சாமியாடிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2024
பார்வையிட்டோர்: 194 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

சுடலை மாடசாமி கோவிலில் ஊரே திரண்டிருந்தது. சுடலைமாடன், கோட்டை மாடன், சங்கிலி மாடன் என்ற இருபத்தோரு தேவதைகளுக்குப் படைப்பு’ வைத்திருந்தாலும், சுடலை மாடசாமிதான் அந்த ஊருக்கு ஹீரோ. கோவில் முகப்பு வாயிலுக்குச் சற்று உள்ளே, வில்லுப்பாட்டு நடந்துகொண்டிருந்தது. ‘பாடகி வடிவு போடு போடென்று பாட்டுக்களைப் பொழிந்து கொண்டிருந்தாள். காத்தமுத்து ஆடிக்கொண்டிருந்தான்.

அவனை மாடசாமி ஆட்டுவிப்பதாகச் சொன்னார்கள். வில்லடிப்பவள் பெண் என்பதாலும் – அதிலும் அழகிய பெண் என்பதாலும் கூட்டம் அதிகம்.

வடிவு இடது கையை லாவகமாய் மேலே உயர்த்த, அவளுடைய முறை மாப்பிள்ளை அவள் கையை உரச, சுடலை மாடசாமி இரண்டு பேர் கைகளிலும் தன் கையை வைத்து ஆட. ஒரே உல்லாசம்.

தூக்கி வைக்கும் கால்களுக்கு
சுடலை மாடசாமிக்கு துத்திப்பூ-சல்லடமாம்
எடுத்து வைக்கும் கால்களுக்கு
சுடலை மாடசாமிக்கு எருக்கணம்பூ
– சல்லடமாம்

என்று வடிவு பாடினாள்.

‘வடிவின் நல்லதங்காள்’ குரலும், இறுகக் கட்டிய சேலையில் துள்ளிய வாளிப்பான உடலும், சிலம்பைப் போல, கோலாட்டத்தைப் போல, வில்லை அவள் அடித்த நேர்த்தியும், முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சாய்ந்து, சிரித்துக் கொண்டே ஆடிய லாவகமும் கூட்டத்தின் கவனத்தை முற்றிலும் அவள் பக்கமே திருப்பிவிட்டன. பாவம், சுடலை மாடசாமி ஒரு கையில் தீப் பந்தத்தையும், மற்ற கையில் வெட்டரிவாளையும், வாயில் இரண்டு முழு வாழைப்பழங்களையும் வைத்துக் கொண்டு, சமத்காரமாய், ஆர்ப்பாட்டமாய் ஆடியபோதிலும், அப்ளாஸ் கிடைக்க வில்லை.

மற்ற சில சாமிகளும் ‘அம்போ’ என்று ஆடிக் கொண்டிருந்தன.

வடிவ பாடுவதை நிறுத்திவிட்டாள்.

ஊரின் கண்களும், முறை மாப்பிள்ளையின் சிவந்த விழிகளும் வடிவை மொய்க்க, வடிவின் கண்களோ அவன் எங்கே இருக்கிறான்?’ என்று வட்டமிட்டன. அவன் இன்னும் வரவில்லை. வடிவுக்கு ஒரே ஏமாற்றம் திடீரென அவள் குரல் உயர்ந்தது. ‘பெரியபுள்ளி’ என்றால் லேட்டாகத்தான் வரவேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டிருந்த அவன், அப்போதுதான் வந்து கல் தூணின் மீது சாய்ந்து உட்கார்ந்தான். அவனுக்குப் பலத்த வரவேற்பு. சுற்றிலும் பரபரப்பு. காரணம், அவன் ஒரு சினிமாத் துணை நடிகன். சென்னையிலிருந்து கோவில் கொடைக்காக வந்திருந்த அவனைப் பலர் வளையமிட்டார்கள்.

வடிவின் உற்சாகத்திற்குக் காரணம் அவள் இந்த ஹீரோவைக் காலையில் தற்செயலாகச் சந்தித்த போது, அவளை எப்படியும் பிரபல பின்னணிப் பாடகி. ஆக்கிவிடுவதாக அவன் அளித்திருந்த வாக்குறுதிதான். அவளை முன்னுக்குக் கொண்டு வருவதாக அவன் திரித்த கயிறு, வில்லின் கயிற்றை விட உறுதியானது என்று, வடிவு நம்பினாள். சுடலைமாடனுக்கும். கோட்டைமாடனுக்கும் பாடி, வடிவக்கு அலுத்துவிட்டது.

ஹீரோ வந்ததும், அவன் இங்கேயே வாய்ஸ் டெஸ்ட் செய்யட்டும் என்று நினைத்தாளோ என்னவோ, சினிமா மெட்டில் தொடங்கிவிட்டாள் வடிவு.

“இவரு. சுடலைமாடசாமி – நல்லா துள்ளி ஓடும் சாமி ஒ.ஹோ…நல்லா ஆடும் சாமி – ஓ.ஹோ” என்று பாடிய ஜோரில் “சினிமாவில் பாடப்போறேன் சாமி” என்று பாடிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

ஆனால், அவள் பாடியதைக் கேட்காமல் ‘பாடி’ யையே பார்த்துக் கொண்டிருந்த வடிவு பக்தர்கள் இதையும் ரசித்து மகிழ்ந்தார்கள்.

வடிவின் சினிமா மெட்டை ரசிக்காத ஒரே ஆத்மாவும் அங்கே இருந்தது. அது முதியவர் ஐயாசாமி. ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வடிவைக் கொண்டு வந்ததே அவர்தான்.

கோவில் கொடைக்காக ‘வரி போட்ட போது, வாலிபர்களான தீவிரவாதிகள் (லெஃப்ட் அட்வெஞ்சரிஸ்ட்) கனவுக் கன்னி காந்தா, கோ ல் ரிக்கார்டு டான்ஸ் ஆட வேண்டும் என்று துள்ள, வயதான வலதுசாரிகள் (ரைட் ரியாக்ஷனரி) எழுபது வயது மதுரை வீரன் தான் வில்லுப்போடவேண்டும் என்று வாதாட முற்போக்கு நடுத்தரவாதி (லெஃப்ட் ஆஃப் தி சென்ட்டரி) ஐயாசாமி ஒரு ‘காம்ப்ரமைஸ்’ யோசனை சொன்னார். கவர்ச்சியையும் வில்லுப்பாட்டையும் சேர்த்து வடிவை ஏற்பாடு செய்யலாம் என்பது அவர் சொன்ன யோசனை தான். இப்போது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறினார்.

ஐயாசாமியைப் போல, முப்பது வயது ரத்தினமும் திணறிக் கொண்டிருந்தான். ஆனால், அவன் துக்கத்திற்குக் காரணம் வேறு. போன வருஷம் இதே நாளில் அவன் அப்பா முத்துப்புதியவன், ‘சுடலை மாடசாமி ஆடினார். இப்போது அவர் உயிருடன் இல்லை.

காத்தமுத்து ஆடுகிறான்.

பக்கத்தில் யாரோ பேசிக்கொண்டது அவன் காதில் விழுந்தது.

“உம் – முத்துப்புதியவன் ஆடினா எப்படி இருக்கும்? இந்தக் காத்தமுத்து மேலயா சாமி வரணும்?”

“நீரு ஒண்னு காத்தமுத்து அகம்பாவத்துல ஆடுகிறான். இந்த ஊத்தப்பல்லுப் பயகிட்ட சாமி வருமாக்கும்?”

“வே, அப்பன் ஆடின சாமி மகன்கிட்டதான் வரும். இப்ப சங்கரன் ஆடின மாடத்தி அவன் மண்டையைப் போட்டதும் அவன் மவன் மாடக்கண்னு தானே ஆடறான்?”

“நீரு சொல்றது சரிதான் மச்சான். இப்ப ரத்தினம் பய மொகத்தைப் பாரும், சாமிக்களை தெரியது. உடம்புகூட குலுங்குறாப் போல இருக்குது.”

இவர்கள் சொல்வதைக் கேட்கக் கேட்க ரத்தினத்தின் உடல் குலுங்கத் தொடங்கியது.

“சரியாச் சொன்னீர். சுடலைமாடசாமி அர்த்த ராத்திரிலே தான் ஆடும். இந்தக் காத்தமுத்துப் பய கம்மா தண்ணி போட்டுட்டு இப்பவே குதிக்கறான்.”

“நல்லாச் சொன்னீர் அர்த்த ராத்திரி இதோ வரப்போவது. உண்மையான சுடலைமாடசாமி நம்ம ரத்தினத்தைப் புடிச்சுத்தான் ஆட்டப் போவது.”

ரத்தினத்தின் உடல் ஆடிக்கொண்டிருந்தது. அந்த இரண்டு பேர்வழிகளும் ஒரு மேளத்தைக் கொண்டு வந்து அவன் முன்னால் முழக்கினார்கள். ‘டங்கு டங்கு’ என்று எழுந்த மேளத்தின் ஒலியில் ரத்தினத்தின் உடம்பு இன்னும் வேகமாய்க் குலுங்கியது. உடனே அவன் மீது சந்தனத்தை அப்பினார்கள். ஒரு தீவத்தியைக் கொளுத்தி அவன் கையில் கொடுத்துவிட்டு, “அர்த்த ராத்திரியில ஆடுறதனால, உண்மையான சுடலைமாடசாமி இதுதான்” என்று வத்தி வைத்தார்கள். ரத்தினத்துக்கு இப்போது ‘சூடு’ பிடித்துவிட்டது.

வேறொரு பக்கத்தில் இன்னும் ஆடிக்கொண்டிருந்த காத்தமுத்து திடீரென்று தன் கழுத்தில் ஆடிய மாலைகளில் ஒன்றை எடுத்து அந்தத் துணை நடிகனின் கழுத்தில் போட்டுவிட்டு, “டேய்! அடுத்த வருஷத்துக் குள்ளார நீ பயாஸ்கோப்புல ஈரோவா, நடிக்கலேன்னா நான் கடலை மாடசாமி இல்லடா, என் பேரை மாத்திடு” என்று கூச்சலிட்டான்.

ஒரு குரல் காத்தமுத்துவை அதட்டியது. “டேய், நீ சுடலைமாடனே இல்லடா. எப்படிடா பேர மாத்த முடியும்?” என்று இரைந்து கொண்டே அங்கு வந்த ரத்தினம் சுழன்று சுழன்று ஆடினான்.

காத்தமுத்துவா, அசறுகிறவன்? அவன் சமாளித்துக் கொண்டு ரத்தினத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, “பேச்சியம்மா, வந்துட்டியா. வா. ரெண்டு பேரும் சேர்ந்து ஆடலாம்” என்று குலுங்கிக் குலுங்கி ஆடினான்.

ஆடிக்கொண்டே இரு ‘சாமியாடி’களும் போர் தொடுத்தார்கள்.

ரத்தினம் கேட்டான். “நீ யாருடா?” காத்தமுத்து. “நான் சுடலைடா” என்றான்.

“சி.ஊத்தப்பயலே.உன்கிட்ட நான் வருவனாடா? இதோ… (மார்பைத் தட்டிக் கொண்டு) இவன் அப்பன் என்னை ஆடினான். இப்போ இவங்கிட்ட வந்திருக்கேன்…நான் என்ன மனுஷனா கட்சி மாற.நான் தெய்வண்டா? அப்பங்கிட்டே இருந்து மவன் கிட்ட வந்த தெய்வண்டா ..” என்று ரத்தினம் குதித்தான்.

காத்தமுத்து விட்டுக்கொடுக்காமல் “நீ சாமியே இல்லடா. நான் கடலையாண்டி – நீ பூச்சாண்டி” என்று நையாண்டி செய்தான்.

ரத்தினம் அரிவாளை ஓங்க, பதிலுக்குக் காத்தமுத்துவம் அரிவாளை ஓங்க, கூட்டம் எழுந்தது. ரத்தினத்தின் பங்காளிகள் “அவன்தான் ஒரிஜினல் சாமி’ என்று வாதாட, காத்தமுத்துவின் சொந்தக்காரர்கள் ‘அவன்தான் அசல் கடலை மாடசாமி’ என்று கட்சியாடினார்கள்.

வாதம் பிடிவாதமாகிக் கைகலப்பு ஏற்படும் நிலை. “என்னைப் பார்த்துப் பாடு’ என்று காத்தமுத்து கத்த, வடிவு நடுங்கிக்கொண்டே பாடத் தொடங்கினாள். உடனே ரத்தினம் உரித்த தேங்காய் ஒன்றை எடுத்துத் தன் தலையில் அடித்து உடைத்தான். “நான்தான் உண்மையான மாடன்…என்னப் பாத்துப் பாடல. உன் தலைய வெட்டி..” என்று மிரட்டினான். வடிவக்குக் குலை நடுங்கியது.

பார்ப்பவர்கள் திகைத்து நின்றனர்.

ஐயாசாமிக்குப் பொறுக்கவில்லை “மடப்பய புள்ளைகளா, முதல்ல கூச்சலை நிறுத்துங்கடா” என்று கத்தினார்.

கூட்டம் கேட்கவில்லை.

“ரத்தினம் ஆடுவதே சுடலைமாடன்”

“காத்தமுத்துவே சுடலைமாடன்” என்ற கோஷங்கள் வலுவடைந்தன.

இந்த அமளியில் இதர சாமியாடிகளும் இரண்டு கோவிஷ்டிகளாகப் பிரிந்து இவன்தான் அசல் சுடலை ‘அவன் தான் நிஜமான சுடலை என்று சர் டிபிகேட் கொடுத்தார்கள். ஆனால், உதிரமாடசாமியாடி தன் பீடத்தில் இருந்து அங்கு வந்து, ஒரு கோஷடியோடு ஒன்றிப்போன ‘அம்மன் சாமி’யைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு “இவங்க ரெண்டு பேருமே கடலையில்லை, பேயுங்க” என்றார். உடனே மூன்றாவது கோஷ்டி ஒன்று உருவாகி “காத்தமுத்து ஆடாதே ரத்தினமே குதிக்காதே” என்று கூச்சலிட்டது. இதைக் கேட்டதும் உதிரமாடசாமிக்கு ஒரே மகிழ்ச்சி. அம்மன் சாமியையும் இழுத்துக் கொண்டு தன் பீடத்திற்குப் போய்ச் சேர்ந்தது.

இதற்கிடையே “இரண்டு பேருமே ஆடட்டுமே” என்றார் ஒருவர்.

“அதெப்படி? யார் சுடலைமாடன்னு தெரிய வேண்டாமா?” என்றார் ஒரு சந்தேகவாதி.

ஒசியில் கிடைக்கும்போது மட்டும் பேப்பர் படிக்கும் ஆசாமி ஒருவர் “ரத்தினம் ஆடுவது ஸ்தாபன சுடலைமாடன். காத்தமுத்து ஆடுவது, ஆளும் சுடலைமாடன் என்று வச்சுப்பமே” என்றார்.

“அது இப்ப பாஷன் இல்லிங்களே. அப்பா ஆடினதைத்தான் ஆடுறதா ரத்தினம் சொல்றதால அதுக்கு ‘அப்பா சுடலைமாடன்’னு பேர் வைக்கணும் காத்தமுத்து ஆடுறதை வெறும் கடலை மாடன்’னு கூப்பிடணும்” என்று வேறொருவர் வியாக்கியானம் செய்ததைக் கூட்டத்தார் ஒப்புக் கொண்டார்கள்.

வடிவு கெட்டிக்காரி: பிடித்துக் கொண்டாள்.

“இவரு அப்பா சுடலைமாடசாமி சும்மா தப்பா ஆடாதசாமி” என்று வடிவு துணிந்து அவள் பாடியதை ரத்தினம் கோஷ்டியினர் கரகோஷம் செய்து வரவேற்றார்கள். உடனே காத்தமுத்து ஆதரவாளர்கள் “ஏடி, அப்பா சுடலைக்கா ஆதரவு கொடுக்கறே? லோலாக்கு பிஞ்சிடும் பிஞ்சி” என்று எச்சரித்தார்கள்.

வடிவ பயந்து போய், “இவரு அப்பாவே இல்லாத சாமி எல்லார்க்கும் அப்பாவான சாமி என்று பாடினாள்.

அப்பா சுடலைமாடசாமி தரப்புக்கு ஆத்திரம் பொங்கியது.

உடனே எதிர்க்கோஷங்கள் கிளம்பின.

ஐயாசாமி பதறிப்போய் இன்னும் கதறிக் கொண்டிருந்தார்:

“டேய் .. நா சொல்றதக் கேளுங்கடா ஒரு காலத்துல சாமியாடினா சபை ‘கப்புசிப்புனு’ அடங்கும். இப்போ எவன்தான் சாமியாடறதுன்னு கணக்கே இல்லாமப் போயிடுச்சு. சாமிகளும் ஒளிஞ்சுகிட்டுதுங்க. இவனுங்க ரெண்டுபேரும் சுடலைமாடசாமி இல்லாம போயிரலாம். ஒரு வேளை மாடன், ரெண்டு பேரையுமே ஆட்டி விளையாடலாம். நீங்க சும்மா இருந்தீங்கன்னா சாமி ஆவேசம் இல்லாதவன் கொஞ்ச நேரத்துல டப்புன்னு நின்னுடுவான். சத்தம் போடாதீங்கடா. நீங்க சாமிங்களெயே பிரிக்கப் பாக்குறீங்களே…”

ஐயாசாமியின் அப்பீலுக்கு சக்தி இல்லை.

“ரெண்டு பேரும் ஆடக்கூடாது ஆட முடியாது.”

“காத்தமுத்துதான் ஆடவேண்டும், ரத்தினத்தை ஆடவிட மாட்டோம்.”

“ரத்தினம் ஆடியாகவேண்டும்”

“காத்தமுத்து ஒடியாக வேண்டும்” என்பன போன்ற கோஷங்கள் மேன்மேலும் எழும்பின.

ஐயாசாமி தள்ளாடிக் கொண்டே கோவிலிலிருந்து வாக் அவுட்’ செய்தார். ‘வாழ்க ஒழிக” கோஷங்கள் வெகு தூரத்திற்கு அவரைத் துரத்தின.

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *