இளமை ரகசியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 3, 2019
பார்வையிட்டோர்: 7,862 
 

“மாமி, நெஜமாவா சொல்றீங்க ஒங்களுக்கு எழுபது வயசுன்னு?”

அலமேலு நூறாவது தடவை இந்தக் கேள்வியை வேதவல்லி மாமியிடம் கேட்டிருப்பாள்.

“ஆமாண்டி, எனக்கு இந்தச் சித்திரை வந்தா எழுபது வயசு முடியறது.”

“நம்பவே முடியலை மாமி.”

“ஒன்னோட பெரியம்மா மதுரம் இருக்காளே, அவ என் கூட நடுத்தெரு பள்ளிக் கூடத்துல ஒண்ணா படிச்சா… அதுல இருந்தே தெரிஞ்சுக்க என் வயசை.”

“என் பெரியம்மா யார் கூடத்தான் படிக்கலை சொல்லுங்க? அவங்கதான் ஒவ்வொரு க்ளாஸ்லேயும் ரெண்டு ரெண்டு வருஷம் சீட்டைத் தேய்ச்சு உட்கார்ந்திருப்பாங்களே…”

“நான் மட்டும் என்னத்தைக் கிழிச்சேன்னு நெனக்கிற? நானும்தான் ஒவ்வொரு வகுப்பிலேயும் மூணு மூணு வருஷம் படிச்சிருக்கேன்.”

“அப்ப நீங்க ரெண்டு பேரும் உக்காந்து உக்காந்தே பெஞ்சே தேஞ்சி போயிருக்கும் தேஞ்சி…”

“மதுரம் தங்கச்சி மவதானே நீ, ஏன் பேச மாட்டே?”

“நீங்கதான் சொல்ல மாட்டேங்கறீங்களே மாமி.”

“என்னத்தடி சொல்ல மாட்டேங்கறேன்?”

“இத்தனை வயசாகியும் கொஞ்சங்கூட வயசே ஆகாத மாதிரி இருக்கீங்களே? அந்த ரகசியத்தை கொஞ்சம் எனக்கும் சொன்னாத்தான் என்னவாம்?”

“அதுவா, அதெல்லாம் பிரம்ம ரகசியம்டி..”

“எனக்கு மட்டும் சொல்லுங்க மாமி, ப்ளீஸ். நீங்க சொல்றதை நான் ஒத்தர் கிட்டேயும் சொல்ல மாட்டேன்.”

“ஒண்ணை நம்ப முடியாதுடி அம்புலு.”

“இந்த ஒத்த விஷயத்துல மட்டும் என்னை நீங்க நம்பலாம் மாமி.”

“அப்படியா சரி. அப்ப லச்சரூவா கொண்டா, உனக்கு மட்டும் சொல்றேன்.”

“ஓஹோ, சொல்ல முடியாதுங்கறதை இப்படி சுத்தி வளைச்சு சொல்றீங்க.”

“நீ இப்படி அர்த்தப் படுத்திகிட்டா நா ஒண்ணுஞ் செய்ய முடியாது.”

“நீங்கதான் லச்ச ரூவாய் கொண்டான்னு சொல்றீங்களே.”

“ஆமாண்டி, விஷயம் அவ்வளவு பெரிசாச்சே…”

“அப்ப லச்ச ரூவா கொண்டாந்தாத்தேன் சொல்லுவீங்க?”

“திருப்பி திருப்பி அதையே சொல்லி என் உயிரை வாங்காதே… எனக்கு தலைக்கு மேலே சோலி இருக்கு…”

“உங்ககிட்ட கேக்கிறதுக்கு சும்மாவே இருந்திட்டுப் போகலாம்.”

“தெரியுதுல்ல?”

தெரிந்து என்ன செய்ய? அலமேலு சிலுப்பிக்கொண்டு எந்திரிச்சுப் போனாள். அவர்கள் பேச்சு எப்பவுமே இப்படித்தான் கோணக்க மாணக்கன்னு முடிஞ்சு போகும்.

இவங்களுக்கெல்லாம் இப்பப் பிடிச்சே முறுக்குகூட திங்க முடியல; கேட்டா பல்வலி! படி ஏறி இறங்கறதுன்னா ரொம்பவே யோசிக்க வேண்டியிருக்கு; ஒரே பக்கமா படுத்தால் கால் குறக்களை வாங்குது; வேகமா நடக்க முடியல… இப்படி எத்தைனையோ பாடு இவர்களுக்கு!

மாமிக்கு இதில் எந்தத் தொந்திரவும் கிடையாது. இது மட்டுமா? அவளவள் ஐம்பது வயசிலேயே காப்பிக்கு சீனி போடாம குடிச்சிகிட்டு சக்கரை வியாதியில் சீரழிஞ்சிகிட்டு திரியற சமயத்துல, இந்த வேதவல்லி மாமி மட்டும் எழுவது வயசிலும் காலையில் இட்லிக்கும் தோசைக்கும் தொட்டுக்கிட்டு சாப்பிடறதுக்கு எட்டுக் கரண்டி சீனி போட்டுப்பான்னு சொன்னா, பார்க்கிறவளுக்கு வயித்தைப் பத்திகிட்டு எரியாம என்ன பண்ணும்?

மாமி கல்லிடைக்குறிச்சியில் பிரபலம். காரணம் அபரிதமான அழகு. சிவந்த நிறம்; சிரித்த முகம்; வைரத் தோடு, வைர மூக்குத்திகளின் ஜொலிப்பு; நேர்த்தியான உடை என்று பார்ப்பதற்கு அமர்க்களமாக இருப்பாள். எப்போதும் தேனீயைப் போல சுறுசுறுப்புடன் வளைய வருவாள். மணி மணியா ரெண்டு பசங்க. இருவரும் திருமணமாகி அமெரிக்காவில் இருக்கிறார்கள். மாமியின் கணவர் மாமி சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டி அமைதி காப்பார்.

கர்நாடக சங்கீதம் என்றால் மாமிக்கு உயிர். நல்ல சாரீரத்துடன் ரசித்துப் பாடுவாள். வீட்டை சுத்தமாக வைத்திருப்பாள். நன்றாகச் சமைப்பாள். தன் வீட்டுக்கு வருபவர்களை அன்புடன் உபசரிப்பாள். மாமியின் சொக்க வைக்கும் அழகும், பண்பும், புத்திசாலித்தனமும் பல ஆண்களை இன்னமும் மாமியின்பால் ஈர்க்கின்றன.

கல்லிடைகுறிச்சியின் ஆதி வராகப் பெருமாள் திருக்கோயிலுக்கு மாமி ஏராளமாக நிதிகள் கொடுப்பாள். திருப்பாவை, திருவெம்பாவை, சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற எதாவது ஒன்றை மாமியின் வாய் சொல்லியபடியே இருக்கும். தவிர, கோயில் பெருமாள் முன் நின்று உருக்கமாகப் பாடுவாள். மாமியின் செளந்தர்யம் பெண்களையே மாமியிடம் ரொம்ப ஈஷிக்கொள்ளத் தூண்டும்.

மாமி அதிகமாகப் பேச மாட்டாள். குறிப்பாக தன் அழகின் ரகசியத்தைப் பற்றி யாரிடமும் வாயே திறக்க மாட்டாள்.

அதனால இந்த அலமேலு என்ன செஞ்சா தெரியுமா? தன் பெரியம்மா மதுரத்திடமே இந்த ரகசியத்தைக் கேட்டுப் பாத்திடலாம்னு முடிவு பண்ணி, அவள் நல்ல மூட்ல இருக்கிற நேரமா பாத்துப் போனாள்.

விஷயத்தை போனதும் நேருக்கு நேரா போட்டுக் கேட்டுட முடியாதே..! அப்படி இப்படின்னு கொஞ்சம் சுத்தி வளைச்சுத்தானே வரணும்… அதனால் தனக்கு உடம்பு சரியில்லை என்பது மாதிரி மூஞ்சியை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு மதுரத்தின் எதிரே போய் உட்கார்ந்தாள். மதுரமும் ரொம்பத் தோதாக எடுத்த எடுப்பிலேயே, “என்ன அம்புலு ஒரு மாதிரி லம்பிக்கிட்டே வரே?” என்றாள்.

அலமேலுவுக்கு இது போதாதா? ரொம்பவே சலித்துக்கொண்டு, “ஆமா பெரியம்மா, வயிறே நல்லா இல்ல. எது சாப்பிட்டாலும் எதுக்களிக்குது. ஏப்பம் ஏப்பமா வருது, அதுவும் புளிச்ச ஏப்பமா…”

“வயித்துல மந்தம் கெடக்குடி…”

“என்ன பெரியம்மா இந்த வயசுல கூடவா மந்தமும், கிந்தமும் வரும்.”

“அப்படி வச்சிருக்கே, உடம்பை நீ.”

“கொஞ்சம் நீங்கதான் சொல்லிக் கொடுங்களேன்… உடம்பை எப்படி வச்சிகிறதுன்னு?”

“போய் நல்ல டாக்டரா பாத்துக் கேளுடி…”

“டாக்டருக்கும், மருந்துக்கும் துட்டு நீங்க தருவீங்களா?”

“நான் ஏன் குடுக்கிறேன்? எனக்கு என்ன பைத்தியமா?”

“நா நம்ம வேதவல்லி மாமிகிட்டதான் போய் கேட்கப் போறேன்…”

“கேளு.. கேளு. வல்லிதான் சரியான ஆளு.”

“அதெப்படி பெரியம்மா வேதவல்லி மாமி மட்டும் அன்று கண்ட மேனிக்கு அப்படியே இருக்காங்க? ஒங்க வயசுதான் அவங்களுக்கும்… ஆனா இன்னிக்கும் அவங்களுக்கு ஒத்த தலைமுடி கூட நரைக்கல. ஒத்தப் பல்லும் ஆடல, தோல் சுருங்கல. நெனச்சா ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ஏதாவது மந்திரம் கிந்திரம் மாமிக்குத் தெரியுமோ?”

“ரொம்ப பக்தியானவளாச்சே, மந்திரம் வச்சிருந்தாலும் வச்சிருப்பா.”

“ஒங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?”

“மாமியைத்தான் போயி கேளேன்..”

“நல்லாச் சொல்லுவாங்களே எங்கிட்ட. சும்மாவே அம்மிக் கொழவியை முழுங்கின மாதிரி வாயை மூடிக்கிட்டு இருப்பாங்க. அவங்ககிட்டப் போயி கேக்கச் சொல்றீங்களே பெரியம்மா?”

“போயி நான் சொன்னேன்னு சொல்லி அவங்களையே கேட்டுப் பாரு… சொல்லவே முடியாதுன்னு சொல்லிட்டானு வச்சிக்க, நேரே எங்கிட்ட வா. அப்ப நான் சொல்றேன் உனக்கு.”

“அது எதுக்குப் பெரியம்மா அவங்ககிட்டப் போயி வெட்டியா கேட்டுத் தொங்கிகிட்டு… நீங்களேதான் சொல்லிப் புடுங்களேன்.”

“ஒரு நிமிஷத்துல நான் சொல்லிப்புடுவேன். அது பெரிய விஷயமில்லை. ஆனா நாளக்கி அந்த வல்லி எங்கிட்ட வந்து ‘அதெப்படி நீ அந்தக் காலத்துச் சங்கதியை விவஸ்தை இல்லாம சின்னப் பொண்ணுங்க கிட்டெல்லாம் சொல்லலாம்’ னு மூஞ்சிக்கு நேரா என்னை வந்து கேட்டுப்பிட்டான்னு வச்சிக்க, அது எனக்கு ரொம்ப அசிங்கமாப் போயிடுமேடி…”

“என் உடம்பை நல்ல படியா வச்சிக்கிறதுக்குத்தான் இப்படி கெஞ்சிக் கேக்கறேன்.. அதைப் புரிஞ்சிக்க மாட்டீங்கறீங்களே பெரியம்மா…”

பெரியம்மா சதை தொங்கும் கண்களை இடுக்கிக்கொண்டு சிரித்தாள்.

“அது மாத்திரம் இல்லைடி அம்புலு… இனிமே போயி நா அந்தச் சங்கதியைச் சொல்றதால முக்காத்துட்டுக்கு பிரயோஜனம் கிடையாது.”

“புதிராத்தான் இருக்கு பெரியம்மா, நீங்க பேசறதெல்லாம்…”

“புதிரும் இல்லை, புண்ணாக்கும் இல்லை.”

“இப்படியே பேசிட்டுப் போங்க…” சலித்துக் கொண்டாள்.

“என்னை என்னடி சொல்லச் சொல்ற அம்புலு?”

“வேதவல்லி மாமி எப்படி இப்படி எந்த நோய் நொடியும் இல்லாமே, இந்த எழுபது வயசிலும் பனம்பழம் கணக்கா மினுமினுன்னு இருக்காங்க?”

“சரி, நீயுந்தான் ரொம்ப பிரியப்பட்டு என்னை நச்சிப் புடுங்கறே. அதனால உனக்கு மட்டும் சொல்றேன் கேட்டுக்க. நா சொல்றதை யாருகிட்டயும் நீ சொல்லிரக் கூடாது.”

“சத்தியமா சொல்ல மாட்டேன் பெரியம்மா.”

“சரி, கிட்ட வா.”

அலமேலு பெரியம்மாவை உரசிக்கொண்டு நின்றாள். பெரியம்மா அலமேலுவின் காதில் விஷயத்தைப் போட்டு உடைத்தாள். அலமேலுவுக்கு கண்கள் வண்ணத்துப் பூச்சியின் ‘றெக்கை’ மாதிரி விரிந்துவிட்டது.

ஆனால் அன்றைக்குப் பொழுது இருட்டுவதற்குள்ளேயே கல்லிடைக்குறிச்சி பூராவும் விஷயம் பரவிவிட்டது.

மாரியம்மன் கோயில்; பொட்டல்; தெப்பமேடு; பஜனை மண்டலி; கமர்ஷியல் அப்பளம் இடுவோர்கள்; இப்படி ஒரு இடம் பாக்கியில்லாமல் மாமிகள் உட்கார்ந்துகொண்டு இதையேதான் பேசிச் சிரித்தபடி பொழுதைப் போக்கினர்.

அன்று வைகுண்ட ஏகாதசி.

ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில்.

வேதவல்லி மாமி தன் தொண்ணூற்றி இரண்டு வயதுத் தாயாரை கைத் தாங்கலாக பெருமாளைச் சேவிக்க கோயிலினுள் மெதுவாக நடத்தி அழைத்து வந்தாள். அனைவரும் அந்த அம்மாவை அதிசயமாக, ஆச்சர்யத்துடன், மரியாதையுடன் பார்த்தனர். அவள்தான் வேதவல்லியின் பிரமிக்க வைக்கிற அழகுக்கு அச்சாரம் போட்டவள் என்கிற மரியாதை இருக்காதா பின்னே?

அலமேலுவிடம், பெரியம்மா அன்று சொன்ன ரகசியம் இதுதான்:

“வேதவல்லி ஒரு அழகான ராட்சசி அம்புலு… அந்தக் காலத்துல அவங்க அம்மாகிட்ட அந்த அழகிய ராட்சசி பன்னிரண்டு வயசு வரைக்கும் பால் குடிச்சிருக்கான்னா பாத்துக்கயேன்….”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *