அப்பாவும் மகனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2024
பார்வையிட்டோர்: 518 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இந்தப் பிள்ளைக்கு எப்படிச் சொன்னாலும் தெரியலையே! அந்தப் பனாதிக் குட்டியோட சேர்ந்து விளையாடாதே, விளையாடாதேன்னு எத்தனையோ தடவை கண்டிச்சுட்டேன்.”

இலக்கியப் பித்து பிடித்த என் நண்பர் சுவாமிக் கண்ணு கம்ப ராமாயணத்திலுள்ள ஒரு பாடம் படித்துக் காண்பித்தார்:

“உன்னருந் துறவு பூண்ட உணர்வுடை ஒருவனே போல் தன்னையும் துறக்குத் தன்மை காமத்தே தங்கிற் றன்றே”

அதாவது ‘யாவராலும் எளிதென கிளைப்பதற்கும், அரிய துறவினை மேற்கொண்ட ஞானமுடைய ஒருவனைப் போலத் தன்னைக் கூடத் தியாகம் செய்யும் இயல்பு காதலின் திறத்தில் உண்டு’ என்று அதற்கு பொருளும் கூறினார்.

உடனே என் இல்லத்தில் கூடி வம்பளந்துகொண்டிருந்த நண்பர் களிடையே காதலைப் பற்றிய பேச்சு கால் கொண்டது. ‘காதலாவது, களி மண்ணாவது! வெறும் சித்தப் பிரமை என்று ஒருவர் கூறினார். மற்றொருவர் யுவர்களும், யுவதிகளும் ஒருவரைப் பார்த்து ஒருவர் காமுறுவதுதான் காதல். ஒருவர் அழகும், குணமும், அந்தஸ்தும் உடையராயிருந்து, மற்றவர் அந்த நலங்கள் வாய்க்கப் பெறாதவராயிருந் தால், இந்தக் காதல் ஏற்படுவதற்கு வழியேயில்லை. இதைத்தான் நண்பர் சற்று முன்பு வாசித்த கம்பர் பாடலில் கூட, காதல் என்று சொல்லாது காமம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆதார பூர்வமாக வாதாடினார். வேறொருவர், காதலையும், காமத்தையும் ஒன்றுபடுத்திப் பேசுவது வெறும் பிசகு. காதலர்கள் வெளி அந்தஸ்தில் எவ்வளவு ஏற்றத் தாழ்வோடிருந்த போதிலும், உண்மைக் காதல் மட்டும் அவர்கள் உள்ளத்தில் வேரூன்றி விட்டால், அப் பரிசுத்த காதல் விநாடி தோறும் புதிய புதிய அமைப்புடன் வளர்ந்து பரிணமிக்குமே தவிர, வெட்டுண்ட மரம் போல் முறிந்து விழுந்துவிடாது என்று காதல் தத்துவத்தைக் கரை கண்டவர்போல் பேசினார். உடனே சமூக சீர்திருத்தத்தில் பற்றுதல் கொண்ட இன்னொரு நண்பர், நம்மில் சிலர் புராண இதிகாசக் காதலர்களின் வரலாறுகளைப் புகழ்ந்து பேசுவர்; தற்காலத்தில் எங்கேயாவது, எவராவது காதல் புரிந்து கொண்டார்களென்று கேட்டால் போதும், உலகமே இருண்டுவிட்டது போல் மருண்டு, வயிறெரிந்து வசைமாலை பாடுவார்கள். எனவே இப்படிப்பட்ட ஆசாமிகளின் வாதங்களைக் கேட்டு, அதைக் கொண்டு காதலைத் தீர்மானிப்பதை விட, உண்மையாக நடந்த சம்பவங்களிலிருந்து ஒருவாறு யூகிக்கலாம் என்பது என்னுடைய துணிவு என்றார். இதைக் கேட்டதும் என் மனம் சுமார் 20 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் ஒன்றுக்குத் தாவிச் சென்றது.

நகரத்திலேயே அந்தத் தெருதான் சுத்தமாகவும், சொகுசாகவும் இருந்தது. அதே தெருவில்தான் ஏழை பணக்காரன் நிலைமையும் பணக்காரர் களுக்குத் தெரிந்தது. அத்தெருவையே அழகுபடுத்திக் கொண்டு கம்பீரமாக காட்சி அளித்தது, அந்த மூன்றடுக்கு மாடி வீடு. அதற்கு திருஷ்டி கழிப்பதுபோல் அதற்கு அடுத்தாற் போலவே தென்பட்டது ஒரு ஓலைக் குடிசை,

ஒருநாள் சாயங்காலம். மாடி வீட்டுக்குச் சொந்தக்காரரான திருவாளர் ராஜகோபால் நாயுடுவும், அவருடைய மனைவி சீதாதேவி அம்மாளும் அவ்வீட்டுக்கு வெளியிலுள்ள புற்றரையில் இரண்டு சோபாக்களைப் போட்டுக்கொண்டு உல்லாசமாக உரையாடிக்கொண்டிருந்தனர்.

நாயுடு வெற்றிலைப் பாக்கை வாயில் குதப்பிக்கொண்டே, தமக்கு வர வேண்டிய வருமானங்களைப் பற்றி தம் மனைவியிடம் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் வாயில் போட்டு மென்று கொண்டிருந்த ஜாதிக்காய், ஜாதினத்திரி, ஏலம், கிராம்பு முதலிய வாசனைத் திரவியங்கள் கலந்த தாம்பூலக் கூட்டு, அவருடைய பேச்சின் உச்சரிப்பைச் சிதைத்துக் கொலை பண்ணிக்கொண்டிருந்தது.

தென்றற் காற்று ஜிலுஜிலுவென்று வீசிற்று. அக்காற்றைப் போலவே அவரின் ஒரே மகன் தீனதயாளுவும், அந்தச் சிறுமியும், வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக்கொண்டு அவ்வீட்டுக்கு ஓடி வந்தனர்.

முதலில் அவர் மகன் தீனதயாளன்தான் ஓடி வந்தான். தன் மகனைக் கண்ட பூரிப்பில் சீதாதேவி அம்மாள், “அடே தீனு! தீனு! இங்கே வாடா என் கண்ணா” என்று செல்லமாகக் கூப்பிட்டாள். அந்த அம்மாளைப் போலவே, தீனு! தீனு! என்று கூவிக்கொண்டு அந்தச் சிறுமி அச்சிறுவன் பின்னால் ஓடி வந்தான். இப்போது சீதாதேவி அம்மாளுக்கும் அவர் கணவர் ராஜகோபால் நாயுடுவுக்கும் முகம் சுண்டிவிட்டது.

“போடி, உங்க வீட்டுக்கு; இங்கே என்ன வேலை?” என்று அதட்டினாள் சீதா தேவி அம்மாள்.

“இந்தப் பிள்ளைக்கு எப்படிச் சொன்னாலும் தெரியலையே! அந்தப் பனாதிக் குட்டியோட சேர்ந்து விளையாடாதே, விளையாடாதேன்னு எத்தனையோ தடவை கண்டிச்சுட்டேன். கேட்டாத்தானே?” என்று அந்த அம்மாள் மேலும் சுளித்துக்கொண்டாள்.

“சீதா! நீ ஏன் உன் மனசை இப்படி அலட்டிக்கறே? அதுகளுக்கு இப்ப என்ன தெரியும்? தீனுவுக்கு இன்னும் வயது ஏழாகலே. அவளுக்கும் நாலைஞ்சு வயதுதான் இருக்கும் போலிருக்கு. பச்சைக் குழந்தைக. அவளுக்கும் அவ பெற்றோருக்கும் நம்ம வீட்டை விட்டா வேறே பொழைப்பேது? எல்லாம் அததுகளுக்கும் கருத்து தெரிஞ்சப்பறம் கண்ணியமா நடந்து கொள்ளாதா…’ என்று தம் மனைவியைச் சமாதானப்படுத்தினார் நாயுடு.

இதற்கிடையில் அச்சிறுமி சிறிது நேரம் தயக்கத்துடன் நின்று பார்த்துவிட்டு, தன் விளையாட்டுத் தோழன் வராததால் மெதுவாக நழுவினாள்.

கோல கிளாங்கூரைச் சேர்ந்த பந்திங் என்ற ஊரில் இராஜகோபால் நாயுடுவே பெருத்த பணக்காரர். அவருக்கு ஏராளமான ரப்பர் தோட்டங்களும், தென்னந் தோட்டங்களும், ஈயலம்பங்களும் இருந்தன. ரொக்கமாகவும், பாங்கியிலும் லட்சக்கணக்கான வெள்ளிகளைச் சேமித்து வைத்திருந்தார். நாயுடு தற்சிந்தையும், தயாள குணமும் உடையவர். ஆனால் வம்ச பரம்பரையாக வந்த சாதி உயர்வு தாழ்வு உண்டென்ற மனப்போக்கு கொண்டவர்.

இச்சம்பவங்கள் நிகழ்ந்து 15 ஆண்டுகளாயின. தீனதயாளன் இப்போது கட்டிளங் காளையாக விளங்கினான். அவனைப் போலவே செல்லம் அந்தச் சிறுமியும் 19 வயது நிறைந்த பருவமங்கையானாள்.

செல்லம்மாளின் பெற்றோர் ராஜகோபால் நாயுடுவின் ரப்பர் தோட்டத்தில் பால் வெட்டும் தொழிலைச் செய்து வந்தனர். செல்லம்மாளோ நாயுடுவின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலை பார்த்து வந்தாள்.

தீனதயாளன் சட்டப்படிப்புக்காக இங்கிலாந்து சென்று திரும்பி வந்தான். இயற்கையிலேயே சமத்துவ மனப்பான்மை கொண்ட அவன், இப்போது தன் தந்தையின் கொள்கைக்கு நேர்மாறாக இருந்தான். இல்லாவிடில், தன் வீட்டில் சிறுவயது முதற்கொண்டு வேலை பார்த்து வந்த அந்த ஏழைப்பெண் செல்லத்தையே காதலிப்பானா.

நிலவு எரிக்கும் அமைதி நிறைந்த பல இரவுகளில் தீனதயாளனும் செல்லமும் தனி இடங்களில் சந்தித்துப் பேசினார்கள். தனக்காக என்றென்றும் அவனுடைய வாழ்க்கையைப் பாழ்ப்படுத்த வேண்டாமென்று செல்லம் கெஞ்சினாள். ‘உன்னை மணக்காவிடில்தான் என் வாழ்க்கை பாழாகுமென்று’ அவள் காதலன் தீனதயாளன் ஒரே பிடிவாதமாகக் கூறினான்.

ராஜகோபால் நாயுடு தீனதயாளனுக்குத் திருமணம் புரிவிக்க தன் உறவினர்களில் ஒருவர் பெண்ணை ஏற்பாடு செய்தார். ஆகிவிட்டது. கலியாணத்திற்கு இன்னும் நான்கு நாள்களே இருந்தன.

திடீரென்று தீனதயாளுவையும் செல்லத்தையும் காணோமென்ற வதந்தி ஊரெங்கும் பரவிற்று. ராஜகோபால் நாயுடு துடியாய்த் துடித்தார். தேடாத இடமெல்லாம் தேடினார். ஒரு பலனும் இல்லை. கலியாணம் நின்று போயிற்று. பெண் வீட்டார் கொதித்து அடங்கினார்கள்.

சில மாதங்கள் கழிந்தன.

தன் மகளைக் காணோமென்ற கவலையால் நாயுடு நோய்வாய்ப்பட்டு வருந்திக்கொண்டிருக்கும் சமயம், அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் கீழ் வருமாறு எழுதப்பட்டிருந்தது.

என்னை மன்னித்துவிடுங்கள். நான் செல்லத்தை என்னுடைய அறியாப் பருவம் முதற் கொண்டு உள்ளன்போடு நேசித்தேன். இறுதியில் இந்த நேசம் காதலாக முடிந்தது. உண்மைக் காதல், ஜாதி, மத, நிற வித்தியாசங்களைப் பாராது, அந்தஸ்தையும் கவனியாது என்பதற்கு நாங்களே சாட்சி. நான் அங்கு இருந்தால், என் அருமைச் செல்லத்தை மணக்க தாங்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டீர்கள். இதனால்தான் நாங்கள் இருவரும் எவருக்கும் தெரியாமல் இங்கு வந்துவிட்டோம்.

வாழ்க்கையின் லட்சியம் ஒரு பெண்ணின் காதலைப் பெறுவதுதான் என்பதை நான் வாசித்து அறிந்திருக்கிறேன். அது எனக்கு கை கூடிற்று. தாங்கள் இப்போதாவது எங்களை ஆசீர்வதித்து ஏற்றுக்கொள்வதாக இருந்தால், இதே மெயிலில் புறப்பட்டு வரத் தயார்.

இங்ஙனம், ரா.தீனதயாளு

இக்கடிதத்தை வாசித்துப் பார்த்த நாயுடு என்ன செய்திருப்பாரென்று எண்ணுகிறீர்கள்! ஏற்கனவே நான் கூறியபடி அவர் தர்ம சிந்தையும், தயாள குணமும் உடையவர்தான் என்றாலும் அவர் இது நாளும் விடாப் பிடியாகக் கடைப்பிடித்து வந்த தம் உயர்வை மட்டும் விட்டுக் கொடுக்கத் துணியவில்லை. எனவே, அவர்தம் மகனுக்குக் கீழ்க்கண்டவாறு பதிலெழுதினார்.

சிரஞ்சீவி தீனதயாளனுக்கு ஆசீர்வாதம். நடந்து போனதைப் பற்றி வருத்தப்படாதே. தவறுவது மனித இயல்பு. செல்லத்தை விலக்கிவிட்டு, உனக்காக நான் முன்னமே வளர்த்து வைத்துள்ள உன் மாமன் மகள் அம்புஜாவைக் கலியாணம் செய்துகொள்வதாயின் திரும்பி வா.

இங்ஙனம் ராஜகோபால் நாயுடு.

ஆனால் அவருடைய இந்த விருப்பம் கடைசி வரையில் நிறைவேற வில்லை.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *