தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,525 
 

படுக்கையில் படுத்திருந்த ஹேமா, அறைக்குள், சரத் நுழைவதை பார்த்து, எழுந்து உட்கார்ந்தாள். கையோடு கொண்டு வந்த பார்சலை பிரித்தவன், அந்த நகை பெட்டியை ஹேமாவிடம் கொடுத்தான்.
அதில், ஒரு ஜோடி தங்க கம்மல், வெள்ளைக்கல், பச்சைக்கல் பதிக்கப்பட்டு, அழகாக காட்சி அளித்தது.
“”ரொம்ப நல்லா இருக்குங்க!”
“”இதோ… இந்த டிரஸ்சை பாரு!” இன்னொரு பார்சலை பிரித்து காட்டினான்.
சின்ன சைஸ் சல்வார் கமிஸ் அழகாக காட்சி அளித்தது.
“”மதுமிதாவுக்கு போட்டால், இன்னும் அழகாக இருக்கும்!” என்றாள் ஹேமா.
தகப்பன்சாமி“”தாங்க்ஸ் ஹேமா… நீ இல்லாம தனியா போய் வாங்கியிருக்கேனே… என்ன சொல்லுவியோன்னு நினைச்சேன். உனக்கு பிடிச்சிருந்தா, நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, கையில் காபி டம்ளருடன் வந்த சாரதா, அதை, சரத்திடம் கொடுத்தாள்.
“”எதுக்கு அத்தை… நான் வந்து வாங்கிக்க மாட்டேனா?” என்று சொன்னவன், “”ஹேமா… அந்த தோடையும், டிரஸ்சையும் அம்மாவிடம் காட்டு,” என்றான்.
வாங்கி பார்த்தவள், “”நல்லா இருக்கு… தோடு மூணு கிராம் இருக்கும் போலிருக்கு; 8,000 ரூபா இருக்குமா?”
“”கரெக்ட் அத்தை… சரியா சொன்னீங்க. ஹேமாவும், ரெண்டுமே நல்லாயிருக்குன்னு சொல்லிட்டா.”
அதை அங்கிருந்த டேபிளில் வைத்தவள், “”ஹேமா… பேசிட்டு இரு. நான் போய் உனக்கு வயித்துக்கு ஏதாவது கலந்து எடுத்துட்டு வரேன். காய்ச்சல் அடிச்ச உடம்பு!” என்று, அடுப்படிக்கு போனாள்.
பாலை அடுப்பில் வைத்தவளுக்கு, “என்ன பெண் இவள், இன்னும் உலகம் புரியாதவளாக இருக்கிறாள்…’ என்று, மகள் மீது, சாரதாவிற்கு, கோபம் வந்தது .
ஹேமா டைபாய்டு வந்து படுக்க, ஊரிலிருந்து மகளின் உதவிக்கு வந்திருந்தாள் சாரதா. சரத்தின் அக்கா பெண்ணுக்கு, பிறந்த நாள் கொண்டா டுவதாக ஊரிலிருந்து போன் வர, அதில் கலந்து கொள்ள, ஊருக்கு எடுத்து செல்வதற்கு தான், அதையெல்லாம் வாங்கி வந்திருந்தான் சரத்.
“என்னங்க… பிறந்த நாளுக்கு இரண்டு பேரையும் வரச் சொல்லி கூப்பிட்டாங்க. எனக்கு இப்பதான் நாலு நாளாக காய்ச்சல் இல்லாம இருக்கு. என்னால் வர முடியாது; நீங்க போயிட்டு வாங்க. அத்தை, மாமா வருவாங்க… அம்மா எனக்கு துணைக்கு இருக்காங்க. நீங்க அவங்களோடு ஒரு நாள் இருந்துட்டு வாங்க!’
போக வேண்டாம் என்று சொல்லாமல், மாப்பிள்ளையை அனுப்பி வைக்கும் மகளின் மீது, சாரதாவுக்கு கோபம் வந்தது. மகளிடம் இதுபற்றி பேச வேண்டும் என, நினைத்துக் கொண்டாள்.
ஹேமா அருகில் அமர்ந்து, சாத்துக்குடி பழங்களை பிழிய ஆரம்பித்தாள் சாரதா.
“”ஹேமா… மாப்பிள்ளை ஊருக்கு போய் சேர்ந்து, போன் பண்ணிட்டாரா?”
“”ஆமாம்மா… எல்லாரும் வந்திருக்காங்களாம்; நான் வரலைன்னு எல்லாரும் வருத்தப்பட்டாங்களாம். எனக்கும் போக ஆசைதான். உடம்பு இடம் கொடுக்கலை; என்ன செய்யறது!”
“”என்னை கேட்டா, மாப்பிள்ளையே போயிருக்க வேண்டாம். எவ்வளவு செலவு பார்த்தியா? குழந்தை பிறந்த நாளுக்காக இவ்வளவா செலவு பண்றது? போக்குவரத்து, எல்லாம் சேர்ந்து, பத்தாயிரம் ரூபாய் ஆகியிருக்கும் இல்லையா?”
“”ஆமாம்மா!”
“”புரியாத பொண்ணாக இருக்கியே… இந்த மாசம் நீ உடம்பு முடியாம படுத்ததில் செலவு வேறு அதிகம். அதுவுமில்லாமல், இந்த, பத்தாயிரம் ரூபாய் செலவு தேவையா சொல்லு…”
“”அதுக்கென்னம்மா செய்யறது. செலவை பார்த்தா முடியுமா? சொந்தக்காரங்க விசேஷம்; செய்யற முறைக்கு செஞ்சுதானே ஆகணும்?”
“”இங்க பாரு ஹேமா… இப்படி உலகம் புரியாத சின்ன பிள்ளை மாதிரி பேசாதே… மாப்பிள்ளைகிட்டே சொல்லி வை. அவர் பிறந்த வீட்டுக்கு இப்படி செலவு பண்ணிட்டிருந்தா, நாளைக்கு பிள்ளை குட்டின்னு வந்தா, உங்க குடும்பத்தை யார் பார்க்கிறது? முக்கியமான விசேஷத்தில் கலந்துகிட்டு, இந்த மாதிரி சின்ன, சின்ன விசேஷங்களை ஒதுக்கி வச்சா ஒண்ணும் தப்பு இல்லை. உலகம் புரிஞ்சு நடக்க கத்துக்க ஹேமா!” சாரதா சொல்ல, பதிலொன்றும் சொல்லாமல், மவுனமாக இருந்தாள் ஹேமா.
“மகள் சிந்திக்க ஆரம்பித்து விட்டாள். இனி, மாப்பிள்ளையை தன் பக்கம் கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி விடுவாள்…’ என நினைத்தாள்.
இந்த விஷயத்தை மகளிடம் பேசிய பின் தான், திருப்தியாக இருந்தது சாரதாவுக்கு.
நன்றாக தூங்கிக் கொண்டிருந்த ஹேமா, அம்மா, யாரிடமோ போனில் சிரித்து பேசுவது காதில் விழ, கண் விழித்தாள்.
“”என்ன ஹேமா… தூங்கி எழுந்துட்டியா? பால் எடுத்து வரட்டுமா… தாத்தா, பாட்டி உன்னை விசாரிச்சாங்க… நீ முழிச்சது தெரிஞ்சிருந்தா உன்கிட்டே இரண்டு வார்த்தை பேச சொல்லியிருப்பேன்!”
“”தாத்தா, பாட்டி பேசினாங்களா… நல்லா இருக்காங்களாம்மா?”
“”நம்ம சேலம் வீட்டுக்கு, ஒரு மாசம் இருந்துட்டு போகலாம்ன்னு வந்திருக்காங்களாம். நான் இங்கே இருக்கேன்னு தெரிஞ்சு, போனில் பேசினாங்க. மாப்பிள்ளை வந்ததும் நான் ஊருக்கு கிளம்பறேன் ஹேமா. ஒரு வருஷம் கழிச்சு இப்ப தான் வந்திருக்காங்க. அவர்களுக்கு பிடிச்சதை செய்து கொடுத்து, வயசானவங்களை நல்லபடியா கவனிச்சு அனுப்பணும். நீ தனியா சமாளிச்சுப்பியா ஹேமா?”
“”சரிம்மா… போயிட்டு வா. எனக்கு இப்பதான் உடம்பு குணமாயிடுச்சே. அறுபது வயசானாலும், அம்மா, அப்பா வந்திருக்காங்கன்னு எவ்வளவு சந்தோஷப்படறே… நீ சொன்ன மாதிரி நல்லபடியா கவனிச்சு அனுப்பு!”
ஊருக்கு கிளம்பி கொண்டிருந்த அம்மா, மகளிடம், “”உன்னை தனியா விட்டுட்டு போகவும் மனசு வரலை ஹேமா… நீ ரொம்ப வேலை செய்யாம ஓய்வு எடு.”
பரிவோடு பேசும் அம்மாவை பார்த்தாள்.
“”அம்மா… அறுபது வயசானாலும், அம்மா, அப்பாவை பாசத்தோடு கவனிக்கணும்ன்னு நினைக்கிற. பெற்ற மகள் மீது இவ்வளவு பிரியம் வச்சிருக்கே. பெண்ணுக்கு ஒரு நியாயம்; ஆணுக்கொரு நியாயம் ஏன்ம்மா?”
“”நீ என்ன சொல்ல வர்ற ஹேமா… எனக்கு புரியலை!”
“”அம்மா… நாம மட்டும் நம் குடும்ப உறுப்பினர்களோடு சந்தோஷமா இருக்கணும்; அவங்ககிட்டே கடைசி வரை அன்பு பாராட்டணும். ஆனா, கல்யாணமானதும் ஆண் மட்டும் தன் குடும்பத்தை ஒதுக்கி, மனைவியே கதின்னு வாழணும்ன்னு நினைக்கிறது நியாயமா?
“”அவங்களும், நம்மை போல்தானே, அம்மா, அப்பா, அண்ணன், தங்கைன்னு அன்பு, பாசத்தோடு வாழ்ந்துட்டு இருக்காங்க? உங்களுக்கு நான் மட்டும் போதும், நம்ம குடும்பத்தை மட்டும் கவனிங்கன்னு எப்படிம்மா சொல்றது? அது தப்பில்லையா?
“”கணவன் மட்டும் தன் உறவல்ல; அவனுடைய சொந்தங்களும் நம் உறவுதான்னு நினைச்சு வாழ்ந்தாதான், ஒரு பெண்ணோட வாழ்க்கை பூரணத்துவம் அடையும்ன்னு நினைக்கிறேன். நான் உலகம் புரியாதவளா? சொல்லுங்கம்மா…”
மகள் சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்தவள், சிறிது நேரம் தலைகுனிந்து யோசித்து விட்டு, “”தப்பு தான் ஹேமா… நான் தான் சுயநலமாக யோசிச்சு, அப்படி பேசிட்டேன். இத்தனை வயசுக்கப்புறம் உன் மூலமாக உண்மையை உணர்ந்திட்டேன். உங்க அப்பாவை அவங்க உறவுகளோடு நெருங்க விடாம, சுயநலமாக வாழ்ந்ததை நினைச்சு இப்ப வேதனைப்படறேன் ஹேமா!”
உள்ளன்போடு சொன்ன, அம்மாவை தழுவிக் கொண்டாள்.

-ரோஷினி (மே 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *