மேதைகள் தோற்றனர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2024
பார்வையிட்டோர்: 129 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

பத்துக்கும் அதிகமான குடித்தனங்கள் உள்ள பெரிய’ வீட்டின் முதல் போர் ஷன் பள்ளி ஆசிரியர் சங்கரனின் வீடு. மாணவர்களிடம் கத்திய மயக்கத்தில், வீட்டுக்குள் சோர்ந்து போய் போனபோது வராந்தாவில் புத்தகங்களோடு போராடிக்கொண் டிருந்த மகன் கணேசனைப் பார்த்ததும், ஒரு ஆஸ்ப்ரோ’ சாப்பிட்டது போல் இருந்தது அவருக்கு. கணேசன், காலடிச் சத்தங் கேட்டு, புத்தகத்திலிருந்து கண்ணை விடுவித்து, தந்தையின் வருகையைப் புன்முறுவலால் வரவேற்று விட்டு, மீண்டும் புத்தகத்தில் சங்கமமானாள்.

சங்கரன், செருப்பைக் கழற்றிவிட்டு, வீட்டிற்குள் போனபோது அவர் மனைவி ‘டி’ போடத் தொடங்கினாள். சட்டையைக் கழற்றப்போன அவர் ஜன்னல் வழியாகத் தன் மகனைப் பார்த்தார். பெருமிதமாக இருந்தது அவருக்கு.

அவனுக்கு, தான் கற்றுக் கொடுத்த யோகாசனங்கள் வீண் போகவில்லை என்பதில் அந்தத் தந்தைக்கு ஒரு திருப்தி. சர்வாங்காசனத்தால், கணேசனின் மார்பு பரந்தும், தனுராசனத்தால் முதுகு நேர்க்கோடு போலவும், பத்மாசனம் செய்து, புருவத்திடையே கண் பார்வையை ஒருமுனைப்படுத்தியதால் உறுதியின் நிழல்போல் நெற்றியில் தெரிந்த துல்லியமான ஒரு நரம்புக் கோடும், மூக்கின் நுனியில் சுடர்விட்ட ஒருவித ஒளியும், சாவாசனத்தால் ஏற்பட்ட உறுதி கலந்த அமைதிக் களையும். கணேசனிடத்தில் ஒருவிதக் கவர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மகனை விழுங்கிவிடுபவர் போல்’ பார்த்த சங்கரனுக்கு நிகழ்காலத்தை உருவாக்கிய கடந்தகால நினைவோட்டம் நெஞ்சுக்கு முன்னால் நின்றது.

சங்கரன் பி.ஏ. படித்தபோது பெரிய பெரிய பதவிகளை யு.பி.எஸ்.ஸி. மூலம் பெறமுடியும் என்பது அவருக்குத் தெரியாது. அப்படித் தெரிந்தவர்கள் அவருக்கு ஆசிரியர்களாகவும் வரவில்லை. ஐ.ஏ.எஸ். என்ற ஒன்று இருப்பதே, வயது வரம்பு தாண்டிய பிறகுதான் அவருக்குத் தெரியவந்தது. எல்.டி.ஸி. யு.டி.ஸி. தான் அவர் காதில் சதா ஒலித்த உத்தியோக மந்திரங்கள். அவற்றிலும் தோல்வியடைந்து, அதன் பலனாக உயர்நிலைப் பள்ளியில் எல்.டி. அஸிஸ்டெண்டாகச் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும்போது நோட்ஸ்’களை மட்டும் படித்த குற்ற உணர்வில், கையில் கிடைத்த புத்தகங்களைப் படித்து அறிவை விரிவாக்கினார். மாணவர்களோடு, தோழமையோடும். அன்போடும் பழகுவதை அவரின் பலமாகக் கருதிய பள்ளி நிர்வாகி, தலைமை ஆசிரியர் பதவியில் யாரைப் போடலாம் என்று வந்தபோது அவரின் மானவர் தோழமையை ஒரு பலவீனமாகக்கருதினார். ஆகையால், அவருக்கு ஜூனியரான ஒரு ஆசிரியரைத் தலைமை ஆசிரியராக்கி, தனது தங்கையைக் கொடுத்தார். இதனால் மனமுடைந்த சங்கரன், தனது மகனை ஒரு இன்டெலக்சுவலாக்கி ஒரு பெரிய பதவியில் அமர்த்தி, தன்னைப் போன்றவர்களுக்கு ஏற்படும் அநீதிகளை, அவன் தனது பிரிவில் நிகழாமலாவது பார்த்துக் கொள்வான் என்ற மானசீக எண்ணத்தோடு இருக்கிறார்.

கணேசன், ஆசனப் பயிற்சியினால் பிரத்யட்ச உலகை மறக்கக் கூடாது என்பதற்காக மார்க்ஸ், ஏஞ்சல்ஸ் ஆகியோரின் புத்தகங்களைப் படிக்க வைத்தார். நேரு, காந்தி, அரவிந்தர், பெர்னாட்ஷா போன்ற மேதைகளின் படைப்புக்களையும் சொல்லிச் சொல்லி படிக்கச் செய்தார். பல நூல்களைக் கற்ற கணேசன், எம்.ஏ.வில் முதல் வகுப்பில் தேறி, அறிவுச் சுடராய் விளங்குகிறான் என்ற எண்ணத்தோடு, மகனைப் பார்க்கப் பார்க்க சங்கரனுக்குத் திகட்டாத தேனாக இருந்தது.

கணேசனின் செல்பில் அரவிந்தரின் பவுண்டேசன் ஆப் இந்தியன் கல்சர்’ நேருவின் ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’ மகாத்மா காந்தியின் எக்ஸ்பிரிமென்ட்வித் டுரூக்’, சர்ச்சிலின் ஹிஸ்டரி ஆப் தி ஓர்ல்ட் வார். கா.சு. பிள்ளையின் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ ஆகியவை உட்பட பல புத்தகங்கள் இருந்தன. மேஜையில் காவான். ரீடர்ஸ் டைஜெஸ்ட், இம்பிரின்ட், நியூஸ்வீக், விகடன், தாமரை, தீபம், இந்தியா:74 ஆகியவை விரிந்து கிடந்தன.

கணேசன் தற்செயலாகக் கண்களை நிமிர்த்தியபோது, தந்தை தன்னையே உற்றுப் பார்ப்பதைக் கவனித்து லேசாக சங்கோஜப்பட்டபோது, சங்கரன் வெளியே வந்து, ஒரு முக்காலியில் உட்கார்ந்து கொண்டே “இன்டர்வியூ என்றைக்கு?” என்றார். அரசாங்கத்தில் ஒரு பெரிய வேலைக்கு அவன் விண்ணப்பித்திருக்கிறான் எப்போதும் படிக்கும் அவன், அந்த வேலைக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக விழுந்து விழுந்து படித்தான்.

“ஓர்லட் சிட்சுவேசனை சர்வே பண்ணு பார்க்கலாம்” என்றார் சங்கரன். அவன் வாயில் இருந்து வரும் வார்த்தைகள், அவருக்கு ஒருவித மோன நிலையைக் கொடுக்கும்.

கணேசன் விளக்கினான் ஈஸ்ட்-வெஸ்ட் டிடெண்ட், வில்லி பிராண்ட் ராஜினாமாவாலும் அதை சோவியத் திரிபு வாதமும் மேற்கத்திய ஏகாதிபத்யமும் சேர்ந்து செய்த தந்திரம் என்று சீனா வர்ணிப்பதாலும், நல்லுறவு பாதிக்கப்படுமோ என்ற உலக அச்சம்; அந்த அச்சம் அவசியமற்றது என்பது போல் மாஸ்கோவில் நடந்த பிரெஸ்நோ-நிக்ஸன் உச்ச கட்டப் பேச்சுக்கள், அமெரிக்காவின் தார்மிக ஆதிக்கத்தில் இருந்து விடுபட நினைத்த கனடாவில், பிரதமர் ட்ரூடோ புதிய பலத்தைப் பெற்றிருப்பது ஐரோப்பிய பொருளாதார பொதுச் சந்தை, ஐரோப்பா, அமெரிக்காவின் செல்வாக்கில் இருந்து தன்னை விடுவிக்க நினைப்பது ஜப்பானில் பிரதமர் தானகோவின் சகாக்கள் பதவிகளைத் தூக்கியெறிந் திருப்பது கம்போடியாவில் நடக்கும் உள் நாட்டுப் போர்: லாவோஸில் பிரதமர் செளமிபெளமா கயிறு மேல் நடப்பது: தென் வியட்நாமில் முனிலிபல் தேர்தலை ஒட்டி மீண்டும் நடக்கும் கொரில்லா தாக்குதல்கள். இந்தியா அணுவாயுத சோதனையில் வெற்றி பெற்று. பாரத துணைக்கண்டத்தில் சூப்பர் பவராகவும்’. தென் கிழக்காசியாவில் ‘வல்லரசு’ என்ற அந்தஸ்தையும் பெற்றிருப்பது: சைப்ரஸ் நிலைமை ஆகியவற்றை எடுத்துக் கூறினான்.

பெருமையால் பூரித்த சங்கரன், மகனை இன்டர்வியூவிற்காக ‘டிரிம் செய்வதை மறந்துவிட்டு, பொதுப்படையான விவாதத்தில் இறங்கினார்.

“சீனா அணுகுண்டு வெடித்த போது பேசாமடந்தைகளாக இருந்த நாடுகள், நம்நாடு சோதனை நடத்தியதும் கத்துவதைப் பார்த்தியா?”

“தொடக்கத்தில் கத்திய நாடுகள் இப்போது அடங்கிட்டே. சீனா கூட நாம் சோவியத் தூண்டுதலில் செய்ததா சொல்லுது “

“சோவியத் யூனியனிடமே உதவி பெற்றுவிட்டு, இப்போ அந்த நாட்டையே அது திட்டுது.”

“இது இயற்கை இப்படி ஒரு நிலைமை வரும் என்று 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்கந்தர் ‘இன்சைட் ஆசியா’ என்ற புத்தகத்தில் ‘சீன-சோவியத் தேசியங்கள், மார்க்லியம் வலியுறுத்தும் சர்வ தேசியத்தையும் மீறி, ஒரு நாள் மோதும்’ என்று தீர்க்க தரிசனமாகச் சொல்லியிருக்கிறார்.”

“அப்பா ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா, மா-லே-துங்கை அவரது ஆரம்ப கால அரசியலில், சீன கம்யூனிஸ்ட் கட்சியே ‘எக்ஸ்பெல்’ செய்திருக்கிறது.”

“இன்னொரு விஷயம் தெரியுமா? சீன கம்யூனிஸ்ப் புரட்சிக்கு வழி காட்டுவதற்காக, ஸ்டாலின், இந்தியரான எம்.என்.ராயை அங்கு அனுப்பினார். இது மாலே துங்குக்குப் பிடிக்கவில்லை.”

“எம்.என்.ராய், புரட்சிவாதியாய் ஒளிவிட்டது போல், இன்னொரு இந்தியரான ஜே.கிருஷ்ணமூர்த்தி தத்துவத்துறையில் ஜொலிச்சுக்கிட்டு இருக்கார். அன்னிபெஸண்ட் அவரை மகனாகத் தத்து எடுத்து, அவர் ‘கடவுளின் அவதாரம்’ என்று அறிவிக்க முயற்சி செய்த சமயத்தில், கிருஷ்ணமூர்த்தி, “நான் ஒரு சாதாரண மனுஷன்தான்’னு சொல்லி, அதுக்கு மறுத்திட்டாரு. கிருஷ்ண மூர்த்தியைப் பத்தியோ, அவர் எழுதிய புத்தகங்களைப் பத்தியோ நம்முடைப் பலபேருகாத் தொரியாது. ஆனால் மேற்கு நாடுகளுள்குறிப்பா-அமெரிக்காவுல. அவர் தத்துவமும், அவரும் ஒரு இனிஸ்டிடுவடின். அன்னி பெசண்ட் அம்மாவே’ தத்து எடுத்தா அவரு எப்படிப் பட்டவரா இருப்பாரு…”

“அப்பா ஒரு இன்ட்ரெஸ்டிங் சமாசாரம், அன்னி பெசண்ட்டும், பெர்னாட்ஷாவும் காதலர்கள். ஆனால், கடைசில. ஷா காலை வாரிட்டார்.”

“ஷாவை சர்ச்சிலுக்குக் கட்டோடு பிடிக்காது. அந்த மேதை சாவும்போது, சர்ச் சிலின் கைங்கரியத்தால் அரசாங்க மரியாதையோடு அவர் அடக்கமாகல.”

“ஷா கோமாளித்தனமா பேசினது போலத் தெரிஞ்சாலும், அவரு பேசுறதிலே அர்த்தம் இருக்கும். அப்பா குடித்து’க் கெட்டதை உணர்த்த அவர், மதுபானங்களைத் தொட்டது கிடையாது. பீடி. சிகரெட் சாரி..பிரிட்டனில் பீடி ஏது? புகை பிடிச்சதும் கிடையாது…”

“அதனாலதான் சிகரெட்டின் ஒரு நுனியில் தீயும், இன்னொரு நுனியில் முட்டாளின் வாயும் இருக்குன்னு சொன்னாரா?”

“ஆமாம். மகாத்மா காந்தி இறந்தபோது”. உலகில் மிக நல்லவர்களாக இருப்பது மிக மிக ஆபத்து” என்று அருமையாகச் சொன்னார்.

“ஆனால், ஷாவை காந்திஜிக்கும் பிடிக்கல. டால்ஸ்டாய்க்கும் பிடிக்கல. டால்ஸ்டாய்க்கு காந்திஜியை பிடிச்சுது.”

“டால்ஸ்டாயின் ‘அன்னாகரினாவை விட, அவர் ‘எப்படி?’ வாழ்க்கையே சிறந்த நாவல்.”

“டால்ஸ்டாய்க்கு, பேரும் புகழும் கிடைச்சதும், டால்ஸ்டாயிஸம் அவரைவிட சக்தி வாய்ந்ததா ஆச்சுது. டால்ஸ்டாய், அந்த “இமேஜிக்கு தக்கப்படி வாழனுமுன்னு நினைச்சி, தன் புத்தகங்களுக்கான ராயல்டியை ஒரு பப்ளிக் டிரஸ்டா ஆக்க நினைச்சாரு. இது அவரு மனைவிக்குப்பிடிக்கல. ஒரே சண்டை. கடைசில மனுஷன். மனைவியை விட்டு ஓடிப்போயி ஒரு ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் வீட்ல இறந்தாரு அவரு வாழ்க்கையைக் குறைந்தபட்சம் எழுத்தாளங்களாவது படிக்கணும்!.

“இந்த வகையில் பார்த்தா, திருப்தியோடு இறந்த ஒரே இலக்கியவாதி இரவீந்திரநாத் தாகூர்தான். தாகூர் பூமித் தாயிடமிருந்து விடை பெறுறதா எழுதின கவிதை, என்னைக்குமே நெஞ்சைவிட்டு விடைபெறாது. சாவை. வாழ்க்கையின் இன்னொரு பகுதியாக, அதாவது, குழந்தை, தாயின் மார்பகத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதியில் பால் அருந்த தலையை எடுப்பதாகத் தாகூர் வர்ணிச்சாரு. ஆனால், ஷாவுக்கும் மரணபயம்!”

“ஷாவை ஏன் சர்ச்சிலுக்குப் பிடிக்கல?”

“அவரு யாரைத்தான் நேசிச்சாரு? சர்ச்சில் ஒரு இம்பிரியலிஸ்ட் நம்ம காந்திஜியையே ‘அரை நிர்வாணப் பக்கிரி’ன்னு சொன்னார். காந்தியடிகள் இறந்தபோது கூட ஒரு அனுதாபச் செய்தி சொல்லல. நம்ம பத்திரிகைதான் அவரை அாைவாசியமாப் பெரிசுபடுத்தின.

“உண்மைதான்: சர்ச்சில் நான் பேசும்போது மற்றவங்களை முட்டாள்கள்னு நினைப்பேன். அதனால் நல்லா பேசினேன்’னார்”

“ஆனால், அரவிந்தரோ நான் பேசுகிறபோது, மக்களை, நாராயணனின் சொருபங்களாக நினைப்பேன். அதனால நல்லா பேச்சு வந்தது’ன்னார். சர்ச்சில் அரவிந்தர் வேறுபாடுதான், கிழக்கத்திய மேற்கத்திய நாடுகளின் அடிப்படைக் கலாச்சார வேறுப்டு.”

“சர்ச்சில் இம்பீரியலிஸ்டா இருக்கலாம். ஆனால், அவரு இல்லன்னா ஹிட்லரை ஒழிச்சிருக்க முடியாது.”

“உண்மைதான். சேம்பர்லின் மூனிச் உடன்பாடு செய்து, விட்டுக் கொடுத்தாரு, சர்ச்சில்தான் ஹிட்லரை ஒழிச்சது.” ஜெர்மன் மக்கள் மத்தியில் தேசிய வெறியை உண்டு பண்ணினவ்ர் ஹிட்லர். ஹிட்லர் ஒரு ஜெர்மானியர் கிடையாது. ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்தவர்.

“இதே மாதிரி நெப்போலியன் பிரெஞ்ச் ஆசாமி இல்லை. பிரெஞ்ச் காலனியான கார்ஸியா தீவைச் சேர்ந்தவர். இவர் அப்பா, அந்தத் தீவை மீட்கிறதுக்காகப் பிரான்சோட போராடிச் செத்தார்.”

“சமத்துவம் – சகோதரத்துவம் சுதந்திரம் ஆகிய தத்துவங் களைக் கொடுத்த பிரெஞ்ச் புரட்சிதான் கடைசில சர்வாதிகாரி களையும் கொடுத்தது.”

“இதனால்தான் தத்துவம் இல்லாத புரட்சி எடுபடாதுன்னு சொல்றது. மார்க்ஸிய தத்துவத்தையும் பார் லிமெண்டரி ஜனநாயகத்தையும் இணைச்சி ஒரு புதிய சித்தாந்தத்தை பரீட்சித்துப் பார்க்க சிவியில் அல்லெண்டே பாடுபட்டார். பாவம் அவரைக் கொன்னுட்டாங்க.”

தந்தைக்கும் மகனுக்கும் இடையே பேச்சு சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருப்பதைக் கவனித்த சங்கரன் மனைவி, கணவன் காய்கறி வாங்கப் போக மாட்டார் என்று தெரிந்தவள் போல், ஒரு பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். கணேசன் கா.சுப்பிரமணிய பிள்ளை எழுதிய இலக்கிய வரலாற்றின் முதல் பகுதியை எடுத்தான். சங்க காலம், சங்கம் மருவிய காலம், சமயகாலம், சிற்றிலக்கிய காலம், ஐரோப்பியர் காலம், நிகழ்காலம் ஆகிய காலக்கூறுகளில் தமிழின் வளர்ச்சியை அவன் மனம் எடை போட்டது.

சங்கரன் உடனே “தமிழ் இலக்கியத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்” என்றார்.

“அருமையான கருத்துச் செல்வங்களி: சங்க நூல்களையும் பிற நூல்களையும் பார்க்கிறபோது திகைப்பு வருது”.

“நீ திகைக்கிற ஆனால், டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் பழைய சுவடிகளை அலசினதோடு எப்படி விளக்கம் கொடுத்திருக்கிறார் தெரியுமா? அவர் இல்லாட்டி இன்னைக்கு பழைய இலக்கியமே கிடைச்சிருக்காது. இன்றையத் தமிழ் இலக்கியத்தைப் பத்தி நீ என்ன நினைக்கிற?”

“தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சித்துறை இன்னும் பழமை மீட்ப வாதத்திலேயே இருக்கு, உதாரணமா பாரி, தேரைக் கொடுத்தது கொடைத்திறன்னு சொல்றதில்தான் இருக்கோமே தவிர, அது அதிகப் பிரசங்கித்தனம் ஆகாதான்னு நாம் ஆராயல. அகத்திணையில, தலைவி, தலைவனுடைய தோழன் கிட்ட பேசக்கூடாது. ஆனால், அவள் தோழி தலைவங்கிட்ட பேசலாம் என்கிறது மாதிரி காட்சிகள் அமைஞ்சிருக்கு. இரண்டு பெண்களுக்கு, பொருளாதார ஏற்றத்தாழ்வாலே இரண்டு கற்பு நிலைகள் வந்தது என்று ஆராய மனம் வரல. ஆராய்றவனை தமிழ்த் துரோகி என்பாங்க. நம்ம ஆராய்ச்சி ஒளவையை அதியமான் காதலி என்கிறதிலேயும் ராமனைத் தமிழன்னு நிரூபிக்கிறதிலேயம் அல்லது ஆரியன்னு சொல்றதிலேயுந்தான் இருக்கு.”

“நீ சொல்றது உண்மைதாண்டா, கன்னகி மதுரையை எரிச்சான்னு கை தட்றோம். ஆனால், அது எப்படி எரிக்க முடியு முன்னு நினைக்கிறதில்ல. அதோட, மணிமேகலையில், மதுரையை எரிச்ச பாவத்துக்காக, பழையபடி மானிடப் பிறவி எடுக்கப் போறதா. கண்ணகி சொல்லி வருந்துறா இது பலருக்குத் தெரியாது”

“என்னைக் கேட்டால், கண்ணகி பாத்திரத்தை விட, மணிமேகலைப் படைப்புத்தான் மேலானது. ஒரு இளந்துறவிப் பெண்ணின் உள்ளப் போராட்டத்தை, சாத்தனார் அழகாப் பாடியிருக்கிறார். புதியோன் பின்னே போனதென் நெஞ்சே! மறக்க முடியாத கவிதை.”

“புது கவிதையைப் பத்தி உன் அபிப்பிராயம் என்ன?”

நிலவையும், பொண்ணுங்க முகத்தையும் பாடிக்கிட்டிருந்த மரபுக் கவிஞர்களுக்கு வியத்நாம் இருக்கு ஆப்ரிக்கா இருக்குன்னு சாட்டையால் அடிச்சது மாதிரி சொன்ன பெருமை புதுக்கவிதை களுக்குச் சேரும். சில புதுக்கவிதைங்க ரொம்ப நல்ல இருக்கு. ஆனால், சில கவிதைங்க, மட்டரகமாய், உங்ககிட்ட கூட சொல்ல முடியாதபடி அசிங்கமாவும் இருக்கு.”

“ஆனால், நம்ம நாவல்கள் தேவல. சுஜாதா ஒரு மாடர்னிட்டியை கொண்டு வந்திருக்கிறார்.”

“அப்படித்தான் ஒரு அபிப்ராயம் நிலவுது. ஆனால், பத்து வருஷத்துக்கு முன்னாடி இதை ரா.கி.ரங்கராஜன் செய்திருக்காரு.”

“எப்படியோ போகட்டும் தாமரை மணாளனின் சட்டயர்: நா.பார்த்தசாரதியின் இப்போதைய யதார்த்தவாதம்: மணிசேகரனின் சொல்வளம்; சாலியின் வர்ணனை: மணியனின் அக ஆய்வு: ஜெயகாந்தனின் தத்துவார்த்தம்: இப்படி ஒவ்வொருவர் கிட்டேயும் ஒவவொரு அழகு.”

“உண்மைதான். ஆனால், வேறு சில எழுத்தாளர்கள் உதவாத கருத்தை விடாப்பிடியாகப் பிடிச்சிக்கிட்டு இருக்காங்க. ‘மகன், குழந்தையாய் இருக்கையிலேயே, தாயைக் காதலிக்கிறான். இதனால் தந்தைமேல் பொறாமைப்ப்டுறானாம். இதுமாதிரி மகள். தந்தையைக் காதலிச்சி, தாய் மேல் பொறாமைப்படுறாளாம். அடி, மனசில் ஏற்படும் இந்த உணர்வுகளை, கான்லியஸ் மைண்டல’ ஈத்துன்னு ஒன்னு தடுக்குதாம். இதனால் மகளும், மகனும் பொறாமையை அன்பா மாத்திக்கிறாங்களாம். இதுக்கு ‘ஒடிபியஸ் காம்பெளக்ஸ்’ஸின்னு பெயர்னு பிராய்ட் சொன்னாலும் சொன்னாரு நம்மவங்கள்ல சிலர் அதையே பிடிச்சிக்கிட்டு கதை எழுதுறாங்க.”

“நல்லா சொன்னிங்க.பிராய்ட் தத்துவமே தப்புன்னு அவருக்குப் பின்னால வந்த சைகாட்ரிஸ்ட்கள் நிரூபிச்சிட்டாங்க. ஆனால், நம்ம ஆளுங்க அதை இன்னும் விடல. என்ன எல்லாமோ எழுதுறாங்க. இதே நேரத்தில். சாமர்ஸ்ெட்மாம் ரமண ரிஷியின் தத்துவத்தை வைத்தே ஒரு நாவல் எழுதினார். அதோட தமிழில் டிராவலர்க்ஸ் அதிகமாக வரலே.”

“வந்திருக்கு. ஆனால், நம்மவங்க வெளிநாடுகளுக்கு தாழ்வு மனப்பான்மையோடு போயிட்டு, இங்கே வந்து இங்கிலீஸ் டிஷ்களைப் பத்தித்தான் அளந்தாங்க. சி.எஸ். லின் உலகம் சுற்றினேன் ஒரு விதிவிலக்கு. ஆனால், கொஞ்சம் டெக்னிக்கல்”.

“இந்த வகையில் மணியனின் “இதயம் பேசுகிறது” ஒரு எக்ஸலன்ட் கிரியேஷன். பிரயாணக் கட்டுரைகளுக்கு ஒரு ஸ்டேடஸ்ஸைக் கொடுத்த பெருமை, அவரைத்தான் சேரும். அவர் கட்டுரைகள் தன்மாண்மான தேசியத்தையும் மனிதாபிமான சர்வதேசியத்தையும் தூண்டுது.”

“தமிழ் இலக்கியம் இப்போ பரவாயில்லை. டாக்டர் உதயமூர்த்தியின் கட்டுரைகள், மோகன் சுந்தரராஜனின் விண்வெளிக்கட்டுரைகள். மார்டனாய் இருக்கு. நம்ம இலக்கியம் ஒழுங்காய் உருப்படனுமுன்னா திறனாய்வு பெர்ஸனலாப் போகக் கூடாது. திறனாய்வை பெர்லனலாயும் எடுத்துக்கக் கூடாது.”

“என்ன எழுதி என்ன செய்ய நாடு இன்னும் அறியாமைலதான் இருக்கு. நாம எல்லாம் கஷ்டத்தை ரசிச்சிக்கிட்டு. துன்பத்த கவைச்சிக்கிட்டுத் தார்மீக கோழை களாகத்தான் இருக்கோம்.”

“அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒண்ணுல, ஒரு பெரிய கண்டை எடுத்து, மூணு பிரிவாக்கி, ஒரு பிரிவை வெறுமனேயும், மத்தில இருந்த பிரிவுல கொஞ்ச உணவையும் வச்சாங்களாம். நிறைய எலிகளையும் விட்டாங்க. இன்னொரு பிரிவுல, நிறைய உணவை வைச்சாங்களாம். ஒரு பிரிவுல இருந்து இன்னொரு பிரிவுக்குப் போக வழியும் வச்சாங்க. குறைந்த உணவிருந்த தட்ல இருந்த எலிகள். அங்கே சண்டை போட்டன. திருடு, ரேப்பு எல்லாம் நடந்தது. கொஞ்சம் எலிகள் அங்கே இருந்து. உணவு அதிகமாக இருக்கிற தட்டுக்கு வந்ததுங்க. ஆனால், அந்த இடம் ரசிக்கல. இருந்த இடத்துக்கே போயிட்டுதுங்க. போர், பொறாமை, திருடு ஆகியவற்றை விட்டு எலிகளால் மீள முடியல கஷ்டமே ஒரு ரசனையாயிட்டு: நாமும் அப்படித்தான் இருக்கோம்.”

கணேசன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த சங்கரன், அவன் கல்லூரித் தோழன் மோகன் வந்ததும் அவன் வரவு பிடிக்காதவர் போல உள்ளே போனார். கணேசன் ‘காரவானை’ப் புரட்டினான். மோகனின் கையில் ஒரு சினிமாப்பத்திரிகை இருந்தது.

“என்னடா கனேஷ், இன்டர்விபூன்னா இப்படியா விழுந்து விழுந்து படிக்கணும்?”

“இண்டர்வியூவில விழாம இருக்கனுமின்னா விழுந்து விழுந்துதான் படிக்கணும்.”

“சொல்றேன்னு தப்பா நினைக்காதேடா. வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ணனும் ‘கில் ஜாயா’ இருக்கக் கூடாது. சினிமா பார்க்கறதில, அதிலும் பார்த்த சினிமாவை பழையபடி பார்க்கறதில, பீச்சுக்குப் போறதிலே, கேர்ல் பிரண்டோட அரட்டை அடிக்கிறதில இருக்கிற இன்பமே தனி. இது ஈடில்ல.”

கணேசன், “பாரதி ஓரிடத்தில்” என்றான். “நடிகை பாரதியா எதில பேட்டி கொடுத்திருக்கு?” என்றான் மோகன்.

“நான் மகாகவியைச் சொல்றேன். ஒரு மனுஷன், சாபத்தால் பன்றியாய் மாறினான். சாபம் விமோசனம் ஆகும்போது நான் பன்றியாவே இருக்க விரும்புறேன்னு சொல்லி, பன்றியாய் இருந்து என்ஜாய் பண்ணினானாம். பன்றி போல வாழ்ந்தனர்’ என்று பாரதியார் சொல்கிறார். உன்னைப் போன்ற ஆட்கள் அப்போதும் இருந்திருக்காங்க.”

கணேசனின் பேச்சைக் கேட்டதும், மோகனுக்கு முதலில் ஷாக். கணேசன் முன்னால் குவிந்து கிடக்கும் புத்தகங்களைப் பார்த்ததும், தான் உண்மையிலேயே ஒரு பன்றி தான் என்று எண்ணத் தொடங்கினான். அந்த அவமானத்தில் ரீடர்ஸ் டைஜஸ்ட்டை எடுத்துக்கொண்டு, இன்றிலிருந்து படிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு, வீட்டுக்குப் போனான். அங்கே அவன் தந்தை ஒரு கான்டிராக்டர். அரசியல்வாதி, பையனைப்பார்த்ததும், “ஏன்டா இடியட், அந்த இண்டர் வியூ கமிட்டியில யார் லாம் மெம்பருங்கன்னு கோமேதகம் சொல்றதா சொன்னாரே கேட்டியா?” என்றார். கனேசன் விண்ணப்பித்திருந்த அந்தப் பெரிய வேலைக்கு மோகனும் அப்ளை செய்திருந்தான்.

மோகன் தந்தையிடம் பேச மனமில்லாதவன் போல் “இல்லை” என்று ஒரு வார்த்தையில் முடிக்க, அவர் பல வார்த்தைகள் தொடுத்தார்.

“நீ கெட்ட கேட்டுக்குப் புத்தகம் வேறயா? இது நல்ல சான்ஸ், கெடுத்துடாதே. இந்த வேலை கிடைக்காட்டா உனக்கு இருக்கிற அறிவுக்கு பியூன் வேலைகூடக் கிடைக்காது. உடனே போய் மெம்பருங்க லிஸ்ட்டை கேட்டு வாங்கி என்கிட்ட கொடு. நான் அதை அந்த எம்.எல்.ஏ. கிட்ட கொடுக்கிறேன்” என்றார்.

‘பியூன் வேலை கூடக் கிடைக்காது’ என்ற உண்மை மோகனின் கையிலிருந்த ரீடர்ஸ் டைஜஸ்டை கீழே தள்ளியது. அவன் வைராக்கியம், மயான வைராக்கியமாக, மெம்பர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ள தலைகால் தெரியாமல் ஓடினான்.

இன்டர்வியூ நாள் நெருங்க நெருங்க, கணேசன் புத்தகங்களை நெருங்கினான். இந்தியன் எக்கனாமிக் பிராப்ளம், சமீபத்தில் அவசரச் சட்டங்கள் அத்தனையும் அவன் சொற்படி கேட்டன. தந்தை சங்கரனும் மகனுக்கு பாயின்ட்கள் எடுத்துக் கொடுத்தார்.

மோகன் வீட்டில் கார்கள் பறந்தன. பார்ட்டிகள் மிதந்தன. மோகனும், அவன் தந்தையும், ஒரு எம்.எல்.ஏ. யும் காரை வைத்துக் கொண்டே, சென்னையைச் சல்லடை போட்டார்கள்.

நூற்றுக் கணக்கான எம்.ஏ. பட்டதாரிகள் இன்டர் வியூவிற்கு வந்தனர். கனேசனிடம் மெம்பர்கள் முக்கால் மணி நேரம் விவாதித்தார்கள். பலரை இரண்டு மூன்று நிமிடங்களில் அனுப்பிவிட்டார்கள். இந்த லிஸ்டில் மோகன் டாப். எல்லோரும் கணேசனுக்கு அல்லது அவனை மாதிரி அதிக நேரந் தங்கிய வேறு ஒருசிலரில் ஒருவனுக்குக் கிடைக்கும் என்று தோல்வியை முன்னதாக ஒப்புக் கொண்டார்கள்.

ஒரு வாரம் கழித்து ரிசல்ட் அறிவிக்கப்பட்டது.

மோகன் அந்தப் பெரிய வேலைக்குத் தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வந்தது.

தன்னைவிடச் சிறந்த ஒருவனுக்குக் கிடைத்திருந்தால் கணேசன் வருத்தப்பட்டிருக்கமாட்டான். ஆள் இடிந்து விட்டான். ஒரே கவலை. ஒருவனை இல்லீகலாகத் தெரிந்தெடுப்பதை நியாயப்படுத்த நூற்றுக்கணக்கான இளைஞர்களின் நேரத்தையும் பணத்தையும் ஏன் வீணடிக்க வேண்டும் என்று ஆத்திரப்பட்டான். அவன் தந்தை சங்கரன் மகனுக்கு ஆறுதல் சொன்னார்:

“இது உனக்கும் மோகனுக்கும் நடந்த போட்டியல்ல. நீ தெரிந்து வைத்திருந்த காந்திஜி, நேருஜி, டால்ஸ்டாய், தாகூர், அரவிந்தர் முதலிய மேதைகளுக்கும். அவனுக்குத் தெரிந்த அந்த எம்.எல்.ஏ.வுக்கும் நடந்த போட்டி. மேதைகள் தோற்று விட்டார்கள். கவலையை விடு.”

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *