கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 2, 2023
பார்வையிட்டோர்: 2,900 
 

முகநூலில்த்தான் எங்கள் நட்பு  ஆரம்பித்தது. என் வலைப்பக்கத்தில் நான் பதிந்தவை அனைத்தையும் அவள் படித்துவருகிறாள் என்பதில் எனக்கும் அவள்மேல் ஒரு `அது’ வளர்ந்திருந்தது உண்மைதான். அதை எளிமையாக ‘அபிமானம்’ எனலாம், ஆனாலும் அதைப்பூரணமாக விளக்கவல்ல பிறிதொருசொல் வேறேதாவது மொழிகளில் ஒருவேளை இருக்கலாம்  எனக்குத்தான் தெரியவில்லை.

சாஸ்திரிய இசை முதற்கொண்டு எனக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அவையெல்லாம் பிலஹரிக்கும் பிடித்திருந்தன. அசப்பில் பாலுமகேந்திராவின் ஷோபா சாயலில்  ‘கிருதி பாட்’ டென்று  ஒரு இளம் கர்நாடக இசைப்பாடகி ஸ்படிகக்குரலில் அசத்துகிறாரே கேட்டிருக்கிறீரோவென்று கேட்கையில், அவள் அப்போது கேட்டுக்கொண்டிருந்த  ‘கிருதி பாட்’டின் Gaana Kairali யின் கச்சேரியின் சத்தத்தை மேலேவைத்து என்னை அசத்தினாள்.

அநேக தருணங்களில் எனக்கு இரண்டாம் ஜாமத்திலும் அவளுக்கு அலுவலக விடுமுறை நாட்களின் அதிகாலையிலுமாக நாம் பேசினோம் பேசினோம், வானத்தின் கீழகப்படும் அனைத்து விடயங்கள்பற்றியும் நிறையவே பேசினோம். அவளும் நிறைய வாசிப்பவளாக இருந்தாள். கிளாஸிக்கல் வகையிலான எழுத்துக்கள்  தென்னமெரிக்க, ரஷிய, ப்ரெஞ்ச், ஆபிரிக்க  இலக்கியங்களென்றாலும் இன்ன இன்ன எழுத்தாளர்களைத்தான் படிப்பதென்றில்லை, கிடைத்த எல்லோரையும் படிப்பவளாக இருந்தாள். சில கேள்விப்பட்டேயிராத எழுத்தாளர்களின் பெயர்களைச் சொன்னபோது நான் அசந்தேபோனேன். பழகியவொரு நண்பரிடமோ, புதிதாகப்பழகுபவரிடமோ என்னைப்பற்றிய பிம்பத்தை உயர்த்திக்கட்டமைக்க நான் பொய்களைக் கூறிவைப்பதில்லை. உண்மையில் எனக்கு அவர்களில் பலரைத் தெரியாதென்பதைச் சொல்லிவைத்தேன்.  

இவள் என்னை மிகைமதிப்பீடு செய்து வைத்திருக்கிறாளோவென்று தோன்றும் போதெல்லாம் நானாகவே என்னைப்பற்றிய உண்மைகளைத் தெளிவாகச் சொல்லிவைத்திடுவேன்.  இந்த இரண்டு ஆண்டுகாலப் பழக்கத்திலும் என் எழுத்துகளுக்கு வெளியிலான எந்தத்தகவலையும் குடிசார்நிலை, குடும்பம், தொழில், வருமானம் என்று அவள் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ள முயன்றதில்லை.

முகநூலின் சுயவிபரத்தில் இருந்த தகவல்களே போதுமானவையாக இருந்திருக்கவேண்டும். முகநூலில் நட்பாகச்சேர்த்துக்கொண்ட புதிதில் அவளது சுயவிவரத்தில் அவள் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு ஏற்றுமதிக்குழுமத்தில் கணக்கியல்துறையில் பணிபுரிவதாக  இருந்தமாதிரியொரு ஒருசிறு ஞாபகம். தர்மபுரி என்றால் அங்கே ஔவையார் வாழ்ந்தார் என்பதைத்தவிர அம்மாநிலம்பற்றி எனக்கு வேறொன்றுந்தெரியாது.

பின் நாட்களில் சுயவிபரத்தை எவரும் பார்க்கமுடியாதபடி பூட்டியிருந்தாள். அனாமதேயங்களிடமிருந்து பெண்களுக்கு சுயவிபரத்தகவல்களால் தொந்தரவுகள் இருப்பது தெரிந்ததுதான், அதனால் நானும் ஏன் எதுக்காகவென்று அவளை மேலே அதுபற்றி உசாவவில்லை.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நான் இந்தியாவுக்கு வரவிருப்பதாக முதலில் சொன்னபோது நான் தமாஷ் பண்ணுவதாகவே நினைத்தாளாம். என் கணவியோ தன் பதின்மவயதிலேயே பெர்லினுக்கு வந்துவிட்டவளாகையால் அவளுக்கு இந்தியசுற்றுலாவில் அத்தனை நாட்டமில்லை. அவளது சகோதரியின் மகளுக்குக் கனடாவில் நடக்கவிருக்கும் திருமணத்துக்காகத் தன் விடுமுறை நாட்களைச் சேமித்துக்கொண்டிருந்தாள், பிள்ளைகளின் நீண்ட கல்லூரிவிடுமுறைகள், நான் விடுமுறை களிக்கவிருந்த மாதத்தைவிடவும் வேறாக இருந்தன.  

நான் தனியாகத்தான் இந்தியவிடுமுறையைக் களிக்கவிருந்தேன். முதல்வாரம் எப்படியும் சென்னைப் புத்தகச்சந்தையுடன் போய்விடும், இரண்டாம் வாரம் என் இலக்கியநண்பர் செம்பருதி திருவண்ணாமலையில் தன்னுடன் கழிக்கவேண்டுமென்ற அவரது ஏற்பாட்டுக்கமையத் தன் பணிகளையும் சினிமா முயற்சிகளையும் வகுத்துள்ளாராம். இன்னும் அவர் எடுக்கப்போகும் Anthology வகையிலான ஒருமணிநேரப்படத்துக்கான உருவாக்கத்தில் திரைக்கதை அமைப்பதில் தன்னுடன் 4 நாட்கள் தனியாகச் செலவழிக்கவேண்டுமென்றும் ஏலவே கேட்டுக்கொண்டுமுள்ளார்.  

அவருடைய மலையாள இலக்கிய நண்பரொருவர் என் சிலகதைகளை  தன்னார்வத்தில் மலையாளத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்திருந்தார். அவரும் நான் அவசியம் தன்னுடன் இரண்டுநாட்கள் போடனூரில் (கோயம்புத்தூர்) ஒரு கிராமத்தில் தங்கவேண்டுமென்றும் என்

கதைகள்பற்றி மேலும் சில விளக்கங்களைத் தான் நேரில் கேட்டறியவேண்டுமென்றும் கேட்டிருந்தார்.  

பிலஹரி தான் இம்முறை சென்னைப் புத்தகச்சந்தைக்கு வரவில்லையென்றும், கடந்த இரண்டு சந்தையில் வாங்கியதில் 50க்கும் மேலானவை இன்னும்  ‘கன்னியாகவே இருக்கின்றன’ என்றாள்.  

கண்காட்சி உங்களுக்கு ரொம்பத்தொலைவோ என்றதுக்கு “ உங்கள் நாட்டிலாயின் ஒரு 3 மணிநேர டிறைவ் இங்கே எங்களுக்கு குறைந்தது 5 மணிநேரம் பிடிக்கும் ” என்றுவிட்டு எவ்வளவு தொலைவென்றாலும் உங்கள் சுற்றுக்கள் காரியங்கள் எல்லாம் முடிந்தபின் எனக்கும் 2 நாட்களாவது ஒதுக்குங்கள், நான் உங்களைப் பார்க்கணுமே” என்றாள். அப்போதும் தன் ஊரைச்சொல்லவில்லை. நானே அவளிடம் போவதா அல்லது அவள் என்னிடம் வருவாளா அவள் வீட்டிலேயே தங்க வசதியுண்டா, நான் ஹொட்டல் முன்பதிவுசெய்யணுமா என்பதெல்லாம் பேசாப்பொருளாக இருந்தன.  

எனது ஆறுவாரவிடுமுறை, முதல் இரண்டு வாரங்களையும் சென்னையிலும்  விழுப்புரத்திலும் கழித்துவிட்டுத்தான் திருவண்ணாமலைக்குப் போவேன் என்பதை   நான் அவளுக்கு முதலிலேயே சொல்லியிருந்தேன். பிலஹரிக்கு என்னைச் விழுப்புரத்தில் சந்திப்பதெனில் அது பாதித்தொலைவுதான். ஏன் அப்போது சந்திக்க முயல / முடியவில்லை என்பதுவுந் தெரியவில்லை. அவளுக்கு அத்தருணம் ஏதோ அசௌகரியமானதாக இருந்திருக்கலாம்.  

சென்னை வந்திறங்கியதும் நேரே தொடரியில் விழுப்புரம்போய் முன்பதிவுசெய்திருந்த வாடிவீட்டில் நாலுநாட்கள் தங்கி சிலகிராமங்களை தனியாவே சென்று சுற்றிப்பார்த்து மதியச்சாப்பாடு சமைத்துக்கொடுத்த ஒரு அம்மாவீட்டுத் திண்ணையிலமர்ந்து நாட்டுக்கோழிக்கறியும் சோறும் சாப்பிட்டுவிட்டுத் திருவண்ணாமலைக்கு வந்துவிட்டேன்.  

மேற்கத்தைய இசைபற்றிய பேச்சு எப்போது வந்தாலும் Johann Sebastian Bach ஐப்பற்றி ஏதாவது சொல்லாமல் முடிக்கமாட்டாள். நானும் கோதுமை வயலில் காற்றடிக்கையில் கதிர்களின் அலைகள் சாய்ந்தும் நிமிர்ந்தும் எழும்பியும் ஆடுவதைப்போலிருக்கும் Bach இன் சில சிம்போனிகளை மட்டும் கேட்டிருக்கிறேன், உம்மைப்போல் ஆழமாகத்தொடர்ந்து போனதில்லை என்று சொல்லிவைத்தேன்.

வரும்போது அவளை ஆச்சரியப்படுத்துவதற்காக 18 செ.மீ உயரத்தில் மேசையில் வைக்கக்கூடிய வெண்பளிங்குக்கல்லினாலான Johann Sebastian Bach இன் அரையுருவச்சிலை ஒன்றையும், “The Best of Bach” எனும் 10 Compositions அடங்கிய MP3 Album ஒன்றையும்   வாங்கிவந்தேன்.

செம்பருதியோ மிகவும் ‘முசு’வான மனிதன். ஒரு கல்லூரியில் பகுதிநேரமாகவோ / வருகைதரு ஆசிரியராகவோ ’நாட்டுப்புறவியலில்’ விரிவுரையும் செய்துகொண்டிருந்தார்.  

அத்துடன் பதிப்புத்துறையிலும் ஈடுபாடுண்டு, ஏதோவொரு வெளியீட்டகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு பதிப்பு வேலைகள் செய்துகொண்டிருக்கிறார், அதுபற்றி எதுவும் என்னுடன் விபரமாகப் பேசக்கூடிய சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை. சினிமாவுக்கு கதை/திரைக்கதையென்று செய்துகொண்டிருந்தவர் இப்போது சினிமாவுக்குள் சில முற்போக்குப்பாத்திரங்களை ஏற்பதுபோன்று  கால்களைச் சற்று ஆழமாக ஊன்றியிருந்தார். பட்ஜெட் படங்களைத் தயாரிப்பவர்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்குவது என்பன அவர் தன்னார்வ ஊழியங்கள்.  

திருவண்ணாமலையில் ஒருநாள் அவருடனான மதிய உணவின்போது  ‘கொஞ்சம்…….. இருங்க தோழர் இந்தச் சகாவுகளோட உதில பொள்ளாச்சிவரை போய்விட்டு வந்திடுகிறேன்’ என்றுவிட்டுப் புறப்பட்டார். அந்திசாய்ந்த பின்னாலும் ஆளைக்காணோம். தொலைபேசினால்……….  “சாரி தோழர் அப்படியே சகாவுகளோட வண்டியில திருச்சூர்வரைக்கும் வரைக்கும் வந்திட்டோம்…….. எப்பிடியும் இரவுக்குள்ள அங்க வந்திடுவேன் உங்களை ஹன்னாவை நல்லபடி கவனிக்கச்சொல்லியிருக்கேன், ஒண்ணும் யோசிக்க வேணாம், நான் வந்திடுவேன்” என்றார்.

இந்த ஹன்னா யாரென்றும் சொல்லவேண்டும். இளங்கலை முடித்துவிட்டிருந்த பெண்ணொருத்தி வாரத்தில் 3-4 நாட்கள் செம்பருதி வீட்டுக்கு வந்து அவருக்கு ஒரு தன்னார்வ உதவியாளரைப்போல அவரது காரியங்களில் கைகொடுத்து உதவிக்கொண்டிருந்தாள். அவர் பதிப்பதற்காகத் தயார்படுத்தும் நூற்பிரதிகளை முதலாவது செம்மைநோக்குவது, பதிக்கப்படும் நூல்களுக்கான அட்டையை வடிவமைப்பு செய்வது, அவர்களது வீட்டையும் சிறிய அலுவலத்தையும், அடிக்கடி அங்கே வந்துபோகும் விருந்தினர்களுக்கான கட்டில் படுக்கைகளையும் சுத்தப்படுத்துவது, அவர்களது ஒரு பர்ணசாலையைப் போலத் திறந்திருந்த கூடத்துள் / மாலுக்குள் இருக்கும் பூக்கன்றுகளுக்கு நீரூற்றுவது, செம்பருதியின் கணவிக்கு சமையலறையில் பாத்திரங்கள் கோப்பைகள் கழுவிக்கொடுப்பது, காய்கறிகள் நறுக்கிக் கொடுப்பது, வீட்டுக்கு வருபவர்களுக்கு ஓயாது காப்பி டீ கொடுப்பதென்று அவளுக்கு அங்கே  செய்வதற்கு நிறைய இருந்தன.

ஒருமுறை  செம்பருதி அவள் வீட்டுக்குப்புறப்படும்போது “ இந்தா போன் றீஃபில் பண்ணனும்னியே என்றபடி அவளிடம் 3 நூறுரூபா நோட்டுக்களைத்தந்தவர், இந்தா இதையுங்கூட பஸ்ஸுக்கு வைச்சுக்கோவென்று மேலும் 2 நூறுரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தபோது  அவள் வாங்கிக்கொண்டதைக் கண்டேன். அதைவிட மிக அதிகமாகக் அள்ளிக்கொடுப்பதற்கான பொருண்மிய வசதிகள் செம்பருதிக்கும் இல்லாவிட்டாலும் அவரது புரத்தலிலேயே இவளது ஜீவிதம் நகர்வதைப் புரிந்துகொண்டேன்.  

செம்பருதியுடனான கதை உரையாடல்களில் சிக்கனமாக எந்தெந்தக்காட்சிகளை எங்கெங்கே எடுக்கலாம் போன்ற ஆலோசனைகளிலும் ஆர்வத்துடன் ஒரு பயில்முறை மாணவியைப்போலக் கலந்துகொண்டு தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வாள்.  

மழையோவெயிலோ எப்போதும் வசதியாக ஜீன்ஸ் டீ-ஷேர்ட் அணியத்தான் விருப்பம், நன்கு வெளிறிப்போன அங்கங்கே தசைகள் எட்டிப்பார்க்கும் ஜீன்ஸில்த்தான் வருவாள். எப்போதாவதொருநாள்  ‘ஜிகினா’ சித்திரத்தையல்வேலைப்பாடுகளற்ற பருத்தித்துணியிலான பஞ்சாபி தொளதொளா பிஜாமா அணிந்துவந்தாலும் எளிமையாக அதிலும் அழகாய்த்தானிருப்பாள். தினமும் மஞ்சள்பூசிக் குளிப்பாளோ என்னமோ, எப்போதோ வந்த சின்னமுத்து அங்கங்கே விட்டுப்போன தழும்புகளும் அவளது பளிச்சென்ற மாநிறமுகத்துக்கு மேலும் களையூட்டின. அவளது அப்பா பாரவுந்து ஓட்டுகிறாராம். பாரவுந்துக்கு சரக்குக்கிடைத்து அதை அவர் எடுத்துச்செல்லும் நாட்களில் மட்டும் சம்பளம் கிடைக்கும் என்று செம்பருதி சொல்லியிருந்தார். அத்துடன் அவரும் பாரவுந்துச்சாரதிகளுக்கான தொழிற்சங்கத்தின் செயற்பாடுகளில் ஆர்வமுடைய மனிதனாக இருப்பதால் தன் குடும்பத்தைவிட அவர் தன் சகாவுகளின் நலனிலேயே அக்கறைகொண்டு தனக்கு வரும் ஓட்டங்களையும் சகாவுகளுக்கு விட்டுக்கொடுத்துவிடுவாராம்.

இடையிடையே மலையாளம்கலந்து கலந்து ஹன்னா பேசும் தமிழ் ரம்மியமாகவிருக்கும். அவளது அடர்த்தியான கருங்கேசத்தைப் பார்த்து  நானும் அவள் மலையாளப்பெண்ணாக இருப்பாளோவென்று அனுமானித்திருந்தது தப்பாயிருந்தது. அதுபற்றிச் செம்பருதியிடங்கேட்டபோதே அவர் தெளிவுபடுத்தினார்:  

“அட நீங்க ஒண்ணுசார், அவளுக்குத்தாய் நிஜத்திலேயும் தெலுங்குக்காரிதான், அப்பாதான் தமிழர், வீட்டில இப்போதும் சிலசமயம் தெலுங்குதான் பேசுவார்கள். படிச்சதும் இங்கிலிஷ் மீடியம்……. தனியாக இந்திவேறு படிச்சிருக்காள் அவளுக்கு வாயில்  உச்சரிக்க எது இலகுவாக வருகுதோ அதை எடுத்து மிழற்றிவிடுவாள், நிஜத்தில் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கத்தெரியாத அபேதவாதி அவள். தமிழ் கதைகள் படிக்குமளவுக்குப்புரியும். நீங்கள் வருகிறீர்கள் என்பது தெரிந்தவுடன் உங்கள் புத்தகங்கள் இரண்டை என்னிடமிருந்து எடுத்துப்போய்ப் படித்திருக்கிறாள் என்றால் பாருங்களேன்.” என்றதும் எனக்கு அவள்மீதான `பிரியமும் அபிமானமும்’ அதிகரித்தன.

செம்பருதியும் நான்கைந்து நூல்கள் எழுதியிருக்கிறார்தான், அதற்கும் அப்பால் அவருக்குப் பெரும் இலக்கிய எழுத்துப்பரப்புக்கிடையாது, தன் எழுத்துக்களைப்பற்றி எப்போதும் அடக்கியே வாசிக்கத்தெரிந்த  நல்லவொரு மனிதர். தனக்குப்பிடித்துப்போன தமிழிலக்கியப் படைப்புகளைச் சந்திக்கும் மாணவர்கள், இளையசமூகத்தினரிடம் வியந்தும் மேற்கோள்காட்டியும் அவற்றைப் படிக்கும்படியும் ஊக்குவிப்பார். அதேபோல் இலக்கியர்களை உபசரிப்பதில் அவருக்கு நிகர் அவரே. திருவண்ணாமலைக்குப் போனீர்களாயின் நீங்கள் ஹொட்டல்கள் எதிலும் தங்கவே முடியாது.  உங்கள் பயணவுறையை எடுத்துப்போய்த் தன் அலுவலகத்துள் வைத்துப்பூட்டியேவிடுவார். அதுவும் இப்போ இரண்டொரு எளிமையான சினிமாக்களில் அவர் தலைக்காட்டியபின்பு செம்பருதிக்கான இரசிகர் வட்டம் மெல்லமெல்ல அதிகரித்திருந்தது.

என்போன்ற அவரது நண்பர்களிடமும், சினிமாவுக்கு உதவி இயக்குனர்களாகிவிட அவரைத் தினமும் வலம் வந்துகொண்டிருந்த உதவியாளர்களிடமும் பலான பகிடிகள் எல்லாம் எடுத்துவிடக்கூடியவர்  ஹன்னா அந்தப்பிராந்தியத்துக்குள் வந்துவிட்டாள் என்று அறிந்ததும் திடுப்பெனப் ‘பேசுபொருளை’ “இடைக்காடர் சமாதி”, “நித்ய சைதன்ய யதி”, “பகவான் யோகிராம் சுரத்குமார்” என்று  மாற்றிச் சமர்த்துப் பிள்ளையாகிவிடுவார்.

அவருக்கு மாதத்தின் இறுதி வாரங்கள் இரண்டும் மங்களூரில் படப்பிடிப்பிருந்தது. பெங்களூர், மங்களூரெல்லாம் நான் ஏலவே பார்த்த இடங்கள்தான். இவ்விடைவெளியில் இன்னும் நிறைவேறாத நீண்டகாலக் கனவாயிருந்த ஹரித்துவார்,  வாரணாஸி, லக்னோ, ஜெய்ப்பூர் பயணத்தை இம்முறை நனவாக்கிவிடலாமோவெனும் யோசனை உள்ளூரப் பொறித்தது. இன்னுமொருவர்கூட வந்தால் இந்திவாலாக்களுடன் மல்லுக்கட்ட வேண்டியிருக்காது.

செம்பருதியின் வீடு ஒரு பர்ணசாலையைப் போல. வீடு முழுவதும் அரைச்சுவர்தான் கட்டியிருந்தது. அதன் மேலே மரத்திலான கிராதிகள் அமைக்கப்பட்டிருந்ததால் உள்ளே எப்போதும் போதிய வெளிச்சமும் காற்றும் வந்துகொண்டிருந்தன. வீட்டைச்சுற்றிப்பூராவும் பெயர்தெரியாத பூமரங்களும் விசிறிவாழையும் நடப்பட்டுப் பசுமையாக இருந்தது பின் வளவில் ஒரு கிணறு சூரியவொளிக்கலங்களுடன் இணைக்கப்பட்ட நீரிறைக்கும்பம்பு தொட்டவுடன் சில்லென்ற நீரை அதிலிருந்து  இறைத்துக்கொண்டிருந்தது. செம்பருதி தானே வடிவமைத்த வீடும் தோட்டமும் என்றார். அதேபோல அவர் ஊருக்குள் பலருக்கும் எளிமையான வீடுகளை வடிவமைத்துக் கொடுத்திருப்பதை என்னிடம் பீற்றவில்லை,  

ஒருநாள் செம்பருதியுடனான இரவுச்சாப்பாட்டு மேசையில் உத்தரப்பிரதேசப்பக்கம்போய்வர ஒரு எண்ணமிருப்பதையும் பயணத்துக்கு கொஞ்சம் இந்தி தெரிந்த ஒரு கொம்பனியிருந்தால் நல்லாயிருக்குமென்பதையும் சொன்னேன். கொஞ்சமும் யோசிக்காமல்  “ இவள் ஹன்னாவைக் கூட்டிப்போங்களேன்” என்றார். நான் அவர்  ‘பகடி’ பண்ணுவதாகவே நினைத்தேன்.

நான் பதில் பேசாது மௌனமாக  இருக்கவும்  

“அவள் இந்தி தனியாகப் படிச்சிருக்காள்னு சொன்னேனே, ரொம்ப உதவிகரமாக இருப்பா தோழருக்கு” என்றார்.

“அவ சம்மதிப்பாளா…… இன்னும் அவவீட்ல அனுமதிப்பாங்களா…….”

“அவ ரொம்பச்சுதந்திரமான பொண்ணு சார், அவளை யாரும் அங்கே தடைசொல்லவோ கட்டுப்படுத்தவோ மாட்டாங்க. ரொம்ப முற்போக்கான குடும்பம்.” என்றார் உறுதியாக.

“இருங்க வர்றேன் ” என்றுவிட்டு அவளை சாமர்த்தியப்போனில் அழைத்துவிட்டு ஒலியை ஏற்றிவைத்தார்.

“ஏம்மா…. இந்த ஜெர்மன் சாருக்கு இரண்டு வாரம் வாரணாஸி ஜெய்பூருக்குப் போய்வாறதுக்கு ஒரு ட்ராவல் பார்ட்னர் வேணுமாம்…நீ கூடப்போறியா…”

அவள் ஒரு கிறீச்சிடலுடன்

“ஓ…ஜ்ஜா, றியல்லி…ஐ ஆம் பிலெஸ்ட் டு ஹாவ் சச் எ கோல்டென் ஒப்பொசூனிட்டி, ஓ..மை கோஷ்” என்று கத்தியது எனக்கு ஸ்படிகமாகக் கேட்டது!

எனக்குத்தான் இப்போது உள்ளூரத் தயக்கமாக இருந்தது.  ‘யார் என்ன நினைப்பார்களோ, முதுகுக்குப் பின்னால் கதைப்பார்களோ’ என்றபோது  ‘இங்கு எவனுக்கும் உங்களையோ ஹன்னாவைப்பற்றியோ எங்களைவிட அதிகமாகத்தெரியாது, எவனது அபிப்பிராயம் பற்றியும் நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை சார்’ என்றனர் செம்பருதியும் கணவியும் ஒரே குரலில். அவள் வேணுன்னா வீட்டில எங்ககூட ஒரு சூட்டிங் லொகேஷன் பார்க்கப்போறோம்னுட்டுக் கிளம்பலாம், ஆனா நீங்க வேணுன்னா அப்புறமாய்க் கேட்டுப்பாருங்க அவள் ’நான் தயாபரன்சார்கூட வாரணாஸிக்கும், ஜெய்ப்பூருக்கும் ஒரு டூர் போறேன்னுட்டுத்தான் வருவா’, ஷி  ஸ் சச் எ ஜெம் ஒஃப்  வுமன்கைன்ட் சார். இப்படியாகச் செம்பருதியின் பேச்சில் சாரும், தோழரும் கலந்துகட்டி வந்துகொண்டிருக்கும்.

ஒரு சிறிய பயணவுறைக்குள் கல்லூரிக்குப்போன காலத்தில் வாங்கியவையாக இருக்கலாம், இரண்டு ஜீன்ஸ்களும், மூன்று டீ-ஷேர்ட்டுகளும், ஒரு பஞ்சாபியோடு, ஒரு வெளிறிப்போன புல்-ஓவரையும் அடைத்து வைத்துக் கொண்டு வந்தாள்.

“ப்ளீஸ் அந்த புல்-ஓவரை மட்டும் விட்டுவிட்டுவாம்மா….. நாம நல்லதாக உத்தரப்பிரதேசத்திலே வாங்கிப்போம்” என்றேன். சம்மதித்து அதைத் தொடரிநிலையத்திலேயே யாசித்துக்கொண்டிருந்த ஒரு பாட்டியிடம் கொடுத்துவிட்டு வந்தாள்.

சென்னையிலிருந்து தொடரிமூலம் வாரணாஸி இரண்டுநாட் பயணமாதாலால், நான் விமானத்தையே முதலில் விரும்பினேன்.  

“சார்..நீங்க நிறைய்ய விமானப்பயணங்கள் செய்திருப்பீங்க, ட்ரெயின் சிக்கனமாயுமிருக்கும், அதோட நிறைய இடங்களைப்பார்க்கலாம்…நிறைய ஊர்களூடு பயணிக்கும் ஆனந்தம் விமானத்தில் கிடைக்கவே கிடைக்காது.., ட்ரெயின் ட்றிப் உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்……” என்றாள்.

“உந்தச் சார் மோர் எல்லாத்தையும் இன்றைக்கே விட்டிடு”

“அப்போ நான் உங்களை எப்படிக் கூப்பிடலாம்”

“செம்பருதி சொல்றாப்பல தோழர்னோ…இல்லைத் தயாபரன்னே கூப்பிடு”

“இரண்டுமே…… எனக்கு நெஞ்சில இடிக்கறாப்பல இருக்கு, மாமான்னு கூப்பிடவா” என்றுவிட்டென் முகத்தைப் பார்த்தாள்.

“உன் இஷ்டம்”

செம்பருதியின் தோழர்களில் ஒருவர் பணிசெய்யும்  பயணமுகவர் நிலைய மூலம் எம் தொடரிப் பயணச்சீட்டுக்கள் தாமதமின்றிக்கிடைத்தன.

ஏற்கெனவே அத்தொடரித்தடத்தில் பயணித்திருந்தவள்போல என்ன இடத்தில் என்ன நல்ல சாப்பாடு கிடைக்கும் என்பதைத் தெரிந்துவைத்துக்கொண்டு அவற்றையெல்லாம் வாங்கித்தந்தாள். அக்கறையான போஷிப்பில்லாவிடினும் ஆரோக்கியம் ததும்பும் உடல்வாகு. சாதா உருளைக்கிழங்குக்கூட்டுடனான பரோட்டா, பானிபூரி, சமோஸாவைக்கூட ரசித்து ருசித்துச்சாப்பிடுவாள். இன்னும் தணலில்வாட்டிய சோளப்பொத்தி, வெள்ளரிப்பிஞ்சுகள், சாத்துக்குடி, பப்பாளி, பலபெயர்தெரியாத பழங்களென நிறையவே வாங்கிச் சாப்பிட்டோம்.

வாரணாஸி அடைந்ததும் ஒரு ஹொட்டலில் நான்  “இரண்டு அறைகள்” வேணுமென்றபோது அவளே முந்திக்கொண்டு பொருண்மியவாதியாக “ஒரு அறை, இரண்டு கட்டில்களுடன் போதும்” என்றாள்.

எம் அறைக்குள் சென்றதும் “ஹன்னா உனக்குன் கன்னித்தன்மையையிட்டான பயமில்லையோ” என்றேன். என் தமிழ் புரியாததைப்போலப் பார்த்தாள், எளிமைப்படுத்தி

“Are you not afraid of your virginity” என்றேன்.

நேர்த்தியானதொரு  ஓவியம்போல என்னை நேராகப் பார்த்தாள். அப்பார்வையை ’உண்டு’ என்றோ ’இல்லை’ என்றோ என்னால் பொருள்பிரிக்க முடியவில்லை. சற்றுக்கழித்து ‘உங்களை மீறிய ஒரு மெசையாவுக்கு அவசியமிருக்காது’ என்றாள்.  இப்போது நினைத்தாலும் அந்தக்கேள்வி அனாவசியமாகவும், அபத்தமாகவும், ‘ஏன்தான் அப்படிக்கேட்டேனோ’ என்கிற வருத்தத்தையுந்  தருகிறது.

வாரணாஸியில் இரண்டுநாட்கள் கழிந்தன. ஹொட்டல் அறையில் வெம்மை போதவில்லை என்றாள். அங்கிருந்து ஜெய்பூருக்குக் கிளம்பினோம், ஜெய்பூர் பழைய அரண்மனை ஒன்றை Rambagh Palace என்று ஹொட்டலாக்கியிருந்தார்கள். அறைகளின் படுக்கைகள், குளியலறைகள், சாப்பாடெல்லாம் ஒரு குறையுமற்று நேர்த்தியாக இருந்தன.

திருவண்ணாமலைக்குத்  திரும்பியதும் எம்  உத்தரப்பிரதேசப் பயண அனுபவங்களைப் பிலஹரிக்கு மெசெஞ்சரில் சுருக்கமாக எழுதினேன்.

ஹன்னா தன்னைவிடவும் இளமையாயிருப்பதால் என் கொம்பனிக்கு அவளுக்கு நான் முதலிடம் தந்ததாக பிலஹரி நினைக்கலாம். ஆனால் யாரிடமும் அது அப்படியல்ல என்று நிரூபிப்பதோ, நம்பவைப்பதோ என் நோக்கமல்ல.

“நீங்கள் ஒரு நேர்த்திவாதி அத்தகைய மனிதனுடன் விடுமுறையில் உல்லாசப்பயணம் அனுபவிப்பது எனக்கு ஒரு ரம்யமான அனுபவமாக இருந்திருக்கும். அது நிகழாதபோது எனக்கும் ஏமாற்றந்தான்!

நானாக வலிந்து நானும் உங்களுடன் வாரணாஸிக்கு வரவா என்று கேட்க ஒரு பெண்ணாக என்னால் முடியவில்லை. நீங்கள் என்னை அழைப்பீர்கள் என்று மிகுந்த  எதிர்பார்புடன் இருந்தேன்.”

“எனக்குங்கூட அப்படித்தானே…ஸ்நேகிதராக இருக்கிறோம் என்பதற்காக எங்கூட உல்லாசப்பயணம் வாரீங்களான்னு எப்படி அழைக்கலாம்னுதான் இருந்தது.”

“இதில என்ன இருக்கு எனக்கு முடியவில்லேன்னாலோ, இஷ்டமில்லேன்னாலோ ‘சாரி….முடியவில்லை’ என்றிருக்கப் போகிறேன்,அவ்வளவுதானே…”

“நீங்க இந்தியாவுக்கு வரப்போறேன்னப்பாகூட சும்மா தமாஷ் பண்ணுவதாகவே நினைத்தேன், நீங்க வாரணாஸிக்கெல்லாம் போகவிருக்கேன்னதைச் சொல்லியிருந்தாற்கூட நான் என்னைத் தயார் படுத்திக்கொண்டிருந்திருப்பேன்.”

“நீங்கள் ஒரு ஜெர்மன்காரியாக இருந்தால் ஒருவேளை நானாகவே கேட்டிருந்திருப்பேன், ஒரு நான்  பிரமச்சாரியாக இருந்தப்போ நான் பெர்லினில் Excelsior என்றொரு 3 நக்ஷத்திர உல்லாசப்பயணிகள் ஹொட்டலில் பணிசெய்துகொண்டிருந்தேன், என்னுடன் கூடப்பணிபுரிந்த நாலைந்து பெண்கள் என்னை ஸ்ரீலங்காவுக்குக் கூட்டிட்டுப்போறியான்னு கேட்டிருந்தார்கள், ஒன்று எனக்கு அப்போது ஜெர்மனியைவிட்டு வெளியேறினால் மீண்டும் ஜெர்மனிக்குள் நுழைய அனுமதிக்கும் வகையிலான  ‘வதிவிட அனுமதி’ இருக்கவில்லை, இன்னும் அவர்களைச் ஸ்ரீலங்காவுக்கு ஒரு தேன்வதையைப்போலப் பக்குவமாக அலுங்காமல் நலுங்காமல் அழைத்துப்போயிருந்தாலும், என் பெற்றோருக்கும் சுற்றத்துக்கும் உறவுகளுக்கும் அவர்களை யாரென்று அறிமுகப்படுத்துவேன்? என் சங்கடத்தை அவர்களுக்குப் புரியவைக்க முடியாதிருந்தது.”

“பிரியமான ஒரு நண்பருடன் உல்லாசப்பயணம் செய்வதை எந்தப்பொண்ணுதான் விரும்பமாட்டா……. ஆனால் ஒரு பொண்ணு நேரடியாகக்கேட்டிடமாட்டா… ஒரு ஆண் உவந்தளித்தால் ஏத்துப்பா,   உங்க  ‘கரிஸ்மா’ எனக்கு ரொம்பப்பிடிச்சிருக்கு…நீங்கள் உலகத்தின் எந்தக்கோடிக்கு அழைத்திருந்தாலும் நான் உங்ககூட ஓடிப்பறந்து வந்திருப்பேன். ஒரு எழுத்தாளராக என்னை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளுவீர்களென நினைத்திருந்தேன். உப்ஸ்ஸ்..!”  

தமிழகத்தைவிட்டுக் கிளம்பமுன் எடுத்துவந்த Johann Sebastian Bach இன் அரை-உருவையும் இசைத்தட்டுக்களையும் செம்பருதியின் ஆலோசனையில் கூரியரில் அனுப்பிவைத்தேன். கிடைத்ததும் பாரிய நன்றியுடன் பதில் பகர்ந்திருந்தாள்.  

ஆறுமாதங்கள் கழித்து பிலஹரி எனக்கு நிதானமாக எழுதிய மின்னஞ்சலொன்று கீழ்வருமாறு இருந்தது.  

நான் ஒரு மணமுறிவாளி (டிவோஸி), பெண்களுக்கான விடுதி ஒன்றில் வாழ்ந்துகொண்டிருந்தேன்.

நீங்கள் தமிழகம் வந்தவேளையில் எனக்கு ஒரு புதிய நபருடன் பழக்கமேற்பட்டு அப்போதுதான் அவனது அடுக்ககத்தில் அவனோடு சேர்ந்து வாழத்தொடங்கியிருந்திருந்தேன்.

நான் உங்கள்மீது சீரியஸான ஆர்வங்காட்டி  வீட்டுக்கழைத்து உபசரித்து உங்களைத் தங்க வைத்திருந்தாலோ, அல்லது உங்களோட வாரணாஸி ஜெய்ப்பூருக்குக்கூட வந்திருந்தாலோ அவன் என்னமாதிரி அதை எடுத்துப்பான் என்று தெரியாமலிருந்தது. அந்த ’றிஸ்க்கான’ பரிசோதனையைச் செய்துபார்க்கவும் தயங்கினேன். அவன் நடைமுறைக்கொவ்வாத பஞ்சாங்கமாகவும் தன் பிறின்ஸிப்பிள்களில் தளர்வில்லாத பிடிவாதக்காரனாகவும் இருந்தான், சகிக்கவில்லை. அப்படியானவங்க கூட எல்லாம் ஆயுள்பரியந்தம் ஜெயில்வாழ்க்கை வாழவாமுடியும், அவனைத்தொடரமுடியலை என்பதை என் ஆற்றாமையால் இப்போது உங்களுக்கு அறியத்தருகின்றேன்,  

இத்தகவல்கள் உங்களின் மனவமைதியைக் கீறிவிடுமானால் நான் உங்களுக்கு இந்த அஞ்சலையே அனுப்பவில்லையென்றிருக்கட்டும், இதை அடித்துவிட்டு என்னையும் பொறுத்தாற்றிவிடுங்கள்.

எம்மால் எதுவுஞ் செய்யமுடியாது, இன்னும் உலகம் ஆண்களின் எண்ணப்படி அவர்களின் கட்டுப்பாட்டில்த்தான் இயங்குகிறது. உங்கள் ‘உணர்வோடு விளையாடும் பறவைகள்’ படித்தேன். இன்னும் என்னை அது அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் நட்பு எனக்குப் பெறுமதியானது, இழந்துவிடமுடியாதது, என்னுடன் என்றும்போலத் தொடர்பிலிருங்கள், என்னை மறந்துவிடாதீர்கள்!

பிரியமுடன் தங்கள்
பிலஹரி.  
(நேர்த்தியன் :>  Perfectionist)

– அம்ருதா இதழ் – 190 செப்டெம்பர் 2023.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *