இலவசமாய் ஒரு சுற்றுலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 4,781 
 

சுற்றுலா செல்வது என்றாலே சிறுவர்களுக்கு மகிழ்ச்சிதான், நமக்கும் மகிழ்ச்சிதான், ஆனால் செலவுகளை நினைக்கும்போது அந்த மகிழ்ச்சிக்கு பின்னே ஒரு சோகம் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் எங்கள் காலனியில் பத்திருபது குடும்பங்கள் ஊட்டியா? வால்பாறையா? என்று பேச்சு வார்த்தை நடத்தி அந்த கூட்டத்தில் நான் வால்பாறையில் படித்தவன் என்ற ஒரு ஓட்டு அடிப்படையில் (காரணம் எனக்கு வால்பாறையை பற்றி தெரியும் என்று) வால்பாறை செல்லலாம் என முடிவு செய்தோம்.

அடுத்தது செலவுகள் எப்படி செய்ய வேண்டும் என ஒவ்வொரு குடும்பமும் கணக்கீடுகள் போட ஆரம்பித்துவிட்டது. காரணம் நாங்கள் அனைவருமே குறைந்த வருவாய் உடைய குடும்பங்களே, ஆனால் ஒவ்வொருவரின் பேச்சுக்களை பார்த்தால் டாடா, பிர்லா அளவுக்கு பேசிக்கொள்வோம், என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன்

மற்றவர்களிடம் பேசும்பொழுது காது கொடுத்து கேட்டீர்கள் என்றால் இவன் இவ்வளவு பெரிய ஆளா என் நினைப்பீர்கள், ஆனால் உண்மையில் வாங்கும் சம்பளமும் செலவுகளும் எப்படியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டே இருக்கும்.உதாரணமாக நான் அடிக்கடி சொல்வது “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை” நான் தயார் என்பேன், உண்மையில் செலவுகளை நினைத்து மனதில் அழுது கொண்டிருப்பேன்.இனி எங்கள் பயணத்தைப்பற்றி பேசுவோம்.

நண்பன் ஒருவன் சுற்றுலா செல்ல ட்ராவல்ஸ் வைத்திருக்கும் நண்பனிடம் பேச்சு வார்த்தை நடத்தி (கெஞ்சி கூத்தாடி) குறைந்த அளவு கட்டணம் மட்டுமே பேசி வண்டி பிடித்து வந்துவிட்டான்.நாங்களும் ஆஹா இவ்வளவு குறைந்த கட்டணத்தில் இப்படி ஒரு வாய்ப்பா என்று சந்தோசத்துடன் காலை நேரத்தில் வண்டிக்காக காத்திருந்தோம். ஒரு வண்டி எங்களை தாண்டி சென்று கொண்டிருந்த்து,

நான் என் பையனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன், இது நான் பிறந்த போது வாங்கின வண்டியாய் இருக்கும், இன்னும் ரோட்டுல ஓட்டிட்டு இருக்கானுங்க பாரு என்று சொல்லி முடிக்கும்போது அந்த வண்டி எங்களைப்பார்த்து ஒரு வளைவு வளைந்து எங்களிடம் வந்து நின்றது. அதற்கே அந்த மூச்சு வாங்க நின்றதை பார்த்த எனக்கு பரிதாபமாக இருக்க, இந்த வண்டிதான் நாங்கள் சுற்றுலா செல்ல வேண்டிய வண்டி, என்று வண்டி ஓட்டி வந்தவன் சொல்ல பாதிப்பேர் மயக்கம் போடாத குறைதான்.

அடுத்ததாக வண்டி கிளம்ப, “பூகம்பம் வரும்போது நாம் நின்று கொண்டிருக்கும் எல்லா இடமும் ஆடிக்கொண்டே இருக்கும்” என்று சொல்லியிருக்கிறார்கள், அதனை பூகம்பம் வராமலே இந்த வண்டி செல்லும்போது புரிந்து கொண்டோம், ஒரு சில ஆட்டங்களில் நானும் என் குடும்பமும் சிதறிப்போய் விழுந்து எழுந்து வந்து ஒன்று சேர்ந்தோம். ஒரு மகிழ்ச்சியான விசயம் என்னவென்றால் எங்கள் வண்டிக்கு பின்னாலும்,முன்னாலும் எந்த வண்டியும் வர பயந்தது, எங்காவது வண்டி பாகங்கள் கழண்டு நம் மீது வந்து விழுந்து விடுமோ என்ற பயம்தான்.இதனால் ஒரு பிரதமர்,அல்லது முதலமைச்சருக்கு பாதுகாப்பாக சுற்றிலும் வண்டிகள் வருமே அது மாதிரி எங்கள் வண்டியில் ஒட்டி வராமலும் அதே நேரம் பயந்து கொண்டு தள்ளியே வந்ததை, வெளியில் இருந்து பார்ப்பவர்கள் யாரோ பெரிய ஆட்கள் போகிறார்கள் என நினைத்து வேடிக்கை பார்க்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு குழப்பமாகவும் இருக்கும் அப்படி பெரிய ஆட்கள் என்றால் இப்படிப்பட்ட வண்டியில் போகிறார்களே என்று!

வண்டியை ஓட்டியவர் உண்மையிலேயே சர்க்கஸ் கம்பெனியில் முன்னர் வேலை செய்தவராக இருக்க வேண்டும், காரணம் அவர் உட்கார்ந்திருந்த சீட் முதல் ஆக்சிலேட்டர்,பிரேக்,கிளட்ச்,கியர், அனைத்தும் தனித்தனியாக ஆடிகொண்டிருப்பதை பார்க்கும்போது வான் வெளியில் பூமியை சுற்றி அங்கும் இங்குமாக இயங்கும்
கோள்களை பார்ப்பது போல இருந்த்து.எங்களுக்கு பயமாக கூட இருந்தது, ஓட்டுனர் உட்கார்ந்திருந்த சீட் எங்கே ஓட்டுனரை வெளியே தள்ளிவிட்டு விடுமோ என்று. ஓட்டுனரும் ஆடிக்கொண்டே அனைத்து கருவிகளையும் இயக்கிக்கொண்டிருந்தது எங்கள் குழந்தைகளுக்கு ஆர்கெஸ்ட் ராவில் டிரம்ஸ் வாசிப்பவர் எப்படி கையை காலை ஆட்டி வாசிப்பாரோ அப்படி இருப்பதாக சொல்லிக்கொண்டன.

நாங்கள் இந்தபக்கமும் அந்தப்பக்கமும் ஆட்டத்தினால் போய் வந்து கொண்டிருந்ததை கட்டு மரம் கடலில் இப்படித்தான் போகும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டோம்.

இப்படியாக நாங்கள் மலை அடிவாரத்தை அடையும் போது எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது, வாகனகளுக்கு மட்டுமே நுழைவு கட்டணம் வசூலித்துக்கொண்டிருந்த வனத்துறை, மிருகங்கள் பயந்துவிடும் என்று எங்கள் வாகனத்தை உள்ளே விட மறுத்து விட்டார்கள். நாங்கள் இது உயிரில்லாத ஆனால் மூதாதையரால் கண்டுபிடித்து அழிக்க மறந்துவிட்ட வாகனம் இது என்று எவ்வளவோ வாதாடிப்பார்த்து, கடைசியாக வளைவுகளில் ஏதேனும் பாகங்கள் கழண்டு விழுந்துவிட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்றும், இதன் சத்தத்தினால் ஏதேனும் மிருகங்கள் அதிர்ச்சியடைந்து இறந்துவிட்டால் நீங்களே பொறுப்பு என்றும் உறுதிமொழி எழுதி வாங்கிக்கொண்டு உள்ளே அனுமதித்தனர்.

முதல் வளைவிலேயே வண்டி நின்று விட ஆண்கள் அனைவரும் இறங்கிதள்ளினால் வண்டியை முடுக்கிவிடலாம் என்று ஓட்டுநர் யோசனை சொல்ல நாங்கள் அனைவரும் இறங்கி கோரசாக பாட்டுப்பாடிக்கொண்டு தள்ளியதை மிருகங்கள் ஏதாவது கண்களுக்கு தென்படாதா என ஏங்கிக்கொண்டு போன சுற்றுலா பயணிகளுக்கு எங்கள் வேதனை மிகுந்த சாதனை மிகப்பெரும் வேடிக்கையாக இருந்த்து என்பதில் சந்தேகமில்லை.

ஒரு வழியாக வண்டி கிளம்பி நாங்கள் வால்பாறை சென்றடைந்தபோது உச்சி வேளை ஆகிவிட்டதால் இனி பசியாறிய பின் செல்லலாம் என்று முடிவு செய்து கொண்டு ஒரு ஓட்டலுக்குள் நுழைய, வண்டிக்கு பேசிய அளவு பணத்தைபெற்றுக்கொண்டு பாதி அளவு பசியாறி, விட்டால் போதும் என்று வெளியே வந்தனர் அனைவரும். இதில் பெருந்தன்மையாக என்னவேண்டுமானாலும் சாப்பிடுங்கள் என்று வழக்கமான என் “பில்டப்” வார்த்தை அனைவரின் பர்சையும் காலியாக்கிவிட்டது.

அடுத்ததாக இனி ஒவ்வொரு இடமாக செல்ல முடிவெடுத்து என்னை வழிகாட்டச்சொல்ல நான் இந்த ஊரைப்பற்றி எல்லாம் தெரிந்தவன் என்று மற்றவர்களுக்கு காட்ட வேண்டி (எனக்கும் இந்த ஊருக்கும் இடைவெளி முப்பது வருடங்கள் ஆகிவிட்டது) ஒவ்வொரு இடமாக நானே வலுகட்டாயமாக இறங்கி ஒவ்வொருவரிடமும் வழி கேட்டுக்கொண்டு செல்ல மாலை நான்கு மணிக்கு மேல் ஆகிவிட்டது, இருந்தும் ஓரிரண்டு இடங்கள் மட்டுமே பார்க்க முடிந்த்து. காரணம் எங்களது இரத யாத்திரைதான் என்பது வாசகர்களுக்கு புரிந்திருக்கும். அதற்குள் எங்கள் வாகன ஓட்டுனர் முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிட்டார், உடனே கீழே இறங்கினால்தான் இரவுக்குள் வீடு போய் சேர முடியும் என்று.

காலை கிளம்பும்போது இருந்த உற்சாகம் வண்டியை பார்த்தவுடன் பாதி குறைய, அதன் பின் வண்டியை அந்த மேட்டில் தள்ளி தள்ளி மிச்ச சந்தோசம் குறைய,மதிய
உணவுக்கு எதிர்பாராத செலவுகளில் கொஞ்ச நஞ்ச சந்தோசமும் குறைய,எப்படியோ வீடு வந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் வீடு வந்து சேர்ந்தோம்.
சேர்ந்த பின் எங்களுக்கு ஒரு சந்தோசமான செய்தியை வண்டியை ஓட்டி வந்தவர் கொடுத்தார் என்பதுதான் இந்த கதையின் முடிவு.

வண்டி சென்று வந்த செலவுகள் அனைத்தும் இலவசம் என்றும் கொடுத்திருந்த முன்பணத்தையும் திருப்பிக்கொடுத்து அனைவரையும் பங்கிட்டு கொள்ளச்சொல்லிவிட்டார்.

எங்களுக்கு அப்போதுதான் தெரிந்தது வண்டியை ஓட்டி வந்தவர்தான் இந்த வண்டிக்கு உரிமையாளர் என்றும், அவருக்கு நான்கைந்து வண்டிகள் இருந்தும் முதன் முதலில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்த வண்டியை வாங்கி தொழில் தொடங்கியதாகவும் அதன் பின் தொழில் வளர்ச்சி அமோகமாக இருந்ததாம். இந்த வண்டியை கடைசியாக வழி அனுப்புவதற்கு முன்(காயலான் கடைக்கு) இந்த வண்டி இப்படி ஒரு சுற்றுலா வந்ததாம்,பாசப்பிணைப்பாக உரிமையாளரே அந்த வண்டியையும் ஓட்டி தன் உடன் பிறவா பாசத்தை போக்கிக்கொண்டார்.

மேலும் ஒரு பரிசாக இந்த வண்டியில் உயிரைப்பற்றி கவலைப்படாமல் வந்த எங்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசாக கொஞ்சம் வெகுமதியும் கொடுத்தார்.
ஆக மொத்தம் இலவசமாய் இந்த சுற்றுலாவும்,செலவுகளை விட வருமானத்தையும் கொடுத்தது இந்த சுற்றுலா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *