந்தது. காந்திசிலை அருகேயிருந்த மேடையில் நன்றாக கால் நீட்டி சாய்ந்து அமர்ந்தேன். எங்கள் கடற்கரைமேல் எப்பொழுதும் ஒரு தனி கர்வம் உண்டு எனக்கு. நன்றாக மூச்சை இழுத்துவிட்டேன். அலாதியான அமைதியை உணர்ந்தேன்.

தலையை சாய்த்து சுற்றிலும் நோட்டமிட்டேன். கூட்டத்திற்கு நடுவே சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தது சற்று வித்தியாசமாக தோன்றியது எனக்கு. அழுக்கேறிய வாயில் புடவையும் வெயிலில் காய்ந்து கருப்பான அவளது உருவமும் அருகில் உள்ள கிராமத்திலிருந்து வந்திருக்கவேண்டும் எனத்தோன்றியது. அப்பாட்டியின்மீது ஆர்வமான நான் இன்று முழுவதும் அப்பாட்டியை கண்காணிக்கலாம் என முடிவு செய்து பின்தொடரலானேன். சிலபேர் பிச்சை போட்டாலும் பலபேர் அவரை விரட்டியடித்தார்கள். எந்த சலனமும் முகத்தில் காட்டாமல் ஒவ்வொருவராக சென்று கையேந்திக்கொண்டிருந்தாள். பிச்சை எடுத்த சில்லரை காசுகளை இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்த இரண்டு சுருக்குப்பையில் ஒன்றில் கோட்டுக்கொண்டே பூங்காவை நோக்கி நகர்ந்தாள்.

மதியம் 1.30 மணி…..

பசி வயிற்றைக் கிள்ளினாலும் பின் தொடரலானேன். பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களிடம் கையேந்தி வாங்கி அருகில் புல் தரையில் அமர்ந்து சாப்பிடத்தொடங்கினாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பசிக்கு உணவு கிடைத்தபின்னும் எதற்காக பிச்சை எடுக்கிறாள். அரசாங்கமும் வாழ்வாதாரத்திற்கு நிறைய இலவசங்கள் தந்து கொண்டிருக்கிறதே என நினைத்த நேரத்தில் போன் ஒலித்தது. என் மனைவி..

“என்னங்க……………….எங்க இருக்கீங்க…..சாப்பாடு ரெடி………….பசங்க உங்களுக்காக காத்திருக்காங்க…..சாப்பிடலாம் வாங்க……….”

மதிய உணவை முடித்துவிட்டு வரலாம் என வீடு நோக்கி விரைந்தேன்.

மாலை 4.30 மணி…

கடற்கரை சாலையிலும் பூங்காவிலும் சுற்றி சுற்றி தேடியும் பாட்டியை காணவில்லை. இறுதியில் பூங்காவின் ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தாள். எழுந்திருக்கட்டும் என அருகிலிருந்த சிமெண்ட் கட்டையில் அமர்ந்தேன். ஐந்து மணியிருக்கும் பாட்டி எழுந்து புடவையை சரிசெய்து கொண்டு மறுபடியும் கடற்கரை நோக்கி நடக்கலானாள்.

இரவு 7.00 மணி….

சுருக்குப்பையில் நிறைய சில்லறை சேர்ந்திருந்தது. அடுத்து என்ன செய்யப்போகிறாள் என ஆர்வம் மேலும் அதிகமானது. அருகிலுள்ள மதுபானக்கடைக்கு சென்று சில்லறைகளை கொடுத்து நோட்டாக மாற்றி மற்றொரு சுருக்குப்பையில் பத்திரப்படுத்திக்கொண்டு அருகிலிருந்த சிமெண்ட் திண்ணையில் அமர்ந்தாள். சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க தலைப்பாகையுடனும் கையிலியுடனும் ஒருவன் அவளருகே சென்று அமர்ந்தான்.

“அம்மா…..எவ்வளவு வச்சிருக்க………”

இரண்டாவது சுருக்குப்பையிலிருந்து ரூபாய்தாள்களை எடுத்து எண்ணி அவன் கையில் கொடுத்தாள். சுமார் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும் எனத்தோன்றியது. பணத்தை வாங்கிக்கொண்டு விடுவிடுவென நடந்துபோனான். அவள் பிச்சையெடுப்பதற்கான காரணம் விளங்கிவிட்டது எனக்கு. கோபமாக பாட்டியை நெருங்கினேன்.

“என்ன பாட்டி…..எங்களையெல்லாம் இளிச்சவாயன்களுனு நினைச்சிட்டியா……. பரிதாபப்பட்டு உனக்கு பிச்சை போட்டா….அத உன் புள்ள தண்ணியடிச்சுட்டு கூத்தடிக்க கொடுத்து அனுப்பிறியா…. நாளையிலிருந்து உன்ன இங்க பார்த்தேன்………. போலிஸ்ல புடிச்சி குடுத்திருவேன்………ஜாக்கிரதை………”

சற்றும் எதிர்பாரா என் தாக்குதலால் மிரண்டு போன பாட்டி சிறிது நேரம் கழித்தே என்னை ஏறிட்டுப்பார்த்தாள். அவள் கண்கள் கலங்கியிருந்ததைக் கண்டேன். ஏதோ சமாதானம் சொல்லப்போகிறாள் என முறைத்தபடியே நோக்கினேன்.

“தம்பி….. என் பேர் முனியம்மாப்பா……திண்டிவனம் பக்கத்தில விவசாய கிராமம் எங்களுடையது. சரிவர மழை இல்லாததாலும்…எப்படியோ கஷ்டப்பட்டு விவசாயம் பண்ணினாலும் விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததாலும்….மண் புரோக்கர் தொல்லையாலும் முக்கால்வாசிப்பேர் நிலங்களை விற்றுவிட்டு வேறு தொழில் பார்க்கச் சென்றுவிட்டனர். இப்ப எங்க கிராமத்தைச் சுற்றிலும் நிறைய தொழிற்சாலைகள் வந்துவிட்டன…. குறிப்பா தண்ணி பாட்டில் கம்பெனி…. போர் போட்டு நிலத்தடி நீர் முழுவதையும் உறிஞ்சி எடுத்துட்டான். 80 அடில கிடைச்ச தண்ணி இப்ப 500 அடிக்கும் கீழே போயிருச்சு. எனக்கும் மூணு ஏக்கர் நிலம் இருக்கு. நெல்லு விதைச்சிருக்கேன். இப்ப தண்ணி பாய்ச்சர நேரம். எங்க போர்வெல்ல தண்ணி கிடைக்கல. மேலும் ஆழமா போர்போட எங்கிட்ட வசதியில்ல. போன வருஷம் பேங்க்ல வாங்கின லோனையும் கட்ட முடியல…ஊருக்கே சோறு போடற விவசாயத்தை என்னால விடமுடியலப்பா… தற்கொலை பண்ணிக்கவும் மனசு வரல… எனக்கு வேறவழி தெரியலப்பா…. என்னோட பயிரை காப்பாத்த இங்க வந்து பிச்சை எடுத்துக்கினு இருக்கிறேம்பா…. இப்ப கூட தண்ணி லாரி மூலம் தண்ணி பாய்ச்சத்தான் என் மகன் பணம் வாங்கிட்டு போறாம்பா………”

ஓங்கி பிடரியில் அடித்தார்போல் இருந்தது எனக்கு… இந்த மாதிரி ஒரு பதிலை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை…. பசி போக்கும் விவசாயி இன்னைக்கு பிச்சை எடுக்கும் நிலையை நினைத்து உள்ளுக்குள் அழ ஆரம்பித்தேன். சிறிது நேரம் பேச்சு வரவில்லை.

“பாட்டி……” குரல் தழுதழுப்புடன் வந்தது எனக்கு.

“என்னை மன்னிச்சிருங்க பாட்டி…..உங்க வேதனை தெரியாம பேசிட்டேன்…..பிச்சை புகினும் கற்கை நன்றேனு சொன்ன ஔவைப்பாட்டிக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது பாட்டிம்மா…..உங்களோட வலி, வேதனை, உழைப்பில் விளைந்த விளைபொருட்களுக்கு நாங்கள் தரும் விலை ஒன்றுமேயில்லை பாட்டி…. உண்மையை சொல்லனும்னா நாங்கதான் பாட்டி உங்ககிட்ட பிச்சை எடுத்துகினு இருக்கோம். உண்மையான பிச்சைக்காரங்க நாங்கதான் பாட்டி……….”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *