கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 3, 2024
பார்வையிட்டோர்: 2,085 
 
 

வங்கிப்பணியில் இருந்த வாசு தேவனுக்கு சிறு வயதிலிருந்து தான் இருந்த கட்சி, எம்.எல்.ஏ சீட் கொடுத்து பண உதவியும் செய்ய, தேர்தலில் போட்டியிட்டு ஆளும் கட்சி மந்திரியான வேட்பாளர் பிரம்மனைத்தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். தனது கட்சி ஆட்சியைப்பிடித்ததால் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியும் ஆகிவிட்டார்.

“தேர்தலில் எனக்கு சீட் கொடுத்த கட்சிக்கும், வெற்றி பெறச்செய்த தொகுதி மக்களுக்கும், மந்திரி பதவி கொடுத்த கட்சித்தலைமைக்கும் நன்றி. அரசியல் மூலமாக கிடைக்கும் ஆட்சிப்பதவி என்பதே அவரவர் குடும்பத்தின் தேவைகளை, செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும், சாதாரண மக்களை அடக்கும் அதிகாரம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் என்பது மக்களின் தேவை அறிந்து சேவை செய்யும் ஓர் அமைப்பாகும்” என்று நன்றி கூறும் மேடையில் பேசிய போது கூட்டத்திலிருந்து கைதட்டல் மிக பலமாக வந்ததைக்கண்டு அங்கிருந்த கட்சித்தலைவரின் முகம் வெளிறிப்போனது.

உதவியாளர் மூலமாக கொடுக்கப்பட்ட துண்டு சீட்டில் ‘போதும் நிறுத்து’ என ஒருமையில் எழுதப்பட்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாசு தேவன், தனது பேச்சை முடித்துக்கொள்வதாகச்சொன்னவுடன் கூட்டம் பெருமளவு கலைந்து போனது தலைமைக்கு அதிர்ச்சியைத்தந்தது.

“என்னையா நீயி. படிச்சவன், மந்திரி பதவி கொடுத்தா விசுவாசமா தேர்தலுக்கு கொடுத்த பணத்த திருப்பிக்கொடுப்பேன்னு நெனைச்சா, சேவை கீவைன்னு ஓவரா போறே. உனக்கென்ன பெரிய காந்தி, காமராசர்னு நெனைப்பா? அந்தக்காலத்துல இருந்த அரசியல் வேற, இன்னைக்கு இருக்கிற அரசியல் வேற. கட்சி பணம் கொடுக்காம இருந்திருந்தா உன்னோட சொந்தப்பணத்துல இந்த எடத்துக்கு நீ வந்திருப்பியா? நிக்கிறவன் கேடியான்னு மக்கள் பார்க்கிறதில்ல. கோடியக்கொட்டுவானான்னு தான் பார்க்கிறாங்க. ஆளுங்கட்சி மந்திரிய தோக்கடிச்சிட்டதாக பெருமை பேசினியாமே…? இஷ்டப்பட்டு வாங்குன எஸ்டேட்ட கஷ்டப்பட்டு வித்து ஓட்டுக்கு பணம் நாங்கொடுத்து உன்ன ஜெயிக்க வெச்சது எனக்குத்தானே தெரியும்… அத முதல்ல திருப்பிக்கொடுக்கப்பாரு” என தலைவர் கோபமாகப்பேசியபோது தான் தேர்தலில் வெற்றி பெற இவ்வளவு செலவாகியிருக்கிறதா….? என்பதையே தெரிந்து கொண்டவர், கட்சிக்காக சில விசயங்களில் அனுசரித்துப்போனவர், தனக்காக எதையும் சேர்த்துக்கொள்ளாமல் தனது சேவையெனும் கொள்கையில் உறுதியாக இருந்தார்‌.

மீண்டும் தேர்தல் வந்த போது மறுபடியும் வெற்றி பெற்றால் அவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கு முதலமைச்சர் பதவியோ, துணை முதல்வர் பதவியோ கேட்பார் என்று கட்சித்தலைமை எண்ணியதால் சீட் கொடுக்கவில்லை.

சுயேச்சையாக நின்ற என்று சொல்வதை விட தொகுதி மக்களால் நிறுத்தப்பட்ட வாசு தேவன் தேர்தல் பிரச்சாரத்தின் போது உடல்நிலை சரியில்லாமல், பிரச்சாரத்துக்கு வர முடியாமல் மருத்துவமனையில் இருந்தும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மந்திரி பதவியைத்தொடர முடியவில்லை என்றாலும் மக்கள் பணியை அவரால் தொடர முடிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *