வாணியைச் சரணடைந்தேன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2024
பார்வையிட்டோர்: 4,758 
 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம்-5

இதற்குத்தான் வரக்கூடாது என்று நினைத்தால், எல்லோருமாகச் சேர்ந்து விடாப் பிடியாக இழுத்துக் கொண்டு வந்து விட்டார்களே என்று வாணியின் நெஞ்சு கொதித்தது. 

அவள் ஒன்றும், தானாக வந்து சந்தோஷமாக பானமும் சிற்றுண்டியும் அருந்திக் கொண்டிருக்கவில்லை. அவள் மறுக்க மறுக்க மற்றவர்கள்தான் அவளை வற்புறுத்திக் கூட்டி வந்தார்கள் என்று, அவனுக்குத் தெரிவிப்பது, தலையாய காரியமாக அவளுக்குப் பட்டது. 

ஆனால் அதை எப்படிச் செய்வது? 

நடந்ததை அப்படியே சொன்னாலும் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல அவள் சொல்வது தான் பொய் போலத் தோன்றும். 

எதற்கு, இதைப் போய் இப்படி விளக்கிக் கொண்டிருக் கிறாள் என்று மற்றவர்களுக்கும் அவள் பேச்சு விசித்திரமாகவே இருக்கும். 

அதைவிட… 

அவசரமாக யோசித்து, உணவு வகையைத் தொடாமலே எழுந்து “நிலா வருகிறாயா, உன் கதைகளைப் பார்க்கலாம். அதைச் சீக்கிரமாகப் பார்த்து விட்டு நான் உடனே வாசகசாலைக்குப் போக வேண்டும். இல்லா விட்டால் எங்கள் உதவியாள் திணறிப் போவாள். அதற்காகத் தான் நான் இங்கே வரவே அவ்வளவு தயங்கினேன்” என்று பாதி சுபாவைப் பார்த்துச் சொல்லி விட்டு “வா நிலா போகலாம்” என்று மீண்டும் சிறுமியை அழைத்தாள். 

“கொஞ்சம் பழச்சாறாவது குடித்து விட்டுப் போகலாமா வாணி, இது எங்கள்…” என்று அண்ணனின் அறிமுகத்தைத் தொடங்கிய சுபாவின் பேச்சில் அவசரமாகக் குறுக்கிட்டாள் வாணி. 

“இல்லையில்லை அதற்கெல்லாம் நேரமில்லை. நீங்கள் ரொம்பவும் கூப்பிட்டீர்களே என்றுதான்… நிலா வேறு… அந்த கதைகளை அனுப்ப வேண்டிய கடைசி என்றீர்கள். அதற்காக மட்டுமே வந்தேன். பார்த்து விட்டு விரைவாகக் கிளம்ப வேண்டும் வாம்மா. உன் அறை எங்கே இருக்கிறது?” என்று அவள் ஓர் எட்டு எடுத்து வைக்கவும் அதற்கு மேல் அவளை யாரும் தடுக்கவில்லை. 

அதற்கு ஏற்ப, “என் பேத்தி, ஒன்று செய்ய நினைத்தால் என்றால் அதிலிருந்து அவளைத் திருப்ப யாராலும் முடியாது. இந்தக் கருமமே கண்ணாயினார் பாட்டில் வருமே அது போல, அந்த வேலையிலேயே கவனமாக இருப்பாள்” என்று மணிவாசகம் பெருமை பேசுவது காதில் விழுந்து முகத்தைச் சிவக்கடித்த போதும் கவனியாதது போல, நிலாவுடன் சென்று விட்டாள் வாணி.

“இருக்கும், பார்த்தாலே அந்த பிடிவாதம் தெரிகிறது” என்று தொடர்ந்து கேட்ட ஆண் குரல் கன்றலை மேலும் அதிகமாக்கியது. 

அவளே விருப்பமின்றிதான் வந்திருக்கிறாள் என்று இன்னோரன்ன வார்த்தைகளால் அவள் குறிப்பாக உணர்த்தியதை அவன் ஒப்புக் கொள்வதாக இல்லை. 

அன்று அப்படி திட்டியும், வெட்கம், மானம் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, வீட்டுக்கே வந்து, நிலாவை விடாமல் பிடிக்கிறாள் என்றுதான் இன்னமும் நினைக்கிறான். 

இந்த நிலா வேறு. அப்பா ஊரிலேயே இல்லையே என்று அளந்தாளே! 

ஆனால் அவள் சொன்ன பிறகான இந்தச் சில நாட்களில் அவன் ஊரிலிருந்து திரும்பி வந்திருக்கலாம். 

எப்படியோ இன்று கடைசி. இதற்கு மேல் என்ன ஆனாலும் இந்த வீட்டுப் பக்கம் எட்டியும் பார்க்கப் போவதே கிடையாது. 

மனதினுள் சூளுரைத்தவாறே, நிலாவின் அறையினுள் சென்றவளுக்கு, எதிர்ப்புறத்தில் தெரிந்த கடுகடுத்த முகம் வியப்பூட்டியது. 

யார் இந்தச் சிடுமூஞ்சி என்று ஏளனமாக எண்ணும் போதே, சுவரை அடைத்து பதித்திருந்த கண்ணாடியில் தெரிவது தன் முகமே என்று உணர்ந்து திடுக்கிட்டாள் வாணி. 

யாரோ ஒருவன், அவனை இன்னொரு தரம் அவள் சந்திக்கப் போகிறாளோ இல்லையோ? அவன் தப்பாக நினைப்பது அவளை இந்த அளவு பாதிப்பதா? சேச்சே என்று தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டதோடு, நிலா பார்க்கும் முன் தன் முகத்தை சீர்படுத்திக் கொண்டாள் அவள்.

ஆனால் இதெல்லாம் ஒரு சில வினாடிகள்தான்.

அதற்குள் கம்ப்யூட்டரில் நிலா தன் கதைகளைக் கொணர்ந்து காட்டவும் அதிலேயே வாணி முழுகிப் போனாள். 

வெள்ளை மேகத்தின் அழகுக்கு ஆசைப்பட்டு அழுது… அழுது… கண்ணீர் சொரிந்த கறுப்பு மேகம். தன்னிடம் இருந்த நீரையெல்லாம் அழுதே இழந்து விட்டு, வெள்ளை மேகமாக மாறிய கதையை முடிக்கும்போது, அவளுக்கு அந்தக் கதை தவிர வேறு எதுவும் மனதில் இருக்கவில்லை. கருமேகத்திலிருந்து கண்ணீர் சொட்டுவது போல படம் வரைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். 

கூடவே இன்னொன்று தோன்ற “ஏன் நிலா, கதையின் கடைசியில் ஒரு குடியானவன். இவனது வயல் அருகே நின்று “நல்லவேளை ஒரு நல்ல கறுப்பு மேகம் வந்து மழை பொழிந்து என் பயிரைக் காப்பாற்றியது. எல்லாம் உபயோகமற்ற வெறும் வெள்ளை மேகமாகப் போய்க் கொண்டிருக்கிறதே என்று கவலையாக இருந்தேன்” என்று சொல்வது, அந்த மேகத்தின் காதில் விழுந்தது என்று முடித்தால் என்ன?” என்று கேட்கவும் சிறுமி சந்தோஷமாகக் கை கொட்டினாள். 

“அதுதான் ஆன்ட்டி.. நானும் யோசித்தேன். கறுப்பு மேகத்திலே இருக்கிற நீராவித் தண்ணியாலே, அதுதான் உயர்ந்ததுன்னு காட்டணுமே எப்படின்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். இப்போ சரியான முடிவாகிப் போகும் இல்லையா ஆன்ட்டி? இதுக்காகத்தான் எப்படியாச்சும் நீங்க வரணும்னு நினைத்தேன் ஆன்ட்டி?” என்று குதூகலத் தோடு கூறினாள். 

“ஆனால் இதை இப்படி ஒரு கதையாக்கலாம் என்று உனக்குத் தோன்றியது. உன் கெட்டிக்காரத்தனம்தான் நிலா” என்று எண்ணியதை சொல்லியவாறே, கதையில் இருந்த ஓரிரு இலக்கணப் பிழைகளைத் திருத்தினாள் வாணி. 

“கறுப்பாக இருக்கிற மேகத்திலேதான். நமக்கு மழையைத் தருகிற தண்ணீர் இருக்கும் என்று எங்கள் டீச்சர் சொல்லித் தந்தாங்க ஆன்ட்டி” என்றாள் நிலா. 

ஆனாலும், அதை இப்படி ஒரு கதையாக்கும் எண்ணம் எத்தனை பேருக்குத் தோன்றும்? முறுவலித்தவாறே வாணி அடுத்த கதையைப் படிக்கத் தொடங்கினாள். காக்கைக் கூட்டில் குயில் முட்டையிடுவது பற்றிய கதை அது. 

சற்றுப் பெரியதாக இருந்தபோதும், தொடக்கத்திலேயே கதை களை கட்டியிருந்தது! 

காக்கைக்குத் தெரியாமல் அதன் கூட்டில் முட்டை யிட்டு விட்டுக் குயில்கள் பறந்து விடுவதும் அது தெரியாமல், அந்த முட்டைகளைத் தன் முட்டையாகவே எண்ணிக் காக்கைகள் அடைகாத்துக் குஞ்சு பொரித்து அவற்றை வளர்ப்பதும் நடப்பு! 

இங்கே தொடக்கத்திலேயே காக்கைகள் சேர்ந்து குயிலை விரட்டின. “நம் கூடுகளில் முட்டையிடுவதற்காக வந்திருக்கும் இந்த குயிலை விரட்ட வேண்டும்” என்று கூட்டமிட்டுப் பேசித் திட்டமிட்டு, அதன்படி பார்த்துப் பார்த்துக் கவனத்துடன் காக்கைகள் குயிலை விரட்டிக் கொண்டிருந்தன. காக்கைகள், கொத்தி விரட்டியடித்தது தாங்காமல் பறந்து சென்ற போதும் மீண்டும் அந்த காக்கைக் கூட்டத்தின் நடுவிலேயே வந்து விழுந்தது. குயில். 

“எப்படியாவது நம்மை ஏமாற்றி நம் கூட்டில் முட்டை விட்டு விடலாம் என்றுதான் திரும்பவும் வந்திருக்கிறது. அதை ரத்தம் வரும் வரை கொத்தி விரட்ட வேண்டும். கொன்றே விட வேண்டும்” என்று காக்கைகள் பேசிய போது “நான் முட்டைவிட வரவில்லை காக்காய் அண்ணா” என்றது குயில் “நான் எதற்கு வந்தேன் என்றால்?’ 

முழு லயிப்புடன் வாணி கதையைப் படித்துக் கொண் டிருந்தபோது, ஓர் ஆண் குரல் அதில் இடையிட்டு “உன் ஆன்ட்டி பழச்சாறு கூட குடிக்கவில்லை. போய் எடுத்து வா நிலா” என்றது. 

“இதோ சித்தப்பா” என்று சிறுமி ஓட, திகைப்புடன் அவனைப் பார்த்தாள் வாணி. 

சித்தப்பா…! 

சித்தப்பா என்றா சொன்னாள் சிறுமி? 

அப்படியானால் நிலா இவனுடைய மகள் இல்லையா? அப்புறமென்ன அவ்வளவு உரிமை? பெரிதாகத் திட்டினானே என்று ஆத்திரமாக எண்ணும்போதே அதே சமயம் இலகுவாக உணர்ந்தாள் வாணி. 

இவன் ஒன்றும் பெண்டாட்டி செத்த உடன் புது மாப்பிள்ளையாகி அந்தப் புது மனைவி மயக்கத்தில் மகளைக் கைவிட்டவனில்லை. 

ஆனால் அதற்காக, இவனையும் ஒரேயடியாக நல்லவன் என்று சொல்லிவிட முடியாது. 

என்ன நடந்தது, என்று ஒன்றும் விசாரிக்காமல், அவள் மேல் கெட்டவள் என்று பழி சுமத்தி, நியாயமற்று, என்னவெல்லாமோ பேசினதை எந்த நல்ல குணத்தில் சேர்ப்பது? 

இவன் அண்ணன் ஒரு விதம் என்றால், இவன் இன்னொரு விஷயத்தில் மோசமே! 

இப்போதும் அவளை விருந்தாளியாக உபசரிப்பதற்காக ஒன்றும் வந்திருக்க மாட்டான் என்பது நிச்சயமே. 

எனவே, காது கேளாத தூரத்துக்கு நிலா சென்றதும் “என்ன விஷயம்?” என்று கேட்டாள் வாணி. 

திகைப்பைக் கணத்தில் மறைத்து “ஏதோ விஷயம் இருக்கிறது என்கிறாய்?” என்றான் அவன், லேசாகப் புருவம் உயர்த்தி. 

இவனுக்கு மட்டும்தான் பேசத் தெரியுமாக்கும். இவனைப் போலக் கண்டபடி கத்தும் கலை அவளுக்கு கைவராதிருக்கலாம். ஆனால் வாய் வார்த்தை எல்லோருக் கும் பொதுதானே? 

“உங்களுக்காக ஏதோ விஷயம் இருப்பதால்தானே வந்திருக்கிறீர்கள்? மற்றபடி, எனக்கு விருந்துபச்சாரம் செய்வதற்காக இவ்வளவு தூரம் படியேறி வந்திருக்க மாட்டீர்கள் என்று புரிகிற அளவுக்கு எனக்கு புத்தி இருக்கிறது.” 

கீழுதடு ஏளனமாக வளைய “அதற்கு மட்டுமா? அதற்கு மேலும் நிறைய புத்தி இருக்கிறது. புத்தியோடு தைரியமும், இல்லாமலா நான் அன்று அவ்வளவு சொன்ன பிறகும், நிலாவைத் துரத்திக் கொண்டு என் வீட்டுக்கு வருவாய்?” என்று கேட்டான் அவன். 

ஆத்திரமாக அவனைப் பார்த்தாள் வாணி. “என்ன மிஸ்டர் உங்களுக்கு ஒன்று சொன்னால் புரியாதா? நான் ஒன்றும் இங்கே விரும்பி வரவில்லை. சொல்லப் போனால் வரமாட்டேன் என்று சுபாவிடம் மறுக்கவே செய்தேன். சந்தேகமாக இருந்தால் அவளையே கேட்டுப் பாருங்கள்.” 

“சுபா” என்றான் அவன் இன்னமும் ஏளனமாக, “என் தங்கையையும் பிடித்தாயிற்றா?”

“காட்..” என்று கண்களை இறுக மூடித் திறந்தாள் வாணி. “உங்கள் தங்கை என்ன சார்.. ஆடா, மாடா பிடித்துக் கொண்டு போவதற்கு? சுபா என்று அழைக்கச் சொன்னதே அவள்தான். ஆனால், என்னிடம் இவ்வளவு பேசுவதற்கு உங்கள் வீட்டுப் பெண்களிடமே நான் எவ்வளவு கெட்டவள் என்று எடுத்துச் சொல்லி, என்னிடம் பேச விடாமல் தடுப்பதுதானே?” என்று சீற்றத்துடன் வினவினாள். 

“அவர்களிடம் சொல்லி என்ன பயன்? அதுதான் வாசகசாலை என்று ஒரு மாய வலையை வைத்திருக்கிறாயே… அந்த மயக்கத்தில்.” 

“என்ன பெரிய மயக்கம்… சு… உங்கள் தங்கைக்கு எதையும் படிக்கவே பிடிக்காது என்பது அவளே சொன்னது, அது பொய் என்கிறீர்களா?”

“அவள் பெரியவள் ஆனால், நிலா அப்படியில்லையே, சிறுமி, தாயற்ற பெண்… தந்தையு… சரி அது உனக்குத் அவளுக்கு உன்னுடன் பழக்கம் அதிகமாகிக் கண்ட நேரத்தில் உன்னைப் பார்ப்பதற்காக, உன் வாசகசாலைக்கு வரத் தொடங்கினால்… என்ன ஆகக் கூடும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதன் பிறகும், நீயே இங்கு வந்து நின்றால், அப்புறம் உன்னைப் பற்றி வேறு என்ன எண்ணுவது? அல்லது, ஒரு வேளை நிலா மூலமாக இந்த வீட்டில் நுழைந்து, என்னையே வளைத்துப் பிடித்து விடலாம் என்று அடுத்த சதியா? அப்படிப்பட்ட நப்பாசை ஏதும் இருந்தால்…” என்று அவன் கூறிக் கொண்டே போகவும், சகிக்க முடியாமல், முகம் சிவக்க “சீச்சீ… வாயை மூடுங்கள்…” என்று சீறினாள் வாணி. 

“ஏன் உண்மை சுடுகிறதோ?” 

“உண்மையா… அப்படியென்றால்… என்ன என்றாவது, உங்களுக்குத் தெரியுமா? எல்லாம் அடிப்படையே இல்லாத அர்த்தமற்ற கற்பனை! வாயைத் திறந்தாலே, எரிப்பேன், கொளுத்துவேன் என்று காட்டுக் கத்தல், அதற்கு மேல் பெரிய மன்மதன் மாதிரி அசட்டுக் கர்வம் வேறு. இருந்திருந்து உங்களைப் போய் யார் மணப்பார்கள்? உங்களை வளைத்துப் பிடிப்பதற்கு சதித் திட்டம் வேறா? என்ன கிறுக்குத் தனமான உளறல்?” என்றாள் அவளும் உதாசீனமாகவே. 

முதல் நாள் போலத் தனிமையில் மாட்டிக் கொண்டோமோ என்று அஞ்சத் தேவையின்றி கீழே அவனுடைய தாய், தங்கை, எல்லோரும்தான் இருக்கிறார்களே, ஒரு குரல் கொடுத்தால் வந்து விடுவார்கள் என்பதும், அவனும் அறியாததல்ல. அத்தோடு நிலா வேறு, எப்போது வேண்டுமானாலும் வந்து விடலாம். 

ஆனால், அவன் வாய்ப் போரை விடுவதாக இல்லை. அவளையும் நம்புவதாகவும் இல்லை. 

ஒரு தலையசைப்பால் அவளது பேச்சை அலட்சியமாக ஒதுக்கி “என் காரணம் தவிர, வேறு நல்லதாக ஏதேனும் இருந்தால் நீயே சொல்லேன். ஏனென்றால் எனக்குக் கண்டு பிடிக்க முடியவில்லை” என்றான் ஏளனமாகவே. 

“நான் எதற்காகச் சொல்வது? மனிதர்களிடம் நல்லதைக் காண்பதற்கு. அவரவர்களிடமும் கொஞ்சமேனும் நல்லது ஏதாவது இருந்தால்தானே, முடியும்? அத்தோடு இப்படித் தான் என்று முடிவு செய்து வைத்துக் கொண்டு பேசுகிறவர்களிடம் எதைச் சொல்லியும்தான் என்ன பயன்? ஒன்றுமே இராது. வீண் வேலை. ஆனால் உங்களுக்கும் எனக்கும் கொஞ்சமும் பிடிக்காத இந்த நிலை வராமல், நீங்களே எளிதாகத் தடுத்திருக்கலாமே. நிலா எழுதியவற்றை நீங்களே கூட…” என்று வாணி வேகமாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, நிலா வரும் அரவம் கேட்க, அவளது பேச்சு நின்றது. 

சின்னப் பெண் பாவம்! 

நிலாவோடு கூடவே ஒரு பணிப் பெண்ணும் வந்து சிற்றுண்டி, பழச்சாறு அடங்கிய ட்ரேயைக் கொணர்ந்து வைத்து விட்டுப் போனாள். 

“ஆன்ட்டி சாப்பிடுங்க. ஆன்ட்டி” என்று ஆர்வமாக உபசரித்தாள் சிறுமி. 

“அடடா… இந்த நேரத்தில் நான் இது போலெல்லாம் சாப்பிடுவது இல்லையம்மா. நான் கூப்பிட்டு வேண்டாம் என்று சொல்லுமுன் நீ ஓடிவிட்டாய். இல்லாவிட்டால் அப்போதே சொல்லியிருப்பேன். உனக்கு வீண் அலைச்சல் இருந்திராது.” என்றாள் வாணி. முயன்று தன் ஆத்திரத்தைச் சிறுமியிடம் மறைத்து. 

குயில் கதையை நிலா எப்படி முடித்திருக்கிறாள் என்று அறிய அவளுக்கு ஆவல்தான். 

ஆனால், நிலாவுடைய சிற்றப்பனின் முன்னிலையில் ஒரு வினாடி காலம் அதிகமாக நிற்கவும் பிடிக்காமல், மெல்ல எழுந்தபடி “கதைகள் பிரமாதமாக இருக்கின்றன நிலா, குயில் கதை இன்னும் கொஞ்சம் மீதி இருக்கிறது. அதை உன் சித்தப்பாவே சரி பார்த்துத் தருவார்.” என்றவளின் பேச்சில் நிலா அவளுடைய சிற்றப்பன் இருவருமே குறுக்கிட்டு பேசினார்கள். 

“இல்லையில்லை முழுதும் பார்த்து முடித்து விட்டே போகலாம்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “ஐயோ வேண்டாம்” என்று கிரீச்சிட்டாள் நிலா. வாணி வியப்புடன் பார்க்கவும் முகம் வெளுக்க, சிறுமி கைகளைப் பிசைந்தாள். 

வாய்ப்பை விடாமல் “ஏன் உன் சித்தப்பாவுக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாதோ? தெரியாமல். தப்புத் தப்பாக ஏதேனும் பண்ணி வைத்து விடுவாரோ?” என்று அவனைப் போலவே கீழுதட்டை ஏளனமாக வளைத்துக் கேட்டாள் வாணி. “அவரும் ரொம்ப பயப்படுகிறாரே.” 

“ஐய்யோம்மா… பயம் எனக்குத்தான்” என்றாள் நிலா. சின்னப் பிள்ளைகளுக்கே உரிய வெளிப்படையான விளக்கமாக. 

“தப்பாக இருந்தால், சித்தப்பாவுக்கு ரொம்பக் கோபம் வரும். கோபம் வந்தால் ரொம்ப திட்டுவார். அப்புறம் எனக்கு அழுகை வரும்” என்று மேலும் தொடர்ந்து விளக்கியவள். “அப்படித்தானே சித்தப்பா” என்று அவனிடமே தன் விளக்கத்துக்கு ஒப்புதலும் கேட்டாள். 

என்ன சொல்வது என்று புரியாமல் அவன் சங்கடப்பட்ட சில வினாடிகளை வாணி உண்மையிலேயே ரசித்தாள். 

அன்னியப் பெண்ணிடம் என்ன ஏது என்று விளக்கமே கேளாமல் பேச வாய்ப்பே கொடுக்காமல் அன்றைக்கு அப்படிக் கத்தினானே இன்றைக்கும் எடுத்த எடுப்பிலேயே குற்றம் சாட்டல்தான். 

ஆனால், இப்போது அவன் வீட்டுப் பெண்ணே, அவள் முன்னிலையில் அவனையே குறை கூறுகிறாள். வாய் திறந்து பேச முடிகிறதா? 

ஆமாம் என்றால் சின்னப் பெண்ணிடம் கத்திய தப்பை ஒத்துக் கொள்வது ஆகும். இல்லை என்று மறுப்பதற்கும் இல்லை என்பது நன்றாகவே தெரிகிறது. பொய்யாக மறுத்தாலும், அண்ணன் பெண், ஆதாரத்துடன் விளக்கத் தொடங்கி விட்டால், வாணி முன் இன்னமும் தலையிறக்கம் ஆகிவிடும். 

திணறட்டும் நன்றாக… 

ஆனால், ‘தப்பாக இருந்தால்’ என்று தலை குனியாமல் தப்புவதற்குத் தன் சிற்றப்பனுக்கு ஒரு சின்ன வழியையும், நிலா வைத்துக் கொடுத்திருக்கிறாள். இந்த சிறு பெண்ணுக்கு எதிராக, அவன், அதைப் பயன்படுத்துவானா? 

ஏனோ அவன் தப்பைப் பற்றி பேசவே இல்லை. 

மாறாக, “உன்னை எங்கேடாம்மா திட்டுவது? புருவம் சுளித்து பார்த்தாலே, உன் முகம் வாடி விடுகிறது. அதற்கு மேல் திட்டவேறு செய்தால், உன் கண்ணீர் வெள்ளம், என்னை அடித்துக் கொண்டு போய் கடலில் சேர்த்து விடாதா?” என்று வேடிக்கை போலக் கேட்டு சமாளித்தான். நிலாவுடைய சித்தப்பா. 

“ஐயோ, நிறைய அழுதாலும் கண்ணீர் எல்லாம் துணியை நனைக்கிற அளவுக்குத்தான் வரும். ஆளை அடித்துக் கொண்டு போகிற அளவுக்கு ஒன்றும்…” என்ற நிலாவின் முகம் சட்டென பளிச்சிட்டது. 

வாணியிடம் திரும்பி “ஆன்ட்டி, இப்படி ஒரு கதை எழுதினால் என்ன? முன்னாலே எல்லாம் கடலே கிடையாது. அதனாலே நிறைய மீனும் கிடையாது. மீன் பிடிக்கறவங்க எல்லோரும் அவங்களோட ராஜா கிட்ட போய் “நல்ல தண்ணீரை எல்லோரும் வீட்டு உபயோகத்துக்கு எடுத்திட்டுப் போய் விடுகிறாங்க. நிறைய உப்புத் ப பேதை தண்ணி இருந்தால், அதை எடுக்க மாட்டாங்க. அந்தத் தண்ணியிலே நிறைய மீன் வளர்க்கலாம். அதற்கு ராஜாதான் ஏற்பாடு பண்ணனுமின்னு சொன்னாங்க, ராஜாவும் யோசித்துப் பார்த்துவிட்டு அரண்மனையில் உள்ள எல்லோரிடமும் யோசிக்கச் சொன்னான். அப்புறம்… அப்புறம்.. யோசித்து யோசித்து ஒருத்தருக்கும் ஒன்றும் தோன்றாமல் எல்லோருக்கும் அழுகை வந்திட்டது. அழுத கண்ணீர் ராணியோட நாக்கிலே பட்டது. பார்த்தால் உப்பு தண்ணீர், அப்புறம் அழுகிறவங்க எல்லோரும் கண்ணீரைப் பாத்திரத்திலே பிடித்து. அந்த ஊர்க்குளத்திலே ஊற்றணுமின்னு சட்டம் போட, அந்தக் குளம் அப்படியே பெரிதாகிக் கடலாகி, நிறைய மீன் வந்திட்டது. இப்படி எழுதலாமா?” என்று நிலா கேட்டாள்.

கண்கள் மின்ன அவள் கதையைச் சொல்லி முடித்த போது, வாணியோடு, நிலாவுடைய சித்தப்பாவும் சேர்ந்து கை தட்டினான். 

“ரொம்பவும் பிரமாதம், செல்லம், மூளைத்திறன் அம்மாவின் வழியில் வந்தது போலிருக்கிறது” என்ற நக்கலோடு திரும்பினாள் வாணி. “இதையும் எழுதி, உன் சித்தப்பாவிடமே காட்டு” என்று முடித்து, அறை வாயிலை நோக்கி நடக்கலானாள். 

“ஐயோ ஆன்ட்டி… ப்ளீஸ் ஆன்ட்டி… போகாதீங்க ஆன்ட்டி…” என்று ஓடி வந்து வாணியை பற்றி கண்ணீர்க் குரலில் நிலா கெஞ்சலானாள். 

ஒருதரம் அவளை விரட்டி அனுப்பியபோது அனுபவித்த குற்ற உணர்வு மறுபடியும் ஏற்பட, வாணி ஒரு கணம் தயங்கி நின்றாள். 

இவளுடைய சிற்றப்பன் செய்யும் தப்புக்கு இந்தச் சிறு பெண் என்ன செய்வாள். பாவம்! இந்தக் கதை தொகுப்பை நல்லபடியாக அனுப்பி வைத்தால் நிலாவுக்குப் பரிசே கிடைக்கலாம். 

அவளுடைய ஆசிரியை சொன்னது போல நிலாவின் திறமை வீணாகும்படி விடுவது சரியல்லதான். 

அதுவும், இந்தச் சிறு வயதில் ஒரு சிறு உரையாடலில் ஒரு கதைக் கருவைக் கண்டு பிடித்து, ஒரு முழுக்கதையையே உருவாக்கி விடக் கூடிய திறமையை! 

ஆனால், அதற்காக அவளுக்குச் சம்பந்தமே இல்லாத ஒருவனிடம் வாங்கிக் கட்டிக் கொள்வதா என்றால், அதுவும் அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை பிடிக்காததைச் செய்து அவளும் பழக்கமும் இல்லை. வாணி தயங்கி நிற்கவும், அங்கிருந்து வெளியே சென்றவாறே, நிலாவுடைய சித்தப்பா பேசினான். 

“எப்படியும் வந்தது வந்தாகி விட்டது. முழுவதையும் சரி பார்த்து விட்டே போகலாமே” என்று தெளிவாகத் தொடங்கியவன், போகிற போக்கில் வாணியின் அருகே வருகையில் நடை வேகத்தோடு குரலையும் மட்டுப்படுத்தி. “அல்லது என் தங்கை இன்னொரு முறை வந்து கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வர வேண்டியிருக்கும். ஒரு வேளை அதுதான் ஆசையோ?” என்று சன்னக் குரலில் முணுமுணுப்பாகச் சொல்லிவிட்டு நில்லாமல் சென்று விட்டான். 

ஆத்திரத்துடன் அவன் முதுகை வெறிக்கையிலேயே நிலா கவலையுடன் நோக்குவது தெரிய, தன் முக பாவத்தை வாணி சீர்படுத்திக் கொண்டாள். 

அதற்கும் உள்ளூரக் குமுறல்தான். 

அவனுடைய அண்ணன் மகள் நிலா! அவளுக்கு உதவி பண்ண வந்தாளே என்பதே இல்லாமல், என்ன அலட்சியமாக வாணியை மட்டம் தட்டிப் பேசிவிட்டு போய் விட்டான். 

ஆனால், உறவோ, கடமையோ இல்லாவிட்டாலும் நிலாவின் முகம் வாடாமல் காப்பதற்காக இவள் தன் கோபத்தையும் குமுறலையும் கஷ்டப்பட்டுக் கட்டுப் படுத்திக் கொண்டு இருக்கிறாள். 

அவனுக்கு ஈடாக வாணியும் வெடித்தால், அவனுடைய குடும்பத்து நிலா எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டாமா? 

இவனெல்லாம் பொறுப்பாக அண்ணன் மகளைக் கவனிக்கிறவனாக்கும்! 

“ஆன்ட்டி… என்ன ஆன்ட்டி?” என்று நிலா கவலையோடு கேட்கவும், புன்னகை புரிய முயன்றபடி “ஒன்றுமில்லை, நிலா மனதுக்குள் நேரக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். அங்கே ‘லைப்ரரி’யில் சுந்தரி. அவள் மகனை அழைத்து வரப் பள்ளிக்குப் போக வேண்டியிருக்கும். அதற்குள் போய்விட முடியுமா? என்று யோசித்தேன்” என்று ஏதோ ஒரு பதிலைக் கோவையாகச் சொன்னாள் வாணி. 

“ஓகோ…” என்று தீவிரமாக யோசித்தாள் நிலா. பிறகு “சித்தப்பா கிட்டே சொல்லி அந்தப் பள்ளிக்கு வேறே யாரையாவது அனுப்பச் சொல்லலாமா, ஆன்ட்டி?” என்று அவள் கேட்கவும் பெரியவளின் முகத்தில் சற்றே ஏளனம் கலந்த முறுவல் பரவியது. 

உன் சித்தப்பன்தானே? நன்றாகச் செய்வான் என்று உள்ளூர எண்ணியவாறே “பார்ப்போம்!” முதலில் உன் குயில் கதையை முடித்து விட்டால் அப்புறம் அதிகம் இல்லையே. அடுத்த கதையை நீ எழுதிய பிறகுதானே பார்க்க வேண்டும்? வா கதையைப் பார்ப்போம்” என்று சிறுமியை அழைத்துக் கொண்டு கம்ப்யூட்டரிடம் சென்றாள் வாணி. 

அத்தியாயம்-6

வாணிக்கே அந்தக் குயில் கதையில் ஆர்வம் இருந்ததால், நிலாவுடைய சித்தப்பாவின் நினைவை மனதில் இருந்து கஷ்டப்பட்டு ஒதுக்கிவிட்டுக் கதையைத் தொடர்ந்து படிக்கலானாள். 

“நான் உங்கள் கூட்டில் முட்டையிட வரவில்லை. வேறு எதற்கு வந்தேன் என்றால்…” என்று தொடங்கி காக்கைகள் ஒன்று சேர்ந்து தொடர்ந்து விரட்டியும். தான் மீண்டும் அங்கே வந்த காரணத்தையும் குயில் அந்தக் காக்கைகளிடம் விளக்கமாகத் தெரிவித்தது. 

“அதாவது காக்காய் அண்ணா. அண்ணிகளே நான் இப்போது முட்டையிட வரவில்லை. ஏனென்றால்… ஏனென்றால்… தயவு பண்ணிக் கோபப் படாதீர்கள். நான் நேற்றைக்கு ராத்திரியே. இருட்டு நேரத்தில் நீங்கள் கூட்டம் கூடிப் பேசிக் கொண்டிருந்த போதே உங்கள் கூட்டில் முட்டையைப் போட்டு விட்டேன்…” என்று குயில் கூறவும். அது என்னதான் கோபப்பட வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோதும், “பின்னே இப்போது இங்கே எதற்காக வந்தாய்? அந்தக் கூட்டிலே இருக்கும் எங்கள் முட்டைகளை உடைத்துப் போடவா?” என்று காக்கை கேட்டது. 

ஆனால், குயில் ரொம்ப பணிவாக, “ஐயய்யோ, சத்தியமாக அப்படி எல்லாம் இல்லை அண்ணே. அதனால் தப்பாக எண்ணி என் மேலே கோபப்படாதீர்கள்.” என்று அந்தக் காக்கையின் காலிலேயே விழுந்து மன்றாடிக் கேட்டுக் கொண்டு, மேலும் தன் விளக்கத்தைத் தொடர்ந்தது. 

“அண்ணே, நேற்று உங்கள் கூட்டிலே என் முட்டைகளைப் போட்டு விட்டு பறந்து போகும்போதுதான் நீங்கள் பேசியது என் காதில் தெளிவாகக் கேட்டது. எப்படி ஏமாந்து போய் என் முட்டைகளை அடை காத்து, குஞ்சு பொரித்து, அந்தக் குஞ்சுகளுக்காகக் கஷ்டப்பட்டு இரை தேடிக் கொடுக்கிறீர்கள். அப்படிக் கொடுப்பதில், உங்கள் குஞ்சுகளுக்கு எப்படி சரியான அளவு சாப்பாடு கொடுக்க முடியாமல் போகிறது என்பது பற்றியெல்லாம் நீங்கள் பேசியது எல்லாமே கேட்டேன்… உடனே எனக்கு ரொம்பவும் வருத்தமாகிவிட்டது. 

“என்னடா நம்முடைய பிள்ளைகளுக்காக இந்தக் காக்கை அண்ணன்மார். அண்ணிமாரெல்லாம் என்ன பாடுபட நேர்கிறது என்று புரிந்ததும், எனக்கு ரொம்பவும் வெட்கமும், அவமானமுமாக இருந்தது. 

அதனால், நம் பிள்ளைகளை இனிமேல் நாமேதான் வளர்க்க வேண்டும். காக்கை அண்ணன் அண்ணிகளுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்து என் முட்டைகளை எடுத்துப் போகவே வந்தேன்” என்று வருத்தமாகக் கண்ணீர் வழிய கூறி முடித்தது குயில். 

குயில் இப்படி விளக்கியதும் காக்கைகளுக்கு ஒரே சந்தோஷமாகி விட்டது. 

ஆனாலும், ஒரு காக்கை மட்டும் தன் ஒன்றரைக் கண்ணால் தலையைச் சரித்துப் பார்த்து “அப்படியானால் உன் முட்டைகளை எடுத்துப் போவது பற்றி, மகிழ்ச்சியோடு சொல்லிவிட்டு முட்டைகளை எடுத்துப் போவது தானே? எதற்கு அழ வேண்டும்?” என்று சந்தேகக் குரலில் கேட்டது 

உடனே குயில் ரொம்பவும் தேம்பி அழுதது. அழுது விட்டு “நேற்று ராத்திரியிலே முட்டையிட்டேனா? எந்தக் கூட்டில் என்று கண்டுபிடிக்க முடியலை. அண்ணே, அதைத் தேடித் தேடித்தான். நான் திரும்பத் திரும்ப வந்தேன். ஆனால்… இப்பவும் ஒன்றுமே தெரியவில்லை” என்று மீண்டும் விசும்பிற்று. 

குயிலின் கதையைக் கேட்டதும் எல்லாக் காக்கைகளும் மனம் இளகி உருகிப் போயிற்று. 

உடனே எல்லாக் காக்கைகளுமாகப் பேசி, “குயிலே கவலைப்படாதே. வேணுமானால், அவ்வப்போது வந்து உன் முட்டைகளைத் தேடிப்பார்” என்று குயிலுக்கு அனுமதி கொடுத்தன. 

ஆஹா! இனிமேல் எப்போது வேண்டுமானாலும் வந்து, முட்டையைத் தேடிப் பார்க்கிற பாவனையில், ஏதாவது ஒரு கூட்டிலே முட்டை போட்டு விடலாம் என்று குயில் மகிழ்ச்சியோடு நினைத்துக் கொண்டது…! என்று கதையை முடித்திருந்தாள் நிலா. 

ஆனால், வாணி படிப்பதைக் கவனித்துக் கொண்டே அருகில் நின்ற நிலா, கதையின் முடிவில் அவளுக்குத் திருப்தி இல்லை என்றாள். 

“என்னமோ தப்பு பண்ணுகிறவங்க ஜெயிக்கிற மாதிரி தெரியுது. ஆன்ட்டி… ஆனால் வேறே விதமாக முடிக்கவும் தெரியலை. ஏன் என்றால் குயில் எப்பவும் காக்கைக் கூட்டிலேதானே முட்டை விடுது. தானாக கூடுகட்டி… முட்டை போட்டு குஞ்சு வளர்க்கிறது இல்லையாமே… அதனாலே வேற மாதிரி முடிக்கவும் முடியலை” என்று குறைப்பட்டாள். 

“கதை நன்றாக இருக்கிறது நிலா. வேண்டுமானால்… கடைசியாக முடிகிற இடத்தில் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம். குயில் நினைக்கிற மாதிரி காக்கைகள் சம்மதம் கொடுத்ததும் குயிலுக்கு உள்ளூர ரொம்பவும் சந்தோஷப்பட்டது. 

“ஆனால் உள்ளூர வருத்தமும் கூட. குற்ற உணர்ச்சி. நமக்கோ முட்டையை அடை காக்கத் தெரியாது. குஞ்சுகளை வளர்க்கும் விதமும் தெரியாது. அதனாலே, முட்டைகளைக் காக்கைகளே கஷ்டப்பட்டு வளர்க்கும்படி செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் அதற்கு பதிலாக நான் என் அழகான குரலாலே காக்கைகள் இருக்கும் இடமெல்லாம் போய் பாடுகிறேன். காக்கைகள் அதைக் கேட்டு சந்தோஷப்பட்டு கொள்ளட்டும்” என்று நினைத்தது. 

“அதன்படி வழக்கம்போலக் காக்கைக் கூட்டிலேயே அதற்குத் தெரியாமல் குயில் முட்டை இடத்தான் செய்தது. ஆனால் அந்தத் தவறை ஈடுகட்டுவதற்காக, அந்தப் பகுதியிலேயே இருந்து தன் இனிய குரலில் ‘குக்கூ… குக்கூ…’ என்று வெகுநேரம் அழகாகப் பாடி காக்கைகளை மகிழ்விக்கவும் செய்தது. 

“என்ன நிலா இப்படி முடிக்கலாமா?” என்று வாணி கேட்க உற்சாகமாகத் தலையாட்டினாள் நிலா. 

“சரி. அதுபோல எழுதி முடி. அப்புறமா உப்புக் கடல் உருவான கதையை எழுது…” 

“அதையும் இப்படிச் சரி பார்த்து ஐடியாச் சொல்ல வருவீங்கதானே? ஆன்ட்டி.. கட்டாயம் வரணும். நீங்க வந்து சொல்லிக் கொடுத்தால்தான் நன்றாக இருக்கும்… ப்ளீஸ் ஆன்ட்டி” என்று வாணியின் தயக்கத்தை உணர்ந்து கெஞ்சலில் முடித்தாள் நிலா. 

அவ்வப்போது முகத்தைக் கவனித்துப் பார்த்து அதற்கு சரியாக நிலா பேசுவது இன்னொரு விதமாக வாணியின் மனதைத் தாக்கியது. 

பெற்றவனிடம், பெற்றவளின் இடத்துக்குப் புதிதாக வந்தவளிடம் அப்புறம் புலியாக உறுமுகிறானே இந்தச் சிற்றப்பனிடம் எல்லாம். இப்படி முகம் பார்த்து, அவர்களது கோபம், குணம் ஊகித்துப் பேசிப் பழக்கமாகி விட்டது போல… அவள் அத்தை சொன்னதும் இதைத் தானே? 

முகத்தில் அடித்தாற்போல இவளிடம் எப்படி மறுப்பது? 

மனம் வராமல் “நீ முதலில் எழுது.. அதன் பிறகு எனக்கு ஓய்வு கிடைப்பதைப் பொறுத்து வருவதைப் பார்ப்போம்” என்ற வாணி சிறுமி கலக்கத்துடன் ஏதோ பேச முயலவும். 

“ஆமாம் மொத்தம் எத்தனை கதைகள் அனுப்ப வேண்டும்? அதைப்பற்றி உன் ஆசிரியை சொன்னார்களா?” என்று நிலாவின் கவனத்தை வேறுபுறம் திருப்பி விசாரித்தாள். 

“ஓ. சொன்னாங்க, ஆன்ட்டி! ஒவ்வொரு கதையும் தனித்தனியாகத்தான் அனுப்பணுமாம்! மொத்தம் ஐந்து கதை வரை கதை அனுப்பலாமாம். முன்னமே இன் னொன்று ஐடியாப் பண்ணினேன். ஆனால், அது சரியாக வரலை. இப்போ கடல் கதையோட சேர்த்து, நாலு கதை ஆகிவிடும் ஜாலி! என்ன ஆன்ட்டி” என்று மீண்டும் உற்சாகத்துக்குத் தாவினாள் நிலா. 

“சரி எழுது. என்ன? இனி நான் கிளம்பியே ஆக வேண்டும். நிலா! இல்லையானால் பாவம். வாசகசாலையில் சுந்தரி திண்டாடிப் போவாள்” என்று ஓர் அழுத்தத்துடன் கிளம்பவே நிலா மறுத்து ஏதும் சொல்லவில்லை. 

வாணியை வழியனுப்புவதற்காக அவளை ஒட்டிக் கொண்டு கூடவே நடந்தாள். இரண்டு பேருமாக ஏதோ பேசியபடியே படியிறங்கி கீழே வரலானார்கள். 

பாதிப்படி முடிந்து, கீழே ஹால் பக்கமாக மாடிப்படி திரும்பியதும் நிலா சட்டென்று நின்றாள். 

பேச்சுவாக்கில் வாணியின் கையைப் பற்றியபடியே நிலா வந்து கொண்டிருந்ததால், அவளோடு சேர்ந்து, வாணியும் நிற்கும்படி நேர “என்ன நிலா? கால் ஏதும் தட்டியதா?” என்று சின்னவளிடம் வாணி விசாரித்தாள். 

அவள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே கீழிருந்து ஒரு குரல் “ஏய் நிலா டார்லிங்! என்ன அங்கேயே நின்று விட்டாய். வா வா வா உனக்குச் சித்தி என்ன வாங்கி வந்திருக்கிறேன் பார். ஒரு முழு பார் சாக்கலேட்… இங்கே ஓடி வந்து சித்திக்கு ஒரு கிஸ் கொடுத்துட்டு வாங்கிக் கொள் பார்ப்போம்” என்று ஒரு மூ வயதுச் சிறுமியிடம் போலக் கொஞ்சலாகக் கூவி அழைத்தாள். ஓர் இளம் பெண். 

சித்தியா? இவளா, சித்தி? ஆனால் ஒத்துப் போக வில்லை என்றாளே சுபா. இவளானால் குழந்தையிடம் போலக் கொஞ்சுகிறாள்! 

வாணிக்குக் குழப்பமாக இருந்தது. 

ஆனால், அந்தப் பெண் அவ்வளவு ஆசையும் உரிமையுமாக அழைத்ததற்கு அந்தப் படியிலேயே வேரொடி விட்டவள் போல நிலா அசையவே இல்லை.

சரியாகச் சொல்வது என்றால், ஓரளவு வாணியின் பின்னே மறைந்து நிற்க முயல்வது போலத்தான் தோன்றியது. 

அதே சமயம் நிலாவின் கைப்பிடி இன்னமும் இறுகியதால் வாணியாலும் நகர முடியவில்லை. 

இப்படிப் பாதிப் படியில் நிற்பதே சங்கடமாக இருக்கையில் “யார் அவள் விது? நம் நிலாச் செல்லத்தை என்னிடம் விடாமல் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நிற்கிறாளே?” என்று நிலாவுடைய சித்தப்பாவிடம் கேட்டாள் புதியவள். 

மேடை ரகசியக் குரல். 

ஆனால். அவன் பெயர் விதுவா? இது எதன் சுருக்கமாக இருக்கக் கூடும்… என்று யோசிக்கும் போதே. அவனை ஒட்டிக் கொண்டு அந்தப் பெண் நிற்பது வாணியின் மனதில் பட்டது. 

அப்படியானால் இவள் அந்தச் சிற்றன்னை அல்லவோ? இவன் மூலமாக… யாராக இருந்தாலும் அவள் வாணியை குற்றம் சாட்டுகிறாள். 

முகம் லேசாகக் கன்ற “வா நிலா” என்றாள் வாணி. 

சலிப்புடன் மெல்ல உச்சுக் கொட்டிவிட்டு வாணியோடு ஒட்டிக் கொண்டு மெல்லப் படியிறங்கி பிறகும் அவளுடனேயே நின்றாள் நிலா. 

“வா வா வா..! ஓடிவந்து சாக்கலேட்டை வாங்கிக் கொள். ஆனால், எனக்கு முத்தம் கொடுத்தால்தான் சாக்கலேட் தருவேன்”. 

அசையாமல் நின்றபடி “எனக்கு சாக்கலேட் வேண்டாம் நீதா ஆன்ட்டி. டாக்டர் சாக்கலேட் சாப்பிடக் கூடாதின்னு சொல்லியிருக்கார். எனக்கு நல்லதில்லையாம்” என்றாள் நிலா மெல்லிய குரலில் 

“என்னது நீதா ஆன்ட்டியா?” என்று முகத்தில் அதிர்ச்சி காட்டினாள். அந்த நீதா, “சித்தி என்று கூப்பிட வேண்டும் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். எப்படிப் பார்த்தாலும் சித்தியாகத்தான் முடியும். என்னைப் போய்… இன்னொரு தரம் என்னை கூப்பிட்டால் உனக்குக் கொஞ்சம் கூடச் சாக்கலேட்டே தரமாட்டேன்” என்று அதே செல்லக் குரலிலேயே அவள் நிலாவை மிரட்ட, அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் வாணி. 

சாக்கலேட்டே வேண்டாம் என்கிறவளிடம் போய் அதை தர மாட்டேன் என்று மிரட்டுவதா? அசட்டுத் தனமில்லையா? 

வேண்டாம்… நீயே வைத்துக் கொள் என்றால் எப்படி யிருக்கும்? 

நிலாவும் “எனக்கு வேண்டாம் என்றுதானே ஆன்ட்டி நானும் சொல்லுகிறேன். உங்களுக்குப் பிடித்த வேறு யாருக்காவது கொடுங்க” என்றாள் உணர்ச்சி அற்ற குரலில். 

அந்தக் குரலில் வாணிக்கு என்னென்னவோ புரிந்தது. ஆனால், அது அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அல்லவா புரிய வேண்டும். 

உரிமையற்ற எதிலும் மூக்கை நுழைக்க மனமின்றி, மணிவாசகத்தைப் பார்த்து “தாத்தா நாம் கிளம்புவோம் வாருங்கள்” என்று அழைத்தாள். 

“ஓ… இதோம்மா…” என்று அவரும் எழுந்து “நாங்க வருகிறோம்மா… உங்களோடு பழைய பேசியது மிகவும் நன்றாக இருந்தது. முடிந்தால் நிலாக் குட்டியோடு நீங்களும் வாசகசாலைக்கு வாருங்கள். நிலாம்மா, பாட்டியையும் கூட்டிக் கொண்டு வருகிறாயா? இப்போது நாங்கள் கிளம்புகிறோம்” என்று விடைபெற்றார் மணிவாசகம். 

குடும்பமே சேர்ந்து, அவனுடைய அண்ணன் மகளை வளைப்பதாக, அந்த ‘வித்யா’ நினைப்பானே. முகம் லேசாக சிவக்க, 

“அந்தப் போட்டிக்கான கதையை, நிலா முதலில் எழுதட்டும் தாத்தா. பிறகு வாசகசாலைக்கு வருவது பற்றி யோசிக்கலாம். வருகிறோம்மா. கிளம்புகிறோம் சுபா…” என்று சுபாவுக்காக வாணி தேட “அவள் குழந்தை அழுதது. மகளைப் பார்க்கப் போயிருக்கிறாள். இதோ ஒரு பத்து நிமிஷங்களில் வந்து விடுவாள். உட்காரம்மா…” என்றார் தேவகி. 

“இல்லை, ஆன்ட்டி, எனக்கு மிகவும் தாமதம் ஆகி விடும். அதனால், சுபாவிடம் நீங்களே சொல்லி விடுங்கள். நாங்கள் கிளம்புகிறோம்” என்று அவள் விடை பெற்றுத் திரும்புகையில் “கொஞ்சம் பொறும்மா” என்று தேவகி குறுக்கிட்டார். 

“வித்யா” என்று மகனை அழைத்து “நீயும் கிளம்பி விட்டாய் தானே? சாரையும் அவருடைய பேத்தியையும் அவர்களுடைய வாசகசாலையில் விட்டுவிட்டுப் போப்பா” என்று சர்வ சாதாரணமாகக் கூறவும், வாணி திடுக்கிட்டுப் போனாள். 

“இல்லையில்லை, நாங்கள் நடந்தே போய் விடுவோம். அதிக தூரம் ஒன்றும் இல்லையே, எங்களுக்காக யாரையும் சிரமப்படுத்த வேண்டாம். வாருங்கள் தாத்தா” என்று மணிவாசகத்தைத் துரிதப்படுத்த முயன்றாள் அவள். 

“என்ன சிரமம்? சுமக்கப் போவது கார்தான் நானில்லை?” என்று வித்யா இலகுவாகக் கூறியதை அவளால் ஏற்க முடியவில்லை. 

நூறாயிரம் தடவை சொல்லப்பட்டிருக்கும் அறுதப் பழசான வாக்கியம், இதை யார் ரசிப்பது. 

“பின்னே என்னம்மா?” என்று அவனது அந்த வேடிக்கையை ஏற்று. தாத்தா மணிவாசகம் முறுவலித்ததும், அவரு அவளுக்கு எரிச்சலை இன்னும் அதிகரித்தது. ஆனால், அவன் என்னவெல்லாம் சொன்னான் என்று அவளுக்கு மட்டும்தானே தெரியும். தாத்தா வருத்தப் படுவாரே என்று அவரிடம் சொல்லாமல் விட்டது தப்பு.

“இல்லை. வேண்டாம். நடந்து சென்றால் உடற் பயிற்சி மாதிரியும் ஆகும்” என்று மீண்டும் மறுத்தாள் அவள 

ஆனால், “அந்த சுந்தரி அக்கா எங்கோ போகணும். அதனாலே ரொம்ப சீக்கிரமாகப் போகணுமின்னு சொன்னீங்களே ஆன்ட்டி?” என்று சமயத்தில் போட்டு உடைத்த நிலா, “காரிலேயானா, சீக்கிரமாகப் போயிடலாம் இல்லையா?” என்று யோசனை வேறே கூறவும் வாணியின் முகம் சிவந்தது. 

நிலா இப்படிக் காலை வாருவாள் என்று யாருக்குத் தெரியும் தெரிந்திருந்தால் சுந்தரியின் பெயரைப் பயன்படுத்தியே இருக்க மாட்டாள். 

இப்போது, சொல்வது அறியாமல் அவள் திகைக்கையில், எதிர்பாராத இடத்திலிருந்து அவளுக்கு உதவி வந்தது. 

“விது மச்சான்” என்று அருகிலேயே அவனைக் கூவி அழைத்தாள் நீதா. “உங்களுடன் பேச வேண்டும் என்று நான் வந்திருக்கிறேன். என்னை, இங்கே தனியே விட்டு விட்டு நீங்கள் எங்கோ கிளம்புகிறீர்களே? இது, உங்களுக்கே நன்றாக இருக்கிறதா?” என்று குறைப்பட்டவள். “அக்காவும், அத்தானும் இதைக் கேட்டால் என்ன நினைப்பார்கள்? அதை யோசித்தீர்களா?” என்று மிரட்டுவது பேலக் கூறி முடித்தாள். 

ஏதோ புரியாத நாடகம் பார்ப்பது போல இருந்தது வாணிக்கு! 

ஆனால், அதைப் புரிந்து கொள்ளப் பிடிக்கவுமில்லை. “நமக்காக யாரும் கிளம்ப வேண்டாம் தாத்தா, வாருங்கள் போவோம்” என்று அவசரப்பட்டாள் பெண். 

ஆனால், “எனக்கும் வேலை இருக்கிறது. ஆடிட்டரையும் அவசரமாகப் பார்க்க வேண்டும். அதனால், தயாராக இருந்தால், உங்களை வழியில் இறக்கி விடுவது எனக்கு எளிதுதான்” என்று அவளிடமே சொன்னான் அந்த வித்யா. 

என்ன மனிதன் இவன்? சற்று முன் வரை, அவளை விரட்டி அடித்து விட்டு, இப்போது அவளுக்கு உதவவே பிறவி எடுத்தவன் போலப் பேசுகிறானே, வழியில் விடுவதாமே! இவன் காரிலே ஏறவே பிடிக்கவில்லை என்று குறிப்பாகச் சொன்னால் புரியாதா? 

வாணியின் சினத்துக்கு அதிகமாகவே அந்த நீதாவும் சீறினாள். 

“என்ன அத்தான், நான் சொன்னது உங்கள் காதிலேயே விழவில்லையா? நான் இன்று அக்கா, அத்தானுக்கு போன் செய்வேன், இங்குள்ள நடப்பு பற்றி, அத்தான் அக்காவிடம் நல்லபடியாகச் சொல்ல வேண்டாமா? ஒன்றும் பேசக்கூட இல்லாமல், அவசர வேலை போலக் கிளம்புகிறீர்களே? அப்படியே சொல்லி விடவா? என்ன? சொல்லவா? சொல்லட்டுமா மச்சான்?” 

கோபத்தில் தொடங்கி, கொஞ்சல் குரலில் முடித்த போதும், மறுபடியும் ஏதோ மறைமுக மிரட்டலாகவே தோன்றியது. 

என்னவாக இருக்கக் கூடும் என்ற குறுகுறுப்பு தோன்றிய கணமே மறைய, மணிவாசகத்தை குறிப்பாகப் பார்த்தாள் வாணி. 

இந்தக் குடும்ப விவகாரங்களின் இடையே நிற்க அவருக்கும் விருப்பம் இராது என்பது அவள் அறிந்ததே. 

ஆனால் குறிப்புணர்ந்து அவர் விடை பெறுமுன்பாக, “தாராளமாகச் சொல்லிவிடு நீதா. நேரம் கிடைத்தால் அம்மாவிடம் அண்ணனை பேசவும் சொல்” என்று நீதாவிடம் சாதாரணமாகச் சொல்லிவிட்டு, “நீங்கள் வாருங்கள் சார், எனக்கு ஆடிட்டரிடம் தாமதமின்றிப் போயே ஆக வேண்டும்” என்று முன்னே நடந்தான் வித்யா. 

தன் கோபத்துக்கு மதிப்பில்லை என்று கண்டதும் நீதா உடனே மாறினாள். 

அவனுடனேயே நடந்தபடி “நான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கத்தான் வந்தேன். என்னை விட்டு விட்டுப் போகாதீர்கள் அத்தான், அத்தை, வேலை வேலை என்று இருப்பார்கள். சுபாண்ணிக்குப் பாப்பா போதும்.. நீங்கள் கொண்டு விடுவீர்கள் என்று என் காரை வேறு அனுப்பி விட்டேன். இப்போது உங்களோடு வந்து விடுகிறேன். என்னை வழியில் எங்காவது இறக்கி விட்டு விடுங்கள். ப்ளீஸ் அத்தான்” என்று கொஞ்சிக் கெஞ்சலானாள் அவள். லேசாகத் தலை திருப்பித் தாயைப் பார்த்தான் அவன். இருவருக்கும் இடையே நடந்த பார்வை பரிமாற்றம், மாடிப்படிப் பக்கத்திலிருந்து வந்து பாட்டனாருடன் சேர்ந்து கொண்ட வாணியின் பார்வையில் மிக நன்றா கவே பட்டது. 

இடுப்பைக் கட்டிக் கொண்டு பாட்டியை ஒட்டி நின்ற பேத்தியின் தலையை மெல்ல வருடிவிட்ட தேவகியின் பார்வையில் சிறு கெஞ்சல். 

என்ன நடக்கிறது இங்கே? ஆனால் என்ன நடந்தால் அவளுக்கு என்ன? 

உதட்டைக் கடித்துக் கொண்டு தாத்தாவோடு சேர்ந்து வெளிப்புறம் நோக்கி நடந்தாள் வாணி. 

“வித்யாசாகர். எங்கள் வாசகசாலை தெரியுமா? பெரிய கடை வீதி தாண்டிச் செல்ல வேண்டும்” என்று மணி வாசகம் வழி சொல்ல, “எனக்குத் தெரியும் சார்… உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ, நிலாவை அழைத்துப் போவதற்காக நான் ஒருமுறை உங்கள் கலைவாணிக்கு நான் ஒருமுறை உங்கள் கலைவானாக வந்திருக்கிறேன்” என்றான் வித்யாசாகர். 

என்ன ஒரு திண்ணக்கம் இருந்தால், அன்று வந்து கத்தியதைக் குறிப்பிட்டுப் பேசுவான்? இழுத்து மூடுவேன், கொளுத்துவேன் என்று அவன் கூறியதையெல்லாம் தாத்தாவிடம் வாணி சொல்லியிருக்கிறாளா என்று அறிந்து கொள்ளவா? 

திகைத்து நிமிர்ந்தால், பின்புறம் பார்க்கும் சிறு கண்ணாடியில் அவனது முகம், அவளைப் பார்த்து கொண்டிருப்பது தெரிந்தது. 

அவளது ஊகம் சரிதான் போலும்! 

சற்று நகர்ந்து வெளியே பார்ப்பது போலக் கண்ணாடி வட்டத்திலிருந்து விலகிக் கொண்டாள் அவள். 

அவன் தொடர்ந்து பேசினான் “சொர்க்கபுரி பெரிய கடைத் தெருவில் நீ இறங்கிக் கொள் நீதா. உன் காரை அங்கே வரச் சொல்லி விட்டால் கார் வரும் வரை உன் பொழுதும் உனக்குப் பிடித்த விதமாகக் கழியும்” என்றான் நீதாவிடம்.

“எங்கே விது அத்தான்?” என்று உதட்டைக் கொஞ்சலாகப் பிதுக்கினாள் நீதா. “சுத்தமாய் போர்தான் அடிக்கும். இதுவே சென்னையில் என்றால் நீங்கள் சொல்வது ரொம்ப சரியாக கஇருந்திருக்கும். ஆனால் இங்குள்ள கடைகளில் என்ன இருக்கிறதாம்? பத்தாம் பசலித்தனமாக, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பக்கத்தில் வைக்கத் தொடங்கியபோது என்னென்ன வைத்து விற்றார்களோ, அதையேதான் தொடர்ந்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதில், என்னைப் போல ஒருத்தி எதை வாங்க முடியும்? ஏன், சும்மா சுற்றிப் பார்க்கக் கூட போரடிக்கும்” என்று வெறுப்பாக அலுத்துக் கொண்டாள் அவள். 

அந்த ஊருக்கு வந்து இருந்து கொண்டு. அந்த ஊரையே மட்டம் தட்டி அவள் பேசிய விதம் எரிச்சலூட்ட “நீங்கள் கடைகளைச் சரியாகப் பார்த்தது இல்லை என்று நினைக்கிறேன் மிஸ் நீதா. ஏனெனில் சென்னைக்குப் போக வேண்டிய தேவையே இல்லாமல், புதுரக அலங்காரப் பொருட்கள் எல்லாம் இப்போது இங்கேயே கிடைக்கின்றன. ஒரு தரம் போய் பாருங்கள். தெரியும்” என்றாள் வாணி. 

“இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்த கிணற்றுத் தவளைகளுக்கு அப்படித்தான் தோன்றும். சென்னைக் கெல்லாம் போய்ப் பார்த்திருந்தால்தானே வேறுபாடு புரிவதற்கு” என்று நீதா உதாசீனமாகக் கூற, பேத்தியின் கையைப் பற்றி லேசாகக் கண் சிமிட்டி முறுவலித்தார் மணிவாசகம். 

கிணற்றுத் தவளை யார் என்று சொல்லாமல் சொன்ன தாத்தாவின் சிரிப்பைப் புரிந்து கொண்ட வாணியின் முகத்திலும் முறுவல் அரும்பியது. 

சரியாகத் தெரியாத விஷயங்களைத் தெரிந்த மாதிரி பேசுவது எவ்வளவு நகைப்புக்கு இடமாகிப் போகிறது? 

ஓரளவு நீதாவுடைய விது அத்தானைப் போலத்தான். ஏதோ பிள்ளை பிடிக்கிறவளைப் போல அவளைப் பாவித்துப் பேசவில்லையா? 

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அவள் உரிமையாகக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவதைப் பார்த்தால்… 

“மணிவாசகம் சாருடைய பேத்தியை சாதாரணமாக எண்ணி விடாதே… நீதா… உன் உண்மையான சொர்க்கபுரியான சென்னைதான் மிஸ் மதுரவாணி பிறந்து வளர்ந்த இடம். கடந்த ஓரிரு வருடங்களாகத்தான் இந்த சொர்க்கபுரி வாசம்” என்று வித்யாசாகரின் குரல் கூறுவது கேட்க, வாணி மறுபடியும் திடுக்கிட்டாள். 

இதெல்லாம் இவனுக்கு எப்படித் தெரியும்? 

திகைப்பில் சற்று நகர்ந்து, முன்புறக் கண்ணாடியில் எட்டிப் பார்த்தாள். அப்போதும் அவனது பிம்பம் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது. 

புரியாத குழப்பத்தில் வாணியின் முகம் அந்திவானமாக சிவந்தது. 

– தொடரும்…

– வாணியைச் சரணடைந்தேன் (நாவல்), முதற் பதிப்பு: 2013, அருணோதயம் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *