விழிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2024
பார்வையிட்டோர்: 570 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாலை நான்கு மணியென்பதை விடாது கதறும் அலாரத்தின் ‘நாரச’ ஒலி. படுக்கையில் புரண்டவாறு மாதவன் வெறுப்புடன் அவ்வொலியை அடக்கினார். தலை முதல் கால் வரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி, எழுந்து உட்கார்ந்து கொட்டாவி விட்டுச் சோம்பல் முறித்தார். படுக்கையை விட்டு வெளியேற அவர் கால்கள் அறை கதவு வரை சென்று சட்டென்று நின்றன. திரும்பி வந்து படுக்கை விரிப்பைச் சீர் செய்தார். தலையணைகளை அடுக்கினார். போர்வையை மடித்து அவைகளின் மேல் வைத்தார். இரவு தூங்கப் போகுமுன் வாசித்த ஆங்கில நாவல், அருகில் மேசைமேல் விளக்கினடியில் விரித்த படியிருந்ததை அடையாளம் வைத்து மூடி வைத்தார். பிறகு, ஜன்னலை மறைத்திருந்த திரைச் சீலைகளை விலக்கி, அதன் கதவுகளைத் திறந்தார். காலை இளம் மென்காற்று படுக்கையறை முழுதும் பரவியது.

கிழக்கு வெளுத்துவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் உறங்கிக் கிடக்கும் உலகைத் தட்டியெழுப்பி, கடமையை உணர்த்தக் கதிரவன் தோன்றிவிடுவான்.

மாதவன் சுறுசுறுப்பாக கழிவறை, குளியலறைகளுக்குச் சென்று, காலைக் கடன்களை முடித்து, உடைமாற்றிக் கொண்டார்.

ஆதவன் வரவை அவர் வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்துப் பறவைகள் கட்டியங் கூறின. கிழக்கு வானம் சிவப்பு வண்ணம் பூசிக் கொண்டது. அதினின்றும் முளைத்த நீண்ட செஞ்சுடர்க் கதிர்கள் கீழ் அடிவானத்தில் பளபளக்கும் செஞ்சோதித் தட்டு எதிரே கடலினின்றும், குளித்தெழுவதை ஜன்னல் வழியே கண்டு, மறு கணம் மெய் மறந்து நின்றார். ஆகா எத்தனை அழகான காட்சி!

‘வான மெங்கும் பரிதியின் சோதி மலைகள் மீதும் பரிதியின் சோதி தானை நீர்க்கடல் மீதிலு மாங்கே தரையின் மீதுந் தருக்களின் மீதும் கான கத்திலும் பற்பல ஆற்றின் கரைகள் மீதும் பரிதியின் சோதி.

என்று சும்மாவா பாடியிருக்கிறார் பாரதியார். இந்த அழகான காட்சியை இத்தனை நாள் என் கண்ணுக்குத் தோணாது மறைத்தது பாழும் என் தூக்க இருளல்லவா?

மாதவன் அறையை விட்டு வெளிவந்தார். நா வறண்டு தாகம் எடுத்தது. முன்பெல்லாம் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே காலை மணி ஏழு ஏழரையாகும். அதற்குள் அவர் அருமை மனைவி பார்வதி குளித்து விட்டு,

புத்தாடையுடுத்து, ஈரத் தலையுடன் நெற்றியில் விபூதி குங்குமம் திகழ, தலையில் சூடிய மல்லிகை மலர்கள் நறுமணங் கமழ, கைவளை குலுங்க அவரை எழுப்பிச் சுடச்சுட பெட்காபி கொடுப்பாள். ஆ! அப்போது அவள் முகத்தில் மின்னும் புன்னகை, கனிவு, கவர்ச்சி. அதற்கும் ஒருநாள் சோதனை வந்ததே!

என்றும் போல்தான் அன்றும் காலையில் பார்வதி என்னை எழுப்பினாள். தூங்கி விழித்து என் கண்கள் காண்பது என்ன? வாட்டமே கண்டறியாத அவள் மதிமுகத்தில் தாங்க முடியாத சோகம்! மலர்விழிகள் கலங்கி நீராகக் கொட்டத் தயாராகயிருந்தன. காபிக் கிண்ணத்தை என் கையில் கொடுக்கும்போது, அவள் கண்ணீருமல்லவா அதில் கொட்டியது!

ஆம். முன்தினம் நடந்த சம்பவம் என் கண் முன்னே வானளாவிய பேருருவம் எடுத்தது. மேல் படிப்புக்காக இங்கிலாந்து சென்று திரும்பிய பார்வதியின் கல்லூரி மாணவன் இளங்கோவன், மணமாகி, குடியும் குடித்தனமுமாகயிருக்கும் தன் பள்ளித் தோழி பார்வதியைக் கண்டு செல்ல என் இல்லம் வந்தான். அப்போது நான் வீட்டில் இல்லை. நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்த தன் தோழனுடன் பார்வதி அளவு கடந்த உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடனும் உரையாடிக்கொண்டிருந்தாள். வெளியில் சென்று திரும்பிய நான் அவனை இதற்கு முன் கண்டிராததால்.. நொடியில் என் மனவிகாரத்தைப் புரிந்து கொண்ட பார்வதி அவன் யாரென்பதை எனக்கு விளக்கினாள். இளங்கோவனும் என்னுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு அகன்றான்.

என் உள்ளக்குமுறல் அடங்கவில்லை; அன்று முழுவதும் பார்வதியும் கலகலப்பாக இல்லை. எதையோ பறிகொடுத்தவள் போல காணப்பட்டாள்.

பிறகு, நிதானமாய்ச் சிந்தித்துப் பார்த்தால் தவறு என்னுடையதே என்பது தெளிவாகியது. தாழ்வு மனப்பான்மை எவ்வளவு கொடியது. பார்வதி பந்தயக் குதிரை போலத் துடிப்பாக, வாளிப்பாக, தளதளவென்று இருப்பாள்; நானோ புல் தடுக்கினாலும் கீழே விழும் எலும்புக் கூடு; எனவே அவளைப் போலக் கட்டழகுக் காளையான இளங்கோவனுடன் பார்வதி மகிழ்ச்சியுடன் இருந்ததைக் கண்டபோது…

கோப்பி கொடுத்த பார்வதியின் கைகளைப் பிடித்துக்கொண்டேன். பார்வதி! என்னை மன்னிச்சுடு. நான் உன்மீது சந்தேகப்பட்டது உண்மை தான். அது எவ்வளவு பெரிய தவறுங்கறதை இப்ப நான் நல்லா புரிஞ்சுகிட்டேன்; அண்ணன் தங்கை தனியா பேசிக்கிட்டு இருந்தா அவுங்களை முன்னே அறியாதவங்க அவங்களுக்குள்ளே கள்ளக் காதல் கற்பிக்கிற பாழாப்போன சமூகத்திலே பொறந்தவன் தானே நான். பார்வதி! பார்வதி! என்னை மன்னிக்க மாட்டியா? என்று கெஞ்சினேன். என் உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட பின்னர்தான் அவள் சோகம் மறைந்தது. என் மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, கேவிக் கேவி அழுதாள்.

பின்னர் நாங்கள் இருவருமே அந்தக் கசப்பான சம்பவத்தை மறந்து விட்டோம். அப்படித்தான் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

நேற்றுவரை வழக்கமாக அவள் கொடுக்கும் பெட்காபி இன்று திடீரென்று நின்றுவிட்டது.

இப்போது எனது இந்தப் பெரிய வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. நேற்று? பேச்சும், கூச்சலும், கும்மாளமும் கல்யாண வீடு கெட்டது.

ஒரு மாதத்திற்கு முன்பு, தமிழ் நாட்டிலிருந்து சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்க மாதவன் மாமன் மாமியார் அவர்கள் ஐந்து பிள்ளைகள் இங்கு வந்து தங்கி கொட்டமடித்து விட்டு நேற்றைய விமானத்தில் இந்தியா சென்றார்கள். போகும்போது தங்கள் மகள் பார்வதியையும் 5 வயது நிறையாத அவள் மகன் பாஸ்கரனையும் உடனழைத்துச் சென்று விட்டார்கள். மாதவன் மனைவியும், மகனும் சிங்கப்பூர்த் திரும்ப இன்னும் பல வாரங்களாகும்.

‘நானும் அவர்களோடு போயிருக்கலாம். கடைசி நிமிடத்திலே கம்பெனி முதலாளி காலை வாரி வுட்டுட்டான். ஆடிட்டர் வர்ற நேரம் இப்ப லீவு கொடுக்க முடியாதுன்னு கண்டிச்சு சொல்லிவிட்டான்.’

அடுத்து என்ன செய்வதென்று மாதவன் விழித்தார். பார்வதியின் நினைவுதான் வந்தது.

புண்ணியவதி. இந்தப் பெரிய வீட்டு வேலைங்க எல்லாத்தையும் அவளே தன் தலையிலே போட்டுகிட்டு மாங்கு மாங்குன்னு பர பரன்னு செய்வா. எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன். ஒரு வேலையாள் வச்சுக்கோன்னு, மாட்டாளே. அதிகாலையிலிருந்து இரவு படுக்கை போகிற வரை உழைக்கிறதிலேதானா அவளுக்கு மனநிறைவு மகிழ்ச்சி. நீங்க இதிலே தலையிடாதீங்க. எனக்கு ஒரு நொடி வேலை செய்யாமல் இருக்க முடியாதுன்னு எனக்கு வாய் பூட்டு போட்டுடுவா. வேலை அவ ரத்தத்திலே ஊறிப்போனது, அந்தப் பழக்கத்தை இனி மாத்த முடியாது. ஆனால் நான்? இயற்கையிலேயே சோம்பேறி பார்வதி எனக்கு வாழ்க்கைத் துணைவியா வந்த பிறகு அது இன்னும் வளர்ந்துவிட்டது. இங்கே இருக்கிற பொருளை அங்கே எடுத்து வைக்க மாட்டேன். என் சட்டைப் பித்தான்களைப் போடக்கூட அவள் தான் – பார்வதிதான் – வரணும். இப்ப என்னை இந்தப் பெரிய வீட்டிலே போன்னு தன்னந்தனியா தவிக்க விட்டுட்டுப் போய்ட்டாளே. ஆனால் அவ ஊருக்குப் புறப்படுறதுக்கு முந்தி நான் பேசிய வீராப்பு.

“பார்வதி! நான் உன்கூட ஊருக்கு வரமுடியாது. நீ புள்ளைகளை அழைத்துக்கிட்டுப் போய் வா.”

“ஏங்க…ஏங்க?”

“கம்பெனியிலே எனக்கு லீவு கெடக்கலே.”

“அப்படீன்னா நானும் போகலே.”

“சே சே, நீ போயிட்டு வா பார்வதி! நேத்தெல்லாம் இந்தியா போனா பழனி போகணும்; ராமேஸ்வரம் போகணும்; திருப்பதி போகணும்னு எவ்வளவு ஆசையா சொல்லிகிட்டு இருந்தே?”

“இப்பவும் அந்த ஆசை இருக்கத்தான் செய்யுதுங்க. ஆனா உங்களை இங்கே தனியா விட்டுட்ட…

“பார்வதி! நான் சமாளிச்சுக்குவேன். நீ போய் வா.” “ஐயே! உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா?”

“பார்வதி! நீண்டகாலம் எனக்கு ஒரு ஆசை”

“என்னங்க?”

“கைக்கொண்டு உழைக்கிறதைப் பத்தி தினமும் யோசிச்சுக் கிட்டிருக்கேன். அதன்படி வாழ்ந்து காட்டணுங்கற ஒரு வெறி இப்ப எனக்கு ஏற்பட்டிருக்கு.”

“அப்படின்னா?”

“கைத்தொழிலுக்கு மதிப்பு கொடுத்து, அதைக் கத்துக்கிட்டு நடக்கிறது; நமக்குத் தேவைப்படுகிற உழைப்பை மத்தவங்க கையை எதிர்பார்க்காம நாமே செஞ்சுக்கறது.”

“அத்தான் வேணாங்க. பாஸ்கரன் பொறந்த பிறகுதான் உங்க உடம்பிலே சதை போட்டிருக்கு; அதைக் கெடுத்துக்காதீங்க.”

“வேலை செஞ்சா சதை குறைஞ்சிடுமா? பத்தியமான உடம்பு இன்னும் நல்லா வலுவடையும். நீ மாமா அத்தையோடே உன் மகனை அழைச்சுட்டு சனிக்கிழமை சென்னைக்குப் போறே. இந்த முடிவை மாத்த மாட்டேன்.”

மாதவன் வந்தார். முதலில் சூடாக ஒரு கப் காப்பி கலக்கி குடிக்கணும். காலை ஆகாரத்திற்கு நேத்தே பார்வதி தோசைக்கு மாவு அரைச்சுட்டுப் போயிருக்கா. தோசைக் கல்லை அடுப்பிலேற்றி தோசை சுடணும். ஆகா! தோசை வார்த்துச் சாப்பிட்டா எவ்வளவு ருசியாயிருக்கும்.

“காபி கலக்க வெந்நீர் வேணுமோ?”

கெட்டிலில் தண்ணீர் நிரம்பி காஸ் அடுப்பில் கொதிக்க வைத்து எடுத்துக்கொண்டார். காபித் தூள் எவ்வளவு போடுவது சீனியின் அளவென்ன? பாலின் அளவென்ன? ஒரே குழப்பம். தாறுமாறாகக் கரண்டியில் காபித் தூளையும், சீனியையும் அள்ளிப் போட்டுக் கலக்கினா ஒரே கசப்பு. அதைச் சரிக்கட்ட சீனியை அள்ளிப் போட்டார். ஒரே தித்திப்பு! பாலை ஊற்றினார். ஏதோ ஒரு மாதிரி குடித்துவிடலாம். குடித்தார். புதுத் தெம்பு வந்தது போலிருந்தது.

இந்தக் காபி போடவே இவ்வளவு சிரமமாயிருக்கே. எப்படி சோறு வடிச்சு கறியாக்கி…

தெருக்கதவை யாரோ தட்டும் ஒலி. விரைந்து சென்று கதவைத் திறந்தார். ஓர் இளம் பெண் வாயிற்படியில் நின்றுகொண்டிருந்தாள். இருபது வயதுதான் இருக்கும். பார்வதியை விட அழகி.

”யார்ம்மா நீ?”

“பார்வதி அம்மா வீடுதானே இது?”

“ஆமாம்”

“நீங்கதான்..”

“அவ புருஷன்”

“ஐயா! என் பேருராசாத்தி, ஊருக்குப் போயிருக்கிற இந்த வூட்டுக்கார அம்மாதான் என்னை இன்னையிலிருந்து இந்த வீட்டு வேலைக்கு அமர்த்தியிருக்காங்க.”

”அப்படியா? பார்வதி இதைப்பத்தி எங்கிட்ட ஒண்ணும் சொல்லலையே?”

“அது எனக்கும் தெரியும்முங்க.”

“தெரிஞ்ச பிறகுமா இந்த வீட்டு வேலைக்கு வந்திருக்கிறே.”

“உங்க பொஞ்சாதியே உங்களை நம்பி என்னை இங்கே கூட இருக்க அனுமதிச்சபோது எனக்கென்ன பயம்?”

முன்னர் நடந்த அந்தத் தப்பான சம்பவம் – பார்வதி இளங்கோவன் தப்புதான்-மாதவன் நினைவுக்கு வந்தது. தமது கண்ணீர்த் துகள்களை அவளறியாமல் மறைத்துக்கொண்டார்.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *