அறக்கிளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2019
பார்வையிட்டோர்: 9,117 
 

நிழலை உதிர்த்துக்கொண்டே இருந்த பேரீச்சை மரத்தடியில், நீல ஜீன்ஸ்பேண்ட் பையில் வலது கையை நுழைத்துக்கொண்டு இடது கையை உயர்த்தி ஈச்சயிலை ஒன்றை பிடித்தப்படி மூவளைவு கொண்டு நின்றான் சரவணன்.

தேன் வண்ணக்கனியும், மஞ்சல் வண்ண செங்காய்களும் நிறைந்த பேரிச்சைக்குலைகளோடு பாலையில் முலைத்த தேர்போல் நின்றது அந்த வெயிலுக்கு மறத்துபோன மரம்.

ஈச்சயிலையின் நிழல் அவனின் வெள்ளை டி-சர்ட்டில் விழுந்து புதிய வடிவங்களை கணம்தோறும் வரைந்து அழித்துக்கொண்டு இருந்து.

பாலைமண்ணில் வேட்டைநாய்போல அலையும் வெயில் மின்துகள்கள் வழிவதுபோல நீந்திக்கொண்டே சென்று தூரத்தில் நீர்அலைகள் அலையடிப்பதுபோல நதியென கண்களை ஏமாற்றியது.

பாலை மண்ணில் முளைத்திருந்த இலையில்லா சிறுசிறு செடிகள் தூக்கி எறிந்த துறுவேறிய கட்டுக்கம்பி போல குந்தியிருந்தது.

மணலில் உதிர்ந்த காப்பித்துள் வண்ணக்கனிகளின் புழுங்கிய மணம் அவன் நாசியையும், தேன்தேடும் தேனீக்களின் ரீங்காரமும், கனி உண்ணும் சிட்டுகளின் சலசலப்பும் செவியை நிறைப்பதை மறந்து தன்னில் ஆழ்ந்து தனக்கு தானே தூரத்தில் இருந்தான். அவன் ஓட்டிவந்த வெள்ளைநிற ஏசி டொயோட்டா காம்ரிக்கார் அருகில் இசைத்தப்படி நின்றது.

தலைமுடிக்குள் ஈரப்பதத்தை உருவாக்கும் பாலை வெயில்காற்று, பாலை மண்படிந்து நிறம்மங்கிய ஈச்சயிலையில் புதுந்து குளிர்சூடுக்காற்றை சரவணன் மீது வழியச்செய்தது. சரவணன் சுடுக்காற்றையும் குளிர்க்காற்றையும் ஒன்றாக அனுபவித்தான். ஒரே மூழ்களில் சுடும்நீரும் தண்ணீரும் உடல்தொடும் கணம்.

அவனையும் அறியாமல் “ஏசிக்காற்றில் எவ்வளவு குளிர் இருந்தாலும் உயிர் இருப்பதில்லை, இந்த இலைக்காற்றின் ஒவ்வொரு துளிக்கும் உயிர் இருக்கு” என்று வாய்விட்டுச்சொன்னான்.

அவன் வார்த்தைகள் அவனை எழுப்பிவிட தன்னிலை உணர்ந்து தலை திருப்தி விழி சுழல சுற்றும் பார்த்தான். யாரும் இல்லை. யாருமில்லாதது சுகமாக இருந்தது. மனிதன் மனிதனிடமிருந்து தன்னை மறைத்துக்கொள்வதைதான் மாபெரும் திறமையாக நினைக்கிறான் என்ற நினைப்பு அவனுக்குள் எழ ஒரு புன்னகையை சுவைத்தான். அந்த புன்னகை அவன் நாவில் ஒட்டி நழுவியது அந்த நேரத்திற்கு இதமானதாக இருந்தது.

ஈச்சமரத்தின் நிழல்காற்று உடலை குளிர்வித்தாலும் உள்ளம் பாலையின் மணல்போல் சூடு ஏறி தகித்தது.

“வாழ்வதற்காக சாகிறோம்” என்று சிரிக்கும், “தங்கச்சிகளை கரைச்சேர்க்கணும், கரைச்சேர்க்கணும்“ என்று சொல்லியபடியே ஐந்து ஆண்டுகளாய் நாட்டுக்குச்செல்லாமல் சௌதியில் உழலும் கடலூர் பொன்வண்ணனின் நித்தியவாசகம் நினைவில் எழ அவன் முகம் அருகில்வந்துபோனது. “வலி தரும் சோகம் உள்ளம் நெகிழவைக்கும் நகைக்சுவையாக உருமாறுமோ? அப்படி என்றால் சோகம் என்ற ஒன்று இல்லைதானோ? சோகம் மனதின் கற்பிதமோ?”

அந்த மரம் விரித்த நிழல் கம்பளத்தை தாண்டாமல் மரத்தை சுற்றி சுற்றி நடந்து வந்தான். உதிர்ந்த பழங்கள் காலணியில் மிதிப்படாமல் இருக்க வலமும் இடமும் கால் மாற்றி மாற்றி நடந்தான். அப்படியே பறந்து ஒரு பறவைபோல இந்தியா சென்றுவிட நினைத்தான். அப்பொழுதே தேன்மொழியை பார்க்கவேண்டும்போல் மனம் துடித்தது.

தேன்மொழி போன் செய்வாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை. நினைக்காதது நடப்பதால்தான் மண்ணில் இத்தனைக்கோடி மக்கள் வாழ்ந்தாலும் வாழ்க்கை புதியதாக இருக்கிறதா?

இன்று காலை அலுவலகத்தில் இருந்தபோது இந்தியாவில் இருந்து அழைப்பு. எந்த எண்கள் இந்தியாவில் இருந்துவந்தாலும் அழைப்பை துண்டித்துவிட்டு இவன்தான் மீண்டும் அழைப்பான். புதிய எண்களாக இருக்கிறதே என்று நினைத்தப்படியே அழைப்பை துண்டித்துவிட்டு, இவனே மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்தான். வழக்கத்திற்கு மாறான நேரத்தில் போன் வந்தாலும், பழக்கமில்லாத எண்கள் அழைத்தாலும் மனம் ஏன் பதறுகிறது?. ஒரு நற்செய்தி வரும், அது ஒரு ஆனந்த அழைப்பாக இருக்கும் என்று ஏன் மனம் எண்ண மறுக்கிறது?. மனிதமனத்தின் ஆழம் பாசிமூடிய நீர்தெரியாத குளம்போல தெரியாத பயத்தால் நிறைந்து இருக்கிறது. காலம் அதன்மீது கல்லெறியும் போதெல்லாம் பயம்தெறித்து மனிதனை நனைக்கிறது.

“தேன்மொழி பேசுறேன் சார்” தூரம் ஒலியால் சுருங்கிவிட்டதன் ஆனந்தம் அவள் குரலில் மலர்கிறது என்று இவன் நினைப்பதற்குள், இலைநுனி மழைத்துளி பட்டென சிதறுவதுபோல சரவணனுக்குள் திரண்ட பரவசம் வடிவங்கொள்வதற்குள் அவள் அழுகையால் வெடித்து சிதறியது. .

தேன்மோழி, சரவணன் படித்த நடுநிலைப்பள்ளியில் ஏழாம்வகுப்பு படிக்கிறாள். சரவணன் இப்பொழுது சௌதி அரேபியாவில் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியலாளராக பணிசெய்கிறான்.

“தேன்மொழி“ என்று அலுவலகத்தையும் மறந்து ஆனந்தக் கூச்சல் போடபோனவன், அவள் அழுவும் ஒலியால் மனம் மடக்கப்பட்டு, என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்து, அலுவலத்தில் யாராவது தன்னைப்பார்க்கிறார்களா என்று கண்களால் துழவி, நெற்றியில் வழியும் தன் முடியை இடதுகையால் நீவி தலைக்கு ஏற்றிக்கொண்டு வெளியே வந்தான். தேனீர் அறையில் இருந்து வந்த பிலிப்பைன் அக்கவுண்டன்ட் புன்னகைத்தப்படி தாண்டிப்போனான், அவன் கையில் இருந்த காப்பியின் மணமும், அவன்மீது தெளிக்கப்பட்டிருந்த வாசனைத்திரவியமும் நாசி வழியேறி உடலை தடவியது, அதையும் தாண்டி அவன் உண்ணும் உணவின் மணம் அவனோடு ஒட்டிக்கொண்டே வருவதுபோல் குமட்டவைத்தது. ஒருவருக்கு சுவைப்பது ஒருவருக்கு குமட்டுவது பழக்கத்தின் விளைவோ?!

தேன்மொழியின் அழுகையால் ஏற்பட்ட பதட்டத்தில் அலுவலக ஏசியின் குளிரையும் தாண்டி அவனுக்கு நெற்றிப்பொட்டில் வியர்வை துளிர்த்தது. மேல் உதட்டை மடித்து கீழ் வரிசைப்பற்களால் கடித்துக்கொண்டே நடந்தான். இன்னும் தேன்மொழி அழுதுக்கொண்டுதான் இருந்தாள். எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் யாரோ முள்ளை பாதையாக்கி இழுத்துப்போவது போன்ற தவிப்புடன் நடந்தவன் செல்லிடப்பேசியின் அழைப்பை துண்டித்தான்.

இது அவன் அலுவலக நேரம், தேன்மொழியின் அழுகை ஒலி தட்டியதில் சுருங்கிய மனம் மீண்டும் வேலை நாற்காலியில் உட்காரும் விதமாக விரியவில்லை. மேலதிகாரியிடம் அனுமதிப்பெற்று வெளியெற நினைக்கும்போதே, மேலதிகாரியின் ஆணவத்தின் நினைவு அமிலமென உள்ளத்தை சுட்டது. கணிணிக்கு கொடுக்கும் கவனத்தை பார்க்கவந்தவர்களுக்கு கொடுக்க மாட்டார். கவனத்தை கொடுக்கமாட்டாரே தவிர அடுத்தவர்கள் தரும் பணிவின் எல்லையை அளந்துகொண்டே இருப்பார். அடுத்தவரிடம் அதித பணிவை எதிர்பார்க்கும் மேல்அதிகாரிகள் தன்னை காணவரும் ஊழியர்களை அவமதிப்பதில் எல்லை கடப்பது ஏன்? அடிப்படை மனித பண்புகூட இல்லாத, வடிவத்தில் மட்டும் மனிதர்கள். நாற்காலியால் மரியாதை பெறுபவர்கள். மனிதநாற்காலிகள். நாற்காலியால் மரியாதை பெறுபவன் நாற்காலியைவிட சிறியவன் என்பதை நாற்காலியே ஒருநாள் உணர்த்தும்.

கடமை வயிறு வாழ்க்கை என்று ஒவ்வொருவருக்கும் அவர் முன் நிற்கவேண்டி உள்ளது. இதுதான் விதியா? கர்மவா? மேலதிகாரியிடம் அனுமதிப்பெற்றுக்கொண்டு வெளி அலுவல்களை கவனிப்பதுபோல் தன் காரை எடுத்துக்கொண்டு இங்குவந்துவிட்டான். அவனுக்கு அவனிடமிருந்தே தனிமை தேவைப்பட்டது.

மழையில்லா விவசாயத்தின் வலியும், கிராமவாழ்க்கையின் சுருங்கிய பொருளாதார எல்லையும், எதிர்கால வாழ்க்கையின் புதிய கதவுகளுக்கு முன்பு நிற்கதியாக நிறுத்தும் அவலம் புரிய தொடங்கியபோது அப்பாவின் தூண்டுதலால் உழைப்பால் வழிகாட்டுதலால் வாங்கிய பொறியியல் பட்டம் சௌதிக்கு கதவுதிறந்துவிட்டது.

இந்திய மாநிலங்களை இணைக்கும் ஹிந்தியும், உலகை இணைக்கும் ஆங்கிலமும் முழுமையாக பேச இயலாதபோது கண்ணிருந்தும் குருடாக, வாயிருந்தும் ஊமையாக கனல்மீது நின்ற தருணத்தில் விழுந்த அனுபவவிதையால் முளைத்ததுதான் அவன் படித்த பள்ளியில் அவனால் நடத்தப்படும் ஹிந்தி மற்றும் ஆங்கிலமொழி பேசும் வகுப்பு. அதற்குறிய தற்காலிக ஆசிரியர் ஊதியத்தை அவனும் அவன் நண்பர்களும் ஒரு அறக்கட்டளை நிருவி செயல் படுத்தினார்கள். அது நன்றாக செயல்படுகின்றது, நற்பயனையும் விளைவிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் விடுப்பில் ஊருக்கு செல்லும்போது பள்ளிக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்து பள்ளிக்கு தேவையான நற்காரியங்கள் செய்துக்கொடுத்து, பிள்ளைகளுக்கு எழுத்து, பேச்சு, ஓவியம் என்று போட்டிகள் வைத்து பரிசுக்கொடுப்பது வழக்கம். இந்த முறை ஆங்கிலப்பேச்சுப்போட்டியும் ஹிந்தி கட்டுரைப்போட்டியும் வைத்தார்கள். அதில் முதல் பரிசுப்பெற்றவள்தான் தேன்மொழி.

அவனுக்கு தேன்மொழியை முதல்சந்திப்பிலேயே பிடித்துவிட்டது. அவள் பூந்தொட்டத்தில் ஒரு பொன்னாங்கன்னிகீரை. இல்லாமையாலேயே இருப்பவளாக தோன்றினாள். அவளிடம் ஒரு அழியாத செல்வம் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருந்தாள். அது அவளின் எளிமையா?. அந்த புன்னகையா? குளிர்ந்த பார்வையா? களங்கமில்லா குழந்தைமையா? எதையும் மிகைஇல்லாமல் குறையில்லாமல் செய்யும் செயலா?

அவள்தான் கடவுள் வாழ்த்துப்பாடினால் நன்றாக இருந்தது. அவளுக்கு தேன்மொழி என்று யார்பெயர் வைத்திருப்பார்கள். சிலபெயர்கள் சிலநபர்களுக்காகவே காத்திருக்கிறது. நன்றாக இருந்தது என்பதுடன் அவளால் அந்த பாடல் அழகாகவும் இருந்தது. அழகு என்பது உடல் சார்ந்த விசயம் இல்லை என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்தினாள்.

உருவசையும்போது உடன் அசையும் நிழல்போல் அவள் அழகோடு அறிவோடு திறமையோடு வறுமையும் உடன் அசைந்தது. அன்று பள்ளியில் பரிசு அளிக்கும் விழா என்பதால் அனைத்து மாணவமாணவியரும் புத்தாடையில் வந்திருந்தார்கள். ஆனால், தேன்மொழி மட்டும் வழக்கம்போல சீறுடையிலேயே வந்திருந்தாள் அதுவும் வெளுத்து, துவைத்த சுருக்கங்களோடு இருந்தது.

அன்று அவன் பட்டில்நெய்த மயில் பின்னல்வேலைப்பாடு கொண்ட மயிலிறகு வண்ண முழுக்கை குர்தாவும் தாழம்பூவண்ண பைஜாமாவும் அணிந்து இருந்தான். அவள் ஆடையைப்பார்த்து தன்ஆடையைப்பார்த்த அந்த கணத்தில், சப்பாத்திபழ முள்ளை தரையில் தேய்ப்பதுபோல யாரோ தன் நெஞ்சில் தேய்ப்பதை உணர்ந்தான். மனித அகங்காரம் அடுத்தவர்களை சீண்டுவதன் மூலம் தன்னை உயர்த்திக்காட்டுகின்றது, அதுவே அடிபடும்போது எத்தனை வலியாக இருக்கிறது. எழுந்து ஓடி அந்த ஆடைகளை அவிழ்த்து எறிந்துவிட்டு, எப்போதும் அணியும் வழக்கமான பிறர் கண்களை உறுத்தாத ஆடைகளை அணியவேண்டும்போல் இருந்தது அல்லது தேன்மொழிக்கு அந்த பள்ளியிலேயே யாரும் போட்டுப்பார்த்திராத புதுமையான விலை உயர்ந்த ஆடையை வாங்கி வந்து அணிந்துக்கொள்ளச்சொல்லிப் பார்க்கவேண்டும்போல் இருந்தது. மனம் ஒரு குருடன், எல்லா திசைகளிலும் சிறகின்றி பறக்கிறான், கூடவே வாயில்லாமல் பேசுகிறான். ஆனால் அவன் கடந்ததூரம் என்பது இல்லவே இல்லை.

விழாத்தொடங்கிவிட்டது. எல்லாம் நடந்துக்கொண்டு இருந்தது. அவனும் செயல்களில் ஈடுப்பட்டுக்கொண்டே இருந்தான். அவள் அதே ஆடையுடன் பரிசு வாங்கினாள். அவன் அதே ஆடையில்தான் பரிசு வழங்கினான். அவள் பரிசுவாங்கிக்கொண்டு செல்லும்போது திரும்பி முகம் குனிந்து இமையுயர்த்தி புன்னகைவிரிய ஒரு பார்வைப்பார்த்தாள் அது தேவதைகளின் பார்வை. தேவதைகளுக்கு அழகு ஆடையாளா வரும்?. அவனின் ஆடையின் அழகு விலை எல்லாம் உதிர்ந்துக்கொண்டு இருந்ததை உணர்ந்தான். வழக்கமாக அவன் ஆடம்பரமாக ஆடை உடுத்தி தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில்லை. இயல்பாக இருப்பதையே அவன் அகம் விரும்பும். குடும்பத்தாரின் விருப்பத்திற்காக இன்று அணிந்துவந்திருந்தான். அவனின் காரைப்பழ உதடுகளில் ஒரு புன்னகை பூத்தது. அந்த புன்னகை அவனுக்குள் இருந்த சுமையை நீர்க்கச்செய்தது.

தலைமை ஆசிரியர் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொண்டதும். அவன் என்ன பேசுவது என்று யோசித்தான். வேலைப்பார்க்கும் நாட்டில் யாரிடம் எதை பேசினாலும் கடைசியில் ஒரு அறிவுரையோடுதான் முடிப்பார்கள் என்பதை அறிந்திருந்ததால் அறிவுரைச்சொல்வதைவிட ஏதேனும் ஒரு கதையை சொல்லலாம் என்று தோன்றியது. ஏன் வேலைப்பார்க்கும் நாட்டில் இருப்பவர்கள் மட்டும் அறிவுரைச்சொல்கிறார்கள். ஏதோ ஒருவிதத்தில் எல்லோரும் தனிமையில் இருக்கிறார்கள், பாதுகாப்பின்மையை உணர்ந்திருக்கிறார்கள். அந்த பாதுகாப்பின்மையால் மற்றவர்கள்மீது ஏற்படும் பரிவால் அந்த அறிவுரையை வழங்குகின்றார்கள். அது ஒரு தாய்மை உணர்வு அல்லது நான் என்ற அகங்காரம். அகங்காரம் இல்லாமல் இருப்பதுபோலவே இருப்பதுதான் பரிவின்வெளிப்பாடா? என்று எண்ணியபடியே அறிவுரை வழங்குவதைவிட ஏதேனும் ஒரு கதையை சொல்லலாம் என்று நினைத்தான். கதைக்குள் இல்லாத அறிவுரையா? அவனுக்கு அந்த நேரத்தில் தோன்றிய கதையொன்றை சொல்லத்தொடங்கினான்.

”ஒரு ஊரில் அரக்கன் ஒருவன் இருந்தான். பறவை விலங்கு மனிதன் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் அடித்து சாப்பிடுவான். ஊருக்குள் புகுந்தால் கையில் மாட்டிய மனிதர்கள் அனைவரையும் பிடித்து கடித்து சாப்பிட்டுவிடுவான். ஊர் மக்கள் எல்லாம் அவனிடம் மண்டியிட்டு தங்களை விட்டுவிடும்படி கெஞ்சி கெஞ்சி வேண்டினார்கள்,அவர்களின் வேண்டுதலை கேட்ட அரக்கன் “மாதாமாதம் தனக்கு வேண்டிய உணவும் ஆடும் மாடும் கோழியும் மற்றும் மாதத்திற்கு ஒரு குழந்தையையும் உணவாகக்கொடுங்கள் உங்களை எதுவும் செய்யமாட்டேன். உங்களை யாரும் தாக்காமல் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்னான்.

ஊர் மக்கள் அதற்கு சம்மதித்து ஒரு மாதத்திற்கு வேண்டிய உணவு, காய்கறிகள், ஆடு, மாடு, கோழி மற்றும் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு குழந்தையையும் உணவாகக்கொடுத்தார்கள். அவன் ஊரின் நடுவில் உட்கார்ந்து அதை சாப்பிடுவான். அந்த குழந்தையை அவன் ஒரே நாளில் சாப்பிட மாட்டான். ஒவ்வொரு வேலைக்கும் ஒரு கையையோ காலையோ பிய்த்து தின்பான். உயிரோடு இருக்கும் குழந்தை வலிதாங்காமல் கதறும். அதைப்பார்த்து அவன் ரசிப்பான். ஊரில் உள்ள அனைவரையும் பார்த்து அந்த குழந்தை தன்னைக் காப்பாற்றும்படி கண்ணீர்விடும். எல்லோருக்கும் அந்த குழந்தையை காப்பாற்றும் எண்ணம்வரும் ஆனால் ஊரில் உள்ள மற்றவர்கள் சாகமல் இருப்பதற்காக, ஊரைக்காப்பதற்காக அந்த குழந்தை துன்பப்பட்டால் படட்டும் என்று மனதைக்கல்லாக்கிக்கொண்டு வாழ்ந்தார்கள்”.

சரணவன் அந்த இடத்தில் கதையை நிறுத்தி விட்டு, பயமும், பச்சாதாபமும், இரக்கமும் கலந்து, கண்ணீர் ததும்பும் விழிகளோடு அமர்ந்திருந்த கதைக்கேட்ட குழந்தைகளைப்பார்த்து அந்த குழந்தையை காப்பாற்றுவது சரியா? அல்லது அப்படியே விட்டுவிடுவது சரியா? என்றொருக் கேள்வியைக்கேட்டான். நான்கில் மூன்று பங்கு குழந்தைகள் காப்பாற்றவேண்டும் என்றார்கள். ஒரு பங்கு குழந்தைகள் காப்பாற்றவேண்டாம் என்றார்கள்.

தேன்மொழி மட்டும் எதுவும் சொல்லவில்லை. அவனுக்கு தேன்மொழி என்ன நினைக்கிறாள் என்று கேட்க ஆவலாக இருந்தது. அவளின் மௌனம் மேலும் வியப்பையும் ஆவலையும் அவனுக்கு தந்தது. மனம் வியப்பும் ஆவலும் கொண்டதாலேயே அவளிடம் கேட்பதை தவிர்த்துவிட்டு, காப்பாற்றுவதுதான் சரி என்று கைதூக்கிய குழந்தைகளைப்பார்த்து ”ஏன் காப்பாற்றவேண்டும்?” என்று கேட்டான்.

தேன்மொழி சட்டையின் சுருக்கத்தை நீவுவதுபோல் யார் யார் எழுகிறார்கள் என்று ஓரக்கண்ணால் பார்த்தாள். ஐந்து பெண்குழந்தைகளும், மூன்று பையன்களும் பதில் சொல்ல கைத்தூக்கினார்கள். சலனமில்லா மௌனம் அவள் முகம்முழுவதும் பரவி இருந்தது. ஆனால் வலியின் வேர்கள் அதில் படர்வதைப்பார்த்தான். அப்போதுகூட அவள் எழுந்து பதில் சொல்லமாட்டாளா? என்று ஏங்கியபடி அவளைப்பார்த்தான். அவளின் மௌனம் அவனை அவளை தாண்டிச் செல்லவைத்தது. “ஒவ்வொருவராக சுருக்கமாகச் சொல்லுங்கள்” என்றான்.

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக சொன்னார்கள் ஆனால் “அடுத்தவர் துன்பப்பட்டு நாம் சுகபடவேண்டுமா?. நமக்கு மனசாட்சி இல்லையா?” என்ற பொருளிலேயே அனைவரும் சொன்னார்கள்.

காப்பாற்றவேண்டாம் என்பவர்கள் பக்கத்தில் இருந்து யாரும் எழுந்திருக்கவில்லை. “ஏன்” என்றான் அவன். எல்லோரும் தலைகவிழ்ந்து இருந்தார்கள். மனசாட்சி என்ற சொல் அவர்களை அழுத்தி உட்காரவைத்துவிட்டது என்பதை புரிந்துக்கொண்ட சரவணன். “மற்றவர்கள் சொன்னபதிலில் குற்றவுணர்ச்சிப்பட்டோ அல்லது திருப்திப்பட்டோ சும்மா உட்கார்ந்துவிடக்கூடாது. நீங்கள் முன்னம் என்னநினைத்து காப்பாற்றவேண்டாம் என்று சொன்னீர்களோ அதற்கான காரணத்தைச்சொல்லுங்கள் அதுதான் சுயசிந்தனை. மரம்பெய்யும் மழைபோல நாம் அடுத்தவர் பதிலில் திருப்தி அடைந்துவிட்டால் அதன்பின்பு வரும் கேள்விக்கு சுயமாய் சிந்திக்கமுடியாமல் ஆகிவிடும் எனவே நல்லதோ கெட்டதோ நினைத்ததை பேச பழகவேண்டும். “ம்“ எழுந்து பதில் சொல்லுங்கள்” என்றான்.

அனைவர் தலைகளும் நிமிர்ந்தன, முகத்தில் படர்ந்திருந்த தாழ்வுமனப்பான்மை நிழல் விலகி ஒளி படர ஒவ்வொருவராக எழுந்து பதில் சொன்னார்கள். வெவ்வேறு விதமாக ஆரம்பித்து “பலரின் நன்மைக்காக ஒருவர் தன்னை தியாகம் செய்வது தப்பில்லை” என்று முடித்தார்கள்.

தேன்மொழி இப்பொழுதும் மௌனமாகத்தான் இருந்தாள். யாரையும் பார்க்காமல் தான் வாங்கிய பரிசுப்பொருளைப்பார்ப்பதுபோல குனிந்துகொண்டு இருந்தாள். “தேன்மொழி நீ என்ன நினைக்கிறாய்” என்று சரவணன் கேட்டுவிட நினைத்தான். வலதுகையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்சை சரிசெய்வதுபோல அவளைப்பார்த்தான். தொண்டைக்குழிவரை வார்த்தை வந்துவிட்டது.

“நீங்க என்ன சார் நினைக்கிறீங்க?” என்று ஒரு பெண்குழந்தை எழுந்து நின்று கேட்கவும், சரணவன் சுதாரித்துக்கொண்டு, லேசாக சிரித்தப்படியே வலது புறம் அமர்ந்திருந்த தலைமையாசிரியரைப்பார்த்தான். அவர் நரைத்த பெரியமீசையை நீவியப்படி “அதிக பிரசங்கி உட்காரு“ என்றார். இடது புறம் அமர்ந்திருந்த கணக்கு வாத்தியார், “எனக்கும் ஆவலாக இருக்கு சார். நீங்க என்ன நினைக்கிறீங்க“ என்று ஓசையில்லா ஒலியில் கேட்டார். கணக்கு வாத்தியாரின் ஆவல் மற்ற ஆசிரியர்களுக்கும் பரவி முகஅசைவின் மூலம் வெளிப்பட்டது.

சரவணன் சிரித்துக்கொண்டே எழுந்து குர்தாவின் இடதுகையின் சுருக்கத்தை இழுத்து நீவியபடியே பேசினான். “மனசாட்சி, தியாகம் என்பது எல்லாம் அறம் என்னும் சொல்லின் வேறு முகங்கள். கட்டற்ற ஆசையில் விழுந்து தீமைகள் செய்யும் மனத்தை தடுத்து நேர்வழியில் கொண்டு சென்று வாழ்க்கையை உயர்ந்ததாக ஆக்க உலகில் இருக்கும் கருவிதான் அறம். அறமுடைய ஒவ்வொரு செயலும் மனிதனை மாண்பு உடையவனாக உயர்த்தும். அறம் நம்மிடம் இருப்பதால் தான் மற்றவர்கள் துன்பத்தை நீக்கவேண்டும் என்ற மனசாட்சியுடன் வாழ்கின்றோம். அறம் நம்மிடம் இருப்பதால்தான் நாம் அழிந்தாலும் பரவில்லை மற்றவர்கள் வாழவேண்டும் என்ற தியாகத்தை செய்கிறோம். அறம் நம்மிடம் இருப்பதால்தான் நமக்கு வாழ்க்கையில் நிம்மதி ஏற்படுகிறது. அறம் இருப்பதால்தான் உலகில் சுயநலத்தின் எல்லை முடிவிற்கு வருகிறது. அறமே மனிதனை தெய்வநிலைக்கு உயர்த்துகிறது. உங்கள் இருவர் குழுவும் சொன்னது சரிதான். ஆனால் அடுத்தவர்கள் தியாகத்தில் நாம் வாழ்வதாக இருக்கக்கூடாது, அடுத்தவர்கள் வாழ்க்கைக்காக நாம் தியாகம் செய்தவர்களாக இருக்கவேண்டும்” என்று கூறி, குழந்தைகளுக்கு வாழ்த்தும் ஆசிரியர்களுக்கு நன்றியும் கூறி சரவணன் தன்வீட்டிற்கு தன் இன்னோவா காரில் புறப்பட்டான். குழந்தைகள் அனைவரும் சுற்றி நின்று கையசைத்து அவனுக்கு நன்றி சொன்னார்கள். தேன்மொழியை அவன் விழிகள் தேடின, ஆனால் அவள் அங்கில்லை.

சரவணனனின் கார் பள்ளிக்கூடத்தின் தெருவைக்கடந்து கிழக்குதிசையில் திரும்பியபோது தேன்மொழி அவனுக்காக காத்திருந்ததுபோல் பரிசுப்பொருளை ஒருகையில் தாங்கியப்படி கையசைத்து டாட்டாக்காட்டினாள். சரணவன் காரை அவள் அருகில் நிறுத்தி கார்க்கதவை திறந்து ஏறிக்கொள்ளச் சொன்னான். சிரித்துக்கொண்டே ஓடி வந்து ஏறிக்கொண்டாள். அவள் நளினமாக காரில் ஏறி உட்கார்ந்ததும் காருக்கே ஒரு அழகுவந்ததுபோல் இருந்தது.

இறைவன் சில பெண்களை தேவதைகளை கிள்ளி எடுத்து செய்கிறானோ? ”அந்த கதையைப்பற்றி உனது பதில் என்ன?” என்று கேட்க அப்போதும் நினைத்தான், அவளே விரும்பினால் சொல்லட்டும் என்று விட்டுவிட்டான். மடியில் பரிசுப்பொருளை வைத்துக்கொண்டு மென்மையாக சாய்ந்து இருக்கையுடன் இயல்பாக ஒட்டிக்கொண்டாள். பூவில் உட்கார்ந்திருக்கும் பூப்பொல. நான்கு கையிருக்கா என்று பார்க்கதோன்றும் அமர்வு. அதற்குள் அவள் வீடு வந்துவிட்டது. “சா..ர்.. நிறுத்துங்க நிறுத்துங்க எங்க வீடு தாண்டிப்போய்விட்டது“ என்று திரும்பிப்பார்த்தாள். “போகட்டும், எங்கள் வீட்டுக்கு வந்துடேன்“ என்றான் சிரித்தப்படி சரவணன்.

“ஐயோ..அதெல்லாம் வேண்டாம் சார். என்னை இறக்கிவிடுங்கள். பாட்டியும் அம்மாவும் தேடும்“ என்று முகம் சுண்டிவிட கூறினாள். அவள் உடலில் பயத்தின் அசைவு இலைநுனி புழு துடிப்புபோல பரவியது.

“டோண்ட் ஒரி, இப்படியே கடைத்தெருவு வரை ஒரு ரவுண்ட்போயிட்டு வருவோம் வா. பயப்படாதே“ என்றான். அவள் சற்று அமைதியாக இருந்தாள், எதுவும் பேசவில்லை. சரவணன் வண்டியின் ஒலிப்பெட்டியை இயக்கிப்பாடவைத்தான். சட்டென்று தேன்மொழியின் குரல்வளம் நினைவில் எழுந்ததால் பாடல்ஒலியை குறைத்துவிட்டு. “நீ ஒரு பாட்டுப்பாடு” என்றான்.

எந்த வித மறுப்பும் இன்றி,“இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவினில் தொட்டிலைக்கட்டிவைத்தேன்“ என்று இனிமையாகப்பாடினாள். தன்னிடம் உள்ளதை மறுபின்றி உலகுக்கு வழங்குவதே ஒரு மாபெரும் தெய்வபண்புதான் என்று அவனுக்கு தோன்றியது. அவள் அந்தப்பாடலை அப்பொது அங்குபப்பாடுவாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை. அந்தப்பாடல் அவனுக்குள் பெருவெளியைத்திறந்து அவனை உள்ளிழுத்துக்கொண்டு ஆனந்தத்தில் மூழ்கடித்தது. அவளை அள்ளி மார்போடு அனைத்துக்கொள்ளவேண்டும்போல் மனம் பரபரத்தது. அந்த சின்னப்பரிசு அமர்ந்திருக்கும் மடியில் தலைசாய்த்து கண்மூடவேண்டும்போல் நெஞ்சம் கரைந்தது. பாடும்போது இவள் தேன்மொழி இல்லை, வேறு யாரோ. தனியன் என்பதுபோல் தோன்றினாள் அல்லது உலகம் முழுவதையும் ஒன்றிணைப்பவள்போல் உருவுகாட்டினாள். .

சரணவன் கடைத்தெருவிற்கு சென்று தேன்மொழிக்கு வண்ணமின்னும் விலையுயர்ந்த புதிய ஆடையும் திண்பண்டமும் வாங்கிக்கொடுத்து வீட்டிற்கு அருகில் கொண்டுவந்து விட்டான்.

தேன்மொழி மகிழ்ச்சியுடன் நன்றிச்சொல்லி வீட்டிற்கு செல்லும் அழகைப்பார்த்துக்கொண்டே சாலையோரத்தில் வண்டியில் சாய்ந்துகொண்டு நின்றான். செவ்வண்ணம் நிறைந்த மாலைநேர சூரியன் பொன்தட்டில் வைத்த செந்திலகம்போல் மின்னியது. அதை எடுத்துச்சூடிக்கொள்ள செல்லும் தேவதைபோல அவள்போய்கொண்டே இருந்தாள். அவள் வீடு அருகில்தான் இருந்தது. எல்லாம் மறைந்து அந்த வான்திலகசூரியனும் அவளும் மட்டும் பிரபஞ்சமாகியதுபோல் பார்த்துக்கொண்டு நின்றான். “இப்பொழுதாவது அவள் அந்த கதைக்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்தற்கு காரணம் சொல்லுவாளா? என்று நினைத்தான்.

நடந்துக்கொண்டு இருந்த தேன்மொழி சட்டென திரும்பி வேகமாக அவனை நோக்கி வந்தாள். சிவந்த சூரியனை பிடறியில் சூடிய இளம்சிம்மம் அசைவதுபோல் இருந்தது அவள் வருகை. அவன் அருகில் வந்தவள். “அந்த கதைக்கு நான் என்ன பதில் சொல்வேன் என்று நினைத்துக்கொண்டு நிக்கிறீங்களா சார்“ என்றதும் சரவணன் அதிர்ந்து “ஆம்” என்பதுபோல் அவசரமாக தலையசைத்தான்.

தேன்மொழிக்குள் மீண்டும் மௌனம் வந்து படர்ந்தது. தலைக்குனிந்து கால் கட்டைவிரல்நுனியால் பூமியில் ஒரு கோடு இழுத்தாள். கால்நுனி சிவந்து விரல் நகம் சூரியஒளிப்பட்டு படிகம்போல் மின்னியது. படியவாரிய அவளின் தலையில் நேர்க்கோடுபோல ஓடிய வாக்கு அவளை இரண்டாக பிரிப்பதுபோல் தோன்றியது. அளந்து நேர்த்தியாக செய்ததலை. ஒவ்வொரு முடியும் நரம்புபோல் சரியாக படிந்து சடையாகி மின்னியது. இந்த தலையில் பனித்துளி மின்னும் ஒரு ஒற்றை ரோஜாவை வைத்தாள் அந்த ரோஜா எத்தனை அழகாக இருக்கும் என்று சரவணன் நினைத்தபோது அவள் தலை உயர்த்தி அவனைப்பார்த்தாள். சித்திரத்தில் எழுதியதுபோன்ற அந்த மஞ்சள் முகத்தில் துடிக்கும் மீன்விழியில் கண்ணீர் படர்ந்து இருந்தது. சரவணன் பதறிவிட்டான். அளவாக நகம் வெட்டப்பட்ட ஆள் காட்டிவிரல் நுனியால் விழிநீரை சுண்டிவிட்டவள் சிரித்தாள். யாரடி பெண்ணே நீ?, அணங்கா? தேவதையா? அன்னையா? தோழியா? மகளா? அல்லது அனைத்திற்கும் மூலமான ஆதிபராசக்தியா? சரவணனின் எண்ண அலைகள் அவனை அள்ளி அள்ளிச் சென்ற அந்த தருணத்தில், அருகில் இருந்த அங்காளபரமேஸ்வரி ஆலயத்தின் மாலைநேர தீபாராதனை மணி கிணிங்கிணிங்கிணிங் என்று ஒலித்தது. சரவணன் நரம்புகளில் வீணையின் நரம்பதிர்வு, இசையின் நடனம்.

“மற்றவர் துன்பத்தை துடைக்க நினைப்பது மனசாட்சி. மற்றவருக்காக துன்பத்தை தாங்கிக்கொள்வது தியாகம். தானும் நல்லா இருக்காம, மற்றவர்களையும் நல்லா இருக்கவிடாம வாழ்ற வாழ்க்கைக்கு என்ன பேருசார்?”

நரம்பறுந்த வீணைபோல் சரவணன் மனம் அதிர்ந்து அடங்கியது. அவளே பேசட்டும் என்று அவளை கூர்ந்து நோக்கியபடி மௌனமாக நின்றான். அவள் மூக்குநுனி சிவந்து புடைத்தது.

“என்னோட அப்பா, அம்மாவும், ஆயாவும் கூலிவேலைக்கு சென்று சம்பாதித்து வரும் பணத்தை எடுத்துப்போய் டாஸ்மார்க்கில் தண்ணி அடித்துவிட்டு வந்து தினமும் அம்மாவையும், பாட்டியையும் என்னையும் அடித்து துன்புருத்திவிட்டு, தானும் சுயநினைவு இல்லாம, இடுப்புல துணியில்லா ரோட்டில் விழுந்து கிடக்கிறார். தினமும் நரகவேதனை அனுபவிக்கிறோம். அந்த கதையில் வரும் குழந்தை அனுபவிக்கும் துன்பத்திற்கு ஒரு அர்த்தமாவது இருந்தது, நான் அனுபவிக்கும் துன்பத்திற்கு எந்த அர்த்தமும் இல்லை, எனக்கும் நன்மையில்லை, இதை உண்டாக்கும் என் அப்பாவுக்கும் நன்மையில்லை. அதனால்தான் அந்த கதைக்கு நான் எந்த பக்கமும் பதில் சொல்லவில்லை” என்று அழுதுக்கொண்டே சொன்னவள். மூக்கை இழுத்து உறிஞ்சியப்படி “இந்த பரிசைக்கூட நாளைக்கு வித்து தண்ணி அடிச்சிடுவாரு, நீங்களே வச்சிக்குங்க” என்று அவன்கையில் பரிசைத்தினித்துவிட்டு, கண்ணில் வழியும் கண்ணீரோடு அவனுக்கு சிரித்துக்கொண்டே டாட்டா காட்டிவிட்டு திரும்பி நடக்கத்தொடங்கினாள்.

இவளால் எப்படி இப்பவும் சிரிக்கமுடிகிறது?. சரவணனுக்கு சிரிப்பு என்பதே மறந்துவிடும்போல் இருந்தது. அவன் கொடுத்த பரிசு. கொடுக்கும்போது எத்தனை மென்மையாக இருந்தது, இப்போது எப்படி இத்தனை கனக்கிறது?

சரவணன் காலுக்கு கீழே யாரோ இருந்து உயிர் முழுவதையும் பூமிக்குள் இழுப்பதுபோல் வலி உணர்ந்தான். வண்டியின் கதவுக் கைப்பிடியை இருக்கிப்பிடித்துக்கொண்டான். கண்ணீர் ததும்பும் விழியோடு தேன்மொழியை திரும்பிப்பார்த்தான் அவள் வீட்டிற்குள் மறைந்துவி்ட்டாள். யாரோ ஒருவர் இடும்பில் கட்டியிருந்த கைலியை அவுத்து தோளில் போட்டுக்கொண்டு தள்ளாடி தள்ளாடி அவள் வீட்டைநோக்கிப்போவதை பார்த்த சரவணன் மெதுவாக நடந்துச்சென்று, தேன்மொழியின் பரிசை அவள் வீட்டு வாசலில் வைத்துவிட்டு அங்கு நிற்பதா அல்லது போவதா என்று தவித்து, பின் அவசரமாக வந்து வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக போனான்.

அதற்குப்பின்பு பலநாள் தேன்மொழியை பார்க்க நினைத்தான், ஆனால் என்னச்சொல்லி எப்படிப்போய் பார்ப்பது என்று இருந்துவிட்டான். அப்பாவுடன் தேக்கு மரம்வாங்க அந்த ஊருக்கு சென்றபோது, தேன்மோழி தெருபைப்பில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருப்பதைப்பார்த்ததும் அருகில் அழைத்து அப்பாவிற்கு அறிமுகப்படுத்தினான். அப்பா தனது வெள்ளைத்தாடியை இடது கையால் நீவியபடியே வலது கையை எடுத்து அவள் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்வதுபோல் சிரித்தார். அப்போது அப்பாவின் கண்கள் மின்னியது.

தேன்மொழி சிரித்துக்கொண்டே சரவணனைப்பார்த்து “ சார் உங்களுக்கு ஒரு சாரி, ஒரு தேங்க்யூ” என்றாள்.

“எதுக்கு சாரி . எதுக்கு தேங்க்யூ”

நான் பரிசை திருப்பிக்கொடுத்ததற்கு சாரி. நீங்க எங்க வீட்டுவாசலில் அதை கொண்டுவந்து வைத்தற்கு தேங்க்யூ”

நான் அன்று வீட்டுக்கு வந்ததைப்பார்த்தாயா?

“ஆம்” என்பதுபோல் தலையாட்டியவள். “அந்த பரிசை அப்பாவிற்கு தெரியாமல் அடுக்குபானையில் மறைத்து வைத்திருக்கிறேன்” என்று சிரித்தபோது கண்கள் மலர்ந்தது. “ அன்று நீங்கள் போட்டிருந்த ட்ரெஸ் சூப்பர்” என்று ஒரு துள்ளுத்துள்ளிச் சொன்னாள். அது ஒரு பட்டாம்பூச்சி தருணம். சரவணன் சத்தமில்லாமல் சிரித்தான். இப்போது அந்த ட்ரெஸை போட்டிருக்கவேண்டும்போல் தோன்றியது.

“எங்க வீட்டுக்கு வந்துடு, நான் படிக்கவைக்கிறேன்” என்று அப்பா மடியில் நழுவி விழுந்த கதர்வெள்ளைத்துண்டை இழுத்து சட்டைப்போடமல் திறந்துக்கிடந்த நெஞ்சை துடைத்துக்கொண்டே சொன்னார். ருத்ராட்சத்தில் இணைத்திருந்த பொன்மணி ஒளிர்ந்தது.

“அப்பா” என்று சரவணன் அப்பாவின் கைகளைப்பற்றிக்கொண்டான். அவன் உடல் சிலிர்த்தது.

மௌனமாக நின்ற தேன்மொழியிடம் சரவணனும் “வந்துவிடு, வீ்ட்டில் தங்கிப் படிக்கலாம். பாட்டுவகுப்புக்கு அனுப்புறேன். நீ பெரிய ஆளா வரவேண்டியவள்” என்றான்.

“அம்மாவையும், ஆயாவையும் நரகத்தில் விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி சார் சொர்க்கத்திற்கு வருவது” என்று சொல்லிவிட்டு, குரல் உயர கம்பீரமாக “மனசாட்சி..தியாகம்” எனறு அவனைப்பார்த்து கண்சிமிட்டிவிட்டு பாவாடை காற்றில் ஓவியம் வரைய ஓடிப்போனாள்.

“மனசாட்சி, தியாகம்” என்னும் சொல் அவள் வாய்வார்த்தையில் கேட்டபோது மலையளவு கனமானதாக, கடலளவு பரந்ததாக தெரிந்தது. சரவணன் மலைக்குகீழே தான் மாட்டிக்கொண்டதுபோல தலைக்குனிந்தான்.

“அவள் உண்ணி இல்லடா, ஊட்டி. எங்க இருந்தாலும் ஊட்டுவாள், எப்படி இருந்தாலும் ஊட்டுவாள், அவள் குழந்தையாக இருக்கும் தாயிடா” என்று விழிவிரிய சிரித்த அப்பாவின் நெற்றியில் இருந்த விபூதி வாசனையோடு பளபளத்தது. “அவள் பிழைத்துக்கொள்வாள், வண்டிய எடுடா“ என்றார் கண்கள் மின்ன.

விடுப்பு முடிந்து சௌதிக்கும் வந்துவிட்டான். வேலை பளுவில் தேன்மொழியையே மறந்துவிட்டான். அவளிடமிருந்துதான் போன். அதுவும் அழுகையோடு.

ஈச்சமர நிழலில் நடந்துக்கொண்டு இருந்த சரவணன் நின்று மீண்டும் போனை எடுத்து அந்த நம்பருக்கு தொடர்புக்கொண்டான். ஒலித்துக்கொண்டே இருந்தது. யாரும் அழைப்பை ஏற்கவில்லை. மூன்று நான்கு முறை அழைத்துப்பார்த்துவிட்டு யாரும் எடுக்காததால் சரவணன் தன் வண்டியில் ஏறி தனது வேலை நடக்கும் பகுதிக்கு சென்றான். மீண்டும் போன் ஒலித்தது. தேன்மொழியா? என்று அவசரமாகப்பார்த்தான். அலுவலக எண். அழைப்பை எடுக்காமல் தவறவிட்டான். அலுவக அழைப்பை எடுத்தாலும் தப்பு , எடுக்காவிட்டாலும் தப்பு. எடுத்தால் வேலையில் கவனமின்றி போனை நோண்டிக்கொண்டு இருக்கிற குற்றச்சாட்டு. எடுக்காவிட்டால் எங்கே போய் தொலைந்தாய் என்ற ஏச்சு. அடுத்த அழைப்புக்காக காத்திருந்தபோதே அலுவலக அழைப்பு வந்தது. உடனே எடுக்காமல் ஒலிக்கவிட்டு எடுத்தான். வேலை கவனத்தில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் பாசாங்கு. பாசாங்கு என்பதுகூட ஒரு திறமைதான் பொருள்யுகத்தில்.

“எங்க சார் போனிங்க, மேசன் மோகன் வெயில் தாங்கமுடியாமல் மயக்கம்போட்டு விழுந்துட்டான்”

“அடி எதாவது பட்டுவிட்டதா” என்று சரவணன் பதறினான்.

“நல்ல நேரம், கீழ இறங்கி வந்து தண்ணீர் குடிக்கும்போதுதான் இப்படி நடந்துப்போச்சி, ஆம்புலன்சுல அல் தோசரி ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப்போறோம். ஆபிசுக்கு செய்தி சொல்லிட்டு, அங்க வந்துடுங்க” என்ற டைவர் மணி அழைப்பை துண்டித்தார்.

மோகனுக்கு அடிபடவில்லை என்ற நினைப்பு துயரத்திலும் ஒரு நிம்மதியாக இருந்தது. வாழ்க்கையின் வடிவமே அதிசயமானதுதான். ஒவ்வொரு வலியிலும் இன்னொரு வலியின்மையை கண்டு ஆனந்தப்படுவது. மேலாளருக்கு போன்செய்து சொல்லிவிட்டு ஆபிசுக்கு சென்று மேசன் மோகனைப்பார்த்தான். குளுக்கோஸ் ஏறிக்கொண்டு இருந்தது. சரவணனைப்பார்த்து சிரித்தார். ஆதரவாக அவர்கையை தடவி நட்புடன் பிடித்துக்கொண்டான். அந்த நேரத்தில் அவனுக்கும் அந்த ஆறுதல் தேவையாகத்தான் இருந்தது. போன் அழைக்க எடுத்துப்பார்த்தான். மீண்டும் தேன்மொழியின் அழைப்பு.

அழைப்பைத்துண்டித்துவிட்டு வெளியில் வந்து சாலையைக்கடந்து சென்று எதிரே இருந்த நடைபாதை இருக்கையில் அமர்ந்து தேன்மொழியை அழைத்தான்.

“சார் நான் தேன்மொழிப்பேசுறேன், நல்ல இருக்கிங்களா?. அப்பா குடிக்கறது இல்ல, தினம் வேலைக்குப்போகிறார். என்னை அம்மாவை ஆயாவை நல்லாப்பார்த்துகிறார். இது அப்பா வாங்கியாந்தபோன், உங்களுக்குதான் முதல்ல பேசுறேன். நீங்க எனக்கு கொடுத்த பரிசை ஒரு நாள் கையில் எடுத்து ரொம்பநேரம் தடவிப்பார்த்துக்கிட்டே இருந்தார். இப்ப வேலைக்கு போகிறார். குடிக்காம வீட்டுக்குவருகிறார். தினமும் வேலைக்குப்போகும்போது அந்த பரிசை தொட்டுத்தடவிப்பார்க்காமல் போகமாட்டார் சார்” என்று அவள் பேசிக்கொண்டே இருந்தாள். சரவணன் மௌனமாக இருந்தான். அந்த மௌனம் அப்போது அவனுக்கு பிடித்திருந்தது.

பேசிக்கொண்டே இருந்த தேன்மொழி சட்டென பாடத்தொடங்கினாள். சரவணனுக்கு அப்பாவைப் பார்க்கனும்போல் இருந்தது.

– அக்டோபர்-09-2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *