கண் மையால் எழுதிய கவிதைகள்!

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 23,284 
 

பெண்ணே… நான் பிறப்பெடுத்தபோது உனக்காக என்னிடம் ஒரு பரிசுப் பொருள் கொடுத்து அனுப்பப்பட்டது. அது நீ பிறக்கும் முன்பே உனக்காக உருவாக்கப்பட்ட பரிசு.

அதன் மீது முகவரியாக உன் முகம் மட்டுமே வரையப்பட்டு இருந்ததால், உன்னைத் தேடிக் கண்டுபிடிக்க இத்தனைக் காலம் ஆகிவிட்டது.

ஏழு கடல், ஏழு மலை தாண்டி உன்னிடம் நான் வரவில்லை என்றாலும், எண்ணற்ற பிறைகள் தாண்டி, எண்ணற்ற பௌர்ணமிகள் தாண்டி உன்னிடம் பத்திரமாகச் சேர்க்க வந்திருக்கிறேன், அந்தப் பரிசுப் பொருளை.

அதன் பெயர்… காதல்!

எப்போதோ நான் உன்னைக் காதலிக்கத் தொடங்கிவிட்டாலும், இப்போதைக்கு நீ என்னைக் காதலிக்காதே. உனக்கு என்னைப் பிடித்திருந்தாலும் பிடிக்கவில்லை என்பதைப்போலவே நடந்துகொள். நான் ஓயாமல் உன்னைப் பார்த்தாலும், உன் ஒற்றைப் பார்வைக்காக என்னைத் தவிக்க விடு.

நீ எனக்குத்தான் என்று நான் உறுதியாக நம்பினாலும், நீ எனக்கு இல்லையோ என்கிற பயத்தை எனக்குக் கொடு. உன் காதலுக்காக நான் உருக வேண்டும்… பரிதவிக்க வேண்டும்… கண்ணீர் சிந்த வேண்டும். அப்புறமாக என் காதலை ஏற்றுக்கொள்.

அதற்கும் அப்புறமாய் உன் காதலை எனக்குக் கொடு. காதல் என்றால், அதுவும் உன் காதல் என்றால் சும்மாவா?

உன்னைக் கண்டதும் காதல் கொண்டுவிட்டேன். முதலில் உன்னிடம் பேசிப் பழகி, உன்னைப் புரிந்துகொண்டு, நீ எனக்கு ஏற்றவளா என ஆராய்ந்து, பிறகு உன்னைக் காதலித்திருக்கலாம் என்று யாராவது சொன்னால், அவர்களுக்காக நான் காதலிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அது காதல் இல்லை. கணக்கு. அதைத் தவிர, அதில் வேறு இல்லை. ஆனால், கண்டதும் காதல்கொள்வதில்… எல்லாம் இருக்கிறது.

அதுவரையில் இருந்த இடம் தெரியாமல் இருந்த இதயம், உன்னை முதல்முறையாகப் பார்த்ததும் விஸ்வரூபம் எடுத்து ‘இவள்தான்… இவள்தான்’ எனக் கூவியபோது ஆரம்பமானது, கண்டதும் காதலின் மகிமை.

உன் பெயரைத் தெரிந்துகொள்ள நான் பட்ட பாடு, அதைக் கண்டு நீ ரசித்தபோது நான்கொண்ட உவகை, உன் பெயர் தெரிந்த அந்த ஆனந்தக் கணம்… உன் முதல் புன்னகையைப் பெற நான் செய்த சாதனைகள், அதைப் பெற்றபோது வானுக்கும் மண்ணுக்கும் நான் குதித்த குதிகள்…

நான் பேசியபோது நீ பேசாமல் போன இனிய வருத்தங்கள், போனால் போகிறதென்று முதல்முறையாக ‘என்ன’ என்று நீ என்னிடம் பேசிவிட்ட அற்புதப் பொழுது, காதலை வரைந்து நான் எழுதிய வாழ்த்து அட்டையை உன்னிடம் தந்த தருணம், என் காதலை ஏற்றுக்கொண்ட அந்த மகா தருணம்… இதெல்லாம் கண்டதும் காதல் எனக்குத் தந்த பேரின்பங்கள்.

இப்போது சொல்… நான் உன் மீது கண்டதும் காதல்கொண்டது சரிதானே?

இவன் ஏன் இன்னும் நம்மிடம் பேசாமல் இப்படிப் பார்த்துக்கொண்டே இருக்கிறான். பேசுவதற்குப் பயப்படுகிறானோ என்று நினைத்துவிடாதே. பயம் இல்லை. உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற காதல். உன்னைப் பார்க்கத்தானே இத்தனைக் காலமாகக் காத்திருந்தன என் கண்கள். விட்டால், உன்னை அழைத்துப்போய் ஒரு மலை உச்சியில் உட்காரவைத்து, காலத்தை மறந்து பார்த்துக்கொண்டே இருப்பேன்.

இந்த உலகம் முழுவதும் கொட்டிக்கிடக்கும் அற்புதங்களைவிட, அதிக அற்புதங்கள் கொட்டிக்கிடக்கின்றன உன் கண்களில். அதை எல்லாம் பார்க்காமல், உன்னிடம் நான் பேச ஆரம்பித்துவிட்டால், நான் சில நொடிகள் பார்த்தாலே, ‘அப்படிப் பார்க்காதே… இப்படிப் பார்க்காதே’ என்று நீ என்னை அதட்ட ஆரம் பித்துவிடுவாய்.

அதனால்தான், உன்னிடம் பேசத் துவங்காமல் சுதந்திரமாக உன்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

அப்படி உன்னைக் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில், ‘நீ உன் காதலியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக எங்களைக் கட்டித் தழுவ விடாமல் தடுப்பது நியாயமா’ என்று என்னைப் பார்த்துக் கேட்டன என் இமைகள்.

இது என்னடா புதுத் தடங்கல் என்று பதைத்தபடி, என் இமைகளிடம் கேட்டேன், ‘ஏன்… நீங்களும் காதலிக்கிறீர்களா?’ என.

‘ஆம்… பிறந்ததில் இருந்தே நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம். அதனாலேயே நீ விழித்திருக்கும்போது நொடிக்கு ஒரு முறையும், நீ தூங்க ஆரம்பித்தால், கண் விழிக்கும் வரையும் கட்டித் தழுவி முத்தமிட்டபடியே இருப்போம்’ என்றன இமைகள்.

ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால், தம் காதல் தானே வளரும் என்கிற ஆசையில் என் கண்களை மூடி, இமைகளைக் கட்டித் தழுவ விட்டேன்.

உள்ளே ஓங்கி வளர்ந்து காட்சி தந்தாய் நீ.

‘காதலை என்னிடம் நேராகச் சொல்வதற்குத் தயங்கித்தானே, வாழ்த்து அட்டையில் எழுதிக் கொடுத்தாய்’ என்றாய்.

தயக்கம் எல்லாம் இல்லை. ஆணுக்கோ, பெண்ணுக்கோ காதலைச் சொல்வது என்பது வாழ்வில் வரும் மிக மிக அழகிய தருணம். அதை வார்த்தையில் சொன்னால், காற்றில் கரைந்து போகலாம். அதையே அழகாக எழுதிக் கொடுத்தால் எதிலும் கரையாமல், மறையாமல் அப்படியே இருக்கும். அதனால்தான் எழுதிக் கொடுத்தேன்.

கொடுக்கையில் எனக்குத் தயக்கம் இல்லை என்றாலும், வாழ்த்து அட்டைதான் பயந்துபோயிருந்தது… நீ கிழித்துப் போட்டுவிடுவாயோ என்று. நான்தான் அதைச் சமாதானப்படுத்தி, பிறகொரு பெரிய பாடமே எடுத்து, உன்னிடம் கொடுத்தேன்.

‘என்ன பாடம்’ என்றாய் ஆவலாய்.

‘என் காதலி உன்னைத் தொட்டு வாங்கும்போதே, அவள் மேனி எங்கும் ஓர் இனம் புரியாத பரவசத்தை நீ ஏற்படுத்த வேண்டும். வாங்கிப் பிரிக்கும்போது, ஒரு சின்னஞ் சிறிய படபடப்பை அவள் இதயத்தில் உருவாக்க வேண்டும். அவள் வாசிக்க ஆரம்பித்ததும், நீ ஏற்படுத்திய அந்தப் படபடப்பைஅப்படியே மெள்ள மெள்ள ஓர் அபூர்வ இசையாக மாற்றி, அவளை அதில் மிதக்கவிட வேண்டும். அப்போதே, அக்கணமே அவளுக்கு என் மீது காதல் வரச் செய்திட வேண்டும். அதன் பிறகு, நீ சும்மா ஓய்வெடுத்துக்கொண்டால் போதும்’ என்று சொன்னேன். ஆமாம்… நான் சொன்னபடி எல்லாம் அது செய்ததா.

‘செய்தது… செய்தது… ஒன்றே ஒன்றைத் தவிர’ என்றாய் வெட்கத்துடன்.

ஒன்றே ஒன்றைத் தவிரவா… என்ன அது?

‘எல்லாவற்றையும் செய்த பிறகு, நீ சும்மா ஓய்வு எடுத்துக்கொண்டால் போதும் என்று சொன்னதாகச் சொன்னாய் அல்லவா. அதை மட்டும் அது செய்யவே இல்லை. சும்மா… சும்மா… என்னை எடுத்துப் பார் என நச்சரித்துக்கொண்டே இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு ஓடிப்போனாய்.

அதுதானே வாழ்த்து அட்டைகளின் மகிமையே. வாழ்க வாழ்த்து அட்டைகள்!

‘சீக்கிரம் வா… ரோஜா தோட்டத்துக்குப் போக வேண்டும்’ என நான் சொன்னதும் ‘எதற்கு?’ என்றாய்.

‘உனக்காக ஒரு ரோஜாப் பூ பறிக்கப்போன என்னிடம், ‘யாருக்குப் பூ?’ என்று கேட்டது ரோஜாச் செடி. ‘என் காதலிக்கு’ என்றேன். உடனே ரோஜாச் செடி ‘உன் காதலிதான் இந்த ஊரிலேயே அழகாமே. அவளை ஒரு முறை இங்கே கூட்டி வந்தால் என்னவாம்’ என்று கெஞ்சியது. அதனால்தான் கூப்பிடுகிறேன்… வா போகலாம்!’

‘ரோஜாச் செடி உங்கிட்ட பேசிச்சு. இதை நான் நம்பணும்?’ என்றாய் அலட்சியமாக.

‘நீ என்னைக் காதலிக்க ஆரம்பித்த பிறகு, ரோஜாச் செடி என்ன… அழகு தெய்வம் மஹாலட்சுமியே என்னிடம் பேசியதே’ என்றேன்.

‘மஹாலட்சுமியா… என்ன பேசிச்சு?’ என்றாய் இன்னும் அலட்சியமாக.

‘உன் காதலி என்னை மாதிரியே இருக்கிறாளாமே… உண்மையா?’ என்று கேட்டது.

‘இல்லை… இல்லை… நீதான் என் காதலி மாதிரி இருக்கிறாய்’ என்று சொன்னேன். கழுத்தை ஒரு வெட்டு வெட்டி என்னை முறைத்துவிட்டுப் போனது.

‘ஐயோ சாமி… எதுக்கு இப்படி எல்லாம் பேசற… என்ன வேணும் உனக்கு?’

‘வேறென்ன… காதல்தான்.’

‘காதல் என்ன என் கைப்பையிலா இருக்கிறது, நீ கேட்கும்போது எல்லாம் எடுத்துத் தர.’

அது கைப்பையில் எல்லாம் இருக்காது. உன் கையை மட்டும் என் இதயத்தின் மீது வை. என் இதயம் இன்றைக்குத் தேவையான காதலை எடுத்துக்கொள்ளும்!

அதிகாலையிலேயே எழுந்து மொட்டை மாடியில் படித்துக்கொண்டு இருந்தாய். சத்தம் போடாமல் சுவர் ஏறிக் குதித்து உன் அருகில் வந்து, ‘என்ன, இவ்வளவு சீக்கிரம் எழுந்து படிக்கிறே?’ என்றேன்.

‘எக்ஸாம்’ என்றாய்.

‘என்னது, சரஸ்வதிக்கே எக்ஸாமா? எந்த முட்டாள் வெச்சது?’

‘ஐயோ… ஒரு சாமியையும் விட மாட்டியா… உன்னை யாரு விடியக் காலையிலேயே எழுந்து வரச் சொன்னது?’

‘நீதான்…’

‘நானா… உங்க வீடு தேடி வந்து, நான் உன்னை எழுப்பினேனா?’

‘நீ எழுப்பவே வேண்டாம். நீ எழுந்தால் நான் எழுந்துகொள்வேன். நீ தூங்கினால் நான் தூங்கிவிடுவேன். ஏன்னா, நீதான் என் கண்ணாச்சே!’

‘போச்சு… போச்சு… படிச்சது எல்லாம் மறந்துபோச்சு’ என்று சிணுங்கினாய். உன் சிணுங்கலைக் காண எழுந்து வந்தான் சூரியன்!

‘எங்க சார், எனக்குத்தான் முதல் மார்க் போட்டிருக்கார்’ என்றாய் பெருமையாக.

‘நானும் உனக்குத்தான் முதல் மார்க் போட்டிருக்கிறேன்’ என்றேன் கமுக்கமாக.

‘அவருதான் நான் எழுதின பேப்பரைத் திருத்தி மார்க் போட்டார். நீ எந்த பேப்பரைத் திருத்தின?’

‘அவர், நீ எழுதிய பேப்பரைத்தான் திருத்தினார். நான் கடவுள் எழுதிய பேப்பரையே திருத்தியவன்.’

‘கடவுள் எழுதின பேப்பரா?!’

‘ஆமாம். நீதான் அந்தக் கடவுள் எழுதிய அழகான பேப்பர். ஒரு தப்பும் இல்லாமல், கடவுள் எப்படித்தான் எழுதினானோ’ என்றேன்.

‘குரங்கு… அப்படியே இந்தப் பென்சிலால கண்ணக் குத்துனன்னா’ என்று கோபப்படுவது மாதிரி வெட்கப்பட்டாய்.

‘என் கண்களைக் குத்த பென்சில் எதற்கு?’ அதற்குத்தான் உன் மேனியில் எத்தனையோ ஆயுதங்களைக் கடவுளே கொடுத்திருக்கிறானே. அதைக்கொண்டு தினம் தினம் ஓயாமல் என் கண்களை நீ குத்திக்கொண்டுதானே இருக்கிறாய்.’

‘முடியலடா சாமி… எவ்வளவு நேரந்தான் உன் பேச்சில் மயங்காத மாதிரியே நடிக்கிறது’ என்று என் தோளில் சாய்ந்தாய்.

‘மகனே… காதல்ல உனக்குத்தான்டா முதல் மார்க்’ என ஆகாயத்தில் இருந்து என்னை ஆசீர்வதித்தார்கள் லைலாக்களும் மஜ்னுக்களும்!

‘அவசர வேலையாக என் அம்மாவும் அப்பாவும் ஊருக்குப் போயிருக்கிறார்கள்’ என்றாய் அலைபேசியில்.

‘இப்படி ஒரு நாளுக்காகத்தான் நான் காத்துஇருந்தேன். இதோ இப்பவே கௌம்பி உன் வீட்டுக்கு வருகிறேன்’ என்றேன்.

‘ஐயையோ… வந்து என்ன பண்ணுவ?’ என்றாய்.

‘வந்து உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். உன்னை அருகில் வைத்துக்கொண்டு, உன் வீட்டிடம் நீ வளர்ந்த கதை கேட்பேன்.’

‘எப்படி..?’

‘தரையிடம் நீ தவழ்ந்த கதை கேட்பேன். சுவர்களிடம் அதைப் பிடித்து நீ நடந்த கதை கேட்பேன். ஜன்னல்களிடம் உன் ஆசைக் கதை கேட்பேன். கண்ணாடியிடம் உன் அழகுக் கதை கேட்பேன். மெத்தையிடம் உன் கனவுக் கதைக் கேட்பேன். குளியலறையிடம்…’

இடைமறித்த நீ, ‘போதும்… போதும்… நீ என்ன கதை கேட்பாய் என்று எனக்குத் தெரியும்… நிறுத்து’ என்றாய்.

நான் நிறுத்தாமல், ‘உன் பாடல் கதை கேட்பேன்’ என்றேன்.

‘அவ்வளவுதானா… நான் நினைத்த அளவுக்கு நீ ஒன்றும் மோசமானவன் இல்லை’ என்றாய்.

‘இல்லை… இல்லை… நீ நினைத்த அளவுக்கு நான் மோசமானவன்தான்’ என்றேன்.

‘அடப்பாவி… அப்படின்னா, நீ என் வீட்டுக்கு வராதே’ என்றாய்.

‘அதெல்லாம் வந்தாச்சு… கதவைத் திற.’

‘என்னது..?’ என்று கதவைத் திறந்தாய்.

‘வந்துட்டியா… அதுக்குள்ளவா… நான் நினைத்ததைவிட மோசமானவனாக இருப்பாய்போலிருக்கே’ என்று என்னை உள்ளே இழுத்துக் கதவைச் சாத்தினாய்!

‘உன் கண்ணைக் காட்டு… கவிதை எழுதப் போகிறேன்’ என்றேன்.

‘என் கண்களைப்பற்றி கவிதை எழுதப் போகிறாயா?’ என்றாய் ஆர்வத்துடன்.

‘இல்லை… உன் அழகைப்பற்றி. அதை எழுதத் தகுதி படைத்த மை, உன் கண் மைதானே…’

‘கண் மையைத் தொட்டா, அதைக்கொண்டு ஒரு சொல்கூட எழுத முடியாதே.’

‘சொல்லா? சொற்களைக்கொண்டு உன்னைக் கவிதையாக்கிவிட முடியுமா என்ன?’ என்றபடி உன் இமையில் வீற்றிருக்கும் மையை, என் சுண்டு விரலால் ஒற்றியெடுத்து, உன் கன்னத்தில் ஒரு பொட்டுவைத்தேன்.

‘கவிதை எழுதப்போகிறேன் என்று சொல்லி விட்டு, திருஷ்டிப் பொட்டு வைக்கிறாயே?’

‘உன் அழகைப்பற்றி கவிதை எழுதினால், அது இப்படித்தான் உனக்குத் திருஷ்டிப் பொட்டு வைத்த மாதிரி இருக்கும்’ என்றேன்.திருஷ்டிப் பொட்டே சிவக்கிற அளவுக்கு வெட்கப்பட்டாய்!

என் உள்ளங்கையைப் பார்த்துவிட்டு, ‘உனக்கு ஆயுள் ரொம்பக் கெட்டி’ என்றாய்.

‘என் ஆயுள் ஒன்றும் கெட்டி இல்லையே. அது ரொம்ப மெதுமெதுவென்றுதானே இருக்கிறது’ என்றேன்.

‘என்னது… மெதுமெதுவென்று இருக்கா’ என்றாய் புரியாமல்.

‘ஆமாம்… நீதானே என் ஆயுள்!’

‘நான் உன் ஆயுளா?’

‘வேறென்ன… உன் மீது நான் உயிரை வைத்த பிறகு, நீதானே என் ஆயுள். அன்று கூட, சாலையில் புகுந்த மாட்டுக்குப் பயந்து, ஓடி வந்து நீ என் முதுகில் ஒட்டிக்கொண்டாயே… அந்த மெதுமெதுப்பு இன்னும் என் முதுகில் அப்படியே இருக்கிறதே’ என்றேன்.

‘ச்சீ… நீ நல்லவன் மாதிரியே பேசுற கெட்டவன்டா’ என என்னை அடித்தாய் மெதுமெதுவாக.

‘உனக்குத் தோழிகள் என்று யாருமே இல்லையா’ என்றேன் வேண்டும் என்றே.

‘இருக்காங்களே… நேற்றுகூட என்னுடன் ஒருத்தி வந்தாளே… நீ பார்க்கவில்லையா?’ என்றாய்.

‘எங்கே பார்ப்பது. உன்னைப் பார்க்கவே எனக்கு நேரம் போதவில்லை’ என்றேன் கொஞ்சம் சத்தமாக.

‘மெதுவா பேசுடா… சிரிக்கிறாங்க பாரு’ என்று அதட்டினாய்.

‘சிரிக்கிறாங்களா… யாரு?’

‘ம்… ரோட்டுல போறவங்க.’

‘என்னது… ரோட்டுல ஆளுங்க எல்லாம் போறாங்களா. எனக்கு உன்னைத் தவிர வேறு யாரையுமே தெரியலையே…’

‘ஐயோ! ஏன்டா இப்படிப் பேசிப் பேசி எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்குற… தயவுசெய்து நிறுத்துறியா?’

‘நான் நிறுத்திடுவேன். உன்னால் நிறுத்த முடியுமா?’

‘எதை?’ என்றாய் குழப்பத்தோடு.

‘உன் அழகால் என் உயிரை வாங்குவதை.’

அதிசயமாக நீ உன் தோழிகள் இருவரைக் கூட்டிக்கொண்டு வந்தாய் பூங்காவுக்கு.

பேசிவிட்டுக் கிளம்புகையில், சட்டென்று நீ உன் நெற்றிப் பொட்டினை எடுத்து, என் நெற்றியில் ஒட்டிவிட்டு, ‘இரு.. முகம் கழுவிக்கொண்டு வருகிறேன்’ என்று நகர்ந்தாய்.

இப்படி நீ செய்வது இதுதான் முதல் முறை என்பதால், உன்னையே எடுத்து நீ என் நெற்றியில் ஒட்டிவிட்டதைப்போல இருந்தது எனக்கு.

ஆனால், உன் தோழிகளோ என்னைக் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

முகம் கழுவிக்கொண்டு வந்த நீ, உன் தோழிகளைப் பார்த்து ‘என்ன கிண்டல்?’ என்று அதட்டினாய்.

உடனே நான், ‘அவர்கள் எங்கே என்னைக் கிண்டல் செய்தார்கள். நமக்கும் இந்த மாதிரி பொட்டெடுத்து வைத்துவிட்டுப் போக ஒரு நெற்றிக்காரன் இல்லையே என வருத்தப்பட்டுக்கொண்டு அல்லவா இருந்தார்கள்’ என்றேன். அதை எதிர்பாராத அவர்கள், மௌனமாகத் திரும்பிப் போனார்கள்.

‘காதலே… அவர்களுக்கு என்று படைக்கப்பட்டவர்களை உடனே அவர்களுக்குக் காட்டி விடு’ என்றேன்.

‘கண்டிப்பாகக் காதல் காட்டிவிடும்’ என்றாய்!

என் காதலியே… நீ என் மனைவியான பிறகு, இப்படி மாறிப்போவாய் என்று நான் நினைக்கவே இல்லை.

காதலிக்கும்போது அடக்கிவாசித்த நீ, கல்யாணத்துக்குப் பிறகு அதிரவைக்கிறாய்.

வீட்டில் இருக்கும்போது பழைய புடவையும், வெளியே போகும்போது புதுப் புடவையும் கட்டிக்கொண்டு போகிற எல்லாப் பெண்களையும்போல இல்லாமல், நான் வேலைக்குக் கிளம்பும் முன்னே குளித்து முடித்து, தினம் ஒரு புதுப் புடவையில் இருந்தாய்.

‘என்ன… தினமும் புதுப் புடவை, புதுசா கல்யாணம் ஆனதுனாலயா?’ என்றேன்.

‘அதெல்லாம் இல்லை. புருஷனுக்கு முன்னே எப்பவும் புதுப் புடவையில்தான் இருக்க வேண்டும் என்று நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன். நீ ஊரில் இல்லாத நாட்களில் மட்டுமே நான் பழைய புடவை கட்டுவேன்’ என்றாய்.

‘ஏன்?’

‘அது என்ன… புதுசு புதுசா புடவை வாங்கித் தர்றது புருஷன். அதை அவன் முன்னாடி கட்டிக்காம, எங்கேயோ வெளியே போகும்போது மட்டும் கட்டிக்கிட்டு, திரும்பி வந்தவுடனேயே அவிழ்த்து மடிச்சிவெச்சிக்கிறது? அப்படியும் தப்பித் தவறி புதுப் புடவையில் இருக்கும்போது புருஷன் கட்டிப்பிடிச்சிட்டா. ஐயோ விடுங்க… புடவை கசங்கிடும் அப்டிங்கிறது. எனக்கு அதெல்லாம் பிடிக்காது. அப்படி எல்லாம் நான் சொல்லவே மாட்டேன். புடவை கசங்கிடும்னு கவலைப்படுற பொம்பளைங்க… அப்படிச் சொல்லும்போது புருஷன் மனசு கசங்கிடுமேனு கவலைப்படுறாங்களா?’ என்று பொரிந்து தள்ளினாய்.

‘ஐயோ! பின்றியே…’

‘அதெல்லாம் ஒண்ணும் இல்ல. லவ் பண்றேன்’ என்று அழகு காட்டினாய்!

சாமிக்கு விளக்கு ஏற்றும்போது உன்னைக் கட்டிப் பிடிக்க வந்தால் பதறுவாய். இன்றும் அந்தப் பதற்றத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில்… விளக்கு ஏற்றிக்கொண்டு இருந்த உன்னைக் கட்டிப் பிடிக்க வந்தேன்.

‘சாமிக்கு விளக்கு ஏத்தும்போது இப்படி எல்லாம் வம்பு பண்ணக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.’

‘நான் ஒண்ணும் வம்பு செய்யலையே… அன்பு செய்யத்தானே வந்தேன்.’

‘அதுக்கெல்லாம் வேற நேரம் இருக்கு.’

‘பக்தியோடு நீ சாமிக்கு விளக்கு ஏத்தும்போது, நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்கியே… அப்பத்தானே உன்னைக் கொஞ்ச ணும்போல இருக்கு.’

‘ஐயோ, பூஜை அறையில் இப்படி எல்லாம் பேசக் கூடாது. சாமி கண்ணைக் குத்திடும்.’

‘பேசறது வாய்தானே. அது ஏன், சாமி வாயில குத்தாம கண்ணுல குத்துது.’

‘அடக் கடவுளே! இப்படி எல்லாம் பேசுறியே… உனக்கு சாமி மேல பயமே இல்லையா?’

‘இல்லை… சாமிதானே நம்மைப் படைச்சது… காதலிக்கச் சொன்னது.’

‘அதுக்காக, சாமி அறையிலா?’

‘இந்த உலகமே சாமி அறைதானே!’

‘உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது சாமி.’

‘உன்னை யார் பேசி ஜெயிக்கச் சொன்னா? நீ பேசாமல் இருந்தால் போதுமே. உன்னிடம் நான் தோற்றுவிடுவேனே… உன் கண்களின் ஒரு மோனப் பார்வை போதுமே… கண்களைக் குத்தும் சக்தி கடவுளுக்கு இருக்கிறதோ, இல்லையோ… உன் பார்வைக்கு இருக்கிறதே… அதனால் நீதான் என் தெய்வம்.’

‘தெய்வத்தைக் கட்டிப் பிடிக்கிற பக்தன் இந்த உலகத்திலேயே நீ ஒருத்தன்தான்டா’ என்றபடி என்னை சாமி அறையில் இருந்து வெளியே இழுத்து வந்து, சாமி அறையின் கதவைச் சாத்தினாய்.

காதலின் ஆயிரம் கதவுகள் திறந்துகொண்டன!

வேலை விஷயமாக நான் வெளியூருக்குக் கிளம்புகையில், நீ என் பெட்டியில் வைக்கவேண்டியதை எல்லாம் வைத்துவிட்டு, வழக்கம்போலக் கடைசியில் உன் புகைப்படத்தை எடுத்து வைக்கப்போனாய்.

‘உன் புகைப்படத்தை வைக்காதே’ என்றேன்.

அதிர்ந்துபோன நீ, நிமிர்ந்து என்னைப் பார்ப்பதற்குள், உன் கண்கள் கண்ணீரைக் கொட்ட ஆரம்பித்துவிட்டன.

அதைக் கவனிக்காத மாதிரி, நான் ‘எதற்காக உன் புகைப்படத்தை வெளியூர் செல்லும்போது எடுத்துச் செல்கிறேன் என்பதே உன் புகைப்படத்துக்குத் தெரியவில்லை. ஓய்வு நேரங்களில், என்னோடு உன்னை மாதிரி விளையாடத் தெரியவில்லை, உன் புகைப்படத்துக்கு. ஆகையால், இனி மேல் உன் புகைப்படத்துக்குப் பதில் உன் புடவை ஒன்றை வை. அது என்னோடு நீ இல்லாத குறையைப் போக்கும்…’ என்றேன்.

அதிர்ச்சியில் இருந்து மீண்ட நீ, ‘இப்படியா பயமுறுத்துவ… என் இதயமே நின்னுடுச்சி’ என்றபடி, என் மார்பில் குத்தினாய். உடனே, ‘இரு… சேலை எடுத்துட்டு வர்றேன்’ எனத் திரும்பினாய்.

உன் கையைப் பிடித்த நான், ‘இதுதான் வேண்டும்’ என நீ உடுத்தியிருந்த சேலையைக் காட்டினேன்.

அப்படியே என் மேல் பாய்ந்து என்னைக் கட்டிக்கொண்ட நீ, ‘எம் மேல உனக்கு ஆசை குறைஞ்சிடுச்சோன்னு ஒரு நொடி நான் தப்பா நெனைச்சுட்டேன். என்னை மன்னிச்சிடு’ என்று அழுதாய்.

‘மன்னிப்புலாம் கிடையாது. தண்டனைதான்’ என்றபடி உன் கன்னத்தைத் திருகினேன்.

‘இதுதான் தண்டனையா’ என்றவள், உடுத்தியிருந்த சேலையைக் களைந்து, மடித்துப் பெட்டியில் வைத்தாய்.

‘போய் வேற சேலை கட்டிட்டு வா’ என்றேன்.

‘ம்ஹும்… நீ கிளம்பும்போது கட்டிக்கிறேன். சாப்பிட வா’ என்று அழைத்துப் போய் உட்காரவைத்து, நீயே ஊட்டிவிட்டாய்.

உன் கண்களில் நீர் நின்றிருந்தாலும், உன் நெஞ்சம் இன்னும் அழுகையில் விம்மிக்கொண்டுதான் இருந்தது.

‘இன்னும் அழுகை அடங்கலையா?’

‘போடா… முதல்ல புடவை வேணும்னு சொல்லிட்டு, அப்புறமா புகைப்படம் வேணாம்னு சொல்லியிருக்கலாம்ல’ என்று மூக்கை உறிஞ்சினாய்.

‘அப்படிச் சொல்லியிருந்தால், இப்படியரு கோலத்தில் நீ எனக்கு ஊட்டி விட்டிருப்பாயா?’

‘ஐய…’ என்றபடி சேலை கட்டக் கிளம் பினாய். நான் விடவே இல்லை.

நீ படி படி என்று சொன்னாலும், உன் டைரியை நான் படித்ததே இல்லை. ஏனோ, இன்று படிக்க வேண்டும் என்று தோன்றியது. உன்னை இழுத்து அருகில் வைத்துக்கொண்டு படிக்கத் தொடங்கினேன்.

வழக்கத்தைவிட முன்னரே எழுந்து, குளித்து முடித்து, நீ எனக்கு வாங்கித் தந்த சேலையில் ஒன்றை உடுத்திக்கொண்டு, உன்னை எழுப்புவதில் தொடங்கும் உன் விடுமுறை நாட்கள்.

உட்புறம் தாழிடப்பட்ட வீடு அன்று முழுவதும் யாருக்காகவும் திறக்காது. என் அலைபேசி அணைக்கப்படும். எனக்காக உழைக்கும் உனக்கு, நான்தானே விடுமுறை.

ஏதாவது விழாவுக்குச் செல்வது என்றால், உனக்கு முன்னரே நான் தயார் ஆகிவிடுவேன். எல்லாப் பெண்களையும்போல உன்னைக் காக்கவைத்து நான் கிளம்புவது இல்லை. குறைந்தது, அரை மணி நேரம் முன்னதாகவேனும் என்னை அலங்கரித்துக்கொண்டு உன் எதிரில் நிற்பேன். எந்த விழா என்றாலும், நான் அலங்கரித்துக்கொள்வது உனக்காகத்தான்!

நீ வேலைக்குப் போய்த் திரும்பும்போது, உன் களைப்பினை நான் எடுத்துக்கொண்டு, உனக்குப் புத்துணர்வைப் பரிசளிக்கிறேன்!

‘தயாராக இரு… மாலை வெளியே செல்லலாம்’ என்று சொல்லிவிட்டு வேலைக்குப் போன நீ, காலதாமதமாக வந்தால், நான் உன்னைக் கோபித்துக்கொள்வது இல்லை. தாமதமாக வந்ததால் நீ எனக்குத் தரும் அதிகப்படியான காதல், சரியாக வந்து நீ என்னை வெளியே கூட்டிப்போயிருந்தால் கிடைத்திருக்குமா என்ன?

நான் சமைத்துக்கொண்டு இருக்கும்போது, பின்னால் வந்து நீ என்னைக் கட்டிப்பிடித்து விளையாடும்போது, ‘இப்படி எல்லாம் செய்தால், சமைக்கிறப்ப எதையாவது மறந்துடுவேன், அப்புறம் சமையல் நல்லா இல்லைன்னா, என்னைக் கேக்கக் கூடாது’ என்பேன். ஆனால், அப்படி நீ விளையாடும் நாட்களில்தான், நான் நன்றாகச் சமைத்துஇருப்பேன்!

நான் குண்டாகாமல் ஒல்லியாகவே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். குண்டானால், என் மீது இருக்கும் காதல் உனக்குக் குறைந்துவிடுமோ என்கிற பயத்தால் அல்ல. நீ எப்போது என்னைக் கட்டிப் பிடித்தாலும் உன் கைகளுக்குள் நான் அடங்க வேண்டும் என்பதற்காகத்தான்!

வீட்டு வேலைகளில் நீ எனக்கு உதவ வந்தால், நான் மறுத்துவிடுகிறேன். இதெல்லாம் நான் உனக்காகச் செய்யும் வேலைகள். இதில் நீ எனக்கு உதவுவது என்பது, நான் உன்னைக் காதலிப்பதில் நீ எனக்கு உதவி செய்வதைப்போல. அது வேண்டாம். நானேதான் உன்னைக் காதலிக்க வேண்டும்!

காலையில், குழந்தையைக் கூட்டிப் போய் பள்ளியில் விட்டு, மாலையில் சென்று அழைத்து வரும் தாயைப்போல… காலையில் உன்னை அலுவலகத்தில் விட்டுவிட்டு, மாலையில் வந்து அழைத்து வர வேண்டும் என்கிற என் ஆசையை மாதம் ஒரு முறைதான் நீ நிறைவேற்றிவைக்கிறாய் என்கிற ஒரே ஒரு கோபம்தான் உன் மீது எனக்கு!

தாலி பிரித்துக் கட்டும் நாளில்… நீ கட்டிய தாலியைத் தண்ணீரில் விடச் சொன்னார்கள். நானோ, தண்ணீரில்விடுவது மாதிரி விட்டு, எடுத்து வந்து பத்திரமாக வைத்திருக்கிறேன்!

நீ கட்டிய தாலியைத் தண்ணீரில் விட்டுவிட முடியாது என்னால். அப்படித் தண்ணீரில்தான் விட வேண்டும் என்றால், நான் இறந்த பிறகு என் அஸ்தியோடு சேர்த்துத் தண்ணீரில் அதை விடும்படி, நமக்குப் பிறக்கப்போகும் பிள்ளையிடம் சொல்லிவைப்பேன்!

– பெப்ரவரி 2011

Print Friendly, PDF & Email

2 thoughts on “கண் மையால் எழுதிய கவிதைகள்!

  1. வணக்கம் ஐயா
    ரொம்ப அருமையான கதை நான் படித்த சிறு கதைகளே என்னை மிகவும் கவர்ந்த கதை இது தான் காதலை மிக அழகாக உணர வைத்திருக்கிர்கள்

  2. Dear Thabu sir,
    This story is the one which released in Aanantha vikadan (kadal special) know sir. I gifted that book (this story) to one. From that day myself & my friend were searching this story for five years. We searched in book fair too. But we couldn’t get this one. I bought 3 of your poem books, in search of this story. I love this story very much sir. Once we saw you NEEYA NANA, we were exited that time sir. This is the best love story I have read sir. Love, love & love except love I can’t see anything in this sir. You are arranged marriage know sir Mr. Karu Palaniappan told in that TV show (neeya nann). I can’t believe that sir. Thanks a lot to you for this story & to this sirukathaigal.com. I am going to read this story min 1000 times. Once again thank you very much sir.

    Regards,
    Sp.Sivaraman.

    Note – I couldn’t write in Tamil because my tab is not cooperating.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *