பாம்பு வாலை பிடித்தால்..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2024
பார்வையிட்டோர்: 570 
 
 

அந்த கேள்வியை கேட்டவுடன் என் கையில் இருந்த விஸ்கி கூட சல சலத்தது. என்ன என்ன சொன்னீர்கள் குழறலுடன் வார்த்தைகள் வெளி வந்தன.

உங்க எஜமானியம்மாவ அதாவது என்னோட சம்சாரத்தை உன்னால கொல்ல முடியுமா?

சொன்ன சேட்ஜியும் அதிகமாகவே போதையில் இருந்ததால், நான் அவர் கையை அழுத்தி பிடித்து, சும்மா..சும்மா..தமாசுக்குத்தானே சொல்றீங்க சேட்ஜீ..

ஏய் கைய விடு.. எழுந்தவர் நிற்க முடியாமல் தொப்பென்று அதே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டவர் உங்கிட்டே சும்மா சொல்றதுக்கு நீ என்ன என்னோட பிரண்டா? ஆப்ட்ரால் நீ என்னோட ‘எம்பிளாயி’ புரியுதா?

ராஸ்கல் அப்பொழுதும் முதலாளி புத்தியை காண்பிக்கிறான், பல்லை கடித்து கொண்டவன் சரி..சரி..நீங்க என்னோட முதலாளிதான் அதுக்காக எஜமானியம்மாள தீர்க்க சொல்றது ரொம்ப தப்பு..

தப்பு..ரைட்டு..இதை பேசறதுக்கு உனக்கு ரைட்ஸ் கிடையாது, நீ என்னோட எம்பிளாயி, நான் சொல்றதை செய்யறதை மட்டும் உன் வேலை புரியுதா?

ஏறிய போதை எனக்கு இறங்க ஆரம்பித்து விட்டது. இவனின் நிறுவனத்தில் கடைசி நிலை ஊழியனாய் இருப்பவன் ஒரு வருடம் திட்டமிட்டு மெல்ல மெல்ல இவனது வட்டத்துக்குள் வந்து ஒன்றாய் உட்கார்ந்து தண்ணி அடிக்கும் அளவுக்கு வந்து விட்டோம். இதை கெடுத்து கொள்ள கூடாது, நானும் ஊரில் பெரிய ஆளாய் வருவேன்னு சவால் விட்டு வந்திருக்கோம். இருந்தாலும் அவ்வப்பொழுது கேவலப்படுத்தி விடுகிறான். சகித்துக்கொள்ள வேண்டும்.

ஓ.கே. சேட்ஜி, பட், இப்ப அதை பத்தி பேச வேணாம், நாளைக்கு தெளிவா இருக்கும்போது பேசலாம், இப்ப நான் போலாமா? கேட்டு விட்டு அவனை பார்க்க உட்கார்ந்த நிலையிலேயே பக்கத்தில் இருந்த டேபிளின் மேல் தலை சாய்ந்து தூக்கத்துக்கு போயிருந்தான். மீண்டும் மனதுக்குள் ஒரு கெட்ட வார்த்தையை உபயோகித்து திடீருன்னு குண்டை தூக்கி போட்டு தூங்கறான் பாரு, அங்கிருந்து விலகினேன்.

மறு நாள் அலுவலகம் சுறு சுறுப்பாய் இருந்த்து, அந்த அலுவலகத்துக்குள் முப்பது பேர் இருக்கலாம். சேட்ஜியின் மனைவி தன் ஏராளமான உடம்புடன் உள்ளே வந்தாள். அவ்வளவுதான் அலுவலகம் ஒரு இறுக்கத்துக்கு போனது. உள்ளே நுழைந்தவள் அப்படியே நின்று ஒவ்வொரு டேபிளையும் உற்று பார்த்தாள். அலுவலகம் என்பது ஒரு பெரிய ஹால் நடுப்பகுதி ஓரத்தில் இவளது அறை. சுற்றிலும் கண்ணாடி மறைப்புத்தான். அங்கிருந்தே எல்லோரையும் பார்க்க முடியும், என்றாலும் அவள் வெளியில் நின்று எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டுத்தான் உள்ளே நுழைவாள்.

அப்படி அவள் பார்க்கும் பார்வை எங்கள் எல்லோருக்கும் உள்ளுக்குள் ஒரு பூச்சி ஊர்வது போலிருக்கும்.

பார்த்துக்கொண்டே வந்தவள் கடை கோடியில் ஒடுங்கி உட்கார்ந்திருந்த என்னை கை அசைத்து வர சொன்னாள். அவ்வளவுதான் என் உடம்பு அப்படியே நடுக்கத்துக்கு போனது. போச்சு, இந்த சேட்ஜி ஏதாவது என்னை பற்றி உளறி விட்டானா?

பலி ஆடு போலே அவள் அருகில் போனேன், உள்ளே வா, சைகையில் சொல்லி விட்டு அவள் நாற்காலியில் சென்று ‘தொம்’ என்று உட்கார்ந்தாள். உண்மையிலேயே அந்த நாற்காலி அவளது எடையை தாங்குவது அதிசயம்தான் மனதுக்குள் நினைத்தாலும் பயபக்தியுடன் கையை கட்டி எதிரில் நின்றேன்.

இன்னைக்கு சாயங்காலம் வீட்டுக்கு வா, சொல்லி விட்டு ‘போ’ என்று சைகையை காட்டினாள்.

சண்டாளி இதை சொல்ல என்னை அங்கிருந்து இங்கு வர சொல்லி அரை மணி நேரம் கையை கட்டி நிற்க வைத்து “இன்று போய் நாளை வா” என்பது போல கையை காட்டுகிறாள். மனதுக்குள் கருவினாலும் புன்னகையை சிந்தி ‘யெஸ் மேடம்’ தலையசைத்து விட்டு அவள் அறையை விட்டு வெளியே வந்தேன்.

ஒரு மணி நேரம் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தவள் மீண்டும் எல்லோரையும் பார்த்து குறிப்பிட்டு என்னை பார்த்து விட்டு அங்கிருந்து அகன்றாள்.

அப்பாடி..அலுவலகம் அந்த மயான அமைதியிலிருந்து வெளி வந்தது. ஒரு மணி நேரத்திலேயே இந்த அலுவலகம் இப்படி நடு நடுங்குதே, அவள் கணவன் பாவம் அந்த சேட்ஜி, அலுவலகத்தில் பக்கத்து பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த பெண்கள் தங்களுக்குள் கிசு கிசுத்து சிரித்துக்கொண்டனர்.

மதியம் மேல் சேட்ஜி உள்ளே வந்தார். மதியம் மூன்றுதான் என்றாலும் அவர் வரும்போது அலுவலகம் வீட்டுக்கு போகும் ‘மூடுக்கு’ வந்திருந்தது. வந்தவர் சேட்ஜி மனைவி சென்ற அறைக்குள் நுழைவதற்கு முன் அங்கிருந்தே என்னை பார்த்து உள்ளே வர சொல்லி சைகை காட்டி விட்டு உள்ளே நுழைந்தார்.

அலுவலகமே என்னை பொறாமையுடன் பார்த்தது, இந்த ‘மதராசிக்கு’ வந்த வாழ்வை பார். வந்து இரண்டு வருடங்கள் தான் இருக்கும் அதற்குள் இருவரையும் கைக்குள் போட்டுக்கொண்டான். அந்தம்மா வரும் போதும் இவனை கூப்பிட்டு ஏதோ சொன்னார்கள். இந்த ஆளும் உள்ளே கூப்பிட்டு ஏதோ சொல்ல போகிறான். அவர்கள் தங்களுக்குள் குசு குசுவென பேசிக்கொள்வது என் பாம்பு காதுகளுக்கு கேட்டது.

மெதுவாய் நடந்து (சேட்ஜியம்மா)கூப்பிடும்போது இருந்த பயம் படபடப்பு இல்லாமல் அறைக்குள் நுழைந்தேன். ஏதாவது மனைவியிடம் உளறி என்னை காட்டி கொடுத்து விட்டானா? அநியாயமாய் என் வேலைக்கு நானே உலை வைத்து கொண்டேனா? எவ்வளவு நிதானமாய் நெருங்கி வந்தோம், அதற்குள் இப்படி ஒரு குழப்பம் மனதுக்குள் இவ்வளவு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் கால்கள் தானாக அவரது அறைக்குள் சென்றது.

உட்கார்ந்த நிலையில் என்னை நிமிர்ந்து பார்த்த சேட்ஜி யோசிச்சு பார்த்தியா, நான் சொன்னதை பத்தி.?

நான் எதுவும் புரியாதது போல் முகத்தை வைத்து நின்றேன்.

முகத்தை பார்த்தவர் என்ன மறந்துட்டியா? நேத்து உனக்கு ஒரு வேலை சொன்னேனே?

இன்னைக்கு சாயங்காலம் உங்க மிஸஸ் என்னைய வீட்டுக்கு வர சொல்லியிருக்காங்க, எதுக்குன்னு தெரியலை, நீங்க ஏதாவது என்னை பத்தி சொல்லிட்டீங்களா? உங்க கூட சேர்ந்து தண்ணி அடிக்கிறது, இல்லை வேற ஏதாவது?

இந்த வார்த்தை சேட்ஜியை ஆச்சர்யப்படுத்தி இருக்க வேண்டும். உன்னை வர சொல்லியிருக்காளா? எனக்கு தெரியாது, நான் உன்னை பத்தி இதுவரைக்கும் எதுவும் சொன்னதில்லை. முகம் யோசனையானது.

இப்ப நான் என்ன செய்யறது சேட்ஜி, அம்மாவை பார்க்க போயிட்டு வர்றேன்,

சரி நீ போய் என்ன சொல்றான்னு பாரு, அதுக்கப்புறம் நான் சொல்றேன், நீ போ உன் சீட்டுக்கு. யாராவது கேட்டா எதுவும் சொல்லிடாதே, புரிஞ்சுதா?

சரி என்று தலையாட்டி வெளியே வந்தேன். நான் போகும் பாதை சரியாய் இருந்தால் முதலாளி வீட்டு நட்பே கிடைக்கும். அதை வைத்து ஊருக்கு போயி,

நான் …எண்ணத்தில் எண்ணும்போதே முகம் புன்னகைக்க, என் முகத்தை பார்த்த மற்ற அலுவல்க ஊழியர்கள் பொங்கி பொசுங்கினர் என்பதை என்னால் மனதுக்குள் உணர முடிந்தது.

வீட்டில் சாதாரணமாய் இருந்தாள் முதலாளியம்மாள். உடையிலும்தான். ஆனால் உட்கார மட்டும் சொல்லவில்லை. அவள் எதிரில் நின்று கொண்டுதான் இருந்தேன்.

இளமையில் கண்டிப்பாய் அழகாய் இருந்திருக்க வேண்டும், இருபது வருட குடும்ப வாழ்க்கை, வயதை அலங்காரங்கள் மறைத்தாலும் சில நேரங்களில் காட்டி விடுகிறது

நீ எங்கிருந்து வர்றே? நான் “சஹதாரா”வுல இருந்து வர்றேன் ம்..எப்படி வர்றே?

டிரெயின்தான்..பவ்யமாய் சொன்னேன்.

இப்பவெல்லாம் சேட்ஜீ கூட சுத்தறயாமா? கேள்வியில் கோபம் அவ்வளவு இருந்ததாக தெரியவில்லை.

அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, ஒரு சில நேரத்துல என்னைய கூப்பிடுவாரு, வரலை அப்படீன்னு சொல்ல முடியாது, முடிந்த வரை குரலை மென்மை படுத்தினேன்.

அப்ப தினமும் அவர் கூட தண்ணி அடிக்கிறே? அப்படித்தானே? ஐயையோ அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை, அவர் கொஞ்சம் அதிகமா போனா வேணாமுன்னு சொல்லுவேன்.

எப்படி இப்படியா? திரும்பி பார்

திரும்பியவன் அதிர்ந்தேன். அங்கிருந்த கணிணி திரையில் நாங்கள் இருவரும் ஒட்டி உரசிக்கொண்டு சியர் சொல்லி குடித்துக்கொண்டிருந்த போட்டோ இருந்தது.

போச்சு..போச்சு..மாட்டிக்கொண்டேன், பேசாமல் தலை குனிந்து கொண்டேன். கிழவி எமகாதகி, சுற்றி வர ஆட்களை வைத்திருக்கிறாள். மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சேட்ஜி இவளிடம் தப்பிப்பது மிகவும் கஷ்டம்தான்.

நிமிர்ந்து பார்..அவளின் அதிகாரமான குரலில் அடங்கி நிமிர்ந்தேன். இங்க பாரு, அவர் எப்படியோ கெட்டு ஒழிஞ்சு போறதை பத்தி எனக்கொண்ணும் கவலையில்லை. வேற எந்த தொடர்பும் இல்லாம பாத்துக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு. புரிஞ்சுதா?

நான் புரியாதது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டேன்.

நீ ஒவ்வொரு நாளும் அது என்ன பண்ணுதுண்ணு எனக்கு தகவல் சொல்லிகிட்டே இருக்கணும் புரியுதா?

மனம் துள்ள ஆரம்பித்தது, ஓ முதலாளி அம்மாவின் நட்பு வட்டத்துக்குள் வந்து விட்டேன். சரிங்க..தலையாட்டலில் ஒரு சந்தோஷம் இருந்தது. வேலைக்காரி கொடுத்த ஜூஸை குடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

மறு நாள் மதியம் சேட்ஜி பிடித்துக்கொண்டார். என்ன சொன்னாள் உன் முதலாளி,

உங்களுடன் சுற்றுவது அவர்களுக்கு தெரிந்து விட்டது, நான்தான் உங்களை கெடுப்பதாக சத்தம் போட்டாங்க, இதை சொன்னதும் நம்பாததை போல பார்த்தார் சேட்ஜி, நீயே வந்து இரண்டு வருஷம்தான் ஆகுது, அதுக்கு முன்னாடி இருந்து நான் இப்படித்தான் இருக்கறேன், அப்படீங்கறப்ப உன்னால கெட்டு சுத்தறேன் அப்படீங்கறதை நான் நம்பலே, உண்மைய சொல்லு அவ என்ன சொன்னா?

இது தான் சேட்ஜி, கண்டிப்பா வேறு எதையும் சொல்ல்லை, உறுதியாய் சொன்னதை நம்பாமல் சரி என்று தலையாட்டியவர், நான் சொன்னதை எப்ப நடத்த போறே?

இவர் என்ன நம்மளை தொழில் முறை கொலைகாரனாக்க பார்க்கிறார். சேட்ஜி தயவு செய்து இப்ப எதுவும் வேணாம், அவங்க ஏற்கனவே என் மேலே ‘டவுட்ல’ இருக்காங்க, வீணா என் வேலை போயிடுச்சுன்னா, கண்டிப்பா உங்கனால அவங்க கிட்டே சொல்லி வேலை வாங்கி தர முடியாது.

ஒரு நிமிடம் உற்று பார்த்தவர் சரி இன்னைக்கு சாயங்காலம் ரெடியா இரு, ஹோட்டல் ‘மஹீமா’ போலாம். நான் முதலாளி அம்மாவுக்கு விசுவாசியாய் மாலை சேட்ஜியுடன் கிளம்புமுன் தகவல் தெரிவித்து விட்டேன்.

இரவு திரும்பு முன் சேட்ஜி நல்ல போதையில் இருந்தார். காரை நான் ஓட்டுவதாக சொல்லியும் நீ உன் வேலையை பார் சொல்லி விட்டு வண்டியை எடுத்தவர், அந்த அகால வேளையில் காரை தாறுமாறாக ஓட்ட நான் பயந்து சேட்ஜி..சேட்ஜி..உலுக்கி வண்டியை நிறுத்த முயற்சி செய்வதற்குள் சாலை ஓரத்தில் நெருப்பை மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தவர்கள் மேல் பாய்ந்து அங்கிருந்த காம்ப்வுண்ட் மேல் மோதி நின்றது.

காரை தாறுமாறாக ஓட்டி சாலை ஓரத்தில் படுத்திருந்த இருவர் மீது மோதி பலத்த காயத்தை ஏற்படுத்திய தமிழகத்தை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் கைது. இது அந்த டெல்லி மாநகர் பத்திரிக்கையில் வெளி வந்த செய்தி

டெல்லி பிரதான சாலையில் அமைந்திருந்த ஒரு தனியார் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்த “குமார்” என்பவர் தனது முதலாளியை வைத்து காரை ஓட்டி வந்த பொழுது விபத்துக்குள்ளாக்கி விட்டார். அவரை பரிசோதித்ததில் அவர் குடித்திருந்தார் என்பது நிரூபணமாகி, குற்றவாளியை சிறையில் அடைத்துள்ளார்கள்.

நான் ஒரு வக்கீல் வைத்து வாதாடும் அளவுக்கு வசதிகள் இல்லையென்று சொன்ன பின்னால் தமிழகத்தை சேர்ந்த ஒரு வக்கீல் எனக்காக பரிதாப்ப்பட்டு வாதாட முன் வந்தார்.

அவர் என்னை சிறையில் சந்தித்த பொழுது என்னப்பா உன் முதலாளியம்மா வேலை செய்யறவங்க செய்யற தப்புக்கெல்லாம் நிர்வாகம் பொறுப்பேத்துக்க

முடியாது அப்படீனுட்டாங்க. சார் நீங்க சேட்டையாவது பாருங்க சார், உண்மையிலே காரை அவருதான் ஓட்டிட்டு வந்தார்.

அது எல்லாருக்கும் தெரியுமப்பா..ஆனா ‘கேசே’காரை நீ ஓட்டிட்டு வந்ததாகத்தான் போட்டிருக்காங்க, உனக்காக அந்த சேட்ஜியை வேணா பாக்கறேன்.

மறு நாள் ‘சாரிப்பா’ அவரு இந்த கேசுல் உனக்கு உதவ முடியாத நிலைமையில இருக்காராம். வேணா பண உதவி பண்ண்றேன், அதுவும் எங்க அலுவலகத்துல வேலை செஞ்சதுனால அப்படீன்னு சொல்றாரு.

சரியான துரோகி சார், சம்சாரத்தை கொலை பண்ணுன்னு எங்கிட்ட எப்ப பார்த்தாலும் சொல்லி கிட்டே இருப்பாரு, அதையெல்லாம் வெளியில சொன்னா என்ன நடக்கும் சார்.

அதுதாம்ப்பா அவரும் சொன்னாரு, நீ அடிக்கடி’முதலாளியம்மாவ கொலை’ பண்ணிடுவேன்னு அவர் முன்னாடியே சொல்லிகிட்டு இருப்பியாம். ‘ஆமான்னு’ சொல்றதுக்கு சாட்சிக வேற வச்சிருக்காரு. எத்தனையோ தடவை உன்னை மன்னிச்சு விட்டிருக்காராம். இதைய நான் பத்திரிக்கையில சொன்னா இன்னும் கேஸ் ஸ்ட்ராங்காயிடும் அதனால வேண்டாம்னுட்டு இருந்துட்டாராம்.

சார் இது எதுவுமே நிஜமில்ல சார், அந்த ஆள்தான் அப்படி சொல்லிகிட்டிருந்தான், இப்ப அப்படியே பிளேட்டை மாத்திட்டான்.

எனக்கும் தெரியுது, ஆனா என்ன பண்ணறது அவங்க பெரிய பணக்காரங்க. அதுதான் எடுபடும்.

தலையிலடித்துக்கொண்டேன்..பணக்காரங்க தொடர்பு கிடைச்சா, பெரிய மனுசனா ஆயிடலாம், அதை வச்சு நம்ம ஊர்ல பெரிய இடத்துல பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணலாமுன்னு நினைச்சேன்.

பணக்காரனின் நட்பும்‘பாம்பு வாலை புடுச்ச கதையும்” ஒண்ணுதான். வக்கீல் சிரித்து எப்படியாவது கேசுல குறைஞ்ச தண்டனையில தப்பிக்க முயற்சி பண்ணி பார்க்கிறேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *