மைதிலியின் கலக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 4, 2024
பார்வையிட்டோர்: 158 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

எங்கேயாவது மேளம் கொட்டினுல் போதும், உடனே என் தாய்க்கு வேலை ஓடாது; என்னைப் பார்ப்பாள், பெருமூச்சு விடுவாள், ஏங்குவாள். என்னிடம் பேச்சுக் கொடுக்கவும் வருவாள்; நான் முகத்தை வைத்துக்கொள்ளும் தினுசிலிருந்து பேசாமல் போய் விடுவாள். 

கல்யாணம் செய்துகொள்வதை நான் தட்டிக் கழித்ததற்குக் காரணம் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம் என்ற வைராக்கியமல்ல. எல்லோரையும் போலப் பூச்சி மாதிரி நாமும் விவாகம் செய்துகொள்ளக் கூடாது; அதனால் ஒரு பெரிய காரியத்தைச் சாதித்ததாக இருக்கவேண்டும்; திக்கற்ற பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு ஒரு குடும்பத்தின் கவலையைத் தீர்த்துவைக்க வேண்டும்; இல்லாவிடில் – ஒரு வாலிபன் மனத்தில் தோன்றும் உத்ஸாகமான அல்லது மிகவும் உயரிய எண்ணங்க ளெல்லாம் என் மனத்தில் இருந்தனவென்று வைத்துக்கொள்ளுங்களேன். 

நான் இல்லாத சமயங்களில் வீடு தடபுடல் படுமாம். “பிள்ளை”யைப் பற்றி விசாரிக்கும் “பெண்” வீட்டாருக்கு அம்மா பேட்டியளிப்பாளாம். இதெல்லாம் அடுத்த வீட்டு மைதிலியின் அண்ணா முலம் நான் அறிந்தேன். 

மைதிலியின் அண்ணா என்று சொன்னேனல்லவா! அண்ணாவைத் தூர ஒதுக்கி வைத்துவிடுங்கள். இந்த மைதிலி இருக்கிறாளே, அவள் மிகவும் செளந்தர்யமான பெண். நாவல் எழுதுபவர்களெல்லாம் அழகிய மங்கையைக் கொடிக்கு ஒப்பிட்டு, மான்வரை இழுத்துவந்து என்னென்னவாறே வர்ணிக்கின்றனர். அந்தச் சக்தியில் நூறில் ஒரு பங்கு எனக்கு இருந்தால் இந்த ஏடுகள் அத்தனையும் மைதிலியின் அழகுப் புராணமாகச் செய்து விடுவேன். 

அவள் காதில் வைரத் தோடு போட்டுக் கொண்டிருப்பாள். அதுகூட எதற்கு? அவள் நேரே வந்தாளானால் இரண்டு வைர தேவதைகள் நம்முன் நின்று டால் வீசித் போல இருக்கும். அவ்வளவு மினுமினுப்பான தேகம். இளமையும் எழிலும் கொழிக்கும் கட்டழகி! எவ்வளவோ பேர் விலையுயர்ந்த பட்டுப் புடைவைகள் கட்டிக் கொள்கின்றனர்; பூ வைத்துக் கொள்கின்றனர்; நகைகள் போட்டுக் கொள்கின்றனர்? ஆனால் அவர்கள் சம்பந்தப்பட்டமட்டில் புடைவைகள்தாம் அழகாக இருக்கின்றன ; பூத்தான் வாசனையாக இருக்கிறது; நகை அணிந்து கொள்பவர்களின் அழகுப்பூண் அழகைக் கொலை செய்து விடுகிறது. 

ஆனால் எங்கள் மைதிலியிடம் எல்லாரும் ஒதுக்கித் தள்ளும் சாதாரணப் புடைவையைக் கொடுத்து உடுத்துக்கொள்ளச் சொல்லிப் பாருங்கள்; புடைவை அழகு பெறும். வெறும் பவள் மாலையைப் போடுங்கள்; உலகத்தில் பவளங்களின் மதிப்பே உயர்ந்துவிடும். சென்னையில் விற்கிறார்களே கனகாம்பரப்பூ, அதைக் கொண்டு வந்துதான் தலையில் வையுங்களேன்; அதை அவள் சூட்டிக்கொண்டால் உலகத்தில் உள்ள நறுமலர் யாவும் அந்தப பூவிடம் பொறாமை கொள்ளும். எவ்வளவோ பெண்களுக்குத்தான் நெற்றி இருக்கிறது. ஆனால் மைதிலிக்குப் பிரம்மன் சமைத்த நெற்றி, திலகம் அரசு செலுத்த என்று பிரத்தியேக மாகப் படைத்த நெற்றி. குங்குமம் இட்டுக்கொண்டு வந்து விட்டால், அவள் முகத்தில் உள்ள தேஜஸ் காவியம் பொழியும். 

மைதிலியை 12 – வயசு முதல் நான் அறிவேன். அடக்கமான பெண். என் தாயிடம் ஏதாவது காரியமாக வந்தால் கூட, என்னைப் பார்க்க நேரிட்டால், “என்ன மாமா?” என்று சிரித்துக் கொண்டே போய் விடுவாள். அவள் அண்ணன் பார்த்தசாரதியுடன் பேசச் சில சமயங்களில் நானும் மைதிலியின் வீட்டுக்குச் செல்வதுண்டு. அப்போது மைதிலி அவன் அருகில் உட்கார்ந்து கொண்டு படித்துக் கொண்டிருப்பாள். வாருங்கள் என்று மரியாதையாக அழைத்துவிட்டு உள்ளே போய்விடுவாள். 12 வயசு முதல் அவளும் அழகும் படிப்படியாக வளர்ந்ததைக் கண்டிருக்கிறேன். 

15-ஆவது வயசில் அவள் ஸ்கூல்பைனல் பரீக்ஷையில் தேறினாள். பல புத்தகங்களை வாசித்தவள், சிந்திக்கும் சக்தியும் அவளுக்கு உண்டு என்று அவள் அண்ணன் என்னிடம் கூறியிருக்கிறான். 

பரீக்ஷையில் தேறிய வருஷம் அவளுக்குக் கல்யாணம் செய்து விடவேண்டுமென்று பெற்றோர்கள் தீர்மானித்தனர். பல இடங்களில் வரன் பார்த்தனர். கடைசியில் தூர பந்து ஒருவருடைய குமாரன் வராகசாமிக்குக் கொடுப்பதென்று நிச்சயமாயிற்று. அவனும் நானும் ஒரே காலேஜில் வாசித்தவர்கள். தங்கமான பையன். தன் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பான். நல்ல கிருகஸ்தனுக்கு வேண்டிய குணங்கள் நிரம்பியவன். இவைகளை நானும் மைதிலியின் பெற்றோர்களுக்குச் சொன்னேன். அவனுக்குக் கொடுப்பதில் எனக்குள்ள சந்தோஷத்தை – மைதிலியின் முன்கூடப் – பலதடவை சொன்னேன். நிச்சயம் செய்த தினத்தன்று நானும் கூடச் சென்றேன். 

ஒரு நாள் கல்யாணம்; முதல் நாளிலிருந்து கட்டுச் சாதக் கூடை வைக்கும் வரையில் ஒரு நிமிஷங்கூட உட்காராமல் சகல காரியங்களையும் நானும் பார்த்தசாரதியும் செய்தோம். கண்ணான் மைதிலிக்கு வராகசாமி போன்ற ஒரு நல்ல பையன் கிடைத்ததில் அவ்வளவு சந்தோஷம் எனக்கு. “மாமா எவ்வளவு காரியம் செய்தார்! அந்த மாதிரி ஆசையாக நமக்கு இந்த உலகத்தில் யாரும் செய்யமாட்டார்கள்” என்று மைதிலியே சொல்லிச் சந்தோஷப்பட்டாளாம். இதை என்னிடம் பார்த்தசாரதி சொன்ன போது எனக்குப் பரம திருப்தி ஏற்பட்டது. 

கல்யாணம் ஒன்றும் குறைவில்லாமல் நடந்தது. மாப்பிள்ளை தான் மறுநாள் காலையிலே பம்பாய்க்குப் போய்விட்டான். அவன் 

இரண்டொரு நாள் தங்கியிருந்து மைதிலியுடன் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டுப் போயிருக்கலாம். இந்த விஷயத்தில் எல்லோருக்கும் கொஞ்சம் வருத்தந்தான். “லீவு இல்லை; பிறகு வருகிறேன்” என்று அவன் போய்விட்டான். எல்லோரும் மைதிலியைக் கேலி செய்து கொண்டிருந்தபோது, “கல்யாண தடபுடலில் நான் அவரைச் சரியாகக் கூடப் பார்க்கவில்லை’ என்று ஒப்புக்கொண்டாளாம். 

அப்படிப் போன வராகசாமி போனவன்தான். ஒன்றரை மாதம் கழித்து ஒரு நாள் திடீரென்று ஒரு தந்தி வந்தது. இனி வராகசாமியை நாங்கள் காணமுடியாது. உயிர் நீத்தான். சாதாரண ஜூரந்தான்; ஆனால் அல்பாயுசு! 

உலகம் “சே” என்று எனக்கு வெறுத்துவிட்டது. என்னவோ எனக்கு நேர்ந்த துக்கம்போல் அழுது புரண்டேன். வாழ்க்கை, தெய்வம், அதன் செயல்கள் ஆகியவைபற்றி என் மனசில் பல கோரமான எண்ணங்களெல்லாம் தோன்றின.மைதிலி வீட்டுக்கு நான் போவதே இல்லை. 

மைதிலியை மனச் சாந்தியுடன் இருக்கச் செய்வதற்காக அம்மா அவளை அடிக்கடி என் வீட்டுக்கு அழைத்து வருவாள். 

அடுத்த வீடுதானே? தோட்டத்துப் பக்கமாகப் போக்குவரத்து இருக்கும். அப்போதெல்லாம் மைதிலியைப் பார்க்கமாட்டேன். ஓடி ஒளிந்து கொள்வேன். அவளும் அப்படித்தான். எனக்குத் துக்கம் காரணம். அவளுக்குத் தான் பாக்கியவதி இல்லை என்ற வெட்கம் காரணம். 


தான் மணந்து கொண்டவனை அவள் சரியாகக் கூடப்பார்க்க வில்லை. ஆனால் மைதிலி விதவை! 15 வயசு! மடிசஞ்சிகள் வீட்டில் இருந்துவிட்டால் கேட்கவேண்டுமா? 

அடுத்த வீட்டில் நடக்கும் அமர்க்களங்களை அம்மா தினசரி கதை கதையாகச் சொல்வாள். என் மனம் துடிக்கும். சில சமயங்களில் மைதிலி செய்வதும்,கூறுவதும் சரியெனத் தோன்றும். 

“அம்மா! அந்த வீட்டில் இருக்கும் மடிசஞ்சிகள் தலைமயிரை எடுக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்யும். பாவம், சின்னப் பெண்ணடி” என்று நான் வருத்தப்படுவேன். 

“ஆமாண்டா! அவள் பாட்டி மைதிலியின் தலை மயிரை எடுக்க வேண்டும் என்றாளாம். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சம்மதமில்லை. உற்றார் உறவினர் ஏச்சுக்குப் பயப்படுகிறார்கள். பார்த்தசாரதி மட்டும் இல்லாவிடில் அந்தச் சின்னப் பெண்ணை அலங்கோலப்படுத்தியிருப்பார்கள்” என்றாள் அம்மா. 

பார்த்தசாரதி என்ன செய்தான் தெரியுமா? பாட்டியை மூட்டை கட்டி ஊருக்கு அனுப்பிவிட்டான். 

பார்த்தசாரதிக்கு ஓர் அத்தை உண்டு. அவள் சின்ன வயசில் கணவனை இழந்தவள்.ஒரு நாளைக்கு அவள் மைதிலியை அழ வைத்துவிட்டாள். ‘அவர்’ மாண்ட பத்தாவது நாள் அந்த அத்தையை ஆற்றுக்கு அழைத்துக்கொண்டு போனார்களாம். அவள் அண்ணா, கழுத்தில் ஒரு புதுப் புடைவையைப் போட்டுவிட்டு, “இனிமேல் உனக்குப் பட்டுப் புடைவை கிடையாதடி!” என்று தலையிலடித்துக் கொண்டானாம். இதையெல்லாம் அந்தப் புண்ணியவதி மிகப் பெருமையாக மைதிலியிடம் சொல்லி, மைதிலி இன்னும் கொஞ்ச நாள் கழித்தாவது தலை மயிரை எடுக்கா விடில் உலகமே அவர்கள் வீட்டு வாசலில் வந்து சிரிக்குமென்று பிரமாதமாகக் கூறினாள். 

மயில் ராவணன் தன் உயிரை வண்டுகளிடம் வைத்திருந் தான் என்பது கதை. ஆனால், மைதிலியிடம் தன் உயிரைச் சாரதி வைத்திருந்தான் என்பது நான் பல வருஷங்களாக என் கண்ணால் பிரத்தியக்ஷமாகக் கண்டுவரும் விஷயம். மைதிலி அறையில் அழுது கொண்டிருந்தாளாம். அதைப் பார்த்துப் பார்த்தசாரதியும் அழுது கொண்டே என்னிடம் வந்தான். “மைதிலி அழுகிறாள்’ என்று சொன்னதைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லை. 

மறுநாள் அம்மா சொன்னாள்: “ரங்கா, இன்று மைதிலி இங்கு வந்து கதறினாள். ‘மாமி,எல்லாம் என்னமோ சொப்பனம் போல் இருக்கிறது. நான் வாசலில் தலைகாட்டக் கூடாதாம். குங்குமம் இட்டுக்கொள்ளக் கூடாதாம். நல்ல புடவை கட்டிக் கொள்ளக்கூடாதாம். நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன்? எனக்கேன் இந்தத் தண்டனை?’ என்று அழுதாளப்பா!” என்று கூறினாள். 

இன்னொரு நாள் பார்த்தசாரதி வந்தான். “ரொம்பக் கஷ்டமாக இருக்கிறதடா? மைதிலியை அழைத்துக்கொண்டு எங்கேயாவது ஓடிவிடலாமா என்று தோன்றுகிறது” என்றான். 

“ஏன்? 

“நேற்றுக் காலேஜிலிருந்து வந்தேன். மைதிலி ஒரு புதுப் பட்டுப் புடைவையை உடுத்துக்கொண்டு நகைகளை யெல்லாம் போட்டுக்கொண்டு கண்ணாடி முன் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். திடீரென்று நான் நுழைந்தேன் ‘ஐயோ! அண்ணா’ என்று பதறிக் கூவி அப்படியே பக்கத்திலிருந்த சோபாவில் சாய்ந்துவிட்டாள். நான் உடனே அறையிலிருந்து வெளியே வந்துவிட்டேன். இன்னும் இதுவரை மைதிலி என் முன் வரவில்லை, பேசவில்லை” என்றான். 

நான் மௌனமாக இருந்தேன். 

“பாவம்! ஏதோ ஆசையில் செய்துவிட்டாள். அண்ணாதானே பார்த்தான்? எதற்காகப் பயப்படவேண்டும்? அந்தப் பச்சைக் குழந்தையிடம் வீட்டில் உள்ளோர் அவ்வளவு தூரத்துக்கு ஏன் கடுமையாக இருக்கிறார்கள்?” என்று கூறி வானத்தை நோக்கியவண்ணம் அரைமணி நேரம் உட்கார்ந்திருந்துவிட்டுப் போய்விட்டான். 

ஒரு நாள் மாலை ஆபீசிலிருந்து வந்தவுடன், “ஏ ரங்கா, நான் வேண்டுமென்று செய்யவில்லையப்பா. உங்கள் மைதிலியை அவமானப்படுத்தவேணும் என்று நான் நினைக்கமாட்டேன் என்பது உனக்குத் தெரியும். சுமங்கிலி வந்தால் வெற்றிலை பாக்குக் கொடுக்காமல் எப்படியடா அனுப்புவது?” என்று என் தாய் நீண்ட பீடிகை போட்டாள். 

பாவிகள்! மைதிலி மனத்தைப் புண்படுத்தும் கைங்கர்யத்தில் என் தாயும் சேர்ந்து கொண்டிருக்கிறாள் என்றுதான் எனக்குத் தோன்றியது. கோபத்துடன், “எனன நடந்தது?” என்று கேட்டேன். 

“கோடியகத்துப் பார்வதி வந்தாள். நானும் மைதிலியும் பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்தோம். ‘ஏண்டியம்மா ஒரு வருஷம் வீட்டு வாசலைத் தாண்டக் கூடாதே’ என்று பார்வதி கேட்டுவிட்டாள். பாவம்! மைதிலியின் முகம் சுண்டிவிட்டது” என்றாள் அம்மா. 

“ஆமாம், அதெல்லாம் சம்பிரதாயம் என்று நீங்கள் வைத்திருக்கிறபோது நாலுபேர் சொல்லத்தான் சொல்லுவார்கள். இதற்காகவாவது அவள் உங்கள் கண்களில் படாமல் எங்கேயாவது ஒழியக்கூடாதோ” என்று கத்தினேன் நான். 

“அதுகூட அவளை வருத்தவில்லை. பார்வதி போகிறேன் என்று எழுந்தாள். மைதிலியும் கிளம்பினாள். ‘பார்வதி, இரு; மஞ்சள், வெற்றிலைபாக்கு வாங்கிக்கொண்டு போ’ என்றேன். பார்வதிக்கு மட்டும் கொடுத்தேன். மைதிலி பெருமூச்சுடன் சடக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு பைத்தியம் பிடித்தவளைப் போல ஓடிவிட்டாள். எனக்குக் கஷ்டமாக இருந்தது. வந்த சுமங்கிலிக்கு வெற்றிலை பாக்குக் கொடுக்காமல் எப்படி அனுப்புவது?” என்றாள் என் தாய். 

“நீயேதான் கொடுக்கக் கூடாதே” என்றேன் நான். பல வருஷங்களுக்கு முன்பே என் தகப்பனார் காலமாகிவிட்டார். 

“அவளையே எடுத்துக்கொள்ளச் சொன்னேன். எனக்குத் தெரியாதா என்ன?” என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டாள் என் தாய். 

பூக்காரனுக்குக் கூட மைதிலி விதவை யென்று தெரிந்து விட்டது.அந்தத் தடிப்பயல் தினசரி தட்டு நிறையப் பூக்கொண்டு வந்து மைதிலி வாங்கித்தானாக வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறவன், இப்போதெல்லாம் பேசாமல் போகிறான். 

நேற்று மைதிலி மாடியில் நின்றுகொண்டிருந்தாள். பயந்து கொண்டேதான் உலகத்தை அவள் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். பூக்காரன் மைதிலியைப் பார்த்துச் சோகம் கலந்த சிரிப்பொன்று சிரித்துவிட்டு போய்க் கொண்டிருந்தான். தெருக் கோடியில் அவன் தலை மறையும் மட்டும் மைதிலியும் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். இதை நானும் கவனித்தேன். நான் பார்ப்பதை அகஸ்மாத்தாகப் பார்த்த மைதிலி வெட்கமும் துக்கமும் பொங்கத் தலையைக் குனிந்து கொண்டு ஆவேசம் பிடித்தவளைப்போலத் திடுதிடுவென்று படிகளில் இறங்கிக் கீழே ஓடினாள். 

இந்தச் சம்பவம் நடந்து நாலைந்து தினங்கள் இருக்கும். அன்று எனக்கு லீவு. அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். மைதிலி வீட்டுக்குச் சென்ற என் தாய் வீட்டுக்குள் நுழைந்தாள். நான் உட்கார்ந்திருந்த உள் பக்கம் தன் தலையைக் காட்டி என்னைப் பார்த்து, “இதெல்லாம் ஆகுமோ?” என்று கூறிக் கொண்டே பரபரவென்று உள்ளே நுழைந்தாள். 

“எதெல்லாம் ஆகாதாம்?” என்று கேட்டுக்கொண்டே நானும் எழுந்து உள்ளே சென்றேன். 

காபி போடுவதற்காக அடுப்பை மூட்டிக்கொண்டே, “உங்க மைதிலிதான்! என்னமோ சமத்து என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என்ன செய்தாள் தெரியுமா? குங்குமப் பொட்டு இட்டுக்கொண்டு பூவை நிறையத் தலையில் வைத்துக் கொண்டு கண்ணாடி முன் நின்று அழகு பார்த்துக் கொண்டாளாம்” என்றாள் அம்மா. 

“அதனால் எந்தக் குடி முழுகிப் போயிடுத்தாம்? குழந்தை திடீரென்று ஆசைகளை உதறி எறிய முடியவில்லை” என்று அம்மாவுக்குத் தூபம் போட்டேன். 

அம்மா தன் தலையில் “லொட்” என்று ஓர் அடி அடித்துக் கொண்டாள். 

“நல்ல ஆசை! நல்ல குழந்தை! என்னமோ தெரியாமல் செய்துவிட்டேன் என்று சொன்னால் சரி. அவள் கற்ற வித்தையெல்லாம் தாயாரிடமே காட்டுகிறாள். க்ஷி பேசுகிறாளாம். வாக்குவாதம் செய்கிறாளாம். அம்புஜம் மாமி தலையில் அடித்துக்கொள்கிறாள். ஏன் கூடாது என்று மைதிலி அதட்டுகிறாளாம்” என்று கூறிக்கொண்டே அடுப்பை விசிறினாள் அம்மா. 

“திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியினால் இன்பக் கனவு கண்டுகொண்டிருந்த மனம் முறிந்துபோய் மூளையைக் குழப்பி விட்டிருக்கும். ஆசைகளை அடக்க முடியவில்லை. வெறுத்த மனம் கலக்கத்தில் கிளம்புகிறது” என்று அம்மாவிடம் தந்தி பாஷையில் மனோதத்துவ சாஸ்திரம் பேசினேன். கருங்கல்மீது எய்த கூர்மையான அம்புகளின் கதியை அடைந்தது என் பேச்சு.

“போ! போ! நீதான் உன் மைதிலியை மெச்சிக்கொள்ள வேண்டும்” என்றாள். 

அறைக்குத் திரும்பினேன். அப்போது சாரதியும் வந்து சேர்ந்தான். இரு கைகளிலும் தலையைத் தாங்கிக்கொண்டு குனிந்தவண்ணம் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தான். பெருமூச்சு விட்டான். ஜுரம் வந்தவன் உடம்பு எப்படி ஓர் இடத்தில் கிடை கொள்ளாமல் இருக்குமோ அந்தமாதிரி தவித்தான். 

“ரங்கா, தாங்க முடியவில்லையடா?” 

“என்னடா செய்வது? கஷ்டகாலம்!” 

“இன்று வீட்டில் பெரிய ரகளை.”

“என்னவாம்?” 

“குங்குமம் இட்டுக்கொண்டு விட்டாள். அம்மா திட்டினாள். வாக்குவாதம்; சண்டைகூட”. 

“மைதிலி என்ன சொன்னாள்?”

“பூவும் குங்குமமும் பெண்களுக்கு என ஏற்பட்டனவாம். அப்படித்தான் அவள் செய்வாளாம்”. 

“பூவும் குங்குமமும் ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்ய ஏற்பட்டவை என்று சொல்லிப் பார்ப்பதுதானே?”

“எல்லாம் சொல்லியாச்சடா! குங்குமம் சுமங்கிலியின் சின்னம், அதனாலேதான் அதற்கு அவ்வளவு விசேஷம் என்று அப்பாகூடச் சற்றுக் கடுமையாகக் கூறினாராம். பூ வைத்துக் கொள்ளவும். குங்குமம் இட்டுக்கொள்ளவும் பெண்ணாகிய தனக்கு உரிமையுண்டு என்று பதில் சொன்னாளாம்.” 

“பைத்தியந்தான் பிடித்துவிட்டது! அப்பாவை எதிர்த்து அவள் பேசியதே கிடையாதே.” 

“ஆமாம்! சதா சர்வகாலமும் இதே பிதற்றல், மூன்று நாளாக. அவளுக்குச் சித்தம் சரியாக இல்லை. சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போகிறேன்.” 

“இரண்டு பைத்தியங்கள்”. 

“வழியே இல்லை.” 

நான் என்ன பதில் சொல்லமுடியும்? ஒரு வழியுண்டு; அதைச் செய்ய அவர்களுக்குத் தைரியம் உண்டா? 

“மறு விவாகம் செய்வதுதான் வழி. தைர்யம் வேண்டும்” என்றேன் நான். 

பார்த்தசாரதி கண்கள் கலங்கின. “நடக்கிற காரியமா? எவன் செய்துகொள்வான்? இவர்கள் சம்மதிப்பார்களா?” என்று கூறிக்கொண்டே போய்விட்டான். 

மைதிலியின் பிரச்னை இப்போது முற்றிவிட்டது. அவள் உணர்ச்சியை யாரும் மதிக்கவில்லை. அசடு என்ற பெயர் வாங்கிக் கொண்டாள். என்ன இருந்தாலும் குங்குமம் இட்டுக்கொண்டது தப்புத்தான். ஆனால் அவள் அந்த உரிமை கேட்கிறாள். கம்பிகளுக்குப் பின் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் மைதிலி இருப்பது போல என் மனக்கண்முன் ஒரு சித்திரம் ஓடியது. கற்பனைதான். ஆனால் அது பொய்யாகவில்லை. 

வெள்ளிக்கிழமை காலை நேரம்; மேற்கூறிய சம்பவங்கள் நடந்த இரண்டாவது நாள். அடுத்த வீட்டில் பேரிரைச்சல்; “ஐயோ!” என்று சாரதி அழும் குரல் கேட்டேன். ஓடினேன், என்ன கண்ணராவிக் காட்சி! 

“இதைப் பார்த்துக்கொண்டு இன்னும் உயிரோடு இருக்கிறேனே!” என்று என் காலடியில் விழுந்து சாரதி கதறினான். கை காட்டிய திசையைப் பார்த்தேன். 

ஒரு பீரோவின்மேல் மைதிலி ஏறி நின்றுகொண்டிருந்தாள். புதுப் புடைவை ஒன்றைத் தன் மீது கன்னா பின்னாவென்று போட்டுக்கொண்டிருந்தாள். இரண்டைக் கையில் வைத்துக் கொண்டிருந்தாள். நகைகளை யெல்லாம் தாறுமாறாகப் போட்டுக் கொண்டிருந்தாள். வலது கையில் ஒரு குங்குமச் சிமிழ். அதை உயரத் தூக்கிக் காட்டிக்கொண்டு நின்றிருந்தாள். தலைமயிர் வாரிவிடவில்லை ; முகத்தில் வெறிக்களை! 

“மைதிலி! இதென்னம்மா கூத்து? இறங்கி வா அம்மா” என்று கனிவுடன் கூறினேன். 

இடுப்பில் கையை வைத்துக்கொண்டு சிங்கம்போல என்னைக் கம்பீரமாக நிமிர்ந்து பார்த்து, “கத்தியால் குத்த இன்னொரு ஆளா? புல்லாக்குப் போட்டுவிடுவேன்! போ” என்றாள். 

“டேய்! இதெல்லாம் என் சொத்து! யாராவது கேட்டால் அவர்களை அப்படியே கடித்து விடுவேன்; பிடுங்க வந்தால் அப்படியே தொப்பென்று குதித்துச் செத்துப்போய் விடுவேன். உம்!” என்று உறுமினாள். 

என் மனம் பதறியது. 9 மணிக்குப் பீரோமீது ஏறியவளை 91/2 – மணி வரையில் கீழே இறக்க முடியவில்லை. பீரோவை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால், குதிக்கிறேன் பார் என்று பீரோமீது நர்த்தனம் செய்கிறாள். பைத்தியம், கீழே குதித்து மண்டையை உடைத்துக் கொண்டாலும் உடைத்துக் கொள்ளும் என்று பயந்தோம். நயமாகச் சொல்லிப் பார்த்தோம். 

கடைசியில் சாரதியின் தந்தை மிரட்டலில் இறங்கிவிட்டார். “பேசாமல் இருக்கிறாயா? மண்டையை உடைக்கவா? பிரம்பை எடுடா!” என்று அதட்டினார். 

மைதிலியின் முகத்தில் கோரமான வெறிக்களை தோன்றியது. “நீயா! விடுவேனா?” என்று சொல்லிக்கொண்டு தடா லென்று பூமியில் விழுந்தாள். 

“ஐயோ” என்று அலறிக்கொண்டே எல்லோரும் மைதிலியை அணுகினோம். மூர்ச்சையாகிக் கிடந்தாள். மண்டையில் ரத்தம் கசிந்தது. 

பதினைந்து தினங்கள் கழிந்துவிட்டன. மைதிலியின் தலையில் ஏற்பட்ட காயங்கள் சொஸ்தமாகிக் கொண்டு வருகின்றன. இப்போது அவள் சமத்தாகிவிட்டாள். குங்கும் உரிமைக் கோரிக்கையை விட்டுவிட்டாள். 

“விளையாட்டுக்கு நேற்று ஒரு பட்டுப்புடைவையை அவளிடம் கொண்டுபோனேன். அதெல்லாம் என்னிடம் கொண்டுவராதே அண்ணா என்று கூறிவிட்டாள். சொன்னபடி கேட்கிறாள். பழைய சம்பவங்களை ஞாபகப்படுத்தினால், என்னமோ கெட்ட சொப்பனம், விடு என்கிறாள் ” என்றான் சாரதி. 

மைதிலி தோற்றாள்! ஆனால் நான் தீர்மானம் செய்துவிட்டேன். மைதிலியை விவாகம் செய்துகொள்வது என்பதே என் தீர்மானம். பெற்றோர்கள் ஒரு வேளை ஆட்சேபிக்கலாம். ஆனால் பார்த்தசாரதி என் கட்சியில்தான் இருப்பான். பிற்காலத்தில் பெற்றோர் மனம், நடந்துபோன காரியம் பற்றிச் சமாதானமாகிவிடும். 

மைதிலியிடம் செல்லவேண்டும். “என்ன மைதிலி சௌக்கியமா?” என்று நான் கேட்பேன். அவள் வெட்கத்தால் தலை குனிந்துகொண்டு, “சௌக்கியம்” என்பாள். “குங்குமம் இட்டுக் கொள்ளும் உரிமையை நான் உனக்கு அளிக்கிறேன்” என்று கூறிப் பார்த்தசாரதி, சூரியன் சாக்ஷியாக அவள் நெற்றியில் குங்குமத்தை இட்டுவிட வேண்டும். அதுதான் கல்யாணம். உடனே வேறு வீட்டில் பார்த்தசாரதி மைதிலியுடன் வசிப்பது என்று திட்டம் போட்டேன். அந்தத் திட்டத்தை இன்றே நிறைவேற்றி விடவேண்டும் என்று முடிவு செய்தேன். 

உள்ளே போனேன்; ஸ்வாமி அலமாரியில் இருந்த குங்குமச் சிமிழைப் பையில் போட்டுக்கொண்டேன். 

“சாரதி வா ; மைதிலியைப் பார்க்கவேண்டும்” என்றேன். 

இருவரும் சென்றோம். “மைதிலிக்கு உடம்பு எப்படி இருக்கிறது?” என்று கேட்டுக்கொண்டே அவள் அறைக்குள் நுழைந்தேன். மைதிலி பதில் சொல்லவில்லை; புன்முறுவல் பூத்தாள். மெல்லிய மேகத்தினிடையே உள்ள சந்திரன்போலச் சோக ஒளி அவள் முகத்தில் வீசியது. 

அருகில் நின்றேன். “மைதிலி ! குங்குமம் இட்டுக்கொள்ளும் உரிமை கேட்டாயே; ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டுக் கொண்டே பைக்குள் இருந்த குங்குமச் சிமிழை எடுத்தேன். 

அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது. “பரிகாசம் செய்யாதீர்கள், மாமா!” என்று கெஞ்சினாள். 

என்ன இது? 

“அதற்காக விட்டுவிடுவோமா? அந்த உரிமையை நான் அளிக்கிறேன். இதோ உன் நெற்றியில் குங்குமம் இடுகிறேன். பார்த்தசாரதி…” 

மைதிலி முகம் சிவந்தது. வருத்தத்தால் சுண்டியது. என் பேச்சை முடிக்கவில்லை. நான் சொன்னதையும் அவள் புரிந்து கொள்ள வில்லை. 

”மாமா! எனக்குத் துக்கம், ஆசை முதலியவைகளெல்லாம் தாங்காமல் மனம் குழம்பி என்னவோ தப்புச் செய்துவிட்டேன். உங்கள் தங்கை மாதிரி என்னையும் கவனித்துக் கொள்ளுங்கள், மாமா ! இனிமேல் பெரியவர்களாகிய நீங்களெல்லோரும் சொன்ன சொல்லை மீறமாட்டேன்” என்றாள் அவள். கண்ணீர் விட்டுக் கொண்டே தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். 

நானும், என் மனமும் சேர்ந்தாற்போலக் கிடு கிடு என்று பாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தோம். சமாளித்துக் கொண்டேன். 

“சாரதி; வா! போகலாம்” என்றேன். வீட்டுக்கு வந்து விட்டேன். குங்குமச் சிமிழைக் கையில் கொண்டுவந்து, மைதிலி அழும்படியாகக்கூட, நான் சற்றுக் கடுமையாகவே பரிகாசம் செய்துவிட்டதாகத்தான் அந்தச் சம்பவத்தைப்பற்றி இன்றுவரை சாரதி எண்ணிக் கொண்டிருக்கிறான். விதியின் பரிகாசம்!

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *