கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: January 18, 2024
பார்வையிட்டோர்: 4,255 
 
 

(1998ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 5-10

முன்னுரை 

பாண்டியர்கள் மதுரையை ஆண்ட பிறகு அவர்களது ஸ்தானத்திற்கு வந்தவர்கள் நாயக்கர்கள். விஜய நகர அரசருக்கு உட்பட்டு மதுரை ராஜ்யம் முழுவதும் அவரது வசமாயிற்று. 

வடக்கே விஜயநகரம் தொடங்கி, தெற்கே கன்னியாகுமரி வரையும் அவர்களது ஆட்சி நீண்டது. அப்பொழுது மதுரையை ஆண்டவர்கள் மிகப் பலவீனமானவர்கள். எனவே அந்தத் தென்னாட்டில் குழப்பமும், கலகமுமாக இருந்தது. 

பாண்டிய மன்னன் தன் விருப்பப்படி வாழ ஆரம்பித்தான். சில கூட்டுச் சேர்க்கை சேர்ந்து கொண்டு விஜய மன்னருக்குப் பெரும் கவலை கொடுக்க ஆரம்பித்தான். இந்த நிலையில் ஒருநாள் விஜயநகர மன்னர் மிகவும் நொந்து போய்விட்டு, தமது அரச சபையில் கூறினார்: 

“இந்தப் பாண்டிய அரசுகளை அழித்து விட்டு. அங்கே நம் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு ஒரு தகுதியான ஆள் நம்மிடம் இல்லையா? இது வருத்தமாக இருக்கிறதே?” என்று கூறினார். 

அதற்குப் பதில் கூறுவது போல் எழுந்தார் ஒரு வீரர். அவர் பெயர் நாகம் நாயக்கர், ‘மதுரையை அடக்குகிறேன்’ என்று சென்றார். அடக்கினார். அங்கே ஆட்சியை நிலைநிறுத்தினார். அப்படி அவர் நல்ல அரசை அமைத்து வாழும்போது அவரே விஜய நகர பேரரசை எதிர்க்க ஆரம்பித்தார். இது அந்த அரசருக்குப் பெரும் துரோகமாகத் தோன்றியது. அரசர் வெகுண்டு எழுந்தார். “இந்த நாகம நாயக்கரை எதிர்ப்பதற்கு யாரும் இல்லையா?” என்று சபையில் அறை கூவினார். 

அப்பொழுது எழுந்தார் ஒரு வீரன். அவனைப் பார்த்து சபையினர் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள் எனில், அந்த வீரன் யாருமல்ல, மதுரையில் அப்பொழுது ஆண்டு வந்த விஜய நகருக்குத் தலைவலி கொடுத்து வந்த நாகம நாயக்கரின் மகன்தான் அவன். “என்ன இது மகன் தந்தையை எதிர்ப்பதா?” என்று கேட்டார்கள் எல்லோரும். இது சரித்திரத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சி. இதை வைத்துத்தான் இந்தக் கதை புனை சூட்டப்பட்டு இருக்கிறது. 

இந்தக் கதை ஒரு பிரபல வெளிநாட்டுக் கதைப் போன்று இருக்கிறது. ரஸ்தம். ஷொராப் என்ற தந்தையும், மானும் எதிர் எதிராக நின்று சண்டையிட்டார்கள். அந்தக் கதை பிரசித்திப் பெற்றது. கிட்டத்தட்ட அதே போன்று தான் இந்தக் கதையும். அந்த வீர இளைஞன் மதுரை சென்று தந்தையை எதிர்த்தானா? அவரை ஜெயித்தானா? பிறகு தந்தையை என்ன செய்தான்? என்பனவெல்லாம் இந்தத் தொடர் நாவலைப் படிப்பவர்கள் அறிந்து கொள்வார்கள். அற்புதமான வரலாற்றுக் கதை இது. அந்நாளைய பழக்க வழக்கங்களைப் பற்றி நிறைய எழுதப்பட்டு இருக்கிறது. 

சமூக வாழ்வு எப்படி இருந்தது என்பதை இந்தக் கதை நன்கு எடுத்துக்காட்டுகிறது. தென்னாட்டில் எப்படி ஒரு நாயக்க வம்சம் தொடங்கி பல நூற்றாண்டுகளாக வாழ்ந்தது என்பதையும் விளக்குகிறது இந்த நாவல். இது ராணியில் தொடர் கதையாக வந்தது. அப்பொழுது நிறைய பேர் கவனத்தைக் கவர்ந்தது. இதன் நடையை ரசித்தவர்கள் பலர். புனையப்பட்டிருந்த கதையை ரசித்தவர்கள் பலர். இப்படி பல தரத்தாரும் ரசிக்கும் வண்ணம் எழுதப்பட்ட இந்தக் கதைதான் இங்கே புத்தக வடிவில் வந்திருக்கிறது. 

ஸ்ரீ வேணுகோபாலன் 

அத்தியாயம்1 

மணிகள் எங்கும் சப்தித்தன.

“ஓம், ஓம்..” என்ற வயம் எங்கும் கேட்டது.

பூ வாசம் எங்கும் நிரம்பியது. 

தூபத்தின் மணம் மெல்லியதாக இருந்தது.

சங்கரநயனார் சன்னதியில் ஆடித் தவசுக் கூட்டம்.

கோவில் பூராவும் முக வெள்ளம்! 

மேளங்கள் முழங்கின. 

முரசங்கள் அதிர்ந்தன. எக்காளங்கள் எக்கலித்தன.

ஊர் முழுவதும் ஒரு பக்தி சமுத்திரம் பொங்கி எழுந்தது.

ஊருக்கு வெளிப்புறத்தில் அந்த இளைஞன் அப்போது தான் வந்து இறங்கினான். அவன் குதிரை களைத்திருந்தது. தலைக் கயிற்றைப் பற்றி மெல்ல அந்தச் கரும் புரவியை அழைத்துக்கொண்டு ஆழ்வாரம்மாள் சத்திரத்தை நோக்கி நடந்தான், அவன். 

சத்திரம் தனித் திடல் மீது இருந்தது. சுற்றிலும் தென்னையும், கமுகும். மாவும் கொழித்திருந்தன. பார்ப்பதற்கு ஒரு நிழற்கூட்டம் எப்போதும் அங்கே தங்கி இருந்தது. 

மழை பெய்திருக்க வேண்டிய நாட்கள் அவை கடும் வெயில்தான் அடித்தது. அந்த இளைஞன் கண்ணுக்கு அந்தச் சத்திரம் சொர்க்கம் போல் தெரிந்தது. 

மேடு மீது ஏறி நிழல் பரப்பில் நுழைந்ததும் “அப்பா” என்றான. 

அப்படி ஒரு குளிர்ச்சி அவனை அணைத்தது. 

சத்திரம் பெரிய காரைக் கட்டிடம் நிரம்ப விஸ்தார மாக இருந்தது. பெரிய பெரிய தூண்கள் முகப்பில் தெரிந்தன. 

இடது பக்கம் பெரிய கிணறு ஒன்று தெரிந்தது. வலது புறத்தில் தாழ்ந்த கூரையுடன் நீளக்கொட்டில் ஒன்று தெரிந்தது. 

இளைஞன், சத்திரத்து வாசலை அடைந்ததுதான் தாமதம். 

“வரணும் முல்லை ராமரே! வரணும்!” வரணும்” என்று குரல் ஒன்று கேட்டது. 

கைகூப்பிய முறையில் சத்திரத்துக் கணக்கர் எழுந்து ஓடிவந்தார். 

“எப்போது வந்தீர்கள்: பயணமெல்லாம் வசதியாக இருந்ததோ! களைப்பாக இருக்கிறீர்களே! உள்ளே வந்து அமரவேண்டும்!” என்று விநயம் ததும்பும் மொழியில் கூறி, இரு கைகளாலும் உள்ளே போகும் தடத்தைக் காட்டினார்.

“அப்பா காலன்கரையான்! காலனகரையான் என்று அழைக்க- 

பதினெட்டு பிராவமுள்ள ஒரு சிறுவன் முண்டாசுக் கட்டோடு ஒடி வந்தான். 

கணக்கருக்கும், முல்லைராமனுக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, குதிரைக் கயிற்றை அவன் வாங்கிக் கொண்டான். 

“அய்யா, கணக்கரே! எனக்கு நேரம் அதிகமில்லை! இப்போதே தாமதமாகிவிட்டேன். குளித்துவிட்டுதான் கோவிலுக்குப் போகவேண்டும். உணவு இப்போது வேண்டாம்!” என்று கூறி பரபரப்பாக உள்ளே போனான். முல்லைராமன். 

உள்ளே தாழ்வாரம் தாண்டி, நடையைத் தாண்டியதும், பெரும் முற்றம். 

அதில் வெயில் பளீர் என்று காய்ந்துகொண்டிருந்தது.

முற்றத்தைச் சுற்றிலும் அறை அறையாக இருப்புகள். அவற்றில் ஒன்றின் கதவைத் திறந்து இனைஞனை உள்ளே போகவிடுத்தார் கணக்கர். 

உள்ளே போன சில கணங்களில் வெளியே வந்தான். சத்திரத்துத் தோட்டத்து வழியே ஒரு ஒற்றையடித் தடத்தில் நடக்க ஆரம்பித்தான், 

தோட்டம் கிட்டத்தட்ட ஒரு அரணியம் போல் இருந்தது. புன்னை, வேம்பு, கோங்கு, பிள்ளை மருது என்று பலவகை மரங்கள் ஒன்றை ஒன்று நெருங்கி வளர்ந்திருக்க, 

அங்குப் பாய்ந்திருந்த நிழலிலேயே ஒரு குளிர் இருந்தது. 

மேடும் பள்ளமுமான அந்தத் தடத்தில் போவதில் என்ன மகிழ்ச்சி! இந்தச் சத்திரத்துக்கு வந்தால், அந்தத் தடம் அவனை இழுத்துவிடும். 

ரம்மியமான மணத்துடன் நடையிட்டுச் செல்ல, சீக்கிரம் அந்தச்சுனை வந்துவிட்டது. 

ஆழ்வார் சுனை என்றார்கள் அதை! 

அது ஒரு இயற்கைக் காட்சி அல்லா ஒரு சித்திரம் போலத் தெரியும். 

மேல்பக்கம் பாறை ஒன்றில் புகுந்து, தண்ணீர் நுரையோடு வழுவி விழ- 

விழுந்த இடத்தில் கோணல் வட்டமாக ஒரு பெரிய கனை.

சுனையைச் சுற்றி வர, விருட்சகங்களின் செழிப்பு! கீழே சுலபமாகக் கிடைக்கும் நீரைக் குடித்து வானத்தை எட்ட முயல்வது போல ஒங்கி நின்றன. 

படிகள் போல் செதுக்கப்பட்ட பாதைகள் கீழே இறங்கி, நீர் விளிம்புக்கு வந்தான். 

நீருள் காலை வைக்கு முன், எதிர்க் கரையில் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். 

மீண்டும் ஒருமுறை திகைப்பு ஏற்பட்டது. அங்கே அதி ரூபமான பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். 

தண்ணீரில் அவள் கால் அமிழ்ந்து சிறு அலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. 

நகையைக் கழற்றி அவள் கொடுத்தவண்ணம் இருக்க, கரையில் அவளது தாதி அதைப் பெற்றுக் கொண்டிருந்தாள். 

நீண்டமூச்சு ஒன்று அவனிடம் வந்தது. இது போன்ற பொன் நிறத்தில் யாரையும் கண்டதில்லை. தேகம் நல்ல காந்தமுடன் ஒளிர்ந்தது. முகத்தில் ஒரு அபூர்வ லாவண்யம்! இடை சிறுத்து வளைய உடல், ஒரு கவிதைபோல இருந்தது. 

ஆமாம்! இவளைப் பார்த்தாலே ஒரு கவிதையின் பரவசம் வருகிறதே என்று நினைத்தான், அவன். 

இவளாகத்தான் இருக்குமா? இருக்கலாம்! இருந்தால் நல்லது. இங்கே குளிக்க வந்திருக்கிறாளே! பரிவாரம் இல்லாமல். 

ஒரு பெண்ணைக் குளிக்கும் போது பார்ப்பது தவறு என்று கரை ஏறினான். சற்றே மேலே போய் ஒரு மர நிழலில் ஒளிந்திருந்தான். 

கவிதைப் பெண் பிறகு சுனையில் இறங்கினாள். ஆனந்தமாக மூழ்கினாள். பெரிய பெரிய அலைகள் அவளைச் சுற்றி எழுந்தன. 

கரைகளில் வந்து மோதி கிலுக் கிலுக் என்று சிரித்தன. 

அரை நாழிகை சென்ற பிறகு திரும்பிப் பார்க்க, அவள் போய்விட்டாள் என்று தெரிந்தது. 

மனதில் ஒரு பரவசம் தோன்றியிருந்தது. எதிர்க்கரையை அன்போடு பார்த்தான். சித்திரம் அவள் பெண்களிலே ஒரு சித்திரம்! 

உடனே அவனது அலுவல்கள் நினைவுக்கு வந்தன தண்ணீரில் அவசரமாக இறங்கி அவசரமாகக் குளித்தான் பிறகு சொட்டும் ஆடைகளோடு வெளியேறி துவட்டிக் கொண்டு செல்ல ஆரம்பித்தான். 

சத்திரத்துக்கு வந்து உலர்ந்த ஆடை உடுத்திப் புறப் படுவதற்கு, நாழிகை ஆகிவிட்டது. அவசர அவசரத்தில் புறப்பட்டான். 

இப்போது அவன் முகம் பொன் தட்டம் போல் மின்னியது. 

கண்ணில் ஒரு இடி மின்னல் அடிக்கடி சொடுக்கியது. நெற்றியில் அவன் அழகின் விலாசம் பூராவும் எழுதப் பட்டிருந்தது. 

தோளில் தொங்கும் பை ஒன்றில் கத்தை கத்தையான எட்டுக் கட்டுகளுடன் கோவிலை நோக்கிப் புறப்பட்டான். கோவிலை அடைந்த போது, குறு வியர்வை அவன் நெற்றியில் துளிர்த்தது. 

அதுவும் முத்துக்கள் போல அழகாக துளிர்த்திருந்தது. 

கோவில் முழுவதும் கூட்டம் நிரம்பி இருக்க அதனூடே நழுவிச் செல்லும் வசம் அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது. 

அவன் ஊடுறுவுவதைப் பார்த்தால், மேகக் கூ டத்தில் சந்திரன் புகுந்து ஒடுவது போல இருந்தது. 

சன்னதியை அடைந்ததும் மெய்மறந்து நின்றான் உள்ளே வழிபாடுகள் நடந்துகொண்டிருந்தன. 

முல்லைராமனின் கண்களில் பக்தி புத்தது. அவனது பரவசம் அவன் முகத்தை தாமரையாக விரித்தது. மெய் மறந்து கைகூப்பினான்.

அடுத்த கணம், அவன் பாடத் தொடங்கினான்.

கணீர் என்று அவன் குரல் எடுபட்டதும் ஒருகணம் மற்ற சத்தங்கள் அனைத்தும் சற்றே அமிழ்ந்தன. 

எல்லோரது கவனமும் முல்லைராமன் மீது சென்றன.

குழந்தைகள்கூட வாய் மூடிவிட்டன. 

பொன் சிலை ஒன்று புதிய வார்ப்பாக நிற்பது போல அவன் நின்றான். 

குரலில் தேன் கசிந்தது. அவன் இசைத்த கீதம் பட்டு நூல் போல சிலு சிலு என்று எங்கும் பரந்தது. 

சன்னதியில் பிரதான குருக்கள் மெய்மறந்தார். அவர் கண்கள் சற்றே சந்தேகத்துடன் முல்லைராமனைப் பார்த்தன. அவருக்கு முறுவல் பீறிட்டு வர, பிரசாதத் தட்டுடன் ஓடி வந்தார். 

அவன் பாடி முடிக்கிறவரை, காத்திருந்தார். முடிந்தது. அவன் கண்ணைத் திறந்தபோது, அவர் தெய்வத்தின் மாலையை அவன் மீது பூட்டினார். 

“எங்கள் பாக்கியம் தாங்கள் வந்தது! இறைவனது கடைக்கண் தங்கள் மீது எப்போதும் இருக்கும்” என்று மலர்களை அள்ளி அவன் கையில் கொடுத்தார். 

முல்லைராமனுக்குப் புன்னகை வந்தது. 

அதேநேரம் அங்கே பெண்கள் குழாமில் வந்திருந்த ஒரு பெண்- 

“குருக்களே! வெகு நேரம் நின்றுகொண்டிருக்கிறோமே! எங்களை சீக்கிரம் கவனிக்கலாகாதா? எவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறோம்!” என்றாள்.

குருக்கள் திரும்பினார். 

இளைஞனும் திரும்பிப் பார்த்தான். 

அந்த வார்த்தைகளைக் கூறியவல் ஒரு தாதியாசுத் தோன்றினாள். 

அவள் அருகே அவளது இளம் எஜமானி நின்று கொண்டிருந்தாள். 

அவளைப் பார்த்ததும் பக்கென்று அவன் நெஞ்சம் அடைத்தது. 

கண்கள் தாமாகக் கொட்டிக்கொண்டன. புரிந்து விட்டது! அவள் அந்தக் கவிதைதான்! சுனையில் குளித்தவன்.

என்ன அழகி இவன்! என்று மனம் மெல்லிதாக அவனிடம் கூறியது. 

அந்த இருட்டு மண்டபத்தில் அவள் முகம் வெள்ளியாக ஒளிர்ந்தது. 

சன்னதியைப் பார்த்து அவள் விழி ஓடியிருந்தது.

மெல்லிய உதடுகள் ஏதோ தோத்திரத்தை முணு முணுத்தன். 

குருக்கள் “இதோ அம்மா” என்று அந்தத் தாதியிடமிருந்து பூஜைத் திரவியங்களை வாங்கிக்கொள்ள- 

முல்லைராமன் சர்ப்பம் போல் ஒரு நீண்ட மூச்சு விட்டான். 

பிறகு தன் நிலை உணர்ந்து, அந்த இடத்தை விட்டு உடனே அகன்றான். 

முன்புபோல இப்போதும் அவனால் வெகு எளிதாக கூட்டத்தை ஊடுருவ முடிந்தது. 

வெளியே வந்திருப்பான். அவன் காதில் அந்தப் பேரோசை சந்தேகத்தைக் கொடுத்தது. 

பல குதிரைகள் சேர்ந்தாற்போல வரும் குளம்பு ஒலிகள் அவை. 

அது மட்டுமல்ல! 

“ஒ..” என்று வெறிக்க சத்தமிடும் மனித ஒலிகளும் அவை.

சற்றே திகைத்து நின்றான், முல்லைராமன். பிறகு அவசரமாக கோவில் வெளிப்புறத்திலுள்ள மேட்டில் ஏற ஆரம்பித்தான். 

மேலே ஏறியதும் அவன் சந்தேகித்தது “சரி” என்று தோன்றியது. 

குதிரைகளும் வீரர்களுமாக ஒரு கூட்டம் வந்து கொண்டிருந்தது. 

அவர்கள் பின்னால் புழுதிப் படலம் ஏராளமாக எழுந்தது. மெது 

அவனுக்குப் புரிந்துவிட்டது. 

“ஆகா! எந்த நேரம் பார்த்து இவர்கள் வருகிறார்கள்!”

ஒரு நல்ல திருவிழாவுக்கு இழுக்குச் சேர்க்க வந்திருக்கிறார்களே! 

பின்னமாகப் போகிறதே! ஒரு பக்திமயமான கூட்டம் இப்போது சின்னா பின்னமாகப் போகிறதே!

கடவுளே! இதைக் காணவா இவ்வளவு தூரம் வந்தேன் நான்?

இவர்களுக்கு நெஞ்சம் இருக்கிறதா இல்லையா? இத்தனை மக்களும் என்ன செய்யப்போகிறார்கள்? அவர்களைப் பாதுகாக்க படை ஏதும் இல்லையே.. 

என்ன செய்ய என்று கையைப் பிசைந்து கொண்டு இருக்கும்போது- 

அந்தக் குதிரை வீரர்கள், கோவில் இருக்கும் தெருவில் நுழைந்துவிட்டார்கள். 

கோபாவேசமாக வீறிக்கொண்டு, திருவிழாக் கூட்டத்தை நோக்கிச் சாடினார்கள். 

இளைஞன் மேட்டில் இருந்து சரசர என்று இறங்க ஆரம்பித்தான். 

ஏதாவது செய்ய வேண்டும்? 

அங்கே கூடியிருக்கும் மக்களைக் காக்கவேண்டும்’ இந்தக் கூட்டத்தினர் யாரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்? அதை பிறகு கண்டுபிடிக்க வேண்டும்? 

ஆ..! அந்த இளம் பெண்? அவளுக்கு ஏதாவது தீங்கு நேரக்கூடாதே! 

என்ன அழகாக இருந்தாள், அவள். 

கண்கள் எவ்வளவு விநயமாகத் தெரிந்தன.

கோவிலை நோக்கி ஓடினான், அவன். 

கோவில் எல்லை அதற்குள் கூக்குரல் களமாக இருந்தது.

“ஐயோ! ஐயோ” என்று தீனக்குரல்கள் பல மூலை களிலிருந்தும் கிளம்ப, 

“விடாதே, பிடி! விடாதே!” என்று குதிரைக்காரர்கள் மிரட்டிக் கொண்டு இருந்தனர். 

மக்கள் நாலா பக்கமும் சிதறினார்கள். 

குதிரை வீரர்கள் பலரை விடாமல் விரட்டிக் கொண்டிருந்தார்கள். 

பெண்கள்தான் அபலையாக ஓலமிட்டார்கள். 

முல்லைராமன் கூட்டத்துக்குள் புகுந்தான். 

அத்தியாயம்2 

அந்தக் குதிரைக்கூட்டத்தினர் ஒரு தீய எண்ணத்துடன் கோவிலை நோக்கிச் செல்கின்றனர் என்பதை அறிந்த முல்லை ராமன், “ஆகா! அந்தப் பெண்ணைப் பற்றுவதற்காக இருக்குமோ!” என்று யோசித்தான். 

எதுவாயினும் கொள்ளைக்காரர்களைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் பூண்டது. 

மேட்டிலிருந்து குறுக்கு வசமாகக் குதித்து, ஒரு மின்னல் சொடுக்கில் ஆலயத்து முகமண்டபம் முன்னால் நின்றான். 

குதிரை வீரர்களோ மக்கள் சமுத்திரத்தின் சிக்கலில் அகப்பட்டுக்கொண்டு, “போங்கள்! போங்கள்! சூறையாட வந்திருக்கிறோம்” என்று ” கூவே கூவு’ ” கூவே கூவு” என்று கூவிக் கொண்டிருந்தார்கள். 

தங்களை உண்மைக் காரியவாதிகள் என்று காண்பிக்க, ஒன்றிரண்டு பெண்களின் கழுத்திலிருந்த ஆபரணங்களைப் பிடுங்கினார்கள். 

அவர்களும், “ஆ… பறிபோச்சே!” என்று சுதறினார்கள். 

இதைக் கேட்ட- அறிந்த மக்கள் திரள், நாலாபுறமும் சிதறி ஓட ஆரம்பித்தது. 

முல்லைராமன் இதற்குள் கோவிலுள் புகுந்து ஓடினான். சன்னதி இன்னும் கூட்டப்பெருக்காக இருக்க, திரளில் நீந்தி கர்ப்பகிருகம் வரை சென்று அந்தப் பெண்ணைத் தேடினான். 

நாலாபுறம் பார்த்தும் அவளைக் காணவில்லை. சரி, பிரகாரம் போயிருப்பாள், பிடிப்போம் என்று நினைத்து, மீண்டும் எதிர் நீச்சல் போட்டு, பிரகாரத்துவக்கத்திற்கு வந்தான். 

பிரகாரத்தில் அவ்வளவு நெரிசல் இல்லை. எனவே இடைவெளிகளில் விரைந்துசென்று, பிரகாரப் பின்புறத்தை அடைந்தான். 

அவன் அந்தப் பகுதியை நெருங்கவும், அழகான கீதம் ஒன்று காதில் விழவும் சரியாக இருந்தது. 

சற்றே விறுவிறுப்பு அடங்கி அங்கே பார்க்க, அந்த இளம் பெண் அந்த இடத்தில் நின்று, கர்ப்பகிருகதின் மேல் தோன்றும் விமானத்தை நோக்கிப் பாடிக்கொண்டிருந்தாள். 

அவள் இட்டுக்கட்டிய பாடலாக இருக்குமோ! கையில் ஏட்டைப் பிடித்த வண்ணம் பாடுகிறாளே! குரலா அது! வெள்ளி இழைகள் போல இதோ காற்றில் தெரிகிறதே! ஒரு மென்மையான மது அருந்தியது போல் அங்கு இருந்த கூட்டம் ஒரு மயக்கமாய் லயித்து நிற்கிறதே! 

அவனுக்கு நேரமில்லை. வருகிற ஆபத்து அவனுக்குத் தெரியும், எனவே. விருட்டென்று பாய்ந்து, அவள் முன் நின்று. ‘“அம்மணி! பாட்டை நிறுத்துங்கள். கொள்ளைக் கூட்டம் வந்திருக்கிறது. உங்களைப் பிடித்து போகவே வந்திருக்கிறது!” என்று படபடப்புடன் கூறினான். 

அவள், அவனை ஒருமுறை வெறித்துப் பார்த்தாள். ஆனால் அவன் சொன்னது உண்மை என்பதற்கு சாட்சியாக, கோவில் முன்புறத்தில் “குய்யோ முறையோ” சத்தம் எழுநதது. 

திடுக்கிட்டு, அங்குமிங்கும் ஒருமுறை பார்த்தாள்.

வாசலின் கூச்சல் அதற்குள் தெளிவாகவே கேட்டது.

அவளைச் சுற்றியிருந்த மக்கள் சட்டென்று புறப்பட்டு வீறிட்டுக்கொண்டு ஓட அவளரும் தாதியும் முல்லை ராமனுமே தனியானார்கள். 

“ஐயா! யார் அவர்கள்? என்னை பிடித்துப் போகவா வந்தார்கள்?” என்று அவள் கேட்க- 

“அம்மணி நேரமில்லை. நீங்கள் ஒளிவது அவசியம்” என்று சொல்லி, சுற்றிவரப் பார்வையை ஒட்டினான்.

சற்றுதள்ளி வாகனங்களின் இடைவெளியில் இரண்டு பெரிய நகராக்கள் இருந்தன. 

“இதோ இங்கே வாருங்கள்!” என்று அவன் கூற-

அவர்கள் மறுமொழி இல்லாமல் சென்றார்கள்.

முல்லைராமன் தன் இடுப்பிலிருந்த எழுத்தாணியை எடுத்தான். 

நகராவின் தோலில் சுற்றி பல இடங்களில் ஒங்கிக் குத்தினான். பிறகு தோலைக் கிழித்து எடுத்தான். 

“இங்கே ஒருவர் அமருங்கள்! இந்த நகராவை கவிழ்த்து மூடுகிறேன். பின்புறம் ஒட்டைகள் உள்ளன. காற்றுக்குக் கவலை இல்லை. ஆபத்து நீங்கினபிறகு, வந்து திறக்கிறேன்” என்றான், அவன். 

இளம்பெண் அமர்ந்து கொண்டாள், முல்லைராமன் நகராவினை தூக்கி அவளை மூடினான்.

அடுத்து அவசரமாக இதே வேலையைத் தாதிக்கும் செய்தான். 

வேலை முடிந்ததும் “இதோ வருகிறேன்” என்று கூறி விட்டு பிரகாரம் வழியாக கோவில் முகப்பை நோக்கி ஓடினான். 

இதற்கு வாயிலில் இருந்த கூட்டம் எல்லாம் வடிந்து விட்டது. 

வெளிப்புறம் வெறிச்சோடிக் கிடந்தன. வந்தவர்களின் குதிரைகள்தான் நின்றன. 

பந்தல் கால்களில் அவற்றைக் கட்டிவிட்டு வீரர்கள் கும்பலாக கோவில் முகப்புக்கு வந்தார்கள். பாகை, அணிந்து மிகையாக மீசை வைத்த நடுத்தர வயது வீரர் ஒருவர். மிடுக்குப் பார்வையை இங்குமங்கும் வீசி- 

 “பெருமாள்!” என்றார். உரத்த தொணியில், “ஐயா” என்று கீழே குதித்து வந்தான். ஒரு இளம் வீரன்.

“எல்லோரையும் பார்த்தாயா?” என்று கேட்டார், மீசைக்காரர். 

“பார்த்துவிட்டேன், ஐயா. அவளைக் காணவில்லை” என்றான, அவன்.

“என்ன மடத்தனம்! தவறவிட்டீர்களா?” என்றார், மீசைக்காரர். 

”இல்லை ஐயா! இங்கேதான் இருக்கவேண்டும். உள்ளே இருப்பாள்?” என்றான், அந்த இளம் வீரன்! அவன் ஒரு குறுந்தாடி வைத்திருந்தான். 

“முதலில் கோவில் வாசலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! உள்ளே சிலர் போய்த் தேடுங்கள்!” என்றான். 

அதேநேரம், சற்று இளிக்கும் முகத்துடன் கையில் ஏடுகள் கட்டுடன், முல்லைராமன் வெளியே வந்து அத்தனை பேரையும் பார்த்துப் பிரமித்து, கையைத் தூக்கி வலது காது மேல சொறியும் பாணியில் வைத்துக் கொண்டு. “ஹுக்கும்! ஹுக்கும்!” என்று ஒரு பித்தனைப் போல் முனங்கிக் கொண்டு வாயிலைத் தாண்டித் தெருவில் நழுவிச் சென்றான். 

உள்ளே போய் பார்த்து வந்த வீரர்கள், “உள்ளே யாருமில்லை” என்றார்கள். 

“தப்பித்தாளா?” என்று வெகுண்டு கேட்டான், மீசைக்காரன். 

“ஐயா! ஒருவேளை அவள் இங்கே வராமல் இருந்திருக்கலாம்! ஊரில் ஒருமுறை பார்ப்போம்” என்றான். 

”சீக்கிரம்! சத்திரம் சாவடி எல்லாம் உடனே பாருங்கள்!” என்றார், மீசையர்! 


இரவு ஒரு சொப்பன சாம்ராஜ்ஜியம் போல் வந்தது. முழுநிலா கிழக்கே எழுந்து. வானில் சுறுசுறு என்று ஏறியது. சிற்சிலப் பிசுறு மேகங்களுடன் வானம் சலனமில்லாத பிரமிப்பில் இருந்தது. 

கீழே பூமியில் அனைத்தும் நிசப்தமாகி இருந்தன. எங்கும் நிலாவின் பால் வழிந்திருந்தது. இவைத் தகடுகள் வெள்ளிகளாக மின்னின. 

மெல்லியதாகக் காற்று ஒன்று இங்குமங்கும் அலைந்தது. ஒவ்வொரு மரத்தையும் தொட்டு, அது கண்ணா மூச்சு ஆடுவதுபோல இருந்தது. 

சத்தம் எதுவும் இல்லாமல் வடக்கு செல்லும் தனிப் பாதையில் ஒரு பல்லக்கு ஊர்ந்து சென்றது வெட்ட வெளியில் சிதறிக் கிடக்கும் பாறைகள் வழியே நெளிந்து, அது போரும்போது, ஏதோ ஒரு ராட்சச மிருகம் நடந்து போவது போல இருந்தது. 

பின்னால், ஒரு குதிரை குனிந்தவாறு நடந்தது. கற்களையும் பாறைகளையும் விலக்கி கால்களை கவனமாக வைத்து வந்தது. அதன் மீது ஒரு பெண் சோர்வுடன் பவனி வந்தாள். 

பல்லக்கில் இருந்து அவ்வப்போது கீதம் மிதந்து வந்தது. அதில் அருமையாக பொதிகைத் தமிழ் சிந்திக்கொண்டிருந்தது. 

பல்லக்குத் தூக்கிகளுக்கு அது பெரும் உற்சாகம் கொடுத்தது. பாட்டின் இனிப்பில் அவர்களது களைப்பு தேய்ந்து கொண்டிருந்தது. 

பல்லக்கு சிலநேரங்களில் தடுமாற, அந்தக் கவிதைப் பெண்மணி, “என்ன இது? என்ன இது?” என்று அடிக்கடி கடிந்துகொண்டிருந்தாள். 

ஆரம்பத்தில் இருந்தே இந்தத் தடுமாற்றம் இருந்து வந்தது. 

ஒரு பாறாயைத் தாண்டிச்செல்லும் நேரம், பல்லக்கு ஒரு கவிழும் நிலைக்குச் சாய்ந்துவிட்டு, பிறகு நிமிர்ந்தது. அந்தப் பெண்மணி, “நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!” என்று உத்தரவிட்டாள். 

பல்லக்கு நின்றது. 

“யார் இது? குடிபோதையில் யாராவது இருக்கிறார் களா? பல்லக்கு ஏன் இப்படிச் சாய்ந்தது?” என்று கடுமையாகக் கேட்டாள். 

சிறிதுநேரம் மறுமொழி இல்லை. 

“இந்தா! வீரமுத்து! யார் இந்தத் தவறு செய்தது?” என்று கேட்சு- 

நிலா ஒளியில் அவளது பார்வைக்கு நேராகத் தயங்கித் தயங்கி ஒரு உருவம் வந்து நின்றது. 

கண்களை நம்பமுடியாமல் கொட்டிக்கொண்டு பார்த்தாள், அவள். 

“யார்! கோவிலில் பாடின பாட்டுக்காரரா? நீங்களா பல்லக்குத் தூக்கினீர்கள்?” என்றாள், பாதி ஆச்சரியமுடன். 

“நான் பல்லாக்கா தூக்கினேன் அம்மணி?” என்று தாழ் வளைந்து கூறினான். அவன். “கவிதையை அல்லவா தூக்கினேன் செந்தமிழ்க் கவிதையை அல்லவா தூக்கினேன்” என்று பரவசமாய் அவன் கூறினான். 

அவன் நெற்றியிலும் தோளிலும் வியர்வைக் குவைகள் பூத்து நதிகளாக வழிந்து கீழே சென்றன. 

அத்தியாயம்

முல்லைராமன் குழைந்து நிற்க, கவிதைப் பெண் விழியை ஒரு சொடுக்குச் சொடுக்கினாள். 

ஒரு மின்னல் அவன் முன்னே துடித்தது. 

“அம்மணி! பொறுக்க வேண்டும்! தங்கள் பாடல் என்னைத் தடுமாற வைத்தது. அதில் லயத்ததில் கால் பிசகிவிட்டேன்” என்றான், விநயமாக. 

அவன் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே. அவள் கண் இளகி ஆச்சரியமாகிவிட்டது. 

“யாருங்க! புலவரையாவா? நீங்க இங்கனே எப்படி வந்தீக?” என்று கேட்டாள். 

முல்லைராமன் திடுக்கிட்டான். அந்தக் கொச்சைப் பாமர மொழியை அவளிடமிருந்து எதிர் பார்க்கவில்லை.

யார் இவள்? 

திருவடி ராஜ்ஜியத்து இன்பமலை இளவரசி சந்திர ரேகா இல்லையா? 

எதாவது தாசி இனமாக இருக்குமோ? 

ஏமாந்துவிட்டோமா! 

அவளைச் சற்றே ஆழ்ந்து பார்த்தான். 

முதலில் கண்ணில் உறுத்தியது அவளது வெற்றிலை வாய்தான்! இந்தப் பாதி இரவில் இப்படி வெற்றிலையை அடக்கி வைத்திருக்கிறாளே! 

காற்று தேவைப்பட்டது போலும்! மேவே போர்வையைக் கழற்றி இருந்தான். உடம்பு பளிச்சென்று பேசியது. அப்படி ஒரு தந்த வெளுமை! கழுத்தும், இடுப்பும் தோளும் சுந்தர வளைவுகள்! அந்த மார்புகள்! ஓ! ஜல்லிக் கட்டுக் காளைகளா அவை திமிரோடு பார்க்கின்றன! 

இடை குழிந்து, அதன் கீழே அகலும் பிரதேசம் அகண்ட காவிரி போல விரிந்துகொண்டு போயிற்று. 

அண்ணன் வீரதுங்கராமன் இருந்தாள், இவளை இன்ன வகைப் பெண் என்று அளவு போட்டுச் சொல்லி இருப்பான். 

இளம் வயிதிலிருந்தே அவனுக்கு இப்படி ஒரு பழக்கம்! ஒரு பெண்ணைப் பார்த்தால் போதும் இவள் இப்படி இருப்பாள், இன்ன சுகத்தைத் தருவாள் என்று சொல்லி விடுவான்! 

அந்தப் பெண் அப்போது, “சங்கரன் தம்பீ” என்று அழைக்க, பல்லக்குத் தூக்கிகளில் மூத்தவன். சும்மாட்டை எடுத்து இடுப்பில் கட்டி அவள் முன்னால் நின்றான். 

“இப்படி ஒரு காரியம் பண்ணிட்டீங்களே! இவர் புலவரையா ஆச்சே! இவரைப் போய் பல்லக்குத் தூக்க வச்சுட்டீங்களே!” என்றாள் அவள். 

“அப்படிங்களா? விஷயம் தெரியாதுங்களே! சங்கர நயினார் கோவிலில் நம்ப ஆளு ஒருத்தருக்குக் காய்ச்சல் எடுத்துவிட்டது. வேறு ஆளைத் தேடினபோது இவர் கிடைச்சாருங்க!” என்றான். சங்கரன் தம்பி 

“அம்மணி! அவர் சொல்வது உண்மை! நானாகத் தான் விரும்பி வந்தேன். உங்களைப் பிடித்துப் போக பகைவர்கள் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும், தாங்கள் அந்த ஊரைவிட்டு இரவுக்குள்ளே போய்விடுவது மேல் என்று நினைத்தேன். பல்லக்குத் தூக்க ஆள் இல்லாதபோது, தோள் கொடுக்கத் தீர்மானித்தேன்.” 

“நல்லா நினைச்சீங்க” என்று மறுபடியும் நோக்கி வெற்றிலையை உமிழ்ந்தாள் அவள். ஒரு சிரிப்பு ஒன்று குலுக்கி வந்தது. இரண்டு மேற்புரங்களும் சிருங்காரமாகத் துடித்தன. “ஐயே! என்னைத் தேடி வந்தாங்களாம் இல்லே! புலவரய்யா! மனசிலே நிறைய விஷயங்களை இட்டுக் கட்டுகிறீர்களே! என்னை யாரும் பிடிக்க வரவில்லை? என்னை யாருன்னு நினைச்சீங்க?” என்று ஒரு கேள்வியைத் தொடுத்தாள், அவள். 

முல்லைராமன் சற்று பின்னடைந்தான். உண்மையில் ஒரு தடுமாற்றம் தோன்றி இருந்தது. 

‘பெரிய குடியைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்தேன்!” என்றான். அவன். 

ஓசையில்லாமல் கையைக் கொட்டினாள், அவள். அதில் குழந்தைத் தனம் ஓடியது. 

“ஐயா! என் பெயர் திருமங்கையம்மா! நான் கோவில் நர்த்தகி ஆக்கும்! வேறு யாருமல்ல, நினைச்சுக்குங்க!” என்றாள். அவள்.

மீண்டும் உமிழ்நீரை பல்லக்குக்கு மறுபக்கம் உமிழ முல்லைராமனுக்கு ஏமாற்றம் அதிகமாகியது. 

துகில் தலைப்பால் வாய் ஓரங்களைத் துடைத்துக் கொண்டு, “நீங்க யாரு?” என்று கேட்டாள். அவள்.

“புலவன்!” என்றான், மெதுவாக.

“என்ன பேரு?” என்றாள், அவள்.

“முல்லைராமன்” என்றான் அவன்.

மீண்டும் சிரித்தாள், அவள். “இந்தாங்க இந்தப் பாண்டியநாடு வந்தால் போதும்! எல்லாம் ராமன்கள்தான்! முல்லைராமன். செண்பகராமன், மல்லிகைராமன், இருவாட்சி ராமன்…”

சிரிப்புச் சின்ன மணிச் சிலுங்கலாக விழுந்தது.

அப்போது ஏதோ சத்தம் ஒன்று கேட்க, முல்லை ராமன் தெற்கு நோக்கித் திரும்பினான். 

நிலவின் ஒளியில் வெகு தூரத்தில் சின்ன நிழல்கள் அசைவது தெரிந்தன. ஒரு கொத்து மனிதர்கள் வேகமாக வருகிறார்கள் என்று தோன்றியது. 

“என்ன சத்தம்?” என்று கேட்டவாறு திருமங்கை கீழே இறங்கினாள். 

சில கணங்களில் அவர்கள் குதிரை வீரர்கள் என்று தெரிந்தது. 

“அம்மணி! ஆபத்து மீண்டும் வருகிறது!” என்றான், முல்லைராமன், 

“ஆபத்தரி’ எனக்கா? தூ…” என்று துப்பினான். அவள், “யாரு அவங்க? என்ன செய்வாங்க” என்றாள். 

பக்கத்து மரத்தின் அடியில் அவள் அமர்ந்து அடி மரத்தோடு சாய்ந்து கொண்டாள். கால்களை அகற்றி வைத்த விதமும், கையை உயரே நோக்கி நீட்டி, மார்புகளை எடுப்பாகத் தெரியவிட்ட விதமும் அவனுக்குப் பிடிக்கவில்லை. எங்கேயோ தவறு நேர்ந்திருக்கிறது! 

யாரோ அவனுக்குத் தவறான செய்தி கொடுத்திருக்க வேண்டும். 

ஆரம்பத்தில் தொடங்கிய சந்தேகம் இப்போது உறுதியாகியது. 

இவ்வளவு குறைவான பாதுகாப்போடு நிச்சயம் ஓர் அரச குடும்பத்துப் பெண் பிரயாணம் செய்யமாட்டாள்.

பல்லக்கு கூட அழகாக இல்லை. 

விதானத் துணியில் ஓட்டை தெரிகிறது. பூண்கள் எல்லாம் களிப்பு ஏறிக் கிடந்தன. 

எல்லாவற்றையும் விட திருமங்கையின் நடவடிக்கைகளைப் பார்த்தால், நல்ல குலத்தில் அவளைச் சேர்த்துக் கொள்ள முடியாது. 

இவளுக்கா பல்லக்கை இவ்வளவு தூரம் தூக்கி வந்தோம்! கோவிலில் பாடிய தோத்திரப் பாடலைக் கேட்டு புலமை பெற்றவள் என்று நினைத்துவிட்டோம். சரி! இனி இவளைத் தொடர்வது உசிதம் இல்லை! திரும்ப வேண்டியதுதான்! 

அவன் யோசனை முடியவில்லை. அதற்குள் மூன்று வீரர்கள் அங்கே வந்து இறங்கினார்கள். 

“அதோ அவன்தான்” என்று ஒருவன் கூற, மூவரும் தொப் தொப் என்று கீழே குதித்தார்கள். 

தலைப்பாகையும் மீசையுமாகக் காட்டான்கள் போலத் தெரிந்தார்கள். 

இருவர் அவனை நோக்கி வர, சிறிது நகர்ந்தான் முலலைராமன், 

இருவரும் தாவி அவன் கையைப் பிடிக்கப் போக, ஒரு துள்ளலில் அவன் எகிறினான் 

அதே நேரம் அவன் கால் ஆகாயத்தில் விரிய, அந்த இருவரில் ஒருவன் தாடை அதில் சிக்கியது. பட்ட அடியில் சுருண்டு போய் அந்த ஆள், விழுந்தான். 

மற்றவன் தப்பித்து கோபத்துடன் முல்லைராமன் மீது பாய, முல்லை சற்றே விலகி காலை மட்டும் ஒரு கோல்போல் நீட்ட –

அதன் தடங்களில் அகப்பட்டு கரணம் அடித்தான், மற்றவன். 

மூன்றாமவன் இதுவரை மீசையைத் தடவிய வண்ணம் சற்று எட்டத்தில் நின்று பார்த்திருந்தான். 

அவன் கை அவனது இடுப்பு வாள் மீது சென்றது. 

அடுத்தகணம், பள பள என்று நிலவில் மின்னிக் கொண்டு ஒரு வான் உயர்ந்தது. 

ஒரு விநாடி முல்லைராமனுக்கு யோசனை எழுந்தது. இங்குமங்கும் பார்வையை ஓட்டினான். 

சட்டென்று பாய்ந்து, பல்லக்கைத் தள்ளிவிட்டு, அதன் ஆழக்காலை உறுவினான். 

அவன் ஆழக்காலைத் தூக்கவும் மூன்றாம் ஆளின் வாள் காற்றில் சத்தத்தோடு இறங்கவும் சரியாக இருந்தது. 

ஆழக்காலை சிலம்பம் போல உயரத் தூக்கிப் பிடித்திராவிட்டால் அவன் உடல் இரண்டாகப் போயிருக்கும். 

நல்லவேளை, அவன் கற்ற சிலம்புவித்தை பூராவும். அவன் கைவசம் வந்தது. வாள் மின்னல்கள் உதிர, அது வரும் திசை பார்த்து எதிரில் போய் கோல் நின்று கொண்டது. 

இருவரும் வியர்த்துக்கொண்டு சண்டை செய்ய. அந்தப் பெண் திருமங்கை மரத்தின் பின்னே நின்று எட்டிப் பார்த்தவாறு இருந்தாள். 

முல்லைராமன் களத்தில் தொடர்ந்து நின்றான். களைப்போ. அயர்வோ ஏற்படவில்லை. அவன் நடவடிக்கை எல்லாம் எதிரிக்கு களைப்பு உண்டாக்குவதாக இருந்தது. கடைசியில் ஆத்திரமாக விழுந்த வாள், முல்லையின் கோலில் ஆழ்ந்து அப்படியே சிக்கிக்கொள்ள, அந்த வீரன் அதை மீண்டும், எடுக்க முடியாமல் சிரமப்பட்டான். 

முல்லைராமன் காலைச் சுழற்றி ஒரு போடுபோட, மூன்றாமவனும் ஒரு சுற்றலோடு கீழே உதிர்ந்தான். 

அப்போது, “புலவரையா!” என்று ஒரு எச்சரிக்கை ஒலி தோன்ற, திரும்பினான். 

காற்றில் விஷ்ஷ் என்ற சத்தத்தை ஏற்படுத்தி கத்தி ஒன்று சுழிந்து வந்தது. 

அவன் மார்பை நோக்கி லட்சியமாக அது வருவதை அறிந்து, சட்டென்று நகர்ந்து விட்டான். 

எனினும் இடது புஜத்தின் ஓரமாக அது சீறிக் கொண்டு, சற்று அப்பால் போய்த் தரையில் விழுந்தது.

வலி ஒரு தீக்காயம் போல எழுந்தது. வலது கையால் இடது புஜத்தைப் பொத்தினான். கை ஒருவேளை தனியாகி விட்டதோ? 

அவசரமாக அவன் யோசனை படர சட்டென்று: வந்தவர்களின் குதிரை ஒன்றை நோக்கித் தாவினான். 

தாவி அமர்ந்து, குதிரையை அங்குமிங்கும் திருப்பி மற்ற இரு குதிரைகளின் தலைக் கயிற்றையும் பற்றினான். பிறகு, “ஹோய்..” என்ற சத்தத்தைக் கிளப்பிக் கொண்டு, மூன்று குதிரைகளையுமே ஒட்டினான். 

ஏறிய குதிரை முன்னால் செல்ல, மற்ற இரு குதிரைகளும் சமவேகத்தில் பின்தொடர்ந்தன. 

“ஏய்… ஏய்…ஏய்…? என்று மூவரில் ஒருவன் பின்னால் ஓடிவந்து கூச்சலிடுவது சிறிது தூரம் வரை தொடர்ந்து வந்தது, பிறகு நின்றுவிட்டது. 


இலஞ்சிச் சாமியார் வருகிறார் என்றால், தென்காசி அரண்மனையில் ஒரு பரபரப்பு இருக்கும். பக்தியும் மரியாதையும் அரண்மனைவாசிகள் எல்லார் முகத்திலும் ஒடும். 

அன்று காலையில் சாமியார் தமது பாதக்குறடு ஒலிக்க வந்தபோது, வீரர்கள் வணங்கி அவருக்கு வழிவிட்டார்கள். 

நேராக அத்தாணி மண்டபம் சென்று ஓரமாக இருந்த மர ஆசனம் ஒன்றில் அவர் அமர்ந்து கொள்ள, 

அந்தப்புரம் வரை செய்தி ஓடியது. 

ராஜமாதேவி உலகம்மை அவசர அவசரமாக நடந்து அத்தாணி மண்டபத்தை அணுகினாள். 

“சுவாமிகளே வணக்கம்!” என்று அருகில் சென்று வணங்கினாள், உலகம்மை. அவள் முகத்தில் ஒரு தனி மகிழ்ச்சி ஓடியிருந்தது. இலஞ்சிச் சாமியார் அவளை ஆசீர்வதித்து அமரச் சொல்லியும் அமராமல், 

“தாங்கள் வந்தது எங்கள் பாக்கியம் சுவாமி! பார்த்து வெகுநாள் ஆயிற்றே! தங்கள் தரிசனம் எப்போது கிடைக்கும் என்று ஏங்கிவிட்டோமே!” என்றாள், உலகம்மை.

இலஞ்சிச் சாமியாருக்கு எண்பது வயது இருக்கும், இருந்தும் அறுபது வயதின் பொலிவு அவரிடம் இருந்தது. நரைத்த தாடியும் முடியும் அவருக்கு அசாதாரண அழகைக் கொடுத்திருந்தது. 

“ராஜமாதேவி! எங்கே தங்கள் புதல்வன் அதிவீர ராமன்!” என்றார். அவர் மென்மையான குரலில். 

“அதுவா! ராஜ காரியம் பார்க்க வெளியே புறப்பட்டுப் போனவன்தான்! முன்பெல்லாம் தினம் யாரிடமாவது ‘இன்னின்ன இடத்தில் இருக்கிறேன்’ என்று செய்தியாவது அனுப்புவான். இப்போது அதுவும் இல்லை! எங்கேயாவது ஒரு புலவர் வீட்டில் தங்கிவிட்டானோ என்னவோ!” என்றாள், உலகம்மை. 

இலஞ்சியார் சிறு புன்னகையுடன் தலை ஆட்டினார். பிறகு, “நாட்டு நிலை நன்றாக இல்லையே! இப்போது புலவரிடம் போகலாமா?” என்று கேட்டார். அவர். 

“ஏன் சுவாமி! நாட்டில் எதாவது அபாயம் வந்திருக்கிறதா?” என்று திடுக்கிட்டுக் கேட்டாள் உலகம்மை. 

ஓசையில்லாமல் சிரித்தார், இலஞ்சியார்! கண்களில் மிருதுவான ஒளி ஒன்று அடித்தது. 

“நாட்டுக்கு அபாயம் வந்திருக்கிறதம்மா!” என்றார். அவர் தழுதழுத்த குரலில். 

“அப்படியா, சுவாமி?” என்று கையைப் பிசைந்து கேட்டாள், அவள். 

“அபாயம் ஒரு பக்கத்தில் அல்ல! இரண்டு பக்கமும்! சொல்லப்போனால் மூன்று பக்கமும்…” என்றார். இலஞ்சியார். 

“சுவாமி! இதென்ன வேதனை! இதுவரை எதுவும் நேராமலிருந்ததே! இப்போது ஆபத்து எப்படித் தோன்றியது?” என்று கலவரத்துடன் கேட்டாள், அவள்.

இலஞ்சியாரின் முகம் தீவிரமாகியது. 

அத்தியாயம்

தென்காசி அரண்மனையில் அத்தாணி மண்டபத்தில் ராஜமாதா உலகம்மை, இலஞ்சிச் சாமியார் முன்னால் விநயத் துடன் அமர்ந்திருந்தாள். 

கண்களில் அச்சம் தோன்றி இருந்தது. 

“ஏன், சுவாமி? எங்கள் ராஜ்ஜியமே சிறியது. இதற்கு ஆபத்தா?” என்றாள். 

(உலகம்மை கூறியது முற்றிலும் உண்மையானது. பதினாறாம் நூற்றாண்டுப் பின்பகுதியில் பாண்டியர்கள் மதுரையை இழந்து தெற்கே திருநெல்வேலிச் சீமைக்குப் போய் சிற்றரசர்களாக வாழத் தொடங்கி இருந்தார்கள். அது மட்டுமல்ல. திருநெல்வேலிச் சீமையை ஐந்து பகுதிகளாக்கி, ஐந்து பகுதிகளையும் ஐந்து பாண்டியர்கள் ஆண்டு வந்தார்கள்.) 

“அம்மா? கலவரப் படாதீர்கள்! அபாயம் இல்லாத ஆட்சி உலகத்தில் உண்டோ? இன்று இல்லாவிட்டால் நாளை வரும்!” 

“இப்போது எங்கிருந்து ஆபத்து வருகிறது சுவாமி?”.

“எல்லாம் உள் பூசல்தான்!” என்றார் இலஞ்சியார்.

“எங்கள் குடும்பத்துப் பூசலா?” திடுக்கிட்டுக் கேட்டாள் உலகம்மை. 

மெல்லிதாகச் சிரித்தார் இலஞ்சியார். கண்களில் பொறி சிந்தியது. 

“நன்றாக இருக்கிறது! உங்ள் குடும்பத்துள் பூசலா? அதுவும் அண்ணன் தம்பிகளுக்குள்ளா?” என்றார் இலஞ்சி யார். பிறகு தமது வெண்மைத் தாடியை வருடிக்கொண்டு. “அண்ணன் வரதுங்கனும், தம்பி அதிவீரனும் மெத்தக் கற்றவர்கள் ஆயிற்றே! இவர்கள் கவிதையில் சண்டையிடுவார்களே தவிர களத்தில் சண்டையிடமாட்டார்கள்! தாங்கள் நிச்சயமாக அறியலாம். அதற்கெல்லாம் அவர்களிடம் நேரம் கிடையாது. ஏட்டைப் படிப்பதிலேயே பாதி நேரமும் போயிற்று” என்று கூறினார். 

“அரண்மனைப பண்டாரத்தில் (வாசகச்சாலை) போயப் பாருங்கள்! ஏடுகள் நிரம்பி வழிகின்றன. ஏடுகளுக்காக இன்னொரு அரண்மனை கட்ட வேண்டும் போல் இருக்கிறது” என்று தம் மகனின் கல்வியாற்றலை பெருமையோடு கூறினாள் உலகம்மை! 

“இருக்கட்டும்! இருக்கட்டும்! அறிவை வளர்ப்பதில் எவ்வளவு செலவு செய்தாலும் தேவலை! அது, அழிவை வளர்ப்பதில் செல்லாமல் இருந்தால் சரி” என்றார் இலஞ்சியார். 

“இப்போது வந்துள்ள ஆபத்து, எப்படி சுவாமி?” என்றாள் உலகம்மை

”அம்மா! விஜயநகரத்தில் ராயர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மதுரையில் நடக்கும் நாயக்கர் ஆட்சியை நாம் எல்லோரும் ஒப்புக்கொண்டிருக்கிறோம். நம் பாண்டிய ரிடையே நிறைய பூசல் வந்துவிட்டதால் நம்மவர்கள் மதுரையை இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. மதுரையை ஆளவந்த நாயக்ககும் நம்மை அடிமையாக நடத்தாமல் நேசம். பூண்டு நடத்துவதால், அவர்கள் ஆட்சிக்கு நாமும் அனுசரணையாக இருந்து வருகிறோம். இதெல்லாம் தங்களுக்குத் தெரியாதது அல்ல! ஆனால், இப்போது தஞ்சை மண்டலத்தை ஆளும் நாயக்கருக்கு ஆசை ஏற்பட்டிருக்கிறது” என்றார். இலஞ்சியார். 

“யார்? அச்சுதப்ப நாயருக்கா?” என்றாள் உலகம்மை! 

“ஆமாம்! மதுரை ஆட்சியைப் பிடித்து, அதன் மூலம் தென் பாண்டி நாடு முழுவதையும் அடிமை ஆக்க விரும்புகிறார் அவர்” என்றார் இலஞ்சியார். 

உலகம்மை கையைத் தட்டி கன்னத்தில் புதைத்துக் கொண்டாள். “ஏதேது? அவருக்குமா அப்படி ஆசை?” என்று வியப்போடு கேள்வி கேட்டாள். 

இலஞ்சியார் முறுவல் காட்டிப் பேசினார். “எப்போது விஜயநகரம் அழிந்து ராயர் ஆட்சி பலவீனமாகி விட்டதோ, அப்போதிலிருந்தே மண்டல அரசர்கள் தலைக்குத் தலை அதிகாரம் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்!. தங்களிடையே சண்டை போட்டு தங்கள் ஆதிக்கத்தைப் பெருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்”. 

“ஏன் சுவாமி இந்தப் பொல்லாத ஆசை?” என்றாள் உலகம்மை. 

“ஏனம்மா ஏற்படாது? ராயர்கள் நலிந்துவிட்டார்கள். நாளைக்கு அவர்கள் அழிந்துவிட்டால் இவர்கள் தனி ராஜ்ஜியமாக அரசாளலாமே! யாருக்கும் உட்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லையே!” என்றார் இலஞ்சியார். 

“அதற்காகத்தான் இப்போதே நிலத்தைப் பெருக்க ஆரம்பித்துவிட்டார்களோ?” என்று அங்கலாய்த்தாள் உலகம்மை. 

“அதுவும் உண்மைதான்? மதுரையிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை ஒரே ராஜ்ஜியமாக இருந்தால் கசக்கவா செய்கிறது?” 

“அப்படி ஒருநாள் வருமா, சுவாமி?”

“வரட்டும் அம்மா! அது இந்தப் பாண்டிய குலத்துக்கே வரட்டும்!” 

“வருமா சுவாமி?” 

“ஏன் வராது? வர வேண்டும் என்றுதான் நானும் கனவு காண்கிறேன்! முதலில் பாண்டியரிடையே பூசல் தீர்ந்தால் தானே அதற்கு வழி ஏற்படும்! இவர்களைத் தீர்த்து வைத்தாலும் பாலையக்காரர்கள் வேறு இருக்கிறார்கள்.” 

“ஊம்” என்று பெருமூச்சு விட்டாள் உலகம்மை! அது எங்கே நடக்கப் போகிறது? என்ற ஒரு கவலை அவள் நெற்றியில் ஒட்டி இருந்தது. 

இதற்குள் தாதி ஒருத்தி இலஞ்சியார் முன்னால் சூடான பாலை வைத்து விட்டுச் சென்றாள். 

“அருந்துங்கள் சுவாமி! களைத்திருக்கிறீர்கள்!” என்றாள் உலகம்மை. 

இலஞ்சியார் பாலை எடுத்துப் பருகினார். 

பாத்திரத்தைக் கீழே வைத்ததும், “அப்படியானால் அச்சுதப்பன் மதுரை நாயக்கரோடு சண்டை போடப் போகிறாரா?” என்றாள் உலகம்மை!

”மதுரை நாயக்கரோடு இல்லை அம்மா! சிற்றரசன் வாணாதி ராயனோடு…” 

“என்ன? புகழ்பெற்ற வாணாதியோடா?”

“ஆமாம்” 

“சரி! மதுரைக்கு வடக்கே அல்லவா இந்தப் பூசல் இதில் நமக்கு எங்கே ஆபத்து?”

“இருக்கிறது!. இது தோற்றத்திற்குத்தான் வாணாதியோடு சண்டை சற்று ஆழ்ந்து பார்த்தால் மதுரை நாயக்கரோடுதான் சண்டை” 

“அப்படியா சுவாமி?”

“ஆமாம்! வாணாதி நம் மதுரை நாயக்கருக்கு வேண்டியவர் ஆயிற்றே! ‘உன் சிற்றரசனோடு சண்டை செய்கிறேன். நீ என்ன செய்வாய். பார்க்கலாம்!’ என்று சவால் விடுவது போல் இருக்கிறது.” 

“இதற்கு மதுரை நாயக்கர் என்ன செய்வார்?”

“அதுதான் பார்க்க வேண்டும்!” 

“பெரிய சண்டை ஆகிவிடுமோ?”

“ஆனாலும் ஆகலாம்!” 

“அதனால்தான் ஆபத்து என்கிறீர்களா?” 

“ஆமாம்! கடைசியில் இது தஞ்சை – மதுரை யூத்தமாக முடியவாம்!” 

“நாமும் இதில் ஈடுபட வேண்டியிருக்குமோ?” 

“ஆமாம்! மதுரைக்கு ஆபத்து என்றால் நாமும் உடனே உதவி செய்ய வேண்டியவர்கள் ஆயிற்றோ மதுரைக் கோட்டையில் உள்ள 72 பரிசத்தில் இருபத்தெட்டாவது பரிசத்தைக் காக்க வேண்டியவர்கள் நாமாயிற்றே” 

”தஞ்சை நாயக்கர்களை மதுரையை ஆளவிடக் கூடாது என்கிறீர்கள்?”

“ஆமாம்! மதுரை நாயக்கரோடு நமது தொடர்பு ஒரு நூற்றாண்டு ஆகப்போகிறது. மதுரை நாயக்கர்கள் நம்மை சரிசமமான மன்னர்களாக மதித்து நமக்கு வேண்டிய மரியாதைகளை எல்லாம் தருகிறார்கள். நாமும் அவர்களை நமது பாதுகாப்பாளராக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் தஞ்சையின் தலைமையை நாம் விரும்பமாட்டோம் இல்லையா?”

“ஒருபோதும் விரும்பமாட்டோம்!. பாண்டிய ராஜ்ஜியம் என்றால் அதை மதுரையில் வசிக்கும் மன்னர்தான் ஆள வேண்டும்” 

“சரி இவ்வளவு புரிந்து கொண்டீர்களே மகிழ்ச்சி இப்போது இன்னொரு செய்தியையும் சொல்லிவிடுகிறேன்.”

“சொல்லுங்கள் சுவாமி” 

“திருவடிராஜா தெரியுமல்லவா?” 

(மலையாள ராஜ்ஜியத்திற்கு திருவடி ராஜ்ஜியம் என்று பெயர்.) 

“ஆமாம்.” 

“அவர் இந்த அச்சுதராயனுக்கு உதவப் போகிறார்.”

“தஞ்சை நாயக்கருக்கா?” 

“ஆமாம்.” 

“மதுரைக்கு எதிராக?”

“ஆமாம்!” 

இப்போதுதான் உலகம்மை முகத்தில் மாறுதல் ஏற்பட்டது. 

“அப்படி என்றால் சுவாமி, வடக்கே போர் மூண்டால் திருவடி ராஜ்ஜியம் நம் ராஜ்ஜியத்தை முழுங்கிவிடுமே”

இலஞ்சியார் மென்மையாகப் புன்னகை செய்தார்.

“அதுதானம்மா ஆபத்து!” 

“இதுதான் உண்மையான ஆபத்து! ஏதாவது உடனே நடந்துவிடக் கூடாதே சுவாமி! மகன் எங்கேயோ போயிருக்கிறானே!” என்று கவலையாக ஒலித்தாள், உலகம்மை. 

“பதட்டப்படாதே அம்மா! மகன் தற்சமயம் இல்லா விட்டால் என்ன? சேனாதிபதிகள் இல்லையா? படை இல்லையா? கவலை வேண்டாம். மகன் போனாலும் இது காரியமாகத்தான் போயிருப்பான்” என்றார் இலஞ்சியார். 

அவர் சொல்லி, வாய் மூடி இருக்கமாட்டார். 

தாதி ஒருத்தி ஓடி வந்து, “மகாராணி, மன்னர் வந்து கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்து ஓடிவிட இருவரும் வாயிலை நோக்கி ஆவல் விழியோடு பார்த்தார்கள். 

முதிலில் நிழல் தெரிந்தது. 

அதன்பின் ராஜ உடையில் அந்த உருவம் உள்நோக்கி வந்தது. 

உலகம்மை அவனை நோக்கிப் பரவசமாகி, “அதிவீரா! உனக்கு நூறு வயசு உன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போதே வந்தாய். ஐயோ இதென்ன கட்டு?” 

அதிவீரன் இலஞ்சியாரைப் பார்த்ததும், “சுவாமி வணக்கம்!” என்று சொல்லி, அவரது பாதங்ளைத் தொட்டான். அதேபோல தாயாரின் பாதங்களையும் தொட்டு கண்ணில் ஒத்திக் கொண்டான். 

“இதென்ன கட்டு?” என்று மீண்டும் கவலையுடன் கேட்டாள் உலகம்மை. 

அதிவீரன் தாயைப் பொருட்படுத்தவில்லை. இலஞ்சி யாரை நோக்கி. 

“சுவாமி, தாங்கள் இங்கே வருவீர்கள் என்று தெரியாதே! சங்கரநாயினார் கோயிலில் தேடினேன். வரும் வழியில் யாத்திரைத் தலங்களை எல்லாம் பார்த்தேன். தங்களைச் சோழவந்தானில் அல்லவா சந்தித்தேன். தாங்கள் எப்படி இங்கே இவ்வளவு துரிதமாக வந்தீர்கள்?” 

“வாயுவேகம் என்று கேள்விப்பட்டது இல்லையா? அப்படித்தான் வந்தேன்.” என்று முறுவலைக் காட்ட, அவரது தாடிகூட நீண்டு முறுவலிப்பது போல் இருந்தது. 

பிறகு இலஞ்சியாரின் பார்வை அவன் புஜத்தை நோக்கிப் போவதைப் பார்த்து, 

“சுவாமி! தாங்கள் அறிவித்தபடி வடக்குப் போகும் ராஜபாட்டையைக் கவனித்தேன். அதில் நடந்த சின்ன பூசலில் எழுந்த காயம் இது. கடைசியில் எதிர்பார்த்தவள் இல்லை. யாரோ தவறான நபரை பாதுகாக்க போய் விட்டேன்” என்றான். 

”யார் அது?” 

“யாரோ வேலைக்காரி! திருமங்கை என்று பெயர்! ஏமாந்து திரும்பிவிட்டேன்!” என்றான். 

“திருமங்கையா?” என்று திடுக்கிட்டுக் கேட்டார் இலஞ்சியார். 

“ஆமாம்” என்றான் அதிவீரன். 

இலஞ்சியாரின் முகம் மாறியது. 

அத்தியாயம்5 

திருமங்கை என்ற பெயரைக் கேட்டதும் இலஞ்சிச் சாமியாரின் முகத்தில் நிழல் பரவியது. 

பிறகு ஏதோ பேச வாய் எடுத்தார். ஆனால் அதை நிறுத்திவிட்டு, “நல்லது நல்லது” என்று சொல்லி தமது தாடியைத் தடவிவிட்டார். 

இதற்குள் உலகம்மை எழுந்து, “சுவாமி! மகன் வந்து விட்டதில் கவலைவிட்டது! நான் கோவிலுக்குப் போக வேண்டும். விடை கொடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். 

இருட்டிக் கொண்டிருந்தது. கையில் தூங்கா விளக்கு எடுத்து தாதி விளக்கு மாடங்களை நோக்கிச் சென்றாள். அவள் ஒவ்வொரு மாடத்தை கடந்து வரும்போதும், ஒவ்வொரு தீ மொக்கும் புஷ்பித்திருந்தது. 

சீக்கிரம் அரண்மனை பூராவும் பொன் முறுவலாக வெளிச்சம் உதிர்த்து விட்டது. 

உலகம்மை போனதுதான் தாமதம் இவஞ்சியார் உடனே பேசினார். “என்ன அதிவீரா! திருமங்கையை சந்தித்தாயா? அவளை இழுத்து வந்தாயோ?” என்று கேட்டார், ஆவலுடன், 

“அப்படிச் செய்ய வேண்டும் என்றுதான் தாங்கள் ஓலை அனுப்பி இருந்தீர்கள். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை” என்றான். அதிவீரன்! 

“ஏன் என்ன ஆயிற்று?” என்று கவலையோடு கேட்டார். இலஞ்சியார். 

“அந்த நீலத் தலைப்பாய்க்காரர்கள் வந்துவிட்டார்கள்”

“அப்படியா? எங்கே?” என்று நிமிர்ந்து அமர்ந்தார், இலஞ்சியார். 

“சங்கரநயினார் கோவிலுக்கு வந்தார்கள்.”

“திருநாள் நடக்கிறபோதா?” 

“ஆமாம்!” 

“என்ன செய்தார்கள்?”

“அந்தப் பெண்ணை அபரிக்கும் குறியோடு வந்தார்கள்!”

“ஓ! ஒற்றைக்காதுக்காரனும் வந்தானா?” 

“அவனை இந்தச் சமயத்தில் காணவில்லை சுவாமி!”

“சரி! அந்தப் பெண்ணை அபகரித்தார்களா?”

“இல்லை. நான் விடவில்லை! கோவிவிலேயே மறைத்து வைத்தேன்.”

“அடேயப்பா! அதை அவர்கள் கண்டுபிடிக்க வில்லையா?”

“ஒற்றைக்காதன் வந்திருந்தால் கண்டு பிடித்திருப்பான்! இவர்களுக்கு சாமர்த்தியம் போதாது”.

“சரி! பிறகு என்ன நடந்தது? 

“இரவுவரை காத்திருந்து அந்தப் பெண்ணின் பல்லக்கோடு புறப்பட்டேன்”. 

“இரலில்…?” 

“ஆமாம். இனிமேல் அவள் அந்த ஊரில் இருந்தால் ஆபத்து என்று நினைத்தேன்”.

“சரி! என்ன நடந்தது?” 

“போகிற வழியில் வந்து, திரும்பவும் மடக்கினார்கள்?”

“அப்படியா?”

“நான் தனி! மற்றவர்கள் பல்லக்குத் தூக்கிகள்! என்ன செய்வோம். இருந்தும். அவர்களுக்குச் சமமாக சண்டை செய்தேன். அவர்களில் மூவர் குதிரைகளையும் பறித்து வந்து விட்டேன்”. 

“அப்போ அந்தப் பெண் என்ன ஆனாள்?”

“சுவாமி! அவள் அரச குலம் இல்லை போலும்!”

“ஏன் அப்படிச் சொல்கிறாய்”

“சாதாரண தயிர்க்காரி மொழி பேசினாள்.”

“அப்படியா?” என்று கேட்ட இலஞ்சியாரின் புருவம் மேலே தூக்கியது. 

“கோவிலில் தீந்தமிழில் பாடினாள். பேசினாள் ஆனால் இங்கே முகத்தைக் கோணி, வேலைக்காரி மொழியில் பேசினாள்.” 

“தோற்றம் உனக்கு எப்படித் தோன்றியது?”

“சுவாமி! மலையாள ராஜ்ஜியத்துப் பெண் ஆயிற்றே! செக்கச் செவேர் என்று நல்ல அழகில் தென்பட்டாள். அங்கே சாதாரண பெண்களும் அழகாக இருப்பார்களே!” 

தாதி குறுங்குடியாள் அதிவீரனுக்குச் சூடான பாவை வைத்துவிட்டு. ஒதுங்கி நின்றாள். 

மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார். இலஞ்சியார்! அவர் தீவிரத்துடன் எதையோ சிந்திப்பது தெரிந்தது. 

பிறகு நிமிர்ந்து, “அந்தப் பெண்ணை என்ன செய்தாய்?” என்றார், அவர். 

“நான் ஒருவன் எதையும் செய்ய வழியில்லை. விட்டு விட்டு வந்துவிட்டேன்.” 

“ஆ! இப்படிச் செய்யலாமா?” 

“தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டாமா, சுவாமி! என் புஜத்தில் காயம் பட்டுவிட்டதே! தவிர அந்த வீரர்களின் குதிரையைப் பறித்து வந்துவிட்டேன்! அதுதான் என்னால் செய்ய முடிந்தது!” 

இலஞ்சியார் பெரு மூச்சுவிட்டார். 

“சரி! இனி என்ன நடக்கிறது பார்ப்போம்!” என்றார். தமக்குள் முணகலாக. 

அதிவீரன் பாலைப் பருகினான். தூண் ஓரத்தில் நிழலாக இருந்த தாதி குறுங்குடி பாத்திரத்தை எடுத்துப் போனாள். 

“ஏன் சுவாமி! அவள் உண்மையில் அரசகுமாரியா?”

”எனக்குச் செய்தி அப்படித்தான் வந்தது.” 

“இப்படி வெளிப்படையாகப் போவாளா?” 

“ஒளிந்து போவதை விட வெளிப்படையாகப் போனால் சந்தேகம் குறைவாகிவிடும். தெரியும் அல்லவா?”

”உண்மை சுவாமி! அவள் வடக்கே எங்கே போகிறாள்? என்ன செய்யப்போகிறாள்.” 

“அதுதான் தெரியாது! அதற்காகத்தான் உன்னை ஏவி விட்டது!”

“நெருங்குவதற்கே சந்தர்ப்பம் இல்லாமல் போய் விட்டது சுவாமி”.

“நெருங்கி இருந்தாலும் அவளிடம் இருந்து உன்னால் அந்த இரகசியத்தைப் பெற்றிருக்க முடியுமோ, என்னவோ?”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் சுவாமி.”

“அவள் பெரிய சமார்த்தியக்காரி.” 

“அப்படியா?” 

“ஒரு பெண் சகலகலா வல்லவள் என்றால், அவளைத் தான் சொல்லவேண்டும்?” 

“அப்படியா’ 

“ஆமாம்! பலமொழிகள் கற்றவள். பல கலைகள் கற்றவள். பல வித்தைகள் கற்றவள்!” 

“அப்படி ஒரு அரசகுமாரியா?” 

“ஆமாம். சேரமன்னன் தனது பிள்ளை இல்லாக் குறைக்கு அப்படி வளர்த்திருக்கிறான். ஏதோ வேலைக்காரி மொழி பேசினாள். என்றாயே!” 

“பேசமட்டுமில்லை! அதுபோலவே கை கால்களை விரசமாக நடித்துக் காட்டினாள்! 

“அதுவும் அவள் கற்ற கலை! நாட்டியம் ஆடுவாள். நாடகம் ஆடுவாள். ஈட்டியும் பிடிப்பாள், வாளையும் பிடிப்பாள்.” 

“இப்போது அவளைப் பிடித்துள்ள மூன்று வீரர்களின் கதி என்ன ஆயிருக்கும் தெரியுமா?” 

“விரட்டியிருப்பாளா!” 

“கொல்லவும் செய்திருப்பாள்”. 

அதிவீரன் பெருமூச்சு விட்டான். இப்படியும் பெண் உலகத்தில் இருக்கிறாளா? 

அவன் மனதில் எழுந்ததை இலஞ்சியார் புரிந்து கொண்டார். 

“அதிவீரா! நானும் எவ்வளவோ நாடுகளில் சுற்றி இருக்கிறேன். அவளைப் போல ஒரு பெண்ணைப் பார்த்ததில்லை.” 

அதிவீரனின் நெஞ்சம் புடைத்து, அமிழ்ந்தது. 

“அவள் உண்மையில் கலாதேவி- சரசுவதியின் அவதாரம். அவளை அடைந்தவன் உலகில் பெறாத பேறு. பெறுவாள்! அவள்முன் எந்த பட்ட மகிஷியும் வெறும் தாதிதான்!” 

இலஞ்சியார் வர்ணிக்க வர்ணிக்க அதிவீரனின் தாபம் அதிகரித்துச் சென்றது. 

ஏற்கனவே அவளது மீன் விழிகள் அடிக்கடி வந்து மனதில் லயித்தது. 

அவள் விழி ஒரு ஆகாய அண்டத்தைக் காட்டுவது போல் இருந்தது. 

ஒரு சமயம் பிரம்மாண்ட கடலையே காட்டுவது போல இருந்தது. 

பார்த்த கணத்தில் நினைவு தடுமாறி எங்கேயோ மிதப்பது போலிருந்தது. 

கோவிலில் அவள் காட்டிய காட்சி, அம்மனே வந்து நின்றதுபோல இருந்தது. 

”புலவரைய்யா!” என்று விளித்தபோது, ஏழு சுவரங்களும் ஒருமித்து ஒலித்ததுபோல் இருந்தது. 

ஆ! அவள் அருகில இருந்தால் காவியம் படைக்கலாம் அல்லவா? 

அவன் முகத்தில் பரவசங்களும் பாவங்களும் மாறி மாறி ஏற்படுவதை இலஞ்சியார் கவனித்துக்கொண்டு வந்தார். 

அவர் கண்களில் பெரிய உலகமே தோன்றியது.

“சுவாமி!” என்றான். அவன் நீண்ட மவுனத்திற்குப் பிறகு, 

“என்ன அதிவீரா!” என்றார், அவர். 

“அவள் என்ன ஆனாள் என்று திரும்பப் போய்ப் பார்க்கவா?” என்றான், உணர்ச்சிப் பெருக்கோடு, 

“இரு! இரு! உன் புஜம் குணமாகட்டும்” என்றார், இலஞ்சியார். 

“அதற்கென்ன சுவாமி! வைத்தியர் நம்பிரானையும் அழைத்துச் சென்றால் போயிற்று! நான் இப்போதே கிளம்புகிறேன்.” 

“இப்போதேவா! அவ்வளவு அவசரமா போய், தாயாரிடம் விடைபெற்றுக்கொள்!” என்றார், இலஞ்சியார்.

“அதற்குக் கூட நேரமில்லை சுவாமி! இதோ கிளம்புகிறேன்” என்று சட்டென்று எழுந்து அவர் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு, விரைவாக வெளியேறினான். 

இலஞ்சியாருக்கு வாய் ஓரமாக ஒரு புன்னகை ஏற்பட்டது. 

“நடக்கட்டும்! நடக்கட்டும்” என்பதுபோல தலையை ஆட்டிக்கொண்டார். 

பின்னர் உலகம்மை அங்கே வந்து, “எங்கே அதி வீரன்?” என்று கேட்ட போது- 

“என்ன சொல்ல அம்மா! திடீர் திடீர் என்று முடிவு எடுக்கிறான்! யுத்த அபாயம் வருகிறது என்று ஆரம்பித்தேன். இதோ உடனே வடக்கு எல்லையைப் போய்ப் பார்க்கிறேன்! என்று கிளம்பிவிட்டான்!. நாளை போகலாம் என்று சொல்லியும் கேட்கவில்லை” என்றார், அவர். 

உலகம்மை கல்லாகி நின்றான் 

அத்தாணி மண்டபத்து படிக்கட்டில் அதிவீரன் அதி வோகமாக இறங்கும் போது- 

”சுவாமி!” என்று இனிய குரல் கேட்டது. திரும்பினான். 

தாதி குறுங்குடி நின்று கொண்டிருந்தாள். “என்ன?” என்று புருவத்தைத் தூக்கினான். 

ஓலை நறுக்கு ஒன்றை அவன் கைகளில் கொடுத்தாள். அவசரமாக விரித்து பக்கத்து விளக்கு அருகில் போய்ப் பார்த்தான். 

அவன் முகம் சட்டென்று தீவிரமாகியது. 

– தொடரும்…

– மன்மதப் பாண்டியன் (நாவல்), முதல் பதிப்பு: 1998, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *