கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள் நகைச்சுவை
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 16,454 
 

கதை ஆசிரியர்: கி.ரா.

கிராமத்தை ஒட்டிய ஒரு பஸ் நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தேன்.

பள்ளி விடுமுறைநாட்கள் என்பதால் குழந்தைகள் மர நிழலில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலில் உட்கார்ந்துகொண்டு சொல்விளையாட்டு ஆடிக் கொண்டிருந்தார்கள். கவனிக்காதது போல் கவனித்துக் கொண்டிருந்தேன், காதை அவர்கள் பக்கம் திருப்பி வைத்துக்கொண்டு ஒரு குழந்தை கேட்கிறது.

“போகும் போதும் என் நிழல் முன்னாலேயே வந்தது; வரும்போதும் என் நிழல் முன்னாலேயே வந்தது; ஏம்?”

“எங்கே எங்கே இன்னொரு தபா சொல்லு” என்று குழந்தைகள் கேட்டதும் அதை அப்படியே திருப்பிச்சொன்னது முதல்குழந்தை.

கேட்ட குழந்தைகள் மட்டுமில்லை நானும் யோசித்தேன். புரியவில்லை.

காலவித்தியாசம், அழிப்பாங் கதைகளின் வடிவங்கள் கூட மாறிவிட்டன போல!

இவைகளின் விடைகள் எப்போதும் ஒரு சொல்லாகத்தான் இருக்கும்.

விடுகதை என்று சொல்லப்படும் ஒரு அழிப்பாங்கதை பரவுவதற்கு முன்னால் அதன் விடை அதை உண்டாக்கியவருக்குத்தான் தெரிந்திருக்கும் அல்லது அதைக் கேட்டுத் தெரிந்துகொண்ட முதல்நபருக்குத்தான் தெரிந்திருக்கும். இதன்விடை யாருக்கும் தெரியவில்லை எனக்கு உட்பட!

சரி; அந்தக் குழந்தை என்ன பதில் சொல்லுகிறது பார்ப்போம் என்று காத்திருந்தேன் வந்த பஸ்ஸையும் விட்டுவிட்டு.

தான் போட்ட கதையைத் தானே விடுவித்தது இப்படி:

“காலையில எழுந்திருச்சதும் மேக்காமப் போனேம். சாய்ந்திரம் எழுந்திருச்சி கிழக்காம வந்தேம்,” என்று பதில் சொல்லி நிறுத்தி சிரித்துக்கொண்டது அந்தக் குழந்தை.

இப்போது விடையும் கூட ஒரு அழிப்பாங்கதே போல இருக்கே! என்று தோன்றிது எனக்கு. மற்ற குழந்தைகளும் திகைத்தன. முதல் குழந்தை சிரித்துக்கொண்டே விடையை விளக்கிச் சொன்னது:

“அட இவளுகளே, இதுகூடத் தெரியலையா!

காலையில நாம மேக்காம நடந்துபோனா நம்ம எனலு (நிழல்) நமக்கு முன்னாலெ தானே போவும்?

சாய்ந்திரம் திரும்பவந்தாலும் அந்த நம்ம எணலு நமக்கு முன்னாலெதானெ வரும்?”

பெண் குழந்தைகள் இப்பொ உயரம் மட்டு வளரவில்லை அறிவும் வளந்திருக்கு.

அந்த அழிப்பாங்கதையை என்னுள் சொல்லிப் பார்த்துக்கொண்டேன்.

போகும்போது எந்நிழல் முன்னாலே வந்தது
வரும்போதும் எந்நிழல் முன்னாலே வந்தது;

ஏன்?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *