குயிலிக்கு நான்கு கால்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 3, 2024
பார்வையிட்டோர்: 862 
 
 

மதிய வெயில் உடல் திறந்து கிடந்தது.

உடல் திறக்க முட்டிக் கொண்டு வந்தது குயிலிக்கு.

விறகு கட்டை தலையில் இருந்து இறக்கி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள். எப்போதும் தானாகவே வந்து விடும் ஆழ்மன தற்காப்பு அது. கண்ணுக்கெட்டும் தூரம் வரை தானே தான் நடப்பதாக தோன்றியது. தானே தான் இருப்பதாக தோன்றியது. மூத்திர மழை பெய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் சிறுமியின் கூந்தலற்று. ஏனோ தானாகவே சிரித்துக் கொண்டாள். வெயில் சுளீருக்கு நா மேல் அன்னத்தோடு ஒட்டிக் கிடந்தது. கன்னம் ஒட்டி உறவாடிய வியர்வை இனித்திருக்கும்… இளங்காற்று இரவில் கூறும். ஒற்றையடி தாண்டிய புதருக்குள்… புடவையை தூக்கிக் கொண்டு அமர யத்தனிக்கையில்… யாரோ மூச்சு விடும் சப்தம் மூச்சடைக்க வைத்தது. அனிச்சை செயலைப் போல புடவை தானாக கெண்டங்காலுக்கு கீழே சர சரவென சீறி உடல் சுற்றும் திரையானது. நொடியில் பூத்ததை போல இரு கால்களும் இணைந்து கொண்டன.

உடல் மெல்ல நடுங்க துவங்கியது. சுற்றும் முற்றும் மீண்டும் பார்க்க தோன்றியது. ஆனால் பார்க்க முடியாத கவனக் குவியல் அந்த புதருக்குள் அவளை மெல்ல நகர்த்த…. திரும்பிய வேகத்தில் முட்டிக் கொண்ட வளைவுகளை போல கொண்டை ஊசி காட்சிகள் பட்டென்று வெடித்து விட திகைத்தாள்.

யாரோ இரு ஆண்களின் கால்கள் ஒன்றோடொன்று பின்னி பிணைந்து புணர்தலில் கிடக்க குயிலியின் கால் பட்ட சறுகின் சப்தம் அவர்களை தன் உணர்வுக்கு வர வைத்திருக்க வேண்டும். படபடவென அடித்து பிடித்து எழுந்து வியர்வை ஒழுக புதருக்கு பின்னால் பெரு மூச்சுடன் நிற்பதை உணர முடிந்தது. சட்டென கால்கள் கண்டு இதுதான் காட்சியாக இருக்கும் என்ற உணர்வு வந்ததுமே குயிலி மூன்றடி பின் நகர்ந்து புதருக்கு முதுகு காட்டி நின்றாள். திக் திக் நொடிகளை கடக்கவும் முடியாமல் கடத்தவும் முடியாமல் தடுமாறியது காடு.

என்ன செய்வதென்றே தெரியாத கணத்தில் காலம் சற்று நின்று விட்டதென போல தான் இருந்தது. உள்ளேயும் மிக நுட்பமான அவதானிப்பின் கவனம் ஒரு புள்ளியில் குவிந்து “யாரோ ஒருத்தி தங்களை கண்டு விட்டாள்… அவள் வெளியே நிற்கிறாளா…போய்விட்டாளா… மீண்டும் எட்டி பார்க்கிறாளா….” என்று பயந்த படபடப்புடன் ஒரு குற்றத்தின் சுவடென இருக்க…. “யார் இவர்கள்…. கண்டிப்பாக இரு ஆண்கள்தான்…என்ன நடக்கிறது… யாராக இருக்கும்…. இப்போது என்ன செய்வது….” வெளியே தடுமாறிக் கொண்டிருந்த குயிலி விறகுக் கட்டை வேக வேகமாக தூக்கிக் கொண்டு நடையை கட்டினாள். முதுகுக்கு பின்னால் யாரோ முகமற்று விரட்டுவது போல இருந்தது.

அவள் மீது இரண்டு பாம்புகள் ஊர்வது போன்ற தடுமாற்றத்தில் அவளின் கால்கள் ஒருவகை குறிப்பில் இருந்து பிறழ்ந்து விட்டதை போல நடந்து கொண்டிருந்தன. அங்கொரு எட்டும் இங்கொரு எட்டும் என்று எட்டு திக்கிலும் எட்டுக்கால் பாய்ச்சல் அது.

அன்றிரவு தூக்கமற்று வெறித்துக் கிடந்தாள். அன்றிரவே அப்படித்தான் கிடந்தது போல நம்பினாள். கால்களை ஒன்றோடொன்று உரசி பார்த்தாள். கால்களுக்கு பதில் ஏதோ முளைத்து விட்டதோ என்று அஞ்சுவதாக இருந்தது அந்த உரசல்.

எப்படி இரு ஆண்கள்….?!

அவள் கற்பனையை அவளே தடுத்து நிறுத்தினாள். அவளறைக்குள் வேகமாய் வந்து நுழைந்து கொண்ட ஒரு வகை மஞ்சள் நிறத்தை அவளால் விரட்டவே முடியவில்லை. இருட்டை தேடும் கண்கள் முழுக்க கால்களின் முகம் விரல் விரித்து அம்மணமாய் நிற்பதை அடிவயிற்று சுரண்டல் கொண்டு அரற்றினாள். புரண்டு புரண்டு படுக்கையில்…. மார்பழுந்த ஒரு வகை வலி உடல் முழுக்க பரவியது. சட்டென மார்புகள் கனத்து விட்டதை உணர்ந்தாள். ஏனோ அழ வேண்டும் போல இருந்தது. தொடை நடுவே முழங்கை வரை புகுத்திக் கொண்டு சுருண்டு கொண்டாள். சுவர் அணைக்கும் தகிப்புகள் அவளை முயக்கின.

யாராக இருக்கும்…. அவளின் கண்கள் ஊர் மேய்ந்தன.

ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது போல அவளின் கண்கள் தேடின.

பக்கத்துக்கு வீட்டு தாஸும் அவன் சேக்காளி பிரேமும் கை கோர்த்தபடி நிற்பதும் பேசுவதும்…. அடித்துக் கொள்வதும் என்றிருக்கும் காட்சி அவளை நடுங்க வைத்தது. கொஞ்சம் சுவாரஷ்ய படுத்தியது என்று கூட சொல்லலாம். ஜன்னல் கம்பிகளில் முக்கால் முகம் அழுந்த பார்வையை நீட்டித்து அவர்களை சுற்றினாள். “இவர்களா அவர்கள்…?!” மனம் தூண்டில் போட்டது. ஒரு விதமான சுரப்பு அவளில் ஏற்பட்டதை அவளால் நன்கு உணர முடிந்தது. உயிர் படபடக்கும் சப்தம் ஆங்காங்கே கேட்பதை
உடல் தழு தழுக்கும் நுகர்வுகளால் உணர்ந்தாள்.

அந்த கால்களை ஒரு முறை கண்கள் முன் கொண்டு வர… அது இறுகிய கால்கள். அந்த கால்களில் நகம் முத்தி கிடந்தது. இவர்கள்… சின்ன பையன்கள்…. 11, 12 படிக்கும் சிறுவர்கள்… அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். அந்த கால்களின் வாசம் அவள் மூக்கருகே அவளை குமட்டியது.

இன்று காலையில் கறி எடுக்க கறிக்கடை முன் நிற்கையில்…. ஆறுமுகம் வேண்டுமென்றே ட்ரவுசருக்குள் கையை விட்டு சொரிந்து கொண்டு நின்றதை நினைத்துப் பார்த்தாள். அது ஒரு வகை சமிக்ஞை என்று புரிந்தாலும்…. ஏனோ அருவருப்பு தான் மேலோங்கியது. கறி வாசத்தை விடவும் அவன் வாசம் குமட்டிக் கொண்டு வந்தது. அவனாக இருக்க முடியாது. அவனோடு ஒரு பெண்ணே இருக்க முடியாது. ஆண் எப்படி இருப்பான்.

பிறகு தண்ணீர் பிடிக்க சென்ற போது வேண்டுமென்றே உள்ளாடை போடாமல் கவனம் ஈர்க்க முயற்சித்துக் கொண்டிருந்த தேவிகா தம்பி குட்டை சார்ட்சில் நின்று கொண்டிருந்ததை நினைவு படுத்தி பார்த்தாள். அவனா இருக்குமோ….? எப்படி இரு ஆண்கள்….! அவளுள்…. கேள்விகள் அசிங்க அசிங்கமாய் கொப்பளித்தன.அவள் சுண்டு விரல் நகத்தை வேண்டுமென்றே கடித்துக் கொண்டாள். சுண்டு விரல் சுண்டிக் கொண்டே போனது.

அதன் பிறகு அவளின் பார்வை மாறி இருந்தது. கடைக்கு செல்கையில்… மினி பஸ்ஸில் செல்கையில்…கோவிலுக்கு செல்கையில்… ஆற்றுக்கு செல்கையில்…. எதிரே வரும்…. போகும்…. ஆண்களை துருவி துருவி பார்த்தாள். அனிச்சையாக அவர்களின் கால்களை தேடத் துவங்கினாள். அவளுக்கு அவளின் கால்கள் வெடித்து விடும் போல் இருந்தது. தலையில் கால்கள் முளைப்பது போல தோன்றியது.

“மட்ட மத்தியான நேரம்… கருநாகம் வெயில் காய வர்ற கருவேலங்காட்டுக்குள்ள ரெண்டு ஆம்பளைங்க ஒட்டு துணி இல்லாம…. எப்படி…..!” அவளின் உடல் தனித்து நடுங்கியது.

அந்த புதரின் தலை மேட்டிலேயே கிடந்த அவர்களின் துணிகளை ஒரு முறை ஞாபகக் கண்களுக்கு கொண்டு வந்தாள். அந்த பிங்க் வண்ண சட்டையை அடிக்கடி பார்த்தது போல தான் இருந்தது. நீல வண்ணம் சாயம் போன கைலி. யார் அது… நன்றாக பழகிய ஆடை தான் போல. மனம் உருட்ட உருட்ட உருள மறுத்து…….நின்று கொண்டிருந்த நினைவுகள் முழுக்க நிர்வாணமே அப்பிக் கிடந்தது. காலத்தை கடந்து அந்த புதருக்குள் எட்டிப் பார்த்தாள். அங்கே முகமூடி கொண்ட இருவர் ஒருவர் மீது ஒருவரென ஆக்கிரமித்துக் கிடந்தார்கள்.

அவர்களிடம் கெஞ்சினாள்….

“தயவு செய்து உங்க முகத்தை காட்டுங்களேன்…”

அவர்கள் பயங்கரமாக சிரித்து விட்டு அவர்களிடம் இருந்து இன்னும் இரண்டு உடல்களை திறந்தார்கள். தலையை அழுந்த பிடித்தபடி எழுந்து அமர்ந்தாள் குயிலி. அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

“ஏன் இந்த அசிங்கத்தை நினைச்சிட்டே இருக்கேன்… என்னாச்சு எனக்கு…” அவளாகவே அவளை அறைந்து கொண்டாள். சிலுவையில் அறையவும் இருவர் வேண்டுமே… தான் ஒருத்தி என்ன செய்ய முடியும்….எங்கிருந்தோ வந்த பெருந்துக்கம் அவளை கப்பியது.

அந்த கால்களில் பரவிக் கிடந்த ரோமங்கள் தன் தந்தையின் கால்களை நினைவூட்டின. தந்தை வரும் போதும் போகும் போதும் கால்களையே பார்த்தாள். அவள் மீதே அவளுக்கு வெறுப்பு வந்தது. என்ன மாதிரி பிசாசு இது. ஏன் இப்படி பாடாய் படுத்துகிறது. இரவில் ஆண்கள் குடித்து விட்டு சீட்டாடும் இடங்களில் ஒளிந்திருந்து பார்க்க தொடங்கினாள். அவர்கள் குடித்தார்கள். சீட்டாடினார்கள். ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அடித்துக் கொண்டார்கள். கட்டி அணைத்தபடி தூங்கி போனார்கள். பின்னிரவில் வந்த ரீட்டாவுடன் பிணைந்து கொண்டார்கள். ஆனால் யாருமே காட்டில் செய்ததை போல எதுவும் செய்ய வில்லை. அவள் ஏமாந்து போனாள். திண்ணையில் தூங்கும் நண்பர்கள்… கோவில் வராண்டாவில் தூங்கும் பெருசுகள்…. என்று தேடி தேடி அவள் இரவெங்கும் தூங்கா வெளிச்சத்தில் சுற்ற துவங்கின. நட்சத்திரங்கள் எரிக்கும் இரவில் வெண்ணிலவாய் கொந்தளித்துக் கிடந்தாள்.

பால்காரன்… பேப்பர்காரன்… தண்ணி வண்டிக்காரன்… வீட்டுக்கு வந்த மாமா… அண்ணன்… தம்பி… நண்பன்… கடைவீதியில் எதிர் படும் பக்கத்தூர்காரர்கள்…தெரிந்தவர் தெரியாதவர் என்று எல்லார் கால்களிலும் அவள் அந்த கருவேலங்காட்டுக்குள் தொலைத்த கால்களை தேடினாள். மனிதனுக்கே உண்டான ஆழ்மன குழப்பத்தில் அவளின் கண்கள் கால்களையே மனிதனாக நம்பியது. சில போது தன் கால்களே ஆணின் கால்களாக மாறுவதாக நம்பி கத்தி கூச்சலிட்டாள். ஒரு நாள் அதிகாலை கனவுக்கும் நினைவுக்கும் இடையே தோன்றிய சலனமற்ற நிறத்தினூடாக….பட்டென்று தூக்கு கயிறு அறுந்து விழுந்து அருவா முனையில் கழுத்தறுபட்டதை போல மூச்சு திணறி எழுந்தமர்ந்தாள்.

குயிலிக்கு பைத்தியம் பிடித்து விட்டது போல தான் இருந்தது……அல்லது பிடித்தால் தேவலாம் போல இருந்தது.

என்ன மாதிரியான குழப்பம் இது……?

“இதெல்லாம் சகஜம். எனக்கு தெரிஞ்சு நாய் கூடயே வெச்சுகிட்ட மனுசங்க எல்லாம் இருக்காங்க… இத போட்டு ஏன் குழப்பிக்கற… விட்டுட்டு வேலைய பாரு” என்று பக்கத்துக்கு வீட்டு அருக்காணியக்கா கூறியதில் கொஞ்சம் தெளிவு கிடைத்தாலும்…அந்த இருவர் யாரென்று தெரிந்து கொள்ள ஏன் இத்தனை ஆர்வம் காட்டுகிறேன் என்று அவளை அவளே கேட்டுக் கொண்டாள். எந்த கேள்விக்குத்தான் தன் வாழ்க்கையில் இது வரை சரியான பதில் கிடைத்திருக்கிறது இதற்கு கிடைக்க என்று தன்னை தானே நொந்தும் கொண்டாள்.

“ஒரு வேள ஊர் பெரியவராக இருப்பாரோ… சாக்கடை அள்ளும் சக்தியாக இருப்பனோ….தனக்கு இன்னமும் ரூட் விடும் காளியாக இருக்குமோ…இரண்டாம் தாரமா கட்டிக்க பொண்ணு கேட்ட புருசோத்தமனா இருக்குமோ…?” அவள் யோசித்துக் கொண்டே விறகு சுமந்து சென்று கொண்டிருந்தாள்.

இன்றும் அதே புதருக்குள் நான்கு கால்கள் பின்னிக் கிடந்தன. வேண்டுமென்றே கண்ணில் பட்ட இரு கால்களில் மூன்று மாதங்களுக்கு முன் தூக்கிட்டு செத்த தன் கணவன் பிணத்தில் கட்டியிருந்த பெரு விரல் கட்டு அவிழ்ந்திருந்தது போல தான் இருந்தது. ஏனோ எட்டி பார்க்க தோன்றவில்லை. நடுங்கிக் கொண்டே எல்லா கேள்விக்கும் விடை கிடைத்தது போல….கண்டும் காணாமல் வேகமாய் நடக்கத் தொடங்கினாள். கால்களின் முகமூடி மெல்ல அவிழ்ந்து கொண்டிருந்தது.

அவளுக்கு நான்கு கால்கள் இருப்பதாக நம்பிய கருவேலாங்காடு கண்ணுக்கெட்டும் தூரம் வரை வறண்டு கிடந்தது. வேக வேகமாய் நடக்கும் தனக்கு கால்களே இல்லை என்று நம்பத் தொடங்கினாள் குயிலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *