நினைத்ததும் நடந்ததும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 4, 2024
பார்வையிட்டோர்: 204 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

தீபாவளி நெருங்க நெருங்கக் காட்டுப் பாளையம் ஸ்டேஷன் மாஸ்டர் அடிக்கடி ரயில் எஞ்சினைப் போல் பெருமூச்சு விட ஆரம்பித்தார். காரணம், தம்முடைய நாலாவது பெண் மரகதத்தின் தலைத்தீபாவளியைக் கொண்டாடக் கையில் போதுமான பணமில்லாமை தான். அதிலும் இந்தக் கடைசி மாப்பிள்ளை மிகவும் முடுக்கான ஆசாமியா யிருந்தான். முன் கோபி; அசல் பச்சை மிளகாய்! 

    போன தடவை அவன் தலை நோன்புக்கு வந்திருந்தபோதே மோதிரம் செய்து போடவில்லை என்று கோபித்துக்கொண்டு டிக்கட்கூட வாங்காமல் ரயில் ஏறி ஊருக்குப் போய்விட்டான். காரணம் அந்த ஸ்டேஷனில் டிக்கட் விற்பதும் ஸ்டேஷன் மாஸ்டரே. ஆகையால் மாப்பிள்ளை மாமனார் முகத்தில் விழித்து டிக்கட் வாங்க இஷ்டப்படவில்லை! 

    எனவே, இந்தத் தலைத் தீபாவளியிலாவது மாப்பிள்ளையின் பழைய கோபத்தை யெல்லாம் தீர்க்க எண்ணியே அடிக்கடி பெருமூச்சு விடலானார் ஸ்டேஷன் மாஸ்டர். 

    அன்று புதன்கிழமை. ஏழரை மணிக்கு வரவேண்டிய மெயில் வண்டி வழக்கம்போல் தாமதமாக எட்டரை மணிக்கே வந்து சேர்ந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் கூட்டத்தில் தம் மாப்பிள்ளையும் இறங்கி வருவதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார். அவன் ‘கேட்’டண்டை வந்ததும் சமாளித்துக்கொண்டு,”வாருங்கோ, மாப்பிள்ளை” என்று உபசரித்தார். 

    ஸ்டேஷன் மாஸ்டருக்கு அன்று இரவெல்லாம் தூக்கமில்லை. ஸ்டேஷனில் ‘நைட் டியூடி’ பார்க்கும்போது கூட நிம்மதியாகத் தூங்கக்கூடிய அவருக்கு மாப்பிள்ளை விஜயம் பெருத்த கவலையை உண்டுபண்ணி விட்டது. கையில் பணமில்லாத சமயத்தில்தானா இந்தப் பாழும் தீபாவளியும் மாப்பிள்ளையும் வந்து சேர வேண்டும்? 

    பாவம்! ஸ்டேஷன் மாஸ்டர் பெரிய குடும்பஸ்தர். இருபது வருஷ காலமாக ரெயிலிலேயே உத்தியோகம் பார்த்து இப்போது தான் 72 1/2 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். 

    இந்த நிலைமையில் தலைத் தீபாவளியை எப்படிக் கொண்டாடுவதென்றே அவருக்குப் புரியவில்லை. இன்னும் மூன்றே நாட்களில் ஏதேனும் ஏற்பாடு செய்தாகவேண்டுமே என்பதை நினைக்க நினைக்க ஸ்டேஷன் மாஸ்டருக்கு ‘ரெட் ஸிக்னல்’ அணைந்து அணைந்து எரிவதைப்போல் இருந்தது. 

    வெகு நேரம் வரையில் தீபாவளிச் செலவுக்கு என்ன செய்வ தென்றே ஒன்றும் தோன்றாதவராய் யோசிக்கலானார். மனச் சோர்வினால் அவருடைய தலை கைகாட்டி மரம்போல் சாய்ந்து கிடந்தது. இதற்குள் கூட்ஸ் வண்டி ஒன்று வருவதாக அடுத்த ஸ்டேஷனிலிருந்து டெலிபோன் எச்சரிக்கை வந்தது. கூட்ஸ் வண்டியை வரவேற்பதற்காக அறையை விட்டு எழுந்து பிளாட்பாரத்துக்கு வந்தார். வண்டி வந்து நின்றதும் சாமான்களை எல்லாம் போர்ட்டர் மாரிசாமியைப் பார்ஸல் அறையில் கொண்டு போய்ப் போடச் சொல்லிக் கதவைப் பூட்டிச் சாவிக் கொத்தைக் கோட்டுப்பையில் போட்டுக்கொண்டார். 

    இரவு வெகு நேரம் வரையில் தூக்கமே வரவில்லை. கூட்ஸ் வண்டியில் வந்த கார்டு கொடுத்துவிட்டுப் போன பழைய தினசரிப் பத்திரிகை ஒன்றை வைத்துப் படித்துக்கொண்டிருந்தார் .அதில் “தபாலாபீஸில் கொள்ளை” என்ற ஒரு சிறு விஷயம் அவருடைய கவனத்தைக் கவர்ந்தது. ஸ்டேஷன் மாஸ்டருக்கு அதிலிருந்து ஒரு சிறு எண்ணம் உதித்தது. அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக முற்றவே, கடைசியில் மனச்சாட்சிக்கும் அவருக்கும் ஒரு சிறு போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் மனச்சாட்சிதான் தோல்வியுற்றது என்று சொல்லத் தேவையில்லை.அதன்படி பார்ஸல் அறைக்குள் புகுந்து வேண்டிய சாமான்களைக் கொள்ளையடிப்பதே சரி என்ற முடிவுக்கு வந்தார். போர்ட்டர் மாரிசாமி ‘டூடி’ முடிந்து வீட்டுக்குப் போனதும் பார்ஸல் அறைக்குள் புகுந்து உள்பக்கம் தாழிட்டுக் கொண்டார். மார்பு ‘பட்பட்’ என்று வேகமாய் அடித்துக்கொண்டது. வெகு தூரத்தில் போய்க் கொண்டிருந்த கூட்ஸ் வண்டியின் நீண்ட ஊதல் சத்தம் அவருடைய செய்கையை வேண்டாமென்று எச்சரிப்பதுபோல் இருந்தது. தேகம் குப்பென்று வியர்க்க ஜன்னல் வழியாய் ரயில் போகும் திக்கை நோக்கினார். தொலைவில் இருந்த கைகாட்டி மரத்தின் சிவப்பு விளக்கு, ‘அபாயம், அபாயம்’ என்று கூறுவதைப்போல் கண்களைச் சிமிட்டியது. 

    ஒருவாறு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு ஒவ்வொரு பார்ஸலாக எடுத்து அவை ஒவ்வொன்றின்மீதும் இருந்த விலாசத்தைப் படித்துப் பார்த்தார். 

    பார்ஸலை நன்றாகப் பிரித்ததில் வைக்கோல் கூளங்களும் ரம்பத் தூள்களுமாக வந்துகொண்டே இருந்தன. கடைசியாக அதற்குள் ஒரு காகிதப் பொட்டலம் தெரிந்தது. ஆவலுடன் அதைப் பிரித்துப் பார்த்தபோது ஸ்டேஷன் மாஸ்டருடைய முகம் பஸ்ஸைக் கண்ட பிரயாணியின் முகம்போல் மலர்ந்தது. ஆகா! என்ன ஆச்சரியம்! மூன்று கல்வைத்த மோதிரம்; ஒரு சவரன் இருக்கலாம். அளவும் தன் மாப்பிள்ளையின் விரலுக்குச் சரியாக இருக்கும் என்றே பட்டது. “சரி; இதை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான்” என்று அதைத் தமது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டார். 

    அடுத்த பார்ஸலை உடைத்தார். அதில் இரண்டு பட்டுப் புடைவைகள் இருந்தன. “பேஷ்! மரகதத்துக்கும் அவளுக்கும் ஆச்சு!” என்றார். 

    இன்னொரு பார்ஸலில் வேஷ்டிகளும் மற்றொன்றில் பட்டாசுக் கட்டுக்களும் கிடைத்தன. கடைசியில் ஒரு சாக்கு மூட்டையை அமுக்கி அமுக்கிப் பார்த்தார். அவர் நினைத்தபடியே மூட்டை நிறைய உளுந்தாயிருந்ததைக் கண்டு, “நல்ல வேளை! தீபாவளிக்கு இட்டிலியும் தோசையுமாய் ஜமாய்த்துவிடலாம்” என்று சந்தோஷப்பட்டார். 

    ஸ்டேஷன் மாஸ்டர் எல்லாச் சாமான்களையும் எடுத்து இரவோடு இரவாகக் கொண்டுபோய் வீட்டில் சேர்த்தார். ஸ்டேஷனுக்கும் அவர் வீட்டுக்கும் நேர் வழியில் போவதென்றால் ஒரு பர்லாங்கு தூரம் இருந்தது. அதற்காக அவர் பிளாட்பாரத்தின் இரும்பு வேலிச் சட்டங்களில் ஒன்றைப் பெயர்த்துக் குறுக்கு வழி போட்டிருந்தார். பார்ஸல் அறையில் களவாடிய சாமான்கள் அவ்வளவும் குறுக்கு வழியில்தான் வீடுபோய்ச் சேர்ந்தன என்று சொல்லத் தேவையில்லை. 

    பொழுது விடிவதற்குள் மற்றப் பார்ஸல்களை யெல்லாம் ஒழுங்காக அடுக்கிவிட்டுக் கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு ‘புக்கிங்’ அறைக்குள் வந்து உட்கார்ந்துகொண்டார்.ஏறக்குறையத் தீபாவளிக்கு வேண்டிய எல்லாச் சாமான்களும் சிரமமின்றிக் கிடைத்துவிட்டதைப்பற்றிப் பெருத்த சந்தோஷம் அடைந்தார். ஆனால் விஷயம் மேலதிகாரிகளுக்குத் தெரிந்து விட்டால் உத்தியோகத்துக்குச் ‘சீட்டு’ விழுவதோடு தலைக்கே அல்லவா தீங்கு நேரிடும் என்று நினைக்கும்போது, அவர் தலை வேதனையால் கனத்தது. 

    ‘இரவு ஸ்டேஷனுக்கு வந்த பார்ஸல்கள் அனைத்துக்கும் கையெழுத்துப் போட்டல்லவா வாங்கி வைத்திருக்கிறோம்? மேலதிகாரிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது?’ என்று யோசித்தார். 

    ‘ஐயோ! விஷயம் தெரிந்துவிட்டால் ஊரெல்லாம் சிரிப்பார்களே! அப்புறம் நம்முடைய மானம் என்னத்திற்கு ஆச்சு? வந்திருக்கும் மாப்பிள்ளைதான் என்ன நினைக்க மாட்டான்? தப்பித் தவறி விஷயம் தெரிந்துபோனால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை’ என்று முடிவு செய்தார். ‘அப்படித் தற்கொலை செய்துகொள்வதாயிருந்தால் தூக்குப் போட்டுக் கொண்டோ, விஷம் அருந்தியோ உயிரை விடக்கூடாது. ரெயிலில் இருபது வருஷ ஸர்விஸுக்குப் பிறகு வேறு இடத்தில் போய் உயிரை விடுவதாவது! அப்படி உயிரை விட்டால் தண்டவாளத்தில் தலையை வைத்து ரெயிலடியிலேயேதான் உயிரைவிடுவேன்!’ என்று தமக்குத் தாமே தீர்மானித்துக்கொண்டார். 

    பலவிதமான யோசனைகள் இருதயத்தில் புகுந்துகொண்டு வேலை செய்ய ஆரம்பித்தன. போலீஸ்காரர்கள் வருவதுபோலவும் தம்மைக் கைது செய்துகொண்டு போவதைப் போலவும் நினைத்து நடுங்கினார். “கடவுளுக்கு ஏழைகளின்மீது இரக்கம் உண்டு என்பது நிச்சயமென்றால் நம்மை இந்தப் பேராபத்தினின்றும் காப்பாற்ற வேண்டியது அவருடைய பொறுப்பாகும்” என்று பாரத்தைக் கடவுள்மீது போட்டார். 

    பொழுது விடிந்ததும் ஸ்டேஷன் மாஸ்டர் மெதுவாகக் கூட்ஸ் வண்டி மாதிரி நடந்து வீட்டை அடைந்தார். ஆழ்ந்த யோசனையோடு இருக்கும்போது கூட்ஸ் வண்டி போலவும், உத்ஸாகமான சமயங்களில் மெயில் வண்டியைப் போலவும் நடப்பது அவருடைய வழக்கம். 

    சாமான்களை யெல்லாம் கண்டதும் வீட்டில் மாப்பிள்ளை, பெண், மனைவி எல்லோரும் ஒரே குதூகலமாய் இருந்தார்கள். அந்த ஆனந்தத்தில் மாப்பிள்ளை எல்லோரையும் அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போவது என்று நிச்சயித்தான். 

    அன்றிரவு எல்லோரும் சினிமாவுக்குப் போனதும் ஸ்டேஷன் மாஸ்டர் ஸ்டேஷனுக்கு வந்து தமது அறையில் உட்கார்ந்து சிந்தனை செய்யத் தொடங்கினார். 

    இந்தக் காட்டுப்பாளையம் ஸ்டேஷனுக்கு எவனாவது ஒரு திருடன் வந்து பார்ஸல் அறையைக் கொள்ளையடித்துக்கொண்டு போனால், அந்த அறையிலிருந்து தாம் களவாடிய சாமான்களையும் திருடன் கொண்டுபோய் விட்டதாகச் சேர்த்துச் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாமே என்றுதான் ஸ்டேஷன் மாஸ்டர் அவ்விதம் வருத்தப்பட்டார். திருடர்கள் இருக்கும் விலாசம் தெரிந்தால் ஒரு கடிதம் போட்டாவது வரவழைக்கலாமே என்றும் வருத்தப்பட்டார். 

    ஸ்டேஷன் மாஸ்டர் நினைத்தபடி அதிருஷ்டவசமாய் அன்றிரவு வாஸ்தவமாகவே ஒரு திருடன் வந்தான்! 

    மணி பதினொன்று இருக்கலாம். எங்கே பார்த்தாலும் ஊமை இருட்டுச் சூழ்ந்துகொண்டிருந்தது. லேசாகத் தூற்றல் வேறு. அப்போது ஸ்டேஷன் வேலியின் சந்து வழியாக யாரோ ஓர் ஆசாமி உள்ளே நுழைந்து வந்தான். அவன் தன்னை ஒரு பிச்சைக்காரன் என்றும், தூற்றலாய் இருப்பதால் இரவு படுத்துக்கொள்ளப் பிளாட்பாரத்தில் இடம் தரவேண்டும் என்றும் ஸ்டேஷன் மாஸ்டரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். அவன் இஷ்டப்படியே ஸ்டேஷன் வராந்தாவிலேயே படுத்துக்கொள்ளச் சொன்னார். ஸ்டேஷன் மாஸ்டர் தயாராக மூன்று கஜ நீளத்தில் ஒரு கயிற்றைக் கொண்டுவந்து பக்கத்தில் வைத்துவிட்டுத் தூங்குவதைப் போல் பாவனை செய்து கொண்டிருந்தார். (மூன்று கஜக் கயிறு ஸ்டேஷன் மாஸ்டர் தூக்குப் போட்டுக் கொள்வதற்கென்று நேயர்கள் ஊகித்தால் அது தவறாகும்!) 

    மணி பன்னிரண்டு அடித்தது. ஒரே இருட்டு. ஸ்டேஷன் மாஸ்டர், வந்திருக்கிற பிச்சைக்காரன் திருடனாக மாறக்கூடாதா என்று கவலைப்பட்டார். அவர் எதிர்பார்த்தபடி – என்ன அதிசயம்!- படுத்துக்கொண்டிருந்த ஆசாமி மெதுவாக எழுந்துவந்து ஸ்டேஷன் மாஸ்டர் தூங்கிவிட்டாரா என்று கவனித்தான். ஸ்டேஷன் மாஸ்டர் தூங்குவதைப்போல் பாசாங்கு செய்தார். வந்தவன், ஸ்டேஷன் மாஸ்டர் நல்ல தூக்கத்தில் இருப்பதைக் கண்டு மெதுவாகப் பார்ஸல் அறைப் பக்கம் வந்து சிரமப்பட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்தான். அந்தச் சமயம் பார்த்து ஸ்டேஷன் மாஸ்டர் அவன் பின்னால் வந்து அவனுடைய இரு கண்களையும் தம் இரு கரங்களாலும் பொத்திக்கொண்டார். “நான் யார் கண்டுபிடி!” என்று அவனிடம் ‘கண்ணாமூச்சி’ வேடிக்கை பண்ணினார். திருடன் நடுநடுங்கிப் போய் “ஐயோ!” என்று அலறினான். ஸ்டேஷன் மாஸ்டர் அவனைத் தைரியப்படுத்தி, “பரவாயில்லை; பயப்படாதே. பாவம், நீ என்ன செய்வாய்? தீபாவளிக்குச் சாமான்கள் இல்லாமல் கஷ்டப்படுவாயே! இதோ இந்தா என்று சொல்லித் தாமாகவே சாமான்களை யெல்லாம் எடுத்துத் திருடன் கையில் கொடுத்தார். வந்தவன் இதை யெல்லாம் கண்டு திருடன் மாதிரி விழித்தான்! 

    ஸ்டேஷன் மாஸ்டர் மேலும் அவனைத் தைரிய மூட்டி, “ஆனால் நீ ஒன்றுமட்டும் செய்யவேண்டும். போகும்போது நீ என்னை என்னுடைய நாற்காலியில் கட்டிப் போட்டுவிட்டுப் போக வேண்டும். கயிறுகூடத் தயாராய் வைத்திருக்கிறேன். இல்லாவிட்டால் நீ திருடிக்கொண்டு போகும்போது நான் சும்மா பார்த்துக்கொண்டிருந்ததாகவோ அல்லது தூங்கிக்கொண்டிருந்த தாகவோ என்பேரில் குற்றம் ஏற்படும். அதற்காகத்தான் கட்டிப் போடச் சொல்கிறேன் ” என்றார். திருடனுக்கு ஸ்டேஷன் மாஸ்டர் வார்த்தைகளில் நம்பிக்கை பிறந்தது. ”இவர் இவ்வளவு சாதுவானவர் என்று தெரிந்திருந்தால் இந்த அறைக் கதவை உடைக்க இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டியதில்லையே! முன்னாடியே சாவியை இவரிடம் கேட்டு வாங்கித் திறந்திருக்கலாமே!” என்று வருந்தினான். பிறகு அவர் சொன்னபடியே நாற்காலியில் அவரைக் கட்டிப் போட்டுவிட்டுச் சாமான்களை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தான். திருடன் ஓடி மறைவதை நன்றியறிதலோடு பார்த்துக்கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் கண்கள் பச்சை விளக்குகளைப்போல் பிரகாசமாய் ஜொலித்தன. 

    மறுநாள் பொழுது விடிந்து மாரிசாமி ‘டூடி’க்கு வந்தபோது ஸ்டேஷன் மாஸ்டர் நாற்காலியில் கட்டிப்போட்டுக் கிடப்பதை யும் பார்ஸல் அறை உடைக்கப்பட்டுச் சாமான்கள் சிதறிக் கிடப்ப தையும் கண்டு திடுக்கிட்டுப் போனான். ஸ்டேஷன் மாஸ்டரைக் கட்டுகளிலிருந்து விடுவித்துச் சங்கதியைத் தெரிந்துகொண்டான். உடனே ஸ்டேஷன் மாஸ்டர் தலைமை ஆபீஸுக்கு விஷயத்தைச் சுருக்கமாகத் தந்தி மூலம் அறிவித்தார். களவுபோன சாமான்கள் ஜாபிதாவுடன், தாம் எடுத்துக்கொண்ட சாமான்களையும் சேர்த்துத்தான் தந்தி கொடுத்தார் என்று சொல்லத் தேவையில்லை. பிறகு, அவருடைய வேதனைகள் எல்லாம் தீர்ந்து தலையிலிருந்து ஒரு பெரிய பாரம் இறங்கியதைப்போல் உணர்ந்தார். சாவதானமாக எல்லா வேதனைகளையும் முடித்துக்கொண்டு மன நிம்மதியுடன், ”அப்பா! தீபாவளியை இனிச் சந்தோஷமாய்க் கொண்டாடலாம். இனிமேல் பயமில்லை. மேலதிகாரிகளோ, போலீஸோ நம்மீது சந்தேகப்படுவதற்குத் துளிக்கூட நியாயமில்லை. கதவு உடைபட்டிருந்ததையும் நான் நாற்காலியில் கட்டிப்போட்டுக் கிடந்ததையும் மாரிசாமியே கண்ணால் பார்த்திருக்கிறான். அவன் சொல்லும் சாக்ஷியே போதுமானது” என்று தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொண்டார். 

    இந்த மனத் திருப்தியுடன் உத்ஸாகமாக மெயில் வண்டியைப் போல் நடந்து வீட்டை அடைந்தார். ஆனால், என்ன ஆச்சரியம்! ராத்திரி அவருடைய மாப்பிள்ளை, மனைவி எல்லோரும் கதவைப் பூட்டிக்கொண்டு ஸினிமாவுக்குப் போயிருந்த சமயம் அவர் வீட்டில் வேறு யாரோ ஒரு திருடன் புகுந்து தீபாவளிக்காக அவர் சேகரித்து வைத்திருந்த அவ்வளவு சாமான்களையும் கொள்ளை யடித்துக்கொண்டு போயிருந்தான். வீட்டில் அவர் காலடி எடுத்து வைத்தபோது எல்லோரும் ‘குய்யோ முறையோ’ என்று அலறிக் கொண்டிருந்தார்கள். விஷயத்தைக் கேட்ட ஸ்டேஷன் மாஸ்டருடைய தலை ரெயில் சக்கரம்போல் சுழன்றது. முகம் பிரம்மஹத்தி பிடித்தமாதிரி களையிழந்து காணப்பட்டது. 

    இந்தக் கண்ணராவியைக் காணச் சகியாத மாப்பிள்ளை, மாமனார்மீது இரக்கம் கொண்டான். 

    பிறகு மாமனாரை அழைத்து, “நடந்ததைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்; எனக்கு மோதிரம் ஒன்றும் வேண்டாம். என்னிடம் ஐம்பது ரூபாய் பணம் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு தீபாவளிப் பண்டிகையை நடத்துங்கள்” என்றான். மாப்பிள்ளை கொடுத்த பணத்தைக் கொண்டு ஸ்டேஷன் மாஸ்டர் வீட்டில் தலைத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப் பட்டது. இந்தத் தடவை மாப்பிள்ளை ஊருக்குப் போகும்போது எந்த விதமான மனஸ்தாபமும் இன்றி மரகதத்தோடு டிக்கட் வாங்கிக்கொண்டே ரெயில் ஏறினான்!

    – கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

    Print Friendly, PDF & Email

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *