சரித்திரப் பாடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 29, 2023
பார்வையிட்டோர்: 1,483 
 

அந்த அரசு அலுவலகத்தில் ஹரி என்று கேட்டால் யாரும் தெரியாது என்று சொல்வார்கள். அவரை ஹைஜின் ஹரி என்று தான் தெரியும். அவர் எப்படி ஹைஜின் அடைமொழியை சம்பாதித்துக் கொண்டார் என்பது தான் இந்தக் கதை.

ஒருமுறை அவரின் மேலதிகாரி அவரிடம் ஹலோ சொல்லிக் கைகுலுக்கக் கையை நீட்டினார். ஆனால் ஹரி அவர்கள் கையைக் கொடுக்காமல் “மன்னிக்கவும், கைகுலுக்கல் என்பது மேற்கத்திய நாகரிகம். மேலும் அது சுகாதாரமற்றது” என்று கூறி ‘வணக்கம்’ என்று சைகையில் கைக் கூப்பினார். அதன் பின்னர், அவருக்கு அந்த ஆபீஸில் ஹைஜின் ஹரி என்று பட்டம் ஆகியது. ஆபீஸர் அந்த சம்பவத்தை மறக்கவில்லை. அதிகார மமதையில் கோபம் கொண்டு ஹரியைப் பற்றி அலுவலகத்தில் புகார் செய்தார். ஆனால் புகார் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏனென்றால் யாரையும் கைகுலுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. மேலும், வணக்கம் என்று கூறுவது பழமையான இந்திய பண்பாட்டு முறை. அதனால் அதை குறை கூறுவது போல் ஆகிவிடும். மேலும், இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என்று அந்த ஆபிசரிடம் அலுவலகம் கூறிவிட்டது.

ஈக்கள் மொய்க்கும் உணவு கூடத்தை ஸ்டீல் டேபிள் மற்றும் ஈ – கொல்லி மிஷின் வரவழைத்து பளபளவென்று ரெஸ்டாரன்ட் போல் அந்த ஆபீஸ் உணவகத்தை மாற்றியமைத்ததில் ஹரிக்கு முக்கியப் பங்கு உண்டு. உலக சுகாதார தினம், உலக கைகுலுக்கல் தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினம் ஆகியவற்றில் அவர் மெனக்கட்டு விழிப்புணர்வு பேரணி போன்றவற்றை நடத்தி கவனத்தை ஈர்ப்பதுஉண்டு. மேலும் அந்த சமயம் விழாக்களில் விஐபிகளிடம் கைகுலுக்கலை முற்றிலும் தவிர்த்து விடுவார். புன்னகை புரியும் வணக்கம் தான் அவரிடம் இருந்தது.

அந்தக் காலத்திலேயே ஹரி திரவ சோப்-புட்டியுடன் அலைந்தார் என்று சொல்லலாம். ஒரு சமயம் அவருடன் சுற்றுலாத் தலத்திற்குச் சென்றிருந்தேன் அப்பொழுது ரொம்ப சுட்டெரிக்கும் வெயில் இருந்ததால் நான் ஒரு தள்ளு வண்டியில் வெட்டிப் போடப்பட்ட வெள்ளரிக்காயை காரப்பொடியுடன் எடுத்துக் கொண்டேன். ஆனால், ஹரி அந்த தள்ளுவண்டிகாரனிடம்

புதியதாக ஒரு வெள்ளரிக்காயை எடுத்து துண்டாக்கிக் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார். மேலும் தன்னிடம் இருந்த குடிநீர் பாட்டிலிருந்து தண்ணீரை எடுத்து அந்த வெள்ளரிக்காய் துண்டுகளை கழுவி சாப்பிட்டார். இந்த மாதிரியான அலாதியான பழக்கவழக்கங்களை அவரிடம் கண்டவர்கள் மண்டையில் ஏதாவது ‘நட்டு’ கழண்டு விட்டதோ என்று கிசுகிசுத்துப் பேசிக் கொள்வார்கள். ஆனால், ஹரி அதனைப் பற்றி எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டதில்லை. ஹரி கருமமே கண்ணாயினார்.

சுத்தம் சோறு போடும் என்றும் ‘நலமே வளம்’ என்று தெரிந்தாலும் ஏன் மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று அவர் பல தடவை வருத்தத்துடன் என்னுடன் சொல்வதுண்டு. அதற்கும் ஒரு விடிவு காலம் வந்தது. ஆம். கொரோனா காலம் வந்தவுடன் மக்களின் நடைமுறை பாவம் அடியோடு மாறியது. நான் ஹரியுடன் போனில் பேசினேன். “என்னப்பா ஹரி, மக்கள் நீ சொல்வதை எல்லாம் ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தார்கள். இப்பொழுது பார். வாயில் மாஸ்க், கையில் சோப்பு, ஆறு அடி இடைவெளி நின்று வாழ்த்து சொல்கிறார்கள். எப்படி காலம் மாறிவிட்டது”.

ஹரி சொன்னார் “என்னப்பா செய்வது, எல்லாம் கலி காலம். நான் ஐந்தரை அடி உயரம் அறுவது கிலோ வெயிட். நான் சொல்வதைக் கேட்பதில்லை ஆனால், ஒரு மைக்ரானுக்கும் குறைவான கிருமி பயமுறுத்தினால் அதை சிரமேற்க்கொண்டு மக்கள் கவனிக்கிறார்கள். நான் கரடியாய் கத்தினேன், நாயாய் குரைத்தேன், சிங்கம் போல் கர்ஜித்தேன், ஒரு புலி போல் உறுமினேன். ஆனால் ஒரு சிறு கிருமியைப் பார்க்காமேலேயே உசிருக்குப் பயந்து பாதுகாப்பா இருக்க ஆரம்பிச்சிட்டாங்க. எப்படியோ நல்லது நடந்தா சரி ?”.

எந்த ராகு காலத்தில் அவர் அப்படி வாய் திறந்து அருளினாரோ அதற்கு முற்றுப்புள்ளி வந்தது. இரண்டு ஆண்டுகளில் ஊழி தாண்டவமாடிய கொரோனா விடைப்பெற்று விலகிப்போக, மக்கள் முன்பு போல் கைகுலுக்குவது, பக்கத்தில் நின்று கட்டிப்பிடித்துக் கொள்வது, பஸ் ஸ்டாண்ட் சுவர்களில் ஒன்னு விடுவது, எச்சில் துப்புவது போன்று எல்லாவற்றையும்

செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இயற்கை காற்றை சுவாசித்த மக்கள் திரும்ப ஏஸி காற்றை சுவாசிக்க விருப்பப்பட்டு விட்டார்கள். ஏன்?.

ஹரிக்கு வேலை வந்து விட்டது என்று நினைத்துக்கொண்டு அவருக்குப் போன் செய்தேன். “ஏனப்பா ஹைஜின், உன் பிரசாரத்தை திரும்ப ஸ்டார்ட் பண்ற சூழ்நிலை வந்துடுச்சே “.

‘ஆமாம்பா. இப்படி கொரானா போன்ற உலகளாவிய தொற்று பரவல் நூறு வருடத்திற்கு ஒரு முறை தான் வரும் என்ற தைரியம். நாம தான் நூறு வருஷம் இருக்கப் போவதில்லையே என்று நினைக்கிறார்களோ என்னமோ. தேவைகளை சுருக்கி இயற்கை வளங்களை சுரண்டாமல் இருக்கவேண்டும் என்பதே கொரானா நமக்கு கற்று தந்த பாடம். சரித்திரத்தில் இருந்து நாம் எந்தப் பாடத்தையும் கற்க வில்லை போலிருக்கே!’.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *