பழத்தோட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2024
பார்வையிட்டோர்: 190 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஒரு கிராமப் பஞ்சாயத்துக்குத் தனியாக அலுவலகம் இல்லையானால், அந்தப் பஞ்சாயத்துத் தலைவரின் வீடு அலுவலகமாகக் கருதப்பட வேண்டும் என்று. சட்டம் சொல்கிறது. அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவமோ, ஒர் ஊரில் பஞ்சாயத்து அலுவலகம் இருந்தால், அது தலைவரின் வீடாகக் கருதப்பட வேண்டும் என்று, சட்டத்தைத் தாமாகவே திருத்தி, அமுல் செய்பவர். அப்படிப்பட்டவருக்கு எதிராக அந்தக் கிராமத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடப்பதில் வியப்பில்லை. அவர், அந்த ஆர்ப்பாட்டங்களை அநாவசியமாகச் சமாளிப்பதிலும் வியப்பில்லை. அவரை எதிர்ப்பவர்களுக்கும், அவரிடம் ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு. சிலர், அவரை “பலே கில்லேடி” என்று பாராட்டுவதும் உண்டு. கொள்ளைக்கார ஜம்புலிங்கத்திற்கும் சாம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரர்களுக்கும், மக்கள் மத்தியில் இருக்குமே ஒரு மரியாதை, அந்த மரியாதை பரமசிவத்திற்கும், பஞ்சாயத்துச் சொத்து மாதிரி, நன்றாகக் கிடைத்தது.

பரமசிவத்திற்கு எதிராக, பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சற்றுத் தொலைவில் உள்ள கிராமக் கச்சேரியில் ஒழிக கோஷங்கள் ஒலித்தன. கோஷங்களைச் செவி மடுக்கக் கூட்டம் கூடி வழிந்தது.

ஒடு. ஒடு,
ஊரைவிட்டு ஒடு!
கலை. கலை,
பஞ்சாயத்தைக் கலை!
நடத்து நடத்து,
நீதி விசாரணை நடத்து!
பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம்,
ஒழிக! ஒழிக!

ஊர்ப் பொதுமக்களில் பெரும்பகுதியினர், எதிர்க் கட்சித் தலைவர் ஏகாம்பரம் (முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர்) தலைமையில், கோஷங்களை, கோஷ்டிக் களமாக்கிக் கொண்டிருக்கையில், பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சிவகுமார், கணக்குகளைத் தணிக்கை செய்வதற்காக, அந்தத் திருவூரில் காலடி வைத்தான். காதில் எட்டி உதைப்பது போல், சத்தம் கேட்டு, கூட்டத்தைத் திரும்பிப் பார்த்தான். அவனுக்கு இருபத்து மூன்று வயதிருக்கும். தமிழக சர்வீஸ் கமிஷனில் “குருப் டு” எழுதி, பதவிக்கு வந்தவன் அவன் வயதுக்கேற்ற துணிச்சலில் (அல்லது மடத்தனத்தில்) சிவகுமார், கூட்டத்திற்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் கூட்டத்தில் நிசப்தம். அவன் உடனடியாக பஞ்சாயத்துத் தலைவரை டிஸ்மிஸ் செய்யப்போவது போல் கூட்டத்தில் ஒரு பிரமை கூட்டம், மெளனத்தின் மூலம் கொடுத்த மரியாதையில் சிவகுமார் பெருமிதமடைந்தான்.

நெடிய அந்த மெளனத்தை, ஒரு பியூஸி பெயிலன் கலைத்தான்.

“பஞ்சாயத்து ஆபீஸர் சார் ஊராட்சி மன்றத்திற்கு எதற்காகத் தையல் மிஷின்கள் கொடுக்கிறாங்க?”

சிவகுமார், ஒரு (இன்றைய) அதிகாரிக்குரிய பாணியில் பதிலளித்தான்:

“ஏழைப் பெண்கள் மிஷின்களில் தையல் கற்றுப் பிழைப்பதற்காக, இந்தத் திட்டம்.”

பெயிலன் விடவில்லை. “பஞ்சாயத்துத் தலைவர் வீட்டில் தான் மிஷின்கள் இருக்கணுமுன்னும், அதில, அவரு பிள்ளைங்கதான் தைக்கனுமுன்னும் ஏதும் சட்டம் இருக்கா ஸார்?”

சிவகுமார், இந்தக் கேள்விகளுக்கு மெளனத்தைப் பதிலாக்கினான்.

பியூலியாரின் வழியில், இன்னொரு ஆசாமி நடை போட்டார். அவருக்குப் பஞ்சாயத்துத் தலைவர் வீட்டு வரியை அதிகமாகப் போட்டிருந்தார்.

“ஆபீஸர் லாரே பஞ்சாயத்தில் இருந்து ஸ்கூலுக்கு, ஒரு பிள்ளைத்கு நாலு பைசா வீதம் கொடுக்கிறாங்களே. எதுக்கு?”

“அரசு ஆறு பைசாவம், பஞ்சாயத்து நாலு பைசாவுமாகப் போட்டு, ஆக, பத்து பைசாவில், ஒவ்வொரு பிள்ளைக்கும் நடுப்பகல் உணவு கொடுக்க வேண்டுமென்ற உயர்ந்த லட்சியமே காரணம்” என்றான் சிவகுமார்.

“அப்படியா சங்கதி பஞ்சாயத்துத் தலைவரும். ஹெட்மாஸ்டரும் பங்கு போட்டு ஹோட்டலில் சாப்பிடலாமுன்னு சட்டம் சொல்றதா நான் நினைச்சேன்”

சிவகுமார் மெளனியானான். இப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஏகாம்பரம் துள்ளிக் குதித்தார்,

“இ.ஒ. பி. ஐயா கிணறு வெட்றதுக்காக, சர்க்கார்ல விவசாயி ஒவ்வொருவருக்கும் ஐயாயிரம் ரூபாய் லோன் கொடுக்கி றாங்களாமே; ஏன் கொடுக்கிறாங்க?”

“இது என்னங்க கேள்வி நிலத்தில் நீர்பாய்ச்சி, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற அரசின் நோக்கமே, அடிப்படைக் காரணம்” என்றான் சிவகுமார் ஏகாம்பரம் இரண்டு தடவை சிரித்துவிட்டு, “இந்த ஊர் லே பத்துப் பேரு கிணறு வெட்ட லோன் வாங்கினாங்க அதில ஐந்து பேருக்குச் சொத்தே கிடையாது: இரண்டு பேர் ஊரிலேயே இல்ல பத்தில் ஒருவன் கூட கிணறு கிடக்கட்டும். ஒரு குழி கூட வெட்டல. ஒரு வேளை, பஞ்சாயத்துத் தலைவரை, பைக்குள்ள போட்டா, ஒன்னும் வெட்ட வேண்டாமுன்னு சட்டம் சொல்லுதோ?” என்றார்.

“டேய் இப்படியே பேசிக்கிட்டுப் போனால், உன்னை வெட்டுவேண்டா” என்று ஒரு குரல் கேட்டது. பஞ்சாயத்துத் தலைவரின் ஆதரவாளர்கள், கூட்டத்திற்கு எதிர்ப்புறமாகத் திரண்டு வந்தார்கள். முன்னணியில் நின்று, கூட்டத்திற்குப் பின்னணி பாடியது, பஞ்சாயத்துத் தலைவரின் மச்சான் (காண்டிராக்டர்) ராமசாமி. எதிர்பாராத் இந்தப் ‘பஞ்சாயத்துத் தலைவர் பாதுகாப்புப் படை’யின் தளபதி ராமசாமிக்கு, ஏகாம்பரம் பதிலளிக்கு முன்னால், படையின் துணைத் தளபதி கத்தினார்,

“யோவ் பரமசிவத்தைத் திட்டுற பரமயோக்யரே! நீயும்தான் தலைவராய் இருந்தே நீ என்னத்தைக் கிழிச்சே?”

எதிர்க்கட்சி ஏகாம்பரம் என்ன கொக்கா?

“நான் என்ன கிழிச்சேனோ, தெரியாது. ஆனால், என் மாமன் மச்சானுக்குக் காண்டிராக்ட் கொடுக்கல. என் பிள்ளிங்களை தையல் மிஷின்களில் தைக்க விடல.”

பதில் பேசப்போன தொண்டர்களை அடக்கிவிட்டு பஞ்சாயத்துத் தலைவர் மச்சான் பதிலளித்தார்

“நீ மாமன் மச்சானுக்கு ஏய்யா கண்டிராக்ட் கொடுக்கிற? நீயே வேறு பேர் ல காண்டிராக்ட் எடுத்தியே மறந்துட்டியா? நீ தையல் மிஷின் கள்ள உன் பிள்ளிங்கள தைக்க விடலங்கறதும் வாஸ்தவம்தான். நீதான் அவ்வளவு மிஷினையும் வித்துப்பிட்டியே, பிறகு எப்படித் தைக்கிறது?”

ராமசாமியின் பதிலுக்கு, அவரது தொண்டர்கள் கை தட்டினார்கள். உடனே எதிர்க் கட்சிக்காரர்கள் கல் தட்டினார்கள். திணவெடுத்த தோளினராய் இரு கோஷ்டிகளும் பகைப்புலம் நோக்கிப் பாயத் தொடங்கியதும் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சிவகுமார் குறுக்கிட்டான். கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் சிறப்புப் பரிசு (மூன்றாவது பரிசு) பெற்ற அவன் “அமைதி, அமைதி, வன்முறை வழியல்ல. கல்லடி நல்லடியாகாது பஞ்சாயத்துத் தலைவர் தவறு செய்திருந்தால் நான் நடவடிக்கை எடுக்கிறேன். பஞ்சாயத்தைக் கலைக்க (சிபார் சு) செய்கிறேன். ஆனால், தலைவர் தவறு செய்தாரா என்பதை நான்தான் கவனிக்கவேண்டும். நீங்களே நீதிபதிகளாகக் கூடாது.

எதிர்க்கட்சி அணி, சிவகுமார் மனுநீதி வழங்குவான் என்று நம்பியதைப் போல், “நடத்து நடத்து நீதி விசாரணை நடத்து பஞ்சாயத்து அதிகாரி சிவகுமார் வாழ்க!” என்று சொல்லிக் கொண்டே நடந்து கலைந்தது.

பஞ்சாயத்து (தலைவர்) மச் சான், சிவகுமாரை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு “யோவ் இ ஒ பி. நீ ஏய்யா இந்த அற்பப் பயல்ககிட்ட வந்தே? நீ பாட்டுக்கு பஞ்சாயத்துக்கு வந்தியா, கணக்கைப் பார்த்தியாண்னு போகாம உனக்கு ஏய்யா வீண் வேலை?” என்றார்.

சிவகுமாருக்கு ஏகப்பட்ட கோபம்: ராமசாமி நான் நீ என்று பேசுவதால், ஆத்திரமடைந்த அவன், பொறுமையை கடைப்பிடித்தான். (செல்லாக் கோபம் பொறுமை என்பது பழமொழி.) ராமசாமி எங்கே பல்லை உடைத்துவிடுவானோ என்று எண்ணி, பல்லைக் கடித்துக் கொண்டான். பஞ்சாயத்து அலுவலகத்தை நோக்கி நடந்தான்.

பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம், பாதிக் கண்களை மூடிய வண்ணம், ஒரு ஈஸிசேரில் மல்லாந்து கிடந்தார். பக்கத்தில் பார்ட் டைம் கிளார்க், விசிறியால் அவருக்கு வீசிக் கொண்டிருந்தான். அவரது பிள்ளைகள் அலுவலகத்தில் ‘கண்ணாம் பூச்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள். உலகத்தில் எதுவுமே நடக்கவில்லை என்பது மாதிரி. பரமசிவம் ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

வளர்ச்சி அதிகாரி சிவகுமார் அலுவலகத்திற்குள் நுழைந்ததும், தலைவர் லேசாகச் சிரித்தார். அதுதான் வரவேற்பு. சிவகுமார், ‘பிஸினஸ் லைக்காக’ “நான் ஆடிட்டிக்கு வந்திருக்கேன்” என்றான்.

“தெரியும் நேற்று ஆர்.டி. ஒ. ஆபீஸில் உங்கள் டூர் புரோக்ராமைப் பார்த்தேன்,” என்றார் பஞ்சாயத்து பரமசிவம்.

“நான் உங்களுக்கு லெட்டர் போட்டிருந்தேனே!”

“நான் பார்க்கல…எங்கேயாவது வீசி எறிஞ்சிருப்பாங்க. பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம் அலட்சியமாகக் கூறினார்.

சிவகுமார் பேச்சை விரும்பாதவன்போல், “எல்லா ரிக்கார்ட்ஸும் ரெடியா? ” என்றான்.

பரமசிவம் சாவதானமாக, “இன்னும் கர்னம் டிமான்ட் புக்கையே எழுதல; எப்படிக் கணக்கைப் பார்க்கப் போlங்க? வி.எம். ஊரிலேயே இல்ல; வரி வசூல் புக் அவருகிட்டதான் இருக்கு” என்றார்.

“நான் உங்களுக்கு முன்னாலேயே லெட்டர் போட்டது. இப்படி நேரக் கூடாது என்பதற்காகத்தான்.”

இதற்குள் மச்சான்காரர் ராமசாமி குறுக்கிட்டு “யோவ், எங்க மாமா பஞ்சாய்த்துக்குன்னு உழைச்சி உழைச்சி ஒடாய்ப் போனவரய்யா. அவரைப் போலீஸ் விசாரிக்கிறது மாதிரி விசாரிக்கிறியே!”

தலைவர், மச்சான் பேசுவதைத் தடுக்கவில்லை. அவன் அப்படிப் பேசுவது ஒரு சர்வசாதாரண நிகழ்ச்சி என்பது போல், முகத்தை ரப்பர் மாதிரி வைத்துக் கொண்டு “சிவகுமார்! உங்களுக்குப் புரோமோஷன் வரப் போவுதாமே? கலெக்டர் என்கிட்ட சொன்னார்” என்றார்.

“எனக்கு இன்னும் புரபேஷனே டெக்லேர் ஆகலியே வேலைக்கு வந்து முனு மாதங்கூட ஆகல: அதெப்படி வரும்?” என்றான் சிவகுமார்.

“சாரி கலெக்டர் சொன்னது சிங்குமாரை: உன்னை… உங்களைப் பத்தியில்ல.”

சிவகுமார், கணக்கே கண்ணாயினான். “இப்போ, என்ன செய்யுறது? எப்படியும் ஆடிட் செய்தாகணுமே.”

“நான்தான் சொல்லிவிட்டேனே தம்பி. டிமாண்ட் புக் எழுதறவன் எவனோ ஐம்பது ரூபாய் கொடுத்தான்னு நிலம் அளக்கப் போயிட்டான். இன்னொரு நாளைக்குப் பார்த்துக் கிட்டாப் போச்சு.

சிவகுமார் சிறிது யோசித்து விட்டு, “1966-67ஆம் ஆண்டுக் கணக்கைத் தானே பார்க்கப் போறேன்; அந்த ரிக்கார்டுங்கெல்லாம் இருக்கத்தானே செய்ய்ம் என்றான்.

துடித்துக் கொண்டு எழுந்த மச்சானைக் கண்களால் அடக்கிவிட்டு, “அந்த கேஷ்புக் எங்க இருக்கோ, தேடணும். உ.ம்…தம்பி நான் சொல்றதைக் கேளுங்க. நான் கொஞ்சம் பிலியாய் இருக்கேன். மினிஸ்டர் வராரு. ஒரு கூட்டம் நான் தலைமை தாங்கறேன். இன்னொரு நாளைக்கு வச்சிக்கலாம்.”

சிவகுமார் விடவில்லை “நீங்க வேணுமின்னா போங்க! உங்க கிளார்க் இருக்கார்ல, அவரை வச்சி முடிச்சிக்கிறேன்.”

பஞ்சாயத்துத் தலைவர், சிவகுமாரை மேலும் கீழும் பார்த்துவிட்டு, பார்ட்-டைம் கிளார்க்கை கீழும் மேலுமாகப் பார்த்தார். பிறகு “டேய், ஜம்பு நம்ம வீட்ல போயி கேஷ் புக்கைத் தேடி எடுத்தா. பசங்க எங்கேயாவது அவங்க நோட் புத்தகங்களுக்குள்ள வச்சிருப்பாங்க” என்றார்.

பார்ட்-டைம் கிளார்க், உடம்பெல்லாம் பார்ட்-பார்ட்டாக ஆட, பறந்தான். பஞ்சாயத்துத் தலைவர், “சரி சிவகுமார், நான் ஆர்.டி.ஓ. வைப் பார்த்துவிட்டு வந்துடுறேன். உங்களுக்கு உதவி செய்ய என் மச்சான்காரன் இருக்கான். எதையும் கேளுங்க, தயங்காம கொடுப்பான்” என்று சொல்லிவிட்டு வயிறு குலுங்க எழுந்தார். சிறிது யோசித்துவிட்டு, “என் கணக்குப் புக்கைப் பார்த்திங்கன்னா தெரியும் கிராமத்துக்கு எவ்வளவோ சேவை செய்திருக்கேன். சொந்த முறையில் கூட எவ்வளவோ சேவை செய்திருக்கேன் பெண் பிள்ளிங்க நெல்லை உரலில் போட்டுக் குத்தி கஷ்டப்படறாங்களேன்னு ஒரு ரைஸ் மில் வச்சேன் கிணறு வெட்டி விவசாயிங்க பிழைக்கட்டுமுன்னு வெடி மருந்துக் கடை வச்சேன். ஜனங்களுக்குக் கடன் கிடைக்கட்டுமுன்னு கோ-ஆப்ரேட்டிவ் சொஸைட்டிக்கு தலிைவராய் ஆனேன் கிராமத்துக்காரங்க வீடு கட்ட கஷ்டப்படக் கூடாதுன்னு சிமென்ட் கோட்டா எடுத்தேன் இவ்வளவு சேவை செய்தும் சில நன்றி கெட்ட பயலுக இருக்காங்க ” தன் சாதனைகளை அடுக் கடுக்காக எடுத்து வைத்தார், பஞ்சாயத்துத் தலைவர்.

“காய்ச்ச மரத்தில்தான் மாமா கல்லு விழும்” என்றான் மச்சான் ராமசாமி சிவகுமார் ‘கல் மாதிரி பேசாமல் இருந்தான் தலைவர் பரமசிவம் நீண்ட பெருமூச்சை விட்டு விட்டு, “சரி, எனக்கு நேரமாயிட்டு டேய் ராமசாமி, சிவகுமாருக்குச் சாப்பாடு போடு” என்று பிச்சைக்காரனுக்குச் சோறு போடச் சொல்வது போல் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

இதற்குள் பார்ட்-டைம் ஆசாமி தலைவர் வீட்டுக்குப் போகையில், தலைவரின் தலைவியான அவர் மனைவி, சில பழைய காகிதங்களைப் பேப்பர்காரனுக்குப் போட, விலை பேசிக் கொண்டிருந்தாள் அந்தக் குப்பைக்குள் படுகுப்பையாக இருந்த கேஷ் புக்கையும், டிமாண்ட் புக்கையும் கொண்டு வந்து சிவகுமாரிடம் நீட்டிவிட்டுப் பணிவாக நின்றான் வளர்ச்சி அதிகாரி, ஒவ்வொரு செலவையும் ரசீதையும் பார்த்தான் சம்மா சொல்லக் கூடாது கணக்கு கச்சிதமாக இருந்தது பார்ட் டைம் கிளார்க்கு பதினைந்து தபாய், நடுப் பகல் நிதி முப்பது ரூபாய், ரோடு போட்டது ஆயிரம் 3 ஆக பஞ்சாயத்துத்தான், தலைவருக்குக் கடன்காரனாக இருந்தது.

கையிலிருந்து மனிதர் செலவழித்திருக்கிறார்.

சிவகுமாருக்கே ஆச்சரியம். அத்தனை செலவுக்கும் ஸ்டாம்ப் போட்ட ரசீதுகள். ஒரே ஒருவிடத்தில் மட்டும் ஒரு கேள்வியைக் கேட்டான்.

“ஏம்பா, உழுவதற்குக் கூலி 20 ரூபாய்னு போட்டிருக்கு, எதுக்கு?” என்றான்.

“பழத்தோட்டத்துக்கு” என்று பார்ட்-டைம் பதில் சொல்லும் முன்னால், மச்சான்காரன் முந்திக் கொண்டான் மரஞ்செடி வாங்க ரூ 300. அவற்றை நடுவதற்கு ரூ.100. உரம் போட ரூ 200. மருந்து தெளிக்க ரூ. 50. வேலி போட ரூ 50 எல்லாவற்றுக்கும் ரசீதுகள்! அவன் பார்த்த பஞ்சாயத்துக்களில் இந்தப் பஞ்சாயத்தில் தான் கணக்கு கச்சிதமாக இருந்தது ஆனால், கேஷ் புக்கில் அவரு பசங்க படம் போட்டிருந்தாங்க பரவாயில்லை. கணக்குதான் சரியாக இருக்கே!

சிவகுமார் கேஷ்புக்கில் கையெழுத்துப் போட்டுவிட்டு எழுந்தபோது, பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம், “இந்த ஆர் டி ஒ சுத்த மோசம் மனுஷன் வீட்டுக்கு வாங்க, வீட்டுக்கு வாங்க ன்னு உயிரை எடுக்கிறார் அன்றைக்கு மினிஸ்டர் கெஸ்ட் ஹவுஸிலேயே தங்கிடு ன்னார் எனக்கென்ன வேற வேலை கிடையாதா?” என்று முனங்கிக் கொண்டே வந்தார்.

“கணக்கெல்லாம் கச்சிதம் லார், ஒரு சின்னத் தப்புக்கூடக் கிடையாது” என்றான் சிவகுமார் தலைவர் சிரித்துக் கொண்டார். மச்சானைப் பார்த்து, சோடா வாங்கிக் கொண்டு வரச்சொன்னார்.

“பிரஸிடெண்ட் ஸார், பழத்தோட்டம் போடுறதுக்குக் கூட கையில இருந்து பணம் செலவழிச்சிருக்கீங்களே சினிமா செஸ் வந்ததும் அதை எடுத்துக்கங்க” என்றான் சிவகுமார் மூட மக்கள், இவரைப் போய் கரெப்ட்’ என்கிறார்களே!

“பணம் என்ன தம்பி பணம், இன்னாரு இருந்தாரு, இவரு போட்ட பழத்தோட்டம் இது என்று செத்தபிறகு சொன்னால் போதும் ஏழை எளியவங்க நல்லா இருக்கனும், அவ்வளவுதான் அந்தப் பழத்தோட்டத்துல என் கையால ஒரு பழத்தைக் கூட இன்னும் எடுத்து ருசி பார்க்கல “

“பிரஸிடென்ட் ஸார், அப்படியே ஒரு பொடி நடையா நடந்து பழத்தோட்டத்தைப் பார்த்துவிட்டு வந்திடலாமா?”என்றான் சிவகுமார் தலைவரின் கறுத்த முகம் சிவந்தது

“நேரமாயிட்டு இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம்”

“இல்ல. பழத்தோட்டத்தைப் பார்த்துட்டு வந்தால் தேவல”

“உங்களுக்குப் பழம் வேணுமுன்னா என் வீட்ல இருக்கு, தர்றேன் “

“அதுக்குக் கேட்கல இவ்வளவு பணம் செலவழிச்ச பஞ்சாயத்துப் பழத்தோட்டத்தைப் பார்க்காமப் போறது முறையில்ல “

“அப்படின்னா நான் பழத்தோட்டம் போடவே இல்லை என்கிறீங்களா?”

பஞ்சாயத்துத் தலைவர், பிறிதொரு அவதாரம் எடுத்தவர் போல் ‘எங்க அப்பன் குதிருக்குள் இல்லை’ என்கிற முறையில் பேசியதால், சிவகுமார் ‘அப்படி ஏன் இருக்கக் கூடாது?’ என்று முதன் முதலாகச் சந்தேகப்பட்டான் இதற்குள் மச்சான்காரன், சோடாவோடு வந்தான்.

“நான் உங்களை நம்பாமல் இல்லிங்க எதுக்கும் அதைப் பார்த்து ஆகணும். உங்களால் வரமுடியாட்டா பரவாயில்லை, கிளார்க்கை அனுப்புங்க” என்றான் சிவகுமார்.

தலைவரின் முகம் சினத்தில் தடித்தது “இப்போ என்ன செய்யணுமுங்கிறீங்க?”

“பழத்தோட்டத்தைப் பார்க்கணுமுங்கிறேன்.”

“பார்க்காவிட்டால்…”

“பழத்தோட்டம் இல்லை என்கிற முடிவுக்கு வருவேன்.”

சோடாவை உடைக்கப் போன மச்சான்காரன் அந்தப் பாட்டிலை எடுத்து சிவகுமாரை ஓங்கிக் கொண்டே, “டேய், கணக்கு சரியாய் இருக்கிறபோது பழத்தோட்டம் எதுக்குப் பார்க்கணும்? பழத்தோட்டம் பழத்தோட்டமுன்னு சொன்னால் முகம் பழமாயிடும். எங்களை, என்ன திருட்டுப் பயல்கள்னு நினைச் சியா?” என்றான்.

சிவகுமார், பேச வாயெடுக்குமுன், “பேசினால் உதைப்பேன். மரியாதையாய்ப் போயிடு இல்ல, பூமிக்குள்ளே போயிடுவ” என்றான் மச்சான்.

பஞ்சாயத்துத் தலைவர், உலகத்தில் எதுவுமே நடக்காதது போல், ஈஸிசேரில் மல்லாந்து, பாதிக் கண்ணை மூடியவாறு, ஒரு பாட்டை முணுமுணுக்க, பார்ட்-டைம் விசிறியால் அவருக்கு வீசினான். மச்சான் சோடாவை உடைத்துக் குடித்தான்.

சிவகுமார், அவசர அவசரமாக யூனியன் ஆபீஸ் வந்து, சட்டத்தின் சரத்துக்களை மேற்கோள் காட்டி, ஒரு பெரிய ரிப்போர்ட் தயாரித்தான். “பழத்தோட்டத்தைக் காணவில்லை” என்று மேலிடத்திற்குப் புகார் செய்தான்.

அந்தப் புகார் போன பதினைந்து நாளில், பலன் கிடைத்தது.

பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சிவகுமாரை, அந்த யூனியனில் காணவில்லை!

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *