கூட்டுக் கணக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2024
பார்வையிட்டோர்: 122 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அந்த வட்டாரத்தில் வேலை கிடைக்காமல் திண்டாடும், அத்தனை பேரும் பிரமுகர் பிரபாகரின் வீட்டின் வராந்தாவில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் எம்ப்ளாய்மெண்ட் ஆபீசுக்குப் போவார்களோ, இல்லையோ, பிரபாகரன் வீட்டுக்குப் போகாமல் இருக்கமாட்டார்கள். எம்.எல்.ஏக்கள், டாக்டர்கள், என்ஜினியர்கள் ஆகியோரின் எண்ணிக்கை, பியூன் வேலைக்காக, சிபாரிசு தேடி வந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.

பிரமுகர் பிரபாகரன், அவர்களுக்குத் ‘தரிசனம்’ கொடுப்பதற்காக, தம்மைத் தயார் செய்து கொண்டிருந்தார். வராந்தாவை அடுத்த அறையில் உட்கார்ந்திருந்த அவருக்கு நாற்பது வயது இருக்கலாம். எல்லாரையும் முன்னுக்குக் கொண்டு வர முடியும் என்பதைச் சொல்லாமல் சொல்லும் குண்டுக்கட்டி வயிறு. ஸில்க் ஜிப்பா, ஜரிகை வேஷ்டியின் நீளத்துக்குப் போட்டி போட்டுத் தொங்கும் அங்கவஸ்திரம்: இவை பிரபாகரின் வெளித் தோற்றங்கள். அவர் போகாத பொதுக்கூட்டங்களோ, கலந்து கொள்ளாத கல்யாணங்களோ, பங்கேற்காத கருமாந்தரமோ இருக்க முடியாது. அழைக்காத இடங்களுக்கும், தாராளமாகப் போகும் பரந்த மனசுக்காரர். மற்றவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பது தான் அவருடைய ஹாபி’.

பிரபாகர் தம் கையாளைப் பார்த்துக் கையைக் காட்டினார். கையாள், வெளியே நன்கு டிரஸ் செய்திருந்த ஓர் என்ஜினீயர் பைய னையும், அவனைச் சார்ந்து வந்த இரண்டு பேரையும் உள்ளே கூட்டி வந்தான். ‘என்ன விஷயம்?’ என்று பிரபாகர் அவர்களிடம் கண்களால் வினவினார்.

“சீக்கிரமா விஷயத்தைச் சொல்லுங்க: ஐயாவுக்கு எங்கேஜ்மென்ட் இருக்கு” என்றான் கையாள்.

வந்தவர்களில் ஒருவர் வாய் மலர்ந்தார்.

“இவன் பேரு ரமேஷங்க. என்ஜினியருக்குப் படிச்சிருக்கான். இந்தக் கம்பெனியிலிருந்து இன்டர்வியூ வந்திருக்கு” என்று சொல்லி ஒரு தாளை நீட்டினார்.

பிரபாகரன் தாளைப் பார்த்தார். பிறகு முகத்தைச் களித்துக் கொண்டே, “இந்தக் காலத்தில் வேலை கிடைக்கிறது தண்ணிர் கிடைக்கிறது மாதிரி. நீங்க வேறே காரியத்துக்கு வந்திருப்பீங்கன்னு நான் நினைச்சேன்” என்றார்.

“அப்படிச் சொல்லக் கூடாது. ஐயாதான் தயவு வச்சு அந்த வேலையிலே இவனைத் தள்ளணும்.”

“கஷ்டங்க”

என்ஜினியர் பையன் எழுந்து நின்று பேசினான்: “அந்தக் கம்பெனி மானேஜிங் டைரக்டர் கிட்ட நீங்க ஒரு வார்த்தை சொன்னால் போதும்.”

என்ஜினியர் பேசி முடிக்குமுன், ஓர் ஆசாமி திடீரென்று காட்சியாகி, பிரபாகரன் கழுத்தைத் தேடிக் கண்டுபிடித்து, கையாள் உதவியோடு ஆறடி உயரமுள்ள ஒரு மாலையைப் போட்டு விட்டு, அவருடைய இடக் கையில் ஓர் எலுமிச்சம் பழத்தையும், வலக்கையில் ஒரு பூச்செண்டையும் கொடுத்தான்.

பூமாலையைப் போட்டுவிட்டு பாமாலை தொடுத்தான் அவன்:

“ஐயா தயவுல எனக்கு அந்த வேலை கிடைச்சுட்டுது. உங்களை நான் வேலையில் இருக்கிற வரைக்கும் மறக்க மாட்டேன். நீங்க ரெகமண்ட்’ பன்னாட்டா வேலை வேறு ஆளுக்குக் கிடைச் சிருக்கும்.”

பிரபாகர் பேசினார்:

“இந்த மாலைக்குப் பதிலா ஏழைப் பையன் ஒருத்தனுக்கு ஒரு பேனா வாங்கிக் கொடுத்திருக்கலாம். பரவாயில்லை. ஏதோ சொன்னேன்; செய்திட்டீங்க. நீ நல்ல முறையில் வேலை செய்தா, அதுதான் எனக்குப் பெருமை.”

“நீங்களே போகப் போகத் தெரிஞ்சுக்குவிங்க ஸார், என் வேலைத் திறமையை.”

போட்டவன் போய்விட்டான். என்ஜினீயர் பிள்ளையாண்டான் ‘அஸ்திவாரம்’ போட்டான்.

“ஸார், நீங்க மனசு வச்சா எனக்கு வேலை கிடைக்கும். உங்க வாயிலிருந்து வர்ற ஒரு வார்த்தையில என் எதிர்காலமே இருக்கு.” பிரபாகர் லேசாகச் சிரித்தார். பிறகு அந்தப் பையனைப் பார்த்து, “என்ன படிச்சிருக்கே, அப்பா?” என்றார்.

“பி. ஈ. பஸ்ட் கிளாஸ் ஸார்.”

“ஏதாவது முன் அனுபவம் இருக்கிறதா?”

“என் மாமா கட்ற வீட்டுக்கு ஐடியா கொடுத்தது நான்தான்.

“ரெபரன்ஸ், அதாவது, உனக்கு எந்தப் பெரிய மனிதரையாவது தெரியுமா?”

பிரபாகர், கையாளைப் பார்த்து மானேஜிங் டைரக்டருக்குப் போன் போடச் சொன்னார். கையாள் நீட்டிய ரிலீவரில் பேசினார்.

“ஹலோ, நான்தான் பிரபாகரன் பேசுகிறேன். ஹா…ஹா… அப்படில்லாம் ஒன்னுமில்லே. ஹா.ஹா….என்ன? நேத்து என் வீட்டுக்கு வந்தீங்களா? ஐ ஆம் சாரி. நான் லயன்ஸ் கிளப்ல பேசப் போயிருந்தேன். அப்புறம், ஐ ஆம் இண்டரஸ்ட்டெட் இன் ஏ கேண்டிடேட்.பேரு என்னப்பா?”

“ரமேஷ் ஸார்.”

“ஆமாம். ரமேஷ்.லார்.நோ. வெறும் ரமேஷ் இல்லே. பி.ஏ. படிச்சிருக்கான்.”

“பி.ஈ. ஸார்”

“ஐ ஆம் ஸாரி. பி.ஈ. படிச்சிருக்கான். ஒங்க கம்பெனியிலே இண்டர்வியூ வந்திருக்கு. பாத்துக்குங்க. என்ன? அப்படியா? ஐ.லி. எதுக்கும் டிரை பண்ணுங்க. நாளைக்கு வேண்டாம். எனக்கு சி. எம்மோட டின்னர் இருக்கு. ஹா. ஹா…ஒகே நான் சொன்னதைக் கவனிச்சுக்கங்க. ஒகே.”

பிரபாகர் போனை வைத்துவிட்டு, “கஷடமாம்” என்றார்.

“அப்படிச் சொல்லக்கூடாது. ஐயா மனசு வைக்கனும். நீங்க மனசு வச்சா நடக்காதது இல்லே.”

“இந்தக் காலத்துல எல்லாப் பயலும் துட்டுக் கேக்கறான்.”

“கொடுத்திட்டாப் போச்சு.”

“சீச்சி, பணங்கொடுத்து வேலை வாங்கறதாவது? வானாம். இந்த வேலையிலே சேரக் காக வேணும். வேற வேலை வரட்டும்: வாங்க கவனிச்சுக்கிறேன்.”

“காசைப் பத்திக் கவலைப்படாதீங்க கொடுத்திடலாம்”.

“நீங்க சொல்றதைக் கேட்க, மனசுக்குக் கஷ்டமா இருக்கு”.

“பரவாயில்லீங்க, வேலை கிடைக்காம இருக்கிறது அதைவிடக் கஷ்டங்க.”

பிரபாகர் சுற்று முற்றும் பார்த்தார். குரலைத் தனித்தார். “நீங்க வற்புறுத்துகிறதனால சொல்றேன். முதல்லே அவனுக்குப் பணம் கொடுக்கக் கூடாது. மூவாயிரம் ரூபாயை உங்கள்ல ஒருவர் பேருக்கும் என் பேருக்கும் பேங்க்ல ஜாயின்ட் அக்கவுண்ட்ல போட்டிடலாம். வேலை கிடைச் சா அதை எடுத்துக் கொடுத்திடலாம்.”

கையாள் குறுக்கிட்டான்.

“அதோடு ஐயாவுக்கு நூறு ரூபாய் கொடுத்திடுங்க. டாக்ஸியில் கண்டவனை எல்லாம் போயிப் பார்க்கனுமே.”

“இந்தாங்க முந்நூறு. நூறு எந்த மூலைக்கு? நாளைக்கு மூவாயிரம் ரூபாயோட வர்றோம். ஜாயின்ட் அக்கெளண்ட்ல போட்டுடலாம்.”

பிரபாகர், வருங்கால என்ஜினியரைப் பார்த்து, “இந்தா பாருப்பா, நீ இன்டர்வியூவுக்குப் போகும்போது மானேஜிங் டைரக்டர் கிட்ட நான் போன் பண்ணினதைச் சொல்லாதே; அவருக்குப் பிடிக்காது.”

என்ஜினியர் பையன் தலையை ஆட்டினான். கையாள் குறுக்கிட்டான்.

“சரி.நாளைக்குப் பணத்தோட வாங்க. ஐயாவுக்கு இப்போ ஒரு மீட்டிங் இருக்கு.” அவர்கள் திரும்பிச் சென்றார்கள். கையாள் கியூவில் நின்ற இருவரைக் கூட்டிக் கொண்டு வந்தான். வந்தவர்கள் ஒரு தாளை நீட்டினார்கள். பிரபாகர், “கஷடம்” என்று ஆரம்பித்தார். பிரபாகரின் கையைப் பிடித்தார் ஒருவர்.

“ஐயா. இந்தக் கையைக் காலுன்னு நினைச்சிப் பிடிக்கிறேன். நீங்க உதவாட்டா இந்தப் பய நடுத்தெருவில்தான் நிக்கணும்.”

“சரிப்பா, இவனை எதுக்காகச் சஸ்பென்ட் செய்தாங்களாம்?”

“இவன் நைட் வாட்ச்மேன் வேலையை ஒழுங்காச் செய்றானான்னு செக் பன்றதுக்கு அவங்க ஆபீலர் ராத்திரி ஒரு மணிக்கு வந்திருக்காரு. தூங்கிட்டு இருந்த அவன் அரவம் கேட்டு எழுந்திருச்சி ஆபீஸ்ரைத் திருடன்னு நினைச்சி, ஒரு பல்லுல பாதியை உடைச்சிட்டான். இவன ஆபீசரு, வேணுமின்னு அடிச்சதாச் சொல்லிச் சஸ்பென்ட் செப்திருக்காரு.”

“சிக்கலான கேஸ். நான் ஒண்ணும் பண்ண முடியாது.”

“ஐயா அப்படிச் சொன்னா, இந்தப் பய நடுரோட்லதான் நிப்பான் எல்லாருக்கும் உதவி செய்ற மாதிரி இவனுக்கும் செய்யணும்.”

“என்னப்பா இது? சரி, நான் யாருக்குப் போன் பண்ணனும்?”

“டெபுடி செகரட்டரிக்கிட்ட சொன்னால் போதும்” என்றான் முன்னாள் வாட்ச்மேன்.

கையாள் கொடுத்த ரிசீவரை எடுத்துப் பிரபாகர் ஊதினார்: “ஹலோ நான்தான் பிரபாகர். நாளைக்கு டின்னருக்கா? நோ பிளீஸ்! ஒரு சிலையைத் திறந்து வைக்கக் கூப்பிட்டிருக்காங்க. அப்புறம், உங்க ஆபீசில நைட் வாட்ச்மேன், அவன் உங்க டிபார்ட்மென்ட் ஆபீஸ்ரை அடிச்சிட்டானாமில்ல. நோ.நோ.அந்த ஆபீசருக்காகப் பேசல. அந்த வாட்ச்மேனை எப்படியும் சேர்த்திடனும், என்ன போலீஸ் கேஸா? அந்த இன்ஸ்பெக்டர் தானே? என் பிரண்ட். ஒகே, பைல் வந்ததும் கவனிச்சிக்குவீங்களா? நன்றி, அடுத்த வாரம் வரேன்.”

பிரபாகர் முகத்தைச் சுளித்தார். கடிகாரத்தைப் பார்த்தார் வாட்ச்மேனும் கடிகாரத்தைப் பார்த்தான். பிறகு டேபிள் வெயிட்டைப் பார்த்தார். வாட்ச்மேனும் டேபிள் வெயிட்டைப் பார்த்தான்.

“என்னப்பா இது, பேஜாரு பிடிச்ச விஷயம். போலீஸ் கேஸாயிட்டதாம். அந்த இன்ஸ்பெக்டர் என் சினேகிதர்தான். ஆனால், நண்பரானாலும் காசு கேக்காம இருக்க மாட்டான். ரேட்டை வேணும்னா குறைப்பான்.”

“குடுத்திடலாங்க. என் பெண்டாட்டி கழுத்தில தங்கத் தாலி இருக்கு “

“நீ சொல்றதைக் கேட்கக் கஷ்டமா இருக்கு.”

“பரவாயில்லீங்க, குடுத்திடலாம்.”

பிரபாகர் குரலைத் தணித்துக் கொண்டு, “உனக்குச் சஸ்பென்ட் ஆர்டர் ரத்தாகிறவரைக்கும் பணம் கொடுக்கக் கூடாது. ஒரு ஐநூறை என் பேர் லேயும், உன் பேர்லேயும் பேங்க் ஜாயின்ட் அக்கெளண்ட்ல போட்டிடலாம். வேலையில சேர்ந்ததுக்கப்புறம் எடுத்துக் கொடுத்திடலாம் முதல்லே கொடுக்க வேண்டாம். எல்லாம் திருட்டுப் பசங்க.”

வாட்ச்மேனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

“ஜாயின்ட் அக்கெளண்ட் டெல்லாம் எதுக்குங்க? ஐயாகிட்ட ஐநூறையும் கொடுத்திடறேன். நீங்க என்ன வேணுமுன்னாலும் செய்யுங்க.”

கையாள் இடைமறித்தான்.

“ஐநூறு அந்த ஆபீசருக்கு. ஐயா டாக்சில போய்ப் பேசவேண்டியதைப் பேசிப் பெற வேண்டியதைப் பெறணும். அதுக்கும் ஒரு நூறு ரூபாய் கொண்டு வாங்க” என்றான்.

பிரபாகர் வாட்ச்மேனோடு வந்த ஒருவரின் திருநீறு அப்பிய நெற்றியை நோட்டம் விட்டுக் கொண்டே, “நீங்க என்ன செய்யுறீங்க?” என்றார்.

“நான், நான் எம்பிரான் சிவனைத் தேடி அலையறேன் திருவாசகமும் தேவாரமும் படிச்சிப் பார்க்கிறேன். எம்பிரானுக்கு இன்னும் என் மேல மனசு இரங்கல “

பிரபாகர் இரங்கினார்.

“நான் வேணுமுன்னாச் சொல்றேன். அவரு டெலிபோன் நம்பரைச் சொல்லுங்க.”

கையாள், அவர்களை அவசர அவசரமாக அனுப்பிவிட்டு, வெளியே நின்ற ஒரு பெண்ணையும் ஒரு ஆணையும் அழைத்து வந்தான்.

“வணக்கங்க.”

“வணக்கம்.”

“ஸார். அறம் செய்வோர் சங்கச் செயலாளர் அன்பு நம்பி உங்களைப் பார்க்கச் சொன்னார். இவள் என் மனைவி, பேரு பிரமீளா..”

பிரபாகர், அந்தப் பெண்ணை நோட்டம் விட்டார். மற்றதை மறந்து விட்டார். பிறகு நினைத்துக் கொண்டவராய் “என்ன விஷயம்?” என்றார்.

“இவளுக்கு ஒரு டைப்பிஸ்ட் வேலைக்கு இன்டர்வியூ வந்திருக்கு. இந்தாங்க, இதில் விவரமா இருக்கு அந்தச் செக்ஷன் ஆபீசர் கிட்ட நீங்க ஒரு போன் போட்டாப் போதும். விஷயம் முடிஞ்சிடும்.”

பிரபாகர் முகத்தைச் சுளித்து உதட்டைப் பிதுக்கினார். கையாள் கொடுத்த போனைச் சுற்றினார்: பேசினார்.

அவர் பேசுவதையே உற்றுக் கேட்ட தம்பதியர், அவர் பேசி முடித்ததும், அவர் முகத்தைப் பார்த்தார்கள்.

“ஏகப்பட்ட போட்டியாம். கஷ்டங்கிறார்.”

“நீங்க அப்படிச் சொன்னா நாங்க எப்படிப் பிழைக்கிறது?” என்றாள் டைப்பிஸ்ட் ஆகப் போகும் மங்கை.

“செக்ஷன் ஆபீசர் ஒரு பணம் பிடுங்கி.”

“நீங்க கொடுக்க வேண்டியதைச் சொல்லுங்க கொடுத்திடலாம்.”

“அதிருக்கட்டும். என்ன படிச்சிருக்கீங்க?”

“பி.யூ.சி.”

“முன்னால் எங்கேயாவது டைப்பிஸ்டா வேலை பார்த் திருக்கீங்களா?”

“ஜாப் டைப்பிங் பண்றேன்.”

“ரெபரன்ஸ், அதாவது பெரிய மனிதர்கள் யாரையாவது தெரியுமா? எதுக்குக் கேட்கிறேன்னா, கண்டவங்கல்லாம் வர் றாங்க. நானும் இரக்கப்பட்டு ஏதோ செய்யறேன். கடைசியில என் பேரை ரிப்பேராக்கிடுறாங்க.”

“நீங்க கவலையே படவேண்டாம் லார். இவள் ரொம்ப நல்லவள். அதனால்தான் நான் லவ்-மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.”

“அந்தச் செக்ஷன் ஆபீசர் பணந்தின்னி, ஒரு ரெண்டாயிரமாவது போடணுங்றான்.”

“ஸார், ஹஸ்பெண்டுக்கும் வேலையில்ல: ஒப்புக்கும் வேலையில்லே, எப்படி ஸார்பணம் போடறது?” என்றான் கணவன்.

பிரபாகர் சிறிது யோசித்தார். பிறகு, “ஆல்ரைட், சாயங்காலம் வாங்க, யோசிக்கலாம்” என்றார்.

கையாள் குறுக்கிட்டான்.

“ஸார், உங்களுக்கு நேரமாயிட்டது. இந்நேரம் அந்தச் சிலையை நீங்க திறந்து வச்சிருக்கணும்.”

தம்பதியர் எழுந்தார்கள். “அப்போ, சாயங்காலம் வரட்டுமா?”

“வாங்க. நீங்க வரணுமின்னு அவசியமில்ல. வேலை இருந்தா போங்க. ஒங்க மனைவி மட்டும் வந்தாக்கூடப் போதும். அவங்க சாயங்காலம் வரட்டும். நான் கவனிச்சுக்கிறேன்.”

மாலை வந்தது. மங்கை இன்னும் வரவில்லை. பிரமுகர் பிரபாகர் தவியாய்த் தவித்தார். ஒருவேளை வராமல் போயிடுவாளோ? காலையிலேயே எங்கேயாவது கொண்டு போயிருக்கனும்.

பிரபாகர். ஜன்னல் வழியாகக் கழுத்தை நீட்டி நீட்டி அலுத்துப்போன சமயத்தில், அவள் வந்தாள். தலையை மறைக்கும் மல்லிகைப் பூ. ‘பார்த்துக் கொண்டே இருக்கலாம்’ என்று தூண்டுமளவுக்கு அலங்காரம். பிரபாகர் நெளிந்தார். ஸில்க் ஜிப்பாவைத் தடவிக் கொண்டார்.

“வாம்மா வா, உட்காரு.”

“அதிக நேரமா காத்திருந்தீங்களா ஸார்?”

“நோ நோ. இப்பத்தான் ஒருவருக்குப் பொன்னாடை போர்த்திட்டு வந்தேன். நீ வந்திட்டுப் போயிட்டியோன்னு நினைச்சேன்.”

“ஸார், ஜாயின்ட் அக்கெளண்ட்ல போடப் பணம் இல்லே ஸார்”.

“நாமதான் ஜாயிண்ட் ஆயிட்டோமே, அக்கௌண்ட் எதுக்கு? மினிஸ்டர் லெவல்ல போயி முடிச்சிட மாட்டேனா?”

“நீங்க தயவு வைக்கனும் ஸார்.”

“தயவு வைக்காமலா வரச் சொன்னேன்? பூ வாசனை பிரமாதமாய் இருக்கே உன் தலையில் இருக்கிறதினால வாசனை அதிகமுன்னு நினைக்கிறேன்.”

பிரபாகர் இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டு, அவள் தலையில் இருந்த பூ மொத்தையில் ஓர் இதழை எடுத்தார். அப்படி எடுக்கையில் அவர் கை, அவள் தலையை ஆழுத்தியது. அவள் சிரித்தாள். அவருக்கு ஊக்கம் அளித்தது போல் உணர்ந்தார்.

“உன் மோதிரம் நல்லா இருக்கே. கழட்டு பார்க்கலாம்.”

“கழட்ட முடியலை சார்!”

“நான் கழட்றேன்.”

பிரபாகர், அவள் கையைப் பிடித்து, மோதிரத்தைக் கழற்றும் சாக்கில், அவள் கைக்கு ‘மசாஜ்’ செய்தார். அவள் கையைத் தன் பக்கமாக இழுத்து அவளைச் சரித்தார். அவ்வளவுதான்.

அவள் விசுவரூபம் எடுத்தாள்.

“யோவ், உன்னை நம்பி வேலைக்குன்னு வந்தா, நீ வேலை கொடுக்கிற லட்சனமா இது? அயோக்ய ராஸ்கல்.”

பிரபாகருக்கு விரகதாபம் அதிகமாகிவிட்டதால், அவள் சொன்னது, மேலும் அவர் தாபத்தைக் கூட்டியது.

“சரிதாண்டி நிறுத்துடி, நீ என்ன பாப்பாவா? கையைக் கொடுத்திட்டு இப்போ கத்துறியே?”

பிரபாகர், அவளை மேலும் சரித்தார். அவள் கூச்சலிட்டாள்.

“ஐயையோ இந்த அநியாயத்தைக் கேட்க யாரும் இல்லியா? இல்லியா? ஐயையோ!”

அவள் அலங்கோலமாகிற சமயம், திடீரென்று ஒருவன் உள்ளே வந்தான். இப்போது, பிரபாகர் அலங்கோலமாக விழுந்தார். தலையில் இரண்டு குத்தும், கழுத்தில் ஒரு வெட்டும் விழுந்ததால், அவரால் எழுந்திருக்க முடியவில்லை.

அவள் கணவன் பயங்கரமாகச் சிரித்தான்.

பிரபாகர், தள்ளாடி எழுந்து கொண்டே. ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்தார். அவர் வாய், ஒரு முரடான முஷடியை விழுங்குவது போல் விரிந்து, பிறகு ரத்தத்தைக் கொட்டியது.

“அயோக்ய ராஸ்கல்! பொண்ணுக்கிட்ட நடந்துக்கிற முறையா இது?”

பிரபாகர் கும்பிட்டார்:

“உன் மனைவிகிட்ட நடந்துக் கிட்ட விதம் தப்புத்தாம்பா: தயவு செய்து மன்னிச்சிப்பிடு.”

“உனக்கு மன்னிப்பா? கிடையாது.”

“அப்படிச் சொல்லக் கூடாது.”

“உன்னை மன்னிக்கணும்னா நீ ஒரு காரியம் பண்ணனும்.”

“நீ என்ன சொன்னாலும் கட்டுப்படறேன். எவ்வளவு ரூபான்னாலும் தர்றேன்.”

கணவன் எகிறினான்.

“உன் ரூபாயைக் குப்பைத் தொட்டிலே போடுப்யா. நீ எனக்கு வேற காரியம் பண்ணணும்.”

“சொல்லு, சத்தியமாச் செய்யறேன்.”

“நீ எனக்கு ஒரு வேலை வாங்கித் தரணும்.”

“ஐயையோ எதை வேனுமான்னாலும் கேளு. வேலை மட்டும் கேட்காதே. சத்தியமா யாரையும் தெரியாது.”

“என்னய்யா காது குத்தறே? டெலிபோன்ல யார் யார் கிட்டல்லாமோ பேசறே?”

“ஐயோ! உனக்கு விஷயம் தெரியாது. என் டெலிபோன் நம்பரை நானே சுழற்றி, அப்படிப் பேசுவேன்.”

“அன்னிக்கு ஒருவன் வேலை கிடைச்சதுக்காக ஆறடி மாலையை, உன் எருமைக் கழுத்தில் போட்டான்.”

“உனக்கு விஷயம் தெரியாது. மூலிகை விக்கிறவன் தன் ஆளையே வச்சி, மருந்து வாங்கச் சொல்றது மாதிரி என் ஆளே, எனக்கு வந்து மாலை போட்டுட்டுப் போவான். வியாபார தந்திரம்.”

மங்கை குறுக்கிட்டாள்.

“யோவ், முந்தாநாள் ஒரு பையன் உன்னால் வேலை கிடைச் சிட்டதாக எங்ககிட்டச் சொன்னானே?”

பிரபாகர், அவளைப் பார்க்காமலே, கணவனைப் பார்த்துப் பேசினார். காரணம், வலி இன்னும் தீரவில்லை.

“நான் சொல்றதை நம்புப்பா. வர்றவங்ககிட்ட ஜாயின்ட் அக்கெளண்ட் போட்டுக்கிடுவேன். எவனுக்காவது தற்செயலா வேலை கிடைக்கலாம். மதிப்பு எனக்குத்தான். பணமும் வந்துடும். அப்படிப் பார்க்காதே. நான் செய்றது தப்புத்தான். உன் ஒய்ப்கிட்ட தப்பா நடந்தது தப்புத்தான்.”

கணவன் சிரித்தான்.

“இந்தா பாருய்யா, இவள் என் ஒப்பே இல்லே. உன்னை மாட்ட வைக்கிறதுக்காக எனக்கு ஒத்தாசை செய்தாள். சரி, அதெல்லாம் உனக்கு எதுக்கு? நீ பேசியது எல்லாம் டேப் ரிக்கார்ட்ல இருக்கு மரியாதையா எனக்கு வேலை வாங்கிக் கொடு. இல்ல, டேப்பு கோர்ட்டுக்குப் போகும். என் கை உன் உடம்பைப் பதம் பார்க்கும். என்ன சொல்றே?”

“ஐயையோ தயவு செய்து வேலை மட்டும் கேட்காதே. நிஜமா எவனையும் எனக்குத் தெரியாது.”

“அந்தக் கதையே வேண்டாம். என் குவாலிபிக்ேஷன் எஸ்.எஸ்.எல்.சி. பெயிலு. எக்ஸ்பீரியன்ஸ், ஆட்களை உதைக்கிறது. ரெபரன்ஸ். ஜி.எச் ஹாஸ்பிட்டல்ல. தங்கசாமின்னு ஒருவன் கால் ஒடிஞ்சி கிடக்கறான் ஸ்டான்லிலே ஒருத்தன் பல்வலியால் துடிக்கிறான். வேணுமுன்னா கேட்டுக்க மரியாதையா ஒரு வேலை வாங்கிக் கொடுக்கலே…”

“என்கிட்ட இல்லியே. நீயே மிரட்டினா நான் யார் கிட்ட போவேன்?”

பிரபாகர் அழாக் குறையாகப் பேசினான். ஹஸ்பெண்ட் யோசித்தான். பிறகு அவருக்கு ஒரு யோசனை சொன்னான்.

“வேற வேலை கிடைக்கிழவரைக்கும் என்னையும் உன் உதவியாளாப் போட்டுக்கோ. பிஸினலையும் நடத்து.”

“எனக்கு ஏற்கனவே ஒருத்தன் இருக்கான். அவனும் உதைச்சா உடம்பு தாங்காது.”

“அவன் அற்புதமா உதைப்பான். நான் இப்பவே உதைப்பேனே. இந்தா பாரு, இதுதான் கடைசியாச் சொல்றது. நான் உனக்குப் பஸ்ட் அலிஸ்டெண்டா இருக்கேன். அவன் ‘செகண்ட்’ அலிஸ்டெண்டா இருக்கட்டும். யோசிக்காதே. இவளிடம் தப்பா நடக்கிறதுக்கு முன்னால் யோசித்திருக்கணும். சீக்கிரமாச் சொல்லு. எட்டு மணிக்கு ஒரு ‘என்கேஜ்மெண்ட்’ இருக்கு.”

பிரமுகர் பிரபாகர், வேறு வழியில்லாமல் அவனை முதல் உதவியாளர்கச் சேர்த்துக் கொண்டு, சமூக சேவை செய்து வருகிறார். என்றாலும், அவனுக்கு வேறு ஒரு வேலை வாங்கிக் கொடுத்து, அவனிடமிருந்து கழற்றிக் கொள்வதற்காக, நிஜமாகவே பல பிரமுகர்களின் கைகால்களைப் பிடித்து வருகிறார். அதற்காகப் பேங்கில் ‘ஜாயின்ட் அக்கெளண்ட்டி’ல் பணம் போடவும் அவர் தயாராக இருக்கிறார்.

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *