சோப்புக்குமிழ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 8,528 
 

திடீரென்று வந்து நின்றான் காலங்காலையிலே, முருகேசன். என்னடா என்று கேட்ட போது ஒன்றும் சொல்லாமல் நமுட்டு சிரிப்பு சிரித்தான். ஏதாவது கள்ளத்தனம் இருக்கும் போது மட்டும் தான் இது போல சிரிப்பான். கடந்த முறை, அவனுடைய அப்பா அம்மா ஊருக்கு போன பின்பு, கள்ளத்தனமாக சிரித்து கொண்டே இது போல வந்து நின்றான். என் அப்பாவிடம் சொல்லி, குரூப் ஸ்டடி என்று சொல்ல என் அப்பாவும், அப்பாவியாய் பிள்ளைகளோட படிப்பு ஆர்வத்தை பாராட்டி, கையில் கொஞ்சம் காசு கொடுத்து, ஏலே, ரவைக்கு வச்சுக்கிடுங்க, ரொம்ப நேரம் கண் முழிச்சு படிக்க வேணாம் என்று சொல்லி அனுப்பினார் பாவம். வெளியே வந்தது ஜோல்னா பையில் வைத்திருந்த வீடியோ கேசெட்டை காண்பித்து, பர்ருன்னு சிரிச்சான். அன்னைக்கு ராத்திரி முழிச்சு முழிச்சு படித்த கதை அப்பாவுக்கு கேள்வி கேட்காமல் நம்ப முடிந்தது. தூக்கம் இல்லாத கண்களும், தளர்ந்த நடையும். ஏ புள்ள! பயகளுக்கு எலும்பு சூப்பு வச்சு குடு… ராத்திரியெல்லாம் முழிச்சிருக்கானுங்க… குளிர குளிர சூப்பு குடிக்கட்டும் என்றார்.

அது போல தான் இன்னைக்கும் வந்திருக்கான், இப்போ கொஞ்சம் பெரியவங்களா ஆயிட்டோம் ரெண்டு பேரும், காலேஜ் முடிச்சிட்டு வேலை பார்க்குறோம், இங்க வந்து மூணு வருஷம் ஆச்சு. அவனுக்கு எழுநூத்தி அம்பது சம்பளம்(ஈடிபி இன்சார்ஜ்), எனக்கு அறுநூறு தான்(அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட்), ரெண்டு பேரும் ஒரே இடத்தில வேலை பார்த்தா உருப்படும்? ஈடிபி ரூமுக்குள்ள அடிச்ச கூத்தெல்லாம் எழுத முடியாது. படிக்கிற நிறைய பேரு வருத்த படுவாங்க. சரி அவன் வந்து நமுத்தலா சிரிச்சதுக்கு காரணம் மலர். நாங்க ரெண்டு பேரும் ஏதோ தத்தி தத்தி ஒரு டிகிரி முடிச்சிட்டு வேலைக்கு வந்திருக்க, மலர் மெட்ராஸ் யுனிவெர்சிட்டில எம்.பி.ஏ. படிச்சிட்டு வந்ததா சொல்லிட்டு, சென்னையில பிரிட்டிஷ் லைப்ரரியில வேலை பார்த்ததாவும், அங்க வர்ற வெள்ளைக்காரங்க எல்லாம், இவ பேசுற இங்கிலீஷ பார்த்து மயங்கி, லண்டன் வந்துடறியா என்று கேட்டார்களாம். இவங்க அப்பா, மலேசியா போயிட்டதால, காரைக்குடில இருக்குற சொந்த வீட்டுக்கே வந்து விட்டார்களாம்.

இங்கிலீஷ் பேசுனா எது சொன்னாலும் நம்பி தானே ஆகணும், நம்ம ஊருல அதான வழக்கம். ஒண்ணு பாஷை புரியாது, இன்னொன்னு இங்கிலீஷ் பேசுறவங்க எது சொன்னாலும் நம்பிக்கை வந்துடும். இவ எல்லாமே இங்கிலீஷ்லேயே சொன்னா, சரி தானே!

மலர் அத்தனை ஒன்றும் அழகில்லை. மாநிறம், உயரமா இருப்பாள், நாங்க ரெண்டு பேரும் கூட உயரம் தான். முன் பல் ரெண்டு மட்டும் பெருசா… போனி டெயில், நல்ல உடம்பு. கையில் இருக்கும் மெல்லிய ரோமக்கட்டும், வசீகரமாய் இருக்கும். எல்லாத்தையும் விட அவளுடைய குரலில் இருக்கும் அந்த அழைப்பு, அத்தனை வசீகரம், போட்டது போட்ட படியே ஓடத்தோணும். ஆனால் அவள் மேல எல்லாருக்கும் ஈடுபாடு வந்ததுக்கு பெரிய காரணம், அவ பேசுற முறை. எல்லோரையும் தொட்டு தொட்டு தான் பேசுவா… அதுவும், மூச்சு மேல படுற மாதிரி. மேனேஜரா வந்த பெருசு கூட மலர் என்றால், பேசுவது ஒரு மாதிரி தான் இருக்கும். ரெண்டும் இங்கிலீஷ் பேசுறத பாக்கணுமே… வயிறு எரியும், நாமளும் இது போல இங்கிலீஷ் கத்துக்கணும்னு நானும், முருகேசனும் முடிவு பண்ணி ஆங்கில படமா பார்த்தோம்.

இங்கிலீஷ் இஸ் எ லேங்குவேஜ் டு பி காட்… னு சொன்னது தான் நாங்க ஆங்கில படங்கள் பார்த்த காரணம். லோடட் கன்ஸ்ல உர்சுலா ஆண்ட்ரூசை பார்த்துட்டு… பாஷை முக்கியமில்லை என தெளிந்தோம். இத்தனைக்கும் காரணமான மலர், முருகேசு மேல ஒரு கண் வச்சிருக்கான்னு, வேலை பார்க்குறவங்களுக்கும், ஏன் எனக்கு கூட தோனுச்சு. அவன்கூட பேச ஆரம்பிச்சதுல இருந்து மத்தவுங்களோட பேசுறதும், தொடுறதும், உராசுறதும் குறைஞ்சு போச்சு.

ஏற்கனவே ராதா என்ற பொண்ணுக்கு நூல் விட்டுட்டு இருந்தவன், இவ வந்ததும் அவளை விட்டுட்டான். மாப்பிளை! இந்த ஜாரி தோதுப்படாதுடா நமக்கு, கல்யாணம் அது இதுன்னு பேசிட்டு இருக்கு. அழகர்சாமி நாயுடுக்கு தெரிஞ்சா அம்புட்டு தான், தோலை உரிச்சுடுவாரு. எங்க அம்மாவும் சொல்லும் மாப்பிள்ளை, அவிங்க ஆளுகள கட்டினா தரித்திரம்னு… என்பான். அடப்பாவி என்று தோன்றியது எனக்கு, அழகர் கோவிலுக்கு, கூட்டிட்டு போயி, தீர்த்த தொட்டிக்கு மேல போயி டிபன் சாப்பிட்டது எல்லாம். அதெல்லாம் சகஜம் மாப்பிள, அவளும் தான வந்தா. கிவ் அண்ட் டேக். எவ்வளவு மோசமான ஆளு இவன், பொண்ணுங்கள வெறும் உடம்பா நினைக்கிறானே… சரி! ஒழியுது என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். ஆனாலும், நமக்கு இது மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமையலேன்னு ஒரு வருத்தமும் இருந்தது…

முருகேசன் வந்ததன் காரணம் அவனை காரைக்குடிக்கு, அவள் வீட்டுக்கு வரச்சொன்னது தான். அதுவும் அவள் குறிப்பிட்டதில், வீட்டுல யாரும் இருக்கமாட்டாங்க வா.. பேசிட்டு இருக்கலாம், என்பதில் ஒரு அழுத்தம் இருந்ததாக அவன் சொன்னான் நம்பத்தான் தோன்றியது. ஒருத்தனை மதுரையில இருந்து காரைக்குடிக்கு பேசுறதுக்காக மட்டும் வரச்சொல்ற அந்த பெண்ணோட நட்பு எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. முருகேசனுக்கு, தனியா போக பயம், அழகர் கோயில், விரகனூர் டேம், வண்டியூர் மாதிரி எடம்னா பரவாயில்லை, ஆனா தெரியாத ஊரு அதுவும், தனியா இருக்கா, இவனை வரவும் சொல்லியிருக்கா.. பயலுக்கு… ஆசையோட சேர்த்து பயமும் வந்து அக்குளில் காய்ச்சல் அடித்திருக்க வேண்டும். அதனால துணைக்கு ஆள் தேடுறான் போல என்று எனக்கு தோன்றியது. அவன் தனியா கூப்பிட்டு இந்த விஷயத்தை சொன்னதும், எனக்கும் அவனை விட ஆர்வம் இருந்தாலும், நமக்கு இதில என்ன ரோலு ன்னு யோசனையா இருந்தது.

பயமும் இருந்ததற்கு காரணம், சமீபத்தில் பார்த்த படமாகவும் இருக்கலாம். தனியாய் இருந்த ஆசை நாயகி ஹோட்டல் ரூமுக்கு அழைக்க, போய் சேர்ந்தான், கதாநாயகன். இடது மார்பில் கத்தியில் குத்தி, நீளமான கத்தி போல, இறந்து கிடந்ததை பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் சுத்தி முத்தி பார்த்து விட்டு, வழக்கம் போல கத்தியாய் எடுத்து கையில் வைத்திருக்கும் போது வந்த போலீஸ் அவனை பிடித்ததை பார்த்த ஞாபகம் வந்தது. அப்படி ஏதாவது நடந்தா கூட கத்திய கையில எடுக்குற தப்ப மட்டும் செய்யக்கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். வழக்கம் போல அப்பாவிடம் ஒரு பொய்யை சொல்லிவிட்டு போக வேண்டும். என்ன ஏது என்று பெரிதாக ஆராய்வது இல்லை என்றாலும், சந்தேகம் வராத படிக்கு ஒரு காரணம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

முருகேசனுக்கு இது போல விஷயங்களுக்கு எல்லாம், நல்லா காரணம் சொல்ல முடியும் என்ன சொல்வதுடா! என்று கேட்டேன். சிறிது யோசித்தவன், ஆபிஸ்ல வேலை பார்க்குறவனுக்கு கல்யாணம்னு சொல்லலாமா, என்றவன், வேண்டாம் வேற சொல்லலாம் என்று சொன்னான். ஆபிஸ்ல வேலை பார்க்குறவனோட அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம், போக வேணாம்னு நெனைச்சிருந்தோம், நேத்து, அவங்க அப்பாவே, நீயும் சந்துருவும் அவசியம் வரணும்னு சொல்லிட்டாரு என்று அண்டப்புளுகினான். அப்பா, “அப்படியா, சரி பத்திரமா போயிட்டு வாங்கப்பா, என்று ரொம்பவும் அப்பாவியாய் நம்பினார். பெரியவங்க கிட்ட அவங்க அறுபதாம் கல்யாணத்தின் போது, ஆசீர்வாதம் வாங்குவது ரொம்ப புண்ணியம் என்று கையெடுத்து மேலே பார்த்து கும்பிட்டு கொண்டார். அவங்க வீட்டுல என்ன சொன்னானோ? ரெண்டு பெருசுங்களும் பார்த்துக்காம இருக்கணும்.

உங்க வீட்டுல என்னடா சொன்ன என்று நான் கேட்க, பழைய வாத்தியார் வீட்டுக்கு போறேன், சோழவந்தான் வரைன்னு சொல்லியிருக்கான். நல்ல வேலை இங்க அப்பாகிட்ட எந்த ஊருன்னு சொல்லலை. ரெண்டையும் சேத்துக்கலாம் என்று தோன்றியதால், சமாளித்து விடலாம் என்று நிம்மதியாய் இருந்தது.

கிளம்பிட்டோம். பஸ் எங்க இருந்து கிளம்பும் என்று அவனிடம் கேட்ட போது, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் பஸ் ஸ்டான்ட் என்று முருகேசன் சொன்னான். என்னடா செய்ய போறோம் அங்க போயி? என்று கேட்ட போது, தனியா இருக்கா, ஆசையா வரச்சொல்லி இருக்கா என்ன வேண்ணா செய்யாலம்டா! என்று அவன் சொல்ல எனக்கு லேசா அடிவயிறு கலக்க ஆரம்பிச்சது. ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் பஸ் ஸ்டாண்ட் வந்தவுடன், கக்கூசுக்கு போக வேண்டும் போல தோன்றியது. காரைக்குடி பஸ் எதுவும் ரெடியா இல்லை, நல்ல வேளை பஸ் ரெடியா இருந்தா இப்பவே ஏற சொல்லி இருப்பான். அவஸ்தையாகி இருக்கும். அவனிடம் சொல்லிவிட்டு, கட்டண கழிப்பிடம் போனேன். பொதுக் கழிப்பிடத்துக்கும், இதுக்கும் பெருசா வித்யாசம் இல்லை. அங்க நிறைய பேரு பார்ப்பானுங்க, இங்க ஒருத்தன் காசு வாங்கிட்டு பார்க்குறான் என்று தோன்றியது. தண்ணீ கிடையாது, ஒரு தூரில்லாத வாளி, அதுல தொட்டியில இருந்து எடுத்துட்டு வரதுக்குள்ள காலியாயிடும். எல்லாம் நேரம், பேசாம வீட்டுக்கு போயிடலாமா, இவனுக்கு தெரியாம என்று தோன்றியது. ஆனாலும் ஆசை, ஆர்வம் எல்லாம் உந்தி தள்ள முடித்து விட்டு வெளியே வந்தேன்.

வாடா சீக்கிரமா, வண்டி கிளம்ப போகுது என்றான். கண்டக்டரிடம் கேட்ட போது, இன்னும் அரை மணி ஆகும் தம்பி என்று தம் அடிக்கப்போய் விட்டார். முருகேசனுக்கு, டேய் நாமளும் தம் அடிக்கலாமா என்றான். ஏன்டா ஒத்தையா ஒரு தப்பு செஞ்சா ஆகாதா என்று கேட்க, மாப்ள! நீயே தப்பு தப்புன்னா எப்படிரா, உனக்கு இஷ்டம் இல்லேன்னா போயிடலாம் என்றான். எனக்கு அய்யய்யோ, வேணான்னு திரும்பிடுவானோ என்று பயம் வந்தது லேசா. என்னை இழுத்து கொண்டு வாடா, மெடிக்கல் ஷாப் வரை போயிட்டு போகலாம், என்றான்.

எதுக்குடா, மேலுக்கு ஏதும் முடியலையா? என்று திரும்பி விடுவானோ என்று பதைபதைப்பில் திரும்பவும் கேட்டேன். பேசாம வாடா மாப்பிளை, என்று மெடிக்கல் ஷாப்பில், அண்ணே! கோஹினூர் ரெண்டு கொடுங்கண்ணே… என்றான். அண்ணன் ரெண்டு பேரையும், ஏற இறங்க பார்த்துட்டு, என்ன கலர் வேணும்னு கேட்டார். ஆணுறையா? என்னடா செய்ய போற என்று அவன் கையை அழுத்த, கைய புடுங்கிட்டு, சும்மா இரு என்று கையை கீழாக காட்டினான். ரெண்டு வாங்குறானே, நமக்கும் ஒன்னொன்னு நினைச்சிட்டு, ஒரு மாதிரி சிலிர்ப்பா இருந்தது. ஏதோ ஒண்ணு கொடுங்கண்ணே என்று கண்ணடித்தான் அவரை பார்த்து. அவர் மூஞ்சிய கடுகடுன்னு வச்சிட்டு, காச வாங்கி கல்லால போட்டுட்டு எங்க முதுகில், பக்கத்தில் இருந்த ஆளிடம், ஏதோ சொல்லி சிரிப்பது மாதிரி இருந்தது. எனக்கு அவமானமாய் இருந்தது, அவனிடம் சொன்ன போது, கண்டுக்காதே மாப்பிள, இவன் எல்லாம் பாக்காமையா வந்திருப்பான் என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த பிறகும் எனக்கு என்னமோ மாதிரி இருந்தது. அவன் விசிலடிச்சிகிட்டே வந்தான், ஏதோ ஒரு விரகத்தில் தவிக்கும் பெண்ணின், டி. ராஜேந்தரின் பாட்டு. சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி தான் எல்லாமே பண்ணுவான் போல, முருகேசனோட நடை உடை பாவனை எல்லாம், பெரிய மனுஷன் போல மாறியதாய் தோன்றியது. பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த உடன், டிரைவர் சீட்டுக்கு மேலே இருந்த கண்ணாடியை பார்த்தேன், பெரிய மனுஷ தோரணை இருக்கான்னு. இன்னும் சரியா முளைக்காத மீசை வேதனையை இருந்தது. எச்சிய எடுத்து, மீசையில் இழுவிய போது லேசாய் மீசை இருப்பது தெரிந்தது. முருகேசனுக்கு நல்ல கரு கருன்னு மீசை. சின்ன வயசிலேயே வழிச்சு வழிச்சு அடர்த்தியா வளர்ந்துட்டதுன்னு நினைக்கிறேன்.

காரைக்குடி வந்து இறங்குன போது சரியா காலையில பதினோரு மணி. வெயில் ரொம்ப ஜாஸ்தியாய் இருந்தது. வேர்த்துக் கொட்டியது, இவனுக்கு, வெயிலாகவும் இருக்கலாம், பயத்தினாலும் இருக்கலாம். கழுத்தை தொட்டு பார்த்ததில் சூடாய் இருப்பது தெரிந்தது. அவன் ஜாலியா, அட்ரச கையில வச்சிக்கிட்டு, விசாரிச்சிட்டு இருந்தான். ஒரு ரிக்ஷாக்காரர், தெருவைச் சொல்ல, ஆரு வீடு தம்பின்னு கேட்டார். மெய்யப்பன் சார் வீட்டுக்கு என்றதும், நீங்க ஆரு, அவுக ஆரும் வீட்டுல இல்லையே… அந்த பொண்ணு மாத்திரம் தான் இருக்கு என்றார். என்னடா இவ்வளவு விஷயம் சொல்றாரே, வெனையா போச்சேன்னு தோணியது எனக்கு. அவன் உங்களுக்கு தெரியுமாண்ணே என்று கேட்டான். தெரியும் தெரியும், அந்த தெருவிலேயே ஆறு வீடு தான் இருக்கு. மெய்யப்பன் வீடு தான் இருக்கிறதிலேயே சின்ன வீடு என்றார். அது சரி, நீங்க ஆரு என்று திரும்பவும் கேட்டார். நான் தேவகோட்டைல இருந்து வாரேன், இது என்னோட பெரியம்மா பையன் என்று என்னையும் அறிமுக படுத்தினான்.

மெய்யப்பன் எங்க மாமா தான் என்று புதிதாய் கதை சொன்னான். சரி உட்காருங்க என்று செக்காலை ரோடை தாண்டி, இடது பக்கம் திரும்பியவர், ஒரு சின்ன சந்தில் திரும்பினார். சந்து முனை வந்ததும், பெரிதாய் விரிந்த தெருவில், ஆள் நடமாட்டம் இல்லாமல், கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. ஒரு அழிக்கதவு போட்ட வீட்டின் முன்னால் இறக்கிவிட்டு இது தான் என்று, அவரே அழைப்பு மணியை அழுத்தினார்.

யாரும் வருவதை தெரியவில்லை. அங்கிருந்த திண்ணையில் உட்கார்ந்து கொண்டேன். சில்லென்று இருந்தது வெயிலுக்கு இதமாக இருந்தது. துணியெல்லாம் கழட்டி போட்டு அதுல உருளனும் போல தோன்றியது எனக்கு. ரிக்ஷாக்காரர், கொஞ்ச நேரம் நின்னு பார்த்துட்டு என்ன நினைச்சாரோ, காச வாங்கிட்டு கிளம்பிட்டார். தெரு முனை போனதும் திரும்பி ஒரு முறை சந்தேகமாய் பார்த்து விட்டு போனார். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், இந்த ஆள் சுத்தமா அடையாளம் சொல்லிடுவாருன்னு தோன்றியது எனக்கு. கதவை தட்டினான். சத்தத்தை காணோம், அழிகம்பியின் வழி, மேல் தாழ்ப்பாளை நீக்க, கதவு மளாரென்று திறந்தது.

நீ போய் பார்த்துட்டு வா, நான் இங்கே இருக்கேன் என்று சொல்லிவிட்டேன். தேவைன்னா ஓடுறதுக்கு வசதியா அங்கேயே உட்கார்ந்து கொண்டேன். உள்ளே போனவன், ரொம்ப நேரமா ஆளை காணோம், என்ன ஆச்சோ தெரியலை. எதேச்சையாய் பையை தொட்டு பார்க்க, இரண்டு கோஹினூர் பாக்கெட்டும் என்னிடம் இருந்தது. அட இத விட்டுட்டு போயிட்டானே என்று யோசனை வந்தது. பொறுமையை இழந்து கொண்டு இருந்த போது, கதவைத தள்ளிக் கொண்டு, வந்தவள் குளித்து கொண்டு இருந்தாள் போல. தலையில் ஈரத்துண்டும், பாவாடை தாவணியில் என்னை பார்த்ததும், வா சந்துரு! உள்ள வா என்றாள்.

உள்ளே ஒரு நீளமான மரப்பெட்டி மாதிரி இருந்தது, உட்கார வசதியாய் ஒரு பெஞ்சு போல இருந்தது. அதன் மேலே துணி விரித்திருந்தது. அதில் முருகேசு உட்கார்த்திருந்தான். இரு வர்றேன் என்று ஒரு அறையின் திரையை விளக்கி கொண்டு உள்ளே போனாள். அந்த அறையில் ஒரு டேபிள் அதில் மலரின் போட்டோ, சில புத்தகங்களும் இருந்தது. பக்கவாட்டு சுவரில், சில புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கி வைக்க பட்டிருந்தது. உயரமான கூரை போன்ற சீலிங். மரச்சட்டங்களில், ஓடு வேய்ந்திருந்தது. உள்ளே டைனிங் டேபிளுக்கு முன்பாக இரண்டு தூண்கள், ஹாலையும், டைனிங் ஹாலையும் பிரித்தது. எதிர்த்த மாதிரி நடையில் நுழைந்து இடது பக்கம் திரும்பினால், அடுப்பங்கரையாய் இருக்கும் என்று தோன்றியது. வீடு அத்தனை வெளிச்சமாய் இல்லை. இதான் வசதி என்று விட்டு விட்டாள் போல. ஜன்னல்கள் நிறைய இருந்த மாதிரி தான் இருந்தது, ஆனால் ஏனோ திறக்கப்படவில்லை.

நான் முருகேசை பார்த்து, பேன்ட் பையை தொட்டு காட்டி கோஹினூர் இருப்பதை உணர்த்தினேன். அவன் சும்மா இரு கொஞ்ச நேரம் என்றான். தலையை முடிந்து, சிரித்து கொண்டே வந்தாள் மலர். அழகாய் தெரிந்தாள் இன்று. என்ன சாப்பிடுறீங்க என்ற போது ஒண்ணும் வேண்டாம், வெறும் தண்ணீ மட்டும் போதும் என்ற போது, ஒரு நடுத்தரவயதுள்ள பெண்மணி, மலரின் பென்சில் திருத்தங்களுடன் வந்தாள். இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க! மதியம் சாப்பிட்டு தான் போகணும் என்றாள்.

சரி என்றோம் ரெண்டு பேரும் மையமாய்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *