கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 1,169 
 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-13 

கோணநாயகர் ஆலயத்தின் திருப்பணிகள் ஆற்ற நியமிக் கப்பட்டவர்களுக்குரிய பணிகள் முற்றும் நிறைவேறி முடி யாததால் குளக்கோட்டரசர் அதில் தனது முழு நேரத்தை யும் காலத்தையுஞ் செலவழித்துக் கொண்டிருந்தார். 

வரிப்பத்தராகிய இருபத்தொரு குடிகளையும் அழைத்து, அவர்கள் கோணநாயகருக்கு அலகிடுதல், கோமயந்தெளித் தல், பாத்திரங்கள் சுத்தி செய்தல், திருவிளக்கேற்றல், புட்பபத்திரமெடுத்தல், மாலை கட்டுதல், பூரண கும்பங்கள் வைத்தல், பாலிகை போடுதல். அபிஷேகத்திரவியங்கள் திட்டஞ் செய்தல், பழம் பாக்கு வெற்றிலை சந்தனமெடுத் தல், நடன மாதர்களுக்குப் பின்னணி இசைத்தல், பீதாம் பரங்கள் கொய்து கொடுத்தல், வாத்தியஞ் செய்தல், திருச் சுண்ண மெடுத்தல், நெற்குற்றல், தீர்த்த மெடுத்தல், எரி துரும்புதவுதல், திருக்கோயிற் பணிவிடை முற்றுஞ் செய்தல் என்பவற்றை ஒழுங்காகச் செய்யும்படி பணித்தார். அத் துடன் அவர்களில் ஐந்து குடிகளுக்குப் பண்டாரத்தார் என்னும் பட்டமும் கொடுத்தார். 

அதன் பின்னர் மந்திரி பிரதானிகளுடன் கலந்தாலோ சித்து விட்டுத் திருநெல்வேலியிற் சிவபெருமான் கோயிலில் முதன்மை செலுத்தி வந்தவர்களில் ஒரு குடியை வரவழைத்து அவருக்குக் கனக சுந்தரப் பெருமாள் என்னும் பட்டமும் சூட்டிக் கட்டுக்குளப் பற்று முறைமையையும் அவருக்குச் சுதந்திரமாகக் கொடுத்தார். 

அத்துடன் அவர் கோணேசரின் உற்சவ காலங்களில் கையிற் காப்புக் கட்டி முன்னீடு செலுத்தி விழா நடாத்து வித்தலுடன் திருவாபரணங்களையும் மற்றும் திரவியங்களையும் பாதுகாத்தல் வேண்டும் என்றும் பணித்தார், 

அத்துடன் திரவியங்களின் அளவையும் திருவாபரணங் களின் வகைகளையும் பெறுமதியையும் கொண்ட பெரிவளப் பத்திரம் என்னும் செப்பேட்டையும் கொடுத்து, வருங்கா லத்தில் கோணநாயகருக்கு வருந்திரவியங்களின் கணக்கை அதிற் பதித்து வைக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டார். உங்கள் உறவினர் திருநெல்வேலிச் சிவபெருமான் கோயிலில் முதன்மை செலுத்தி வருவது போலவே நீர் கோணநாய கர் கோயிலிலிருந்து முதன்மை செலுத்த வேண்டும் எனவும் கட்டளையிட்டு நிலாவெளி எனும் கிராமத்திற் குடியிருத் தினார். 

சில நாட்களின் பின் குளக்கோட்டு மகாராசா காஞ்சி ‘புரத்திலுள்ள புலவரொருவராகிய சிவசிதம்பரப் பெருமான் என்பவரை அழைப்பித்து, சித்திரவித்தாரப் புலவரெனப் பட்டமும் கொடுத்து கம்பைச்சாத்திரர் என்னும் ஏட்டை யும் கொடுத்து, நீர் எப்போதும் கோணநாயகருக்கு முன் பாக நின்று திராவிட வேதத்தைப் பண்ணோடு பாடவேண் டும் எனவும் பணித்தார். 

சிவசிதம்பரப் பெருமானுக்குக் குடிநிலம் கொடுக்கும் பிரச்சினை எழுந்தபோது, அவருக்கு நல்ல விளைநிலமாக வழங்க உள்ளங் கொண்ட மன்னன், அவரையும் அழைத்துக் கொண்டு கொட்டியாரப் பகுதிக்குச் சென்று, அங்கே அவர் குடியிருப்பதற்கு ஒரு நிலத்தைத் தேர்ந்தெடுக்கும் படி கூறினார். 

ஆனால் குளக்கோட்டு மகாராசா காட்டிய எந்த நிலமும் சிவசிதம்பரப் பெருமானுக்குப் பிடியாமற் போகவே அவர் இன்னும் சிறிது தூரஞ் சென்று தனக்குப் பிரியமான ஓர் இடத்தைக் கண்டு அவ்விடம் தனக்குச் சம்பூர்ணமான இடம் என்று கூற அவ்விடத்திலேயே மகாராசா அவரைக் குடியேற்றி வைத்தார். இந்நாளில் இருந்து அந்த ஊர் சம்பூர் என அழைக்கப்பட்டு வருகின்றது. 

இப்படியாகக் கோணநாயகப் பெருமானுக்கு வேண்டிய சகலவற்றையும் செய்து முடித்த குளக்கோட்டு மகாராசா வின் மனதில் ஒரு புதிய கவலை தோன்றியது. அங்கு குடி யேற்றப்பட்ட மக்களிடையே பிற்காலத்தில் தனக்குப் பின் வரும் குழப்பங்கள், கலகங்கள் முதலியவற்றை நடுநிலைமை தவறாது தீர்த்துவைக்க ஒரு குடியை ஏற்படுத்த வேண்டும் என்பதே அக் கவலையாகும். 

அந்த நினைவு அவரை வாட்டியது. அவர் பலவாறு சிந்தித்துப் பாண்டிய ராசாக்கள் இருந்து அரசு செய்த மது ரைப் பட்டணத்திலிருந்து சந்திர குலத்தில் வந்தவகரித்த திருமலை நாடான் என்னும் ஒரு வரை அழைத்து வந்து தனி யுண்ணாப் பூபால வன்னியனென்னும் பட்டத்தையுஞ் சூட்டினார். அவர் ‘நீர் பஞ்சமென்றவர்களுக்குத் தண்ணருள் புரிந்து தன்னுயிர் போல் மன்னுயிரையும் பாதுகாத்துத் துட்ட நிக்கிரக சிட்ட பரிபாலனம் என்பதைக் கைக்கொண்டு கோணநாயகர் கோயிற்றொழும்பாளர் சகலருக்கும் முதலா கவிருந்து திருக்கோணாசல நகரை அரசு செய்வீராக’ என்று கூறி அவரை ஓர் இரத்தினச் சிம்மாசனத்தில் இருத்தி அருளினார். 

இவை யாவும் முடிந்து ஆலயத் திருப்பணியின் கடைசி அம்சமாகக் குளக்கோட்டு மகாராசா தனியுண்ணாப் பூபால வன்னிமையையும் ஏனைய தொழும்பர்களையும் வசந்த மண்டபத்துக்கு அழைப்பித்து அவர்களை நோக்கி, இன்னும் சில பணிகளை அவர்களிடம் ஒப்புவித்தார். 

ஒவ்வொரு நாளும் கோணநாயகர் எழுந்தருளியிருக்கும் இரத்தின சபையினுள்ளாகப் பசு நெய்யூற்றி ஆயிரந்தீப மேற்றி ஆலயங்களுக்கும் பதினாயிரம் விளக்கேற்றிச் சந்தனம் கஸ்தூரி முதலிய வாசனைத் திரவியங்களைப் பன்னீரிற் கரைத்து, வீதியெங்குந் தெளித்துப் பூரணகும்பங்கள் வைத்து முனைப்பாலிகை பரப்பி, வாழை கமுகு நாட்டித் தோரணங்கட்டி. வீதியெங்கும் அலங்கரித்துக் குங்குமப் பூ கோரோசனை கஸ்தூரி முதலிய திருமஞ்சனத் திரவியங்கள் அரைத்துப் பன்னீரிற் கரைத்துக் கோணநாயகருக்கும் பிடி யன்னமென் நடையம்மைக்கும் மற்றும் தேவர்களுக்கும் அபிஷேகஞ் செய்து பற்பல நிறமுள்ள பட்டுப் பீதாம்பரங் களையும் இரத்தினாபரணங்களையும் அணிந்து பரிமளசுகந்த புஷ்பமாலைகளையும் சாத்தி விநாயகருக்கு வெள்ளிக் கிண்ணத்தில் ஆறு தளிகைகளையும் சுப்பிரமணியக்கடவுளுக்குப் பொற் கிண்ணத்தில் பன்னிரண்டு தளிகையும் கோணநாயகருக்கும் மாதுமையம்மனுக்கும் தங்கக் கிண்ணத்தில் அறுபத் த் து நான்கு தளிகையும் மற்றும் தேவர்களுக்கு ஐம்பொற் கிண் ணத்தில் பிடியமுதும் பழலர்க்கங்களும் தங்கக் காளாஞ்சியில் தாம்பூலமும் வைத்து நிவேதித்து தீபதூபம் கொடுத்த பின்பு மகாமண்டபத்துக்கு வந்து அவ்விடத்தில் ஒருமுழ நீளமும் அகலமும் உயரமும் உள்ளதாகச் சாதத்தைச் சொரிந்து தட்டி, அதைச் சுற்றி இருபத்தேழு பிடிசாதம் வைத்து நெய்யிறோய்ந்த ஐந்து திரி கொளுத்தி அவ்வன் னக் குவியலிற் குத்திப் பால், பழம், பணிகாரவகை முத லாக மற்றும் நிவேதனத்துக்குரிய பொருள்களெல்லாவற் றையும் அவ்விடம் படைத்து, எங்கும் வாசனை கமழும்படி தூபங்களிட்டுத் தீபாராதனை செய்து சோடச உபசாரமும் கொடுத்து, அர்ச்சனை செய்து. மகுடாகமப்பிரகாரம் பூசை நடத்த வேண்டும். ஒவ்வொரு வருடத்திலும் உற்சவம் நடாத்தீப் பங்குனி உத்தரத்தன்று இரதோற்சவம் நடாத்த வேண்டும். இப்படியே எக்காலத்திலும் நித்திய நைமித்தி ய்ங்கள் குறைவின்றி நடாத்திவந்தால் கோணநாயகரின் அருள்கிட்டும். அத்துடன் சகலபாக்கியங்களும் பெற்று வாழ் வீர்கள்” என்று கூறினார். 

அதன்பின், தனியுண்ணாப் பூபால நோக்கி, “கட்டுக் குளப்பகுதி நாட்டிலிருப்பவர்களிடம் வரு டமொன்றுக்கு நூறுஅவண நெல் பெற வேண்டும்” எனவும் பணித்தார். அத்துடன் தேவையான வெற்றிலை, பாக்கு, பழம்,பால்,தயிர்,நெய்,இலுப்பெண்ணெய், புன்னைப் பருப்பு ஆகியவற்றைக் கொட்டியாபுரத்திலிருந்து பெற்று அங்குள்ள இறையாத தீவு என்னுமிடத்தில் செக்காட்டி எண்ணெய் எடுத்துக் கௌரிமுனையிலுள்ள ஓடக்காரனிடம் அந்நாட்டவர் ஒப்புவிக்கும்படி செய்ய வேண்டும். அவர்கள் அனுப்பும் ஆமணக்கெண்ணெய் ஆநெய் முதலியவைகளைக் கோயில் வாயிலுக்கு கிழக்கே கட்டப்பட்டிருக்கும் ஏ மு கிணற்றிலும் விட்டுவைக்க வேண்டும். “நிலங்களையும் வயல் வெளிகளையுந் திருத்தி, எனது வம்சத்தினருக்காக விடவில்லை, கோணநாயகருக்காகவே விட்டு வைத்துள்ளேன், எண்ணற்ற திரவியங்களையும் எழுதி வைத்துள்ளேன். இவைகளை ஒரு சிறிதளவாவது திருடியவர்களும் அதற்குத் துணையாக இருந் தவர்களும் தொழும்பு செய்ய வெட்கப்பட்டுக் கூலிக்கு ஆட்களை நியமிப்பவர்களும் துன்பத்திற்கு ஆளாகித் தவிப் பர். இது சத்தியம்” என்று ஆணையிட்டார். 

அத்தியாயம்-14

கடைசியாகத் தனியுண்ணாப்பூபாலனையும் கனகசுந்தரப் பெருமானையும் சித்திரவித்தாரப் புலவரையும் நோக்கித் தள தளத்த குரலில் பின்வருமாறு கூறத் தொடங்கினார், மன் னர். எனக்குப் பின்பு கயவாகு மன்னன் இவ்விடம் வந்து கோணநாயகரைத் தரிசித்து இன்னும் அநேக விளைநிலங் களையும் திருத்திக் குளங்களையும் கட்டிக் கோணநாயகருக் காகப் பணி செய்வான். அவன் வருவதற்குச் சில நாட்க ளுக்கு முன்னதாகப் பாசுபதர்கள் இறந்து விடுவார்கள் அவர்களுக்குப்பின், பிராமணர்கள் பூசை செய்யத் தொடங் குவார்கள். அப்போது இன்னும் பல அரசர்கள் வந்து கோணநாயகரை வணங்கி அவர் அருள் பெற்றுப் பல திர வியங்களை அவரது இருப்பில் இட்டுச் செல்வார்கள். அப்போது காலமாறுதலில் கொலை, களவு பொய் முதலிய பஞ்சமாபாதகங்கள் மலியும், அக்காலத்தில் நீசர்கள் இலங் கையை அரசாள்வார்கள் அவ்வேளை கோண நாய்கரைக் கொண்டுபோய்க் கழனிமலையில் வைத்துப் பூசை செய்ய வேண்டுமென்று அவர்களுக்கு கட்டளையிட்டார். 

அதன்பின் மந்திரிமாருடன் எழுந்து சென்று கோண நாயகப் பெருமானை வலம் வந்து வணங்கி, பிற்காலத்தில் நாட்டிற் பஞ்சமேற்பட்டாலும் அவருக்கு ஒரு குறையுமில் லாது காக்கும் பொருட்டு மத்தளம், நாதம், பல்லவம், வெள்ளைக்கல் என்னும் திருகோணமலைக்கு நான்கு திசை களிலுமுள்ள நான்கு மலைகளிலும் தொகையானதிரவியங்களை இருப்பாக வைத்துத் தேவதைகளைக் காவலாக நிறுத்தி, இத் திரவியங்கள் யாவும் கோணநாயகருக்கே செந்தமான வையாகும் என்று கற்களில் எழுதி வைத்துவிட்டு அரண் மனை திரும்பினார். 

இத்தனை நாட்களும் ஊண் மறந்து உறக்கம் மறந்து கோயில் திருப்பணியே எண்ணமும் நினைவுமாகச் சகலவற் றையும் சீர் சிறப்புடன் செய்து முடித்துவிட்ட திருப்தி அவர் ஆயாசத்தைப் போக்கக் கூடியதாக இருந்தது.பல நாட்களுக்குப் பின் அவர் ஆறஅமரத் தம் பஞ்சணை மெத் தையில் நிம்மதியாகச் சிறிது நேரம் படுத்துறங்கினார். எப் படித் தூங்கினாரோ அவருக்கே தெரியாது. அவர் கண்விழித் தபோது அவரைப் பார்ப்பதற்காகப் பலர் வெளி மண்ட பத்திற் காத்திருப்பதையறிந்து அவர் வெளியே சென்றார். அங்கே ஒவ்வொருவரையும் விசாரித்துப் பேசிக் கொண்டு வருகையில் சற்றுத் தூரத்தே முகிலனும் முல்லையும் நிற்ப தைக் கண்டு தனக்குள்ளாகவே புன்னகை பூத்தார். 

அவர்களுக்கு தூரத்தே நின்ற படியே அரசரைப் பார்த்து அகமகிழ்வுடன் கைகூப்பி வணங்கினர். எல்லோ ரையும் விசாரித்து அனுப்பிவிட்டு ஈற்றில் முல்லையையும் முகிலனையும் அருகில் அழைத்தார். அவர்களும் மிக்க மரி யாதையுடன் வந்து நின்றனர். 

“என்ன… முல்லை நீ எதற்காக வந்து நின்றாய் என்று சொல்லட்டுமா? உங்கள் திருமணம் எப்போது நடக்கப்போகி றது” என்று கேட்கதானே…!இம் முறை நான் உன்னை ஏமாற்றப்போவதில்லை. அதற்குப் பதிலாக உனக்கு மகிழ்வூட்டும் ஒரு செய்தியைக் கூறப்போகிறேன். கோணநாயகரின் திருப்பணி வேலைகளும் திருக்குள வேலைகளும் ஒருபடியாக குடிவுற்று விட் டன. இனிமேல் திருமணஞ் செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்து விட்டேன். மணப்பெண்கூட நிச்சயமாகி விட்டது. அது முகிலனுக்கோ உனக்கோ தெரிந்திருக்க நியாயமில்லைத்தான். அது அரசாங்க இரகசியமாக இருந்து வந்துள்ளது. ஆனால் அந்தச் சுப செய்தியை முதல் முத லாக உங்களுக்குத்தான் அறியத் தரப்போகிறேன். 

திருக்குள வேலை சம்பந்தமாக மந்திரி விசித்திரயூகியார் இங்கே வந்திருந்தபோது உன்னாச்சிக்கிரி அரசகுமாரி யாகிய அரசி ஆடக செளந்தரியைத் திருமணச் செய்து கொள்ளும் படி வேண்டினார். திருக்குளத் திருப்பணி செவ் வையாக முடிவுற்றதும் அதற்கு உடன்படுவதாக வாக்களித் திருந்தேன். கோணநாயகர் அருளால் ஆலயதிருப்பணியும் நினைத்ததற்கு மேலாகச் சிறப்புடன் நிகழ்ந்தேறிவிட்டது. ஆகவே நான் அவர்களுக்கு வாக்குக் கொடுத்தபடி அடுத்த பௌர்ணமித் தினத்தன்று மூன்று நாட்களுக்கு முன்னர். மந்திரி பிரதானிகளுடன் உங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு செல்லலாம் என்றிருக்கிறேன்” என அரசர் கூறிய போது முல்லை மகிழ்ச்சிப் பெருக்கால் பேசமுடியாதுநின்றாள். 

அதன்பின் அரசர் பலநாள் வெளியே சுற்றி சுற்றி வராததால் முகில் வண்ணனைத் தேரை எடுக்கும் படி கூறி. மந்திரியுடன் இரதத்தில் ஏறிப்பவனி சென்றார். “பௌர் ணமிக்கு இன்னும் ஏழு தினங்கள் தான் இருப்பதால் எமது பயணத்திற்கு வேண்டிய ஆயத்தங்களை மிகவும் விரைவாகச் செய்து முடிக்க வேண்டும்” எனத் தன் பக்கலில் அமர்ந் திருந்த அமைச்சரிடமும் கூறினார். 

‘அதைப்பற்றித்தான் நானும் சிந்சித்துக் கொண்டிருந் தேன் அரசே! அதற்குள் நீங்களே பேச்சை ஆரம்பித்து விட்டீர்கள் இளமைக் காலம் முதல் இணைபிரியாது அரசர் அமைச்சர் என்கிற வேற்றுமையின்றி என்னை உடன் பிறந் தான் ஒருவனைப் போல் மதித்துப் போற்றிக் காப்பாற்றி வந்துள்ளீர்கள். அந்த உரிமையுடன் தங்கள் பக்கத்தில் அமர்ந்து செல்லும் உரிமை இம்முறைப்பவனியுடன் முடிந்து விடுமே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையாகக் கூறப்புகின் அது கவலையென்று கூற முடியாது ஏனெனில் மகாராசா அவர்கள் கூடிய விரைவில் திருமணஞ் செய்து கொள்ள வேண்டுமென ஆசைப்பட்டவன் நான். ஆயினும் பழகிய தோஷம் உள் ளத்தில் ஒரு சலனம்! அவ்வளவுதான். அரசரும் அரசியும் இந்தத் தட்சணகைலாயத்தைச் சுற்றி இதே தேரிற் பவனி வரும் நன்னாளைக் கூடிய விரைவில் ஆவலோடு எதிர்பார்க் கிறேன்” என்று அமைச்சர் உணர்ச்சியுடன் கூற அரசர் சிரித்தார். 

”அமைச்சரே! தாங்கள் என்னை அதிகமாகப் புகழ்ந்து விட்டீர்கள் என்று நினைக்கூறேன். அந்த வகையில் என் தந்தை இறந்த நாள் முதலாக என் கூட இருந்து என் சுகதுக்கங்களிற் பங்கு கொண்டு என் இலட்சியங்களை நிறை வேற்ற உறுதுணையாயிருந்த தங்களுக்கு நான் எந்த வகையில் நன்றிகூற முடியும். அமைச்சரின் மனதில் உதித்த கவலை என் மனதில் உதிக்காமல் இல்லை. எனக்குத் தாங்களே ஒரு துணைவி தேவை என்று கருதி, அதைப் பூர்த்தி செய்யவும் அரும்பாடுபட்டுள்ளீர்கள். அதற்காக நான் நன்றி செலுத்தும் அதேவேளையில் தங்களுக்கும் ஒரு பிரதி உபகா ரஞ் செய்யலாம் என எண்ணியிருக்கிறேன். 

“அரசி ஆடக் சௌந்தரியின் தோழிகளில் சிறந்த ஒருத்தியைத் தேர்ந்தெடுத்துத் தங்களுக்கும் திருமணஞ் ஞ் செய்து வைத்து விடப்போகிறேன். இதையிட்டுக் கடந்த சில நாட்களாக நான் சிந்தித்து அரசியின் அமைச்சர் விசித்திரயூகியாரிடம் இதுபற்றிப் பேசினேன். அரசியிடம் அந்தரங்கத்தோழி ஒருத்தி இருப்பதாகவும் அவள் பெயர் பூங் குழலியென்றும் கூறிய விசித்திரயூகியார் அந்தப் பெண்ணுக் குத் தான் பல நாட்களாக ஒரு நல்ல கணவனைத் தேடி வந்ததாகவும், இங்கு வந்தபோது தங்களைக் கண்டதும் அந்தக் கவலை தன்னை விட்டு நீங்கிவிட்டதாகவும் கூறி மகிழ்ந்தார். பேச்சைத்தானே ஆரம்பிக்கப் பயந்த அவர் ஒரு சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்ததாகவும் சந்தர்ப்பம் கிட் டியதும் தயக்கமின்றி வெளியீட்டு விட்ட தாகவும்’* சொன்னார். 

அரசர் இப்படிக் கூறியதும் ஒரு அமைச்சர் பெண்ணைப்போற் கூச்சமடைந்தார். இதுவரை அவர் தன் திருமணத்தைப் பற்றிச் சிந்தித்ததேயில்லை. அதனால் தன் வாழ்க்கையில் திருமணம் என்ற பேச்ச எழுந்ததும் அவர் வெட்கப்பட்டார். 

இவர்களது பேச்சைத் செவிமடுத்தபடியே இரதத்தைச் செலுத்திக் கொண்டிருந்த முகில் வண்ணன் அவர்கள் பக் கம் திரும்பி “என்னை மன்னிக்க வேண்டும் அரசே! உங்கள் பேச்சைக் கேட்க எனக்குத் துக்கமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது” என்றான். 

அவனுடைய பேச்சைப் புரிந்து கொள்ள முடியாத அர சர், “என்ன முகிலா! நீ துக்கப்படும்படி அப்படி என்ன தான் நடந்து விட்டது” என்று சற்று அனுதாபத்துடன் கேட்க, “நான் முல்லையைத் திருமணஞ் செய்து கொண் டதற்காகத் துக்கப் படுகிறேன் அரசே! அல்லது அரசி ஆடக செளந்தரியின் தோழிப் பெண்களில் ஒருத்தியை எனக்கும் தாங்கள் தெரிந்தெடுத்திருப்பீர்கள்” என்று கூறி அவன் சிரிக்க, அவனுடன் சேர்ந்து அரசரும் அமைச்சரும் ‘கல கல’ என்று சிரித்தனர். 

”ஓ அதற்குச் சொன்னாயா…? ஆனால் உன்னை அடக்குவ தானால் முல்லையைப் போன்ற ஒரு வாயாடிப் பெண், அரசியிடம் இருப்பாளோ என்னவோ? எனக்குச் சந்தேகந்தான் ஆயினும் ஒன்று செய்யலாம். வேண்டுமானால் முல்லையின் அனுமதியுடன் இரண்டாந்தாரமாக ஒருபெண்ணை ..” என்று கூறிவிட்டு அரசர் சிரித்தார். “ஐயோ வேண்டாம் அரசே! முல்லையின் காதில் இவ்வளவும் விழுந்தாலே போதும் அப்புறம் நான் உயிருடன் வாழ முடியாது. ஒன்றைக் கட்டிக் கொண்டே திண்டாடுகிறேன். பிறகு மற்றொன்றைப் பற்றி நினைக்கவே பயமாக இருக்கிறது” என்றான்: 

இப்படி நகைச்சுவையுடன் பேசி மகிழ்ந்தபடி தங்கள் பவனியை முடித்துக் கொண்டு இவர்கள் அரசமாளிகைக்குத் திரும்பினர். அரசனது கட்டளைப்படி மந்திரி கலிங்கராயர் உன்னாச்சிக்கிரிக்குப் பயணமாவதற்கு வேண்டிய ஒழங்கு களைக் கவனிக்கச் சென்றார். அமைச்சர் பிரமச்சாரியாக இருந்ததால் அவர் முகிலன், முல்லை ஆகியோரின் உதவி யையும் நாடினார். ஆகவே மாளிகையில் இருந்து புறப்பட்ட அவர் நேராக முல்லையின் வீட்டுக்குச் சென்றார். 

அவருக்கு முன்னதாகவே வீடு திரும்பியிருந்த முகிலன் தன் மனைவியிடம் உன்னாச்சிகிரிப் பயணம் பற்றியும் அதற் குத் தங்களை அரசன் அழைத்ததைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போதுதான் அமைச்சரும் அங்கு வந் தார். அவரைக் கண்டதும் முகிலனும் முல்லையும் எழுந்து மன நிறைவுடன் அவரை வரவேற்றனர். 

“வரவேண்டும் அமைச்சரே! தங்களைப் பற்றித்தான் முல்லையுடன் பேசிக்கொண்டிருந்தேன். தங்களுக்கு நீண்ட ஆயுள் உண்டாகட்டும். முல்லையிடம் உன்னாச்சிகிரிப் பய ணம் பற்றிக் கூறித் தங்களுக்கும் அரசர் அங்கே பெண் பார்த்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று முகிலன் சொல்ல அமைச்சர் அடக்கத்துடன் சிரித்தார். 

“என்னைப் பற்றிய கவலை எனக்கு இல்லை முகிலா! எப் படியாவது அரசருக்கும் ஆடக சௌந்தரிக்கும் திருமணம் ஒப்பேறினால் அதுவே போதும். அரசர் உன்னாச்சிகிரிக்குப் போவதற்குத் தேதியும் குறிப்பிட்டு விட்டார். அதற்காகிய ஒழுங்குகளை நான் செய்துவிட்டேன். இன்னும் ஒரு சில கரு. மங்களை நிறைவேற்றத் தங்கள் இருவரின் உதவியும் தேவைப் படுகிறது. அதற்காகத்தான் நான் உங்களை நாடி வந்தேன்’ என்று அமைச்சர் தான் வந்த செய்தியைக் கூறினார். 

அமைச்சர் அவர்கள் எதற்கும் கவலைப்படவேண் டாம். முல்லையும் நானும் எமக்குப் பணிக்கப்படும் கருமங் களைச் செவ்வனே செய்து முடிப்போம்” என முகிலன் உறுதி யளித்ததும் அமைச்சர் சிறிது நேரம் அவர்களுடன் இருந்து பேசிவிட்டு அப்பாற் சென்றார். 

குறிப்பிட்ட நாளும் வந்து சேர்ந்தது, முகிலன் இரதத் தைச் செலுத்த அதில் அமைச்சர் பிரதானிகள் புடைசூழ அரசர் அலங்கார தேவதையாக வீற்றிருந்தார். அவர் முகத் தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. இரதத்தின் பின்னால் வந்துகொண்டிருந்த குதிரை வண்டியில் முல்லையும் இன் னும் சில பணிப் பெண்களும் மங்கலப் பொருள்களுடன் வந்து கொண்டிருந்தனர் அரசருக்குத் தாயில்லாத குறை தன்னால் நீங்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் முல்லை மிகவும் அவதானமாகக் கருமங்களை ஆற்றிக் கொண்டிருந்தாள். 

உன்னாச்சிகிரியில் விசித்திரயூகியார் அரசரின் வருகையை அரசிக்கு அறிவித்துவிட்டு நகரத்தை அலங்கரிப்பதில் முனைந் தார்! அவரது மனைவி கடந்த இரண்டு நாட்களாக அரண் மனையிலே தங்கி அரசிக்கு வேண்டிய யாவற்றையும் செய்து கொண்டிருந்தாள். அமைச்சர் விசித்திரயூகிய அவர் மனைவியும் அரசியைத் தங்கள் சொந்தக் குழந்தை போல் மதித்துத் திருமண ஏற்பாட்டையெல்லாம் துரிதமாகச் செய்து கொண்டிருந்தனர். 

உன்னாச்சிகிரிப்பட்டணம் தேவலோகம் போற் காட்சி யளித்துக் கொண்டிருந்தது. அரசி ஆடக சௌந்தரி தான் நாட்டின் முடிபுனைந்த அரசி என்பதையும் மறந்து, சாதாரண குடும்பப் பெண்ணைப் போல் மணப்பெண்ணுக் குரிய அடக்க ஒடுக்கமும் வெட்கமும் நிறைந்தவளாய், அழகு மங்கையாக அந்தப்புரத்தில் தன் தோழிகள் புடை சூழ வீற்றிருந்தாள். 

அவள் உள்ளத்தில் ஒரே இன்பக் கிளுகிளுப்பு. இனங் காண முடியாத ஒரு புதுவித உணர்ச்சி வெள்ளத்தில் நீந் தித் தத்தளித்துக் கொண்டிருந்தபோது அவளது அந்தரங் கத் தோழி பூங்குழலி அவள் அருகில் வந்து அவள் காதோடு காதாக ”அரசி! குதிரைக் குளம்புச் சத்தம் அண்மையிற் கேட்கிறது. மன்னர் மிகவும் அருகில் வந்துவிட்டாற்போலத் தெரிகிறது. அரசியாரின் நினைவு அவரைத் துரிதமாக வரச் செய்திருக்கும். இன்னும் சிறிது நேரத்தில் அரசியார் எம் மையெல்லாம் மறந்து அரசரின் இதயத்தினுள் ஐக்கியமாகி விடுவார். அதன் பின்.. !” என்று கூற அரசி முகஞ் சிவக்க உணர்ச்சிவசப்பட்டுப் ‘போடி’ என்று பொய்க் கோபத்துடன் அவளைக் கடிந்தாள். 

அத்தியாயம்-15

ஒரு சுபமுகூர்த்த வேளையில் மன்னன் குளக்கோட்ட னும் அமைச்சர் பிரதானிகளும் ஏனையோரும் உன்னாச்சி கிரிப் பட்டணத்தை அடைந்தனர். பூரண கும்பங்களுடன் மாவிலைத் தோரணங்களினால் அலங்கரிக்கப்பட்ட பந்தரின் கீழ் அவர்களை வரவேற்று உபசரித்த ஆடகசௌந்தரியின் அமைச்சரும் அவர் மனைவியும் ஏனைய பிரதானிகளும் மேள வாத்தியத்துடன் நன்றாக அலங்கரிக்கட்ட தெருவழியே அழ கான இரதத்தில் அவர்களை ஏற்றி மக்களின் கரகோஷத்தி னிடையே அழைத்துச் சென்றனர். இருமருங்கிலும் நிறைந்து நின்ற மக்கள் கூட்டம் தமது அரசியின் கரம் பற்றப்போ கும் மன்னவனை ஒருமுறை கண்ணாரப் பார்த்துவிட வேண் டும் என்னும் ஆசை மிகுதியால் நெருக்குண்டு தள்ளுண்டு இடிபட்டு இரதத்தின் அருகே வந்து கொண்டிருந்தது. 

அன்பு சொட்டும் அத்தனை முகங்களையும் பார்த்த மன் னளின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. அமைச்சர் கலிங்கராயர் மன்னனைப் பெருமிதத்துடன் பார்த்தார். மன்னனின் வரவைப் பேராவலுடன் அரசியார் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று மந்திரி விசித்திரயூகியார் கூறிய தும், மன்னனின் முகம் நாணத்தால் சிவந்தது; வீதியின் இருமருங்கிலும் நின்ற மக்கள் கூட்டம் தமது அரசிக்குக் கணவனாக வரப்போகும் மன்னனை மலர் தூவி வரவேற்ற னர். எங்கும் மங்கலவாத்தியங்கள் ஒலித்தன. அரசி ஆடக சௌந்தரியின் அரண்மனை வாயிலில் இரதம் வந்து நின்ற தும் அரசர் மந்திரி பிரதானிகளுடன் இரதத்தை விட்டு இறங்கினார்.வாயிலில் வரிசையாக நின்ற பெண்கள் ஆராத்தி எடுத்தார்கள். வாயிலின் சற்றுத் தூரத்தே வேறு பெண்கள் கூட்டங் கூட்டமாக நின்றனர். எல்லோருடைய கண்களும் அரசன்மேற் பதிந்திருந்தன. அரசர் எல்லா விதத்திலும் எங்கள் அரசிக்குப் பொருத்தமானவராகவே இருக்கிறார் என்று அங்கு நின்றோர் வியந்தனர். அரசி நிஜமாகவே அதிர்ஷ்டசாலிதான் என்று வியந்தனர் இன்னுஞ் சிலர். 

அந்தப் பெண்கள் கூட்டத்தில் நின்ற ஒருத்தி மற்ற வர்களைப் பொருட்படுத்தாமல் ‘திடீர்’ என உள்ளே ஓடினாள். ஒரு சில நிமிட நேரத்தில் அவள் அந்தப்புரத்தை அடைந் தான். அங்கே அழகுச் சிலையாக அரசி ஆடகசௌந்தரி ஒரு பொன்னாசனத்தில் அமர்ந்திருக்கச் சேடியர் இருவர் அரசியின் இருபுறமும் நின்று விசிறிக் கொண்டிருந்தனர். அரசியை நோக்கி வந்துகொண்டிருந்த பெண்ணைக் கண்ட தும் அவர்கள் விசிறியை ஒருபக்கம் வைக்துவிட்டு அப்பாற் சென்றனர். 

சேடியர்கள் மௌனமாகத் தன்னை விட்டு அகன்ற போதே பூங்குழலி அங்கே வந்துவிட்டாள் என்பதை அரசி உணர்ந்துகொண்டாள். பூங்குழலி தன்னைப் பார்க்க வரும் போது மற்றவர்கள் உடனடியாகச் சென்றுவிட வேண்டும் என்பது அரசியின் கட்டளையாக இருந்து வந்துள்ளது. பூங் குழலிக்கு அந்த அரண்மனையில் அவ்வளவு மதிப்பு இருந் தது. அரசி தன் விழிகளை உயர்த்திப் பூங்குழலியைப் பார்த்தாள். 

அரசியின் பார்வையைப் புரிந்துகொண்ட பூங்குழலி “தேவியின் வருங்காலக் கணவரைக் கண்குளிரப் பார்த்து விட்டேன். இதுவரை அவரது அழகையும் கம்பீரத்தையும் பிறர் வர்ணிக்கத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்று அவர் அழகை நேரிலேயே கண்டுகொண்டேன். அர சியார் உண்மையில் அதிர்ஷ்டசாலிதான். ஒருதரம் அவ ரைப் பார்த்துவிட்டு அவர்மேல் வைத்த விழிகளை எடுக்க முடியாமல் திண்டாடப் போகிறீர்கள் என்று கூற அரசி யின் மார்பகம் பெருமிதத்தினால் விம்மித் தாழ்ந்தது. 

‘நீதான் ஏதோ புகழ்கிறாயடி… எனக்கென்னவோ நினைக்கவே பயமாக இருக்கிறது. என் இதயம் பயத்தினால் மிகவும் வேகமாக அடித்துக் கொள்கிறது. இன்று அரசரை  முதன்முதற் சந்திக்கப் போகிறேன். நாளை மறுநாள் எனக்கும் அவருக்கும் திருமணம் நடக்கும்போது, அச்சத்தினால் நான் நடுநடுங்கி மயக்கம் போட்டு விழுந்தாலும் விழலாம்” என்று அரசி தயக்கத்துடன் கூற, “பரவாயில்லை. தங்களைத் தாங்கிக்கொள்ள மன்னர் தங்கள் கூடவேயிருப்பார்” என்று கூறிச் சிரித்தாள் பூங்குழலி. 

”போடி! உனக்கு எப்போதும் குறும்புதான். பொறு பொறு.. உனக்கும் ஒரு காலம் வரத்தானே போகிறது. அரசரின் அமைச்சரையும் நீ பார்த்திருப்பாய். எப்படியடி அவர்? அழகரா? கம்பீர புருஷரா? நீ கவனிக்க வேண்டி யது அவரைத்தானே. உனக்கு அவரைப் பிடித்திருக்கிறதா பூங்குழலி? இதுவரை உன்னிடம் இருந்து ஒன்றை மறைத்து விட்டேன். அதற்காக உன்னிடம் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன். தட்சிண கைலாயத்திலிருந்து அமைச்சர் விசித் திரயூகியார் திரும்பியபோது அரசருக்கும் எனக்கும் திரு மணம் நிச்சயமாகி விட்டதைக் கூறிய அதேவேளையில் ன் னும் ஒரு செய்தியையும் என்னிடம் கூறிவைத்தார். அதா வது மன்னன் குளக்கோட்டனின் மந்திரியார் கலிங்கராய ருக்கு எங்கள் அரண்மனையில் பெண் பார்க்கும்படி அவர் கூறிய அந்த நேரமே நான் என் உள்ளத்தில் உன்னைக் கணக்குப் போட்டுவிட்டேன். அமைச்சரிடம் நான் எனது அபிப்பிராயத்தைக் கூறியபோது, அவர் அதை அமோகமாக வரவேற்றார். இதை உன்னிடம் கூறாமல் மறைத்து வைத்து ஒருநாள் உன்னை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க வேண் டும் என்று காத்திருந்தேன்.” என்று அரசி கூற, பூங்குழலி அதிர்ச்சி ஒருபுறமும் வெட்கம் ஒருபுறமுமாக எதுவும் பேச முடியாமல் நின்றாள். 

“அடடே! உனக்குக் கூட வெட்கமாடி. என்னால் நம் பவே முடியவில்லை. எல்லாந் தனக்கு வந்தால் இப்படித் தான். போடி இப்படிப் பேசாமடந்தையாக நிற்காமல் ஓடிப்போய் உன் வருங்காலக் கணவரைப் பார்த்துவிட்டு உன் முடிவை என்னிடம் சீக்கிரமாக வந்துசொல். நான் மன்னரைச் சந்திக்கும்போது உன் முடிவையும் கூறவேண் டும்” என்றாள் அரசி. 

என்னைப் பேச முடியாமல் மடக்கிவிட்டீர்கள் மகா ராணி!’ என்று கூறிப் பூங்குழலி அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். அவன் அரசர் வீற்றிருந்த பந்தரை அடைந் தாள். அரசர் கம்பீரமாக வீற்றிருக்க அவர் பக்கத்தில் மந்திரி பிரதானிகள் அமர்ந்திருந்தனர். பணிப்பெண்கள் இருவர் சாமரை வீசிக்கொண்டிருந்தனர். 

பூங்குழலி தூரத்தில் நின்றபடியே அரசரையும் அவர் பக்கலில் அமர்ந்திருந்தவர்களையும் ஒருமுறை நோட்டம் விட் டாள். அரசரின் வலப்புறத்தே ஆஜானுபாகுவாகக் கிட்டத் தட்ட அவரது வயதை ஒத்த ஒருவர் அமைச்சருக்குரிய மரியாதைகளுடன் வீற்றிருந்தார். அரசர் அடிக்கடி திரும் பித் திரும்பி அவரிடம் பேசியதில் இருந்து அவர்தான் அமைச்சர் கலிங்கராயராக இருக்க வேண்டுவெனப் பூங் குழலி ஊகித்துக் கொண்டாள். அவள் அமைச்சரை உற்று நோக்கிய அதேவேளையில் அமைச்சரின் கண்களும் அவளை நோக்க, இருவர் விழிகளும் பேசிக்கொண்டன. அதையடுத்து அமைச்சரின் விழிகள் அவளை அடிக்கடி பார்த்துக்கொண் டன. அவளை அறியாமலே அவள் உள்ளத்தில் ஓர் இன்ப உணர்ச்சி பிரவாகமெடுத்தது. 

அரசருக்குரிய அரசாங்க மரியாதைகள் யாவும் முடி வுற்றபின் அரசியைச் சந்தித்துப் பேசுவதற்கு வேண்டிய ஒழுங்குகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து அமைச் சர் விசித்திரயூகியார் பூங்குழலியை நோக்கி வந்து அந்தப் புரத்தினருகே இருக்கும் இரத்தின மண்டபத்தில் அரசியைச் சந்திக்க அரசர் வரப்போகும் செய்தியைச் சென்று அரசி யிடம் தெரிவிக்கும்படி கூறப் பூங்குழலி திவும்பவும் அந்தப் புரத்தை நோக்கி நடந்தாள். 

அங்கே அரசியிடம் அவள் செய்தியைக் கூற, விசித்திர யூகியாரின் மனைவி அரசியை ஒரு பதுமைபோல் அழைத் துச் சென்று இரத்தின மண்டபத்திலுள்ள தாமரைப்பூ இருக்கையில் அமர்த்திப் பால், பழம், வெற்றிலை, பாக்கு, பூ முதலாய மங்கலப் பொருள்களையும் அங்கே கொண்டு வந்து வைத்து அரசியின் காதோடு ஏதோ கூறிவிட்டு அகன் றாள். அதையடுத்துப் பூங்குழலியும் அரசியின் பக்கம் வந்து அவள் காதோடு ஏதோ கூற, அரசி பொய்க் கோபத்துடன் அவளைப் பார்த்துவிட்டு “முதலில் உன் முடிவைக் கூறடி” என்று பணித்தாள். 

அதற்குள் அரசர் வரும் அறிகுறிகள் தென்படவே, பூங்குழலி அரசியை வாழ்த்திவிட்டு அப்பாற் செல்ல எத் தனித்தபோது “உன் முடிவு என்னடி” என்று அரசியே மீண்டும் கேட்கச் ‘சம்மதம்” என்று கூறிவிட்டுக் கும்ப லுக்குள் ஓடி மறைந்துவிட்டான் பூங்குழலி. 

அரசிக்கு உடலெல்லாம் வியர்த்தது. நெஞ்சிலும் பயந் தோன்றியது. இலங்கை முழுவதையும் அவள் ஒரு குடைக் கீழ் செங்கோலோச்சிக் கொண்டிருந்தபோதும் அவளால், தான் ஒரு பெண் என்பதை மறக்கமுடியவில்லை. மறக்கவே முடியவில்லை. அரசியல் விடயமாக அவள் பல ஆண்களு டன் பேசிப் பழகியிருந்தபோதும் அரசருடன் பேசுவதற்கு அவள் கூச்சப்பட்டாள். அரசர் அவள் வாழ்க்கையில் ஒரு பாதியாகப் போகிறார். ஆகவே அது அவளுக்குப் பெரிய சங்கடமாக இருந்தது. அவள் இப்படித் தத்தளித்துக் கொண்டிருந்தபோது அமைச்சர் விசித்திரயூகியார் அரசனை அழைத்து வந்து அவள் எதிர்ப்புறத்தில் அமைக்கப்பட் டிருந்த பத்மாசனத்தில் அமர்த்தினார். 

அந்த இரத்தின மண்டபத்தில் இப்போது அரசியும் மன்னன் குளக்கோட்டனும் மட்டுமே தனியாக அமர்ந்திருந்தனர். அரசி வெட்கம் மீதூரத் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள். அரசியையே கண் இமைக்காமற் பார்த் துக்கொண்டிருந்த மன்னர் அங்கே நிலவிய மௌனத்தைக் கலைக்க விரும்பி “கோயில் திருக்குளப் பணியில் தங்கள் பூதப்படைகள் ஆற்றிய தொண்டு மிகவும் மகத்தானது. அதற்காகத் தங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூற, அரசி ஆடகசௌந்தரி தன் தலையை நிமிர்த்தி அரசனைச் சாடையாகப் பார்த்தாள். அதேவேளை அரசரும் அவளைப் பார்க்க, இருவர் விழிகளும் ஒன்றையொன்று ஊடுருவிய மகாசக்தியில் இருவரும் ஒரு சில நிமிடம் தம்வசம் இழந்து நின்றனர். 

“என்னாற் செய்யக்கூடியதைச் செய்தேன். இதற்கெல் லாம் நன்றி சொல்வதா” என்று அரசி மெதுவாகக் கூறி விட்டுப் பூமியை நோக்கினாள். “தங்களுக்கு என்னைத் திரு மணஞ் செய்துகொள்ளப் பூரண சம்மதந்தானே” என்று அரசர் அடுத்த வினாவை எழுப்ப, “பூரண சம்மதமேதான். கரும்பு தின்னக் கூலியா?’ என்று அரசரை மடக்கினாள் அரசி. 

அடுத்தநாள் வேதாகம விதிப்படி வெகு கோலாகலமா கக் குளககோட்டான் – ஆடகசௌந்தரி திருமணம் நடந் தேறியது அதையடுத்துக் கலிங்கராயருக்கும் பூங்குழலிக்கும் திருமணம் நடந்தது. அத்திருமணத்தில் முக்கிய பாத்திரங் களாக முகிலன், முல்லை, விசித்திரயூகியார், சிவகாமி ஆகி யோர் கலந்துகொண்டனர். அதன்பின் சிலகாலம் உன்னாச் சிக்கிரிப்பட்டணத்தில் தங்கியிருந்து விட்டுப் பின்பு தன் மனைவி ஆடகசௌந்தரியுடன் சென்று கோணநாயகரைத் தரிசிக்க வேண்டும் என்கிற வேணவாவினால் இருவரும் மந்திரி பிர தானிகளை அழைத்துக் கொண்டு காடு,மலை, ஆறு யாவும் கடந்து திருக்குளத்துக்கு வந்து சேர்ந்தார்கள். 

ஆடகசெளந்தரி தன் தோழிப் பெண்களுடன் திருக் குளத்தினுள் இறங்கிப் புனல் விளையாடியபோது குளக்கட் டில் ஓரிடம் தாழ்ந்திருப்பதைக் கண்ட அரசி அதைக் குறிப் பிட்டுக் காட்ட, அவள் பின்னால் வந்த பணிப்பெண்கள் கற் களும் மண்ணும் போட்டு நிரப்பி அதை உயர்த்திவிட்டார் கள். அது இன்றும் “பெண்கள் கட்டு’ என்று வழங்கப்பட் டுவருகிறது. 

அதன் பின் குளக்கோட்டு மகாராசாவும் அவர் நாய்கி ஆடகசெளந்தரியும் அவ்விடம் விட்டு நீங்கித் தம்பலகாமம் சென்று அங்குள்ள விளைநிலங்களின் சிறப்பைப் பார்த்து விட்டு அம்மார்க்கமாகவே திருக்கோணாசலத்துக்கு வந்தனர். அங்கே பாவநாச தீர்த்தத்தில் நீராடிக் கோயிலுக்குச் சென்று கோணநாயகரையும் பிடியன்ன மென்னடையம் மனையும் வணங்கினர். கோயிலின் சிறப்பைக் கண்டு அரசி யார் தன் கணவனைப் பெருமிதத்துடன் பார்த்தாள். 

அரசன் சுற்றுப்புறத்தை மறந்து, சூழலை மறந்து கோணநாயகரோடு ஐக்கியமாகியிருந்தார். அவர் தன் பிரார்த்தனையை முடித்துத் தன் நிலை பெற்றபோது அரசி தன்னையே கண் இமைக்காமல் பார்த்து நிற்பதைக் கண்டு தனக்குள் சிறிது வெட்கியபோதும் அதை வெளிக்காட்டமல் என்ன தேவி! கோணநாயகரைத் தரிசிக்க வந்து என்னையே இமைக்காமல் பார்த்து நிற்கிறாய?” என்று வினவி “கோண நாயகரின் மகிமையை என்னால் வியக்காமல் இருக்கமுடிய வில்லை அரசே அதே நேரத்தில் கோண நாயகரின் மகிமை…… உலகெலாம் உணரும்படி இந்த அற்புத சிருஷ்டியான (ா லயத்தை உருவாக்கிவைத்த உங்களை என்னால் வாழ்த்தா பார்த்த மல் இருக்கமுடியவில்லை. அதுதான் உங்களைப் படியே நின்றேன்” என்றாள் அரசி. 

“எல்லாம் அவன் செயல் தான் தேவி! இதைச் சிருஷ்டித்ததோடு என் கடமை முடிந்துவிடவில்லை. இனி வருங்கால சந்ததியினர் இந்தத் தேவாலயத்தைப் பக்தி சிரத்தையுடன் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்பதுதான் என் புதிய கவலை” என்று கூறிய அரசர் தேவியையும் அழைத்துக்கொண்டு கோணநாயகரிடம் விடை பெற்ற போது, அவர்களை ஆசிர்வதிப்பதுபோல் கோயில் மணிஒலித்தது. 

“பார்த்தீர்களா அரசே! நீ கவலைப்படாதே என்று கோணநாயகர் அந்த மணியோசைமூலம் உங்களுக்கு அபயமளிக்கிறார்” என்று தேவி கூறிச் சிரிக்க, அரசரும் அவளுடன் சேர்ந்து சிரித்தார்.

(சுபம்)

– கோவும் கோயிலும் (நாவல்), முதற் பதிப்பு: ஜனவரி 1980, நரெசி வெளியீடு, திருகோணமலை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *