(தாம்)பத்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2021
பார்வையிட்டோர்: 4,483 
 

குடும்பத்தை எவ்வாறு நடத்துவது நாட்களை எப்படி நகர்த்துவது..? என்று புரியவில்லை.

மனைவி பவித்ரா இப்படி பிடிவாதம் பிடிப்பாள் என்றோ..முரண்டு செய்வாள் என்றோ கனவிலும் நினைக்கவில்லை கதிரவன்.

ஆளை ஒரு பிடி பிடித்து விட்டு வெளியே வந்தான். மனசு துவண்டு வலிக்க தனியே அமர்ந்தான்.

ஒரு சில நாட்களாக வீட்டில் ஓயாத அக்கப்போர்.

வாக்குவாதம், சண்டை! தாம்பத்தியத்தில் திடீர் இடைவெளி!!

எல்லாம் சந்தேகப் பேயால் வந்த வினை.!!

திடீரென்று….ஒரு நாள்

குழையக் குழையப் பேசும் மனைவி பவித்ரா முகத்தை இறுக்கிப் பேச்சைக் குறைத்தாள்.

கட்டிலில் ஒட்டுறவு இல்லாமல், திரும்பிப் படுத்தாள்

கடனே என்று சாப்பாடு பரிமாறல்!

‘ஏன்.. எங்கே குறை..? என்ன இடறல்…?! எதற்கு இந்த இடக்கு, மடக்கு..?’ என்று குழம்பிய கதிரவன் இரண்டு நாட்கள் கவனித்து பொறுத்து….

“ஏன்..?” கேட்டான்.

பவித்ராவிடமிருந்து பதில் இல்லை.

“சொல்லு…?” அதட்டினான்.

“நீங்க சுத்தமா இல்லே..”

“புரியலை..?!”

“என் கட்டிலை ஒருத்தி பங்கு போடுறாள்…”

துணுக்குற்றான்

“யாரவள்..?!” புரியாமல் பார்த்தான்

“உங்க அந்தரங்க காரியதரிசி!”

இது ஆதாரமில்லாத குற்றச் சாட்டு! இவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

“வீண் சந்தேகம். பாவம் அவள் மேல் பழி போடாதே..!” சொன்னான்.

“பொய் சொல்றீங்க. நீங்க அந்தரங்க காரியத்திரிசியை வைச்சிருக்கிறதுனாலதான் தினம் அலுவலகத்துக்குப் பூ வாங்கிப் போறீங்க…”

“ஏய்..! அது அலுவலக அறையில் இருக்கும் சாமி படத்துக்கு..”

“சாமிக்குனுன்னு சொன்னா நான் நம்பிடுவேனா…? அதுக்கு நாலு முழம் பூவா..?”

“பவித்..! என் இருக்கைக்குப் பின்னாடி நாலு பெரிய சாமி படங்கள் இருக்கு”

“நீங்க என்ன சொன்னாலும் நான் நம்பமாட்டேன்!”

“இதுக்குத் தீர்வு..?”

“கறை பட்ட உங்களோட நான் கட்டில்ல இருக்க முடியாது. கட்டின தோசத்துக்கு வீட்ல ஒண்ணா இருப்போம். ஆக்கிப் போடுறேன் அவ்வளவுதான்!”

“வாழ்க்கை நல்லா இருக்குமா பவித்..?!”

“அதான் நல்லா இல்லாம போய்ட்டீங்களே..?! அப்புறம் எப்படி நல்லா இருக்கிறது.?”

“எப்படி உனக்கு இந்த சந்தேகம் வந்துச்சி..?”

“தினம் வண்டிப் பெட்டியைத் திறந்தால் பூ வாசம். அத்தாட்சி! சந்தேகம் வராமல் என்ன செய்யும்…?”

“இது தப்பு பவித்.! நான் அதிகாரி. எனக்கு ஒரு காரியதரிசி இருக்கிறதும் கட்டாயம். அலுவல் சம்பந்தமாய் நாங்க தனியே பேச சந்தர்ப்பங்கள் அதிகம். இதெல்லாம் வச்சுக்கிட்டு நீ அப்படி இப்படின்னு கற்பனை சந்தேகப்படுறது தப்பு. எல்லாத்தையும் விட ஒரு முக்கிய காரணம். என் காரியதரிசிக்கு கணவன், புள்ளைக் குட்டிங்க, குடும்பம் இருக்கு. உன் வீண் சந்தேகம் அந்த வீட்டு காதில் விழுந்தால் அவுங்க வாழ்க்கையும் பாழாகும். வீண் பழி வேணாம்” பதமாய்ச் சொன்னான்.

பவித்ரா கேட்பதாய் இல்லை.

திரும்பவும் இரண்டு மூன்று நாட்கள் பொறுமை.

நிலைமை மாறவில்லை.

“வேணாம் பவித்ரா! வீண் சந்தேகம் வாழ்க்கையைப் பாழடிச்சுடும். மாறிக்கோ”

“நீங்க மாறுங்க…”

“வேணாம் ! நான் திருப்பி அடிச்சா நீ தங்கமாட்டே”

“என்ன அடிப்பீங்களா…?”

“கை நீட்டுறது காட்டுமிராண்டித்தனம்…! அதை விட பயங்கரம் நாக்கு. அது போதும்”

“என்ன சொல்வீங்க…?”

“சொல்றேன். தான் தப்பிக்க எதிரி மீது தப்பு போடுவாங்க. நீ என்ன தப்புப் பண்றே..?”

“அத்தான் !!..” அலறினாள்.

“உனக்கு மட்டும் வலிக்கும். எனக்கு வலிக்காதா…?”

“நான் என்ன தப்பு பண்ண முடியும்…?”

“எவ்வளவோ பண்ணலாம்..?”

“எப்படி…?”

“நான் சோத்து மூட்டையைக் கட்டிக்கிட்டு 8.45க்கு வீட்டை விட்டு வெளியே அலுவலகம் சென்றால் 6.00 க்குத்தான் திரும்பல். கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம். இந்த ஒன்பது மணி நேரமும் இந்த வீட்டில் நீ வைத்ததுதான் சட்டம். தனிக்குடித்தனம். எதிர்த்துக் கேட்க ஆள் கிடையாது. என்ன பண்ண முடியாது?”

“இது அபாண்டம்! பழிக்குப் பழியாய் என் வாயை அடைக்க என் மேல் பழி போடுறீங்க”

“சரி. அப்படியே இருக்கட்டும்!”

பவித்ரா தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்!

‘என்ன செய்ய…?’ கதிரவனுக்குள் சிந்தனை ஓடியது.

பவித்ரா அடுத்து என்ன செய்வாள்..? நினைத்தான்.

பெட்டியில் துணிமணிகளை அடுக்கிக்கொண்டு பத்து தெருக்கள் தள்ளி இருக்கும் தாய் வீடு செல்ல வேண்டும். வழி..? என்று நினைக்கையில்தான் இவனுக்குள் அந்த யோசனை உதித்தது.

விருட்டென்று எழுந்து வீட்டினுள் சென்றான்.

அறைக்குள் நுழைந்து தன் துணிமணிகளை எடுத்து ஒரு சூட்கேசில் அடுக்கி மூடி…வெளியே வந்தான்.

பவித்ரா இன்னும் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தாள்.

அவள் முன் நின்றான்.

“பவித்ரா! தாய்க்குப் பின் தாரம்ன்னு சொல்வாங்க. தாரத்துக்குப் பின் யாருன்னு எவருக்கும் தெரியாது. எனக்கு மனைவிக்குப் பின் மாமியார். எனக்குத் தெரிந்த ஒரே வழி அதுதான். நீ எந்த குறை நிறைகளையும் அங்கே வந்து பேசி முடித்துக்கொள். அதுவரைக்கும் நான் இங்கே திரும்பமாட்டேன். !” சொல்லி நகர்ந்தான்.

“அத்தான்!” அழைத்து சட்டென்று அவன் காலை இறுக்கிப் பிடித்தாள்.

“என்ன சொல்லு..?”

“நீங்க உத்தமர்..!”எழுந்து நின்றாள்.

“என்ன நடிக்கிறே..?”

“நடிப்புதான்!! இத்தனை நாட்கள் நடந்த என் கோபம், தாபம், வெறுப்பு எல்லாமே நடிப்புதான். நீங்க உத்தமரான்னு சோதிக்க நான் நடித்த அக்கினி பரீட்சை. இதுக்கு முடிவு எப்படி முடிக்க..? ன்னு குழம்பிக்கிட்டிருந்தேன். இப்போ..தாய்க்குப் பின் தாரம். எனக்கு மனைவிக்குப் பின் மாமியார்ன்னு சொல்லி முடிச்சுட்டீங்க. என் தாயை தாயாய் நினைக்கும் நீங்க சரியான உத்தமர். என் வீண் சந்தேக நடிப்புக்கு உங்களிடம் மனதார மன்னிப்பு கேட்கிறேன். மன்னிச்சுடுங்க.” சொல்லி கணவன் மார்பில் சாய்ந்தாள்.

கதிரவன் அவளைப் பரிவுடன் அணைத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *